கரையைக் கொள்ளும் கடலன்னை

கிணற்றைக் கொண்ட கடல், திருக்கோவில்
நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் வசிப்பவர் என்றால், அல்லது அம்பாறை மாவட்டத்தில் உறவினர்களைக் கொண்டிருப்பவர் என்றால், எப்போதாவது அங்குள்ள கடற்கரையொன்றுக்குச் செல்பவர் என்றால், ஒரு விடயத்தை அவதானித்திருக்கலாம். அது கடலரிப்பு!


வடக்கே பாண்டிருப்பிலிருந்து தெற்கே பொத்துவில் வரை, கடற்கரையோரம் மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகின்றது. கடற்கரையில் சுமார் 300 மீற்றர் அளவான தூரம்வரை கடல் முன்னோக்கி வந்திருக்கிறது.

தென்கிழக்குக் கடற்கரை, பொதுவாக இயற்கை எழிலுக்குப் புகழ்பெற்ற இடம். அங்குள்ள அறுகம்பைக்குடா முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. திருக்கோவில் மற்றும் தமிழ்க்கிராமங்களின் கடற்கரைகள், நீத்தார் கடன், தீர்த்தமாடல், கும்பம் சொரிதல் முதலியன நிகழும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம், தம்பட்டை – தம்பிலுவில் பெரிய முகத்துவாரம், சங்கமன்கண்டி வெளிச்சவீடு, கோமாரி முகத்துவாரம்,  ஊறணி, கொட்டுக்கல் கடற்கரை போன்றன உள்ளுர்வாசிகள் அதிகம் விரும்புகின்ற பொழுதுபோக்கிடங்களாகத் திகழ்கின்றன. ஆனால், இவை எல்லாமே தற்போதைய கடலரிப்பு  அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.

இதிலுள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால், உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து செல்வதால், பெருமளவு நிலப்பகுதி கடலால் காவுகொள்ளப்படும் அபாயம் நிலவுகிறது என்பதே. நாசாவின்  காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையொன்று, ஆண்டுக்கு 3.2 மி.மீ கடல் மட்டம் உயர்வதாகச் சொல்கிறது. ஆண்டுக்காண்டு இந்த உயரம் கூடிக்கொண்டே செல்கிறது.

இலங்கையின் கீழைக்கரையின் உயரமோ, கடல் மட்டத்திலிருந்து வெறும் 5 மீற்றர்தான். அக்கரைப்பற்றுக்குத் தெற்கே கடலோரம் உயர்ந்து நின்று, ஓரளவு 2004 சுனாமி அனர்த்தத்தின் தாக்கத்தையும் குறைத்த மணற்குன்றுகளில் பெருமளவானவை, அதே சுனாமி அனர்த்தத்தாலும், தொடர்ச்சியான சட்டவிரோத மண்ணகழ்வாலும் தரைமட்டமாகிவிட்டன.  இவற்றோடு இப்போது கடலரிப்பும் சேர்ந்திருப்பதால், மிக விரைவிலேயே கிழக்கின் எழில்கொஞ்சும் பல கடலோரக் கிராமங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடலரிப்புக்குக் காரணம் என்ன?
பொதுவாக கடலரிப்பானது காற்று வேகம், அலை வேகம், கடல் நீரோட்டங்கள் போன்ற இயற்கைக் காரணிகளாலும், மனித செயற்பாடுகளான மண்ணகழ்வு, கடலோர ஆக்கிரமிப்பு போன்ற செயற்கைக் காரணிகளாலும் இடம்பெறும் ஒரு நிகழ்வு. இதனால் கடற்கரை மணல் காவு கொள்ளப்படல், கண்டல் – கடலோரத் தாவரங்களின் மறைவு, நிலத்துள் கடல்நீர் உட்புகுதல், குடிநீர் உவர்நீராதல், மனித வாழ்விடங்கள் இழக்கப்படல் முதலான அனர்த்தங்கள் நிகழலாம். மேலும், ஏற்கனவே கடற்கோள், சூறாவளி போன்றவற்றுக்கு முகங்கொடுத்த பிரதேசமான கிழக்கிலங்கையில், அவ்வனர்த்தங்கள் நிகழ்ந்தால், சேதம் பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

தென்கிழக்கின் கடலரிப்புக்கு?
தென்கிழக்கின் கடலரிப்புக்கு பரவலாகக் குற்றம் சுமத்தப்படுவது ஒழுங்காகத் திட்டமிடப்படாத ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணமே. இதற்கு வலுவான ஆதாரங்களாக மூன்று விடயங்களைச் சொல்லலாம். ஒன்று,  கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் 1986 அறிக்கையில் மட்டு – அம்பாறைப் பகுதியில் கடலரிப்பு ஆபத்து அதிகமுள்ள பிரதேசங்களாக கல்முனை, ஒலுவில், பாலமீன்மடு ஆகிய மூன்றும் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை. (பார்க்க: Profiles of Sri Lanka (2009), Chapter 02, p.36, DMC and UNDP Publication).

ஒலுவிலில் கடலரிப்பு
இரண்டு, ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணத்தின் பின்பே, கடலரிப்பு எனும் தோற்றப்பாடு தென்கிழக்கில் அவதானிக்கப்பட ஆரம்பித்தமை. மூன்று, மிக அதிகமான கடலரிப்பு, ஒலுவில் துறைமுகத்தைச் சூழ்ந்த ஒலுவில், பாலமுனை, நிந்தவூர் பகுதிகளிலேயே அவதானிக்கப்பட்டிருக்கின்றமை.  

ஒலுவில் துறைமுகமானது, டென்மார்க் அரசின் நிதியுதவியுடன் 2008இல் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி, கடந்த 2013 செப்டம்பர் முதலாம் திகதி திறந்துவைக்கப்பட்டது.  அடுத்து துறைமுக அபிவிருத்தி அதிகார சபை, மீன்பிடி அமைச்சு என்பவற்றின் அனுசரணையில், வள்ளங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்தை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் 2015இல் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது.

எளிமையாக புரிகிற மாதிரிச் சொன்னால், அங்கு கப்பல்களை உள்ளெடுப்பதற்காக, கடலில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கரையோரம் ஆழமாக்கப்பட்டிருக்கிறது. அகழ்வால் கடலின் சமநிலை குழம்ப, கடல் வேறெங்கேனும் இருந்து மணலைப் பெற்று, தன்னை மீளவும் நிரப்பி, பழையபடி மாற முனைகிறது. இதன் விளைவே துரிதமான கடலரிப்பு. கடலாழத்தை முகாமை செய்து, அதை மாறாமல் பேணவும், மீள வந்து படியும் மணலை அகற்றவும் கூட தொடர்ச்சியாக நேரமும் பணமும் செலவிடப்படுகிறது என்பதே இன்னும் சோகத்துக்குரிய விடயம்.

தீர்வென்ன?
கடல் கவடு, அமெரிக்கா
                                
மூன்றே மூன்று தீர்வுகள் தான் இருக்கின்றன. ஒன்று, வளர்ந்த நாடுகளில் பயன்படும் தொழிநுட்பங்களைப் பயன்படுத்துவது .உதாரணமாக கடல் கவடுகள் (Sea Groins) கடல் சுவர்கள் (Sea Walls,), செயற்கை மண் நிரப்பல் என்பவற்றைக் குறிப்பிடலாம். கடல் கவடு என்பது, கரையிலிருந்து கடலை நோக்கி செங்குத்தாக அமைக்கப்படும் செயற்கையான தடைச்சுவர் ஆகும். கடலரிக்கப்படும் திசையைப் பொறுத்து, இவை ஒருபுறம் மண்ணைப் படியச் செய்கின்றன. கடல் சுவர்களும் அதே போலத்தான். ஆனால் இவை, கரையிலிருந்து சற்று உட்தள்ளி கரைக்குச் செங்குத்தாக அமைக்கப்படுகின்றன. இனி, செயற்கை மண் நிரப்பல் என்பது, கடலரிப்பு நிகழ நிகழ வேறோர் இடத்திலிருந்து மணலைக் கொணர்ந்து நிரப்பும் செயற்பாடாகும்.
இலங்கையிலும் சில இடங்களில் கடற்சுவராக கற்கள் இடப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாமே செலவு கூடியவை. இலங்கை போன்ற ஒரு வளர்முக நாடால், இவற்றுக்கென பெருந்தொகைப் பணத்தைக் கொட்டமுடியாது. மேலும், இவை எல்லாமே கடலரிப்பைக் குறைக்குமே தவிர, முற்றாக நிறுத்தாது. இந்த செயற்கைக் கட்டுமானங்கள் கடற்கரையின் இயற்கை அழகைக் குறைப்பதையும், சில நேரங்களில் எதிர்மறை விளைவையும் ஏற்படுத்துவதையும் அமெரிக்காவில் இவை நிறுவப்பட்ட கலிபோர்னியா போன்ற இடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன.

இரண்டாவது வழி, கடற்கரைத் தாவரங்களின்  எண்ணிக்கையை அதிகரிப்பது. கடலோரத்தாவரங்களான தாழை, கண்டல், அடம்பன், இராவணன் மீசை, எருக்கு, சவுக்கு என்பன சமீப காலமாக முற்றாக இல்லாமல் போயிருப்பதை, அல்லது எண்ணிக்கையில் குறைந்திருப்பதை அவதானிக்கமுடியும்.  இவை போன்ற உப்பு நீருக்கு அத்தனை உணர்திறன் காட்டாத குறிப்பிட்ட சில தாவரங்கள், வேர்மூலம் மண்ணை இறுக்கமாகப் பற்றியிருக்கும் என்பதுடன், அவை கடலரிப்பை இயன்றளவு குறைக்கும் என்பதும் தெரிந்த விடயம் தான். சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோவில் பிரதேசத்தில் கடலோரம் சவுக்கு நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததை இக்கட்டுரையாளன் அவதானித்திருந்தான். ஆனால் கொஞ்சகாலத்திலேயே அவை கவனிப்பாரற்று  மறைய, அவை நடப்பட்ட இடங்களில் இப்போது அலைகள் ஆக்ரோஷமாக எழுந்துவீழ்வதை அவன் அச்சத்துடன் நினைவுகூர்கிறான்.

மூன்றாவது வழி ஒன்று உண்டு. மிகச்சிக்கலான வழி. ஒலுவில் துறைமுகத்தையும் கிழக்குக் கடற்கரையையும் முழுமையாகக் கைவிடுவது. கடலோரத்தில் மனித நடமாட்டம், வாழ்வாதார முயற்சிகள் அனைத்தையுமே முற்றாகத் தடைசெய்வது. கடலரிப்பு இப்போது இருப்பதை விட வேகம் கூடும். இன்று இருப்பதை விட அதிக கரையோரம் கபளீகரமாகும். ஆனால் பத்து – பதினைந்து ஆண்டுகளில் எல்லாமே அடியோடு மாறிவிடும். கைவிடப்பட்ட கடலோரத்தை ஆக்கிரமித்திருக்கும் தாவரங்கள் மண்ணைப் பலப்படுத்தியிருக்கும். தன்னைச் சமநிலைப்படுத்திக்கொண்ட சமுத்திரம் எஞ்சிய மணலை கரையோரம் குவித்திருக்கும். பழையபடி பட்டு மணலில் சிறுநண்டின் ஓடல்களைக் காணலாம்.

நடைமுறைச் சாத்தியமும் வாணிப நோக்கம் சார்ந்த சமகாலத் தவிர்க்கவியலாமையும் மூன்றாவது வழியை நிராகரிக்கின்றது. எனவே, இப்போது ஒரே வழி,  நடைமுறைக்கு இலகுவான, இப்போதைக்கு சாத்தியமான இரண்டாவது வழி தான். கடற்றாவரங்களை நட்டு, கரையோரம் அவற்றின் பரம்பலை முகாமை செய்து உறுதிப்படுத்துவது. அம்பாறை மாவட்ட கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, உள்ளுர்வாசிகளிடம் இது தொடர்பான போதிய விழிப்பை ஏற்படுத்தி, இதை முன்னின்று செய்யலாம். ஏற்கனவே இது தொடர்பாக மக்களும் ஆர்வம் செலுத்தி வருவதால் அது கடினமான பணியாக இராது.

ஆனால் இது கூட, உடன் பயன் தரும் தீர்வு அல்ல என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தன்னைத்தானே புதுப்பிக்கும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. ஆனால் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இயன்ற சீக்கிரத்தில் இதை ஆரம்பித்தால் கொஞ்சமேனும் நாம் வெற்றிபெறலாம். இயற்கையின் கையிலேயே நாம் சீரழித்தவற்றை ஒப்படைப்போம். நம்மை அது கைவிடப்போவதில்லை. குழந்தை குழப்பிவிட்டுச் சென்ற விளையாட்டுப் பொருட்களை புன்னகைத்தபடி அழகாக அடுக்கிவைக்கும் அன்னை போல!

(அரங்கம் பத்திரிகையின் ஐந்தாவது இதழில் வெளியான கட்டுரை)

1 comments:

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner