"குடி" - கீழைக்கரையின் தாய்வழிப் பாரம்பரியம்

7 comments

சில வாரங்களுக்கு முன் கொம்புமுறி பற்றிய உரையாடலொன்றில் ஈடுபட்டிருந்தோம். அப்போது வடபுல நண்பர்கள் சிலர், கிழக்கில் தாய்வழி பார்ப்பது எப்படி என்று கேட்டிருந்தார்கள். தமிழகமோ, இலங்கையோ, எங்குமே தந்தை வழியில் பூர்விகம் பார்ப்பதே வழக்கமாக இருக்க, கிழக்கில் தாய்வழியை வைத்துத் தான் பரம்பரை, பூர்வீகம் எல்லாம் பார்க்கிறார்கள் என்று நான் சொன்னது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. பரம்பரை பற்றி பேசவேண்டுமென்றால், சாதியம் பற்றியும் பேசியாக வேண்டும். பொதுவெளியில் அது போன்ற உணர்திறன் மிக்க விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் இருந்தாலும், சமூகவியல் மானுடவியல் ரீதியில் முக்கியமான இந்தக் கேள்வியை தவிர்க்கமுடியாமல், மேலோட்டமாக மட்டும் இதை எழுதுகிறேன்.

கிழக்கிலங்கை, கீழைக்கரை என்று பொதுவாகச் சொன்னாலும் இங்கு குறிப்பாகச் சொல்லப்படும் நடைமுறைகள் இன்றைய மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை, அதிலும் ஓரிரு தமிழ் – முஸ்லீம் பழம்பெரும் கிராமங்களில் மாத்திரமே வழக்கத்திலிருப்பவை, பல இடங்களில் அருகிப்போய் விட்டவை என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும்.

கிழக்கின் சாதிகள், ‘குடிகள்’ என்ற பெயரில் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு தனிச்சாதியாகவே கருதப்பட்ட முஸ்லீம்களுக்குள்ளும் குடிகள் உண்டு. தமிழகத்தில் சொல்லப்படும் ‘கோத்திரம்’ என்ற பதத்தோடு குடியை ஒப்பிடலாம். மரபாக ஒவ்வொரு சாதியிலும் ஏழு குடிகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது என்றாலும், இதில் திருத்தமான எண்ணிக்கையொன்றைப் பெறுவது கடினம். ஒரே சாதி வாழ்கின்ற இரு வேறு ஊர்களுக்குப் போனாலும், அங்கே இந்த ‘ஏழு’ எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதைக் கவனிக்கலாம். சில ஊர்களில் ஒரே சாதியில் 20 வரையான குடிகளும் இருக்கின்றன. ஆக, குடிகளின் பெயர்கள், அவற்றின் எண்ணிக்கை, அதில் உள்ள குடித்தொகை, அதில் அதிகாரத்தில் உள்ள குடி என்பன ஊருக்கு ஊர் வேறுபடும். 

சாதிய உட்பிரிவுகளான ‘குடி’கள் முன்பு இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வழக்கில் இருந்திருக்கவேண்டும். இதற்கு சான்றாக யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகளின் (17ஆம் நூற்றாண்டு) பரம்பரையைச் சொல்லும் போது, கார்காத்த வேளாளரில் பாண்டிமழவன் குடியில் பிறந்தவர் என்ற குறிப்பைச் சொல்லலாம். சமூகப்பெறுமானமின்மையால் இந்தக் குடிகள் பின்னாளில் ஏனைய இடங்களில் வழக்கிழந்து போயிருக்கின்றன. என்றால் அவை கிழக்கில் மட்டும் முனைப்படையக் காரணம் என்ன? 

கீழைக்கரையில் பல சாதிகள் கலந்து வாழும் ஊர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான கீழைக்கரை ஊர்கள் தனியொரு சாதியையே பெரும்பான்மையாகக் கொண்டவை. எனவே ஒவ்வொரு ஊரினதும் சமூக இயங்கியலை, அங்கங்கே இருந்த சாதிய உட்பிரிவுகளான குடிகளே பங்குபோட்டுக்கொண்டன. இலங்கையின் ஏனைய இடங்களை விட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களிலும் அன்றாட வழமைகளிலும் குடிமுறைமை தொடர்ச்சியாக முக்கிய இடத்தைப் பெற்று வந்ததால், குடி வழக்கம் இங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்றது என்று ஊகிக்க முடிகிறது. 

மட்டக்களப்பில் ஒரு குழந்தையானது, அதன் தாயின் குடி சார்ந்தே இனங்காணப்படுகிறது. அந்தக் குழந்தையின் தாயின் குடி, அதன் அம்மம்மாவுடையது. இந்த வகையில், நான், என் அம்மா, என் அம்மம்மா, அவரது அம்மா, அவரது அம்மம்மா எல்லோருமே ஒரே குடியில் அடங்குகிறோம். இதில் தந்தைமாரின் எவ்விதப் பங்களிப்பும் பிள்ளைகளுக்கோ பேரர்களுக்கோ இருப்பது இல்லை. 

வெவ்வேறு சாதியினர் மணமுடிக்கக்கூடாது என்பதை விட, ஒரே குடியினர் மணமுடிக்கக்கூடாது என்பதே கிழக்கின் கிராமப்புறங்களில் பொதுவாக எழுந்த - எழுகின்ற சாதியச்சிக்கல். ஏனென்றால் குடிகள் ஒரே பரம்பரையில் வந்தவை என்பதால், குடிகளுக்குள் அகமணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. புரிகிற மாதிரிச் சொன்னால், ஒருவன், தனது தாயின் அதே குடியில் பெண்ணெடுக்க முடியாது. அதே தாயின் குடியைச் சேர்ந்த அவனது மாமன் வேறு குடியிலேயே பெண்ணெடுக்க முடியும் என்பதால் மாமியும் மைத்துனியும் வேறொரு குடியைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே ‘முறைமச்சினர்களை’க் கட்டலாம். அது இங்கு பரவலான இயல்பான வழக்கமாக இருந்திருக்கிறது.

அதைத்தவிர, தாய்மாமனுக்கு இங்கு கொடுக்கப்படும் மரியாதை, எல்லாத் தமிழ்ப்பகுதிகளிலும் சாதாரணமாகக் கொடுக்கப்படுவது தான். மருமக்கட்தாயம் என்பதற்காக, கேரளம் போல, தாய்மாமனுக்கு முன்னுரிமை உள்ள காரணவர், தறவாடு முதலிய கட்டமைப்புகள் இங்கு இருந்ததாகத் தெரியவில்லை. மட்டக்களப்பின் முக்குவச்சட்டத்தில் அப்படி ஏதும் தாய்மாமன் உறவுக்கு கூடிய முன்னுரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்றும் தெரியாது. தேடிப்பார்க்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுரிமை என்பதால், கீழைக்கரையின் திருமணங்களில் ‘மாப்பிள்ளை பார்த்தலே’ முதன்மை பெறுகிறது. ஏனைய இடங்களில் இருப்பது போல் ‘பெண் பார்க்கப் போவது’ இங்கு நடைமுறையிலில்லை. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வருவது தான் முதன்மையான நிச்சயதார்த்தச் சடங்கு இங்கு. அதை ‘கேட்டுப்போதல்’ அல்லது ‘(கொழுக்கட்டைப்)பெட்டி கொண்டு போதல்’ என்பார்கள். 

இப்படி பெண்ணுக்கே முன்னுரிமை உள்ளதால், தமிழகத்தில் ‘வீட்டோடு மாப்பிள்ளை’ என்று நகையாடப்படும் வழக்கம் தான் மட்டக்களப்பின் இயல்பான வழக்கமாக இருந்து வருகிறது. பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாம் இங்கு ஆணுக்குத் தான். மணம் முடித்த பின்னர், மாப்பிள்ளை, பெண் வீட்டில் தான், அவள் பெற்றோரோடு நிரந்தரமாகத் தங்குவார். மாமியார் – மருமகள் சண்டைகளை விட, இங்கு இடம்பெறும் மாமனார் – மருமகன் சண்டைகள் சுவாரசியமானவை. கீரியும் பாம்புமாக நிற்கும் இருவருமே ஆண்கள் என்பதால் கொஞ்சம் தாறுமாறானவை கூட. அல்லது நல்ல படியாக நடந்து கொண்டு மாமனாரிடம் அன்பைச் சம்பாதித்துக் கொண்ட ‘பொடியன்’களும் இங்கு உண்டு. (இலக்கியத்துக்கு அருமையான கதைக்களம். இந்தக் கருவை மையமாக வைத்து கிழக்கிலங்கையின் ‘எழுத்தாளர்கள்’ யாரும் இதுவரை சிறுகதையோ நாவலோ முயன்றிருக்கிறார்களா, தெரியவில்லை)

சாதிய அகமணத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு வினோதமான காரணியும் இங்கு வழக்கில் இருக்கிறது. அது ‘சகோதரக்குடி - மச்சினக்குடி’ வழக்கம். இந்த வழக்கத்தின் படி, இரு வேறு குடிகளை ஒன்றுக்கு ஒன்று சகோதர உறவாகவும், இன்னுமிரு குடிகளை மச்சினக்குடியாகவும் கருதுவார்கள். 

உதாரணத்துக்கு இக்கட்டுரையாளனின் பிறந்தகமான தம்பிலுவில்லை எடுத்துக்கொள்வோம். அங்கு கண்டன் குடி, கட்டப்பத்தன் குடி, செருவிலி குடி என்பன முதன்மையான மூன்று குடிகள். கண்டன் குடிக்கு ஏனைய இரு குடிகளும் ‘மெச்சினக்குடிகள்’ என்று சொல்லப்படுகின்றன. கண்டன் குடியில் பிறந்த பெண், இந்த இரு குடியில் எதிலும் மாப்பிள்ளை எடுக்கலாம். ஆனால் சருவிலி குடியும் கட்டப்பத்தன் குடியும் சகோதரக்குடிகள். இவற்றில் ஒன்றில் பிறந்த பெண் இன்னொரு குடியில் மாப்பிள்ளை எடுத்தல் ஆகாது. எப்படி இந்த இரண்டு குடிக்கும் தத்தமக்குள் அகமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ, அதேயளவு மற்றக் குடியில் மாப்பிள்ளை எடுப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்கின் சமூகக்கட்டமைப்பில் சுவையான மற்றொரு மரபும் இருக்கிறது. சாதியொன்றின் தனிநபர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதன் உபபிரிவுகளான குடிகளுக்குள்ளும் நுண்பிரிவுகள் தோன்றுவதற்கான ஏதுக்கள் ஏற்பட்டன. இந்த நுண்பிரிவுகளுக்கு வகுத்துவார், தத்தி, கத்தறை என்று பல பெயர்கள். குடிகளுக்குள், இந்த நுண்பிரிவுகள் இன்னும் நெருக்கமடைந்து தமக்குள்  ஆழமான உறவைப் பகிர்ந்து கொள்வதைக் காணலாம். 

வகுத்துவார் (>>வயிற்றுவார் - ஒரே வயிற்றில் பிறந்தவர்கள்), கத்தறை (>>கோத்திரம்?) என்பன நேரடியாகவே, ஒவ்வொரு குடிகளுக்குள்ளும் உள்ள சந்ததிகளை அல்லது பரம்பரைகளைக் குறிப்பிடுகின்றன. ‘தத்தி’ என்ற பதத்தின் பயன்பாடு சற்று விரிவானது. இது ஒரு பரம்பரையை மாத்திரமன்றி, அந்தப் பரம்பரையில் பெண் எடுத்தோர், கொடுத்தோர், அவர்களது சுற்றத்தார், என்று ஒரு பரந்த கூட்டத்தாரைக் குறிக்கின்றது. எனவே வகுத்துவார், கத்தறை என்ற பதங்களை விட, தத்தி கொஞ்சம் விரிவான சொல்லாடல். தத்தி என்பதற்கு தமிழில் பகுதி, அல்லது தொகுதி என்பது பொருள். தத்தெடுத்தல் என்ற சொல்லுக்கும் ‘தத்தி’க்கும் தொடர்பு இருக்கலாம்.

நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்தின் கீழ், இந்தக் கட்டுரையாளனின் பிறந்தகம் தம்பிலுவில் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் அவ்வூரின் சில குடிகளில் இன்றும் வழக்கிலுள்ள நுண்பிரிவுகளை ஆவணப்படுத்த முடிந்தது. இங்கு அவற்றை ‘பாகை’ என்றே பிரதானமாக அழைக்கிறார்கள். பெரும்பாலான பாகைகளின் பெயர்கள் மறைந்துவிட்டன. கிடைத்த பாகைகளின் பெயர்கள் பெரும்பாலும் பட்டப்பெயர்களையோ, செல்லப்பெயர்களையோ கொண்டிருந்தன. உதாரணமாக கட்டப்பத்தான் குடியின் நான்கு பாகைகள்: வண்ணக்கர் பாகை, சீனியம்பி கத்தறை, பல்லு வயிரர் தத்தி, கொட்டான் அழகன் தத்தி என்றும், கண்டன் குடியின் நான்கு பாகைகள்: வண்ணக்கர் தத்தி, தெய்வகண்டாப்போடி வகுத்துவார், நெடிய முருகச்சீயா வகுத்துவார், நாகமுத்துச் செட்டியார் தத்தி என்றும், அழைக்கப்படுகின்றன. 

இந்தப் பாகைகளுக்கு இன்றும் சமூகப்பெறுமானம் இருக்கிறதா? ஓரளவு இருக்கிறது எனலாம். தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நிகழும் வைகாசிச் சடங்கில், கட்டப்பத்தன் குடியின் நான்கு பாகையினரும் தனித்தனியே சடங்கு செய்யும் உரிமை பெற்றிருக்கிறார்கள். மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலை நிர்வகிக்கும் வண்ணக்கர், கண்டன் குடியின் வண்ணக்கர் தத்தியிலேயே பிறந்திருக்கவேண்டும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலை நிர்வகிக்கும் வண்ணக்கர், கட்டப்பத்தன் குடியின் வண்ணக்கர் பாகையிலேயே பிறந்திருக்கவேண்டும். இந்த நடைமுறைகளில் நெகிழ்வுப்போக்கைக் கடைப்பிடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டிருப்பதை சமகாலப் போக்குகள் சுட்டிக்காட்டுகின்றன. 

தாய்வழிச்சமூகமான கிழக்கிலங்கையில், பெரும்பாலான குடிகள் மட்டுமன்றி, வகுத்துவார், கத்தறை, தத்தி என்பன கூட ஆண் பெயரிலேயே அறியப்படுகின்றமை விந்தை தான். அது அந்த வகுத்துவாரை அல்லது கத்தறையை ஆரம்பிக்கும் குறித்த பெண்ணின் தந்தை பெயராகவோ அல்லது கணவன் பெயராகவோ அமைகிறது. இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த மானுடவியலாளர் டெனிஸ் மக்கில்வ்ரே, அக்கரைப்பற்று முஸ்லீம்கள் மத்தியில் இரு வேறு பெயரில் அறியப்பட்ட தத்திகள், ஒரே பெண்ணின் கணவன் பெயராலும் தந்தை பெயராலும் அழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் சந்ததியொன்றை ஆரம்பிக்கும் பேரன்னை ஒருத்தி அடையாளமில்லாமல் மறைந்து போகும் சூழல் ஏற்படுவதுண்டு. அதைச் சுட்டிக்காட்ட இந்தக் கட்டுரையாளன் தன் சொந்த வம்ச வரிப்படத்தை இங்கு இணைத்திருக்கிறான். 

என் தனிப்பட்ட ஆவணம் என்றாலும், சாதாரணமாகவே ஏழு தலைமுறைக்கும் மேல், தாய் வழியிலும் தந்தை வழியிலும் நீளும் வம்சவரிப்படத்தை வைத்திருக்கும் பல ஈழத்து நண்பர்களுக்கு இது மிகச்சாதாரணமான ஒன்றாகத் தெரியலாம் என்று தெரிந்தும், அதை இங்கு பகிர்ந்து இந்தச் செய்தியைச் சொல்வதற்குக் காரணம் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் நாம் எவ்வளவு அக்கறை எடுக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான். இந்த வம்ச வரிப்படத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? கீழைக்கரைத் தாய்வழிப் பாரம்பரியத்தின் அப்பட்டமான ஆதாரம் இது. தந்தைவழியை விட தாய்வழிகள் ஒப்பீட்டளவில் தெளிவாக நினைவுகூரப்படுபவையாக இருப்பதை இந்த வம்ச வரிப்படத்திலேயே நீங்கள் கண்டு கொள்ளலாம். 

எனது குடி, எனது தாய், அம்மம்மா, அவர் பாட்டி, அவர் பாட்டியின் தாய் செம்பாத்தை என்ற வழியில் வருகின்றது. இந்தக் குடி நுண்பிரிவை உள்ளூரில் ‘அருணம்பொலியானை தத்தி’ என்று அழைக்கிறார்கள். அருணம்பொலியானை என்பது செம்பாத்தையின் தந்தை அருணாசலத்தின் செல்லப்பெயர் (படத்தில் பார்க்க. செம்பாத்தைக்கும் இயற்பெயர் வேறு. செம்பகநாச்சி. தம்பிலுவில் கண்ணகை அம்மனை செண்பகநாச்சியார் என்று அழைப்பதுண்டு.) பொலியானை என்றால் காலனித்துவ காலத்தில் இலங்கையில் சிறிது காலம் வழக்கில் இருந்த கிராம மட்ட காவல்துறை அதிகாரி பதவியைக் குறிக்கும். 

அருணம்பொலியானை தத்தியில் என் தலைமுறை வரை வாழ்ந்தோர் - வாழ்வோர் எண்ணிக்கை தோராயமாக ஐநூறைத் தாண்டுகிறது. அந்த ஐநூறு பேருக்கும் தன் கணவன் பெயரால் அடையாளம் கொடுத்த மூதன்னை அருணம்பொலியானையின் மனைவி. அவரது பெயரென்ன, அவர் பெற்றோர் பெயரென்ன, அவருக்கு சகோதர சகோதரியர் இருந்தார்களா, எதுவுமே தெரியாது. அதை அறிவதற்கு சுமார் இரண்டரையாண்டுகள் நான் பட்ட பாடெல்லாம் விழலுக்கிறைத்த நீர். ஆவணங்களைப் பேணுவதில் இங்குள்ள எவரும் அத்தனை சிரத்தை எடுத்ததில்லை. 

கீழைக்கரையின் தாய்வழிச் சமூகம் பற்றிய தகவல்களைப் பெருமையாகப் பகிர்ந்து கொள்ளும் இந்த இடத்தில், என்னை உருவாக்கிய ஒரு ஆணிவேர் - அன்னைவேர், அடையாளமின்றி தன்னை மண்ணுள் புதைத்து மறைந்து விட்டிருக்கிறது என்பதை வேதனையுடன் தான் சொல்லவேண்டியிருக்கிறது. காலப்பெருவெள்ளத்தில் எப்போதும் அப்படித் தானே? அந்தப் பெருமாட்டியை மானசீகமாக வணங்கிக் கொள்கிறேன்.
மேலும் வாசிக்க »

தண்பொழிலூர் கொம்புமுறி

0 comments

கிழக்கிலங்கையின் தமிழ்ப் பாரம்பரியங்களில் ஒன்றான 'கொம்புமுறி விளையாட்டு' பற்றி முன்பு 'உவங்களில்' எழுதியிருக்கிறேன். கண்ணகி வழிபாட்டோடு இணைந்த மழை வேண்டும் கலையாடல் அது. இங்கு கொம்பு என்பது மரக்கிளை ஒன்று. அதை செவ்வாய்க்குற்றி, தாய்மரம் எனப்படுகின்ற இருவகை தாவரப்பாகங்களின் நடுவே உரிய முறையில் பொருத்தி இரு தரப்பினராகப் பிரிந்து வடத்தால் (கயிற்றால்) இழுக்கும் போது விசையால் ஒரு கொம்பு முறியும். முறியாத கொம்பு வென்ற கொம்பு என்று கொள்ளப்படும். சிங்களவர் மத்தியிலும் 'அங்கெலிய' என்ற பெயரில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகவே அருகி வருகிறது. என் பிறந்தகம் தம்பிலுவில் கிராமத்தில் இடம்பெற்ற கொம்புமுறி நேற்று நிறைவுக்கு வந்தது. தம்பிலுவில்லின் கொம்புமுறிக்கு பல தனித்துவங்கள் உண்டு.

முதலாவது, கிழக்கிலங்கை பொதுவாக தாய்வழிச் சமுதாயம் தான் என்றாலும், கொம்புமுறியில் மட்டும், தந்தைவழியைப் பார்ப்பார்கள்.  தம்பிலுவில்லில்  கொம்புமுறியிலும் கூட தாய்வழி தான் பார்க்கிறார்கள். எப்படி என்றால், கொம்பு முறிப்பதற்காக பிறப்பின் அடிப்படையில் அம்மாளுக்கு (கண்ணகி), சாமிக்கு (கோவலர்) என்று இரு சேரியாக ஊர் மக்கள் பிரிக்கப்படுவார்கள். இப்படி பிள்ளைகள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படும் போது, தந்தையின் சேரியைக் கருத்தில் கொள்வது ஏனைய ஊர்களின் வழமை. அதற்கும் தாயின் சேரியையே  கருத்தில் கொள்வது இந்த ஊரின் வழமை.

வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு. இடப்புறம் பூமராங் வடிவில் வட்டத்தினுள் காட்டப்பட்டிருப்பவை இரு கொம்புகள். வலப்புறம் வட்டத்தில் காட்டப்பட்டிருப்பவை கொம்புகள் கொழுவிய நிலையிலான தோற்றம். இதைச் சுற்றி மரக்கட்டைகளாலான துணை அமைப்புக்கள் மறைத்திருக்கும். (படத்தில் கொம்புகள் உங்களுக்குத் தென்படாது.)

இரண்டு, இங்கு பயன்படுகிற கொம்பு முறிக்கும் கட்டமைப்பு மிக எளிமையானது. கிழக்கின் ஏனைய தமிழ் ஊர்களிலும் சிங்கள ஊர்களிலும் பயன்படும் சிக்கலான அமைப்பு இங்கு பயன்படுவதில்லை.

வடம் தாங்கி, அடை, தாய்வளையம் முதலிய சிக்கலான துணை அமைப்புகள் கொண்ட வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை.
வடம் தாங்கி, அடை, தாய்வளையம் முதலிய சிக்கலான துணை அமைப்புகள் கொண்ட வழக்கமான கொம்புமுறிக் கட்டமைப்பு, தேற்றாத்தீவு.
தம்பிலுவில் கொம்புமுறி. இடப்புறம் (காட்டப்படவில்லை) செவ்வாய்க்குற்றி. அதிலிருந்து வரும் வடத்தில் இரு கொம்புகளையும் கொழுவி, இந்தப்புறம் இரு சேரியினரும் இழுக்கும் போது கொம்பு முறியும்
கொம்புமுறிக் கட்டமைப்பு எளியது என்பதால் இங்கு பயன்படும் கொம்புகள் மிகச்சிறியவை. இவை பொதுவாக  கரையாக்கன் அல்லது எக்சோரா (Ixora spp.) தாவரத்திலிருந்து பெறப்படுகின்றன. எனினும் ஏனைய ஊர்களில் பயன்படும் கொம்புகளில் பருமனில் மிகப்பெரியவை. அவற்றை முறிப்பதற்கு மனித வலுவும் மிக அதிகமாகவே தேவைப்படும். இவை பொதுவாக புளி (Tamarindus indica), விளினை (Vitis labrusca), விடத்தல் (Mimosa cinerea) போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன.

90ஸ் கிட்ஸின் வீதியோர கிரிக்கெட் போல, தங்கள் இளவயதுப் பொழுதுபோக்குகளில் ஒன்று சிறுவர்கள் இரு சேரிகளாகப் பிரிந்து கொம்பு முறிப்பது தான் என்று அப்பா சொல்லுவார். இந்த வாய்ப்பு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருந்த ஏனைய கொம்புமுறிக்கும் ஊரவர்களுக்கு அரிதாகவே கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கரையாக்கன் மரச் சிறு கொம்புகள், தம்பிலுவில்.

பருமனான கொம்புகள், முனைக்காடு

பருமனான கொம்புகள், அங்கெலிய, பாணமை.

அதேபோல தாய்மரம் என்ற அமைப்பே இங்கு இல்லை. செவ்வாய்க்குற்றியும் ஏனைய ஊர்களோடு ஒப்பிடும் போது மிகவும் உயரம் குறைவாகவே அமைக்கப்படுகிறது.
 உயரமான செவ்வாய்க்குற்றி, தாய்மரம் பின்னணியில் தென்படுகிறது, பாணமை.

உயரம் குறைந்த சிறிய செவ்வாய்க்குற்றி, தம்பிலுவில்.
மூன்றாவது 'பள்ளுக்கு வளைதல்' எனும் கலையாடல். 'அம்மன் பள்ளு' எனும் கிராமிய இலக்கியத்தைப் பாடியபடி தென்னோலையை எரித்து ஆண்கள் அதைச் சுற்றி வட்டமாகக் கைகொட்டி ஆடுவது தான் பள்ளுக்கு வளைதல். அந்த அம்மன் பள்ளும் இந்த ஆட்டமும் இவ்வூருக்கு மட்டும் விசேடமானவை. கொம்புமுறியில் மட்டுமன்றி, வைகாசி சடங்கு அம்மன் ஊர்வலத்தின் போதும் பள்ளுக்கு வளைவார்கள். பெயரில் பள்ளு இருந்தாலும் அங்கு பாடப்படுவது பள்ளு இலக்கியம் அல்ல. ஒருவகை வசந்தன் பாடல் எனலாம். 'வசந்தன்' தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் கூட ஒரு காலத்தில் விளங்கிய ஆண்களின் கோலாட்டக் கலை.


நான்காவது, வடசேரிக்கோவில் அல்லது 'சாமி' கோவில்.  நானறிந்து கிழக்கில் கோவலன் தெய்வமாக வழிபடப்படும் இரண்டாவது கோவில் இது. முதலாவது பாணமை பத்தினி அம்மன் கோவிலின் அருகே உள்ள 'அளுத்தெவியோ' தேவாலயம். 1980களில் கொம்புமுறி இடைநிறுத்தப்பட்டபோது தம்பிலுவில் வடசேரிக் கோவில், முழுமையாக ஆகமவிதிக்குட்பட்ட  சித்திவிநாயகர் கோவிலாக மாறிவிட்டது. இன்று உள்ளது 2014இல் அமைக்கப்பட்ட புதிய கோவில்.


வடசேரிக் கோவலர் கோவில், தம்பிலுவில்.

அளுத்தெவியோ (கோவலர்) கோவில், பாணமை.

மானுடவியல் மற்றும் சமூகவியல் ரீதியில் முக்கியமான பொக்கிஷங்கள் இந்தத் தகவல்கள். ஏதோ இயன்றவரை ஆவணப்படுத்தி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுத வேண்டும். 
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner