அது கந்த சஷ்டி நோன்புக்காலம். அருணகிரி நாதரின் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அகப்பட்ட நூல் மயில் விருத்தம். அருணகிரிநாதர் பாடிய பல நூல்களில் ஒன்று இது. விருத்தப்பாவில் அமைந்த இந்த நூலின் ஒவ்வொரு விருத்தமும் முருகனின் வாகனமான மயிலைப் புகழ்ந்து முடிவதால் இதன் பெயர் "மயில் விருத்தம்". அதன் "சந்தான புஷ்ப பரிமள" என்று துவங்கும் முதலாவது விருத்தம் "அருணகிரிநாதர்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்ஸின் கணீர்க்குரலில் இடம்பெற்றிருக்கிறது. 50ஸ் கிட்ஸ், 60ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானது அந்தப்பாடல் என்பதால், அப்பாவின் உபயத்தில் எனக்கும் அந்தப் பாடல் ஓரளவு கேட்டுப் பழகி விட்டது.
ஆனால் முழுப்பாடலையும் இந்த முறை தான் முதன்முதலாகப் பாடுகிறேன். பொருளை அறியாமல் தமிழை ஓதுவதில்லை என்ற என் கொள்கைப்படி, அருணகிரியின் சந்த அழகை இரசித்தபடியே அடிக்கடி பொருளையும் புரட்டிக் கொண்டிருந்தேன். மூன்றாவது விருத்தம் தான் திடுக்கிட வைத்தது.
முருகனின் மயில் தன் அடியைத் தூக்கி வைக்கும் போது, பாதாளம் அதிர அண்ட முகடுகள் பெயர்கின்றன. ஆதிசேடனது முடியும், எட்டுத்திசை யானைகளும் நடுங்குகின்றன. சிவபெருமானும் உமாதேவியும் வைத்த கண் எடுக்காமல் பார்க்க பலவிதமாக ஆடி மகிழ்கின்றது இந்த மயில். மாதானுபங்கியின் சகோதரியும், மான்மகளுமான வள்ளியம்மையின் சிலம்பணிந்த பாதங்களைத் தலையில் சூடிக்கொள்ளும் முருகன், நீலோற்பலங்கள் மலரும் தணிகை மலையில் வாழ்பவன், அசுரரின் படைகள் சிதைய நடந்தது அவனது பச்சைத்தோகைகள் கொண்ட மயில். (விரிவான பொருளை இங்கே நீங்கள் படிக்கலாம்)
ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே
ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனும் மாலது சகோதரி
மகீதரி கிராத குலி
மாமறை முனி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்
பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படை நிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.
குடும்பத்தில் சண்டை என்றால் முதலில் சரண்டர் ஆகவேண்டியது கணவன் தானே? ஊடலைத் தீர்க்க முயலும் போது, மனைவியின் காலில் விழுவதே பாவப்பட்ட ஆண்வர்க்கத்தின் தலைவிதி. மனிதர்கள் மட்டுமல்ல இப்படி உமையின், இராதையின், வள்ளியின் கால்களில் சிவனும் கண்ணனும் முருகனுமே விழுந்து கிடப்பதை பக்தி இலக்கியங்கள் பாடித் தீர்த்திருக்கின்றன. ஆனானப்பட்ட இறைவர்களுக்கே இந்தக் கதி என்றால்? சரி, எனக்கேன் வம்பு. நான் பாட்டின் பொருளைத் தான் சொல்லவந்தேன். வள்ளியின் ஊடல் தீர்க்க முருகன் அவள் காலில் விழுந்ததை "வள்ளி மணி நூபுர மலர் பாதாரவிந்த சேகரன்" - வள்ளியின் சிலம்பணிந்த தாமரைப் பாதங்களைத் தலையில் தாங்கியவன் என்று இங்கு பாடுகிறார் அருணகிரியார்.
இதற்கு அடுத்ததாக கொஞ்சம் கவனத்தை ஈர்க்கின்ற முக்கியமான வரி "மாதானுபங்கி எனும் மாலது சகோதரி". மாதானுபங்கி யாரென்று தெரியுமா? திருவள்ளுவர்! திருவள்ளுவர் எனும் பெருமகனாரின் சகோதரி வள்ளி!
இதற்கு அடுத்ததாக கொஞ்சம் கவனத்தை ஈர்க்கின்ற முக்கியமான வரி "மாதானுபங்கி எனும் மாலது சகோதரி". மாதானுபங்கி யாரென்று தெரியுமா? திருவள்ளுவர்! திருவள்ளுவர் எனும் பெருமகனாரின் சகோதரி வள்ளி!
'திருவள்ளுவமாலை' எனப்படும் நூல் 12 தொடக்கம் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகச் சொல்லப்படுவது. தமிழின் முதலாவது திறனாய்வு நூல் என்று சிலரால் குறிப்பிடப்படுகின்ற இது, வள்ளுவரையும் திருக்குறளையும் புகழும் 55 பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். நல்கூர் வேள்வியார் எனும் புலவரால் பாடப்பட்ட இதன் இருபத்தோராம் பாடல் இப்படிப் பாடுகிறது.
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு
"உபகேசியாகிய நப்பின்னையை மணந்தவன் வடமதுரையின் அரசனான கண்ணன். அவன் அந்த வடமதுரைக்கு அச்சு என்றால், மாதானுபங்கியை கூடல் நகர் - தென்மதுரைக்கு அச்சு என்று சொல்லலாம்" என்பது இப்பாடலின் பொருள். இந்தப்பாடலில் தான் வள்ளுவரின் இன்னொரு பெயர் மாதானுபங்கி என்பது தெரியவருகிறது.
உண்மையில், இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய பாடல் கூட. ஏனெனில் இங்கு வரும் 'உபகேசி' என்பது தமிழ் மரபில் கண்ணனின் காதலியாகச் சொல்லப்படும் நப்பின்னை தான் என்று உறுதியாகச் சொல்வதற்கு வேறெந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இந்தச் செய்யுளைக் கொண்டு வள்ளுவருக்கு நம்மவர்கள் 'செந்நாப்போதார்' என்ற ஒரு பெயரையும் சொல்வார்கள். (வேறெங்கும் வள்ளுவருக்கு 'செந்நாப்போதார்' என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை). பாடலின் பொருளைப் பார்த்தால் - மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடல் - "குற்றமற்ற நிலத்தில் விளைந்த சிவந்த நாக்குகள் போன்ற மொட்டுகள் மிதக்கும் வைகை பாயும் கூடல்" என்று பொருள் கொள்வதே பொருத்தம் போல் படுகிறது.
மாதா+அனுபங்கி, என்றால் தாயைப் போல பேரன்புடையவர் என்று பொருள். மாதானுபங்கி என்று அருணகிரிநாதர் பாடும் பெயர் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் இல்லாமல், இங்கு மட்டுமே பயன்படுவதால், மாதானுபங்கி வள்ளுவர் தான் என்றே கொள்ளலாம். அப்படி என்றால், அருணகிரியார் சொல்வது போல, வள்ளுவர் வள்ளியின் சகோதரரா? முருகனுக்கு மச்சானா வள்ளுவர்?
ஆம். அப்படிச் சொல்கின்ற தொன்மங்கள் தமிழில் வழக்கில் உள்ளன. ஞானாமிர்தம் (12ஆம் நூற்றாண்டு), கபிலர் அகவல் (18 - 19ஆம் நூற்றாண்டு) எனும் இரு நூல்கள் இந்தத் தொன்மத்தை உறுதிப்படுத்த நமக்கு உதவுகின்றன. ஞானாமிர்தத்தில் யாளி என்ற அந்தணனுக்கும் புலையர் குலப்பெண்ணுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்த கதை (பாடல் 33) குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எழுவரும், திருவள்ளுவர், அதிகமான், கபிலர், ஔவை, உப்பை, முறுவை, வள்ளி என்று உரை கூறப்பட்டிருக்கிறது. இதே கதை பிற்கால நூலான கபிலரகவலில் சற்று வேறுபட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதி ஒரு புலைக்குலப் பெண். பகவன் ஒரு அந்தணன். இருவரும் தமக்குப் பிறக்கும் குழந்தைகளை பிறக்குமிடத்திலேயே விட்டுச்செல்வதென்று முடிவெடுத்து ஊரூராகச் செல்கிறார்கள். அவர்களுக்கு உப்பை, உறுவை, வள்ளுவர், வள்ளி, அதிகன், கபிலர், ஔவை ஆகிய ஏழு பிள்ளைகள் முறையே சலவைத்தொழிலர், கள் இறக்குநர், பறைத்தொழிலர், குறவர், அரசன், அந்தணர், பாணர் வீடுகளில் பிறந்தார்கள். உப்பையும் உறுவையும் தான் காளியம்மனும் மாரியம்மனும். தம் ஒப்பந்தப்படி ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் பிரிந்த போது அவர்களுக்கு குழந்தைகள் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த பாடல்களும் கபிலர் அகவலில் உள்ளன. இந்தக் கதைகளின் படி, மாரி, காளி, வள்ளி முதலிய அம்மன்களும் வள்ளுவர், ஔவை ஆகியோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆகிறார்கள்.
ஞானாமிர்தமும் கபிலர் அகவலும் சொல்வது பிற்காலக் கட்டுக்கதைகள் தான். இவற்றுக்கு எந்தவித வரலாற்றுப் பெறுமானமும் இல்லை. ஆனால் தொன்மங்கள் என்ற வகையில் இவற்றுக்கென ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஞானாமிர்தத்துக்கும் கபிலர் அகவலுக்கும் இடைப்பட்ட காலத்தில் (14 - 15ஆம் நூற்றாண்டு) வாழ்ந்த அருணகிரியாரின் பாடலொன்றைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் நமக்கு தேவைப்படுகிறது. வள்ளி எப்படி மாதானுபங்கியின் சகோதரி என்றால், அவள் வள்ளுவரோடு உடன்பிறந்த அறுவரில் ஒருத்தி. இந்தக் 'கதை' தெரியாவிட்டால் அது யார் மாதானுபங்கி? அவருக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போய் உட்கார வேண்டியது தான்.
ஆங். கடைசியாக ஒன்று. தொன்மங்களை அறிந்திருப்பது நல்லது தான். ஆனால் அவற்றின் இலக்கியப்பெறுமானத்தோடு அவற்றை நிறுத்தி வைப்பது நலம். இதை வைத்து வள்ளுவர் இந்தக்காலம், வள்ளியின் காலம் இத்தனையாம் ஆண்டு. காளி, மாரி வழிபாடெல்லாம் இத்தனையாம் ஆண்டுகள் தான் தொடங்கின என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு இறங்கினோமென்றால் விளைவு விபரீதமாகிவிடும். ஒரு தகவலை வரலாறாக மாற்ற முன்பு அதன் நம்பகத்தன்மையையும் நிகழ்தகவையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். வள்ளுவனே சொல்லி வைத்தது தான்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
0 comments:
Post a Comment