அன்னை தவ்வை,
காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பம்.
"புலமைச்சொத்து" (Intellectual Property) பற்றிய அறிமுகமோ, விழிப்புணர்வோ நம் சமூகத்தில் அவ்வளவாக இல்லை. அதுவும் சமகால சமூக வலைத்தள யுகத்தில் "லைக் வாங்குவது, பெயர் வாங்குவது" என்பது ஒரு மனநோயாகிவிட்ட நிலையில், யாரோ ஒருவன் மணிக்கணக்கில் குந்தியிருந்து தன் பொழுதைச் செலவழித்து எழுதித்தள்ளும் ஏதோ ஒன்றை, "நன்றி:இன்னார்" என்று கூடக் குறிப்பிடாமல் இலகுவாகக் "கொப்பி - பேஸ்ட்" செய்து, எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றது என்று பார்க்கும் பேர்வழிகளே அதிகம். அது புலமைத்திருட்டு என்ற குற்றவுணர்வோ, யாரோ ஒருவன் உழைப்பை உறிஞ்சி உண்பதற்குச் சமன் என்ற மனக்கிலேசமோ அத்தகைய யாருக்குமே இருப்பதில்லை.
இப்படி "வெட்டி -ஒட்டி" லைக்கை எண்ணுவது, பெயர் தேடுவது ஒருவகைப் புலமைத்திருட்டு என்றால், ஒரு ஆக்கமொன்றை வரிக்கு வரி நுணுகிப் படித்து, சொற்களை மட்டும் முன்பின் மாற்றி இன்னொரு ஆக்கமொன்றை படைப்பது மிகநுண்மையான புலமைத்திருட்டு.
விகடனின் இந்தக் கட்டுரையிலுள்ள ஒவ்வொரு பந்தியையும், "உவங்கள்" முதல் இதழில் வெளியான "தமிழரும் தவ்வை வழிபாடும்" கட்டுரையின் ஒவ்வொரு பந்தியையும் அடுத்தடுத்த தாவலில் திறந்து படித்துப் பாருங்கள். இத்தனை வெளிப்படையாகக்கூட புலமைத்திருட்டைச் செய்யமுடியுமா? (நடுவே "பட உதவி: விக்கிப்பீடியா" என்று குறிப்பிட்டிருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தேன்.
)

சரி விடு, ஓரிரு இடங்களிலாவது புதிதாய் ஒன்றிரண்டைச் சேர்த்திருக்கிறார்களே என்று திருப்திப்பட எண்ணினால், அக்கட்டுரையிலும் பொறுமையிழந்த இடமொன்று இருந்தது. நதித்தெய்வங்களைக் குறிக்க "நீரரமகளிர்" (நீர்+அரமகளிர் = தண்ணீர்த் தெய்வப்பெண்கள்) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருந்தேன். மட்டக்களப்பு வாவியின் பாடும் மீன்மகளை உருவகிக்க, ஐயன் விபுலானந்தன் பயன்படுத்திய பழந்தமிழ்ச் சொல் அது. தட்டச்சுப்பிழையால் "நீரா மகளிர்" என்றாகியிருந்தது. "அச்சொல்லுக்குப் பொருளுண்டா?" என்பதை நொடி கூட சிந்தியாது அப்படியே எடுத்தாண்டுள்ள அந்தக் கட்டுரையாளரின் ஊடக அறத்தை என்ன சொல்லி மெச்சுவது?
உவங்களில் பிரசுரமான ஆக்கம், உண்மையில், 2013இல், கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் விழா மலருக்காக எழுதிய கட்டுரையொன்றின் திருத்திய வடிவம். இரண்டு இரவுகள் இணையத்தில் தரவுகளைச் சேகரித்து அதை எழுதினேன். அதை எழுதிய இரவுகளில் வேறு காரணங்களால் நான் அனுபவித்துக்கொண்டிருந்த மன அழுத்தம், நான் மட்டுமே அறிந்தது.
இன்றைய திறமூல (Open source) உலகில், சிந்தனைகளைப் புதிதாகக் கண்டடைபவனையோ, தொகுத்துச் சொல்பவனையோ அறிஞனாகக் கொண்டாடுங்கள் என்றெல்லாம் கெஞ்சவில்லை. குறைந்த பட்சம், அவனது அந்த உழைப்புக்கு - அவன் செலவழித்த மணித்துளிகளுக்கு மரியாதை கொடுங்கள். அது போதும்.
0 comments:
Post a Comment