உண்மைத் தமிழன் என்றால் ஷேர் பண்ணு!


நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைஎன்று ஆரம்பித்து, ஒரு இட்டுக்கட்டப்பட்ட அறிவியல் அல்லது வரலாற்றுத் தகவலைச் சொல்லி, அது தமிழர் கண்டுபிடித்த உண்மை என்று உரிமைகோரி, இறுதியில்உண்மைத் தமிழன் என்றால் ஷெயார் பண்ணு”, “மானத்தமிழன்னா ஷேர் பண்ணுடாஎன்று குரலை உயர்த்தி, போன சில வாரங்களில் முகநூலிலும், வட்சப், வைபர் குழுமங்களிலும் பெருத்த தலையிடியாக இருந்த இந்தத் தலைப்பை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டீர்கள். அந்தத் தலைவலியால் கடுப்பாகி, அத்தகையவர்களைச் சீண்டுவதற்காக, இன்னும் சிலர் வேண்டுமென்றே உருவாக்கியஉண்மைத் தமிழன் என்றால்பதிவுகள், பழைய பதிவுகளை விட விறுவிறுப்பாக பகிரப்பட்டு, கிலியைப் பன்மடங்கு அதிகமாக்கி இருந்தன.


சரி. நீங்கள் அஞ்சி நடுங்கவேண்டாம். இந்தக் கட்டுரை அப்படியொன்றும் நாசா கண்டுபிடித்த தமிழரின் ஏழு கிரகங்கள் பற்றிச் சொல்லி உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கப் போவதில்லை. 😁 ஆனால், படுசீரியசாக (!)  ஈழத்தமிழர் வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை ஆராய இருக்கின்றது.

அண்மையில் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய நூலொன்றைப் புரட்டும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் இரு பக்கங்களை வாசித்ததுமே மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள், எனவே நம்பவேண்டாம். :D

குமரிக்கண்டத்திலிருந்து பிரிந்து வந்த தமிழர் நிலமான இலங்கை, எப்படி இராவணனால் செல்வச்செழிப்போடு ஆளப்பட்டது, பின்  எப்படி ஆரிய  வந்தேறிகளால் சுரண்டப்பட்டது, எப்படி நயவஞ்சகர்களான சிங்களவரின் கையில் வீழ்ந்து, ஆட்சியும் உரிமையும் பறிக்கப்பட்டு தமிழர்கள் சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டனர் என்பதையெல்லாம், கண்ணீர் கலந்து விவரித்தது அந்நூல். இந்த அற்புதமான வரலாற்று (?!) நூலைப் படித்துவைக்க எத்தனை பேருக்குக் கொடுப்பினை இருக்கின்றதோ என்றெண்ணிய கணமே மெய்சிலிர்த்தது!

தலையை எங்கே முட்டிக்கொள்வதோ தெரியவில்லை. வரலாறு, எப்போதும் சான்றுகளை அடுக்கி உருவாக்கப்படுவது. அதன் இடைவெளிகளை ஊகங்களால் நிரப்ப முயலலாம். ஆனால், ஊகங்கள் நம்பகத்தன்மை கொண்டதாக - முக்கியமாக நடுநிலையாக இருக்கவேண்டும். ஒருவேளை வரலாற்றாய்வாளன் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவனாக இருந்து, தன் உரிமைக்குக் குரல் கொடுப்பதற்காக  வரலாற்றாய்வு செய்கின்றான் என்றால் கூட, அவன் செய்யவேண்டியது, குறித்த சிக்கலை நடுநிலையோடு ஆராய்ந்து, அதன் நிறைகுறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தன் தரப்புக்கு ஏன் நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களைப் பொதுவெளியில் முன்வைப்பது தான்.

அத்தகைய நடுநிலையான ஆய்வாளர்கள் தமிழ்ச்சமூகத்தில் மிகக்குறைவு என்பதே வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கின்றது. இன்றும், ஐயோ அன்று ஆரியன் அடித்தான், முந்தாநாள்  பார்ப்பான் உதைத்தான், நேற்று வடுகன் வதைத்தான், கடைசியா  சிங்களவன் சிதைத்தான், வீழ்ந்துவிட்டோம், எழமுடியவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக வெற்றுக்கூச்சலிட்டு, அதையே  தமிழர் வரலாறுஎன்ற பெயரில் நூலாக வெளியிட்டு விடமுடிகின்றது. இத்தகைய உணர்ச்சி பெருக்கெடுத்தோடும் வரலாறுகளின் பயனின்மை பற்றிப் பார்க்குமுன்பு, நாம் நோக்குநிலையைப் (perspective) பற்றி கொஞ்சம் பேசவேண்டும்.

எந்தப் பேசுபொருளை எடுத்தாலும், மேலோட்டமாக இரண்டாகப் பிரித்து அதைப்பற்றி உரையாடுவது என்பது, விவாத உலகில் இயல்பு. நல்லது x கெட்டது, ஏற்கத்தக்கது x தகாதது, இடதுசாரி x வலதுசாரி என்று பல்கிப்பெருகும் இப்பிரிவினைகள், புரிதலுக்கும் விவாதிப்பதற்கும் இலகுவான ஒரு களத்தை ஏற்படுத்தித் தந்துவிடுகின்றது என்பது உண்மை.

ஆனால்,  உரையாடல் உச்சக்கட்டத்தை அடையும்போது, அந்தப் பிரிவினை செயற்கையானது என்பதையும், நம் வசதிக்காக நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் நாம் மறந்துவிடுகின்றோம். அந்த இருமைப்பிரிவினை இயற்கையானது என்றும், மாற்ற இயலாதது என்றும்  உறுதியாக நம்ப ஆரம்பிக்கின்றோம். அதில் ஒரு தரப்பை மாத்திரம் எடுத்துக்கொண்டு, வேறு நோக்குநிலைகள் (perspectives) அனைத்தையும் நிராகரிக்க ஆரம்பிக்கின்றோம். 

இந்த விபரீதமான போக்கை சமகால சமூக வலைத்தள உரையாடல்களிலும் அடிக்கடி காணமுடிகின்றது. உதாரணமாக, பண்பாட்டு அரசியல் என்று வந்தால் பிராமணர் x பிராமணரல்லாதார், தமிழ் x சமஸ்கிருதம்,  ஆரியர் x திராவிடர், உயர்ந்தோர் x தாழ்த்தப்பட்டோர், ஒடுக்குவோர் x ஒடுக்கப்படுவோர்  என்ற இருமைப்பிரிவினை இல்லாமல் தம்மால் வாதிக்கவே முடியாது என்ற பரிதாபகரமான நிலையில் பல நண்பர்கள் இருக்கின்றார்கள். ஒரு கட்டத்தில், குறித்த உரையாடலை எளிமையாக்க ஏற்படுத்தப்பட்டதே இருமைப் பிரிவினை என்பதையும் மறந்து; அதிலும் தான் பிடித்துக்கொண்டிருக்கும் பக்கம் தவிர, ஏனைய எல்லாமே பொய்தவறு என்று வாதிடும் அளவுக்கு; பண்பாடோ அரசியலோ பல பரிணாமங்கள் கொண்டவை என்பதை அடியோடு நிராகரிக்குமளவுக்கு; அவர்கள் வந்துவிடுகின்றார்கள்.

கருப்புவெள்ளைக்கிடையே ஆயிரம் நிறங்கள் இருப்பதை, கடவுள் இருக்கிறாராஇல்லையா என்பதற்கு நடுவேஇருந்தால் நல்லா இருக்கும்என்று கமல்கள் இருப்பதை, இவர்கள் மறந்துவிடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், எந்தப் பேசுபொருளும், விவாதத்திற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கருத்துருவாக்கங்களுக்கு வெளியே, பிரமாண்டமாக பரந்து நிற்பவை என்பதை எல்லா துறைகளிலும் நாம் நினைவுகூரவேண்டியது அவசியமாகும் -  வரலாறு உட்பட!

தமிழ் ஆய்வுலகிலுள்ள இன்னொரு முக்கியமான பிரச்சனை, தொன்மங்களுக்கும் (Myth) வரலாற்றுக்கும் (History) உள்ள வேறுபாட்டை இதுவரை இனங்காணாதது தான். தொன்மம் என்பது வழிவழியே ஒரு குழுமத்தில் செவிவழி நிலவிவரும் புராணக்கதை அல்லது நாட்டார் நம்பிக்கை. அது உண்மையிலேயே நிகழ்ந்ததாகவும் இருக்கலாம், நிகழாமல் இட்டுக்கட்டப்பட்டதாகவும் இருக்கலாம். எனவே, அவற்றை அப்படியே நிகழ்ந்திருக்கக்கூடிய உண்மையான வரலாறாகக் கொள்வது மிகப்பெருந்தவறு.

உதாரணமாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தன என்பதும், அவை முறையே 4440, 3700, 1850 ஆண்டுகள் இடம்பெற்றன என்பது தமிழ் இலக்கியம் சார்ந்த ஒரு தொன்மம். அதற்குள்ள ஆதாரம், இறையனார் களவியலுரை எனும் நூல். இது பொ.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பர். ஆக, குறைந்தது எண்ணூறு, கூடியது ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழைமையான நூலொன்றை முன்வைத்து, தமிழ்ச்சங்கங்கள் ஆறாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருக்கின்றன என்று முடிவுக்கு வருவது எத்தனை பெரிய அபத்தம்?

முச்சங்கம் என்பது ஒரு உதாரணம் தான். குமரிக்கண்டம், இராவணன் தமிழன் என்றெல்லாம் இந்தத் தொன்மங்களின் எண்ணிக்கை அளவுகடந்து செல்லும். அவ்வளவு ஏன், மகாபாரத - இராமாயண இதிகாசங்கள், சமயரீதியான புராணங்கள் எல்லாமே தொன்மங்கள் தான். அவை முடிந்தமுடிபான வரலாறுகள் அல்ல.

மீமாந்தத் தன்மையுள்ள (supernatural)  புராணக்கதைகளை உண்மையாக நடந்தவை என்று நம்புவதற்கும், அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்ந்தன என்று உறுதியாகச் சொல்வதற்கும், சமயரீதியாக எவருக்கும் பூரண உரிமை உண்டு. ஆனால் வரலாறு கறாரானது. யதார்த்தத்தில் தீவிரமாகத் தங்கியிருப்பது. மாய மந்திரங்களுக்கோ, அதிசயங்களுக்கோ வரலாற்றில் இடமில்லை. ஒருவேளை, ஒருவர் வரலாற்றுப்பாத்திரம் என்பது நிரூபிக்கப்பட்டு,  அவருடைய வரலாற்றில் அற்புதச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை குறியீட்டு ரீதியாகவோ யதார்த்தத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றிப்புரிந்துகொண்டோ தான் ஓர் வரலாற்றாய்வாளன் தன் ஊகத்தை முன்வைக்கவேண்டும். சொந்த சமய நம்பிக்கைகளையோ, மீமாந்த அற்புதங்களையோ அப்படியே ஏற்றுக்கொண்டு அவன் ஒரு வரலாற்றைச் சொல்லமுற்படுவான் என்றால், அது வரலாறே அல்ல

சொந்தக் கற்பனைகளையெல்லாம் திணித்து, தமிழர் வரலாற்றைச் சொல்லுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, முதற்சங்கத்தின் துவக்கத்தில் -  கி.மு 6440இல் தமிழன் வாழ்ந்தான் என்று ஆரம்பித்து, மாயன் நாகரிகத்தை உருவாக்கியவன் தமிழன் தான் என்று சுற்றிவளைத்து, சுமேரியருக்கே சூனா எழுதக் கற்றுத்தந்தவன் தமிழன் தான் என்றுசூனா பானாரேஞ்சுக்குப் போய் நின்று, அங்கே பார் அங்கோரிலும் தமிழன் என்று வரலாற்றை நாமாகவேபடைப்பதுஅபத்தத்திலும் அபத்தம்.

இக்கட்டுரை கூறவருவதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். வரலாற்றை எழுதும் போது,  தொன்மங்கள் அனைத்துமே பொய்யென்று கருதி, அவற்றை முற்றுமுழுதாக நிராகரிக்கவேண்டும் என்பதல்ல இக்கட்டுரையாளன் சொல்லவருவது. ஏதோ ஒரு தூண்டலால் தான் தொன்மங்கள் ஒரு சமூகத்தில் உருவாகின்றன. முச்சங்கம், குமரிக்கண்டம், மூன்று கடற்கோள்கள் போன்ற தொன்மங்கள் முழுக்க முழுக்கப் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. காட்டாக, மன்னனும் புலவரும் கூடித் தமிழ் வளர்க்கும், “தமிழ்ச்சங்கம்என்ற ஒரு அமைப்பு இருந்தது, இப்படி மூன்று சங்கங்கள் கூட இருந்திருக்கலாம், என்று ஊகிக்க, நிறையவே சங்க இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால், “மறுவார்த்தை பேசாதேஎன்று பாடியவாறே களவியலுரை சொல்லுது, ஆகவே அவை இத்தனை ஆயிரம் ஆண்டுகள், இத்தனை புலவருடன், இந்தக் கடவுளர் தலைமையில், இங்கெல்லாம் வழக்கில் இருந்தன என்று வரிந்துகட்டுவது வீண்செயல்.

புவியியல் ரீதியில் இந்திய உபகண்டத்தின் நிலத்தடித் தட்டைப் பார்த்தோமென்றால், இலங்கையும் இந்தியாவும் அதில் இணைந்திருப்பதையும் அவற்றின் சில கி.மீ பரப்பு கடலுள் மூழ்கியிருப்பதையும் காணலாம். (இங்கு இந்தியஇலங்கைக் கரையோரம் வெண்ணிறமாகக் காட்டப்படும் மூழ்கிய தரைப்பகுதியைப் பாருங்கள்: 
இந்தியக் கடலோரம் கடல் கொண்ட நிலப்பரப்பு
(படம்:davidpratt.info)

இந்தத்
தாழ்நிலம் கடலில் மூழ்கியதும், அதன்போது ஏற்பட்ட பெரும் உயிர்ச்சேதமும் நீண்ட நாட்கள் குலப்பாடல்களாகப் பாடப்பட்டு, குமரிக்கண்டம், தென்திசையில் வாழும் இறந்தோர், அவர்கள் வாழும் தென்புலத்தார் உலகம் முதலான நம்பிக்கைகள் தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கலாம். மாபெரும் கடற்கோள் ஏற்பட்ட சம்பவமொன்று, களனிதீசன் மற்றும் விகாரமாதேவி (பொ.மு 2ஆம் நூற்றாண்டு) பற்றிய மகாவம்சத் தொன்மத்திலும் உண்டு. எனவே, இந்தக் கரையோரப்பரப்பு கடலால் காவுகொள்ளப்படுவதற்கு முன்பு இருந்த பழைய இந்தியத் தீபகற்பமே குமரிக்கண்டம் என்றழைக்கப்பட்டிருக்கலாம்; அதிலோடிய பஃறுளியாறே இன்றைய தென்தமிழகத்துப் பறளியாறு; குமரிக்கோடு என்பது அப்போது மேடாக இருந்திருக்கக்கூடிய இன்றைய குமரிமுனை தான்; என்றெல்லாம் ஊகித்தால் அவை தவறாகாது.

இப்படிப்பட்ட ஊகங்களை முன்மொழிவதை விடுத்து, புவியியல் ரீதியிலோ, வரலாற்று ரீதியிலோ எவ்விதத்திலும் சாத்தியமற்ற, மடகஸ்காரிலிருந்து அவுஸ்திரேலியா வரை பரந்த பெருநிலப்பரப்பு, அங்கிருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகள், அதன் குறுக்கே ஆர்ட்டிக்கிற்கும் அந்தார்ட்டிக்கிற்கும் அடிமட்டம் வைத்துக் கீறிய குமரிக்கோடு, என்று கதையளந்து விடுவதைத் தான், வரலாற்றாய்வு என்று சொல்லிச் செய்யக்கூடாது என்கின்றோம்.

இலங்கைத் தமிழர் வரலாறு என்று சொல்லி, இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன.   அவற்றில் பல, ஒரு வரலாற்றாய்வாளனுக்கு இருக்கக்கூடாத முன்முடிவு, சுயபிடித்தம், பக்கச்சார்பு, போன்ற பண்புகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு, அதை பெருமையாகக் கூறிக்கொண்டே, “ஆகவே இப்படிப்பட்ட நான் என் இனத்தின் வரலாற்றை எழுதி அதற்கு என்னாலான ஒரு சிறுபங்கை ஆற்றுகின்றேன்என்று பெருந்தன்மையுடன்  முன்னுரை வரைகின்ற, சில ஆசிரியர்களின் புத்தகங்களாகத் தான் இருக்கின்றன.

நம்பகத்தன்மையோ, வரலாற்றின் கறார்த்தன்மையோ இல்லாமல் இப்படி ஈழத்தமிழர் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டதற்கு, எழுதியவர்களை மட்டும் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. இலங்கைத் தமிழர் வரலாற்று நூல்களாக முன்வைக்கப்படும், யாழ்ப்பாண வைபவ மாலை, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், வையாபாடல், கோணேசர் கல்வெட்டு,  தட்சிண கைலாச புராணம் எல்லாமே, அழகான தொன்மக்கதைகளின் தொகுப்புகள். மகாவம்சத்துடன் ஒப்பிடும்போது, “வரலாறுஎன்று சொல்லக்கூடிய குறைந்தபட்சத் தகுதி கூட இல்லாதவை. அவற்றை முன்பு சொன்னாற்போல், குறியீட்டு ரீதியில் புரிந்துகொண்டு, அல்லது நடைமுறைச் சாத்தியமான முறையில் ஒழுங்கமைத்து,  சரியான வரலாற்றை முன்வைத்த ஆய்வுநூல்கள் மிகக்குறைவு.

அந்தவகையில் பேராசிரியர்கள் சி.பத்மநாதன், .புஷ்பரெட்ணம், சி..சிற்றம்பலம் போன்றோரின் ஆக்கங்களை இட்டு ஓரளவு திருப்திப்பட்டுக் கொள்ளலாம் என்றாலும், பூரணமானநம்பகரமான ஈழத்தமிழர் வரலாற்று நூல் என்று ஒன்று இதுவரை வெளிவரவே இல்லை என்பதே உண்மை. தமிழ்த்தேசியம் அரசியல் சதுரங்கத்தில் முக்கியமான பேசுபொருளாக வளர்ந்துவரும் இக்காலத்தில், இலங்கையில் தமிழர் தொடர்பான இத்தகைய முழுமையான வரலாறொன்றைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. காலம் பதில் சொல்கிறதா பார்ப்போம்.

சரி, என் கடமை முடிந்தது. இனி உங்கள் கடமை. உண்மைத் தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள். 😆

(உவங்கள் இதழில் [சனம் 01 ஆள் 05] வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner