இரு இசைத்தொகுதிகள்

0 comments
இந்த நாட்களை இனிதாக்கிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான இசைத்தொகுதிகளைச் சொல்லவேண்டும்.


முதலாவது திரு ராஜன் சோமசுந்தரம் அவர்களின் "சந்தம்: செந்தமிழைச் சந்திக்கும் சிம்பொனி" இசைத்தொகுதி (Sandham: Symphony Meets Classical Tamil). சங்க இலக்கியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடல்கள் சிம்பொனி இசையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "வேரல் வேலி" (குறுந்தொகை 18), பிரியங்கா பாடிய "முல்லை ஊர்ந்த" (குறுந்தொகை 275), ராஜலட்சுமி பாடிய "ஞாயிறு காயாது" (குறுந்தொகை 378), சைந்தவி பாடிய "கலம்செய் கோவே" (புறம் 256), கார்த்திக் - பிரகதி பாடிய யாயும் ஞாயும் (குறுந்தொகை 40), கார்த்திக் பாடிய "யாதும் ஊரே" (புறம் 192) என்று ஆறு பாடல்கள். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும் அ.முத்துலிங்கமும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரிகள், இன்றும் இயல்பான மானுட உணர்வுகளை நமக்குக் கடத்தும் போது ஏற்படும் சிலிர்ப்பு ஒருபக்கம். உலகின் வேறு எத்தனை இனத்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும் என்ற பெருமிதம் இன்னொரு பக்கம்.
இதில் யாயும் ஞாயும் (இருவர் - நறுமுகையே), வேரல் வேலி (இதயம் - கோச்சடையான்), ஆகிய இரண்டும் கவிப்பேரரசு உபயத்தில் சாதாரண திரையிசை ரசிகர்களும் அறிந்த வரிகளைக் கொண்டவை.
சில பாடல்களுக்கு வரிகளும் அர்த்தமும் இணைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் பாடல்களைக் கேட்கமுன்பு மேற்படி ஆறு சங்கப் பாடல்களின் பொருளையும் இணையத்தில் தேடிப் படித்துவிட்டுக் கேளுங்கள். இல்லாவிட்டால், "முல்லை ஊர்ந்த" பாட்டில் "ஈர் மணற் காட்டாறு வரூஉம் தேர் மணிகொல்?" என்ற வரிகளை அடுத்து சட்டென மேல்ஸ்தாயியில் எழும் ஆண் குரல் சொல்லவருவது என்ன; "கலம்செய் கோவே" பாடல் முடியும் போது ஏன் வீணை நரம்பு அறுந்துவிடுகிறது; இப்படி ஒவ்வொரு பாட்டிலும் உள்ள சிறுசிறு குறியீடுகள் புரியாமல் போய்விடும். (வீணை அல்ல; உண்மையில் சாரங்கி எனும் இசைக்கருவி அது)
ஏன் சொல்கிறேனென்றால், சில மீம்கள் புரிவதற்கு, குறிப்பிட்ட படத்தை நாம் பார்த்திருக்கவேண்டும், இல்லையா? 
சந்தம் கேட்க: https://tinyurl.com/rmaqqgv
இரண்டாவது இசைத்தொகுதி, ஈஷா அமைப்பின் "தேவாரம்: தமிழ்ப்பக்தியின் பெருக்கெடுப்பு " (Thevaram: The Outpourings of Tamil Devotion). பெருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும் ஈஷாவின் சிவராத்திரி விழாவில் அது வெளியிடப்பட்டது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பே யூடியூப்பில் வெளியாகிவிட்டது. தில்லைவாழந்தணர், மந்திரமாவது நீறு, பித்தா பிறை சூடி, தோடுடைய செவியன், வானனை, மாதர்ப்பிறைக்கண்ணி ஆகிய ஆறு தேவாரங்களும் நவீன இசைக்கலப்பில் இனிமையாக வெளிவந்திருக்கின்றன. பித்தா பிறைசூடி இதில் என் முதல் தெரிவு.
ஒரு புத்திந்து (Neo Hindu) அமைப்பாக, ஈஷா மீது தனிப்பட்ட ரீதியில் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், அங்கு எனக்கு மிகப்பிடித்த விடயம் இது. இசை, நடனம், நாடகம் இவை மூன்றும் தமிழ் மரபில் கோவில் சார்ந்து வளர்ச்சி கண்டவை. ஆனால் மரபார்ந்த சைவத்தில் அவை எப்போதோ மறக்கப்பட்டு விட்டன. அதிலும் திருமுறை ஓதும் போது (ஓதுதல் என்பதற்கு தமிழில் முதன்மையான அர்த்தமே பாடுதல் என்பது தான்) வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. பழங்காலக் கல்வெட்டுக்களைத் தட்டினால், திருப்பதியம் விண்ணப்பிப்பதும், விதவிதமான இசைக்கருவிகள் மீட்டப்படுவதும் கோவில்களில் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பது தெரிகின்றது.
திருமுறைகளை நவீன இசைக்கலப்பில் கேட்கும் போது ஏற்படும் உணர்வு வார்த்தைகளில் விபரிக்கமுடியாதது. இசைஞானியின் சிம்பொனி திருவாசகம், திரைப்படங்களில் வந்த பாருருவாய (தாரை தப்பட்டை), மாசில் வீணையே (கோச்சடையான்), தாயிற்சிறந்த (அழகுக்குட்டிச்செல்லம்) முதலியன இந்தப்பட்டியலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
மேற்படி பாடல்களில் தொனிக்கும் மிகையான நவீன நெடி மரபார்ந்தவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் ஈஷாவின் இந்த இசைத்தொகுதியில் அந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்பேன்.
"தமிழோடிசை பாடுவது' என்ற பாரம்பரியத்தையே மறந்துவிட்டோம். ஈஷாவின் இசைத்தொகுதி அதைச் செய்துகாட்டியிருக்கிறது. புத்திந்து அமைப்புக்களை குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில் இது போன்ற நல்ல முன்மாதிரிகளை மரபுச்சைவத்தில் நடைமுறைப்படுத்த நாம் முயலலாம்.
தேவாரம் இசைத்தொகுதி யூடியூப்: https://tinyurl.com/thevaram
(பிகு: ஈஷா சிவராத்திரியில் புகழ்பெற்ற "சோஜுகாதா" கன்னட நாட்டார் பாடலின் தமிழ் வடிவமும் நன்றாக இருக்கிறது. இங்கே: https://tinyurl.com/tjdaaol )
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner