ஒரே ஒரு உறவு
தகுதி இருப்பதால் ஒரு அறிவுரை மட்டும் கூறமுடியும். மனம் விட்டு கதைப்பதற்கு ஒரே ஒரு உறவையாவது சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது பெற்றாரோ, உடன்பிறப்போ, நண்பரோ, வாழ்க்கைத்துணையோ, தொழின்முறைத் தோழரோ, யாராகவும் இருக்கலாம். ஆனால் ஒருவர் போதும். ஏன் ஒருவர்? பலர் பார்க்க சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. பயனின்றி தன்மானம் போவது தான் மிச்சம். சிலரது உள அழுத்தத்தை புரிந்து கொண்டு, பாவம் பார்த்து ஆறுதல் சொல்லப் போய், நான் வீணாக மன அழுத்தத்தில் சிக்கி இருக்கிறேன். இன்னும் சிலரை தவறாகப் புரிந்துகொண்டு அவர்களிடம் மனக்குமுறல்களை கொட்டப்போய் தேவையின்றி அவமானமும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். ஒருமுறை நானே நண்பனொருவனின் வேதனையை புரிந்துகொள்ளாமல் அவன் சொன்னதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு இப்போது உண்மை உணர்ந்து குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆறுதலுக்கு சாய்ந்து அழ தோள் தருவார்கள் என்று நம்பி, இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் மாட்டினால் உங்கள் கதை முடிந்தது. உங்கள் வேதனையை பலர் அறிந்து வைத்திருப்பதும் நல்லதல்ல. அது உங்கள் மன அழுத்தத்தை இன்னும் க...