மலாய்த? மலேத? : அவரே கன்பீஸ் ஆகிட்டாரு!

0 comments

இது நடந்தது போன வருடம். வியர்த்துக் கொட்டும் ஏப்ரல் மாதம். பணி நிமித்தம் கந்தளாய்க்குப் போயிருந்தேன். அங்கிருந்து திருக்கோணமலைக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் ஒருவன் இருக்கைக்கு அருகே வந்து “மலேத?" என்று கேட்டான். அப்போதும் இப்போது போலவே சிங்களத்தில் கத்துக்குட்டி நான். ‘மலேத’ என்றால் என்ன? அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் பயணச்சீட்டுக் கொப்பியை விரித்தான். ஓ! நடத்துனர்! ஒருகணம் தடுமாறி விட்டு, போகும் இடத்தை சிங்களத்தில் சொல்லி பணத்தை நீட்டினேன் “த்ரிகுணாமல எக்காய்". அவன் மேலும் கீழும் பார்த்துவிட்டு என்னிடம் நூறு ரூபாய் வசூலித்தான்.


கந்தளாயிலிருந்து திருக்கோணமலை சுமார் 40 கி.மீ. தூரம். அந்தத் தூரத்துக்கு நூறு ரூபாயா? அது தனியார் பேருந்து, முதல் பயணம் வேறு. எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விட்டேன். அடுத்த தடவை திருக்கோணமலையிலிருந்து கந்தளாய்க்கு பயணச்சீட்டு எடுத்த போது தான் பயணச்சீட்டு வெறும் 50 ரூபாய்தான் என்று தெரிந்தது.
பிறகு திருக்கோணமலையில் சிங்கள அதிகாரி ஒருவரை அலுவல் நிமித்தம் சந்திக்கவேண்டி இருந்தது. கொஞ்சம் மூத்தவர். குறிப்பிட்ட பணிக்காக நான் வெகுதொலைவு வந்திருந்ததால் என் மீது அதிகமாகவே இரக்கம் காட்டினார். உத்தியோகபூர்வமான உரையாடல் முடிந்ததும், சாதாரணமான சுக விசாரிப்புக்கு பேச்சு மாறியது. அவர் அன்போடு, "புத்தே மலாய்த?" என்று கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதே கேள்வி. அங்கே மலேத. இங்கே மலாய்த. “காவலன்” திரைப்பட வடிவேலு போல அவரே கன்பீஸ் ஆகிட்டாரோ? இல்ல ரெண்டும் ஒண்டு தானா? மண்ணாங்கட்டி, சிங்களத்தில அப்பிடி எண்டா என்னவா இருக்கும்?

சீச்சீ இரண்டும் ஒன்றாக இருக்காது. மலாய்? இவர் என்னைப் பார்த்து மலாய் இனத்தவனா என்று கேட்கிறார்! இந்த ஆளுக்குக் கண் என்ன குருடா, இந்த அட்டக்கரி நிறத்தைப் பார்த்த பிறகும் இப்படிக் கேட்பதற்கு? ஒருவேளை என் கண்களைப் பார்த்து அவர் மலாய் இனத்தவன் என்று நினைத்தாரோ! இருக்கலாம். கபில நிறக் கண்மணிகள். அந்தக் கண்களைப் பார்த்து என் சிங்கள நண்பிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்…… சரி சரி, அதெல்லாம் இப்போது இந்தக் கட்டுரைக்குத் தேவையா, என்ன?

“நான் மலாய் இல்லை, தமிழ், இலங்கைத் தமிழ்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அவர் சிரித்தபடி தமிழில் சொன்னார் “நான் சொந்த ஊர் கேட்டன் மகன். திருகோணமலையா எண்டு, மலையா?” இதைத் தான் அந்த நடத்துனனும் போகும் இடத்தை ‘மலேத? மலேத?” என்று கேட்டு தலையில் அடித்துக்கொண்டானா? என் முகத்தில் லீற்றர் கணக்கில் அசடு வழியத்தொடங்கியது.

திருக்கோணமலை அல்லது த்ரிகுணாமலே என்பதை சிங்களவர்கள் மலே என்றே சுருக்கமாக அழைக்கிறார்கள் என்று அன்று தான் தெரிந்துகொண்டேன். இது யாரோ புதுசா வந்திருக்கிற இளிச்சவாய் என்று நினைத்து, அந்த நடத்துனன் என்னிடம் ஐம்பது ரூபாய் கொள்ளையடித்ததில் தப்பே இல்லை.
வேலை முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்தேன். தூரத்தே கோணமாமலை கடந்து சென்றது. உண்மையில் சிங்களவர் நீட்டி முழக்க அலுப்பில் தான் திருக்கோணமலையை ‘மலை’ என்று சுருக்கி
அழைக்கிறார்களா? பத்து மாதங்கள் கடந்த பின்னர் அறிந்து கொண்டேன். இல்லை, அப்படி அழைப்பது மரபு, பாரம்பரியம், அதற்கென்றும் நீண்ட வரலாறு இருக்கிறது!

பொலனறுவையில் கிடைத்த கல்வெட்டொன்று பற்றி அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. அது இப்போது எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை. அதைத் தேடியும் தன்னால் கண்டறிய முடியவில்லை என்று பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர்.சி.பத்மநாதன். சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் அந்தக் கல்வெட்டை வாசித்த தொல்பொருள் அறிஞர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களால் எடுக்கப்பட்ட மைப்படி மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறது.

“ஈழம் எழுநூற்றுக்காதமும் யெறிஞ்சு கொண்டருளிய செயபாகு தேவர் நிழல் வேளைக்காறன் மலைமண்டல நாயக்கனான சேதராயன்” என்பது அந்தக் கல்வெட்டிலுள்ள வரிகள். இந்த எழுத்து பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு உரியது. இலங்கை வரலாற்றில் வருகின்ற ஜயபாகு எனும் பெயர் படைத்த மன்னர்கள் இருவர். இருவரும் முறையே பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் ஆண்டவர்கள்.

முதலாம் ஜயபாகு மன்னன் ஓராண்டே ஆட்சிபுரிந்தவன். ஆனால் அவனது ஆட்சியாண்டுகளைச் சொல்லி தமிழ்மொழியில் கூட ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மகாவம்சத்திலோ, ஜயபாகு பற்றிய ஏனைய சான்றுகளிலோ கிடைக்காத “எழுநூற்றுக்காதமும் எறிந்த” என்ற பட்டம் வருவதால், இவன் வேறொரு ஜயபாகு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பேராசிரியர்.

என்றால், இந்தக் கல்வெட்டு சொல்கின்ற செயபாகு தேவர் யார்? சிங்கள வரலாற்று நூல்களில் கலிங்க மாகோன் குறிப்பிடப்படும் சில இடங்களில், ஜயபாகு எனும் துணையரசன் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறான். எனவே இவனே அவன் ஆகவேண்டும். இங்கு வரும் மலைமண்டலம் என்பதற்கு மூன்றுவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று மலையரட்டை என்று மகாவம்சத்தில் சொல்லப்படும் இலங்கையின் இன்றைய மலையகப் பகுதி. இரண்டு, தமிழ் இலக்கியங்களில் மலைநாடாகப் போற்றப்படும் சேரநாட்டு மலையாளக்கரை. மூன்றாவது திருக்கோணமலை.

மலைமண்டல நாயக்கன் பற்றிய குறிப்பு கிடைத்த பொலனறுவையின் புவியியல் அமைவிடத்தைச் சிந்திக்கும் போது, கேரளம், மலையகம், திருக்கோணமலை ஆகிய மூன்றில் திருக்கோணமலையே மிக நெருக்கமானதாக இருக்கின்றது. எனவே சேதராயன் என்பவன் திருக்கோணமலைப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகித்த ஒருவன் என்பதும், அவன் ஜயபாகு தேவரின் பிரதிநிதியாக (நிழல்?) அங்கு ஆண்டிருக்கின்றான் என்றும் இதை விரித்துப் பொருள்கொள்ளமுடியும்.

திருக்கோணமலை, வெறுமனே ‘மலை’ என்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு கங்குவேலியில் கிடைத்த இன்னொரு கல்வெட்டும் சான்றாகின்றது. “மலையில் வன்னியனார்” என்பவரும் ஏழு ஊர்களின் அடப்பரும் கூடி, கங்குவேலியில் கோணைநாதருக்கு வயல்களைக் காணிக்கை செய்ததை அக்கல்வெட்டு கூறுகின்றது. திருக்கோணமலை முன்பு திருக்கோணமலைப்பற்று, தம்பலகாமம்பற்று, கொட்டியாரம்பற்று, கட்டுக்குளம்பற்று என்று நான்கு பற்றுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த ஒவ்வொரு பற்றையும் ஒவ்வொரு வன்னியர்கள் பரிபாலித்து வந்தனர். எனவே மலையில் வன்னியனார் என்பது திருக்கோணமலைப்பற்று வன்னியனாரைக் குறிக்கும்.

திருக்கோணமலையை “மலை” என்று சுருக்கமாக அழைப்பது இன்று வெறும் மக்கள் வழக்கு. ஆனால் அந்தச் சுருக்கப் பெயருக்குப் பின்னேயும் ஒரு கதை இருக்கிறது என்பதை அறிந்துகொண்ட போது நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ சரடுகளால் இழைக்கப்பட்ட வரலாற்றின் மீது தான் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் எத்தனை திகைப்பை ஊட்டுகின்றது?

(ஆர்வமுள்ளவர்கள் பேராசிரியர் சி.பத்மநாதனின் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் நூலின் முதலாம் இரண்டாம் பாகங்களை வாசிக்கலாம், இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடு)
மேலும் வாசிக்க »

பேராசிரியர் மௌனகுரு நயவுரை | அலகிலா ஆடல்

2 comments
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 2018 டிசம்பர் 29 (சனிக்கிழமை) அன்று, இலங்கை சைவநெறிக் கழகத்தின் இரு நூல் அறிமுக விழா இடம்பெற்றது. அவ்விழாவில் வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலைப்பற்றி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய நயவுரை.

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner