திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு!


தமிழருக்கான ஆண்டுக்கணக்குக்கு "திருவள்ளுவர் ஆண்டு" என்று பெயர். நாட்காட்டிகளிலோ பஞ்சாங்கங்களிலோ பார்த்தீர்கள் என்றால் "திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு" என்று போட்டிருப்பார்கள். 2021ஆம் ஆண்டு ஜனவரி 13இல், அதாவது தை முதலாம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2052 பிறக்கிறது. 

கிரகோரியன் நாட்காட்டியுடன் 31 ஆண்டுகள் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். ஆனால் அது எத்தகைய பின்னணியில் தோற்றமுற்றது, அதன் தோற்றத்தின் பின்னே இருந்த சமூக, அரசியல், வரலாற்றுக் காரணிகள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. 

தமிழனை ஒரே சொல்லில் வரைவிலக்கணப்படுத்துவதென்றால், உணர்ச்சிபூர்வமானவன் என்று சொல்லிவிடலாம். உணர்ச்சிகரமான எதையும் மறுபேச்சின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு மாற்றுத்தரப்பை மிகக்கடுமையாக விமர்சிப்பதே தமிழ்ப்பற்றாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோரின் வழமையாக இருக்கிறது. அதற்கான மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு. திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு என்ற பெயரில் இணையத்தில் காணக்கிடைக்கும் கட்டுரைகள் எல்லாமே வரலாற்று நோக்கு என்பதே துளியும் இன்றி, யாரோ ஒருவர் சொன்ன ஒரே விடயத்தை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்பவை. எவ்வித ஆதாரங்களும் அற்றவை. அவற்றில் வரலாற்றுணர்வோ யதார்த்தமோ சிறிதும் இல்லை.  அவற்றைப் படித்தபோது அடைந்த கசப்பில் எழுந்ததே இக்கட்டுரை.


மேலை நாடுகளின் காலக்கணிப்புக்காக கிரகோரியன், யூலியன் என்பனவும், அரபுலகு மற்றும் இஸ்லாமியர் மத்தியில்  ஹிஜ்ரி நாட்காட்டியும், இந்திய சமூகங்கள் மத்தியில் சக வருஷம், விக்கிரம வருஷம், கலியுகாதி வருஷம் என்பனவும் வழக்கில் இருக்கின்றன. தமிழிலிருந்து பிரிந்த கடைக்குட்டி மலையாளத்துக்கே கூட "கொல்லம் ஆண்டு" என்று தனியே ஒரு ஆண்டுக்கணக்கு இருக்கின்றது. ஆனால், முன் தோன்றிய மூத்த குடி என்று பெருமை பீற்றிக்கொண்ட தமிழினத்துக்கென தனி ஆண்டுக்கணக்கு ஒன்று கிடையாது. தமிழை நேசித்த எவருக்குமே இது ஒரு பெரிய உறுத்தலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. அவ்வாறான ஒரு தனி ஆண்டு பிறப்பதற்கான காலமும் கனிந்து வரவேண்டுமல்லவா? இந்த நிலையில் தான் தமிழரின் ஆண்டுக்கணக்குக்கான கால்கோள்  கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இடப்பட்டு விட்டது.

திருவள்ளுவர் திருநாள் மலர்
1955ஆம் ஆண்டு, இலங்கை தமிழ்மறைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "திருவள்ளுவர் திருநாள் மலர்" திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை அறிவதற்கான முக்கியமான ஆவணம். அதில் கூறப்பட்ட  மூன்று விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, தமிழருக்கான ஆண்டுக்கணக்கு திருவள்ளுவர் பெயரிலேயே ஆரம்பமாக வேண்டும் என்ற கொள்கை  1920களில் தோற்றம் பெற்றுவிட்டது. இரண்டாவது, வள்ளுவர் கிமு 31ஆம் ஆண்டு வைகாசி அனுச நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று மறைமலையடிகள் கணித்திருந்தார். மூன்றாவது, திருவள்ளுவர் ஆண்டுத்தொடரின் படி அமைந்த திருக்குறள் நாட்குறிப்பொன்றை திருநெல்வேலி சைவசித்தாந்தப் பதிப்புக் கழகம், 1922இல் வெளியிடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தது (பப.27 - 32). இக்காலப் பின்னணியை ஊன்றி நோக்கினால் தமிழரின் மகத்தான அடையாளமான திருவள்ளுவர் பெயரில் ஒருநாள் விழாவெடுக்க வேண்டும் என்ற அறிஞர்களின் ஆர்வமும் திருவள்ளுவர் ஆண்டுத்தொடர் பற்றிய சிந்தனையும் ஒரே நேரத்தில் தான் தோற்றம் பெற்றிருக்கின்றன  என்பது தெரியவருகிறது.  


திருவள்ளுவர் தமிழரின் அடையாளம்
உலகப்பொதுமறை எனும் புகழை தமிழர் மத்தியில் தக்கவைத்துக்கொண்ட நூல், திருக்குறள். உலகின் 35இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ள திருக்குறள், பல்வேறு நாடுகளிலும் புகழ்பெற்ற ஒன்று. திருக்குறளின் உலகளாவிய தன்மையால், தமிழின் ஏனைய தலைசிறந்த மெய்யியலாளர்களை விட, வள்ளுவப்பிரானை தமிழின் அடையாளமாக முன்வைப்பதே பொருத்தம் என்ற கருத்து, பல்லாண்டுகளுக்கு முன்பே நிறையப்பேருக்குத் தோன்றிவிட்டது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் முழுவீச்சுடன் எழுந்த தனித்தமிழியக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம்,  திராவிட இயக்கம் என்பவற்றின் பங்களிப்புடன் தமிழகமெங்கும் உருவான திருவள்ளுவர் கழகங்களில் இப்படி திருவள்ளுவர் திருநாள்கள் கொண்டாடப்பட்டன. அவற்றில் 1927 முதல் தொடர்ச்சியாக  வைகாசி அனுசத்தில் திருவள்ளுவர் விழாக் கொண்டாடிய பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளையின் தலைமையில் அமைந்த தென்காசித் திருவள்ளுவர் கழகம் பற்றிய தகவல் மட்டும் இப்போது கிடைக்கிறது. (மேற்படி, பப.26, 30).

திருவள்ளுவர் திருநாள்
இந்தப் பின்னணியில், வள்ளுவன் விழாவை உலகெங்கும் தமிழரை இணைக்கும் பெருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற வேணவா, இருவருக்கு ஏற்பட்டது. அவர்கள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளராக இருந்த பத்மஸ்ரீ.வ.சுப்பையாபிள்ளை  மற்றும் அவர் நண்பர் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை. இவர்கள்,  17.01.1935 செய்துகொண்ட தீர்மானத்தின் பயன் தான் "திருவள்ளுவர் திருநாட்கழகம்" எனும் அமைப்பு.

தொல்காப்பியம், ஆத்திசூடி முதலான பல்வேறு நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்த தமிழறிஞர் பேரா.நமச்சிவாய முதலியார் அதன் தலைவராகவும் பாரிப்பாக்கம் கண்ணப்பர், வ.சுப்பையா ஆகியோர் முறையே செயலாளர், பொருளாளர் ஆகவும் அமர்ந்தனர். இவர்களது தலைமையில் உருவான திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் முதன்மையான பணி, வள்ளுவனுக்கென ஒருநாளை ஒதுக்கி அன்று ‘திருவள்ளுவர் திருநாள்’ எனும் விழாவைக் கொண்டாடுவது. அந்த நாளை இந்தியாவில் மாத்திரமன்றி தமிழர் விரவி வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளிலும் கொண்டாடுவதற்கான கோரிக்கை அக்கழகத்தினரால் விடுக்கப்பட்டு 1935இல் வைகாசி அனுசம் அமைந்த மே 17, 18 திகதிகளில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இவற்றில் முதன்மையான விழா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்,மறைமலையடிகள்,திரு.வி.கலியாணசுந்தரனார்,தெ.பொ.மீனாட்சிசுந்தரம்பிள்ளை முதலான முக்கியமான தமிழறிஞர்களின் தலைமையில் இடம்பெற்றது. வெற்றிகரமாக இடம்பெற்ற அன்றைய விழாவில், திருவள்ளுவர் திருநாளை இனி ஆண்டு தோறும் கொண்டாடுவதென்றும், தமிழகம் மாத்திரமன்றி, உலகெங்கும் தமிழர் பரந்து வாழும் இடங்களிலும் அது அதே நாளில் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகின்றது.
திருவள்ளுவர் திருநாளின் பிற்காலம்
வைகாசி அனுசத்து திருவள்ளுவர் திருநாள் 1935இற்குப் பின் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அடுத்த ஆண்டு 1936 யூன் 4ஆம் திகதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் உ.வே.சாமிநாதர் தலைமையில் அது நடைபெற்றது. அதே ஆண்டு தென்காசி விழாவுக்கு வி.கலியாணசுந்தரனாரும், கோவை விழாவுக்கு துடிசைக்கிழாரும் தலைமை தாங்கினர். அடுத்த 1937இல் மே 22 ஆம் நாள் இராமநாதபுரம் பாகனேரியில் கோவை சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியனார் தலைமையில் அவ்விழா நடைபெற்றது. 

1940 பங்குனியில் வெளியான செந்தமிழ்ச்செல்வி இதழின் குறிப்பின் படி, தமிழகத்தில் திருவள்ளுவர் திருநாள்கள் பெரும்பாலான ஊர்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.  எனினும் 1935இல் இடம்பெற்ற திருவள்ளுவர் திருநாள் போல உலகெங்கும் அதைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வாய்ப்பு 1954ஆம் ஆண்டே மீண்டும் ஏற்பட்டது. அந்தக் கொண்டாட்டத்துக்கு அயராது பாடுபட்டவர்,  ஒரு ஈழத்தமிழ்மகன். பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள்!குறள் புகழ் பாடிய ஈழத்தவர்
திருக்குறளின் பெருமையைப் பரப்புவதற்காக தமிழ்மறைக் கழகம் என்ற அமைப்பை நிறுவியிருந்த இரத்தினத்தார், 13.1.1952 அன்று அந்த அமைப்பூடாக "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள், தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்" என்ற சொலவடையுடன் அனைத்துலகத் தமிழ் அமைப்புகளுக்கும், அவ்விழாவை மீண்டும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். குன்றக்குடி அடிகளார், டாக்டர். மா.இராசமாணிக்கனார், டாக்டர் மு.வரதராசன், அ.ச.ஞா, கி.வா.ஜ, முதலான பல்வேறு தமிழறிஞர்களும் அதை ஏற்று வழிமொழிந்ததை அடுத்து, 1954ஆம் ஆண்டு, திருவள்ளுவர் திருநாள் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகம், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மாத்திரமன்றி, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தென்னாபிரிக்காவின் ஜொகன்னர்ஸ்பேர்க் முதலான நாடுகளிலும் அது கொண்டாடப்பட்டிருக்கிறது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலிருந்து கிடைக்கின்ற 1956 மற்றும் 1959 ஆண்டறிக்கைகளில், அங்கு திருவள்ளுவர் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளைக் காணலாம். சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலையை திருவள்ளுவர் திருநாளான 1966 யூன் 02ஆம் திகதி, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

திருவள்ளுவர் திருநாள் எப்போது?

1922இல் தென்காசித் திருவள்ளுவர் விழாவில் தொடங்கிய திருவள்ளுவர் திருநாளானது, வள்ளுவர் பிறந்த தினமாக நம்பப்படும் வைகாசி அனுசத்திலேயே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை அக்கால ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறது திருவள்ளுவர் திருநாள் மலர். ஆனால், வைகாசி அனுசத்துக்கு எதிரான நான்கு குரல்கள் அப்போது ஒலித்தன என்ற செய்தியும் அதே மலரில் பதிவாகி இருக்கின்றன.

முதல் குரல் திருவள்ளுவர் திருநாளை, அவர் பிறந்த வைகாசி அனுசத்தில் அன்றி, வள்ளுவர் குருபூசை நிகழ்த்தப்படும் மாசி உத்தரத்திலேயே கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அடுத்து வள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றியதாக நம்பப்படும் வைகாசி விசாகத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்றது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு ஆடிப்பெருக்கை அண்டிய ஒருநாளில் வள்ளுவர் விழா கொண்டாடலாம் என்றது. இறுதித் தரப்பு, நம்பிக்கை சார்ந்த நட்சத்திரங்களைப் பார்க்காமல், தமிழர் திருநாளான தைப்பொங்கலன்று தான் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று கோரி வந்தது. இதில் இறுதிக் கோரிக்கையை முன்வைத்த தரப்பு சற்று வலுவானது.  அந்தத் தரப்பில் மிக முக்கியமானோர் இருவர். கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் சோமசுந்தர பாரதியார், 


இரத்தினத்தார் 1954இல் திருவள்ளுவர் திருநாளுக்கான கோரிக்கையை விடுத்தபோது, அதற்கான மறுப்பொன்றை விசுவநாதத்தார், சுதந்திரன் இதழில் எழுதியிருந்தார்.  "திருவள்ளுவர் பிறந்தது வைகாசி அனுடம் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. திருவள்ளுவர் திருநாளை இனி நாம் தைப்பொங்கலன்றே கொண்டாட வேண்டும். ஏனெனில் அதுவே காலம் காலமாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது" என்பது அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

நாம் மேலே பார்த்த திருவள்ளுவர் திருநாள் மலரே, விசுவநாதத்தாரின் அந்த மறுப்புக்கான இரத்தினத்தாரின் விரிவான பதிலுரையைக் கொண்டிருக்கிறது. ஏன் வைகாசி அனுசத்தையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடவேண்டும் என்பதை தகுந்த சான்றாதாரங்களுடன் அடுக்குகிறார் இரத்தினத்தார். அதில் அவர் எடுத்துக்காட்டும் சில செய்தித் துணுக்குகளை கீழே காணலாம்: 

”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டியதுதான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”
- கலைமகள் (வைகாசி 1952)

“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”
-  செந்தமிழ்ச்செல்வி (வைகாசி, 1953)

“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்”
- குமுதம் ( 20.4.54)


“மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்படும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”
- கல்கி (ஏப்ரல் 12, 1958)

வைகாசி அனுடமே திருவள்ளுவர் திருநாள்!

“வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தை தந்ததெனினும், ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை...... 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் பெரியார். ஈ.வே இராமசாமிநாயக்கர், அறிஞர்.சி,என். அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர். அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம்.........அரசியற் கட்சி வேறுபாடுகளைத் திருவள்ளுவர் திருநாளுடன் மோதச் செய்யாதிருக்குமாறு தமிழ்மக்கள் யாவரையும் வேண்டிக்கொள்கிறோம்."

பப.18 -19
விசுவநாதத்தாருக்கான இரத்தினத்தாரின்  மறுப்புரையின் ஒரு பகுதி இது: எத்தனை தீர்க்கதரிசனமாகவும் இன அக்கறையுடனும் இரத்தினத்தார் வருந்தி எழுதியிருக்கிறார் என்பது இந்த வரிகளில் தெரிகின்றது. ஏதாவதொரு முடிவுக்கு வரவேண்டும், அப்போதைக்கு பொருத்தமானது பெரும்பான்மை ஏற்றுக்கொண்ட வைகாசி அனுசம் தான். அதையே கொண்டாடுவோம் என்கிறார் அவர். ஆனால் நடந்தது என்ன? காலத்தின் புன்னகை எத்தனை விசித்திரமானது.


தமிழர் திருநாள் தைப்பொங்கல்
"அன்பர்‌ விசுவநாதம்‌ குறிப்பிடும்‌ திருவள்ளுவர்‌ தொடராண்டு தமிழ்‌ நாட்டிலே நிலைத்துவிட்டது என்பதை யாவரும்‌ மறுக்கமாட்டார்கள்‌; இதனை அழிக்க இனி எவராலும்‌ முடியாது. தெய்வப்‌ புலவர்‌ எனத்‌ தமிழ்‌ மக்கள்‌ போற்றும்‌ திருவள்ளுவர்க்‌குப்‌ பெருமையளிக்கும்‌ முறையில்‌ இத்தொடராண்டை ஏற்‌படுத்திய பெருமையை மதித்துப்‌ போற்ற வேண்டியதும்‌, இந்தத்‌ தொடராண்டையே வழங்கவேண்டியதும்‌ தம்மைத்‌ தமிழர்‌ என்று கூறும்‌ ஒவ்வொருவருடைய கடமையுமாகும்‌, தமிழ்த்‌ திருநாளெனவும்‌, தமிழர்‌ திருநாளெனவும்‌, பொங்கற்‌ புதுநாள்‌ எனவும்‌ பலவாறு போற்றப்படும்‌ தைத்திங்கள்‌ முதல்‌ நாளிலிருந்து திருவள்ளுவர்‌ ஆண்டைத்‌ தொடங்குவது பொருத்தமானதே."
- 32அ
என்று சொல்லும் இரத்தினத்தார், தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாக ஏற்கும் போதும், வைகாசி அனுடத்தில் கொண்டாடும் திருவள்ளுவர் திருநாளை  தை முதலாம் திகதிக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

"பெரும்பாலும்‌ தை முதல்‌ நாள்‌ பொங்கற்‌றிருநாள்‌ என்பது தான்‌ தமிழ்‌ மக்களிடையே திருவள்ளுவர்‌ தொடர்‌ ஆண்டை வழங்கத்‌ தொடங்குதற்கு முன்னரும்‌,  தமிழர்‌ புத்தாண்டு நாளைச்‌ சிலர்‌ கொண்டாடுதற்கு முன்னரும்‌, நிலைத்‌துள்ள கருத்தாகும்‌..........தெய்வப்‌ புலவராகவும்‌, உலகப்‌ புலவராகவும்‌ விளங்கும்‌ திருவள்ளுவரைக்‌ கொண்டாடுதற்குத்‌ தனிச்சிறப்புடையதொரு நாள்‌ வேண்டும்‌ என்பதை அறிஞர்கள்‌ யாவரும்‌ ஏற்றுக்‌கொள்‌வர்‌. ஆகவே பல காரணங்களுக்காகப்‌ போற்றப்படும்‌ தைத்‌திங்கள்‌ நாளை வள்ளுவர்‌ திருநாளாகக்‌ கொள்ளாது பல ஆண்டுகளாகத்‌ திருவள்ளுவருக்கே உரியதாகக்‌ கொண்டாப்பட்ட வைகாசி அனுட நாளைக்‌ கொண்டாடுதல்‌ எவ்வாற்றானும்‌ ஏற்றமுடையதே. திருவள்ளுவருடைய பெருமையையும்‌ நினைவையும்‌ தமிழ்‌ மக்களுடைய உள்ளத்தில்‌ நிலைநாட்டுதற்கு. இதுவே மிகப்‌பொருத்தமான நாளாகும்‌." 
- ப.32ஆ

இரத்தினத்தாரின் குறிப்பிலிருந்து நமக்கு இரு துப்புகள் கிடைக்கின்றன. முதலாவது இக்கட்டுரையை அவர் எழுதும் 1954இல் திருவள்ளுவர் தொடராண்டை சிலர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பது. இரண்டாவது, தை முதல் நாளை சிலர் தைப்புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் என்பது. 

தை முதல் நாளில் தைப்புத்தாண்டு அல்லது திருவள்ளுவர் தொடராண்டு மிகச்சரியாக யாரால், எப்போதிருந்து கொண்டாடப்பட ஆரம்பித்தது என்ற குறிப்பேதும் கிடைக்கவில்லை. ஆனால் இரத்தினத்தாரே இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்:


"பொங்கற்றிருநாளைக்‌ கொண்டாடவேண்டுமென்று அறிக்கைகள் விட்டு ஆர்வத்தை உண்டாக்‌கியவர்கள்‌ சென்னைத்‌ தமிழறிஞர்‌ கழகத்தாராவர்‌. இவர்கள்‌ 1941ஆம்‌ ஆண்டு கார்த்திகை மாதத்தில்‌ விட்ட அறிக்கையிலே தை முதல்‌ வாரத்தைத்‌ தமிழ்‌ வாரமாகவுங்‌ கொண்டாடுமாறு கேட்டுள்ளனர்‌. இந்த அறிக்கையிலே ஐந்தாம்‌ நாளைப்‌ புலவர்‌ தம்‌ திருநாளாகக்‌ கொண்டாட வேண்டும்‌ என்றுங்‌குறிப்‌பிட்டுளர்‌. இந்த வாரத்தைக்‌ கொண்டாடிய இரண்டொரு சங்கங்கள்‌ இந்த வாரத்தில்‌ ஒரு நாளை வள்ளுவர்‌ திருநாளாகவும்‌ பின்னர்‌ கொண்டாடியுளவேயன்றி முதல்‌ நாளை - தைப்பொங்கற்‌ புதுநாளை வள்ளுவர்‌ திருநாளாகக்‌ கொண்டாடவில்லை." 
-ப.32அ


எனவே நமக்கு அறுதியான ஒரு சான்று கிடைக்கிறது. தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடும் கோரிக்கை  குறைந்தது, 1942இலிருந்து நடைமுறையிலிருந்து வருகிறது. ஆக, தைப்புத்தாண்டு வழக்கத்தில் இருப்பதற்கான திருத்தமான கால வரையறை, சுமார் 80 ஆண்டுகள்.

இதே போல், இரத்தினத்தாரது கூற்றை வைத்தே சைவசித்தாந்தப் பதிப்புக் கழகம் நாட்குறிப்பு வெளியிட முற்பட்ட 1922ஐ திருவள்ளுவர் ஆண்டுத் தொடருக்கான மிகப்பழைய கால வரையறையாக முடிவெடுக்கலாம். (1922இல் வெளியிட முற்பட்டது முயற்சி தான். பத்தாண்டுகளுக்குப் பின் 1932இலேயே திருக்குறள் நாட்குறிப்பு வெளியிடப்பட்டது.) ஆக, திருவள்ளுவர் ஆண்டுத்தொடர் தைப்புத்தாண்டு கோரிக்கைக்கும் முன்பே புழக்கத்தில் வந்து விட்டது தெரிகிறது. கணக்குப்பார்த்தால், சரியாக 100 ஆண்டுகள்.

தை வந்த தமிழ்மறையார்!
திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிப்பதையோ, அதை தை முதல் நாளில் ஆரம்பிப்பதையோ இரத்தினத்தார் முதலிய தமிழறிஞர்கள் மறுக்காத போதும், திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்திலேயே கொண்டாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.  அன்று விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. நட்சத்திர நாள் மாறுபடும் என்பதால்,  1962இலிருந்து, கிரகோரியன் யூன் 02ஆம் திகதி திருவள்ளுவர் திருநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1967இல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, 1971இல், திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலன்று மாற்றப்பட்டது.  அது ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால், அதற்கடுத்த தை 02ஆம் நாள், திருவள்ளுவர் திருநாளுக்கான விடுமுறையானது. 

"தமிழ்‌ மக்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே எனினும்‌ தமிழினத்‌தின்‌ நன்மைக்காக, முன்னோர்‌ காட்டிய நல்வழியில்‌ நின்று, தமிழினத்துக்குப்‌ பெருமையளிக்கும்‌ புலவரைப்‌ போற்றும்‌ பெருமுயற்சியிலே வேறுபாடுகளைக்‌ கைவிட்டு ஒற்றுமையாக ஈடுபட வேண்டியது தமிழ்‌ மக்களின்‌ கடமையாகும்‌, தமிழினத்‌துக்குத்‌ தொண்டு செய்கிறோம்‌ என்று கூறுகிறவர்கள்‌: ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டுமேயன்றி, வேற்றுமையை உண்டாக்கும்‌ முறையில்‌ பேசுதலோ எழுதுதலோ கூடாது"
என்று தூரநோக்கோடு எழுதிவைத்த இரத்தினத்தாரின் வார்த்தைகள் பொய்யாகின. தை முதல் நாளிலேயே திருவள்ளுவர் திருநாளும் திருவள்ளுவர் ஆண்டும் ஆரம்பமாக வேண்டும் என்று வாதிட்ட விசுவநாதம் அவர்களின் தரப்பே இறுதியில் வென்றது. உத்தியோகபூர்வமான திருவள்ளுவர் ஆண்டு!
திருவள்ளுவர் ஆண்டை ஏற்று, 1971இல் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. 1981இல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்,  மதுரையில் இடம்பெற்ற உலகத்தமிழ் மாநாடு தொடர்பான சகல அரச ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். அதையடுத்து நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கங்களிலும்  திருவள்ளுவர் ஆண்டு இடம்பெற்றது. தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு பிறந்த கதை இது தான்!என்னென்ன சாதகங்கள்?
தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு இருப்பது, தமிழின் தனித்துவத்துக்குச் சிறப்பானதே. உலகின் பெரும்பாலான சமூகங்கள், தம் மதம் சார்ந்து அல்லது தம் இனம் சார்ந்து தத்தமக்கென தனித்துவமான ஆண்டுக்கணக்கைக் கொண்டிருக்கின்றன. உலகின் பழம்பெரும் இனக்குழுமங்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருக்கு ஒரு ஆண்டுக்கணக்காக திருவள்ளுவர் ஆண்டு முன்னிலைப்படுத்தப்படுவது பொருத்தமானது தானே?

பாதகங்கள் ஏதும் இருக்கின்றனவா?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று - முப்பெரும் பாதகங்கள் இருக்கின்றன.

ஒன்று, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்குக்கு சான்றேதும் இல்லை. ஒரு இனக்குழுமத்தின் ஆண்டுக்கணக்கானது, வரலாற்று ரீதியாகவோ அல்லது இலக்கிய ரீதியாகவோ நிறுவப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவர் ஆண்டுக்கு எவ்வித புறச்சான்றுகளும் இல்லை. மறைமலையடிகள் கணித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு முற்றிலும் வரலாற்று பூர்வமானதல்ல. திருவள்ளுவர் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்ற வாதங்களும் இருப்பதை நாம் கவனிக்கவேண்டும். கி.மு 31 வள்ளுவர் பிறந்தார் என்று அவர் முன்வைக்கும் கருத்தை உறுதிப்படுத்த எவ்வித தொல்லியல் - வரலாற்று - இலக்கியச் சான்றுகளும் கிடைக்கவில்லை. 

இரண்டு, தை முதலாம் திகதி, தமிழர் திருநாள் என்ற நம்பிக்கை. தை முதலாம் திகதி, தமிழர் தனித்துவம் என்ற ஆண்டுக்கணக்கையே ஆட்டம் காணச்செய்கின்றது!  போதுமான ஒப்பீட்டியல் ஆய்வுகள் நிகழாத ஐம்பதாண்டுகளுக்கு முன், தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்று நம்மவர் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இன்றும் அதைச் சொல்லலாமா? தமிழருக்குச் சிறப்பானது, மதம் சாராதது என்பதால் தானே தைப்பொங்கலை 'தமிழர் திருநாள்' என்ற பெயரில் முன்வைத்தார்கள்! மதம் சாரா என்பது சரி. ஆனால் அது தமிழருக்கு மட்டுமே உரியதா? இமாச்சல - உத்தர பிரதேசப் பகுதிகளில் "லோஹ்ரி", வங்கத்தில் "கங்கா சாகர் மேளா", பஞ்சாபில் "மகி", தெலுங்கு - கன்னட நிலங்களில் "மகர சங்கிராந்தி" என்றெல்லாம் கொண்டாடப்படும் தை முதலாம் திகதியை, எப்படி தமிழருக்கே மட்டும் தனித்துவமான ஒரு நாள் என்று சொல்லமுடியும், கூறுங்கள்?

மூன்றாவது, தைப்புத்தாண்டு! அதுவரை எங்குமே சான்று கிடைக்காத நாளொன்றை தமிழர் புத்தாண்டாக முன்மொழிந்தவர்கள், தங்கள் போலி வாதத்துக்கு ஆதரவாக, அரசியல் - அதிகார பலத்தால், திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுசத்திலிருந்து தை முதலாம் திகதிக்கு மாற்றி, திருவள்ளுவர் ஆண்டுத்தொடரையும் அன்றே தொடங்கி தங்கள் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்கள். 

2000களில் மிக வலுவாக தைப்புத்தாண்டு கோஷமிட்டவர்கள் முன்வைத்த வாதங்களின் அபத்தத்தை எல்லோரும் அறிவார்கள். திருவள்ளுவர் திருநாளுக்காக 1935இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூட்டப்பட்ட கூட்டம், 1921இற்கு மாற்றப்பட்டது. "திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31 வைகாசி அனுடத்தில்" என்று கூறிய மறைமலையடிகள், திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை தைப்புத்தாண்டில் அறிமுகப்படுத்தியவராக சுட்டிக்காட்டப்பட்டார். மறைமலையடிகளும், ஏன், ஈ.வெ.ராவுமே கூடக் கலந்துகொண்டதாகச் சொல்லப்படும் வைகாசி அனுசத் திருவள்ளுவர் திருநாள், தைப்பொங்கலன்று நடந்ததாக மாற்றப்பட்டது! 

இத்தனையும் பரவாயில்லை, ஈழத்தமிழறிஞர் இரத்தினத்தின் குரலுக்கு செவிசாய்த்து 1953இல் திருவள்ளுவர் திருநாள் கொண்டாட ஆதரவு தெரிவித்த எல்லாத் தமிழறிஞர்களுமே "ஆரியர் திணித்த புத்தாண்டுக்கெதிராக தைப்புத்தாண்டு கொண்டாட" 1935இல் அல்லது 1921இல் சம்மதம் தெரிவித்தவர்களாக சோடிக்கப்பட்டார்கள்! தங்கள் பசப்புக்காக தமிழறிஞர்களை இழுத்து வந்து நிறுத்திய இவர்களின் கபடத்தை தமிழன்னை மன்னிப்பாளா? 


இரத்தினம் அவர்களோ, 1941இல் தைப்புத்தாண்டு கொண்டாட அறிக்கை விடுத்த சென்னை தமிழறிஞர் கழகத்தினரோ, தையே தமிழ் ஆண்டின் முதல் நாள் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது உண்மையே. ஆனால் அது ஒரு இயக்கமாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல, கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகத்தமிழர் அத்தனை பேரிடமும் திருவள்ளுவர் பெயரில் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு, திருவள்ளுவர் திருநாளுக்கானதே தவிர, தைப்புத்தாண்டுக்கானதல்ல. 

இரத்தினத்தார் அஞ்சியது போலவே நாம் அத்தனை பேரும் தைப்பொங்கலையே இந்த நாளில் நினைவுகூர்கிறோம். இன்று அந்நாளுக்கு மாட்டுப்பொங்கல் என்ற மதிப்பிருக்கிறதே தவிர, திருவள்ளுவர் திருநாள் என்ற மதிப்பு கிஞ்சித்தும் இல்லை. தமிழர் ஒற்றுமைக்காக முன்வைக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்திலிருந்து ஏற்கனவே கொண்டாடப்பட்டுவந்த மாட்டுப்பொங்கலன்று  மாற்றியது, மிகப்பெரிய அடையாள அழிப்பும், பண்பாட்டுத் துரோகமும். அதில் மறைந்திருக்கும் உள்நோக்கத்தை தேசியம், இனமானம் என்று பேசிக்கொள்ளும் தமிழறிஞர்கள் இன்றுவரை இனங்கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றைய தமிழ் அறிஞர்களில் 90 வீதமானவர்கள், தைப்புத்தாண்டை ஆதரிக்கிறார்கள்.  தமிழ் காலக்கணிப்பின் தொன்மையையும் இலக்கியச் சான்றுகளையும் சுட்டிக்காட்டி, தமிழருக்கு ஆண்டுத்தொடக்கம் ஐப்பசியின் அல்லது சித்திரையின் முதல் நாளாகவே இருக்கமுடியும் என்பதை நிறுவிவிட்ட போதும் கூட, தைப்புத்தாண்டு என்ற  மாயையிலிருந்து அவர்கள் யாரும் வெளிவரத் தயாரில்லை.

தமிழ் அறிவுச்சூழல் வெறும் ஆரியக்காழ்ப்பால் விழுந்த இடம் இது. நாம் அறிவியக்கத்தில் முன்னகராமல் எத்தனை உறைந்துபோயிருக்கிறோம்? உண்மையை தேடுவதில் எத்தனை பாராமுகமாக இருக்கிறோம்? நம்புவதற்கு தோதாக இருக்கும் ஒன்றை யாரோ ஒருவர் அல்லது ஒருசிலர் கூறுகிறார்கள் என்பதற்காக சிறிதும் யோசியாது சான்றுகளைத் தேடாது எப்படி அப்படியே நம்மால் நம்பிவிட முடிகின்றது என்பதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.  

 
என்ன தான் செய்வது?
இப்போது நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி, திருவள்ளுவர் ஆண்டின் எதிர்கால வகிபாகம் என்ன என்பது தான். எந்த அறிவியல் பூர்வமான சான்றுமற்ற “கிரகோரியன் + 31”  என்ற சூத்திரத்தை, இந்த அறிவியல் யுகத்தில் ஒரு பழம்பெருமை மிக்க  இனக்குழுமம் தன் நாட்காட்டியாக அறிவித்துக்கொள்வது அத்தனை வரவேற்கத்தக்கதல்ல. ஆனால், தமிழரின் ஆண்டுத்தொடருக்குப் பெயர் கொடுக்கக்கூடிய எல்லாத்தகுதியும் வள்ளுவருக்கு உண்டு. வள்ளுவரோ, அவர் சார்ந்த எந்தவித தொன்மங்களோ கூட தொடர்புறாமல், தமிழரின் ஆண்டுக்கணக்குக்கு அவரை முன்னிறுத்துவதும், திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்டுவதும் பொருத்தமானதே! ஆனால், எந்த ஆண்டிலிருந்து அந்தத் தமிழ் ஆண்டுக்கணக்கைத் தொடரலாம்?

"தமிழறிஞர்கள் பலர் கூடி முன்மொழிந்ததே தைப்புத்தாண்டு" என்ற தை முதல் நாள் பற்றிய இறுதி நம்பிக்கையும், மேற்படி திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு மூலம் சுக்குநூறாவதால், "அதைக் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" என்று சொல்லிக் கடந்துசெல்ல முடியாது. தமிழர் புத்தாண்டுப் பந்தயத்தில் சித்திரை, ஆவணி, மற்றும் திராவிட தை ஆகிய மூன்று முதல் நாள்கள் போட்டியிடுகின்றன. திருவள்ளுவர் திருநாள் விடயத்தில் இரத்தினம் அவர்களே கூறுவது போல்,  "நிலைத்துவிட்ட நாளை மாற்றுதல் மரபாகாது" என்பதால் சித்திரையே புத்தாண்டாகத் தொடரட்டும். அதுவே பொருத்தமானது என்பதற்கான, அறிவியல், புவியியல், வானியல் காரணங்களும் ஏற்கனவே போதுமான அளவு பொதுவெளிக்கு வைக்கப்பட்டு விட்டன. எனவே அன்றைக்கே  திருவள்ளுவர் ஆண்டைத்  துவங்கலாம். 

கல்வெட்டு அல்லது குகை ஓவியம், பிராமிச்சாசனம், கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்பொருட்கள் எதுவும் ஆகட்டும் -  தமிழ் சார்ந்த மிகப்பழைய தொல்பொருளாக இன்று இனங்காணப்படும் பொருள்  எதுவோ, அதன் ஆயுளை காபன் திகதியிடல் மூலம் அல்லது, சமகால முன்னேற்றகரமான ஒரு  தொழிநுட்பம் மூலம் காலம் கணித்து, அன்றிலிருந்து திருவள்ளுவர் ஆண்டைத் தொடரலாம். எதிர்காலத்தில் அதைவிடப் பழைமையான தமிழ் சார் தொல்பொருள் கிடைத்தாலும் இதை மாற்றவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இது வெறுமனே சொல்லப்படும் "கிரகோரியன் + 31"ஐ விட, நம்பகரமானது, ஆதாரபூர்வமானது.

கிறிஸ்துவுக்குப் பின்பு தான் அது காலம் காட்டுகிறது என்றால் கூடத் தயங்கத்தேவையில்லை. நமக்குத் தேவை ஒரு ஆதாரபூர்வமான ஒரு ஆண்டுக்கணக்கு. அது நாம் நம் வரலாற்றின் அதிகுறைந்த எல்லையிலுள்ள எச்சத்துக்கு நாம் கொடுக்கும் கௌரவமாக இருக்கட்டும். அது ஏனைய ஆண்டுக்கணக்குகளுடன் ஒப்பிட்டு  கூடவா குறையவா என்றெல்லாம்  ஆராய்ந்து நாணத் தேவையில்லை.  தமிழர் குறைந்தது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கு முந்திய இனக்குழுமத்தினர் என்பது வரலாறே சொல்லும் உண்மை!

அதுவரை, சாதகங்களை விட பாதகங்கள் அதிகமான, இன்றைய திருவள்ளுவர் ஆண்டின் பாவனையைத் தவிர்த்து அல்லது மட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். இயன்ற விரைவில் இதற்கான பதிலை தமிழ்ச்சமூகத்துக்கு, தமிழறிஞர் அமைப்புக்கள் சொல்லியே ஆகவேண்டும் என்று கோருவதைத் தவிர, நம்மால் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை!


"நம்முன்னோர்‌ தம்‌. பெருஞ்‌செயலைப்‌ பின்பற்றாமலும்‌, சிறந்த மரபைத்‌ தழுவாமலும்‌, நம்மினத்தின்‌ ஒற்றுமையைச்‌ சிதைத்‌துப்‌ பழியையும்‌ அழிவையும்‌ தேடிக்கொள்ளும்‌ நிலைமைக்கு நாம்‌ வந்து விட்டோம்‌. இந்த நிலைமையை மாற்ற இனியாவது யாம்‌ எல்லோரும்‌ முயலல்‌ வேண்டும்‌."
- கா.பொ.இரத்தினம்எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-குறள்:423

உசாத்துணைகள்:


1. கணேசன், நா (5 மே 2012). "திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்". குமரிநாடு.நெற்.  இலிருந்து 2 சனவரி 2018 அன்று மீள்விக்கப்பட்டது.

2. தியாகராஜன், சாமி (15 மே 2014). "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்". Vedic Science Research Centre.இலிருந்து  2 சனவரி 2018 அன்று  மீள்விக்கப்பட்டதுபார்த்த நாள் 

3. Thiagarajan, Sami. and Gauthaman, Bala., (28 December 2014), "Thiruvalluvar Birth Anniversary Celebrations: Heralding a glorious future" Retrieved on 3rd January 2018.

4. 14,15ஆம் ஆண்டறிக்கை (1956-57),  மற்றும் 16,17ஆம் ஆண்டறிக்கை, (1958-59), கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

5. விசுவநாதம், கி.ஆ.பெ, (1984). "எனது நண்பர்கள்", பப.8-51

6. விசுவநாதம், கி.ஆ.பெ, (1953) “வள்ளுவரும் குறளும்”, ப.13

7. ஆச்சாரி, (2012). "திருவள்ளுவர் காலம் - இளங்குமரனார் கருத்து", சிறகுகள் வலைத்தளம். 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner