திரையிசை இலக்கியம்


நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும்.

சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.
                                             

அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தாதி ஆறாம் பாடல். இதையெப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம்? 

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

தேவியின் அடியவன் அவளது பாதங்களைத் தலையில் சூடியிருப்பான். சிந்தனை முழுக்க அவளது மந்திரமே ஓடும். ஏனைய அடியார்களுடன் சேரும் போதும், அவன் அவளது புகழ்மொழிகளையே கூறுவான்.

இந்த வரிகளை, நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடுகிறான் என்று கொண்டால், அவ்வரிகள், அக்காதலை வேறொரு தளத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, இல்லையா?

பக்தி மார்க்கத்து வரிகள், உலகியல் சார்ந்து நாயகனால் நாயகி மீது பாடப்படும் என்றால், உலகியல் சார்ந்து நாயகி மீது பாடப்பட்ட வரிகளை, பக்தி மார்க்கத்திலும் தெய்வம் மீது பயன்படுத்தலாம் தானே? வைஸ் வேர்சா.

திரையிசை அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.  தமிழகத் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பாடல் "சொல்லடி அபிராமி". 1971இல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அது. சாதாரணமாகக் கேட்பவர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அப்பாட்டில் வரும் இடம் ஒன்றுண்டு.
                                             

இந்த வரிகளும் தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமானவை தான். குற்றாலக் குறவஞ்சி. அதன் பாட்டுடைத் தலைவியான வசந்த சுந்தரி பந்து விளையாடுகிறாள். எப்படியென்றால்,


செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட, இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே! 

சிவந்த கையிலுள்ள வளையல்கள் கலிங் கலிங்கென்ற ஒலியுடன் "வெற்றி வெற்றி" என்று கோஷம் இடுகின்றன. செம்மையான இசை என்று சொல்லும் படி,  சிலம்பும் தண்டையும் கலந்து ஒலிக்க இடை அசைந்தாடுகின்றது. இரு தனங்களும் "கொடிய பகையை வென்றுவிட்டோம்" என்று குழைந்து ஆட, மலர்க்கொடி போன்ற பெண்ணான வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாளாம். 

இன்பச்சுவை சொட்டும் இந்த வரிகளை, பக்திச்சுவை எனும் தட்டில் கொட்டி, "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட" என்று உருகுகிறார் கண்ணதாசன். அங்கு அன்னை காதலி ஆகிறாள். இங்கு காதலி அன்னை ஆகிறாள்.  இலக்கியத்தின் அழகு!

யூரியூப்பில் தேடிய போது, இதைவிடப் பழைய இன்னொரு படமான "குறவஞ்சி"யில் இதே பாடல் வேறொரு விதமாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது.
                                             

என்ன கறுப்பு வெள்ளை சலிப்பூட்டுகிறதா? சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா? என்ன? இசைப்புயலா? குற்றாலக் குறவஞ்சிக்கு இசையமைத்திருக்கிறாரா? அதிர்ச்சி எல்லாம் அடையவேண்டாம். கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆறுதலாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம்
முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கு அணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொண்டாடினளே!

இவள் திருமகளோ, பேரழகியோ, ரம்பையோ, மோகினியோ என்றெல்லாம் பார்த்தவர் வியக்க, பந்தை அடிக்க மனம் விரைகிறதா, விழிகள் முந்துகின்றனவா, கை முந்துகின்றதா என்று சிந்திக்க வைக்க, சந்திரனைச் சூடிய குற்றாலநாதரின் வீதியிலே மணியாபரணம் அணிந்த வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாள் என்பது பாடல் வரிகள். இரட்சகன் திரைப்படத்தில் பிரிந்திருந்த காதலர் சேரும் காட்சியில் மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல்.உள்ளத்தால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உடலால் இருவரும் விலகி நிற்கும் அந்தக் காட்சியில் இந்தப் பாட்டு வரிகள் எப்படிப் பொருந்துகின்றன? யூரியூப்பில் "ரீப்ளே" கொடுத்தபடி யோசியுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற இந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பாக, கீழ்வரும் நான்கையும் சொல்லலாம். "கோச்சடையான்" திரைப்படத்தில் வரும் தாண்டவக் காட்சிக்கு முன் ஒலிக்கும் "மாசில் வீணையே" எனத் தொடங்கும் வரிகள். அப்பர் தேவாரத்திலிருந்து பெறப்பட்டது அது.
                                             

அதே போல், "காவியத் தலைவன்" திரைப்படத்தில் இடம்பெறும் "ஏவினை நேர்விழி" எனத் துவங்கும் திருப்புகழ். வாணி ஜெயராமின் குரல். வேதிகாவின் அற்புதமான அபிநயம். மயிற்பீலி போல வருடும் மெல்லிசை. அப்படியே உள்ளம் உருகச் செய்யும். பௌர்ணமி நள்ளிரவுகளுக்கான என் இசைத்தொகுதியில் இடம்பிடித்துள்ள முக்கியமான பாடல் இது.
                                             


இவற்றுக்கு கொஞ்சமும் குறையாமல், "மார்கழித் திங்களல்லவா"வுக்கு முன்பு வருகின்ற "மார்கழித் திங்கள்",  சிவாஜி திரைப்படத்தில் ஒலிக்கும் "மாலே மணிவண்ணா" ஆகிய இரு ஆண்டாள் பாசுரங்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மெய் சிலிர்க்க வைப்பவை.  (இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதில் வரும் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் தான் இந்தப் பாசுரத்தையே இனங்காட்டியது 😇).

சரி, சரி, இசைப்புயல் புகழ் போதும்.. எங்கள் இசைஞானி மட்டும் சளைத்தவரா என்று  எதிர்க்கோஷ்டியினர் கிளம்பி விடாதீர்கள். இசைப்புயலை விட, இசைஞானியின் பாடல்களில் தான் அதிகம் தமிழ் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது என்று பட்சி சொல்கிறது.  உடனடியாக நினைவுக்கு வரும் இளையராஜாவின் புதுப்பாடல், தாரை தப்பட்டை "பாருருவாய". முழுக்க முழுக்க திருவாசக வரிகள் அப்பாடல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் தடவை கேட்டபோதே ஏனென்று தெரியாமல் கண் கலங்கியிருக்கிறேன். காட்சியோடு பார்க்கும் போது மனதை அப்படியே பிழிந்து போடும். இந்தப்பாடலில் இரு வேறுமங்கள் (versions) இருக்கின்றன. ஒன்று கீழே. இன்னொன்று இங்கே.
                                             


திருப்புகழ், குறவஞ்சி என்று பிற்கால இலக்கியங்கள் தானா. வைரமுத்தரின் துண்டு துக்கடா வரிகள் போலன்றி, சங்க இலக்கியங்கள் ஒன்றும் முழுமையாக திரையிசையில் எடுத்தாளப்படவில்லையா என்று கேட்பீர்களென்றால்,  இருக்கிறது. மிக அண்மைக்காலத்தில் வெளியான ஒரு பாடல் இருக்கிறது. நம்மவர் சினமா "யாழ்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிவயநம' பாடல். அதில் பாடப்படுவது, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "பொருநராற்றுப்படை". பாடகர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பாடியிருந்தால், இப்பாடல்  அடைந்திருக்கக்கூடிய உயரமே வேறு.
                                              அத்தனை பிரபலமாகாத இன்னொரு பாடல் இருக்கிறது. "திங்கள் மாலை வெண்குடையான்".   'கரும்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கானல் வரிகள். 70களில்  தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லையாம். புகழ்பெற்ற இந்திய இசைமேதை சலீல் சௌத்ரியால் இசையமைக்கப்பட்ட பாடல் இது. 
                                             

இப்படி, நேற்றைய கண்ணதாசனிலிருந்து, இன்றைய வைரமுத்து வரை,  நேற்றைய எம். எஸ்.வி, ராமமூர்த்தியிலிருந்து, இன்றைய இசைஞானி, இசைப்புயல் வரை எல்லோருமே மரபைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் தான். திரையிசையில் இன்னும் மூழ்கினால்  இந்தப்பட்டியலில் நிறையப்பாடல்கள் இருப்பதைக் காணலாம்.

நூறு நூறாண்டுகள் கடந்த வரிகளை வெறும் இசையாக, வெறும் சொல்லாக  இரசிப்பதற்கும், "ஓ! இது இந்த இலக்கியத்தில் வந்த வரிகள்" என்று உணர்ந்து மகிழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த சுகமே அலாதியானது. புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'மீம்'களைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு அந்த மீமில் இடம்பெறும் திரைப்படத் தருணமோ, அல்லது வசனங்களோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்களுக்கு அந்த மீமிலுள்ள நகைச்சுவை முழுதாகப் புரியாது. திரையிசையும் அப்படித்தான்.

இலக்கியத் தமிழை திரையிசையில் இரசிக்க வேண்டுமென்றால்,  அகநானூறு, புறநானூறெல்லாம் படித்திருக்கவேண்டும், பாடமாக்கி இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வெறும் பாரதியார் பாடல்கள், அன்றாடம் சொல்கின்ற தேவார, திருவாசக வரிகள் கூட  அப்படியே; அல்லது கொஞ்சம் மாற்றப்பட்டு திரையிசையில் ஒலிக்கலாம். அடுத்த தடவை ஏதேனும் பாடல்களைக் கேட்கும் போது, வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் ஒரேயொரு சொல்லில் கூட இலக்கியமொன்றை உங்களால் அடையாளம் காணமுடியும். அதைக் கண்டுகொள்ளும் போது நீங்கள் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தை இருக்காது. 
     

11 comments:

 1. அருமை துலாஞ்சன். "சென்னியதுன் திருவடித் தாமரை" தேடும்போது எதிர்பாராத விதமாக இப்பதிவை க் கண்டேன்.
  மிகச் சிறப்பு 🙏

  ReplyDelete
  Replies
  1. கவித்துவமான பாடல் அது. மிக்க நன்றிகள்.

   Delete
 2. நன்றி துலாஞ்சன்.. நான் இந்த தலைப்பில் ஒரு சிறிய அலசல் செய்து வருகிறேன்.. தங்களது பதிவில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பயனளித்தன. நான் insta post-ல் தங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளேன். மிக்க நன்றி 🌸😃

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள். தங்கள் இன்ஸ்டா இணைப்பை அல்லது பதிவின் இணைப்பைப் பகிர்ந்தால் படித்து மகிழ்வேன். :)

   Delete
 3. நன்றி துலாஞ்சன்.. நான் இந்த தலைப்பில் ஒரு சிறிய அலசல் செய்து வருகிறேன்.. தங்களது பதிவில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பயனளித்தன. நான் insta post-ல் தங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளேன். மிக்க நன்றி 🌸😃

  ReplyDelete
 4. Replies
  1. மனம் மகிழ்ந்தோம். நன்றிகள்.

   Delete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. மிகவும் பயன் அடைந்தேன்
  நன்றி

  ReplyDelete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner