ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

0 comments

மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.
 வெலிம்பே ஹெல


வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள். 

பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம்
(Credits: lakdasun.lk)

இந்தத் தலையணியே சில கிறிஸ்தவப் பிரிவுகளில் மதகுருவின் முக்காடு

இப்போது அதற்கென்ன என்று கேட்கிறீர்கள் இல்லையா? சொல்கிறேன் பொறுங்கள். இலங்கையின் பெரும்பாலான மலைமுகடுகளுக்கு ஐரோப்பியப் பெயர் ஒன்று இருக்கிறது. மொனராகல்லுக்கு வடகிழக்கே அமைந்திருப்பது 570 மீ உயரமான கோவிந்த ஹெல எனும் மலை. மகாவம்சத்தில் கோவிந்தஷிலா என்று குறிப்பிடப்பட்ட இம்மலையை கீழைக்கரைத் தமிழர்கள் கழிகாம மலை என்று அழைத்தார்கள். அதன் ஆங்கிலப்பெயர் வெஸ்ட்மினிஸ்டர் அபே (Westminister Abbey). இலண்டன் மாநகரிலுள்ள பெருந்தேவாலயம் ஒன்றின் பெயர் அது.

கழிகாமமலை -  Westminister Abbey

கழிகாம மலைக்கு கிழக்கே அமைந்திருப்பது கொந்துருஹெல என்கின்ற 348 மீ உயரமான மலை. அதற்கு ஆங்கிலத்தில் அகனிஸ் பீக் (Aganis Peak) என்று பெயர். பொத்துவில்லுக்கு மேற்கே உள்ள நிலக்கல் ஹெலவின் (194 மீ) ஆங்கிலப்பெயர் சேடல் பீக் (Saddle Peak). குதிரைச் சேண வடிவ மலை. இதே பெயரில் ஒன்று அந்தமான் தீவுகளிலும் இருக்கிறது. இலங்கையின் உயரமான மலைகளில் ஒன்றான நமுனுகுலத்தின் ஆங்கிலப்பெயர் ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills). ஜூபிலி ஹில்ஸ் இங்கிலாந்திலும் உள்ள மலை. அவ்வளவு ஏன், இலங்கையில் யாழ் குடாநாடு தவிர்த்து, தெற்கே பெரும்பாலான பாகங்களில், மேகமூட்டமில்லாத நாளில், இலகுவாகக் காணக்கூடிய சிவனொளிபாதமலையை சீனிக்குவியல் - Sugarloaf என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே பெயரில் ஒரு மலை பிரேசிலில் இருக்கிறது.ஏன் வெள்ளையர்கள் இப்படி மலைகளுக்கெல்லாம் பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்கள்? அவற்றில் பெரும்பாலான பெயர்கள் ஏன் தங்கள் சொந்த அல்லது தாங்கள் குடியேறிய இன்னொரு நாட்டின் மலைகளின் பெயராக இருந்தது?

அதற்கு முன் இன்னொரு கேள்வி. வானூர்தி இல்லாத 1500களில் ஐரோப்பியர் எப்படி இலங்கைக்குள் நுழைந்தார்கள்?  திசைகாட்டிகள், வரைபடங்கள், துறைமுக கலங்கரை விளக்கங்கள் மூலம். சரி. மூன்றும் இல்லாத - கிடைக்காத இன்னும் பழைய காலத்தில்? அதிலும் சுற்றிவர வெறும் தண்ணீரே இருக்கும் நடுக்கடலில்?


தரைத்தோற்றங்கள்! மலைகள், சமநிலங்கள், கழிமுகங்கள், முனைகள், குடாக்கள். கரையோரத்தில் இவற்றைப் பார்த்துத் தான் கடற்பயணிகள் கடலில் தங்கள் அமைவிடம் சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். உலகின் மிகப்பழைய துறைமுகங்கள், நதிகளின் கழிமுகங்களிலேயே அமைந்திருந்தது ஆழம் முதலிய அனுகூலங்களைக் கண்டுகொண்டதால் மட்டுமல்ல; ஆற்றின் கழிமுகங்களை கடலிலிருந்தே இலகுவாக இனங்காணலாம் என்பதாலும் தான். நம் நாட்டின் இயற்கைத் துறைமுகம் திருக்கோணமலை வளர்ச்சி கண்டதும் அதன் அருகில் ஓங்கி நின்ற கோணமாமலை எனும் இடக்குறியால் (Landmark) தான்.

பழைய கடலோடிக் குறிப்புகளில் இப்படி மலைகளை அடையாளமாக வைத்து அவர்களது சேருமிடங்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பாலான பிரித்தானியக் குறிப்புகளில் வரைபடங்களின் துணையுடன் இந்த மலைகளையும் தாங்கள் சென்று சேரும் இடங்களையும் கண்டறிவது எப்படி என்பதை அகலாங்கு நெட்டாங்கு குறிப்புகளுடன் பதிவு செய்திருக்கிறார்கள். 


இந்த மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வரலாற்றுச் செய்தி இடச்சுக் குறிப்புகளில் கிடைக்கிறது. ஒல்லாந்தர்கள் முதலில் இலங்கைக்கு வந்தது மட்டக்களப்புக்கு என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி வந்த ஒல்லாந்தர்கள் முதலில் மட்டக்களப்பென்று நினைத்து தவறாக வேறொரு இடத்துக்குத்தான் சென்றார்கள். திருக்கோவில் முருகன் ஆலயம்! அதற்குக் காரணம் இந்த மலைகள் ஆடிய ஆள்மாறாட்டம் தான்.


பட்டேவியாவில் (இந்தோனேசிய நகரொன்று) சோழமண்டல மற்றும் விஜயநகர வணிகர்களை 1600ஆமாண்டு சந்திக்கிறார்கள் ஒல்லாந்து அதிகாரிகள் சிலர். இலங்கைத்தீவில் கறுவா கிடைக்கிறது, ஆனால் அத்தீவைச் சுற்றிவர போர்த்துக்கல் பிடித்துவிட்டது. கிழக்குக்கரையில் மட்டக்களப்பு ஊடாக மட்டுமே இலங்கை மன்னனைத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அறிந்து கொள்கிறார்கள் அவர்கள்.

1602ஆமாண்டு கீழைக்கரைக்கு வரும் ஒல்லாந்தர்கள் மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து தென்னந்தோப்புக்கு மத்தியில் நின்ற திருக்கோவில் முருகன் ஆலயம் அருகே கப்பலை விடுகிறார்கள். அங்கிருந்த மக்கள் மட்டக்களப்பு இன்னும் வடக்கே இருப்பதைச் சொல்லி ஒரு ஆளையும் துணையாக அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக சில கத்திகளை வழங்கிவிட்டு தாங்கள் மட்டக்களப்பு வந்து சேர்ந்ததை ஒல்லாந்தர்கள் எழுதியிருக்கிறார்கள். 


அவர்கள் மட்டக்களப்பு என்று சொல்வது இன்றைய சம்மாந்துறை நகர் என்பதும், அவர்கள் எதிர்பார்த்து வந்த கழிமுக முகத்துவாரம் காரைதீவின் கரைச்சைக் களப்பு என்பதும் இங்கு மேலதிகமாக உங்களுக்கு நினைவூட்டவேண்டிய விடயங்கள். ஆனால் முக்கியமாகச் சொல்லவேண்டியது என்ன தெரியுமா? திருக்கோவிலில் உள்ளூர் மக்களைச் சந்தித்த ஒல்லாந்தர்கள் முதலில்  கேட்கும் கேள்வி "கெபல்லோ டி ப்ரேட் (Capello De Frade) மலையைக் காட்டுங்கள்" என்பது தான். அவர்களும் அப்படி ஒரு மலையைக் காட்டுகிறார்கள். அது ப்ரையர்ஸ் ஹூட் என்பதன் போர்த்துக்கேய  வடிவம். ஆம் வெலிம்பே ஹெல மலையைத் தான் காட்டும் படி கேட்கிறார்கள். அது ஏன்?


கடலோடிகளுக்கு நிலக்குறிகளைக் காட்டும் அதே தரைத்தோற்ற அம்சங்கள் தான். மட்டக்களப்புக்கு முதன்முறையாக வந்த ஒல்லாந்தருக்கு அறிந்திருந்தது இரண்டே இரண்டு விடயங்கள். அங்கு ஒரு கழிமுகம் ஒன்று இருக்கிறது என்பதும், பாதிரியாரின் முக்காடு போன்ற மலை ஒன்று மட்டக்களப்புக்கு மேற்கே தென்படும் என்பதும் தான். அந்த இரண்டையும் அடையாளம் வைத்துத் தான் இங்கு வந்திருக்கிறார்கள் ஒல்லாந்தர்கள் என்பது அவர்களது விவரணையிலிருந்து தெரிகிறது. (சம்மாந்துறைக்கு அருகே கடலில் இருந்த கழிமுகம், காரைதீவின் கரைச்சைக் களப்பு முகத்துவாரம். அது சொரட்ஜன் கொண்டாவே என்ற பெயரில் பின்பு ஒல்லாந்தரின் கிழக்குக்கோட்டையாக இருந்தது. திருக்கோவிலுக்கு அவர்கள் தவறாக கப்பலை விடுவதற்கு, அதன் வடக்கே இருக்கும் பெரியகளப்பு முகத்துவாரமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.)


பனிமூட்டமில்லாத நாளில் திருக்கோவிலில் வெலிம்பே ஹெல தென்படும். என்றாலும் கடலில் நின்று பார்த்த போது, ஒல்லாந்தர்களை ஏமாற்றிய சூத்திரதாரி இன்னொருவர். திருக்கோவிலுக்கு மேற்கே தெரிவது வடினாகல் மலை. கிட்டத்தட்ட வெலிம்பே எல்லையின் உயரமும் வடிவமும் கொண்ட இதன் ஆங்கிலப்பெயர் ஃபோல்ஸ்ஹூட் (False Hood). ஒல்லாந்தருக்குப் பிறகு வந்த பிரித்தானியர்கள் வடினாகல்லைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் தெரியுமா?

"பிரையர்ஸ் ஹூட்டுக்குத் தெற்கே, ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் அபேக்கு வடக்கே ஒரு மலை இருக்கிறது. அதற்குப் பெயர் ஃபோல்ஸ் ஹூட். தூரத்தில் நின்று பார்க்கும் போது பொய்யாக பிரையர்ஸ் ஹூட் போல தோற்றமளிப்பதால் அதற்கு ஃபோல்ஸ் ஹூட் என்று பெயர். இதைப் பார்த்து தவறாக பிரையர்ஸ் ஹூட் என்று எண்ணி விடக்கூடாது."

False Hood - வடினாகலை, மேற்குப்புறமிருந்து பார்க்கும் போது போலி முக்காடு.

ஆம். இவர் தான் ஒல்லாந்தரை தடுமாறச் செய்த சூத்திரதாரிகளில் முதன்மையானவர். போலி பாதிரியாரின் முக்காடு - வடினாகலை.  ஃபோல்ஸ் ஹூட்டால் முதலாவதாக ஏமாற்றப்பட்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். போலி பாதிரியாரின் முக்காடான ஃபோல்ஸ் ஹூட் அமைந்திருப்பது திருக்கோவிலுக்கு மேற்கில். உண்மையான பாதிரியாரின் முக்காடு பிரையர்ஸ் ஹூட் அமைந்திருப்பது சம்மாந்துறைக்கு மேற்கில். ஃபோல்ஸ் ஹூட்டையும் பெரிய களப்பு முகத்துவாரத்தையும் பார்த்து ஏமாந்து தான் அன்றைய மட்டக்களப்பு என்று நினைத்து திருக்கோவில் வந்து சேர்ந்தார்கள் ஒல்லாந்தர்கள்.


மலைகள், ஆறுகள், இயற்கையின் ஒவ்வொரு கோட்டோவியங்களும் எத்தனை முக்கியமானவை? இன்று நாம் மலைகளைப் பார்ப்பதில்லை.  விண்மீன்களை இரசிப்பதில்லை. சூழல் மீது அக்கறை என்பதே இல்லை. இந்த சுற்றாடல் அறிவு கிஞ்சித்தும் இல்லாமல்,  வேலை, படிப்பு, உறக்கம் என்று இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம் முன்னோர் அனுபவித்த  எத்தனையைத் தான் உண்மையில் இழந்து கொண்டிருக்கிறோம்?

மேலும் வாசிக்க »

தந்தனத்தோம்

1 commentsதந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால் உங்கள் ஏழு பிறவியும் நலன் பெறும்.

அன்னையரால் உலகம் ஆளப்பட்ட பழங்காலத்தில் இது  நடந்தது. பஃறுளி ஆறு பாயும் பன்மலை அடுக்கத்து உச்சியில் பேரன்னை ஒருத்தியால் ஆளப்பட்ட குமரி நாடு இருந்தது. அவள் ஆட்சியில் மண் செழித்தது. மாதர் சிறந்தனர். மழலைகள் திகழ்ந்தன. ஆனால் பகலவனையும் பால்நிலவையும் கொண்டு அவர்கள் அளந்த காலத்தில் அணுவளவு தவறு இருந்தது. 

பேரன்னை மேற்குக் கடல் தாண்டி வந்த வணிகர்களிடமிருந்து திருத்திய வான் கணிப்பை தெரிந்து கொண்டாள்.  அவர்கள் விண்மீன்களைக் கொண்டு காலம் கணித்தனர். அவள் உருட்டிய சோழிகளில் எழுந்து எதிர்காலத்தை சொல்லி அச்சமூட்டின கோள்கள். கிழக்கே நாகர்கள் வாழும் பெரும் தீவில் அவளது சந்ததியர் எஞ்சவேண்டும் என்று கூறின நாள்கள்.  

பேரன்னை தன் நாட்டின் ஆறு குலங்களை ஆளும் ஆறு அன்னையருக்கு செய்தியைச் சொன்னாள். பேரன்னையின் ஆணையின் படி, ஆறு வள்ளங்களில்  ஆறு குடியினர்  கிழக்கே புறப்பட்டனர். பேரன்னை கணித்தபடி, ஆறு வான் நட்சத்திரங்களில் பிறந்த இளங்கன்னியரே அந்த ஆறு வள்ளங்களைத் தலைமை தாங்கிச் சென்றனர். அனுராதை, உரோகிணி, அசுவினி, உத்தரை, மிருகசீரிடை, சுவாதி என்பது அவர்கள் பெயர். ஏழாவது ஒருத்தி வானிலிருந்து இறங்கி வருவாள் என்றும் அவள்  அரசமரத்தை குலச் சின்னமாகவும் சுளகைக் கொடியாகவும் கொண்டிருப்பாள் என்றும், அவளே பின்னாளில் நாகநாட்டின் முதல்வி ஆவாள் என்றும் பேரன்னை கணித்திருந்தாள். 


பஃறுளி ஆற்றங்கரையில் வாழ்ந்த குமரி நாகர் குலத்தில் உதித்த இருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்தனர். ஆறு வள்ளங்களுக்கு முன்னே சென்ற குமரிநாகன் கேதன், தம் மூத்தோர் சொன்ன கடல் வழியை விண்மீன்களைக் கொண்டு உறுதி செய்து, நாகநாட்டின் மேற்குக் கரையை அடையாளம் காட்டினான். அங்கு  மூன்று குடியினர் இறங்கிக் கொண்டனர். செம்பு நிறத்தில் அங்கு மண் இருப்பதைக் கண்டு வியந்து அந்த இடத்தை "தாமிரவண்ணம்" என்று அழைத்தார்கள். அங்கிருந்து தள்ளி பால் நிறத்தில் ஓடிய நதியை "பாலாவி" என்றனர்.

ஆறு வள்ளங்களுக்குப் பின்னே சென்ற குமரி நாகனான கோணன், நாகர்களின் மூத்தோரான அசுரர்கள் வாழும், நாகத்தீவின்  கிழக்குக் கரைக்கு, ஏனைய மூன்று குடியினரை அழைத்துச் சென்றான். அந்த இடம் மாட்டின் காது போன்று வளைவாக இருந்ததால் அது கோகர்ணம் எனப்பட்டது. அங்கு கடலில் கலந்த நதி அசுரரின் மூதாதை மாவலியின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது. 

குமரியின் குடிகள் கோகர்ணத்தில்   இறங்கிய போது,  பத்து சகோதரர்களுக்குப் பிறந்த "இராவண்ணர்" எனும் அசுரக்குடியினர் அங்கிருந்த மலைச்சாரலில் வாழ்ந்து வந்தனர்.  பத்து சகோதரர்களுக்கு பிறந்ததால், அவர்களுக்கு பத்தர்கள் என்றும் பதர்கள் என்றும் பெயர் இருந்தது.

பத்தர்களில் மூத்த சகோதரனுக்குப் பிறந்த குலத்தின்  தலைவன் தசைமுகன் குமரியின் மக்களை தன் நாட்டில் குடியமர அனுமதிக்கவில்லை. ஆனால் மாயங்கள் அறிந்த குமரிநாகன் கோணன்  கால் பெருவிரலால் எற்றி தசைமுகனைக் கொன்றான்.  தசைமுகனின் பேருடல்  அங்கிருந்த மலையொன்றின் அடிவாரத்தில் தாழியில் புதைக்கப்பட்டது. அங்கு  ஏனைய ஒன்பது சகோதரர்களின் வழிவந்த குலத்தாரின் ஒன்பது தலைவர்களும் அமர்ந்து மூன்று நாள் யாழ் இசைத்து துக்கம் கொண்டாடினார்கள்.  அவர்களது குலவழக்கப்படி இராவண்ணர் தங்கள் மூத்த தலைவனாக தசைமுகனை  வென்ற கோணனையே ஏற்றுக்கொண்டனர். குமரிக்குடிகளால் அம்மலை அன்றிலிருந்து கோணமலை என்று அறியப்பட்டது.


நட்சத்திரங்கள் சொல்வதன் படி நடக்கவேண்டும். இறங்கிய ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு குலத்தினரை  குடிபதிய விடுத்து ஏனைய குடிகள் நாகத்தீவின் உள்ளே நுழைய வேண்டும் என்பது பேரன்னையின் ஆணையாக இருந்தது. முடப்பனைக் குலத்தில் பிறந்த தேள் கொடியைக் கொண்ட மூத்தவள் அனுராதையும், குதிரைக் குலத்தில் பிறந்த யாழ் கொடியைக் கொண்ட மூன்றாமவள் அசுவினியும் பாலாவியின் கரை வழியே உள்ளே நுழைந்தனர்.

பாம்பைக் கொடியாகக் கொண்ட சூரியக் குலத்து  உத்தரை தன் குடியினரை தாமிரவண்ணத்திலேயே நிறுத்திக் கொண்டாள். அவர்களை அங்கிருந்த நாகர் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பதினோராம் மாதத்தின் அமாவாசை நாளில் நாகத்தீவு நாகர்கள் பாலாவியில் நீராடி தங்கள் இறைவன் மணிநாகனுக்கு நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. அதைத் தூய இருளில் நட்சத்திரங்களை வணங்கும் மகாதீர்த்த விழாவாக உத்தரை மாற்றியமைத்தாள்.   அதனால் அவ்விடம் மகாதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. 

கீழைக் கரையின் கோகர்ணத்தில், இராவண்ணர்கள் கண்டடைந்த வெந்நீரூற்றுக்களின் அருகே சந்திரக் குலத்தில் பிறந்த கன்னி மிருகசீரிடை குடிபதிந்தாள். இராவண்ணரை வென்ற அடையாளமாக அவளது மூன்று மீன் கொடி கோண மலையில் ஏற்றப்பட்டது. எனவே அதற்குத் திரிகோணம் என்றும் மச்சமலை என்றும் பெயர் உண்டானது. அவளிடம் விடைபெற்று, சக்கரத்தைக் குலச்சின்னமாகவும், உருளையைக் கொடியாகவும் கொண்ட உரோகிணியும், விளக்குக் குலத்தில் நுகத்தடிக் கொடியைக் கொண்ட சுவாதியும் மாவலிக் கரை வழியே உள்ளே நுழைந்தனர். 

நான்கு மாதங்களின் பின், உள்நுழைந்த நான்கு குலத்தினரும், பாலாவியாற்றின் கரையின் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். விண்மீன்களைக் கண்டு பேரன்னை விடுத்த ஆணைப்படி மூத்தவள் அனுராதை அங்கேயே குடிபதிந்தாள். தொடர்ந்து விண்மீன்கள் சொன்னபடி, மூன்றாமவள் அச்சுவினி வடக்கேயும் உரோகிணியும் சுவாதியும் தெற்கேயும் சென்றனர். அவர்களெல்லோரும் உள்ளூர் நாகர்களுடன் கலந்து குமரிநாட்டுக் குருதியை மண்ணில் நீடிக்கச் செய்து விட்டிருந்தனர்.


தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, கேளுங்கள். அனுராதையின் பரம்பரையில் பின்பு அங்கு அனுராதைபுரம் என்றோர் பெருநகரம் உண்டானது. ஒரு கடற்கோளில் குமரி நாடு அழிந்தபிறகும் இரண்டாயிரம் ஆண்டுகள் அவள் நகரம் பலரும் புகழ செழிப்போடு மிளிர்ந்தது.

வடக்கே மணிபல்லவம் எனும் தீவில் குடியேறி வாழ்ந்த குதிரைக் குலத்து அச்சுவினி, தன் இறுதிக்காலத்தில் "இவை அனைத்தும் மாறும். மாறியதை மாற்ற மீண்டும் பிறப்பேன்" என்று வஞ்சினமுரைத்து இறந்தாள். அவளுக்கு, குதிரை முகத்துடனான தோற்றத்தில் சிலை வடித்து, தம்பலை என்ற இடத்தில் பள்ளிப்படை அமைத்தனர். அச்சுவினியின் சந்ததியில் தோன்றிய யாழ்க்கொடியினர் வாழ்ந்த இடம் பின்பு சிங்கை என்று அறியப்பட்டது.  

தெற்கே நாகத்தீவின் தென்முனையில் உரோகிணியின் வம்சத்தார் அமைத்த தேசம் உரோகண நாடு என்றானது. உரோகிணி வயிற்றில் பிறந்த கந்தன், குமரி நாட்டு வழக்கப்படி அவள் தமையன் நீலத்தேவனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தான். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற போது, பத்தர்களில் கடைசிச் சகோதரன் வம்சத்தில் வந்த கதிரர் எனும் குலத்தாரின் நாட்டு எல்லையைக் கடந்த கந்தன் பின்பு திரும்பி வரவில்லை. கதிரர் குலப் பெண்ணொருத்தியிடம் மயங்கி கந்தன் கதிரை நாட்டில் வாழ்ந்து வருவதாக நீலத்தேவனுக்குச் செய்தி வந்தது. தான் வளர்த்த மருகன், குலமரபைக் காக்காத பழி தீர்க்க, நீலத்தேவன், உரோகிணியின் நாட்டுக்குள் நுழையாமல் கடலோரத்திலேயே நோன்பிருந்து மறைந்தான். அங்கு  குலச்சின்னமான சக்கரத்தை நிறுவி அவனைத் தம் தெய்வமாகக் கொண்டனர் உரோகிணி நாட்டினர். தேவன் உறைந்த அவ்விடம் தேவனுறை என்று பின்னாளில் அறியப்பட்டது. 

ஆறாமவள் சுவாதி தென்கிழக்கே சென்றாள். அவள் சந்ததி செழித்த ஊர் தெற்குவாவி மண்டலம் என்று அறியப்பட்டது. அவளது பரம்பரையில் பிறந்த "உதியன்" என்பவனது காலத்தில் தான், குடியைக் காக்கும் பொறுப்பு பெண்களிடமிருந்து ஆண்களுக்கு கைமாறியது. உதியனுக்கு பிறகு தந்தை வழியில் கைமாறப்பட்ட ஆட்சி உரிமையைப் பெற்ற சுவாதியின் வம்சத்தவர்கள் "உத்தியாக்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

தெற்குவாவியின் மக்கள் உதியனை சுவாதியின் மைந்தர் என்ற பொருளில் 'குமாரர்' என்று அழைத்தார்கள். குமாரரின் மூத்த  மகன் நாதன் காலத்திலே தான் நீர்நிலைகளுக்கு அணைக்கட்டு கட்டி நீர் தேக்கி வேளாண்மை செய்யும் நடைமுறையை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவ்வாறு தெற்குவாவியில் நாதன் அமைத்த முதல் அணைக்கு நாதனணை என்று பெயர்.

பேரன்னை கணித்தபடி, நெடுங்காலத்துக்கு பிறகு நாகத்தீவின் வேறெங்கோ ஏழாமவள் வந்திறங்கினாள். அரசு மரத்தைக் குலச்சின்னமாகவும், முறத்தைக் கொடியாகவும் கொண்ட அவள் பெயர் விசாகை. பேரன்னை சொல்லியிருந்த படி  வந்திருப்பது அவள் தான் என்பதை அவள் கையிலும் காலிலும் அணிந்திருந்த சிலம்புகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். பத்தர்களே அவளை முதலில் அடையாளம் கண்டு கொண்டதால் விசாகையைப் பத்தினி என்றும் அழைத்தார்கள். நாகத்தீவின் நடுவிலிருந்த சமனொளி மலையில் குடியிருந்த அவள், வானத்திலிருந்தே இறங்கியிருக்க வேண்டும்  என்று எல்லோரும் நம்பினர். அங்கு கல்லில் பதிந்திருந்த பாதங்கள் அவளுடையவை என்றும் மணிநாக தெய்வத்துடையவை என்றும் கதைகள் உருவாகி வழிபாட்டுக்கு உரியவை ஆயின.

விசாகையால் நாகநாடு முழுவதும் ஆளப்பட்ட போது கோகர்ணத்தில் மாட்டை குலச்சின்னமாகவும் நுகத்தடியைக் கொடியாகவும் கொண்ட பரதர் என்னும் குலத்தார் வந்து இறங்கினர். பரத குலத்தாரை வடமொழியில் ஆரியர் என்றும் தமிழில் ஆயர், ஐயர் என்றும் அழைத்தார்கள். கோகர்ணத்து பத்தர்களின் ஐயர் - மூத்தோர் என்ற பொருளில் அவர்கள் பத்தண்ணமார் என்று அழைக்கப்பட்டார்கள். கால்நடை வளர்த்து ஊரூராகத் திரிந்த ஆய் குலத்து பத்தண்ணமார் பின்னாளில் வதனமார் என்று அழைக்கப்பட்டார்கள். 
 
ஆயரின் தெய்வம் அவ்வை எனும் அன்னை. தங்கள் மூதன்னையரை அவ்வை என்று அழைக்கும் வழக்கம் ஆயருக்கு இருந்தது. சுவாதிக்கும் அவ்வைக்கும் ஒரே கொடி.  வதனமார் தங்கள் அதே கொடி கொண்ட சுவாதியின் நாடு பற்றிக் கேள்வியுற்று அங்கு சென்று தங்கலாயினர். வதனமாரோடு வந்த பாணர்கள் அவ்வையே சுவாதி, சுவாதியின் மறுபிறப்பே விசாகை என்று தெற்குவாவி மண்டலத்தில் பாடிப் பரவினார்கள். 

இறுதிக்காலத்தில் வேங்கை மரத்தடியில் துறவு பூண்டு விண்ணேகிய விசாகையை பத்தினித்தெய்வம் என்று போற்றினர் நாகத்தீவு மக்கள். விசாகையும் அவள் ஆறு சகோதரிகளும் மீண்டும் மீண்டும் பத்தினித்தெய்வங்களாகப் பிறப்பார்கள் என்று நாகத்தீவில் கதைகள் உலாவத்தொடங்கின. அந்தக்கதைகள் சொன்னபடியே நடந்தது. சப்தபத்தினியர் மீண்டும் உதித்தார்கள்.  ஏழு பத்தினியர் வாழ்க. ஏழு அன்னையர் வாழ்க. 

தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, நீங்கள் இனிதே கேட்டது உலகம் மறந்து போன ஏழு அன்னையரின் கதை.  தெற்குவாவி நாட்டை தோற்றுவித்த சுவாதியம்மையின் கதை. குமார தெய்வத்தின், உத்தியாக்களின்,  வதனமாரின், சத்பத்தினியரின் கதை. சுவாதியம்மையை போற்றுங்கள். அவள் வீற்றிருக்கும் நாதனை வெளியைப் பாடுங்கள். நான்கு திக்குகளையும் பாடுங்கள். இந்த நாகத்தீவைப் பாடுங்கள்.

(யாவும் கற்பனை)

 - இன்னும் எழுதப்படாத ஒரு நாவலின் முதல் அத்தியாயம்.
தகவலுக்காக:

புகைப்படங்கள்  - நாதனை சுவாதியம்மன் கோவில், வெல்லாவெளி.

நட்சத்திரங்களின் மறுபெயர்கள்
அச்சுவினி - பரிநாள், யாழ்
அனுராதா - அனுசம், முடப்பனை, தேள்
உத்தரம் - அரவம், பரிதிநாள்
உரோகிணி - சகடை, உருளை
மிருகசீரிடம் - மும்மீன், மதிநாள்
சுவாதி - விளக்கு, நுகத்தடி
விசாகம் - முறம்

ஆய் / அய / ஆர்ய  / ஐயன் - பிராமிக் கல்வெட்டுக்களில் பதவிப் பெயராகக் காணப்படும் ஒரு பெயர். இதன் பெண்பாற்பெயர்  அபி / அவ்வை. 

பத்த அல்லது பத: கிழக்கிலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் பெருமளவில் குறிப்பிடப்பட்ட ஒரு இனக்குழு. 

பத்து சகோதரர்கள் - கிழக்கு, தென்கிழக்கில் ஏறாவூர் முதல் கதிர்காமம் வரை ஆண்ட அரச வம்சத்தினர். இவர்களை பிராமிக்கல்வெட்டுக்கள் "தச பாதிய" என்கின்றன.

மணிநாகன்: ஈழத்து நாகர்களின் தெய்வமாக சொல்லப்படும் இறைவன்.  பிராமிக்கல்வெட்டுக்களிலும் குறிப்பு உண்டு.

குமாரர், உத்தியாக்கள், வதனமார்: கீழைக்கரை நாட்டார் தெய்வங்கள்
மேலும் வாசிக்க »

நாதனைச் சுவாதி

0 comments
"அண்ணன், சுவாதி அம்மன் கோயில் எவடத்த இருக்கு?" திடீரென்று நான் கை நீட்டி மறித்த படபடப்பில் சற்றுத்தூரம் சென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்த அவர் "சுவாதியம்மனோ? தெரியாதே?" என்றார். தாடியைச் சொறிந்தபடி "இது பிள்ளையார் கோயில். அம்மன் கோயில் இல்லே?" என்றார். நானும் "அதானே, இல்லே!" என்று இசைப்பாட்டு போட்டேன். இப்போது தலைக்கவசத்துக்கு மேலால் தலையைச் சொறிந்துவிட்டு "அந்தக் கடையடில கேட்டுப்பாருங்களன்" என்றபடி அவர் நகர, மீண்டும் கூகிள் வரைபடத்தை எடுத்து சரி பார்த்தேன்.  

நான் நின்றுகொண்டிருக்கும் இடம்  கல்லடிப் பிள்ளையார் கோவில் என்று தான் காட்டுகிறது. நிச்சயமாக சுவாதி அம்மன் கோவில் அருகில் தான் எங்கோ இருக்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் கூகிள் வரைபடத்தை நம்ப முடிவதில்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பதும், கூகிள் மெப் பிழையா இடம் காட்டாது என்பதும் இப்போது ஒத்த பழமொழிகள் ஆகிவிட்டன. 

கடையடியில் கேட்டேன். ஒரு முதியவர் எழுந்து வந்தார் "இந்தப் புள்ளையார் கோயிலுக்கு கொஞ்சம் முன்னுக்கு போங்க மகன். அங்கால தெரியிர மலையடிலான் கோயில் இரிக்கி" என்றார். நன்றி கூறி அந்த இடத்தில் போய் வண்டியை நிறுத்தினால், வயலுக்கு நடுவே பற்றைகள்  மண்டி வேம்பும் ஆலும் அடர்ந்து  வளர்ந்து நின்ற சிறிய பாறை ஒன்று அது. அக்கம் பக்கம் கோவிலுக்கான சிறு தடயத்தையும் காண முடியவில்லை. வீதியோரத்தில் வயலுக்குள் இருந்து இன்னொருவர் தலையைக் காட்ட அவரிடமும் கேட்டேன் "சுவாதியம்மன் கோயில்...?" 

"நீங்க நிக்கிரது தான்" என்றார் அவர். நான் சுற்றுமுற்றும் பார்க்க, அவர் சிரித்தார் "கோயிலெண்டு பெரிசா ஒண்டுமில்ல. மத்தப்பக்கம் போய் பாருங்க" என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் வயலுக்குள் இறங்கி மறைந்தார்.

இந்தச் சிறுகுன்றைத் தானா கோவில் என்கிறார்கள்? மெல்ல நடந்தேன். புதருக்குள் திரிசூலம் ஒன்று தென்பட்டது. ஓ, கோவில் தான். நம்பிக்கை பிறந்து விட்டது. தொடர்ந்து நடந்தால், மற்றப்புறம் அந்தக்குன்று சீராக இறங்கி செங்குத்தாக நின்றது. அங்கு ஒரு சிறுமேடை. முன்புறம் யாரோ வந்து தரையை நன்கு கூட்டிப்பெருக்கிய தடமும் பக்கத்திலேயே விளக்குமாறும் தெரிந்தது. கீழே கிடந்த பட்டுத்துணியொன்று காற்றில் படபடத்தது. மேடையில் திருநீறு சாற்றப்பட்ட ஒரு கல். அதன் முன்னே காய்ந்த பூக்கள். சுவாதியம்மன்!  ஒருகாலத்தில் மட்டக்களப்பு முழுவதும் போற்றிய நாதனைச் சுவாதியம்மன்!
சுவாதியம்மன் பாறை, நாச்சிமார் கல்லடி, நாதனை.

நான் நிற்குமிடம் கல்முனைக்கு  வடமேற்கே 20 கிமீ தொலைவில், மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள வெல்லாவெளி. வெல்லாவெளியில் இந்தக்கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு நாதனைவெளி என்று பெயர். இன்று நாதனைவெளி, வெல்லாவெளி எல்லாமே போரைதீவுப்பற்று பிரதேசத்தில் அடங்குகின்றன. ஆனால் வரலாற்றுக்கால மட்டக்களப்பில் நாதனை தனக்கென ஒரு வன்னியனை ஆட்சியாளனாகக் கொண்ட ஒரு தனித்த 'பற்று' பிரிவாக விளங்கியது. நாதனை வன்னியருக்கு குலதெய்வமாகவும், முழு மட்டக்களப்பும் ஆண்டுக்கொருமுறை கூடி வழிபடும் பெரும் தெய்வமாகவும் விளங்கியவள் தான் நாதனைச் சுவாதியம்மன்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிடைக்கும் குறிப்புக்களில் மட்டக்களப்பு வன்னியர் அனைவரிலும் நாதனைப்பற்று வன்னியனே முதன்மை பெற்றதாக சொல்லப்படுகிறது. மட்டக்களப்புத் தேசத்தில் நிகழ்ந்தது வன்னியர்களின் கூட்டாட்சி. அங்கு எப்போதும் ஒரே வன்னியர் முதனிலை பெற்றதில்லை; அல்லது ஐரோப்பியர் வருகையோடு முதன்மை என்பது வெவ்வேறு பேருக்கு கைமாறியிருக்கிறது. போர்த்துக்கேயர் வரும் போதும், அதற்கு முன்பும் சம்மாந்துறை வன்னியன் முதல் நிலையாளனாக விளங்கினான். ஒல்லாந்தர் காலத்தில் பழுகாமம் மற்றும் போரதீவு வன்னியர்கள் கை ஓங்கியதாகத் தெரிகிறது. பிரித்தானியர் காலத்தின் ஆரம்பத்தில் கரைவாகு மற்றும் மண்முனை வன்னியர்கள் இந்த முன்னிலையைப் பெற்றதோடு வன்னிமை ஆதிக்கம் மெல்ல மெல்ல மறைந்துபோகிறது.இந்த இடைக்காலத்தில் நாதனை வன்னியன் எந்தக் காலவேளையில் முதன்மை பெற்றிருந்தான் என்று தெரியவில்லை.  ஒல்லாந்தர் காலத்து நிர்வாகத்தில் நாதனையும் தெற்கே இறக்காமம் - மல்வத்தை உள்ளடங்கிய நாடுகாடும் இணைந்து தனித்த "நாதனை நாடுகாடுப்பற்று" பிரிவாக கருதப்பட்டன.  1804 பிரித்தானிய சிலோன் அறிக்கையில், வேடர் தலைவர் (Head of Vidos) என்ற குறிப்புடன் நாதனை வன்னியர் அம்பகப் பண்டார வேலப்பன் பட்டியலிடப்பட்டிருக்கிறார். அது பிரித்தானியரின் கீழ் பொலிச விதானையாகக் கடமையாற்றி, ஆனால் கண்டி அரசுக்கு விசுவாசமாக நடந்துகொண்டோரை துரோகிகளாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்தின் அறிக்கை.

1842இல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஒத்துழைப்போடு நாதனையில் வேடர்களுக்கென ஒரு கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுவாதி அம்மன் இந்த வேடர்களின் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட பழங்குடியினரின் தாய்த்தெய்வமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கீழைக்கரை நாட்டார் இலக்கியங்களில் அவள் பொதுவாக "வதனமார்" எனும் தெய்வங்களோடு  இணைக்கப்படுகிறாள். 

பாலாவதனன் மேடை, நாச்சிமார் கல்லடி, நாதனை.
ஆனால் நாதனையில் சுவாதியம்மன் வழிபாடு பற்றிய முதலாவது தகவல், வெஸ்லியன் மடத்தைச் சேர்ந்த பாதிரிமாரின் 1893ஆமாண்டு குறிப்பில் தான் கிடைக்கிறது. நாதனை, வன்னியரின் பூர்வீகக் குடியிருப்பு. ஆனால் அப்போது பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கு "நாச்சிமார் கல்லு" எனும் இடத்தில் பத்து நாட்கள் பிரமாண்டமான திருவிழா இடம்பெறுவது வழக்கம். அதில் மட்டக்களப்பின் எல்லாக் குலத்தினரின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள் என்று செல்கிறது அத்தகவல். 

சுவாதியம்மனோடு இணைத்துச் சொல்லப்படும் வதனமார் என்போர் குழுமாடு (காட்டுமாடுகளும் காட்டெருமையும்) பிடித்தோராகச் சொல்லப்படுகின்றனர்.  அவர்களது வழிபாட்டுக்கு நாதனையில் "வில்லை கட்டிச்சடங்கு" என்று பெயர். இன்றும் கால்நடைகளின் நலனுக்காக வதனமாரை வழிபடும் வழக்கம் கீழைக்கரையின் பல ஊர்களில் நிலவுகிறது.

விவசாயம், உணவுத்தேவைக்கு மாடுகள் அவசியமாக இருந்ததால், நாதனை போன்ற அடர்காடுகளில் அலைந்த குழுமாடுகள் இப்படி பிடித்து அடக்கப்பட்டு நாட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. உயிராபத்தும் வீரமும் நிறைந்த அருஞ்செயல் என்பதால், குழுமாடு பிடித்தல், இப்பகுதியை ஆண்ட சிற்றரசரின் ஆதரவில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலிருந்து இதைக் கேள்வியுற்று வந்து இவ்விழாவில் குழுமாடு பிடித்தபோது இறந்த வீரர்கள் பின்னாளில் வதனமாராக தெய்வ நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது மருவினாலும், இவ்விழா வில்லைகட்டுச் சடங்காக எஞ்சி நிற்கிறது. 

நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் தான் இந்த "நாச்சிமார் கல்லு". இன்று சுவாதியம்மன் பாறை என்றும் அழைக்கிறார்கள். அந்த பத்து நாள் திருவிழா இன்றில்லை என்றாலும் வெல்லாவெளி மாரியம்மன் சடங்கில் ஒருநாள், இந்த இடத்தில் சுவாதி அம்மன் வழிபாடும் வதனமார் சடங்கும் இடம்பெறுகிறது. வதனமார் சடங்கில் முக்கிய இடம் வகித்த பிள்ளையார் பாறை, சற்றுத்தள்ளி இன்று கல்லடிப் பிள்ளையார் கோவிலாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் சுவாதியம்மனுக்கு இங்கு தொடர்ச்சியான வழிபாடு இல்லை. நாதனை வன்னியரின் இரு பெண்குழந்தைகள் நாச்சிமார் கல்லில் இருந்த கல் வாயிலுக்குள் தவறுதலாக நுழைந்து அக்கதவு திறக்கப்படாமல் போனபின்னர் இங்கு வழிபாடற்றுப் போனது என்று ஒரு கதை சொல்கிறார்கள். இங்கிருந்து ஒன்றரைக் கிமீ தொலைவில் இருநூறாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வெல்லாவெளி மாரியம்மன் கோவிலிலேயே மக்கள் வணங்குகிறார்கள்.

வெல்லாவெளி முத்துமாரி அம்மன் கோவில்

கண்டி மன்னனும், மட்டக்களப்பு வன்னியரும் வருகை தர, கீழைக்கரை மக்களெல்லாம் திரண்டு குழுமிய பத்து நாள் திருவிழாவான நாதனை வில்லைகட்டிச் சடங்கு இன்றில்லை. அந்தச் சடங்கு இடம்பெற்ற நாச்சிமார் கல்லடியில், வயல்களின் நடுவில், காற்றில் ஆடும் பெருமரங்களின் மெல்லிய சலசலப்பில், வானமே கூரையாக அமைதியாக அமர்ந்திருக்கிறாள் சுவாதி அம்மன். எப்போதோ ஒருமுறை மட்டக்களப்பில் முதன்மை பெற்றிருந்த நாதனை வன்னியரின் குலதெய்வம். நேற்று முளைத்த எத்தனையோ கோவில்களைக் கொண்டாடுகிறோம். கோவில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அந்த வீதியில் சாதாரணமாகப் போய் வரும் பலருக்கே அவளை இன்று தெரியவில்லை. சரி தான். தெய்வங்களால் கூட சில நேரங்களில் காலத்தை வெல்ல முடிவதில்லை.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner