திருக்கோவில் முருகு

0 comments
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி
(நன்றி: Akish 4K Studio )

இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.  

அறிமுகம்


திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில் என்று போற்றுவது நமது பண்பாடு. ஆனால் ஒரு கோவில் மாத்திரமன்றி, அது அமைந்த தலமும் கூட “திருக்கோவில்” என்று அழைக்கப்படும் பெருமையை, தமிழ் கூறு நல்லுலகில், ஈழவளநாட்டின் ஒரேயொரு பதி மாத்திரமே பெற்றுள்ளது. கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தப் பேர் பெற்ற திருக்கோவில் பதியில், கடலோரம், இயற்கை எழில் கொஞ்சும் அமைவிடத்தில், “ஈழத்துச்சீரலைவாய்”  எனும் செல்லப்பெயருடன்  அமைந்து விளங்குகின்றது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். 

கதிர்காம முருகனின் நிரந்தர வசிப்பிடமாகப் போற்றப்பட்ட இத்திருத்தலம், ‘கந்தன் கதிரையாண்டவன் கோவில்’ என்றும் போற்றப்பட்டிருக்கிறது (Nevill 1885:04; Vimala n.d). ஆரம்பத்தில் மூலவராக வேலாயுதத்தைக் கொண்டிருந்ததால், இங்குள்ள இறைவனுக்கு "சித்திரவேலாயுதர்" என்று பெயர். இந்த ஆய்வுக்கட்டுரையில், மரபுரைகள், கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள், காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப்புகள் ஆகிய மூன்று வகை ஆவணங்களைப் பயன்படுத்தி, இக்கோவிலின் ஆதாரபூர்வமான வரலாற்றை நாம் கட்டியெழுப்ப இருக்கிறோம்.

மரபுரைகள்

திருக்கோவில் பற்றிய மரபுரைகளை தொன்மங்கள் என்றும் இலக்கியங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்கலாம். தொன்மங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரையாக நீடித்து நிலைப்பவை. இலக்கியங்கள் என்னும் போது, அவை எழுத்தில் - ஏட்டுருவில் பேணப்பட்ட தொன்மங்கள் என்று கொள்ளலாம். தொன்மம் -  இலக்கியம் என்பதெல்லாம், நமது வசதிக்காக  மேலோட்டமாகப் பிரித்துக்கொண்ட வகைப்பாடு என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

திருக்கோவிலின் தோற்றம் பற்றி மூன்று தொன்மங்கள்  கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று கதிர்காமத்துடனும், இன்னொன்று திருக்கோணேச்சரத்துடனும், திருக்கோவிலை இணைக்கின்றன. சூரபதுமனை கதிர்காமத்தில் அழித்த முருகனின் வேலானது உக்கிரம் தணியாமல் மாணிக்க கங்கையில் நீராடி எழுந்து, எதிர்ப்பட்ட வாகூரமலையை இரு கூறாக்கி இங்கிருந்த வெண்ணாவல் மரத்தின் கீழ் அமர்ந்ததாகச் சொல்கிறது முதல் தொன்மம் (நடராசா 1998:04). இங்கு வாழ்ந்த வேடர்கள், அவ்வாறு வந்தடைந்த வேலாயுதத்தைக் கண்டு வியந்து, கொத்துப்பந்தரிட்டு வழிபடுகிறார்கள். 

இந்தத் தொன்மம், பிற்காலத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து, மாணிக்க கங்கையில் நீராடிய போது வேலாயுதத்திலிருந்து மூன்று கதிர்கள் தோன்றியதாகவும், அவை வாகூர மலையைப் பிளந்து உகந்தை, திருக்கோவில், மண்டூர் ஆகிய மூன்று இடங்களிலும் கோவில் கொண்டதாகவும் சொல்கிறது (கந்தையா 1983:51). இன்னொரு கதை, இந்தக் கதிர்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்து,  சித்தாண்டி, வெருகல், போரதீவு ஆகிய மூன்று கோவில்களையும் கூடச் சேர்த்துக்கொள்கிறது (கணபதிப்பிள்ளை 2000:16). 

திருக்கோவிலை கோணேச்சரத்துடன் இணைக்கும் இன்னொரு தொன்மத்தின் படி, திருக்கோவில் இராவணனால் வழிபடப்பட்ட ஒரு சிவாலயம் (Shanmugalingam n.d). கீழைக்கரையில் அமைந்திருந்த திருக்கோணேச்சரம், திருக்கோவில், உகந்தை ஆகிய மூன்று சிவாலயங்களையும் இராவணன் மூன்று வேளைகளிலும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்று அந்தக்கதை நீள்கின்றது.

திருக்கோவிலை கதிர்காமத்துடனும் திருக்கோணேச்சரத்துடனும் இணைக்கும் இந்த இரு தொன்மங்களிலிருந்தும் நாம் இரண்டு விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, வேடர்கள் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட ஈழத்துத் தொல்குடிகளால் இங்கு வழிபாடு ஆரம்பமாகி இருக்கிறது. இன்னொன்று திருக்கோவிலை இரு செவிவழிச்செய்திகளும் திருக்கோணேச்சரம் மற்றும் கதிர்காமத்துடன் இணைக்க முயல்வதால், அதுவும் அவ்விரு கோவில்களின் அளவு அல்லது அவற்றுக்குச் சற்று முன் பின்னான அளவு பழைமை வாய்ந்தது என ஊகிக்கலாம். 

திருக்கோவில் பற்றிய மூன்றாவது தொன்மம், அது தானாகவே திரும்பிய கதையைச் சொல்கின்றது. திருக்கோவில் முன்பு வடக்கு நோக்கிய கோவிலாக இருந்ததாகவும், அடியவர் ஒருவர் இது கிழக்கு நோக்கி இருந்தால் கதிரவன் எழுகையில் அழகாகத் தோன்றுமே என்று எண்ணியபடி உறங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது மூலவர் வேலாயுதம் கிழக்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்ததாகவும், அன்று முதல் திரும்பிய கோவில் என்ற பொருளில் அது “திருக்கோவில்” ஆனது என்றும் இக்கதை செல்லும் (கந்தையா 1983:56-57). 

திரும்பிய கோவிலே திருக்கோவில் ஆனது என்று சொல்வதை ஒரு நாட்டார் நம்பிக்கையாகவே கருதமுடியும். திருக்கோவில் என்ற பெயருக்கான காரணம், கிழக்கிலங்கையில் இக்கோவில் பெற்றிருந்த முதன்மையும் புகழுமே. திரும்பிய கோவில் திருக்கோவில் என்று ஆவதற்கு தமிழில் சொற்புணர்ச்சி விதிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்த ஆலயத்தின் முகப்பு முன்பு வடக்கு நோக்கி இருந்து பின்பு கிழக்கு நோக்கி மாறியிருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு. 

சில ஆண்டுகளுக்கு முன் வரை, திருக்கோவிலுக்கு வடக்கும் கிழக்கும் இரு வாயில்கள் இருந்ததையும், அவை இரண்டும் முறையே வேட முகப்பு, சாமி முகப்பு என்று அழைக்கப்பட்டதையும் இங்கு நாம் பொருத்திப் பார்க்கலாம். “வேடமுகப்பு” எனும் வடதிசை வாயில் இத்தலத்துக்கும் வேடருக்கும் இருந்த உறவைத் தெற்றெனக் காட்டுகிறது. வேடரின் வழிபாடு வடக்கு முகமாகவும், மேல்நிலையாக்கப்பட்ட ஆகம வழிபாடு கிழக்கு முகமாகவும் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதையே வேடமுகப்பு – சாமிமுகப்பு ஆகிய பெயர்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. இரு வழிபாட்டு முறைகளும் இணைந்த புள்ளியை, கோவில் திரும்பியது எனும் தொன்மம் சுட்டிக்காட்டுகிறது என்று கொண்டால் அது தவறாகாது.

இனி தொன்ம இலக்கியங்களை எடுத்துக்கொண்டால், திருக்கோவில் பற்றிக் குறிப்பிடுகின்ற தொன்ம இலக்கியங்கள் இரண்டு. ஒன்று கண்ணகி வழக்குரை.  அடுத்தது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். 

கண்ணகி வழக்குரையோ அதன் வடபுலப் பிரதியான கோவலனார் கதையோ, யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவரான செயவீரனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. கண்ணகி வழக்குரையின் காலத்தை திருத்தமாகக் கண்டறியமுடியவில்லை. பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு நூலாக அது வரையறுக்கப்படுவதே வழக்கம் (நடேசன் 2014). கண்ணகியின் சிலம்புக்குப் பரல் தேடி கீழைக்கரையோரமாகச் செல்லும் தூரி (படகு) ஒன்று, மட்டக்களப்பையும் அடுத்து கண்டபாணத்தையும் கடப்பதை, வழக்குரை ஓரிடத்தில் பாடுகிறது (கந்தையா 1968:42). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும் திருக்கோவிலை கண்டபாணத்துறை என்றே சில இடங்களில் அழைக்கிறது (நடராசா 1998:07). 

கிழக்குக் கடலோர வாணிப மையங்களில் திருக்கோவிலும் ஒன்று என்பதற்கு, துறை என முடியும் இப்பெயரும், ஒல்லாந்தர் வரைபடங்களும், தெளிவான ஆதாரங்களாக அமைகின்றன. பிரித்தானியர் காலம் வரை, இக்கோவிலின் அருகே கடல்மார்க்கமாக கொப்பரை ஏற்றுமதி இடம்பெற்றது என்ற தகவலையும் நாம் இணைத்துப் பார்க்கலாம். சமகாலத்தில் கண்டபாணத்துறை என்பதைக் கந்தபாணத்துறை என்று உச்சரிப்பதுடன், கந்தனின் பாணமான வேலாயுதத்தின் துறைமுகம் என்றும் விளக்கம் தருகிறார்கள் (சகாதேவராஜா 2018:22). எனினும் இரு மூலநூல்களிலும் அது கந்தபாணம் என்றில்லாமல், கண்டபாணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் அவதானிக்கவேண்டும். அப்பெயரின் பொருள் தெளிவாக விளங்கவில்லை. ஈழக்கரையோரம் வடக்கே யாழ்ப்பாணத்துறை, கிழக்கே கண்டபாணத்துறை, மேற்கே பாணந்துறை ஆகிய கடலோரப்பதிகள் ஒத்தபெயரில் இருப்பதற்குப் பின்னுள்ள காரணத்தை ஆராய்ந்தால் மேலும் பல  செய்திகள் கிடைக்கக் கூடும்.  


ஆலயத்தின் இன்றைய தோற்றம் 
இனி மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தை எடுத்துக்கொண்டால், 1962இல் எஃப்.எக்ஸ்.சீ.நடராஜா அவர்களால் மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரிலும், 2005இல் கமலநாதன் தம்பதியினரால் முற்குறித்த பெயரிலும், நூல்வடிவில் வெளியான ஏட்டுச்சுவடி அது. வம்சவரலாறுகளைச் சொல்லும் இதையொத்த ஏட்டுச்சுவடிகள் “திருப்படைப்பத்ததி” என்ற பெயரில் திருக்கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் முதலான கோவில்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன (தட்சிணாமூர்த்தி 1992:1-3). அவற்றில் ஒன்றே வெளியாகி இந்த நூல் வடிவைப் பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் படி, கி.பி 08இல் மட்டக்களப்பை பிரசன்னசித்து எனும் மன்னன் ஆண்டுவரும் போது,  திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளும், அவள் கணவன் கலிங்க இளவரசன் புவனேய கயவாகுவும் தம் பிள்ளையில்லாக்குறை தீர்க்க கதிர்காமத்துக்கு யாத்திரை வருகிறார்கள். பிரசன்னசித்து, அவர்கள் தன் உறவினர் என்றறிந்து வரவேற்று, தன் நாட்டிலுள்ள நாகர்முனைச் சுப்பிரமணியர் கோவில் பாழடைந்து கிடப்பதையும், அதைத் திருத்தித் தரும்படியும் கோரிக்கை விடுக்கிறான். புவனேயகயவாகு, தன் மாமனிடம்  செய்தியனுப்பி குடிகளும் உதவியும் பெற்று அக்கோயிலைத் திருத்தி அமைக்கும் போது, தம்பதி நல்லாள் கருப்பமடைகிறாள். பிரசன்னசித்து அவர்களுக்கு மட்டக்களப்பின் தென்பகுதியைப் பரிசளிக்க அங்கு உன்னரசுகிரி எனும் இராசதானி தோன்றுகிறது. 

அவர்களுக்குப் பிறக்கும் மேகவண்ணன், மனுநேயகயவாகு என்ற பெயரில் அரசுக்கட்டிலேறி திருக்கோவிலைக் கற்றளியாகப் புனரமைத்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனபுரத்திலிருந்து வீரசைவக்குருக்களை வரவழைத்து ‘தம்பட்டர் ஊரில்’ குடியேற்றி, தன் தாய் நினைவாக ஒரு குளம் கட்டி அதற்குத் ‘தம்பதிவில்’ எனப் பெயர் சூட்டுகிறான் (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19). மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தின் இன்னோரிடம் சிவாலயங்களுக்குத் அரனூழியம் செய்ய கலிங்க மாகோனால் கோவசிய குலத்தார் நியமிக்கப்பட்டதை விவரிக்கின்றது. 

இந்தச் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் மன்னர்கள், கோவிலை புதிதாக அமைக்கவில்லை; பாழடைந்த கோவிலையே திருத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். அது இக்கோவிலின் பழைமைக்கு இன்னொரு சான்று. பூர்வசரித்திரம் சொல்லும் தம்பட்டை, தம்பிலுவில் (தம்பதிவில்) ஆகிய இரு ஊர்களை இன்றும் திருக்கோவிலின் அருகே காணமுடியும். வீரசைவ சங்கமரின் பரம்பரையினரான குருக்கள் குடியினரும், மாகோன் அரனூழியம் வகுத்ததாகச் சொல்லப்படும் கண்டன், சருகுபில்லி, கட்டப்பத்தன் ஆகிய மூன்று கோவசியர் குலத்தவரும், இன்றும் அவ்விரு ஊர்களிலும் வசித்து வருகிறார்கள்.  இவை சார்ந்த தகவல்களை மட்டுமே பூர்வசரித்திரத்திலிருந்து நம்மால் உறுதியாக ஏற்றுக்கொள்ளமுடிகின்றது. 

பூர்வ சரித்திரமானது, சில இடங்களில் திருக்கோவிலை “புவனத்திருப்பணி” என்னும் பெயரால் அழைக்கின்றது (கமலநாதன் கமலநாதன் 2005:119-121). அதிலுள்ள “புவனேசர் கல்வெட்டு” எனும் பாடல், புவனேயகயவாகுவால் அக்கோவில் அமைக்கப்பட்ட வரலாற்றைப் பாடுகின்றது. எனினும், பூர்வ சரித்திரம் குறிப்பிடும் காலவரிசை ஆண்டுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, திருச்சோழனை திருமாவளவன் கரிகால் சோழனாக இனங்காணும் போக்கு ஆய்வுலகில் உண்டு (கோபால் 2005:49-50).

கற்றளிகள் பல்லவர் காலத்துக்குப் பிந்தியவை என்பதாலும், மட்டு பூர்வ சரித்திரம் வரலாற்று ரீதியில் அத்தனை நம்பகமானதல்ல (McGilvray  2008:58-63) என்பதாலும், வேறு சரித்திரச் சான்றுகள் கிடைக்காத வரை, திருக்கோவில் தொடர்பான இத்தொன்மங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் இன்றும் அப்பகுதி மக்களின் வாய்மொழியில் “மனுராசா” (மனுநேய கயவாகு?), “காலிங்க மாகோன்” “தம்பதியம்மாள்” முதலியோர் திருக்கோவிலைக் கட்டியது பற்றிய நம்பிக்கைகள் நிலவுவதால் அவர்களை வரலாற்று மாந்தர்களாகக் கொள்வதற்கு இடமிருக்கிறது. இவ்வாறு கொண்டால், திருக்கோவிலின் சரித்திர பூர்வமான தோற்றம் மாகோனுக்கு (1215 - 1256) சற்று முன், இலங்கை சோழராட்சியின் கீழ் இருந்தபோது, பத்தாம் – பதினோராம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தது என வரையறுக்கலாம். 

திருக்கோவிலை மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், “நாகர்முனை” என்றும் அழைக்கின்றது. இப்பெயரை வைத்து, இது ஈழத்து ஆதிக்குடிகளான நாகர் செறிந்து வாழ்ந்த பதி என்று கூறுகின்றனர் (Nirmala 2004:103). கீழைக்கரையின் மிகப்பழைமையான கண்ணகி வழிபாட்டு மையங்கள், தம்பிலுவில்லும் பட்டிமேடும். இவை இரண்டும் திருக்கோவிலுக்கு மிக அருகே உள்ள இடங்கள். இந்த இரு ஆலயங்களோடும் தொடர்புடைய நாட்டார் இலக்கியங்களில், கயிலையில் உமையின் அம்சமாக விளங்கிய “நாகமங்கலை” எனும் அணங்கு, கண்ணகியாக அவதரித்தாள் என்று சொல்லப்படுகிறது (கணபதிப்பிள்ளை 1971:67>99). இந்த இரண்டு தலங்களின் இலக்கியங்களிலுமே “நாகமங்கலை” என்ற பெயர் குறிப்பாக அழுத்திச் சொல்லப்படுவதன் மூலம், திருக்கோவில் பகுதி நாகர் வாழ்ந்த இடம் என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாகமங்கலை எனும் நாகரின் தாய்த்தெய்வ வழிபாடு, பின்னாளில் அறிமுகமான பத்தினி வழிபாட்டுடன் இணைந்து, இன்றுள்ள தம்பிலுவில், பட்டிமேடு கண்ணகி ஆலயங்கள் உருவாகி இருக்கின்றன என்று இதை மேலும் விரித்துப் பார்க்கமுடியும்.  திருக்கோவிலின் அருகே அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு, சங்கமன்கண்டி ஆகிய இடங்களில் நாகர் தொடர்பான தொல்பொருட்சான்றுகள் அண்மையில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டமை இங்கு இணைத்துப்பார்க்கத்தக்கது. 

தொல்பொருட் சான்றுகள்:

பழைய மன்னர் காலத்து நாணயங்களும், துருப்பிடித்த மணிமாலைகள், பதக்கங்கள், ஆபரணங்கள் என்பனவும், 2004 கடற்கோள் அனர்த்தத்துக்கு முன்பு, இவ்வாலய உள்வீதியில் இருந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை இக்கட்டுரையாளனால் நினைவுகூரமுடிகின்றது. இன்று அவை எவற்றையும் காணும் பாக்கியமோ, அவற்றின் மூலம் வரலாற்றைக் கட்டியெழுப்பும் தவப்பயனோ நமக்கு இல்லை. இதுபோலவே ஆலயத்தில் சேமிக்கப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இவையொழிய தொல்பொருள் சான்றுகள் என்னும் போது திருக்கோவிலில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு  கல்வெட்டுக்களே எஞ்சியுள்ளன.

அக்கல்வெட்டுக்களில் ஒன்று, தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலிலிருந்து இங்கு கொணர்ந்து நிறுவப்பட்ட தம்பிலுவில் கல்வெட்டு (Nevill 1885:04; இந்திரபாலா 1968:42). விசயவாகு தேவர் என்ற மன்னரின் பத்தாம் ஆட்சியாண்டில், சிவஞானசங்கரரின் கோவிலுக்கு, “வோவில்” கொடையளிக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கின்றது (பத்மநாதன் 2013:429-446). சில ஒல்லாந்து வரைபடங்கள் மூலம் “வோவில்” என்பது திருக்கோவிலுக்குத் தெற்கே இருந்த ஒரு பாரிய நீர்நிலை என்பதை அறியமுடிகின்றது (Nationaal Archief n.d). இக்கல்வெட்டின் படி, அக்குளமும் அதன் விவசாய உற்பத்தியும் திருக்கோவிலுக்கோ அல்லது அதன் அருகில் அமைந்திருந்த இன்னொரு கோவிலுக்கோ மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

பூர்வ சரித்திரத்திலும், சங்கமண்கண்டி அருகே, இருபத்து நான்கு குளங்களை இணைத்து முப்பத்திரண்டு மதகுகள் வைத்து மனுநேயகயவாகுவால் அமைக்கப்பட்ட மாபெரும் ஏரி பற்றிய குறிப்பு வருவதை (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19) நாம் அவதானிக்கலாம்.  அவ்விடத்தில் ஒன்றோடொன்று நீர்த்தொடர்பு கொண்டு இன்று காணப்படும் தாண்டியடிக்களப்பு – உமிரிக்களப்பு – முள்ளியடிக்களப்பு – கோரைக்களப்பு ஆகிய வாவிகளை, இந்த வோவில் ஏரியின் எச்சங்களாக இனங்காணலாம்.

இந்திரபாலா, பத்மநாதன் போன்ற வரலாற்றறிஞர்கள் தம்பிலுவில் கல்வெட்டைப் பொறித்த மன்னனை, கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1509 - 1521) என்று இனங்காணுகிறார்கள் (இந்திரபாலா 1968:42; பத்மநாதன் 2013:429-446). வரலாற்றுலகில் புகழ்பெற்ற “விஜயபாகு கொள்ளை” அல்லது “விஜயபாகு படுகொலை” என்ற சம்பவத்தில் மடிந்த மன்னன் இவன்.  எனவே, இக்கல்வெட்டு கி.பி 1519 இல் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, கோட்டையின் விஜயபாகு ஆறாம் விஜயபாகு அல்ல, ஏழாம் விஜயபாகு ஆகின்றான் (Sivaratnam 1968:52; Mendis 1996:69). எனினும் இவனால் பொறிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளமையாலும் (பத்மநாதன் 2013:429-446), இக்கல்வெட்டின் எழுத்தமைதி, 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்பதை வரலாற்றறிஞர்கள் உறுதிப்படுத்துவதாலும், இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1519இலேயே என்று உறுதியாகச் சொல்லலாம்.

விசயவாகு தேவரைக் குறிப்பிடும் இன்னொரு கல்வெட்டு, முழுமையாக வாசிக்க முடியாத நிலையில் இங்கு காணப்படுகிறது. அது நாம் மேலே பார்த்த தம்பிலுவில் கல்வெட்டுக்குச் சமகாலத்தியது. இக்கல்வெட்டிலேயே “திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம்” என்ற பெயரை முதன்முதலாகத் தெளிவாகக் காணமுடிகின்றது. இக்கல்வெட்டின் இன்னொரு சிதைந்த வடிவத்தை சி.கணபதிப்பிள்ளை தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அதில்  ‘கிழக்கு கடல், மேற்கு கழிகாமமலை, தெற்கு அறுகமனப்பூமுனை, வடக்கு அன்பிலாந்துறை’ என்ற வரிகள் காணப்படுகின்றன (கணபதிப்பிள்ளை 1981:31-42). இதுதான் உண்மையான கல்வெட்டு வாசகமா, அல்லது தான் கேள்வியுற்ற வாய்மொழி மரபுரையொன்றை அவர் தன் நூலில் எழுதினாரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. 
கோவில் கல்வெட்டுகளும் தூண்களும்

இவை இரண்டையும் விட, ஆலய வெளிவீதியில் மண்மூடிக் காணப்படும் பழைய திருச்சுற்று மதிலொன்றின் அத்திவாரம், மிகப்பழைமையான செங்கல் கட்டுமானமாகும். பழைமையான எழுத்து வரிவடிவங்களைக் கொண்ட உடைந்த சாசனங்களும் சிதைந்த கற்றூண்களும் இக்கோவில் வளாகத்தில் இன்றும் காணக்கிடைக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறைப்படி ஆய்வுக்குட்படுத்தும் போது, மேலும் பல தகவல்கள் பெறப்படலாம்.

திருக்கோவிலின் கருவறை விமானம் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பல வரலாற்றறிஞர்கள் கருத்துக்கூறியுள்ளனர். போர்த்துக்கேயரிடமிருந்து தப்பிய பழைய கொக்கட்டிச்சோலை ஆலயமும், பொலனறுவை வானவன் மாதேவீச்சரமும் கிட்டத்தட்ட இதே விமான அமைப்பையே கொண்டிருப்பதைக் காணலாம். எனவே கற்றளி மண்டபங்கள் இடிக்கப்பட்டு ஆலயம் சூறையாடப்பட்டாலும் கருவறை இடிக்கப்படவில்லை என்று கொள்ளமுடியும். இதில் மேலதிக ஆய்வுகள் தேவை.

காலனியக் குறிப்புகள்:

காலனியக் குறிப்புகளில் திருக்கோவில் பற்றிக் குறிப்பிடும் மிகப்பழைய குறிப்பு ஒல்லாந்தருடையது. 1602ஆமாண்டு மே 30ஆம் திகதி,  மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து ஒரு முகத்துவாரத்துக்கு அருகே தங்கள் கப்பலைச் செலுத்தும் ஒல்லாந்தர்கள், அங்கு ஓர் ஆலயமும் கிராமமும் இருப்பதைக் காணுகிறார்கள். பின்பு அங்கிருந்து தாம்; மட்டக்களப்பை அடைய உதவும் அம்மக்களுக்கு ஒல்லாந்தர் கத்திகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். ஒல்லாந்தர் குறிப்பிடும் அந்த ஆலயம், திருக்கோவில் (Ferguson 1998:14-15).

ஒல்லாந்து வணிகரான ஜொகன்னஸ் வொன் ப்ரீ என்பவர்;, 1603 யூலை 13ஆம் திகதியிட்ட தன் நாட்குறிப்பில், முழுநிலவை அண்மித்து திருக்கோவிலில்  நடக்கும் திருவிழாவில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவதையும், மட்டக்களப்பு அரசனும் அங்கு செல்ல இருப்பதையும், அந்நாட்கள் தங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்பதையும்  பதிவு செய்திருக்கிறார் (Ferguson 1998:112-113). இவர் சொல்வதை ஒட்டி,  1603இல் முழுநிலவு நாள், யூலை 23ஆம் திகதி வந்திருந்தது என்பதால், அப்போது திருக்கோவிலில் ஆடிப்பூரணையே விழாக்காலமாக இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம். 

இவை இரண்டையும் அடுத்து, 1687இல் எழுதப்பட்ட போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான குவரோஸ் பாதிரியாரின் குறிப்புகளும் கவனிக்கத்தக்கவை.  அவர் திருக்கோவிலின் உண்மையான பெயர் “மூன்று கோவில்கள்” (திரி + கோவில்?) என்றும் அது அசவீடோவால் இடித்தழிக்கப்படும் வரை, இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமாக நிலவியது என்றும், அசவீடோ அக்கோவிலுக்குப் பொறுப்பாக இருந்த கணேசர்களைக் (?) கொன்று ஆலயத்தைச் சூறையாடியதால், மக்கள் இடப்பெயர்ந்து, அக்கோயிலும் சூழலும்; பாழடைந்துவிட்டதாகவும், இங்கு போல் யானைத்தந்தம், சாயவேர், தேன்மெழுகு, எலுமிச்சை, நெல் என்பன இலங்கையில் வேறெங்கும் சிறப்பாக விளைவதில்லை என்றும் பதிவுசெய்துள்ளார் (Queirós 1992:65). 

அவர் குறிப்பிடும் ஜெரோனிமோ டி அசவீடோ, இலங்கையின் போர்த்துக்கேய தளபதியாக கி.பி 1594 முதல் 1613 வரை பதவி வகித்தவன் (University of Ceylon  1948:282). ஜொகன்னசின்  திருக்கோவில் ஆடிவிழா சிறப்பாக இடம்பெற்ற 1603ஆம் ஆண்டுக் குறிப்போடு ஒப்பிட்டால், 1604 முதல் 1612இற்கு இடைப்பட்ட காலத்தில் தான் திருக்கோவில் போர்த்துக்கேயரல் இடிக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கலாம். குவரோஸ் சந்தேகிப்பது போல, மூன்று கோவில்கள் அன்றி, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மூன்று கோபுரங்கள் சிதைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

திருக்கோவிலுக்காக குடியேறிய சங்கமக்குருக்களின் பரம்பரையினரான குருக்கள் குடியினர் தற்போது திருக்கோவிலுக்கு வடக்கே பன்னிரண்டு கி.மீ தொலைவிலுள்ள அக்கரைப்பற்றில் தான் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தம்பட்டையிலிருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்று சென்றதும், திருக்கோவிலின் ஊழியக்குலங்களான கலிங்க வெள்ளாளர் தம்பிலுவில்லுக்கு இடம்பெயர்ந்ததும் இந்த இடைப்பட்ட காலத்திலேயே இடம்பெற்றிருக்கவேண்டும். இதனாலேயே திருக்கோவில் சூறையாடப்பட்டு சுமார் 70 ஆண்டுகளின் பின், கோயிலும் சூழலும் பாழடைந்து கிடப்பதாக குவரோஸ் எழுதியிருக்கிறார்.

அடுத்த ஒரு நூறாண்டு காலத்துக்கு திருக்கோவில் பற்றிய எந்த வரலாற்றுத்தகவல்களும் சிக்கவில்லை. கண்டி மன்னர்களான இரண்டாம் இராஜசிங்கனும் அவனுக்குப்பிந்திய விமலதர்மன், நரேந்திரசிங்கன் போன்றோரும் மட்டக்களப்போடு கொண்டிருந்த உறவுகளுக்கு கண்ணகி இலக்கியங்கள் சான்றாவதால், அவர்கள் காலத்தில் தமிழகச்செட்டிகளின் உதவியுடன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்று கொள்ளமுடியும். இராசசிங்கனையும் நரேந்திரசிங்கனையும் புகழும் நரேந்திரசிங்கன் பள்ளு (ஐயர் 1940:41-45), தம்பிலுவில் கண்ணகி அம்மன் பள்ளு(31), தம்பிலுவில் மழைக்காவியம் (நவநாயகமூர்த்தி 1999:42-43) ஆகிய சிற்றிலக்கியங்கள் திருக்கோவில் பற்றியும் குறிப்பிடுவதால், இராசசிங்கன் (1635 - 1687)  மற்றும் நரேந்திரசிங்கன் (1707 - 1739)  காலத்தில் திருக்கோவில் அவர்களது மானியங்களைப் பெற்றிருக்கலாம் அல்லது, அவர்களுக்கு நன்கு அறிமுகமானதாக இருக்கலாம் என்பதற்குச் சான்றாகின்றன.

இனி, 1802ஆமாண்டு பிரித்தானிய ஆளுநர் பிரடரிக் நோர்த்தின் உதவியாளர் தோமஸ் கிறிஸ்டி திருக்கோணமலையிலிருந்து மாத்துறை நோக்கி கரையோரமாகப் பயணிக்கிறார். மே ஆறாம் திகதி, திருக்கோவிலுக்குத் தாங்கள் சென்றதையும், திருக்கோவிலின் புராதனமான விமானம் பற்றியும், ஆலயத்திலுள்ள சிற்பங்கள், தேர்கள், நடனமாதர் பற்றியும் அவர் தன் நாட்குறிப்பில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் (Cordiner 1807:137)

திருக்கோவில் 1807ஆம் ஆண்டு மட்டக்களப்பு முதலியார் ஒருவரால் திருத்திக் குடமுழுக்குக் கண்;டதுடன், அங்கு கந்தபுராண படனம் நிகழ்த்துவதற்கான அனுமதியும் காலனிய அரசாங்கத்திடம் பெறப்பட்டிருக்கிறது (Vimala n.d). திருக்கோவிலின் அழகிய தேர்களும், மரத்தாலான மகாமண்டபமும் 1823 செப்டம்பர் 19இல் இடம்பெற்ற தீவிபத்தில் எரிந்து சாம்பலாகி விட்டன. அதற்குப் பின்னர், 1826 நவம்பர் ஆறாம் திகதி, திருக்கோவிலில் இன்னொரு குடமுழுக்கு இடம்பெற்ற குறிப்பைக் காணமுடிகின்றது. தீவிபத்தில் அழிந்துபோன மகாமண்டபம், 1851 ஒக்டோபர் 30ஆம் திகதி புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டது (25). 

1803ஆமாண்டு அளவில் இக்கோயிலில் திருவேட்டைத் திருவிழா இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு அதேயாண்டில் எழுதிய ஓலைச்சுவடியொன்றில் காணப்படும் “திருவேட்டைக்கவி” பாடல்கள் சான்றாகின்றன. 1803இற்கும்  1820இற்கும் இடையே, வையாளிப்போடியார் என்பவர் இக்கோயிலின் நிலைமைப்போடியாக (தலைவராக) விளங்கிய காலத்தில், இங்கு கொள்ளையடிக்கப்பட்ட பெருமளவு செல்வம் மீட்கப்பட்டதை ஒரு ஓலைச்சுவடி அலங்கார அணிகளுடன் விவரிக்கின்றது (கணபதிப்பிள்ளை 1981:31-42). திருடப்பட்ட பொருட்கள் என்று அது பட்டியலிடும் ஆபரணங்களின் எண்ணிக்கையை நம்மால் முழுமையாக நம்பமுடியாது எனினும், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் போர்த்துக்கேயரால் கொள்ளையடிக்கப்பட்டு இருநூறாண்டுகளுக்குப் பின்பும், பெருமளவு செல்வங்களுடன் திகழ்ந்திருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்துசேர முடியும். 

1603 அளவில், ஆடிப்பூரணையே திருக்கோவிலின் உற்சவ காலமாக இருந்தது என்பதை ஒல்லாந்து வணிகரின் குறிப்பின் மூலம் அறிந்தோம். இடைப்பட்ட காலத்தில் கேதாரகௌரி - கந்தசஷ்டி விரத நாட்களும் உற்சவகாலமாக இருந்திருக்கிறது.  இதற்குச் சான்றாக, மட்டக்களப்பு எட்டுப்பகுதியும் கூடி, 1870 ஐப்பசி ஒன்பதாம் திகதி (1870.10.24) தேரோட்டம் நிகழ்த்தியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏட்டுக்குறிப்பைச் சொல்லலாம். பஞ்சாங்கத்தின் படி, அன்று ஐப்பசி அமாவாசை. அதாவது, தீபாவளிக்கு அடுத்த நாள். தற்போது ஆடி அமாவாசையே திருக்கோவிலின் தீர்த்தோற்சவ தினமாகக் காணப்படுகிறது.

திருக்கோவிலின் தலவிருட்சம் வெண்ணாவல் மரம். அதன் தீர்த்தமாக வங்கக்கடலே கொள்ளப்படுவதுடன்,  ஆடி அமாவாசையில் நீத்தார் வழிபாடும், சமுத்திர தீர்த்தோற்சவமும் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஆலாத்திப்பெண்டான எண்பது வயது தங்கம்மைப் பாட்டி, ஏழு வயதுச் சிறுமியாக மாறி நின்றதையும், கிழக்குக்கரையையே புரட்டிப்போட்ட 2004 ஆழிப்பேரலை, கோவிலை வெறுமனே தழுவி வணங்கிச்சென்றதையும், இங்கிருக்கும் இறைவனின் அற்புதங்கள் என்று கூறி நெக்குருகுவார்கள் அடியவர்கள். வேண்டியதெல்லாம் அருளும் திருக்கோவில் சித்திரவேலாயுதனின் அருட்கோவில்,  2018 யூன் மாதம் இனிதே குடமுழுக்குக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


உசாத்துணைகள்:

இந்திரபாலா, கா. (யூலை - அக்டோபர் 1968). "ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள்" கட்டுரை, சிந்தனை.
ஐயர், சதாசிவ. (1940). வசந்தன் கவித்திரட்டுகல்முனை:மட்டக்களப்பு தெற்கு ஆசிரியர் சங்கம்.
கணபதிப்பிள்ளை, க. (2000) முருக வழிபாடும் கதிர்காமப் பாதயாத்திரையும்,  கொழும்பு:பெ.கந்தக்குட்டி வெளியீடு.
கணபதிப்பிள்ளை, சி. (1971). மகாமாரித் தேவி திவ்விய கரணியாழ்ப்பாணம்:விவேகானந்தா அச்சகம்.
————. (1978). பத்தினி வழிபாடு, அட்டப்பள்ளம்.
————. (1981). பூர்வீக சப்த ஸ்தலங்கள், அட்டப்பள்ளம்.
கந்தையா, வீ.சீ. (பதி.) (1968). கண்ணகி வழக்குரை, காரைதீவு:இந்து சமய விருத்திச்சங்கம்.
————. (1983). மட்டக்களப்பு சைவக்கோவில்கள், பாகம் 1, மட்டக்களப்பு:பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சு, 
கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
கோபால், வெல்லவூர். (2005). மட்டக்களப்பு வரலாறு – ஒரு அறிமுகம்மட்டக்களப்பு:மனு வேதா வெளியீடு.
சகாதேவராஜா, வி.ரி. (2018.02.23). "திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குடமுழுக்கு", அரங்கம், 1(4).
தட்சணாமூர்த்தி, சி. (1992). கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், காரைதீவு.
நடராசா, எஃப்.எக்ஸ்.சி. (1998). மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு: மாவட்ட கலாசார பேரவை.
நவநாயகமூர்த்தி, நா. (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, பனங்காடு:வானதி வெளியீடு.
பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு:இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  • Cardiner, James. (1807). A Description of Ceylon containing an account of the country, inhabitants and natural productions, Volume II, London:Longman, Hurst, Rees, and Orme.
  • Ferguson, Donald. (1998).  The Earliest Dutch Visits to Ceylon, New Delhi:Asian Educational Services.
  • McGilvray, Dennis B. (2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East coast of Sri Lanka,  Durham (NC):Duke University Press.
  • Mendis, G.C. (1996). The Early History of Ceylon and Its Relations with India and Other Foreign Countries, New Delhi:Asian Educational Services.
  • Nevill, Hugh. (1885 September - October). The Taprobanian, Bombay:London Education Society’s Press.
  • Queirós, Fernão de, (1992). The Temporal and Spiritual Conquest of Ceylon, (S.G.Perera Trans.), Volume I,  New Delhi:Asian Educational Services.
  • Ramachandran, Nirmala. (2004). The Hindu Legacy to Sri Lanka, Pannipitiya:Stamford Lake (Pvt) Limited.
  • Sivaratnam, C.  (1968). The Tamils in early Ceylon, Colombo.
  • University of Ceylon, (1948), University of Ceylon Review, Volumes 6-8, University of Ceylon Publication, Colombo

வலைத்தளங்கள்:


இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெற்ற மலேசிய திருமுருகன் திருவாக்கு பீடத்தின் நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் வெளியிடப்பட்ட "முருகு" சிறப்புமலரில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். 
மேலும் வாசிக்க »

ஒரு பன்றியின் சிலையும் சில அக்கரை மாடுகளும்

0 comments


கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம்  கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர் 27 வியாழக்கிழமை கோவிலுக்குப் புறப்பட்டேன்.

கோவிலுக்குள் நுழைந்ததுமே வாசலில் கம்பீரமாக நின்ற இரு தேர்களும் கவனத்தைக் கவர்ந்தன. அந்தத் தேர்களைப் பற்றி, ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பழைமைவாய்ந்த அத்தேர்களின் சிற்பங்கள் அறியாமையால் ஆண்டுக்காண்டு இழக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அந்தச் சிற்பங்களை ஆவணப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கொக்கட்டிச்சோலைத் தேர்களிலுள்ள சிற்பங்கள் பற்றி, ஆலயத்தின் 1998 குடமுழுக்கின் போது வெளியான சிறப்பு மலரான “தேரோட்டத்தில்”  கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைவாணி கந்தசாமியால் எழுதப்பட்ட அருமையான கட்டுரையையும் முன்பு படித்திருந்தேன்.  எனவே ஆர்வம் தூண்ட தேர்களை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினேன்.

முதலில் பிள்ளையார் தேரை நெருங்கிப் பார்த்தேன். இப்போது தேரிலுள்ள வேலைப்பாடுகள் பல எளிமையானவை, கலை நுணுக்கங்கள் குறைவானவை.  தேரின் பழைய சிற்பங்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  குடமுழுக்கு மலரில் வெளியான கட்டுரைக்கும் தேரிலுள்ள சிற்பங்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சித்திரத்தேர் என்று அழைக்கப்படும் பெரிய தேரை நெருங்கினேன். கைபேசி வெளிச்சத்தில் கண்ட முதலாவது சிற்பமே அதிர்ச்சியை ஊட்டியது. சைவநெறியில் மிக அரிதாகக் கூறப்படும் சிவ வடிவம் அது. சிவனின் வராக அவதாரம்!
கொக்கட்டிச்சோலைத் தேர் சிவ வராகர்!

பாடசாலையில் சைவநெறி படித்த எல்லாருக்குமே "சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த கதை" தெரியும். வேடன் தாய்ப்பன்றியைக் கொன்றுவிட, அதன் குட்டிகள் பசியில் அழுவதைக் கண்டு இரங்கி ஈசன் தாய்ப்பன்றி உருவில் வந்து பால்கொடுக்கின்றான்.  சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகப் பதிவான கதை இது.  மணிவாசகரும் இச்சம்பவத்தை "ஏனக்குருளைக்கருளினை போற்றி" (ஏனம் + குருளை =  பன்றி +குட்டி) என்று போற்றித்திருவகவலில் பாடியிருக்கிறார். இந்தக்கதை, சைவமரபில் இறைவன் தாயுமானவன் என்பதையும், அவன் அளப்பருங்கருணையையும் சுட்டிக்காட்டச் சொல்லப்படும் இரண்டு கதைகளில் ஒன்று.  (மற்றையது, ஏழைக் கர்ப்பிணி ஒருத்திக்கு ஈசனே அவளது தாயின் வடிவில் வந்து பிரசவம் பார்த்த கதை). 


திருப்பரங்குன்றத்து சிவவராகர்.
 
சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகச் சொல்லப்படும் இக்கதை, மிக அரிதாகவே சிவாலயங்களில் இடம் பிடித்திருக்கிறது. பாண்டிய நாட்டு மதுரையிலும் திருப்பரங்குன்றத்திலும் உள்ள "ஏனக்குருளைக்கருளி" சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அறியாமையால் இவை தற்போது ‘வராகி அம்மன்' என்று பக்தர்களால் வழிபடப்படுகின்றன. இந்த வடிவில், திருமாலின் வராக அவதாரம் போல,  மாந்தவுருவகப் பன்றியாக (anthropomorphic) ஈசன் சித்தரிக்கப்படுவதே சிறப்பு. கொக்கட்டிச்சோலையிலுள்ள இந்த வடிவமும் பன்றி முகமும் மனித உடலும் கொண்டிருந்தது. நான்கு கரங்கள். முன்னிரு கரங்களும் பன்றிக்குட்டிகளை அணைத்துப் பாலூட்ட, பின்னிரு கைகளும் மானும் மழுவும் தாங்கியிருந்தன. இந்த வகையிலுள்ள அரிதான சிற்பம் இலங்கையில் வேறெங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை.


இருளில் சரிவரத் தெரியாவிட்டாலும் தேரைச் சுற்றிவந்த போது, திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள்,  முப்புரம் எரித்தான், ஆனையுரி போர்த்தான், மாதொருபாகன், வீரபத்திரன், முதலான சிவனின்  சிற்பங்கள். தேவியின் பல வடிவங்கள் தென்பட்டன.  எல்லாமே இணையத்தில் கண்டு வியந்த தமிழகத்தின் பல அரிய சிற்பங்களை ஒத்தவை. 

தான்தோன்றீச்சரத்தின் தேர்கள் மிகப்பழையவை. குறைந்தது முந்நூறு நானூறு ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கவேண்டும். “சிலோன் கசெற்றியர்” எனும் புகழ்பெற்ற நூலை 1834இல் எழுதிய சைமன் காசிச்செட்டி,  “கொக்கட்டிச்சோலை ஸ்கந்தன் கோவில்” என்று குறிப்பிட்டு அந்நூலில் தான்தோன்றீச்சரம் பற்றி எழுதியுள்ளார். அக்குறிப்பில் இங்கு நிகழும் தேரோட்டம் பற்றிய விவரணமும் வருகின்றது. "புல்லுண்ட கல் நந்தி" கதை மூலம், தான்தோன்றீச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்படவில்லை என்பது வாய்மொழியில் பதியப்பட்டுள்ளதால் அத்தேர்கள் மேலும் பழைமையானவையாகவும் இருக்கலாம். அங்கு முன்பு மூன்று தேர்கள் இருந்தனவென்றும், ஒன்று தானாகவே ஓடி மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து மறைந்தது என்றும் சொல்லி, கோவிலின் அருகே வாவியில் இருக்கும் "தேர் தாண்ட பள்ளம்" எனும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.  

கிழக்கில் தனது உற்சவ காலம் “தேரோட்டம்” என்று அறியப்படும் பெருமையைப் படைத்தது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஒன்றே. ஆனால் அந்தப் பெருமைக்குக் காரணமான இரு தேர்களும் இன்று நம் கண் முன்னே சிதைந்து வருகின்றன. பிள்ளையாரும் முருகனும் பவனி வரும் "பிள்ளையார் தேரில்" இப்போது பெருமளவு பழைய சிற்பங்கள் இல்லை.  சித்திரத் தேரும் அவ்வாறே. கவனிப்பின்மையால் செல்லரித்து உதிர்ந்து கொண்டிருப்பவை அதிகம். 


சிற்பக்கலை மனிதகுலம் கண்டுகொண்ட மகத்தான உன்னதங்களில் ஒன்று. அது தனியே ஒரு சமயத்துக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. அரிதான மரச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள இத்தேரின் பாகங்கள், சைவம் தாண்டி, தமிழினம் தாண்டி காலமுள்ள வரை காப்பாற்றப்பட வேண்டியவை. அதிலும் கோணேச்சரம், கேதீச்சரம், நல்லூர், தேனவரை நாயனார் கோவில், திருக்கோவில் முதலான கலைப்பொக்கிஷங்களை அந்நியர் ஆக்கிரமிப்பில் இழந்து நிற்கும் நாம், எஞ்சியிருக்கும் இது போன்ற  கலைச்செல்வங்களை நம் அறியாமையாலோ கவனயீனத்தாலோ இழந்துவிடக்கூடாது.


எனக்குத் தெரிந்த பலர், பெருமையாகத் தமிழகத்துக்கு சுற்றுலா சென்று மாமல்லபுரம், தஞ்சை, மதுரை என்று சுற்றிவந்து இன்ஸ்ராகிராமிலும் பேஸ்புக்கிலும்  புகைப்படம் போட்டிருப்பார்கள். என்ன பார்த்தாய் என்று கேட்டால் பதில், "சும்ம கோவிலுகள் தான். அங்க ஒண்டும் இல்ல!". இருப்பது எப்படித் தெரியும்? சிற்பங்களைத் திருடி வெள்ளைக்காரனுக்கு விற்று கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்று செய்தி வாசிக்கும் போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் தானே நாம்?  தமிழகத்தில் கூட அரிதான ஏனக்குருளைக்கருளி சிற்பம், இந்த ஈழமண்ணிலே, நமக்கு மிக அருகிலே ஒரு கோவிலில் இருக்கிறது என்பதும், இலங்கையின் மிகப்பழைய சிற்ப வடிவங்களில் சிலவற்றை நம்மூர்க் கோவிலொன்றின் தேரில் கண்டு மெய்சிலிர்க்க முடியும் என்பதும் தெரியாத நமக்கு, "தெரிந்து என்ன ஆகப்போகிறது?" என்று கேட்கும் நமக்கு, கலைச்செல்வங்களின் பெறுமதி எங்கே புரியப்போகிறது? 

ஆற அமர சிற்பங்களை இரசிக்கும் அளவுக்கு நேரம் இருக்கவில்லை. நடுங்கும் கரங்களால் சிவப்பன்றியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். “எல்லாரும் வித்தியாசமா பாக்கிறாங்கள், கெதியா வாங்க அத்தான்” என்று முணுமுணுத்தபடியே அருகில் நின்ற மைத்துனனுக்கு கைபேசியில் அழைப்பு. கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த அவனது நண்பனொருவன் "என்னடா, தேர் எண்ட ஒண்ட இப்ப தான் முதமுதலா பாக்கிறேலாக்கும்" என்று கேட்டான். நான் போவோம் என்று கையசைத்தபடியே பெருமூச்சு விட்டபடி கிளம்பினேன். பின்புறம் இரண்டு தேர்களும் என்னை விட்டு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.


(அரங்கம் பத்திரிகையின் 2018.10.26 இதழில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

விகடனும் தவ்வையும்

0 comments


அன்னை தவ்வை, 
காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பம்.

"புலமைச்சொத்து" (Intellectual Property) பற்றிய அறிமுகமோ, விழிப்புணர்வோ நம் சமூகத்தில் அவ்வளவாக இல்லை. அதுவும் சமகால சமூக வலைத்தள யுகத்தில் "லைக் வாங்குவது, பெயர் வாங்குவது" என்பது ஒரு மனநோயாகிவிட்ட நிலையில், யாரோ ஒருவன் மணிக்கணக்கில் குந்தியிருந்து தன் பொழுதைச் செலவழித்து எழுதித்தள்ளும் ஏதோ ஒன்றை, "நன்றி:இன்னார்" என்று கூடக் குறிப்பிடாமல் இலகுவாகக் "கொப்பி - பேஸ்ட்" செய்து, எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றது என்று பார்க்கும் பேர்வழிகளே அதிகம். அது புலமைத்திருட்டு என்ற குற்றவுணர்வோ, யாரோ ஒருவன் உழைப்பை உறிஞ்சி உண்பதற்குச் சமன் என்ற மனக்கிலேசமோ அத்தகைய யாருக்குமே இருப்பதில்லை.

இப்படி "வெட்டி -ஒட்டி" லைக்கை எண்ணுவது, பெயர் தேடுவது ஒருவகைப் புலமைத்திருட்டு என்றால், ஒரு ஆக்கமொன்றை வரிக்கு வரி நுணுகிப் படித்து, சொற்களை மட்டும் முன்பின் மாற்றி இன்னொரு ஆக்கமொன்றை படைப்பது மிகநுண்மையான புலமைத்திருட்டு.

விகடனின் இந்தக்  கட்டுரையிலுள்ள ஒவ்வொரு பந்தியையும், "உவங்கள்" முதல் இதழில் வெளியான "தமிழரும் தவ்வை வழிபாடும்" கட்டுரையின் ஒவ்வொரு பந்தியையும் அடுத்தடுத்த தாவலில் திறந்து படித்துப் பாருங்கள். இத்தனை வெளிப்படையாகக்கூட புலமைத்திருட்டைச் செய்யமுடியுமா? (நடுவே "பட உதவி: விக்கிப்பீடியா" என்று குறிப்பிட்டிருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தேன்.  )


சரி விடு, ஓரிரு இடங்களிலாவது புதிதாய் ஒன்றிரண்டைச் சேர்த்திருக்கிறார்களே என்று திருப்திப்பட எண்ணினால், அக்கட்டுரையிலும் பொறுமையிழந்த இடமொன்று இருந்தது. நதித்தெய்வங்களைக் குறிக்க "நீரரமகளிர்" (நீர்+அரமகளிர் = தண்ணீர்த் தெய்வப்பெண்கள்) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருந்தேன். மட்டக்களப்பு வாவியின் பாடும் மீன்மகளை உருவகிக்க, ஐயன் விபுலானந்தன் பயன்படுத்திய பழந்தமிழ்ச் சொல் அது. தட்டச்சுப்பிழையால் "நீரா மகளிர்" என்றாகியிருந்தது. "அச்சொல்லுக்குப் பொருளுண்டா?" என்பதை நொடி கூட சிந்தியாது அப்படியே எடுத்தாண்டுள்ள அந்தக் கட்டுரையாளரின் ஊடக அறத்தை என்ன சொல்லி மெச்சுவது? 

உவங்களில் பிரசுரமான ஆக்கம், உண்மையில், 2013இல், கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் விழா மலருக்காக எழுதிய கட்டுரையொன்றின் திருத்திய வடிவம். இரண்டு இரவுகள் இணையத்தில் தரவுகளைச் சேகரித்து அதை எழுதினேன். அதை எழுதிய இரவுகளில் வேறு காரணங்களால் நான் அனுபவித்துக்கொண்டிருந்த மன அழுத்தம், நான் மட்டுமே அறிந்தது.

இன்றைய திறமூல (Open source) உலகில், சிந்தனைகளைப் புதிதாகக் கண்டடைபவனையோ, தொகுத்துச் சொல்பவனையோ அறிஞனாகக் கொண்டாடுங்கள் என்றெல்லாம் கெஞ்சவில்லை. குறைந்த பட்சம், அவனது அந்த உழைப்புக்கு - அவன் செலவழித்த மணித்துளிகளுக்கு மரியாதை கொடுங்கள். அது போதும். 
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner