அரங்கம்: ஒரு நண்பனை இழத்தல்

0 comments

அது 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம். ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் அவர்கள் ஒருநாள் அழைப்பெடுத்தார். “மட்டக்களப்பிலிருந்து அரங்கம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வெளியாகின்றது. காத்திரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறார்கள். எழுதலாமே?” என்று சொன்னார். “எதை எழுதுவது அங்கிள்?” என்று கேட்டேன். “கிழக்கிலங்கையை மையமாக வைத்துத் தான் இந்தப் பத்திரிகை வெளியாகிறது. அது சார்பாக எதுவும் எழுதலாம்” என்றார் அவர். பொதுவாக என்று சொல்லிவிட்டதால், என் பிறந்தகம் தம்பிலுவில் பற்றியே ஒரு கட்டுரை எழுதி அவருக்கே மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். சில நாட்களிலேயே அரங்கத்தின் ஆசிரியர் திரு.பூபாலரெட்ணம் சீவகன் ஐயாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆக்கம் நன்றாயிருப்பதாகச் சொல்லி தொடர்ச்சியாக ஆக்கங்களை அனுப்புமாறும் கேட்டார். அன்று தொடங்கிய அரங்கத்தின் உறவு சுமார் ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்குப் பின் இன்று முற்றுப்புள்ளியை நெருங்கி வந்து நிற்கிறது. 


சமகாலத்தில் செய்தி ஊடகமொன்றை நடத்துவது மிகச்சிக்கலான ஒரு விடயம். அது மக்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கென தொடர்ச்சியான விளம்பர வழங்குநர்கள், புரவலர்கள் இருக்கவேண்டும். பக்கச்சார்பற்ற ஊடக தர்மத்தை அந்த செய்தியூடகம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது மக்கள் வரவேற்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் வர்த்தகநாமம் நன்கு பரவலாக வேண்டும். இவை ஒரு ஊடகம் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடிப்படையான சில தேவைப்பாடுகள். 

ஆனால் சமகாலம், செய்தியூடகங்களுக்கு மிகச்சவாலான ஒரு காலம். இன்று சமூக வலைத்தளங்கள் சம்பவமொன்று இடம்பெற்ற அடுத்த கணத்திலேயே அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லுமளவுக்கு அதிவிரைவாக இயங்குகின்றன. இன்னொரு பக்கம் இணையம் எல்லாத் துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி விட்டது. செய்தியூடகங்களில் தங்கியிருக்கவேண்டும் என்ற கட்டாயம் இன்று யாருக்கும் இல்லை. இணையத்துக்குச் செல்லும் எல்லோருக்கும் எல்லாமும் எந்த நிமிடத்திலும் தெரிந்துவிடும். இந்த நிலையில் ஏற்கனவே தங்களை நிலைப்படுத்தி விட்ட காட்சியூடகங்களும் வானொலியூடகங்களும் கூட பலத்த பிரயாசைப்பட்டு தம்மை நேயர்கள் கைவிடக்கூடாது என்பதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன. 

இவற்றின் நிலைமையே இப்படி இருக்க, இதழ் ஊடகங்களின் நிலைமை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் அச்சடிக்கும் பத்திரிகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை பல பத்திரிகையாசிரியர்கள் பெருமூச்சுடன் தான் சொல்லி வருகிறார்கள். பல பத்திரிகைகள் பெருமளவு எண்ணிம (டிஜிட்டல்) உலகுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போது அரங்கமும் அதே இக்கட்டான நிலைமைக்கே வந்து சேர்ந்திருக்கிறது. 

இப்படி ஏனைய இதழியல் ஊடகங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னாலும், அரங்கத்தை பொதுமைப்படுத்தி கருத்துக் கூறமுடியாது. அரங்கத்தின் ஒரு கட்டுரையாளனாகவும், தொடர்ச்சியான வாசகனாகவும் நான் கண்டுவருகின்ற தனித்துவங்கள் பல. 

முதலாவது, அரங்கம் இதழ், இறுதிவரை இலவச இதழாகவே கிடைத்து வந்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் இப்படி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 80 இதழ்கள் இலவசமாக வெளியான வார இதழ் என்ற பெருமை, நானறிந்தவரையில் அரங்கத்துக்கே உண்டு. “இலவசமாகக் கிடைத்தால் நம் மக்களுக்கு அதன் அருமை தெரியாது. பெரிய அளவில் வேண்டாம். இரண்டு ரூபா, ஐந்து ரூபா என்றாவது விலை வையுங்கள்” என்று அரங்கத்தின் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்த பலரில் நானும் ஒருவன். அவர் புன்னகையோடு மறுத்திருக்கிறார். சில வாரங்களில் அதிக வண்ணப்பக்கங்களுடனும், சில இதழ்களுக்கு எந்தவித விளம்பரமே கிடைக்காமலும் கூட அரங்கம் வெளியாகியிருக்கிறது. இதழியல் துறையில் அதை ஒரு சாதனை என்று தான் சொல்லவேண்டும். 

இரண்டாவது தனித்துவம், அதன் உள்ளடக்கம். முன்பே சொன்னது போல், வாசகரைக் கவர்வதற்காக எல்லா ஊடகங்களுமே தரமிறங்கி விட்டன. இணையத்தில், தமிழகத்தின் - இலங்கையின் பிரபல ஊடகங்கள் உட்பட “இந்த நபர் செய்த காரியத்தைப் பாருங்கள்”, “ஒரு பெண் வீதியில் செய்த காரியம்” என்றெல்லாம் கீழ்த்தரமான தலைப்புக்களை இட்டே நேயர்களை கவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. காட்சியூடகங்களோ செய்திகளுக்காக நாவைத் தொங்கப்போட்டு அலைவதைக் காணலாம். இருபத்து நான்கு மணிநேரச் செய்திச் சேவைகள் செய்திகளுக்காக அலைவதும், செய்தியொன்றைக் கண்டுவிட்டால், அதைத் தூக்கிப்பிடித்து ஊதிப் பெருப்பித்துக் காட்டுவதும், பொதுமக்களின் கவனத்தை உருப்படியான வேறு காரியங்கள் மீது திசை திருப்பாது தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயல்வதுமாக, பார்வையாளர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஊடக அறத்தின் எல்லையைக் கண்டு அதற்குள் நிற்பவை மிகச்சில ஊடகங்களே. சந்தேகமின்றி அவற்றில் அரங்கம் ஒன்று. 

அரங்கத்தில் சில பக்கங்கள் தான் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அது வார இதழ் என்பதால், செய்திகளை தேவையற்ற சூடு தவிர்த்து, உள்ளதை உள்ள விதத்தில் பதிவு செய்து கொடுக்க, அரங்கத்தால் இயன்றது. அதன் எஞ்சிய பக்கங்கள் ஒரு சேகரிப்பு ஆவணமாகப் பேணும் வகையிலேயே அதன் தரத்தை பேணி வந்தன. பொதிசோற்றைச் சுற்றுவதற்கு பழைய அரங்கம் பத்திரிகையைப் பயன்படுத்தியதற்காக அங்கிருந்த பெண்மணி ஒருவர் வெகுண்டு அந்த தாளைப் பறித்து பத்திரமாக சேமித்து வைத்த சம்பவமொன்றை நண்பரொருவர் மூலம் அறிந்தேன். 

பண்பாடு, சமூகவியல், அரசியல், பொருளாதாரம் முதலான பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு கோணங்களில் ஆய்ந்த பேராசிரியர். சி.மௌனகுரு, செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், கலாபூஷணம் அரங்கம் தேவராஜா, தமிழ்க்கவி, சரவணன், படுவான் பாலகன், எழுவான் வேலன், போன்றோரின் தொடர் கட்டுரைகள் அரங்கத்தின் வாசகர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், ஒரு கலை இலக்கிய இதழாகவும் அரங்கம் இயங்க முயன்றிருந்தது என்று சொல்லலாம். 

மூன்றாவது சிறப்பம்சம், அரங்கத்தின் வாசக அடைவு. எங்கள் ஊரில் சிகையலங்காரக் கடையொன்றில் அரங்கம் இதழ் விநியோகிக்கப்பட்டு வந்தது. அரங்கம் வெளிவராத வாரங்களில், அல்லது வந்து சேரத் தாமதமாகும் வாரங்களில் “இந்தக்கிளம அரங்கம் வரல என” என்று தேடி விசாரிக்குமளவு, அந்தக் கடை உரிமையாளரையும் வாடிக்கையாளர்களையும் அது வசீகரித்திருந்தது. அரங்கம் பத்திரிகையை நன்கறிந்த பலர், கிழக்கின் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். இலவசமாக அரங்கத்தைத் தொடர்வதற்கு “வாசிப்பில் ஆர்வம் இருந்தும், பத்திரிகையொன்றை பணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் நம் மக்கள்” என்று சீவகன் ஐயா அடிக்கடி காரணம் சொல்வார். பெரும்பாலும் பின்தங்கிய, பொருளாதார வசதிகள் குறைந்த கிராமங்களையே குறிப்பிடத்தக்களவு குறிவைத்திருந்ததை ஒரு பத்திரிகையாக அதன் வெற்றி என்றே கூறவேண்டும். 

அரங்கத்தின் நான்காவது மற்றும் முக்கியமான தனித்துவம், அது கிழக்கின் குரலாக ஒலித்தது என்பதே. பண்பாட்டு - அரசியல் தளத்தில் தங்கள் விசேடமான பிரச்சினைகள் சிங்களத்தரப்பாலோ வடக்குத் தமிழர் தரப்பாலோ முழுமையாக புரிந்துகொள்ளப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டு கீழைக்கரை அறிவுஜீவிகளால் அடிக்கடி முன்வைக்கப்படுவதுண்டு. இந்த முரண் குரலை எழுப்பிய பெரும்பாலானோர், அந்த இடைவெளியை நிரப்பாததில் தம் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டதே இல்லை. 

அரங்கம் அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறைகளை பிரயோகித்தது. “கிழக்கு மண் குறித்து பிறர் பேசத்தயங்கும் விடயங்களை இங்கு எவரும் பேசலாம்” என்று அனைவரையும் அழைத்தது. இனநல்லிணக்கத்தை முக்கியமான தொனிப்பொருளாக்கிக் கொண்டது. அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் கிழக்கை மையப்படுத்திய ஆய்வுப்பார்வையில் வெளியான பல கட்டுரைகள் வாசகர்களைச் சிந்திக்கவைத்தன. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் கீழைக்கரைக்காக ஒலித்த கவனிக்கத்தக்க முக்கியமான ஊடகக்குரல் என்று இன்று அரங்கத்தையே சுட்டிக்காட்ட முடியும். 

இதன் மறுபக்கமாக அரங்கம் தன் வாசகத்தளத்தை மலையகம், கொழும்பு, புத்தளம், வடக்கு என்று விரிவாக்க முயன்றபோது, தனது கிழக்குச்சார்பு அம்சங்களால் அது பிரதேசவாத முத்திரை குத்தப்பட்டதை நான் அறிவேன். ஆனால் கிழக்கு இன்ன இன்ன விடயங்களில் ஏனைய தமிழ்பேசும் நிலங்களுடன் வேறுபடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகள் அதில் வெளியாயினவே தவிர, ஒரு பொது கற்பனை எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு அந்த எதிரியால் தாம் ஒடுக்கப்படுவதாக அல்லது புறக்கணிக்கப்படுவதாக நீதி கோரும் பாணியிலான கட்டுரைகளை அரங்கத்தில் காணமுடிந்ததில்லை. அரங்கம் மாற்றுத்தரப்புகளை வரையறுத்துக்கொண்டு அவர்களுடன் போராடுவதற்காக எழுப்பப்பட்ட அறைகூவல் அல்ல; அது குரலற்றவர்களுக்காக எழுப்பப்பட்ட ஒரு மாற்றுக் குரல். அவ்வளவு தான். 

அரங்கம் சந்தித்த சவால்களும் அதிகம். இலவச இதழான அரங்கத்துக்கு விளம்பரதாரர்களை சம்பாதித்துக்கொள்ளும் விடயத்தில் அரங்கத்தின் ஆசிரியர் முகங்கொடுத்த இடர்ப்பாடுகள் பெரிதும் வெளியே பேசப்படாதவை. ஐநூறு பேர் கிள்ளிக்கொடுத்தால் மலையைப் பிளக்க முடியும். ஆனால் ஓரிருவர் அள்ளிக்கொடுப்பதில் தான் இன்று வரை மலைகள் பிளக்கப்படுகின்றன. வரலாற்றின் மகத்தான பக்கங்கள் அப்படி எழுதப்பட்டவை தான். அரங்கம் இன்னொரு மலை பிளந்தெழுந்த விருட்சம். 

தனிப்பட்ட ரீதியில் அரங்கத்துக்கு நான் பல விதங்களில் கடப்பாடு கொண்டவன். ஒரு கட்டுரையாளனாக, எழுத்தாளனாக, என் எழுத்தை மெருகூட்டவும், ஆய்வுப்பாணியை வளப்படுத்தவும் அரங்கம் எனக்கு உதவியிருக்கிறது. பழைய மட்டக்களப்பு நாடு பற்றிய காலனித்துவ கால குறிப்புகள் இதுவரை யாராலும் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. எனவே அவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட அரங்கக் கட்டுரைகள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அரங்கம் சம்பாதித்துத் தந்த வாசக சொந்தங்கள் அனேகம். அரங்கத்தின் வாசக அன்பரான புத்தளத்தைச் சேர்ந்த இஸ்தார் அவர்கள் இன்றும் தொடர்பில் இருக்கிறார். அறிஞர்கள், பெரியவர்களுக்கு அரங்கத்தை விநியோகிக்கும் சாக்கில், அவர்களுடனான நெருக்கத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி அரங்கம் எனக்குத் தந்தவை பல. 

குறிப்பிட்ட வாரம் எழுத ஒன்றுமே கிடைக்கவில்லை என்றாலும், சீவகன் ஐயாவின் அன்புத்தொல்லை காரணமாக சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்படி அவசரமாக எழுதப்பட்ட பல கட்டுரைகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன. அவரது ஊக்குவிப்பாலும் அன்பான நிர்ப்பந்தத்தாலும் எழுதப்பட்ட கிழக்கிலங்கை வரலாறு, பண்பாடு தொடர்பான சில கட்டுரைகள் அவற்றின் உள்ளடக்கத்தாலும், புதுமையாலும் என்னையே கர்வம் கொள்ள வைத்தவை. என்றேனும் ஒருநாள் அவை கிழக்கிலங்கை வரலாற்றில் பேசப்படுமானால், அதற்குரிய முழு கௌரவமும் பாராட்டும் அரங்கம் இதழுக்கும் சீவகன் ஐயாவுக்குமே போய்ச் சேரவேண்டும். 

இலவசம், தரம், இன்றியமையாமை முதலான சிறப்பம்சங்களுடன் வீறுநடை போட்ட அரங்கத்துக்கு எது நடக்கக்கூடாது என்று அஞ்சினேனோ அது நடந்து விட்டது. வாசிப்பை நேசிப்பவர்களுக்குத் தெரியும். ஒரு பத்திரிகையை இழப்பதென்பது ஒரு நல்ல நண்பனை இழப்பதைப் போல. அச்சுப் பதிப்பு நின்றுவிட்டாலும் இணையத்தில் அரங்கம் தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அது விட்டுச்செல்லும் இடைவெளியை இனி யார் நிரப்புவது என்பது பெரிய கேள்வி. காலத்திடம் பதில் இருக்கும் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான். அரங்கத்துக்கு ஒரு நண்பனின் பிரியாவிடைகளும் அன்பும்.
மேலும் வாசிக்க »

முருகனுக்கு மச்சான் வள்ளுவர்!

0 comments
 

அது கந்த சஷ்டி நோன்புக்காலம். அருணகிரி நாதரின் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அகப்பட்ட நூல் மயில் விருத்தம். அருணகிரிநாதர் பாடிய பல நூல்களில் ஒன்று இது. விருத்தப்பாவில் அமைந்த இந்த நூலின்  ஒவ்வொரு விருத்தமும் முருகனின் வாகனமான மயிலைப் புகழ்ந்து முடிவதால் இதன் பெயர் "மயில் விருத்தம்". அதன் "சந்தான புஷ்ப பரிமள" என்று துவங்கும் முதலாவது விருத்தம்  "அருணகிரிநாதர்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸின் கணீர்க்குரலில் இடம்பெற்றிருக்கிறது. 50ஸ் கிட்ஸ், 60ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானது அந்தப்பாடல் என்பதால், அப்பாவின் உபயத்தில் எனக்கும் அந்தப் பாடல் ஓரளவு கேட்டுப் பழகி விட்டது.  


ஆனால் முழுப்பாடலையும் இந்த முறை தான் முதன்முதலாகப் பாடுகிறேன்.  பொருளை அறியாமல் தமிழை ஓதுவதில்லை என்ற என் கொள்கைப்படி, அருணகிரியின் சந்த அழகை இரசித்தபடியே அடிக்கடி பொருளையும் புரட்டிக் கொண்டிருந்தேன். மூன்றாவது விருத்தம் தான் திடுக்கிட வைத்தது.

முருகனின் மயில் தன் அடியைத் தூக்கி வைக்கும் போது, பாதாளம் அதிர அண்ட முகடுகள் பெயர்கின்றன. ஆதிசேடனது முடியும், எட்டுத்திசை யானைகளும் நடுங்குகின்றன.  சிவபெருமானும் உமாதேவியும் வைத்த கண் எடுக்காமல் பார்க்க பலவிதமாக ஆடி மகிழ்கின்றது இந்த மயில். மாதானுபங்கியின் சகோதரியும், மான்மகளுமான  வள்ளியம்மையின் சிலம்பணிந்த பாதங்களைத் தலையில் சூடிக்கொள்ளும் முருகன்,  நீலோற்பலங்கள் மலரும் தணிகை மலையில் வாழ்பவன், அசுரரின் படைகள் சிதைய நடந்தது அவனது பச்சைத்தோகைகள் கொண்ட மயில். (விரிவான பொருளை இங்கே நீங்கள் படிக்கலாம்)

ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே
ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனும் மாலது சகோதரி
மகீதரி கிராத குலி
மாமறை முனி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்
பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படை நிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

குடும்பத்தில் சண்டை என்றால் முதலில் சரண்டர் ஆகவேண்டியது கணவன் தானே? ஊடலைத் தீர்க்க முயலும் போது, மனைவியின் காலில் விழுவதே பாவப்பட்ட ஆண்வர்க்கத்தின் தலைவிதி. மனிதர்கள் மட்டுமல்ல இப்படி உமையின், இராதையின், வள்ளியின் கால்களில் சிவனும் கண்ணனும் முருகனுமே விழுந்து கிடப்பதை பக்தி இலக்கியங்கள் பாடித் தீர்த்திருக்கின்றன. ஆனானப்பட்ட  இறைவர்களுக்கே இந்தக் கதி என்றால்? சரி, எனக்கேன் வம்பு. நான் பாட்டின் பொருளைத் தான் சொல்லவந்தேன்.  வள்ளியின் ஊடல் தீர்க்க முருகன் அவள் காலில் விழுந்ததை "வள்ளி மணி நூபுர மலர் பாதாரவிந்த சேகரன்" - வள்ளியின் சிலம்பணிந்த தாமரைப் பாதங்களைத் தலையில் தாங்கியவன் என்று இங்கு பாடுகிறார் அருணகிரியார்.

இதற்கு அடுத்ததாக கொஞ்சம் கவனத்தை ஈர்க்கின்ற முக்கியமான வரி "மாதானுபங்கி எனும் மாலது சகோதரி". மாதானுபங்கி யாரென்று தெரியுமா? திருவள்ளுவர்! திருவள்ளுவர் எனும் பெருமகனாரின் சகோதரி வள்ளி!

'திருவள்ளுவமாலை' எனப்படும் நூல் 12 தொடக்கம் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகச் சொல்லப்படுவது. தமிழின் முதலாவது திறனாய்வு நூல் என்று சிலரால் குறிப்பிடப்படுகின்ற இது, வள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் 55 பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்.  நல்கூர் வேள்வியார் எனும் புலவரால் பாடப்பட்ட இதன் இருபத்தோராம் பாடல் இப்படிப் பாடுகிறது.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு


"உபகேசியாகிய நப்பின்னையை மணந்தவன் வடமதுரையின் அரசனான கண்ணன். அவன் அந்த வடமதுரைக்கு அச்சு என்றால், மாதானுபங்கியை கூடல் நகர் - தென்மதுரைக்கு அச்சு என்று சொல்லலாம்" என்பது இப்பாடலின் பொருள். இந்தப்பாடலில் தான் வள்ளுவரின் இன்னொரு பெயர் மாதானுபங்கி என்பது தெரியவருகிறது. 

உண்மையில், இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பாடல் கூட. ஏனெனில் இங்கு வரும் 'உபகேசி' என்பது தமிழ் மரபில் கண்ணனின் காதலியாகச் சொல்லப்படும் நப்பின்னை தான் என்று உறுதியாகச் சொல்வதற்கு வேறெந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இந்தச் செய்யுளைக் கொண்டு வள்ளுவருக்கு நம்மவர்கள் 'செந்நாப்போதார்' என்ற ஒரு பெயரையும் சொல்வார்கள். (வேறெங்கும் வள்ளுவருக்கு 'செந்நாப்போதார்' என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை). பாடலின் பொருளைப் பார்த்தால் - மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடல் - "குற்றமற்ற நிலத்தில் விளைந்த சிவந்த நாக்குகள் போன்ற மொட்டுகள் மிதக்கும் வைகை பாயும் கூடல்" என்று பொருள் கொள்வதே பொருத்தம் போல் படுகிறது. 


மாதா+அனுபங்கி, என்றால் தாயைப் போல பேரன்புடையவர் என்று பொருள். மாதானுபங்கி என்று அருணகிரிநாதர் பாடும் பெயர் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் இல்லாமல், இங்கு மட்டுமே பயன்படுவதால், மாதானுபங்கி வள்ளுவர் தான் என்றே கொள்ளலாம். அப்படி என்றால், அருணகிரியார் சொல்வது போல, வள்ளுவர் வள்ளியின் சகோதரரா? முருகனுக்கு மச்சானா வள்ளுவர்?

ஆம். அப்படிச் சொல்கின்ற தொன்மங்கள் தமிழில் வழக்கில் உள்ளன.  ஞானாமிர்தம் (12ஆம் நூற்றாண்டு), கபிலர் அகவல் (18 - 19ஆம் நூற்றாண்டு) எனும் இரு நூல்கள் இந்தத் தொன்மத்தை உறுதிப்படுத்த நமக்கு உதவுகின்றன. ஞானாமிர்தத்தில்  யாளி என்ற அந்தணனுக்கும் புலையர் குலப்பெண்ணுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்த கதை (பாடல் 33) குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எழுவரும்,  திருவள்ளுவர், அதிகமான், கபிலர், ஔவை, உப்பை, முறுவை, வள்ளி என்று உரை கூறப்பட்டிருக்கிறது. இதே கதை பிற்கால நூலான கபிலரகவலில் சற்று வேறுபட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதி ஒரு புலைக்குலப் பெண். பகவன் ஒரு அந்தணன். இருவரும் தமக்குப் பிறக்கும் குழந்தைகளை பிறக்குமிடத்திலேயே விட்டுச்செல்வதென்று முடிவெடுத்து ஊரூராகச் செல்கிறார்கள்.  அவர்களுக்கு உப்பை, உறுவை, வள்ளுவர், வள்ளி, அதிகன், கபிலர், ஔவை ஆகிய ஏழு பிள்ளைகள் முறையே சலவைத்தொழிலர், கள் இறக்குநர், பறைத்தொழிலர், குறவர், அரசன், அந்தணர், பாணர் வீடுகளில் பிறந்தார்கள். உப்பையும் உறுவையும் தான் காளியம்மனும் மாரியம்மனும். தம் ஒப்பந்தப்படி ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் பிரிந்த போது அவர்களுக்கு குழந்தைகள் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த பாடல்களும் கபிலர் அகவலில் உள்ளன. இந்தக் கதைகளின் படி, மாரி, காளி, வள்ளி முதலிய அம்மன்களும் வள்ளுவர், ஔவை ஆகியோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆகிறார்கள். 

ஞானாமிர்தமும் கபிலர் அகவலும் சொல்வது பிற்காலக் கட்டுக்கதைகள் தான். இவற்றுக்கு எந்தவித வரலாற்றுப் பெறுமானமும் இல்லை. ஆனால் தொன்மங்கள் என்ற வகையில் இவற்றுக்கென ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஞானாமிர்தத்துக்கும் கபிலர் அகவலுக்கும் இடைப்பட்ட காலத்தில் (14 - 15ஆம் நூற்றாண்டு) வாழ்ந்த அருணகிரியாரின் பாடலொன்றைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் நமக்கு தேவைப்படுகிறது. வள்ளி எப்படி மாதானுபங்கியின் சகோதரி என்றால், அவள் வள்ளுவரோடு உடன்பிறந்த அறுவரில் ஒருத்தி. இந்தக் 'கதை' தெரியாவிட்டால் அது யார் மாதானுபங்கி? அவருக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போய் உட்கார வேண்டியது தான்.

ஆங். கடைசியாக ஒன்று. தொன்மங்களை அறிந்திருப்பது நல்லது தான். ஆனால் அவற்றின் இலக்கியப்பெறுமானத்தோடு அவற்றை நிறுத்தி வைப்பது நலம். இதை வைத்து வள்ளுவர் இந்தக்காலம், வள்ளியின் காலம் இத்தனையாம் ஆண்டு. காளி, மாரி வழிபாடெல்லாம் இத்தனையாம் ஆண்டுகள் தான் தொடங்கின  என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு இறங்கினோமென்றால் விளைவு விபரீதமாகிவிடும். ஒரு தகவலை வரலாறாக மாற்ற முன்பு அதன் நம்பகத்தன்மையையும் நிகழ்தகவையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். வள்ளுவனே சொல்லி வைத்தது தான்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மேலும் வாசிக்க »

வள்ளுவ நெறி - 01

0 comments
வள்ளுவர் பற்றி மூன்று விடயம் சொல்லவேண்டும்.


ஒன்று, கடவுள் வாழ்த்தில் தன் கடவுள் இன்னார் தான் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அதில் கூறப்படும் வரைவிலக்கணங்கள், ஒரேநேரத்தில் சைவத்துக்கும்  சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் பொருந்துவன தான். அவரே 'தன் இறைவன் இன்னார்' என்று வெளிப்படையாகக் கூற விரும்பாத போது, அவரது இறைவன் இவர் தான் என்று வாதிடுவது பயனற்ற செயல்.

இரண்டு, வள்ளுவருக்கும் நமக்கும் அண்ணளவாக இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம்.  அன்றுள்ள சைவம் அல்ல, இன்றுள்ளது. அன்றுள்ள சமணம் அல்ல இன்றுள்ளது.  இன்றுள்ள சைவம், வைணவம், சமணம், பௌத்தம் இவையெல்லாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் அடைந்த மாற்றம் மிகப்பெரியது. அதைச் சரிவரத் தெரியாமல் -  புரியாமல், வள்ளுவரின் சமயத்தைத் தீர்மானிக்க முடியாது. அப்படி கஷ்டப்பட்டு தீர்மானிக்க அவசியமும் இல்லை. 

மூன்று, என் தனிப்பட்ட கருத்து. வள்ளுவர் தமிழின் சொத்து. தமிழன் எவனும் அவரைத் தன் சமயத்தவனாக உரிமைகோர முழு உரிமையும் உண்டு - அதற்கு பண்பாட்டிலும் மரபிலும் இடம் இருக்கும் பட்சத்தில்! வள்ளுவரைக் குந்தகுந்தாசாரியார் என்று சமணரும், மாதானுபங்கி என்று சைவரும் தத்தம் மரபில் போற்றுவதற்கு உரிமை உண்டு. அவரவர் தத்தம் சமயத்தவராக அவரைக் கருதி இன்புற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தமது உரிமையை நிலைநாட்ட மாற்றுச் சமயத்தாரை வாதுக்கு அழைக்கவோ மற்றைய சமயத்தவர் அல்லர் என்று நிரூபிக்கவோ வேண்டிய தேவை தற்போது இல்லை என்பதே நிதர்சனம். சமயம் என்பது உணர்வுபூர்வமான விடயம். வள்ளுவரின் சமயம் தெரியத்தான் வேண்டுமென்றால், இந்தக் காலத்தில் நடுநிலை நின்று ஆய்ந்தறியக் கூடிய ஒரு ஆய்வாளன் கையில் அந்தப்பணியை ஒப்படைத்து இரு தரப்பாரும் ஒதுங்கி நிற்பதே அழகு. ஆனால் இங்கு இரு தரப்பினர் அல்ல; தொடர்பே இல்லாத மாற்றுமதத் தரப்புகள்,  அரசியல் கொள்கைவாதிகள், இறைமறுப்பாளர்கள் இவர்களெல்லாம் கூட வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறார்கள்! பாவம் வள்ளுவன்!

உண்மையில், வள்ளுவரை சைவரோ -  சமணரோ உரிமை கோருவதை எதிர்ர்த்தரப்பினரோ அல்லது இன்னொரு தரப்பினரோ எக்காரணம் கூறியும்  கேள்வி கேட்க இயலாது. 'இயேசுவை நீங்கள் ஈஸா (அலை) நபியாக ஏற்கக் கூடாது' என்று கிறிஸ்தவர் இஸ்லாமியரிடம் கூறமுடியாது என்பது போல! 'புத்தரை நீங்கள் திருமாலின் அவதாரமாகக் கொள்ளக்கூடாது' என்று பௌத்தர் வைணவரிடம் வாதாட முடியாது என்பது போல! எந்த மரபு இப்படி மதங்கடந்த உறவுகளை அனுமதிக்கிறதோ, அதே மரபே வள்ளுவரை சைவரும் சமணரும் ஒரே நேரத்தில் சொந்தம் கொண்டாடவும் அனுமதிக்கும். 

சமண நூல்களெதையும் நான் படிக்கவில்லை என்பதால், அவர்களிடம் திருக்குறளின் தாக்கத்தை  அளந்துகூற முடியாது. எனினும் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளதை சான்றாகக் கொள்ளலாம். சிலம்பு சமண நூல் என்பது உண்மையானால்  அதன் காலத்திலிருந்தே (பொபி 1 - 5ஆம் நூற்.) திருக்குறளுக்கு சமணத்தில் தார்மீக உரிமை உண்டு. (சிலம்பும் திருக்குறள் போலவே மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய நூல் என்பதால் இதில் மேலதிக வாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை).

எனினும் சைவத்துக்கு திருக்குறளிலுள்ள தார்மீக உரிமை சுந்தரரின் தேவாரத்தில் (அண்ணளவாக பொ.பி 812 - 844) முதன்முதலாக முனைப்பாகத் தெரிகிறது. திருநெல்வாயில் அரத்துறை மீதான சுந்தரர் பதிகத்தின் 2,3,4, 7ஆம் பாடல்களில் பொறிவாயில் ஐந்தவித்தான், பிறவிப் பெருங்கடல் நீந்துவார், உறங்குவது போலும் சாக்காடு, அகரமுதல எழுத்தெல்லாம் ஆகிய நான்கு குறள்களும் எடுத்தாளப்பட்டுள்ளன (திருமுறை 7: 3 )  தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் மெய்யியலுக்குப் பிரமாண நூல்களில் ஒன்றான திருக்களிற்றுப்படியார்ம, சைவ ஔவையாரின் பாடல்கள், மயிலை  வள்ளுவர் கோவில் முதலியன பிற்கால திருக்குறள் ஆதரவுச் சைவச் சான்றுகள். 

பக்கச்சார்பற்ற ஆய்வுகளும் ஒழுங்கான காலவரிசைப்படுத்தலும் தொடர்ந்தால் வள்ளுவர்  சமணரா சைவரா என அறியலாம். ஆனால் அதில் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளுவரின் சமயத்தைத் ஆராய்பவர்கள், அதற்கு முன் குறளின் படி வாழ்க்கையை நடாத்த முயலலாம். திருக்குறளை நடைமுறையில் கொண்டாடத் தெரியாமல்  அவர் மதத்தை அறிந்து அல்லது மதத்தை மறுத்து அதில் இன்பம் காண்போர் போல் பயனற்றவர்கள் யாருமில்லை. ,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (355)
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner