கல்லால மரத்தடி

இலங்கை மண்ணில் இன்று வதியும் தமிழ் ஆளுமைகளில் மகத்தானவர்களாக நான் மதிக்கும் மூவரில் ஒருவர் பேராசிரியர்.மௌனகுரு அவர்கள். (ஏனைய இருவரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி,பத்மநாதன் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர்). மட்டக்களப்பில் அலகிலா ஆடல் நூலறிமுகம் இடம்பெற்ற போது, தனக்கு பன்னிரு திருமுறைகளையும் பெற்றுத்தர முடியுமா என்று அவர் கேட்டிருந்தார். ஆறு மாதங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் பாரதப்பிரதமரின் உபயத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மௌனகுரு சேருக்காக நூல்களை வாங்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது. (பொன்னம்பலவாணேச்சரம் புறப்பட்ட எங்களுக்கு பிரதமர் வருகையால் பாதை மூடியிருந்தது. பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் திரும்பிவிட்டோம்)



பன்னிரு சைவத்திருமுறைகள். வைணவ நாலாயிரத் திவ்விய பிரபந்தங்கள். மொத்தம் இருபது புத்தகங்கள். இந்த நாளில் எனக்கு மட்டக்களப்புப் பக்கம் போகும் வாய்ப்பில்லை. அப்படியே போவதென்றாலும் இத்தனை சோதனைச்சாவடிகளைக் கடந்து இவ்வளவையும் காவிக்கொண்டு எப்படிச் செல்வது?

சேருக்கே அழைப்பெடுத்து விவரத்தைச் சொன்னோம். அவர் திங்கள் கொழும்பு வருவதாகச் சொன்னார். கூடவே மகிழ்ச்சியாகச் சொன்னார் "எனக்கு பிறந்தநாள் பரிசு அது". அன்று (யூன் 09) அவரது பிறந்தநாள் என்று பிறகு தான் தெரியவந்தது.

பிரதாபன் அண்ணா, நான், எமது இலங்கை சைவநெறிக் கழகத்தின் உபதலைவர் வினோ அண்ணா, பொருளாளர் ராஜ் அண்ணா, அவர் மனைவி சஹானா அண்ணி, சேருடன் நேற்று மாலை சந்திப்பு. சேரின் துணைவி பேராசிரியர் சித்ரலேகா அம்மாவும் இருந்தார். உண்மையிலேயே இரு துருவங்களின் சந்திப்பு அது. இந்தப்பக்கம் இளமை, துடிப்பு, சைவம், கடவுள். அந்தப்பக்கம் அனுபவம், நிதானம், மதமின்மை, கடவுள் மறுப்பு.

"இலங்கை - தமிழர் - சைவம் - சாதியம் - நாட்டாரியல்", 
"நாவலரைக் கொண்டாடிக்கொண்டே அவர் மறுத்த கண்ணகியையும் நாட்டாரியலையும் போற்றுதல்",
"நாட்டுக்கூத்தும் பண்பாட்டு மீட்டுருவாக்கமும்", 
"ஐயன் சூரனின் சைவப்புரட்சியும் சாதியமும்", 
"மரபார்ந்த சைவத்தை இற்றைப்படுத்த முயலும் போது எதிர்கொள்ளும் சவால்கள்" 
இப்படிப் பல தலைப்புகள், பல கோணங்கள், பல விவாதங்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. அண்ணாந்து கடிகாரத்தைப் பார்த்த போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. வேறு வழியின்றி தான் விடைபெற்றோம். இறுதியாக மௌனகுரு சேரும் சித்திரா அம்மாவும் சொன்ன கருத்து ஒன்று தான்.

பின்புறம் இடமிருந்து வலமாக, வினோ அண்ணா, பிரதாபன் அண்ணா, சித்ரா அம்மா, மௌனகுரு சேர், சஹானா அண்ணி, ராஜ் அண்ணா.

"சிந்தனையாளர்களாக நம்மால் செய்யக்கூடியது, தன் திசையில் நகரும் 'வரலாறு' எனும் ஆற்றைக் குச்சியால் கோடிழுத்து, திசைமாற்ற முடிந்ததாக திருப்திப்பட்டுக்கொள்வது தான். அந்த ஆறு நாம் கோடிழுத்த திசையில் நகர்வதும் நகராததும் காலத்தின் கையில் இருக்கிறது. கொள்கை அளவில் எந்த சித்தாந்தமுமே பயன் தராது. அது நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கு அறிவுபூர்வமான உரையாடல்கள் அவசியம். இணையம் என்னும் பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு வீணாக காலம் கழிப்பானேன்? விமர்சனங்களை தனிப்பட்ட தாக்குதலாகக் கருதாத, கருத முடியாத இளைஞர்களை ஒன்றிணைத்து இணையத்தில் ஈழத்தமிழ்ச்சைவம் சார் உரையாடல்களைத் தொடங்குங்கள். நாங்களும் இணைவோம்."

அவற்றை தென் திசை நோக்கி அமர்ந்த அந்த மௌனகுருவின் வார்த்தைகளாக உணர்ந்தேன். தேடுதலுள்ளோர் கூடுக. கல்லால மரம் தூரமில்லை.

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேர்! 



0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner