இணைய அடிமையாதல்

0 commentsஇந்தக் கட்டுரையை வாசிக்க முன், இந்தக் கட்டுரையாளனாக ஒரு சுய விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். சைவ சமயம் மற்றும் அதன் வரலாறு பற்றிக் கூறுகின்ற கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான "அலகிலா ஆடல்" எனும் நூலின் ஆசிரியன் நான். "இருந்திற்றுப் போ, எங்களுக்கென்ன" என்று நீங்கள் கேட்கலாம். ஊகூம். அதில் தான் விடயமே இருக்கிறது.

பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்த ஐந்தாறு மாதங்களின் பின்னர், பகுதி நேர வேலையொன்றை வீட்டிலிருந்து செய்து கொண்டிருந்த காலத்தில் தான் அலகிலா ஆடலை எழுத ஆரம்பித்தேன்.நூற்றுக்கணக்கில் தரவிறக்கி வைத்திருந்த ஆங்கில ஆய்விதழ்களை வாசிப்பது, அவற்றை தமிழில் மொழியாக்குவது, பின்னர் தலைப்புக்கேற்ப வகைப்பிரிப்பது, இறுதியாக மொழியாக்கத்தை கொஞ்சம் மாற்றி, நூலின் ஒழுக்கு சிதையாத விதத்தில் திருத்தி எழுவது என்று அந்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.


ஒரு விடயத்தில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், அது நம்மை எப்படி முழுமையாக ஆட்கொண்டு விடும் என்பதை நான் உணர்ந்துகொண்ட நாட்கள் அவை. காலையில் ஏழரை, எட்டு மணியளவில் தான் எழுவேன். நான் செய்துகொண்டிருந்த பகுதிநேர வேலைக்கு ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் அல்லது குறைவான நேரமே எடுக்கும். எப்படியும் ஒன்று, ஒன்றரை மணிநேரத்தில் அதை செய்து முடித்து விட்டு மடிக்கணினியில் அமர்ந்தால், பெரும்பாலும் மாலை வரை அசைவதில்லை. 


இரண்டு வேளைச் சாப்பாடும் இடையிடையே தேநீரும் அம்மா தயவில் மேசைக்கே வரும். "ஒரே கொம்பியுட்டருக்கு முன்னுக்கு இரிக்காத தம்பி. கண் பழதாப்போயிரும்" என்ற பல்லவியோடே அவர் வந்து சாப்பாட்டை வைத்து விட்டுப் போவதும் நான் ஒற்றைக்கையால் தட்டச்சிக்கொண்டே சாப்பிடுவதும் இயல்பாக நடந்து முடிக்கும். ஒருநாள் மடிக்கணினியைத் திறந்தால் விசைப்பலகை முழுவதும் எறும்புகள். பூந்தி சாப்பிட்டுவிட்டு கை கழுவ மறந்துபோய் அப்படியே தட்டச்சிக்கொண்டு இருந்திருக்கிறேன். 


மாலையில் வழக்கமான நண்பர் கூட்டத்துடன் சிறு குலாவல். அல்லது கடற்கரையில் கொஞ்ச தூரம் நடை. இரண்டையும் அவசர அவசரமாக முடித்து விட்டு மீண்டும் ஓடி வந்து மடிக்கணினி முன் அமர்ந்து விடுவேன். "இருடா எங்க அவசரமா ஓடுறாய்" என்று கேட்பார்கள் நண்பர்கள். என் அவசரம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. புத்தகத்தை எழுதி முடிக்க வேண்டுமே!


மாலையில் அமர்ந்தால், இரவு ஒன்பது, பத்து மணி வரை மீண்டும் எழுத்துப்பணி. இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் மண்டபத்தில் குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பேன். அந்த இடைவேளையில் இரண்டு வயதாகும் மருமகளுடன் நேரத்தை அளந்து கொஞ்சம் விளையாட்டு. "வீட்ட சும்ம தானே இருக்காய் இவள்ற முகத்த பாத்துக்கொண்டு கொஞ்ச நேரம் கூட தூக்கி விளாடாமல் கொம்பியூட்டர்ட்ட ஓடுறியே" என்று திட்டுவாள் அக்கா. அதைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் மீண்டும் கணினி முன் அமர்ந்துவிடுவேன்.

இரவு இரண்டு மணி வரை கூட எழுத்து தொடரும். சில வேளை அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கு அப்பா அறைக்குள் நுழைந்து போய்த்தூங்கு என்று சொல்லித் திட்டி விட்டுப் போனதும் நடந்திருக்கிறது. அடுத்த வளவில் இருக்கும் அம்மம்மாவும் சித்தியும் "விடிய விடிய அறைக்குள லைற் பத்துது. இவன் படுக்கிறதே இல்ல" என்று வீட்டில் வந்து குற்றப்பத்திரிகை வாசித்து விட்டுச் சென்றதுண்டு. அப்போது அவர்கள் யாருக்குமே நான் ஏன் அப்படி கண் விழித்து கணினி முன் அமர்ந்திருந்தேன் என்பது தெரியாது. 

பல்கலைக்கழகம் போய் துரும்பாய் மெலிந்த உடலை, உட்கார்ந்தபடி பழையபடி மீட்டேன். கண்களின் கீழ் கருவளையம் வந்தது. கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போலத்தான். இருபத்து நான்கு மணிநேரமும் "சைவம், வரலாறு, சைவம், வரலாறு" என்றே மூளை உச்சரித்துக் கொண்டிருந்தது.  

சுமார் மூன்று மாதங்களின் பின், சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டமொன்றில் முழுநேர வேலை கிடைத்தது. அப்போது நூல் வேலையும் பெருமளவு நிறைவுபெற்றிருந்தது. இனி மெய்ப்புப் பார்ப்பது, உசாத்துணைகளை படங்களைச் சேர்ப்பது என்பன மட்டுமே எஞ்சியிருந்த வேலை. எனவே பழையபடி மீள ஆரம்பித்திருந்தேன். 

அந்த நூல் பிறகு வெற்றிகரமாக வெளியான நாள், கொழும்பிலும் மட்டக்களப்பிலும் விமரிசையாக இடம்பெற்ற அந்த நூல் வெளியீடு, அதற்குத் தோள் கொடுத்த நண்பர்கள், உறவினர்கள், எல்லோரையும் எல்லாவற்றையும் இப்போதும் ஓய்வு நேரங்களில் எண்ணிப்பார்த்து இறும்பூது எய்துவதுண்டு. ஆனால், அதற்கெனச் செலவழித்த மேற்படி நாட்கள் இன்றும் எனக்கு அச்சமூட்டுகின்றன.

ஒன்றை நேசிப்பதற்கும் ஒன்றுக்கு அடிமையாவதற்கும் மிகச்சிறிய நூலிழை வேறுபாடு தான் இருக்கிறது. அந்த மூன்று மாதங்களும் நான் எழுத்துக்கு அடிமையாகி இருந்தேன். அது இன்பமூட்டுவதாக இருந்தது. மிகப்பெரிய போதையைத் தந்துகொண்டிருந்தது. புதிய புதிய விடயங்களை வாசித்து அறிந்துகொண்ட போது உடல் சிலிர்க்கும். "அப்படியா, இப்படியா" என்று மகிழ்ச்சி வெள்ளம் பெருகியோடும். வரலாற்று மர்மங்களை சிந்தித்த போது மூளையில் மின்னல் வெட்டும். வரலாற்றின் சிண்டு முடிச்சுகளை நானாகவே அவிழ்த்த போது, "ஆஹா, கண்டுபிடித்து விட்டேன்" என்று உள்ளம் குதூகலிக்கும். 

நாளெல்லாம் போதையில் திளைப்பவன் ஒருவனை அழைத்து நாலு சாத்து சாத்தி, "பைத்தியக்காரா, உன்னுடையது என்ன போதை, இதை வாசி, இதை விட இன்ப மயக்கம் தரும் வேறொன்று உள்ளதா இந்த உலகில்? இது தெரியுமா உனக்கு? இதை அறிந்திருக்கிறாயா? ஐயோ, முட்டாள், இந்த சொர்க்கத்தைத் தெரியாமல் இருக்கிறாய் தெரியுமா?" என்று கூவவேண்டும் போல் இருக்கும்.

இப்போதும் அந்த நாட்களை எண்ணும் போது, குலை நடுங்குகிறது. ஆம், அந்த மூன்று மாதங்களின் உழைப்பு வீண் போகவில்லை என்பது உண்மை தான். நூலை இயல்பான வாழ்க்கையில் சாதாரணமாக முடிக்க அதற்குப் பிறகு மேலதிகமாக ஏழெட்டு மாதங்களே எடுத்துக்கொண்டன. "எழுதி முடிக்க ஓராண்டு கூட எடுக்கவில்லையா?" என்று நூலை வாசித்த பலர் கேட்டு வியந்து கொண்டார்கள் தான். ஆனால், அதற்காக நான் கொடுத்த விலை? எத்தனை இரவு - பகல்கள்? எத்தனை முழுநிலவின் அழகுகள்? எத்தனை அதிகாலைகள்? எத்தனை நண்பர்கள்? எத்தனை பொழுதுபோக்குகள்? 

இன்று உளநலன், உளவியல் சுகாதாரம் பற்றிய விவாதங்களில் "அடிமையாதல்" ( ஆங்கிலத்தில் "Addiction") என்பது முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த உலகில் எந்தப் பழக்கத்துக்கும் மனிதன் இலகுவில் அடிமையாகலாம். ஆம், வாசிப்பவனை பூரணமாக்கும் வாசிப்பினால் கூட ஒரு மனிதனை அடிமையாக்க முடியும்!

மது, மாது, போதை, என்று பல விடயங்களுக்கு அடிமையானவர்கள் பற்றி பல இடங்களிலும் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இப்போது மிக மோசமாக இளைய தலைமுறையினரை மோசமாக்கும் அடிமையாக்கல் பற்றி நாம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அது இணையத்தின் அடிமையாக்கல். 

என் நண்பர்களில் கணினி விளையாட்டுக்கு அடிமையானவர்களை எனக்குத் தெரியும்.  கைபேசி, பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நம்மில் பலர், சொல்லப்போனால் ஒவ்வொருவருமே அடிமையாகி இருக்கிறோம். 

அதில் தவறேதும் இல்லை. கணினி, இணையம், காணொளி விளையாட்டுக்கள் உருவாக்குகின்ற மெய்நிகர் உலகமானது (Virtual World) நம்மால் கனவுகளில் மட்டுமே உலவ முடிந்த ஒன்று. இன்றைய தொழிநுட்பம், அந்தக் கனவுகளில் உண்மையாகவே உலவி வரும் வாய்ப்பை இலகுவாக்கி இருக்கிறது. நம் கனவு தருகின்ற சுவாரசியமும் மெய்யான உணர்வுகளும் அங்கும் உருவாகின்றன. எனவே அதில் திளைக்கிறோம், மகிழ்கிறோம், வெளியேறியதும் மீண்டும் அது வேண்டுமென்று ஏங்குகிறோம், கிடைத்ததும் குதூகலிக்கிறோம். அது மெல்ல நம்மை ஆட்கொள்கிறது. இறுதியில் அடிமையாக்குகிறது. 

ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிய என்ன வழி? அது நம் அன்றாட இயல்பான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும். அதன் காரணமாகவே நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலையை காலதாமதமாகச் செய்வீர்கள். பிறருடன் கலந்து மகிழ்வதில் இருந்து விலகி இருப்பீர்கள். அருகில் மனதுக்கு இனியவர்கள் அமர்ந்திருக்கும் போதும், உங்களை அடிமையாக்கிய பழக்கத்தைச் சுற்றியே மூளை சிந்தித்துக்கொண்டிருக்கும். களைப்பு, அலுப்பு, பொறுமையின்மை முதலிய உணர்வுகள் ஏற்படும் போது, உடனே அதைத் தேடி ஓடுவீர்கள், அல்லது அதை மீண்டும் அடைய ஏங்குவீர்கள். இவற்றில் ஏதாவதொன்று உங்களிடம் இருந்தால், உங்கள் கதை முடிந்தது. ஆம் நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு உளரீதியான மெய்நிகர் இணைய உலகமும் மிகப்பெரிய அடிமையாக்கல் மூலமாக மாறியிருக்கிறது. அதில் சோகம் என்னவென்றால், தாம் இலத்திரனியல் அடிமைகள் என்பது அவர்களில் யாருக்குமே தெரிவதில்லை. ஒரு ஐந்து நிமிடம் சும்மா இருந்தால், போனை எடுத்து நோண்டாதவர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? அவர்கள் எவருக்காவது தாங்கள் அதற்கு மெய்நிகர் அடிமைகள் என்பது தெரியும் என்றா நினைக்கிறீர்கள்?

சரி, இதிலிருந்து எப்படி மீள்வது? நீங்கள் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை விட, அதை ஒப்புக்கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. நான் ஒரு நோயாளி என்பதை ஏற்காத ஒருவன் எப்படி மருந்தெடுத்து குணமடைய முடியும்?

இப்போதெல்லாம் நான் ஒரு வழிமுறையைக் கையாள்வதுண்டு. முகநூலை பெருமளவு குறைத்து விட்டேன். வட்சப்பில் அரட்டைகளில் கொஞ்சம் நேரம் கழிப்பது, ஏதாவது மின்னூல்கள் கிடைத்தால் வாசிப்பது என்று மட்டும் இப்போது கைபேசிக்கான நேரத்தை மட்டுப்படுத்தியிருக்கிறேன். அதைத் தவிர, அருகில் நண்பர்கள் இருந்தால் தவிர, கைபேசியைத் தொடுவதை இயன்றளவு தவிர்ப்பேன். நண்பர்களின் அருகே கைபேசியுடன் இருக்கும் போது எப்படியும் அவர்கள் பொறுமையிழப்பார்கள். "போன வை" என்று அவர்கள் திட்டும் போது உணர்ந்து கொண்டு மீள்வேன். அது ஓரளவுக்கு மெய்நிகர் உலகிலிருந்து வெளியேறுவதற்கு எனக்குக் கைகொடுத்திருக்கிறது. உங்களுக்குரிய மீட்சியை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

ஆம். அது மிகக்கடினம் தான். நான் கைபேசியில் மூழ்கியிருந்த நாளில் "அடிக்ட் ஆகிற்றாய் அடிக்ட் ஆகிற்றாய்" என்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கும் நண்பனொருவன் புதிதாக தனக்கென்று திறன்பேசி ஒன்று வாங்கிய பின்னர், இப்போது என்னை வென்றுவிடும் அளவுக்கு மோசமாக கைபேசியில் மூழ்கி முத்தும் எடுத்து விட்டதை (க்கும்!) கண்டபோது தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியை எழுதினேன். 

ஆயிரம் தான் சொன்னாலும், தொழிநுட்பம், மெய்நிகர் உலகம், இந்த இணையம் இது எதுவும் இல்லாமல் இந்தக் கணினி யுகத்தில் எதுவும் சாத்தியம் இல்லை தான். தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால், அடிமையாகும் அளவுக்கு அதிலேயே ஊறித்திளைக்க வேண்டாமே? 

ஆங். முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்லவேண்டும். இந்தக் கட்டுரையில் வாசிப்புக்கு அடிமையான என் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, ஒரு பழக்கம் அதிலேயே திளைக்கும் போது எப்படி நம்மை முழுமையாகத் தன்மயப்படுத்தக்கூடியது என்பதை இங்கு சுட்டிக்காட்டத்தான். அதை அப்படியே தலைகீழாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வாசிப்புக்கு அடிமையாக இருந்தால், நிச்சயம் சொல்லிக்கொள்ளும் படி பலன் கிடைக்கும் - ஏதோ எனக்கு சிறிய அளவிலாவது கிடைத்த அங்கீகாரம் போல. ஆனால், இணைய அடிமையாதலோ, போதை அடிமையாதலோ நமக்கு எதுவுமே தரப்போவதில்லை. மெல்லக் கொல்லும் விஷம் அது. கெடுதி நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சூழ்ந்திருக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் தான். சும்மாவா சொன்னார்கள், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று?

(அரங்கம் பத்திரிகையின் 67ஆவது இதழில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »

“சேட்டைக் கழட்டுங்க முதல்!” அறியாமையின் ஆணவக்குரல்

0 comments
நன்றி: arayampathy.lk
தலைப்பின் முதல் வரியை வாசித்து விட்டு நீங்கள் ஏடாகூடமாக ஏதும் யோசிக்கக்கூடாது என்று தான் உபதலைப்பு. அறியாமையின் ஆணவக்குரல். என்ன அறியாமை? என்ன ஆணவம்? இதுக்கும் சேட்டக்கழட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?

ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் கிழக்கிலங்கையின் தனிச்சிறப்பான கண்ணகிச் சடங்கு பருவ காலம் இனிதே நிறைவுற்றிருந்தது. அதன் பின்னணியில் ஆரையம்பதி முதல் தம்பிலுவில் வரை 15 கண்ணகி அம்மன் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளனுக்குக் கிடைத்திருந்தது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைமை காரணமாக வழக்கமான கொண்டாட்ட மனநிலையை எந்த ஊரிலும் காண முடியவில்லை என்றாலும், அந்தப் பருவ காலத்துக்கே உரிய இயல்பான மலர்ச்சியை எங்குமே தவறவிட்டதாகத் தெரியவில்லை.

எனினும், இந்த ஆண்டு குறிப்பாகக் கண்ட ஒரு விடயம் அதிகமாக உறுத்தியது. சுமார் ஐந்திற்கு மேற்பட்ட கண்ணகி ஆலயங்களில் "ஆண்கள் மேலாடையின்றி உட்செல்லவும்" எனும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் எத்தனை ஆலயங்களில் இந்த வழக்கம் நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அந்த அறிவிப்புக்குப் பல இடங்களில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

"அமைச்சரே ஒரு புறாவுக்கு அக்கப்போரா? ஆம்பிளேல் தானே? சேட்டக் கழட்டுறதில என்ன பிரச்சினை வருது? அதுக்கு நீ மினக்கெட்டு குந்திரிந்து ஒரு கட்டுரையே எழுதுற அளவுக்கு நிலைமை என்ன மோசமா போய்ற்றுது?" என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. கொஞ்சம் பொறுமையாக வாசிச்சு முடிங்களன்!

இந்தியாவில், கோவில்களில் ஆண்கள் மேலாடையின்றி உட்செல்வது, கேரளத்துக்கு மட்டும் சிறப்பான ஒரு வழக்கம். (தமிழகத்திலேயே அந்தக் கட்டுப்பாடு பொதுவாக இல்லை!) எனினும் தென்னகத்தில் இந்த வழக்கம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படாத ஆலயங்களிலும் கூட, ஆலயத்தின் உள் மண்டபங்களுக்குள் நுழையும் போதும், வாகனம் காவுதல், தோத்திரம் பாடல் முதலான வழிபாட்டு முறைகளின் போதும் மட்டுமாவது, அதைச் செய்யும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக்கூடாது என்பது பொதுவான விதி.

ஈழத்தில், இந்த விதியை ஒழுங்காகவும் அழகாகவும் கடைப்பிடிக்கும் பண்பாட்டு நிலம், யாழ்ப்பாணம். கிழக்கிலோ வன்னி நிலப்பரப்பிலோ, இந்த விதியில் அத்தனை இறுக்கம் காட்டப்படுவதில்லை. அப்படி இறுக்கம் காட்டப்படும் ஆலயங்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை போல, கிழக்கின் பல ஆலயங்களில் இந்த வழக்கம் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக மாறி வருகிறது. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு குடமுழுக்கு இடம்பெற்ற போதும் இந்த வழக்கத்தைப் புதிதாகக் கொணர்ந்தார்கள். ஊர் மக்கள், இளைஞர்கள் பலரின் எதிர்ப்பின் மத்தியில் அது பிசுபிசுத்துப் போயிற்று. இப்போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு யாரும் மேலாடையைக் கழற்றுவதில்லை.

கிழக்கில் இந்த ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் ஏனைய ஆலயங்களின் திருவிழாக் காலத்தில் கோவில் சார்பான ஒருவர் வாசலில் நின்று "ஆம்பிளேல் சேட்டக் கழட்டுங்க" என்று உத்தரவிட்டுக் கொண்டிருப்பார். சில ஆண்கள் உள்மேலாடை - பெனியனுடன் நுழைய அவர் பார்த்தும் பாராமல் இருப்பார். ஆனால் அடுத்ததாக உள்மேலாடையுடன் நுழையும் ஒருவரை இவர் தடுத்து நிறுத்துவார். "அவன போக விட்டனீங்க தானே" என்று இவர் எகிறிப்பாய்வார். அவர் விடாப்பிடியாக ஆடையைக் கழற்றச் சொல்ல, இது பிறகு தன்மானப் பிரச்சினையாக மாறும். ஒன்று, அவர் பேசாமல் உள்மேலாடையையும் கழற்றி விட்டு இவரை முறைத்தபடி உள்ளே செல்வார். அல்லது, கூவி ஆர்ப்பாட்டம் பண்ணி, மீண்டும் மேலாடையை அணிந்து கொண்டு "உங்கட சாமிய நீங்களே வச்சிக்கொள்ளுங்க" என்றபடி வெளியேறிவிடுவார். இது இப்போதெல்லாம் நான் அடிக்கடி காண்கின்ற சம்பவங்களுள் ஒன்றாக மாறி இருக்கிறது.

திருவிழாக் காலம் என்று இல்லாமல், இதை இப்போது அன்றாட வழக்கமாக அமுல்படுத்தியுள்ள கீழைக்கரைக் கோவில்களில் வேறொரு சிக்கலைக் காண்கிறேன். அந்தக் கோவில்களில் திருமண வைபவம் நிகழும் போது, எல்லோரும் மேலாடையோடு அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது பொலீஸ், இராணுவம், மாணவர்கள் போன்றோர் நுழைய முற்படும் போது, சீருடையைக் காட்டி உள்நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். “விதி என்றால் எல்லாருக்கும் ஒன்றாகத் தானே இருக்கவேண்டும்?” என்று கோபத்தோடு கேட்கிறார்கள் அடியவர்கள். ஆக, இந்தக் கேள்விக்கான பதில் தான் என்ன? கோவிலுக்குள் நுழையும் போது ஆண்களின் மேலாடையைக் கழற்றச் சொல்வது சரியா? பிழையா? ஆண்கள் கோவிலுக்குள் மேலாடையைக் கழற்றுவது இந்தக் காலத்திலும் அவசியமான ஒன்றா? ஆம் என்று அடித்துக்கூறி சமூக வலைத்தளங்களில் சுவையான காரணம் ஒன்று பகிரப்படுகிறது. என்னவென்று தெரியுமா? கதிர்வீச்சு!

கதிர்வீச்சு என்றால், நீங்கள் எக்ஸ்றே, புற ஊதாக்கதிர்கள், ஐயோ! ஓசோன் படையில் ஓட்டை என்றெல்லாம் பெரிய அளவில் நினைத்துவிடக்கூடாது. நமது திரு.பேஸ்புக் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இங்கு சொல்லப்படும் கதிர்வீச்சு, நம் ஆலயங்களில் மட்டும் பூசை நேரத்தில் மந்திரங்கள் ஒலிக்கும் போது வெளியேறும் இறைசக்தி! இறைவனின் திருவருள் பூசை நேரத்தில் கருவறையிலிருந்து பரவுமாம். ஆண்கள் வெற்றுடலுடன் நிற்கும் போது அந்தக் கதிர்வீச்சு அவர்கள் மீது படிவதால், திருவருளை முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சட்டை போட்டால், அந்த கதிர் நம்மீது படாது!

சரி, ஆண்களென்றால் சட்டையைக் கழற்றி நிற்கலாம். ஐயோ, பெண்களுக்கு என்ன செய்வது? அப்படி வா வழிக்கு! நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை. அதற்குத் தான் அவர்கள் பெண்களை அதிகளவில் ஆபரணங்களை அணியச் சொன்னார்கள்.  பெண்கள் அணியும் பட்டாடைகளும் தங்க நகைகளும் இறைவன் திருவருளை ஈர்த்து, ஆண்கள் பெறும் அதே திருவருளை அவர்களுக்குப் பெற்றுத்தரும். எப்படி பேஸ்புக் சமத்துவம்? (இதெல்லாம் எந்த சமயப்புத்தகத்தில, எந்த ஆகமத்தில திருமுறைல சொன்னாங்கள் எண்டு நீங்க கேக்கக்கூடாது! அப்ப ஆம்பிளேல் நாங்க கோயிலுக்குள போட்டுக்கொண்டு போற மோதிரம், கைச்செயின், அரைக்கூடு தங்கமாலை இதெல்லாம் என்னத்துக்கு எண்டும் கேக்கக்கூடாது!)

விஞ்ஞானிகளுக்கும் ஒரு படி மேலே போய் இப்படியெல்லாம் இட்டுக்கட்டும் அதிமேதாவிகளை கண்டால் தூக்கிப்போட்டு நான்கு சாத்து சாத்தவேண்டும் போல் தோன்றும். சத்தியமாக நம் சமயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவியல் ஒளிந்திருக்கிறது தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அதற்காக சப்பைக்கட்டுச் சொல்லி, கண்ட மரபுகளையும், வழக்காறுகளையும் நியாயப்படுத்த முயலும் இந்த வதந்தி பரப்புநர்களை எந்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி தூக்கி உள்ளே போடலாம்?சும்மாவே யோசியுங்கள். விஞ்ஞானத்தை மீறிப் பரவும் அந்தக் கதிர்வீச்சால் கேவலம், ஒரு சட்டைத்துணியை ஊடுருவ முடியாமல் இருக்கும் போது, எப்படி அதை தெய்வீக சக்தி என்பீர்கள்? சரி, முன்னோர் முன்னோர் என்கிறீர்களே, உங்கள் கண்டுபிடிப்பை - இறைவன் முன் வெற்றுடலுடன் நில், பெண்ணே நகை அணியாமல் கோவிலுக்குப் போகாதே என்பதை - பூடகமாகவேனும் ஏன் எந்த நாயன்மாரும் அருளாளரும் பாடவில்லை?

சரி, நீயே சொல், அந்தக் காரணம் பொய் என்றால், வேறு என்ன தான் சாத்தியம், அந்த வழக்கத்துக்கு? மிக எளிமையான காரியம் தான்.


தமிழ்த்திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நாட்டாமை வரும் போது, வேலைக்காரன் மடித்துக் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்து கீழிறக்கி விடுவதை, தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வதை. பொருளாதாரம், அந்தஸ்து என்பவற்றில் உயர்ந்த ஒருவரை காணும் போது, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமான சைகைகள் இவை. பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டபோது அங்கு நிறுத்தப்பட்ட இறைவர்கள்,  அரசனாலேயே போற்றப்பட்டனர். ஆகவே, அரசர்களுக்கே அரசனான இறைவன் முன் ஒரு சாதாரண குடிமகன் எப்படி நிற்கவேண்டும்? அரசன் முன் நிற்பது போலவே அவர்களில் தோளில் கிடக்கும் சால்வையை இடையில் கட்டிக்கொண்டார்கள்.

இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. நிலவுடைமைச் சமூகத்தில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மேல் துண்டு, பாதக்குறடு, குடை என்பன பொதுவாக சாதிய அடுக்கில் மேலே இருந்த சமூகங்களாலேயே கையாளப்பட்டன. கோவிலில் இறைவனே பெரியவன் என்பதால், இறைவன் முன் ஆதிக்க வர்க்கத்தினர் கூட அந்த அடையாளங்களைத் தவிர்த்தார்கள். குறித்த வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்திய அந்தப் பொருட்கள், காலனித்துவ ஆட்சியின் பின், எல்லா சமூகத்தினரும் பேதமின்றிப் பயன்படுத்துகின்ற - மேற்சட்டை, செருப்பு, தொப்பி என்று முறையே மாறிவிட்டன. ஆனால் அந்தஸ்தின் அடையாளமாக இல்லாமல் போன பின்பும், அவை ஆலயங்களில் அனுமதிக்கப்படவில்லை.

ஆக இது வெறும் சமூக மரபு தான். இதற்கு சமய ரீதியில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை. சைவ நூல்களான திருமுறைகள், வேதாகமங்கள், புராணாதிகாசங்கள் எதிலுமே இவற்றை அகற்றுவது கட்டாயம் என்ற ஆணைகள் எங்கும் வழங்கப்படாததன் பின்னணி இது தான். அவை அந்நியர் ஆட்சியின் பின்பேயே நம்மிடம் பரவலான வழக்கத்துக்கு வந்தவை.
உண்மையைச் சொன்னால், சமகாலத்தில் ஆண்கள் கோவிலுக்குள் சட்டையைக் கழற்றுவதில் எந்த வித பொருத்தப்பாடும் இல்லை. இன்று உடலை முழுவதும் மூடி இருப்பது தான் நாகரிகம், பண்பாடு. கிராமப்புறங்களில் கூடக் கண்டிருப்பீர்கள். நன்கு வியர்த்து வழியும் வேலை செய்யும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், விளையாட்டுவீரர்கள் கூட அங்கும் அரிதாகத் தான் மேலாடையைக் கழற்றுகிறார்கள்.

நகரங்களில், பூங்காக்களில் ஒருவன் அரைநிர்வாணமாக நின்றால் எப்படி முகம் சுழிப்பீர்களோ, அப்படித் தான் கோவிலில் ஆண்கள் வெற்றுடலுடன் நிற்பதையும் பார்க்கவேண்டும். அதற்கு மட்டும் புனிதப்பூச்சு பூச வேண்டிய தேவை எதற்கு?

கோவில்களில் ஆண்கள் மேலாடையைக் கழற்றுவதில் இன்னும் பல நடைமுறை விபரீதங்களும் இருக்கின்றன. இந்தக் காலத்தில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் வாளிப்பான உடல் கொண்டவர்கள் அல்ல. தின்றும் குடித்தும் வண்டியும் வயிறுமாக அலையும் ஆணழகர்கள் தான் அதிகம்.  கணினி யுகத்தின் லீலை! அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக கோவிலுக்குள் உலவமுடியும்? வாகனம் காவும் போது முன்னே தூக்குபவனின் முதுகில் வயிறு இடிக்கும். கோவிலை வளைக்கும் போது திரும்பினால் மண்டபத்தூணில் வயிறு முட்டிக்கொள்ளும். எம்பெருமானே என்றபடி தொபுக்கடீர் என அட்டாங்க நமஸ்காரம் செய்யக் கீழே விழுந்தால், வண்டியை புவியீர்ப்பு மையமாகக் கொண்டு உடல் அந்தரத்தில் தொங்கியபடி எளிமை ஊசல் இயக்கம் ஆற்றும். ஹூம். இருப்பவனுக்குத் தானே  வண்டி வைத்திருப்பதன் வேதனை தெரியும்.


அவர்களுக்கு இந்தப் பீதி என்றால், ஒட்டி உலர்ந்த எலும்புக்கூடாய் நடக்கும் ஒருவனுக்கு அருகில் குலுக்கித் தளுக்கி நடக்கும் தன் நண்பனைப் பார்த்து பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டிருக்கும். புனிதமான கோவிலுக்குள் பொறாமைப்படலாமா? அப்படி பொறாமைப்படும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தலாமா?

இந்தத் தொந்தியையும் ஓமக்குச்சிகளையுமாவது சகித்துக் கொள்ளலாம். கன்னங்கரிய மயிர் படர்ந்து கரடி போல எதிரே வரும் ஒருவர்,  பார்ப்பவரை முகஞ்சுழிக்க வைப்பார்.  தேமல், படர்தாமரை முதலான தோல் நோய்களுடன் கூனிக்குறுகி போகும் ஒருவரைப் பார்த்தபடி உங்களால் சந்தோசமாக சாமி கும்பிட முடியுமா?

இப்படி எல்லாம் இல்லை, நாங்கள் ஜிம்முக்குப் போகிறோம், நன்கு உடம்பைப் பேணுகிறோம் என்று சத்தம்  ஒருபுறம் கேட்கும்.  உள்ளூர் சூரியாக்கள். அவர்கள் இது தான் வாய்ப்பு என்று புஜத்தை மடக்கி தோளை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ஐந்தாறு தடவை இளம்பெண்களைச் சுற்றி வந்து,  பீதியைக் கிளப்புவார்கள். அவர்களைக் கண்டு நம்மூர் சமந்தாக்களும் ஜோதிகாக்களும் கவனம் சிதறினால் உங்களுக்குப் பரவாயில்லையா? ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடம் ஆயிற்றே?

எல்லாவற்றையும் விட தாங்கமுடியாதது இந்த வியர்வை நாற்றம். கூடி நிற்கும் மக்களின் உடலிலிருந்து வெளியேறும் வெம்மைக்கு நடுவே முன்னும் பின்னும் வியர்த்து வழிய சுவாமி திருவீதி உலா வரும் போது நெருக்குப்பட்டு நடந்தவர்களுக்கு தான் அது புரியும்.  அதற்குள் சில நவநாகரிக நங்கையர் பூசிவரும் நறுமணங்கள், அழகுசாதன கிரீம்கள் வியர்வையுடன் கலந்து பரவும் மணம் இருக்கிறதே! உவ்வே!

வியர்வை நாற்றத்தில் இன்னொரு வகையான கொடுமை இருக்கிறது.  கொலைகாரப்பாவி. சாதாரணமாக நம் மூக்குக்கு நேரே அக்குளைக் காட்டி கையைத் தூக்கி அரோகரா போட்டுவிட்டுப் போய்விடுவான். நாம் சுயநினைவுக்கு வருவதற்குள் கோவிலில் பூசை முடித்து திரையைப் போட்டிருப்பார்கள்.

மீண்டும் பிரச்சினைக்கு மிகத்தெளிவாக வருகிறேன். ஆலயங்களில் ஆண்களின் மேலாடையைக் கழற்றச் சொல்வது ஒரு தவறு என்றால், அதைக் கண்ணகியின் கோவிலில் செய்ய முனைவது இன்னொரு மாபெரும் தவறு.

சிவன், திருமால் முதலிய பெருந்தெய்வக்கோவில்களில், அவர்கள் தான் பேரரசர்கள், நாம் ஆளப்படும் அடியவர்கள். ஆனால், நாட்டார் மரபில் இருப்பது அந்த உறவல்ல. கண்ணகி கிராமிய மரபுக்குட்பட்ட தெய்வம்.  அவளுடன் அடியவர்களுக்கு இருப்பது மிக எளிமையான தாய் - பிள்ளை உறவு. வைகாசி மாதம் தோறும் தன் பூட்டப்பிள்ளைகளை - பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டுச் செல்ல வருகின்ற மூதன்னை அவள். அவள் முன் சாதாரண பிள்ளைகளாகத்தான் அடியவர்களும் நிற்கிறார்கள், “அம்மாளே” என்கிறார்கள். “தாயாரே” என்கிறார்கள்.  “அம்மம்மா கூ” என்கிறார்கள். அப்படித்தான் அந்த உறவும் நீடிக்க இயலும்.

பெருந்தெய்வக் கோவில்களில் மரபு, வழக்கத்தைக் காரணம் காட்டி, ஆடையைக் கழற்ற நிர்ப்பந்தித்தால், ஓரளவுக்கேனும் அதிலுள்ள நியாயத்தைக் கருதி ஏற்றுக்கொள்ள முடியும். அங்கு ஆண்டான் - அடிமை முறையைக் கைக்கொள்வதில் தவறில்லை. இதை  நாட்டார் மரபில் ஏன் இதைத் திணிக்க வேண்டும்? அங்கு அடியவர்களுக்கும் தெய்வத்துக்கும் உள்ள நேரடி உறவை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்?

(நான் அறிந்த ஒரு சைவ அறிஞர் பெருந்தெய்வக் கோவில்களிலும் ஆண்களுக்குள்ள ஆடைக்கட்டுப்பாட்டை எதிர்க்கிறார். சமய நூல்களிலேயே சொல்லப்பட்ட விடயங்களைக் கூட, காலத்தைக் கருதித் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் போது, வெறும் நிலவுடைமைச் சமுதாய அடையாளமான மேலாடைக் கட்டுப்பாட்டை, மரபு என்ற  ஒரே காரணத்துக்காக சைவக்கோவில்களில் தொடர்வது அனாவசியம் என்கிறார் அவர், உண்மை தானே?)  

“நல்லூரில  கழற்றுறாய் தானே? ஊர்க்கோவில் என்றால் இளக்காரமா?” என்று இன்னும் கொஞ்சப்பேர் வம்புக்கு வருகிறார்கள். அடப்பாவமே, நல்லூர்க்கோவிலும் நம்மூர்க்கோவிலும் ஒன்றா? இலங்கை ஜனாதிபதி கூட அங்கு போக வேண்டுமென்றால் சட்டையைக் கழற்ற வேண்டும். அவர்களது மரபுப்பற்றை அஞ்சி இந்தியப்பிரதமரே அங்கு செல்லாமல் தவிர்த்ததை ஊர் அறியும். அந்த மனோதிடமும் பிடிவாதமும் நம்மவர்களுக்கு இருக்கிறதா? திருமணத்துக்கு வருபவர்களையும் சீருடையோடு நுழைபவர்களையும் எப்படி வரவேற்று அனுமதிக்கிறார்கள் என்பதிலேயே நம்மவர் முகத்திரை கிழிந்து விடுகிறதே. முன்பே சொன்னது தான். புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட சூடு இது.

காலத்துக்கு ஒவ்வாத இத்தகைய அதிமேதாவித்தனங்களைப் புகுத்துபவர்கள் தான் பிரச்சினைக்குரியவர்கள். கண்ணகி கோவில்களின் அழகொழுகும் மடாலய அமைப்பை இடித்து ஆகம விதிப்படி மாற்றி கும்பாபிஷேகம் செய்பவர்களும் இந்தப் பேர்வழிகள் தான். தமிழ்க் காவியங்களையும் வழக்குரையையும் அகற்றி, அங்கெல்லாம் சமஸ்கிருத மந்திரங்களை ஓத அனுமதிப்பவர்களும் இவர்களே தான். 

கோவிலில் காணிக்கைகள் மிஞ்சினால், அந்தப் பணத்தில் ஏதாவது கோவில் மண்டபத்தை இடித்துத் திருத்தி வண்ணமடிப்பதற்கு செலவழிப்பதில் இவர்கள் தயங்குவதில்லை. ஆனால், கோவிலைச் சுற்றி வாழும் ஐந்தாறு ஏழைக்குடும்பங்களுக்கு அறக்கட்டளை ஒன்றை நடாத்துங்கள் என்றால் நம்மைப் பார்த்து முறைப்பார்கள்.

கோவிலுக்கு வெளியே வந்து "இளந்தலைமுறையினர் சமயத்தில் ஆர்வம் காட்டுகிறார்களில்லை, கோவிலுக்கு வருகிறார்களில்லை" என்று முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். ஆனால், காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளைத் தூக்கிப்பிடித்து இளைஞர்களை முகஞ்சுழிக்க வைப்பதில் இவர்களே முன்னிலையில் நிற்பார்கள். நம் இன்றைய இளஞ்சந்ததி பெற்று வந்த சாபம் அது. 

ஒரு மரபை, பண்பாட்டைத் தொடர முயலும் போது அதன் சமகாலப் பொருத்தப்பாட்டை சிந்திப்பது முக்கியம். அது காலத்துக்குப் பொருந்தாவிட்டால், எத்தனை மனதுக்குப் பிடித்ததென்றாலும் சரி, தூக்கி எறிந்துவிட்டுப் போகவேண்டியது தான். ஆடையால் உடலை மறைப்பது என்பது இன்றைய நாகரிகம், இன்றைய பண்பாடு. ஆடையின்றி அலைந்தது காட்டுமிராண்டிகள் காலம். காலத்தில் முன்னோக்கித் தான் போகமுடியும், போகவும் வேண்டும். மீண்டும் ஆடைக்குறைப்புச் செய்யச் சொல்வது பண்பாட்டில்  பின்னே செல்வது. அது இயற்கைக்கும் முரணானது கூட.

இந்த வழக்கத்தை அமுல் படுத்திய சிலர், அதற்கு பரவலாக கிளம்பிய எதிர்ப்பைக் கண்டபின், “இனி இது தான் எல்லாக் கோவிலிலும் நடைமுறை. உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.” என்று கறுவிக்கொண்டார்களாம். பொய்க்காரணங்களைக் கூறி ஒரு குறித்த சமயத்தவனை அவனது சொந்த வழிபாட்டுத்தலத்துக்குள் அனுமதிக்க மறுப்பது, அவனது அடிப்படை உரிமையை மீறும் தண்டனைக்குரிய குற்றம்.  அந்தக் குற்றத்துக்காக நீதிமன்றில் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரமுடியும் என்பதை அவர்கள் நினைவில் கொள்வது நலம். அச்சுறுத்தலா? அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன். 😊

(அரங்கம் பத்திரிகையின் 65ஆம் மற்றும் 66ஆம் இதழ்களில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »

கல்லால மரத்தடி

0 comments
இலங்கை மண்ணில் இன்று வதியும் தமிழ் ஆளுமைகளில் மகத்தானவர்களாக நான் மதிக்கும் மூவரில் ஒருவர் பேராசிரியர்.மௌனகுரு அவர்கள். (ஏனைய இருவரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி,பத்மநாதன் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர்). மட்டக்களப்பில் அலகிலா ஆடல் நூலறிமுகம் இடம்பெற்ற போது, தனக்கு பன்னிரு திருமுறைகளையும் பெற்றுத்தர முடியுமா என்று அவர் கேட்டிருந்தார். ஆறு மாதங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் பாரதப்பிரதமரின் உபயத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மௌனகுரு சேருக்காக நூல்களை வாங்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது. (பொன்னம்பலவாணேச்சரம் புறப்பட்ட எங்களுக்கு பிரதமர் வருகையால் பாதை மூடியிருந்தது. பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் திரும்பிவிட்டோம்)பன்னிரு சைவத்திருமுறைகள். வைணவ நாலாயிரத் திவ்விய பிரபந்தங்கள். மொத்தம் இருபது புத்தகங்கள். இந்த நாளில் எனக்கு மட்டக்களப்புப் பக்கம் போகும் வாய்ப்பில்லை. அப்படியே போவதென்றாலும் இத்தனை சோதனைச்சாவடிகளைக் கடந்து இவ்வளவையும் காவிக்கொண்டு எப்படிச் செல்வது?

சேருக்கே அழைப்பெடுத்து விவரத்தைச் சொன்னோம். அவர் திங்கள் கொழும்பு வருவதாகச் சொன்னார். கூடவே மகிழ்ச்சியாகச் சொன்னார் "எனக்கு பிறந்தநாள் பரிசு அது". அன்று (யூன் 09) அவரது பிறந்தநாள் என்று பிறகு தான் தெரியவந்தது.

பிரதாபன் அண்ணா, நான், எமது இலங்கை சைவநெறிக் கழகத்தின் உபதலைவர் வினோ அண்ணா, பொருளாளர் ராஜ் அண்ணா, அவர் மனைவி சஹானா அண்ணி, சேருடன் நேற்று மாலை சந்திப்பு. சேரின் துணைவி பேராசிரியர் சித்ரலேகா அம்மாவும் இருந்தார். உண்மையிலேயே இரு துருவங்களின் சந்திப்பு அது. இந்தப்பக்கம் இளமை, துடிப்பு, சைவம், கடவுள். அந்தப்பக்கம் அனுபவம், நிதானம், மதமின்மை, கடவுள் மறுப்பு.

"இலங்கை - தமிழர் - சைவம் - சாதியம் - நாட்டாரியல்", 
"நாவலரைக் கொண்டாடிக்கொண்டே அவர் மறுத்த கண்ணகியையும் நாட்டாரியலையும் போற்றுதல்",
"நாட்டுக்கூத்தும் பண்பாட்டு மீட்டுருவாக்கமும்", 
"ஐயன் சூரனின் சைவப்புரட்சியும் சாதியமும்", 
"மரபார்ந்த சைவத்தை இற்றைப்படுத்த முயலும் போது எதிர்கொள்ளும் சவால்கள்" 
இப்படிப் பல தலைப்புகள், பல கோணங்கள், பல விவாதங்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. அண்ணாந்து கடிகாரத்தைப் பார்த்த போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. வேறு வழியின்றி தான் விடைபெற்றோம். இறுதியாக மௌனகுரு சேரும் சித்திரா அம்மாவும் சொன்ன கருத்து ஒன்று தான்.

பின்புறம் இடமிருந்து வலமாக, வினோ அண்ணா, பிரதாபன் அண்ணா, சித்ரா அம்மா, மௌனகுரு சேர், சஹானா அண்ணி, ராஜ் அண்ணா.

"சிந்தனையாளர்களாக நம்மால் செய்யக்கூடியது, தன் திசையில் நகரும் 'வரலாறு' எனும் ஆற்றைக் குச்சியால் கோடிழுத்து, திசைமாற்ற முடிந்ததாக திருப்திப்பட்டுக்கொள்வது தான். அந்த ஆறு நாம் கோடிழுத்த திசையில் நகர்வதும் நகராததும் காலத்தின் கையில் இருக்கிறது. கொள்கை அளவில் எந்த சித்தாந்தமுமே பயன் தராது. அது நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கு அறிவுபூர்வமான உரையாடல்கள் அவசியம். இணையம் என்னும் பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு வீணாக காலம் கழிப்பானேன்? விமர்சனங்களை தனிப்பட்ட தாக்குதலாகக் கருதாத, கருத முடியாத இளைஞர்களை ஒன்றிணைத்து இணையத்தில் ஈழத்தமிழ்ச்சைவம் சார் உரையாடல்களைத் தொடங்குங்கள். நாங்களும் இணைவோம்."

அவற்றை தென் திசை நோக்கி அமர்ந்த அந்த மௌனகுருவின் வார்த்தைகளாக உணர்ந்தேன். தேடுதலுள்ளோர் கூடுக. கல்லால மரம் தூரமில்லை.

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேர்! மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner