மட்டுக்களப்பு எட்டுப்பகுதி

தொழில் ரீதியாக அடிக்கடி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களைக் கையாள்வதுண்டு. அவை எழுபது ஆண்டுகளுக்கு முந்தையவை என்றால் (உடனே இரண்டாயிரத்திலிருந்து எழுபதைக் கழித்து 1930கள் என்று நினைக்கக்கூடாது, நான் சொல்வது 1950கள்!)  கொஞ்சம் கூர்ந்து கவனிப்பேன். பெயரிலோ ஊரிலோ ஏதாவது சுவாரசியமாகக் கிடைக்கும். அப்படி அவதானித்தபோது, அந்தக் காலச் சான்றிதழ்களில் என்னை வியப்புக்குட்படுத்திய விடயம், மட்டக்களப்பிலிருந்து கிடைத்த பெரும்பாலான  சான்றிதழ்களில் அவ்வூர்ப் பெயர் "மட்டுக்களப்பு" என்றே எழுதப்பட்டிருந்தது தான். ஆரம்பத்தில் எழுத்துப்பிழை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதிக எண்ணிக்கையில் கிடைத்ததும் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன். சரியான உச்சரிப்பு மட்டுக்களப்பு என்பது தான். 


பழைய ஏட்டுச்சுவடிகளிலும், 1970களுக்கு முன் வெளியான சில தமிழ் நூல்களிலும் அந்தப்பெயர் “மட்டுக்களப்பு” என்று தான் இருக்கிறது. மட்டக்களப்பின் செல்லப்பெயர் கூட, “மட்ட நகர்” என்று இல்லாமல் “மட்டுநகர்” என்றே இருப்பதை இங்கு ஒப்புநோக்கலாம்.

1973இல் வெளியான நூலொன்றில் மட்டுக்களப்பு.

இன்றைய மட்டக்களப்பு நகரின் உண்மையான பெயர் புலியன்தீவு. அதற்குத் தெற்கே 50 கிமீ தொலைவிலுள்ள சம்மாந்துறைக்கு அருகே "மட்டக்களப்பு" என்ற பெயரில் ஒரு பழைய நகரம் இருந்தது. மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தின் படி அந்நகரை உருவாக்கியவன் கூத்திக மன்னன். கூத்திகனை சேனன் என்ற இன்னொரு குதிரை வணிகனுடன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து அனுராதபுரத்தை ஆண்ட தமிழன் என்கின்றது மகாவம்சம். 

மண்கல்புட்டியை மட்டமட்டமாய் வெட்டி மண்ணெடுத்து அருகில் இருந்த மேட்டுக்களப்பை மண்ணால் நிரப்பி கூத்திகன் மட்டக்களப்பு எனும் புதிய நகரை அமைத்ததாக பூர்வசரித்திரம் சொல்லும். "மண்கல்புட்டி" என்ற பெயரை ஒத்த மலுக்கம்பிட்டி என்னும் ஓர் பழங்கிராமம் இன்றும் சம்மாந்துறைக்கு அருகே உள்ளது.


சம்மாந்துறை, பழைய மட்டுக்களப்பு , இன்றைய மட்டுநகர், மட்டக்களப்பின் தேசத்துக்கோவிலான திருக்கோவில் என்பவற்றைக் காட்டும் வரைபடம்.  ஏனையவை இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள்.

இப்படி நீர்நிலைகளைத் தூர்த்து அவற்றை அரசிருக்கைகளாக மாற்றுவது வேறெங்கும் நடந்திருக்கிறதா?   "முக்கார ஹதன" முதலிய சில சிங்கள ஏட்டுச்சுவடிகளின் படி, “நல்ல முதலியார்”  எனும் முக்குவர் குலத்தலைவன் கலா ஓயா ஆற்றுக்கும் மகாஓயா ஆற்றுக்கும் நடுவே, கல்முறிவு எனும் இடத்திலிருந்த குளத்தைத் தூர்த்து மாளிகை அமைத்து, அதன் அணைக்கட்டை கோட்டைச்சுவராக மாற்றி வன்னியருக்கு எதிராக போர் புரிந்தான். ஆக, இந்தச் சம்பவம் சிங்களத் தொன்மங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இது நடக்கச் சாத்தியமான ஒரு உண்மைச்சம்பவம் என்று நம்பலாம்.

1695ஆம் ஆண்டு வரையப்பட்ட இடச்சு வரைபடத்தில் பட்டிக்கலோவும் (Rivier Batacalo - பட்டக்கலோ ஆறு) மட்டுக்களப்பும் (Mottecaloppoe) தனித்தனியே காட்டப்பட்டிருக்கின்றன. மட்டுக்களப்புக்கு அருகே குறிப்பிடப்பட்டிருப்பவை சம்மாந்துறையும் (Siampanture) இஸ்லாமிய வழிபாட்டிடமும் (Moorsche Tempel).

எனவே பூர்வ சரித்திர நூல் சொல்வது போல் மேட்டுக்களப்பும் திரிந்து மட்டுக்களப்பு ஆகியிருக்கக்கூடும். 1816 பிரித்தானிய குடித்தொகைக் கணக்கெடுப்பின் போது வெறும் 17 பேர் மட்டுமே வாழ்ந்து வந்த அந்தப் பழம்பெரும் நகர் பின்னாளில் பாழடைந்து மறைந்து போனது. அதன் எச்சமாக சம்மாந்துறையில் இன்றும் “மட்டக்களப்புத் தரவை கிராமசேவகர் பிரிவு” என்ற நிர்வாகப்பிரிவைக் காணலாம்.  
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மட்டக்களப்புத்தரவை  கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம். (படம்: statistics.gov.lk)


உண்மையில் மட்டுக்களப்பு என்ற பெயர் கவித்துவமானது. தமிழில் மட்டு என்றால் தேன் என்றும் பொருள். மட்டு + களப்பு. தேன் நிறைந்த களப்பு / காயல். சரிதான்! மீன் பாடும் தேன் நாடு.


இந்த இடத்தில், கிழக்கிலங்கை வரலாற்றை எழுதுவதற்கு கிடைக்கும் முதன்மையான துருப்புத்தான் அதைச் செய்து முடிப்பதற்கான முதன்மையான தடைக்கல்லாகவும் விளங்குகின்றது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அது, கிழக்கிலங்கைத் தொன்மங்களின் தொகுப்பான "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்".

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் முதல் அச்சுப்பதிப்பான "மட்டக்களப்பு மான்மியம்" நூல். இது  நூலகம் வலைத்தளத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது.

மட்டக்களப்பு வரலாற்று ஆராய்ச்சிக்கு இறங்கும் எந்தவொரு அறிஞரும் அதில் முழுமையாக விழுந்துவிடுகிறார். அதில் கூறப்பட்ட ஆண்டுக்கணக்குகளையும், மன்னர் வரிசையையும் முடிந்த முடிபாகக் கொண்டு கிழக்கு வரலாற்றை எழுதுகிறார். அதை சிங்கள வரலாற்று ஆதாரங்களுடனோ, ஐரோப்பியக் குறிப்புகளுடனோ, ஏனைய தொல்பொருள் கல்வெட்டுச் சான்றுகளுடனோ எங்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. விளைவாக, பேராசிரியர்.கா.இந்திரபாலா உள்ளிட்டோரால் "இலங்கையின் ஏனைய தமிழ் வரலாற்று இலக்கியங்களை விட நம்பகத்தன்மை கூடிய வரலாற்று இலக்கியம்" என்று சான்றளிக்கப்பட்ட மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்திலிருந்து திருத்தமான ஒரு வரலாற்றைக் கட்டியெழுப்ப முடியாமல் போய் விடுகிறது.

சிங்கள, ஐரோப்பிய மற்றும் ஏனைய தொல்லியல் சான்றுகளுடன் ஒப்பீடு செய்து கிழக்கிலங்கைக்கு, ஓரளவு முழுமையான வரலாற்று நூலொன்றை எழுதி முடிக்க வேண்டும் என்பது என் வேணவாக்களுள் ஒன்று. ஒரு விதத்தில் வாழ்நாள் இலட்சியங்களில் ஒன்று என்று கூடச் சொல்லலாம். அது எந்தளவு சாத்தியம் என்று எனக்குத் தெரியாது. 

கடந்த மார்ச் மாதம் திருமணத்தின் போது, பயனுள்ள எதையாவது செய்யவேண்டும் என்று யோசித்தேன். புதிதாக இல்லாளோடு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மகத்தான தருணத்தில் என் கனவின் சிறு பகுதியையாவது நிகழ்த்திப் பார்க்கலாமே என்று ஆசைப்பட்டேன். அப்படி மலர்ந்தது தான் இந்த நூல், "மட்டுக்களப்பு எட்டுப்பகுதி". மட்டுக்களப்பு எட்டுப்பகுதி என்ற சொல்லாடல், இன்றும் மட்டக்களப்பின் தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் வழக்கத்திலுள்ளது. அக்கோவிலைச் சூழ்ந்து அப்போது வன்னியர்களால் ஆளப்பட்ட எட்டு சிறு ஆட்சிப்பிரிவுகள் அக்கோவிலின் நிர்வாகத்தில் பங்காற்றி வந்தன. அவை பற்றிய விபரங்களைக் கண்டடைந்த கையோடு, இங்கிருந்த ஏனைய அரசியல் நிர்வாகப்பிரிவுகளையும் வரலாற்று ரீதியாகத் தொகுத்துக்கொண்டேன். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக எனக்கு தனிப்பட ரீதியிலும் அத்தகவல்கள் பயனுள்ளவை. அவை இந்நூலில் கீழைக்கரையின் வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கப்படுகின்றன.


முன்பொருமுறை இலங்கை அரசின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் வலைத்தளத்தில் இலங்கையின் பழைய குடித்தொகை மதிப்பீடு அறிக்கைகள் கிடைப்பதை ஆய்வாளர் சொக்கலிங்கம் பிரசாத் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். 1816 முதல் 1931 வரை அங்கு கிடைத்த தரவுகளை ஏற்கனவே தொகுத்து வைத்திருந்தேன். அந்தத் தரவுகள் முழுமையானவையல்ல. மேலும் அறிக்கைகளிலிருந்த பழைய இடப்பெயர்கள் பல இப்போது மாறியிருந்தன. ஆனால் கிழக்கிலங்கையின் குடித்தொகைப் பரம்பல் பற்றிய மேலோட்டமான ஒரு சித்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அத்தகவல்கள் போதுமானவை. எனவே அதையும் சேர்த்துக்கொண்டேன். இந்த நூல் அவ்வளவும் தான்.


இந்நூலிலுள்ள தகவல்கள் மிகச்சுருக்கமானவை. ஒரு சாதாரண “வதுவை நினைதலேடு” (திருமண மலர்) அத்தனை பெரிய நூலாக வெளிவருவதிலும் எனக்கு சம்மதமில்லை. இறுதிக்கட்டத்தில் ஓரிரு தகவல்கள் விடுபட்டுப் போன அனர்த்தமும் நிகழ்ந்தது. விந்தனைப்பற்றின் குடித்தொகைச் சுருக்கம், உசாத்துணை நூல்கள், இடப்பெயர் இனங்காணலுக்கு உதவிய இரு இடச்சுப்படங்கள் என்பன அப்படி விடுபட்டுப்போனவை.


நேர நெருக்கடிக்கு மத்தியில் வெளியான இந்நூலில் சர்வநிச்சயமாக குறைகள், பிழைகள் இருக்கும். முதற்பக்கத்திலேயே 12, ௰௨ என்பதற்குப் பதில் ௰க௨ என்று வந்துவிட்டது. அது கண்ணூறு கழிக்கும் கறுப்பு மைப்பொட்டு என்று கருதிக்கொள்கிறேன். ஏனைய பிழைகள் திருத்தப்படவேண்டியவை எனில் சுட்டிக்காட்டுங்கள். ஆட்சேபனை எதுவுமில்லை.


“வாறவங்களுக்கு புத்தகம் அடிச்சிக் குடுப்பம்” என்று சொன்னதும், மறுப்பேதும் சொல்லாமல், நூலாக்கத்துக்கு ஆதரவு தந்த என்னில் பாதி ஷேமங்கரிக்கு என் அன்பு. அவையத்து முந்தியிருக்கச் செய்த என் தந்தைக்கும், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என் அன்னைக்கும் இந்நூல் காணிக்கை. 💗


நூலை மின்னூல் வடிவில் இங்கு படிக்கலாம்:

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner