அரங்கம்: ஒரு நண்பனை இழத்தல்


அது 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம். ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் அவர்கள் ஒருநாள் அழைப்பெடுத்தார். “மட்டக்களப்பிலிருந்து அரங்கம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வெளியாகின்றது. காத்திரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறார்கள். எழுதலாமே?” என்று சொன்னார். “எதை எழுதுவது அங்கிள்?” என்று கேட்டேன். “கிழக்கிலங்கையை மையமாக வைத்துத் தான் இந்தப் பத்திரிகை வெளியாகிறது. அது சார்பாக எதுவும் எழுதலாம்” என்றார் அவர். பொதுவாக என்று சொல்லிவிட்டதால், என் பிறந்தகம் தம்பிலுவில் பற்றியே ஒரு கட்டுரை எழுதி அவருக்கே மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். சில நாட்களிலேயே அரங்கத்தின் ஆசிரியர் திரு.பூபாலரெட்ணம் சீவகன் ஐயாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆக்கம் நன்றாயிருப்பதாகச் சொல்லி தொடர்ச்சியாக ஆக்கங்களை அனுப்புமாறும் கேட்டார். அன்று தொடங்கிய அரங்கத்தின் உறவு சுமார் ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்குப் பின் இன்று முற்றுப்புள்ளியை நெருங்கி வந்து நிற்கிறது. 


சமகாலத்தில் செய்தி ஊடகமொன்றை நடத்துவது மிகச்சிக்கலான ஒரு விடயம். அது மக்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கென தொடர்ச்சியான விளம்பர வழங்குநர்கள், புரவலர்கள் இருக்கவேண்டும். பக்கச்சார்பற்ற ஊடக தர்மத்தை அந்த செய்தியூடகம் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது மக்கள் வரவேற்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் வர்த்தகநாமம் நன்கு பரவலாக வேண்டும். இவை ஒரு ஊடகம் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடிப்படையான சில தேவைப்பாடுகள். 

ஆனால் சமகாலம், செய்தியூடகங்களுக்கு மிகச்சவாலான ஒரு காலம். இன்று சமூக வலைத்தளங்கள் சம்பவமொன்று இடம்பெற்ற அடுத்த கணத்திலேயே அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லுமளவுக்கு அதிவிரைவாக இயங்குகின்றன. இன்னொரு பக்கம் இணையம் எல்லாத் துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி விட்டது. செய்தியூடகங்களில் தங்கியிருக்கவேண்டும் என்ற கட்டாயம் இன்று யாருக்கும் இல்லை. இணையத்துக்குச் செல்லும் எல்லோருக்கும் எல்லாமும் எந்த நிமிடத்திலும் தெரிந்துவிடும். இந்த நிலையில் ஏற்கனவே தங்களை நிலைப்படுத்தி விட்ட காட்சியூடகங்களும் வானொலியூடகங்களும் கூட பலத்த பிரயாசைப்பட்டு தம்மை நேயர்கள் கைவிடக்கூடாது என்பதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன. 

இவற்றின் நிலைமையே இப்படி இருக்க, இதழ் ஊடகங்களின் நிலைமை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் அச்சடிக்கும் பத்திரிகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை பல பத்திரிகையாசிரியர்கள் பெருமூச்சுடன் தான் சொல்லி வருகிறார்கள். பல பத்திரிகைகள் பெருமளவு எண்ணிம (டிஜிட்டல்) உலகுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போது அரங்கமும் அதே இக்கட்டான நிலைமைக்கே வந்து சேர்ந்திருக்கிறது. 

இப்படி ஏனைய இதழியல் ஊடகங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னாலும், அரங்கத்தை பொதுமைப்படுத்தி கருத்துக் கூறமுடியாது. அரங்கத்தின் ஒரு கட்டுரையாளனாகவும், தொடர்ச்சியான வாசகனாகவும் நான் கண்டுவருகின்ற தனித்துவங்கள் பல. 

முதலாவது, அரங்கம் இதழ், இறுதிவரை இலவச இதழாகவே கிடைத்து வந்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் இப்படி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 80 இதழ்கள் இலவசமாக வெளியான வார இதழ் என்ற பெருமை, நானறிந்தவரையில் அரங்கத்துக்கே உண்டு. “இலவசமாகக் கிடைத்தால் நம் மக்களுக்கு அதன் அருமை தெரியாது. பெரிய அளவில் வேண்டாம். இரண்டு ரூபா, ஐந்து ரூபா என்றாவது விலை வையுங்கள்” என்று அரங்கத்தின் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்த பலரில் நானும் ஒருவன். அவர் புன்னகையோடு மறுத்திருக்கிறார். சில வாரங்களில் அதிக வண்ணப்பக்கங்களுடனும், சில இதழ்களுக்கு எந்தவித விளம்பரமே கிடைக்காமலும் கூட அரங்கம் வெளியாகியிருக்கிறது. இதழியல் துறையில் அதை ஒரு சாதனை என்று தான் சொல்லவேண்டும். 

இரண்டாவது தனித்துவம், அதன் உள்ளடக்கம். முன்பே சொன்னது போல், வாசகரைக் கவர்வதற்காக எல்லா ஊடகங்களுமே தரமிறங்கி விட்டன. இணையத்தில், தமிழகத்தின் - இலங்கையின் பிரபல ஊடகங்கள் உட்பட “இந்த நபர் செய்த காரியத்தைப் பாருங்கள்”, “ஒரு பெண் வீதியில் செய்த காரியம்” என்றெல்லாம் கீழ்த்தரமான தலைப்புக்களை இட்டே நேயர்களை கவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. காட்சியூடகங்களோ செய்திகளுக்காக நாவைத் தொங்கப்போட்டு அலைவதைக் காணலாம். இருபத்து நான்கு மணிநேரச் செய்திச் சேவைகள் செய்திகளுக்காக அலைவதும், செய்தியொன்றைக் கண்டுவிட்டால், அதைத் தூக்கிப்பிடித்து ஊதிப் பெருப்பித்துக் காட்டுவதும், பொதுமக்களின் கவனத்தை உருப்படியான வேறு காரியங்கள் மீது திசை திருப்பாது தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயல்வதுமாக, பார்வையாளர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஊடக அறத்தின் எல்லையைக் கண்டு அதற்குள் நிற்பவை மிகச்சில ஊடகங்களே. சந்தேகமின்றி அவற்றில் அரங்கம் ஒன்று. 

அரங்கத்தில் சில பக்கங்கள் தான் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அது வார இதழ் என்பதால், செய்திகளை தேவையற்ற சூடு தவிர்த்து, உள்ளதை உள்ள விதத்தில் பதிவு செய்து கொடுக்க, அரங்கத்தால் இயன்றது. அதன் எஞ்சிய பக்கங்கள் ஒரு சேகரிப்பு ஆவணமாகப் பேணும் வகையிலேயே அதன் தரத்தை பேணி வந்தன. பொதிசோற்றைச் சுற்றுவதற்கு பழைய அரங்கம் பத்திரிகையைப் பயன்படுத்தியதற்காக அங்கிருந்த பெண்மணி ஒருவர் வெகுண்டு அந்த தாளைப் பறித்து பத்திரமாக சேமித்து வைத்த சம்பவமொன்றை நண்பரொருவர் மூலம் அறிந்தேன். 

பண்பாடு, சமூகவியல், அரசியல், பொருளாதாரம் முதலான பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு கோணங்களில் ஆய்ந்த பேராசிரியர். சி.மௌனகுரு, செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், கலாபூஷணம் அரங்கம் தேவராஜா, தமிழ்க்கவி, சரவணன், படுவான் பாலகன், எழுவான் வேலன், போன்றோரின் தொடர் கட்டுரைகள் அரங்கத்தின் வாசகர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், ஒரு கலை இலக்கிய இதழாகவும் அரங்கம் இயங்க முயன்றிருந்தது என்று சொல்லலாம். 

மூன்றாவது சிறப்பம்சம், அரங்கத்தின் வாசக அடைவு. எங்கள் ஊரில் சிகையலங்காரக் கடையொன்றில் அரங்கம் இதழ் விநியோகிக்கப்பட்டு வந்தது. அரங்கம் வெளிவராத வாரங்களில், அல்லது வந்து சேரத் தாமதமாகும் வாரங்களில் “இந்தக்கிளம அரங்கம் வரல என” என்று தேடி விசாரிக்குமளவு, அந்தக் கடை உரிமையாளரையும் வாடிக்கையாளர்களையும் அது வசீகரித்திருந்தது. அரங்கம் பத்திரிகையை நன்கறிந்த பலர், கிழக்கின் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். இலவசமாக அரங்கத்தைத் தொடர்வதற்கு “வாசிப்பில் ஆர்வம் இருந்தும், பத்திரிகையொன்றை பணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் நம் மக்கள்” என்று சீவகன் ஐயா அடிக்கடி காரணம் சொல்வார். பெரும்பாலும் பின்தங்கிய, பொருளாதார வசதிகள் குறைந்த கிராமங்களையே குறிப்பிடத்தக்களவு குறிவைத்திருந்ததை ஒரு பத்திரிகையாக அதன் வெற்றி என்றே கூறவேண்டும். 

அரங்கத்தின் நான்காவது மற்றும் முக்கியமான தனித்துவம், அது கிழக்கின் குரலாக ஒலித்தது என்பதே. பண்பாட்டு - அரசியல் தளத்தில் தங்கள் விசேடமான பிரச்சினைகள் சிங்களத்தரப்பாலோ வடக்குத் தமிழர் தரப்பாலோ முழுமையாக புரிந்துகொள்ளப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டு கீழைக்கரை அறிவுஜீவிகளால் அடிக்கடி முன்வைக்கப்படுவதுண்டு. இந்த முரண் குரலை எழுப்பிய பெரும்பாலானோர், அந்த இடைவெளியை நிரப்பாததில் தம் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டதே இல்லை. 

அரங்கம் அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறைகளை பிரயோகித்தது. “கிழக்கு மண் குறித்து பிறர் பேசத்தயங்கும் விடயங்களை இங்கு எவரும் பேசலாம்” என்று அனைவரையும் அழைத்தது. இனநல்லிணக்கத்தை முக்கியமான தொனிப்பொருளாக்கிக் கொண்டது. அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் கிழக்கை மையப்படுத்திய ஆய்வுப்பார்வையில் வெளியான பல கட்டுரைகள் வாசகர்களைச் சிந்திக்கவைத்தன. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் கீழைக்கரைக்காக ஒலித்த கவனிக்கத்தக்க முக்கியமான ஊடகக்குரல் என்று இன்று அரங்கத்தையே சுட்டிக்காட்ட முடியும். 

இதன் மறுபக்கமாக அரங்கம் தன் வாசகத்தளத்தை மலையகம், கொழும்பு, புத்தளம், வடக்கு என்று விரிவாக்க முயன்றபோது, தனது கிழக்குச்சார்பு அம்சங்களால் அது பிரதேசவாத முத்திரை குத்தப்பட்டதை நான் அறிவேன். ஆனால் கிழக்கு இன்ன இன்ன விடயங்களில் ஏனைய தமிழ்பேசும் நிலங்களுடன் வேறுபடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகள் அதில் வெளியாயினவே தவிர, ஒரு பொது கற்பனை எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு அந்த எதிரியால் தாம் ஒடுக்கப்படுவதாக அல்லது புறக்கணிக்கப்படுவதாக நீதி கோரும் பாணியிலான கட்டுரைகளை அரங்கத்தில் காணமுடிந்ததில்லை. அரங்கம் மாற்றுத்தரப்புகளை வரையறுத்துக்கொண்டு அவர்களுடன் போராடுவதற்காக எழுப்பப்பட்ட அறைகூவல் அல்ல; அது குரலற்றவர்களுக்காக எழுப்பப்பட்ட ஒரு மாற்றுக் குரல். அவ்வளவு தான். 

அரங்கம் சந்தித்த சவால்களும் அதிகம். இலவச இதழான அரங்கத்துக்கு விளம்பரதாரர்களை சம்பாதித்துக்கொள்ளும் விடயத்தில் அரங்கத்தின் ஆசிரியர் முகங்கொடுத்த இடர்ப்பாடுகள் பெரிதும் வெளியே பேசப்படாதவை. ஐநூறு பேர் கிள்ளிக்கொடுத்தால் மலையைப் பிளக்க முடியும். ஆனால் ஓரிருவர் அள்ளிக்கொடுப்பதில் தான் இன்று வரை மலைகள் பிளக்கப்படுகின்றன. வரலாற்றின் மகத்தான பக்கங்கள் அப்படி எழுதப்பட்டவை தான். அரங்கம் இன்னொரு மலை பிளந்தெழுந்த விருட்சம். 

தனிப்பட்ட ரீதியில் அரங்கத்துக்கு நான் பல விதங்களில் கடப்பாடு கொண்டவன். ஒரு கட்டுரையாளனாக, எழுத்தாளனாக, என் எழுத்தை மெருகூட்டவும், ஆய்வுப்பாணியை வளப்படுத்தவும் அரங்கம் எனக்கு உதவியிருக்கிறது. பழைய மட்டக்களப்பு நாடு பற்றிய காலனித்துவ கால குறிப்புகள் இதுவரை யாராலும் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. எனவே அவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட அரங்கக் கட்டுரைகள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அரங்கம் சம்பாதித்துத் தந்த வாசக சொந்தங்கள் அனேகம். அரங்கத்தின் வாசக அன்பரான புத்தளத்தைச் சேர்ந்த இஸ்தார் அவர்கள் இன்றும் தொடர்பில் இருக்கிறார். அறிஞர்கள், பெரியவர்களுக்கு அரங்கத்தை விநியோகிக்கும் சாக்கில், அவர்களுடனான நெருக்கத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி அரங்கம் எனக்குத் தந்தவை பல. 

குறிப்பிட்ட வாரம் எழுத ஒன்றுமே கிடைக்கவில்லை என்றாலும், சீவகன் ஐயாவின் அன்புத்தொல்லை காரணமாக சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்படி அவசரமாக எழுதப்பட்ட பல கட்டுரைகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன. அவரது ஊக்குவிப்பாலும் அன்பான நிர்ப்பந்தத்தாலும் எழுதப்பட்ட கிழக்கிலங்கை வரலாறு, பண்பாடு தொடர்பான சில கட்டுரைகள் அவற்றின் உள்ளடக்கத்தாலும், புதுமையாலும் என்னையே கர்வம் கொள்ள வைத்தவை. என்றேனும் ஒருநாள் அவை கிழக்கிலங்கை வரலாற்றில் பேசப்படுமானால், அதற்குரிய முழு கௌரவமும் பாராட்டும் அரங்கம் இதழுக்கும் சீவகன் ஐயாவுக்குமே போய்ச் சேரவேண்டும். 

இலவசம், தரம், இன்றியமையாமை முதலான சிறப்பம்சங்களுடன் வீறுநடை போட்ட அரங்கத்துக்கு எது நடக்கக்கூடாது என்று அஞ்சினேனோ அது நடந்து விட்டது. வாசிப்பை நேசிப்பவர்களுக்குத் தெரியும். ஒரு பத்திரிகையை இழப்பதென்பது ஒரு நல்ல நண்பனை இழப்பதைப் போல. அச்சுப் பதிப்பு நின்றுவிட்டாலும் இணையத்தில் அரங்கம் தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அது விட்டுச்செல்லும் இடைவெளியை இனி யார் நிரப்புவது என்பது பெரிய கேள்வி. காலத்திடம் பதில் இருக்கும் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான். அரங்கத்துக்கு ஒரு நண்பனின் பிரியாவிடைகளும் அன்பும்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner