தமிழரும் தவ்வை வழிபாடும் - ஓர் அலசல்


தலைப்பைப் படித்ததும் வாசகர் பலரது புருவங்கள் நெளியலாம். தவ்வையா? புதிதாக இருக்கின்றதே...அப்படியென்றால்; என்ன என்று அறியும் ஆவலில், அகராதிகள் மீது கண்கள் ஓடினால், அங்கு தமக்கை, அன்னை போன்ற அரும்பதங்கள் மட்டுமன்றி இன்னொரு பொருளையும் அவதானிக்கலாம். ஆம்! அதேதான்! அப்பெயரைத் தலைப்பிலிட்டு, கட்டுரையை அமங்கலகரமாக ஆரம்பிக்க விரும்பாமலேயே, கட்டுரையாளன் தவ்வை என்ற பெயரை இங்கு பயன்படுத்த முனைகிறான். 

இந்நாட்களில் மூதேவி என்பது ஒரு வசைமொழி. அமங்கலத்தின் தேவதையாகவே அவள் பிரபலம். அத்துமீறிய குறும்புகளையும், வன்முறைகளையும் அவள் பெயராலேயே 'சேட்டை' என்றும் 'சேஷ்டை' என்றும் இகழ்கிறோம். ஆனால், தவ்வை வழிபாடு ஒருகாலத்தில் தமிழர் மத்தியில் எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று ஆராயும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. தவ்வை, கேட்டை, சேட்டை, மாமுகடி, கெடலணங்கு போன்ற பல பெயர்களால் போற்றிப் புகழப்படும் (?!) அளவுக்கு, சிறப்புவாய்ந்த ஒரு தொன்றமிழ்த் தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்ற செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம்.

தமிழரின் தொன்மை வழிபாடு இயற்கையைச் சார்ந்தது. மரங்களை 'கந்தழி' என்றும் முன்னோரை 'நடுகல்' எனும் கற்களின் வடிவிலும் கண்டே அவர்கள் வழிபட்டு வந்தனர். பெண் தெய்வ வழிபாடும் இதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. நிலத்தைப் பூமிதேவியாகவும், மழையை மாரியாகவும், நதிகளை நீராமகளிராகவும் கண்டு போற்றும் பண்பாடு பண்டுதொட்டு தமிழர் மத்தியில் இருந்துவருவது தான்.

பழையோள், காடுகிழாள், கானமா செல்வி என்று சங்க இலக்கியங்கள் ஏற்றிப் போற்றும் கொற்றவை, மிகப் பழைமையான தமிழர் பெண்தெய்வமாக இனங்காணப்பட்டவள். சிலம்பிலும் அதையடுத்த தமிழ் இலக்கியங்களிலும், கொற்றவை மெல்ல மெல்ல இன்றைய துர்க்கையாக மாறுவதைக் காணமுடிகிறது. கொற்றவையை அடுத்து எமக்குத் தமிழிலக்கியங்களில் கிடைக்கும் பெண்தெய்வங்கள் பற்றிய பழைமையான சான்றுகளில் முக்கியமானது தரித்திரத்தின் தெய்வமாக இன்று நோக்கப்படும் மூதேவி.

சைவ - வைணவப் புராணங்களில், மூதேவியானவள், பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுக்கு முதலில் தோன்றியவளாக வருணிக்கப்படுகிறாள். முதலில் தோன்றிய தேவி என்பதால் அவள் 'மூதேவி' (மூத்த10தேவி) என்று ஆனாள் - நாம் முது தந்தையாரை மூதாதை (தாதை - தந்தை), முதுபெண்டிரை மூதன்னை என்றெல்லாம் அழைப்பது போல்.

அவ்வை, ஆய், ஐயை முதலான சொற்கள் அம்மாவையும் அக்காவையும் குறிக்கும் சொற்கள். தன்மைப்பொருளில், ஆய் - தாய் என்றும், அக்கை - தமக்கை என்றும் ஆனது போல, அவ்வை - தவ்வை என்று ஆயிற்று. அகராதியில் அதற்குப் பொருள், தாயும் தமக்கையும் தான். (திருமகளின்) தமக்கை என்பதாலேயே அப்பெயர் சிறப்பாக மூத்த அம்மையைக் குறிக்கப் பயன்படுகின்றது.

வடமொழியிலும் இதே அர்த்தத்திலேயே 'ஜ்யேஷ்டா' (மூத்தவள்) என்று அவள் குறிப்பிடப்படுகிறாள். இவளை இலக்குமியின் அக்காவாகவும் வருணனின் மனைவியாகவும் புராணங்கள் கூறுகின்றன. காளி என்ற இன்றைய தெய்வம் மூதேவியின் வளர்ச்சியுற்ற வடிவம் என்பது சில ஆய்வாளர் கருத்து. தூம்ரகாளி என்ற பெயரில் காசுமீரில் இவளுக்கோர் ஆலயமுண்டு.1

வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுரைகளில், அவள், 'தசமகாவித்யை' எனப்படும் சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான 'தூமாவதி' (புகைத் தேவதை)யாக போற்றப்படுகிறாள். கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், முதிர்ந்த வயது, காக்கைக் கொடி, கழுதை வாகனம், கையில் முறம் என்று தூமாவதியைச் சித்தரிப்பது வழக்கம்.2

சோம்பல், வறுமை, துரதிர்ஷ்டம், அழுக்கு, அமங்கலம் என்பவற்றுக்குரிய 'அலட்சுமி' எனும் தெய்வம் அவள். வீட்டிலிருந்து விலக்கிவைக்க, குடும்பப் பெண்கள் அவளை வழிபடவேண்டும் என்கிறது இலிங்க புராணம். தீமையும் நன்மையும் இறைவன் தருவதே என்ற கோட்பாடுடைய இந்து மெய்ஞ்ஞான மரபில், அஞ்ஞானத்தின் கற்பிதமாக மூதேவி காட்டப்படுகிறாள். மூதேவி இருளின் - துயிலின் - சோம்பலின் உருவகம்.3 வெளிப்படையாக நோக்கும்போது தீமையாகத் தென்படும் இவை, சில சமயங்களில் நன்மைக்கும் காரணமாகி விடுகின்றன.

ஏழன்னை (சப்த மாதர்) வழிபாட்டின் மாறுபட்ட கோலங்களில் சில இடங்களில் தவ்வைக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. சிறிதுகாலம் சமணர்களின் தெய்வமாகவும் தவ்வை இடம்பிடித்துள்ளாள்.

வடநாட்டு இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தவ்வை வழிபாடானது, தமிழகத்துக்கு மட்டுமே சிறப்பானதாக இருந்திருக்கிறது. தமிழகம் போல, இந்தியாவில் வேறெங்குமே பெருமளவான தவ்வை சிற்பங்கள் கிடைக்கவில்லை என்பதும் ஊன்றிநோக்கத் தக்கது.



சோழர் காலம் வரை (கி.பி 13ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் தவ்வை வழிபாடு சிறப்புற விளங்கியிருக்கிறது என்பதற்கு பல தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தவ்வை பரிவார மூர்த்தியாகவோ தனிக்கோயிலிலோ எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் அமைக்கப்பட வேண்டுமென்று, சுப்பிரபேதாகமம், காரணாகமம் முதலான தமிழ் நாட்டுச் சிவாகமங்கள் விரிவாக விளக்குவதிலிருந்து, அக்காலை தவ்வை பெற்றிருந்த முக்கியத்துவத்தை எம்மால் உய்த்துணர முடிகிறது.4



பல்லவர் காலத்தெழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தவ்வைக்கு ஒரு திருமுன் (சன்னதி) உண்டு. திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியால் தவ்வைக்கு ஒரு குடைவரைக் கோயில் எடுக்கப்பட்டுள்ளது.5 பார்த்திபேந்திரவர்மன் எனும் தொண்டைநாட்டுச் சிற்றரசனின் காலத்தில் பொறிக்கப்பட்ட உத்தரமேரூர்க் கல்வெட்டு, குமண்பாடி 'சேட்டையார்' திருக்கோயிலுக்கு மானியமாக 1148 குழிநிலம் வழங்கப்பட்டதைக் கூறுகிறது.6 வழுவூர், திருவானைக்காவல் போன்ற சிவத்தலங்களிலும் பழைமையான தவ்வை சிற்பங்கள் இன்றும் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. பழனியில் அழிந்துபோன பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை கோவில் ஒன்று, 2010ஆமாண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.5

தவ்வை பற்றிய மிகப்பழைய குறிப்பு திருக்குறளிலேயே வருகிறது.7 ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்,

'கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே'8

திருமால் இருக்க, தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே! என்று இகழ்ந்;து பாடுகிறார். ஒளவையாரின் தனிப்பாடலொன்று, பொய்ச்சாட்சி கூறுவோரை இகழும் விதமாக,
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
என்கின்றது. மூதேவியின் பார்வை ஆகாதென்று கூறி, உத்தரமேரூரிலுள்ள அவளது சிற்பம் தரையைப் பார்த்தபடி சார்த்தியே வைக்கப்பட்டுள்ளது. இவை யாவும் மத்திய காலததுத் தமிழர் ஆழ்மனதில் தவ்வை மீது படிப்படியாக உதாசீனம்; ஏற்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைகின்றன.


மூதேவி அழுக்கின தெய்வமானதிற்கும், வளத்துக்கும் செல்வத்துக்கும் அதிபதியாக கருதப்பட்டதற்கும் பின்னுள்ள நம்பிக்கை, உளவியல் ரீதியானதே! மூதேவியின் இருப்பிடமாகச் சொல்லப்படும் அசிங்கங்களும் குப்பைகளும் உயிரியல் சூழல்வட்டத்திற்கு உள்ளாகியும், கனிப்பொருளாக்கத்துக்கு உள்ளாகியும், உரமாக மாறுகின்றது. வேளாண்சமூகமான பழந்தமிழ்ச் சமுதாய அமைப்பில், சீதேவி என்று போற்றப்பட்ட நெல்லுக்கும் ஏனைத் தாவரங்களுக்கும் வளமூட்டுதற்கு கழிவுகளும் குப்பைகளுமே பயன்பட்டது. இவ்வாறு வளத்துக்கு அடிப்படையான அமங்கலத்தை, மூதேவி என்றும், அவளை அடுத்தே கிடைக்கும் சீதேவி எனுஞ் செல்வத்தை அவள் தங்கை என்று கொண்டதிலும், மூதேவியை ஒதுக்காது தமிழர் வழிபட்டதிலும் ஒரு தொடர்ச்சித் தன்மையை நம்மால் உணரமுடிகிறது.


மூதேவி மழையின் (வருணன்) மனைவி என்ற தொன்மத்திலும், அவளுக்கும் செழிப்புக்குமிடையிலான முரண்தொடர்பு தொக்கிநிற்பதை காணமுடிகிறது. கன்னியாகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் சில, வயல்நிலங்களை அண்டியே கிடைத்ததையும் இங்கு நாம் ஒப்புநோக்கலாம். பருத்த வயிற்றுடனும் செழித்த மார்புடனும் சித்தரிக்கப்படும் தவ்வையின் பழஞ்சிற்பங்களில், அவள் ஒரு வளமைத் தெய்வமாகக் கொள்ளப்பட்டதற்கான அப்பட்டமான சான்றைக் காணமுடிகிறது. அவளது வாகனமாகக் கொள்ளப்படும் கழுதையைக் காண்பதும், அதன் குரலைக் கேட்பதும் இன்றும் பலரால் நற்சகுனமாகக் கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தவ்வை செழிப்புக்காக வணங்கப்பட்டுவந்தாலும், அவள் அமங்கலத்தின் தெய்வம் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாய்த் தொடர்ந்ததன் விளைவு, அவளது வழிபாட்டை மெதுமெதுவாக குறைக்க வழிவகுத்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொன்றுதொட்டு நிலைத்துவந்த சமய வழக்கங்களே நிலைத்துவிடுவதும், இடைக்காலத்தில் திடீர் புகழ்பெற்ற, அல்லது புறக்கணிப்புக்குள்ளான, அல்லது வேறுபகுதியிலிருந்து அறிமுகமான தெய்வ வழிபாடுகள், முற்றாக அழிந்தொழிந்து போகாமல், சைவ - வைணவப் பொது நீரோட்டத்தில் கலந்து தம் சுயமிழந்து மறைந்துவிடுவதுமே காலம்காலமான வழக்கமாகும். தவ்வைக்கும் அதுவே நேர்ந்தது.

தவ்வை மட்டுமன்றி, தமிழகத்தில் ஆங்காங்கே சைவக் கோயில்களின் கவனிக்கப்படாத மூலைகளில் சிலைவடிவில் வீற்றிருக்கும் புத்தர்களும், சமண தீர்த்தங்கரர்களும், விநாயகி முதலான தாந்திரீக தெய்வங்களும் இதைத் தான் சொல்லாமல் சொல்லி, அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருக்கின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்புக்கள்.

(1) ரங்கராஜன், ஹரிப்பிரியா., (2012.06.10),   'வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?' கட்டுரை, தினமலர். 

(2) Kinsley, David R , (1997), “Tantric visions of the divine feminine: the ten mahāvidyās”, pp.178-181.

(3) ஜெயமோகன், (2014 செப்.25) 'சேட்டை' கட்டுரை, ஜெயமோகன் வலைத்தளம்.

(4) Leslie, Julia ,1992, "Sri and Jyestha: Ambivalent Role Models for Women", p.115

(5) திருநங்கை, வே., (2008 06.16 - 07 17)  'செல்வம் தந்த மூதேவி' கட்டுரை , வரலாறு இணைய இதழ்.

(6) 'திருக்கோவில்', திங்களிதழ், யூன் , 1980
(7) குறள் எண் 167, 617, 936.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner