எவனோ ஒருவன் கை அம்பு

0 comments


நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான்.

'தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன்

ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி எங்கேயோ வாசித்தோமே? அதுவும் நினைவில்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது. மறதி சாத்தியம் தான். கவையில்லை, அது 1509ஓ 1507ஓ, ஐநூறாண்டுகள் கடந்துவிட்டதே எழுத வேண்டிய விடயம் தான் என்று எழுதி வலைப்பதிவிலும் போட்டதைத் தான் நீங்கள் படித்தீர்கள்.

இன்று காலை வழக்கம் போல 5.55, 6.00, 6.05 என்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால், அதை ஒலி அணைத்தபடி தொடர்ந்தும் தூங்கி வழிந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு கனவு. கனவென்றும் சொல்லமுடியாது. ஒரு நினைவு. கொழும்பு அருங்காட்சியக நூலகத்தில் அமர்ந்து சி.பத்மநாதனின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற ஆங்கில நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பழுப்பு நிறப் பக்கங்களில் தைப்பூசம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை நுணுக்கமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று தைப்பூசம் என்பது நினைவில் இருந்தது உண்மை. பேராசிரியர் பத்மநாதனின் அந்தப் பெயருடைய ஒரு ஆங்கில நூல் இருப்பதும் உண்மை. ஆனால் அதில் தைப்பூசம் பற்றிய எந்த விபரமும் இல்லை. நான் கொழும்பு அருங்காட்சியகத்துக்கு பலமுறை சென்றிருந்தாலும், அங்கிருந்த நூலகத்துக்குச் சென்றது ஒரே ஒரு தடவை தான். அதுவும் போன டிசம்பர் மாதம், இதற்குப் பின் எப்போது சாத்தியமாகிறதோ தெரியாது என்ற அச்சத்தில் போய் வந்தேன். வருகிற போது அருகே இருந்த விற்பனைச் சாலையில் மேற்படி ஆங்கிலப் புத்தகத்தைக் கண்டேன். அதில் பிரசுரமானவை தமிழிலும் பிரசுரமாகி நான் ஏற்கனவே வாசித்து விட்ட கட்டுரைகள். எனவே வாங்கவில்லை. ஆனால் இன்னொரு ஆங்கிலப் புத்தகம் வாங்கினேன்.சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் சிறிமல் ரனவல்லவின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள சிங்களக் கல்வெட்டுக்கள்".


இப்படி ஒரு கனவு அல்லது நினைவு வந்ததும் தான் அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. நான் கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பி இரண்டு மாதங்களாகி விட்டது. ரனவல்லவின் புத்தகம் உட்பட கொழும்பில் பயன்படுத்திய புத்தகங்களெதுவும் பொதி அவிழ்க்கப்படாமல் அப்படியே பழைய அலுமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அட! இந்தப் புத்தகம் வாங்கியதை மறந்தே விட்டோமே, வாசிக்கவேண்டும் என்று எடுத்து வந்து தட்டிக்கொண்டிருந்தபோது தான் ஆறாம் விஜயபாகுவின் தெவிநுவரப் பலகைக் கல்வெட்டைக் கண்டேன். ஆறாம் விஜயபாகு பற்றிய அந்த சிங்களக் கல்வெட்டு அவனை இப்படி அறிமுகப்படுத்துகிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ சுத்த சக வருஷ எக் தஹஸ் சாரசிய தெனிஸ்வன்னெஹி ரஜ பெமிணி ஸ்வஸ்தி ஸ்ரீ மகாசம்மத பரம்பரானுயாத சூரிய வங்ஷாபிஜாத ஸ்ரீலங்காதிபதி ஸ்ரீமத் சிறிசங்கபோ ஸ்ரீ விஜயபாகு சக்ரவத்தி ஸ்வாமின் வஹன்செட்ட சதர வன்னென் மது அவுறுது பொசொன"

இதன் பொருள் இது தான். "மங்கலம் பொலிக. சுத்தமான சகவருடம் 1432இல் முடிசூடியவரும், மகாசம்மதரின் பரம்பரையில் சூரிய வம்சத்தில் உதித்தவருமான இலங்கைக்கதிபதி சிறிசங்கபோதி விஜயபாகு சக்கரவர்த்தி அவர்களின் நான்காம் (ஆட்சி) ஆண்டில் பொசன் மாதத்தில்"

இங்கு வரும் மகாசம்மதன் என்பவன் பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் க்ஷத்திரிய குலத்து முதல் மன்னன். பெரும்பாலான சிங்கள மன்னர்கள் தாங்கள் அவன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்தியக் கல்வெட்டுக்கள் போல சில இடங்களில் சக ஆண்டுக்கணக்கையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொசன் எனும் சிங்கள சந்திரவழி மாதம், தமிழ் ஆனி மாதத்துக்குச் சமனானது.

இலக்கியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தக்கூடிய ஆண்டுகளை விட, கல்வெட்டு ஆண்டுகள் ஒப்பீட்டளவில் திருத்தமானவை. சக ஆண்டு, கிரகோரியன் ஆண்டுக்கு 78 ஆண்டுகள் பிந்தியது. விஜயபாகு மன்னன் முடிசூடிய ஆண்டு சக ஆண்டு 1432 என்கிறது தெவிநுவரைக் கல்வெட்டு. ஆக கணக்கிட்டால், கிரகோரியன் படி அவன் ஆட்சிக்கு வந்தது, 1432 + 78 = 1510!

எனவே இனி ஐயத்துக்கிடமில்லை. 1507ஓ, 1509ஓ, 1513ஓ அல்ல; ஆறாம் விஜயபாகு ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஆண்டு 1510. ஆக, அவன் பத்தாம் ஆட்சியாண்டில் தம்பிலுவில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது, 1520இல். சரி தான். இந்த 2020ஆம் ஆண்டுடன் மிகச்சரியாக 500 ஆண்டுகள் ஆகிவிட்டது!

தெவிநுவர பலகைக் கல்வெட்டை, இந்து பண்பாட்டுத் திணைக்களத்தின் மாநாட்டில் கடந்த ஒக்டோபரில் வாசித்த "தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்" கட்டுரைக்காக படித்திருக்கிறேன். "தம்பிலுவில் கல்வெட்டு" கட்டுரை எழுதிக்கொண்டிருந்த போது, அதை எடுத்து தகவலை சரி பார்க்க ஏன் எனக்குத் தோன்றவில்லை?

இன்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் தைப்பூசத்தையும் கொழும்பு அருங்காட்சியகத்தையும் முடிச்சுப் போட்டு ஏன் அந்தக் கனவை நான் காணவேண்டும்? அந்தக் கனவு ஏன் ரனவல்லவின் நூலை நினைவூட்டவேண்டும்? அந்த நூலை தேடி எடுத்துப்பார்க்கும் எனக்கு, தெவிநுவரக் கல்வெட்டில் விஜயபாகுவின் சரியான ஆட்சியாண்டு ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? ஐந்து நாட்களின் பின்பு நான் எழுதிய கட்டுரை சரி தான் என்று ஏன் உணரவேண்டும்?

வரலாறு, ஆய்வு என்றெல்லாம் எழுதும் போது, "உன் எழுத்துநடை நன்றாக இருக்கிறது", "உன் வயதில் இந்த ஆய்வைச் செய்வதெல்லாம் பெரிய விடயங்கள்", என்று நிறையப்பேர் பாராட்டியிருக்கிறார்கள். அதை எண்ணி சந்தர்ப்பங்களில் இலேசாக தலைக்கனம் ஏறுவதும் உண்டு. அப்போதெல்லாம் ஓங்கி சம்மட்டியால் அடிப்பது போல் இப்படி ஏதாவது நிகழும்.

"இது எதையுமே நீ செய்யவில்லை. நீ செய்விக்கப்படுகிறாய். நீ வெறும் கருவி. உனக்கு இந்த இந்தத் துறையில் ஆர்வமேற்படவேண்டும் என்று நீயா விரும்பினாய்? உன் இலட்சியங்கள் என்ன? இப்போது நீ இருக்கும் இடம் என்ன? கர்வப்படாதே, நீ அம்பு மட்டும் தான். எய்பவன் வேறொருவன். இந்த இந்த விடயங்கள் உன் மூலம் நிகழவேண்டும் என்று மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்த்திவிட்டு ஓரமாக ஒதுங்கிக்கொள். அதற்கு மேல் உனக்கொரு இடம் இல்லை."

வேறெங்கோ, வெகு தூரத்தில் நின்று இப்படி யாரோ சொல்லுவதைப் போல அடிக்கடி உணர்கிறேன். உண்மையில் எல்லா சாதாரண மனிதருக்கும் உரிய சாதாரண கோபதாபங்கள் எனக்கும் உண்டு. அர்த்தமற்ற எண்ணங்கள், பொருந்தாத் துயர்கள், குழப்பங்கள், தயக்கங்கள். இப்போது அவையெல்லாம் பெருமளவுக்கு இல்லை. அவை வருவது ஏதோ ஒரு காரணமாகத் தான். என்னைச் செலுத்தும் பெருவிசைக்குத் தெரியாதா அதெல்லாம்? அதைத் தீர்க்கும் வழியையும் அந்தப் பெருவிசை அறியும். என்னைக் காக்கும். பிரபஞ்சப்பெருவிசை!

ஏன் கடவுள் நம்பிக்கை தேவை என்று கேட்டால் என் முதன்மையான பதில் இது தான். வாழ்வு பொல்லாதது. அது உங்களை சுக்கு நூறாக உடைத்தெறியும் தருணங்கள் பல வாழ்க்கையில் வரும். மனதளவில் நீங்கள் எத்தனை வலியவர் என்றாலும் அதற்கு முகங்கொடுக்க முடியாத நிலை உங்களுக்கு ஏற்படலாம். திட்டியோ தழுவியோ அழுதோ அப்போதைக்கு தள்ளாடாமல் பிடித்துக்கொள்ள ஒரு தூண் தேவை. பெரும்பாலும் அந்தத் தூண் இறைநம்பிக்கை தான்.

அப்படி, யாரோ ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கின்ற முடிவுறாத திரைக்கதையொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதே எத்தனை இனியது. இயக்குநரைத் தெரியாது. அடுத்த காட்சி யார், என்ன நடக்கும் என்றும் தெரியாது. இதில் நடிப்பதே அருமையான விளையாட்டு. நடிகன் ஒருபோதும் தலைக்கனம் கொள்ளக்கூடாது. அவன் நடிப்பு மொத்தமாக சீர்கெட்டுவிடும். அல்லது இயக்குநன் அவனைக் கடாசி விட்டு வேறொரு நடிகனைத் தேர்ந்தெடுக்கக் கூடும்.


நான் எவனோ ஒருவன் கையில் அம்பு என்பதை மட்டுமே பெருமையாக எண்ணிக் கொள்ள விரும்புகிறேன். கையில் அம்பை ஏந்தி, அந்த அம்பு ஆணவம் கொண்டதால், அதை நினைத்துப் புன்னகைத்து, அந்தப் புன்னகையாலேயே முப்புரங்களை எரித்தவனின் கதை புராணங்களில் உண்டு. எப்போதாவது இந்த எளிய அம்பு அப்படி கர்வத்தோடு எண்ணிக் கொள்வதைக் கண்டீர்களென்றால் சுட்டிக்காட்டிவிடுங்கள். "ஆடாதே, நீ வெறும் அம்பு தான்" என்று

மேலும் வாசிக்க »

பாயும் ஒளி நீ எனக்கு!

0 comments

ரட்சகன் ஸ்ரீதரின் 'பாயும் ஒளி'

ரட்சகன் ஸ்ரீதர் என்பவர் பாடிய பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" பாடலை அண்மையில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பாடல் அருமையாகத் தான் இருக்கிறது. ஆனால் முன்பும் இந்தப்  பாடல் நிறைய வடிவங்களில் வந்திருக்கின்றது. அவற்றில் சிறந்ததாக நான் கருதுவது சைந்தவியின் "பாயும் ஒளி". அது 2013இல்  நிவாஸ் கே பிரசன்னாவின்  "Kannamma - Eternal Love" எனும் இசைத்தொகுதியில் வெளியானது. அதன் பெரும்பாலான பாடல்கள் இப்போதும் என் கைபேசியை ஆக்கிரமித்திருப்பவை. குறிப்பாக இந்த "பாயுமொளி", "நின்னையே இரதி என்று", "தூண்டில் புழுவினைப் போல்" மூன்றும்.


சைந்தவியின் பாயும் ஒளி.

பாரதியின் பாடல்களில்,  அருமையான ஒன்று இந்தப்"பாயுமொளி நீ எனக்கு". அதில் தொனிப்பது, நாயகியை நினைத்து நாயகன் கொள்ளும் அளவற்ற பெருமிதம். உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அத்தனை அன்பு இருக்கிறதோ - இல்லையோ, அந்த அன்பும் உண்மையோ - பொய்யோ, "நீ இல்லாமல் நான் இல்லை" என்பதை  உவமைகளால் நிரப்பி கொஞ்சம் ஓவராகவே செல்லும் அழகான பாடல் அது.  பாரதியிலும் தவறு சொல்ல முடியாது தான். வள்ளுவனின் குறளில் "நலம் புனைந்துரைத்தலாக", இறையனாரின் குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கையாக" வெளிப்படும் தமிழ் அகத்துறை மரபின் தொடர்ச்சி அது. அதை விடுங்கள், இன்று வரை  உங்களில் எத்தனையோ பேர்  கூட இப்படி (பயத்திலாவது) "மானே தேனே" போட்டுக்கொண்டு தானே இருக்கிறீர்கள்? 🤣


பாடல் முழுக்க பாரதி தனக்கும் கண்ணம்மாவுக்கும் பயன்படுத்தும் உருவகங்கள் வழக்கமானவை தான். தேன் -  அதைக்குடிக்கும் தும்பி. வீணை - அதை மீட்டும் விரல், ஆபரணம் - அதில் கோர்க்கும் வைரம், மழை - மழையைக் கண்டாடும் மயில், பானம் அது ஊற்றப்படும் பாண்டம். இப்படிப் பல. ஒன்றை ஒன்று விட்டுப் பிரியாத, ஒன்றை ஒன்று நிரப்புகின்ற இருமைகள். பாரதியை  பின்பற்றித் தான்  பாரதிதாசனும் பின்பொருமுறை "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று மகிழ்ந்திருக்கிறார்.

ஆனால் பாரதியின் உவமைகளில் திடுக்கிடச் செய்யும் ஒன்று, நான்காவது சரணத்தில் வருகின்றது. "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்று தொடங்குகிறது அது.  வெண்ணிலவும்  கடலும்? நிலவு வானுக்குரியது. கடல் கரையோடு விளையாடுவது. ஆனால் இயற்கையின் நியதியில் நிலவும் கடலும் கூடிக்களிக்கும் தருணமொன்று வாய்த்துவிடுகிறது. 






நிலவொளி பிரதிபலிக்கும் கடலைப் பார்த்திருக்கிறீர்களா? சந்திரன் தன் மீது திகழும் அந்தக் கொஞ்சநேரம்  கடல் வெள்ளிநிறத்தில் பளபளக்கும். உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் இயற்கையின் அருமையான  காட்சிகளில் ஒன்று அது. அது நிகழ்ந்த பின்னர் நிலவு தன் பயணத்தை இயல்பாகத் தொடர்கின்றது. கடல் அலைக்கரங்கள் வீசி சாதாரணமாக கரையைத் தழுவிக்கொண்டிருக்கிறது. என்ன சொல்ல வருகிறான் பாரதி?


பாரதி உருகி உருகிப் பாடிய பல கவிதைகள் கண்ணம்மாவை நோக்கிப் பாடப்பட்டவை. மகாகவி ஒருவனின் உள்ளத்தை  இத்தனை ஆட்கொண்ட இந்தக் கண்ணம்மா யார் என்று நிறையப்பேர் ஆராய்ந்திருக்கிறார்கள். தன் மனைவி செல்லம்மாவைத் தான் அவர் கண்ணம்மா என்று  பாடுகிறார் என்று சொல்வார்கள் சிலர். பாரதி இறையேற்பர் - ஆத்திகன் என்பதால் தன் குலதெய்வமான கண்ணனைத் தான் அப்படி பெண் வடிவில் துதித்திருக்கிறார் என்றும், இல்லை இல்லை, சிவசக்தியையே நேரடியாகப் பாடுகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.


ஆனால், ஒருவேளை, பாரதியின் கற்பனையை நிறைத்திருந்த கண்ணம்மா அவர் மனைவி செல்லம்மா இல்லை என்று ஆகும் போது நமக்கு ஏற்படும் துணுக்குறல் கொஞ்சநஞ்சம் அல்ல.  செல்லம்மாவின் வாக்குமூலத்தின் படி, அவர்களது உறவு, ஊடலும் கூடலும் நிறைந்த ஒரு சாமானியத் தம்பதியின் போராட்டம் மிகுந்த உறவாகவே இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. கண்ணம்மா ஏன் வேறொருத்தியாக இருக்கக்கூடாது? 


வாசகனாக பாரதியிடம் நான் அத்துமீறுவதாக நீங்கள் கருதலாம். இல்லை. அவனை ஆராதிக்கிறேன். ஆனால் கலைஞனின் மனதை சாமானியர்களோடு ஒப்பிடமுடியாது.


ஒரு உதாரணம் சொல்கிறேனே. கிசுகிசுக்களில் இத்தனை ஆர்வம் காட்டுகிறோமே, ஏன் சினிமாத்துறையினர் , அரசியல்வாதிகள் மட்டுமே இத்தனை கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பிரபலம் என்பதால் என்று சிலர் சொல்லலாம். இல்லை அவர்கள் இப்படி உணர்ச்சிகரமானவர்களாக  இருப்பதற்குக் காரணம், மீறல். இத்தகையவர்களுக்கு மட்டுமே வாய்த்த மீறல்.

அந்த மீறல் இருப்பதால் தான் அவர்கள் சாதாரண மக்களிலிருந்து ஒருபடி மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அழகு, திறமை,  அறிவு, பலரை ஈர்க்கும் வல்லமை இவை எந்தவித முயற்சியுமின்றி இயல்பாகவே கிடைப்பது சிலருக்குத் தான். அப்படி அள்ளிக் கொடுத்த ஒருவரிடம், இயற்கை, நிகராக இன்னொன்றைப் பறித்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தராசை சமப்படுத்துவது ஒழுக்கமோ, மகிழ்வான மணவாழ்க்கையோ, புகழோ, உடல்நலமோ, பிள்ளைகளோ, நிம்மதியோ ஏதோ பெறுமதியான ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒரு  உதாரணத்துக்கு அரசியல் - திரைத்துறைக்குச் சொன்னாலும், இதை சமூகத்தால் கொண்டாடப்படும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாரிடமும் நீங்கள் காணலாம் - எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  விஞ்ஞானிகள், புத்திஜீவிகள் உட்பட. சில விதிவிலக்குகள் உண்டு தான். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


நான் பாரதியை வாசிப்பது இந்தக் கோணத்திலேயே. பாயுமொளி நீ எனக்கு என்று ஒரு பெண்ணை - பெரும்பாலும் செல்லம்மாவை, அல்லது மகள்  தங்கம்மாவை பாரதி போற்றுகிறான் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், மகளுக்கு இந்தப் பாடலை பாட வாய்ப்புக் குறைவு.


இன்னொரு துப்புக் கிடைக்கிறது. பாரதியாரின் இரண்டாவது மகள் பெயர் சகுந்தலா. துஷ்யந்தனுக்காகக் காத்திருந்தவள். எத்தனையோ புராணப் பாத்திரங்கள் இருக்க மகாகவி ஒருவன் தன் மகளுக்கு அந்தப் பெயரை வைக்கக் காரணம் என்னவாக இருக்கும்?

தனது வாழ்க்கை வரலாற்றில் தன் பள்ளிப் பருவக்  காதலி பற்றி சொல்லியிருக்கிறார் பாரதி. அவரது மணமே 12 வயதில் இடம்பெற்ற குழந்தைத் திருமணம் தான். அதில் காதலியா? ஆம். அவளை அவர் அறிமுகப்படுத்துவது..

'ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்'

இந்த சகுந்தலை  தான் பாரதியின் கண்ணம்மாவா? எது எப்படியோ சரஸ்வதி, திருமகள், காளி என்று மூன்று காதலாக, அவன் கனவுகளில் வெளிப்பட்ட பெண் செல்லம்மா அல்லாத வேறொருத்தி என்றே தெரிகிறது.


 பாரதியின் நிலை இப்படி இருக்க, பாயும் ஒளி கவிதை எழுந்த நனவிலிப் பெருவெளியில் அவனையும் மீறி வெளிப்பட்டவள் கண்ணம்மை. வெண்ணிலவு அவள், மேவும் கடல் அவன்.  அந்த இணை நீடிக்கப் போவதில்லை; ஆனால் இயற்கையின் இணைகளிலேயே அதியற்புதமானது. வெவ்வேறு இலக்குகளுடன் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட  இருவர்  ஒருவரையொருவர் கடந்து சென்ற போது,  மற்றவருக்கு நிகர்த்துணையாக நிற்க முடிந்த தருணமொன்று எனலாமா?


இந்தத் துணுக்குறலோடு வாசிக்கும் போது பாயுமொளி நீ எனக்கு பாடலில் தொனிப்பது பெருமிதம் தான் அல்லது, குதூகலம் தான் என்று சொல்லத் தோன்றாது; அது முழுத்த துயர். அல்லது நிர்மலமான விரக்தி. என்னைப் பொறுத்தவரை அந்தத் துயர்  முற்றாக வெளிப்படுவது சைந்தவியின் பாடலில் தான் என்பேன்.


"வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நான் உனக்கு"
இந்த வரிகள் வரும் போது, மேல்ஸ்தாயிக்கு நகர்கிறது  பாடல். உள்ளே என்னவோ செய்கிறது. துயரம் வழியும் வயலின் இசை உடன் தொடர்கிறது.

"எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இல்லை நின் சுவைக்கு" என்று நெகிழும்  வரிகள் புகழ்வது கண்ணெதிரே நாயகன் பாடிக் கொண்டிருக்கும் நாயகியை அல்ல; எண்ணத்தை முழுவதுமாக நிறைத்த, நினைத்தால் மட்டுமே இனிக்கிற ஒருத்தியை.  அவள் இப்போது இல்லாதவள்; ஆனால் இப்போது இருப்பவளில் எழுந்தவள். அவளைக் கவிஞன் கண்டுகொண்ட கணம் பூரித்துப்போகிறான்.

"கண்ணின் மணி போன்றவளே, கட்டியமுதே, கண்ணம்மா" 
என்று ஆராதிக்கிறான்.

பாடல் தொடர்கின்ற போதும் இந்த சரணத்தோடு நிறுத்திவிட்டார் இசையமைப்பாளர். அவர் அனுபவித்துக் தான் இசையமைத்திருக்க வேண்டும்.  சைந்தவியின் குரலை இரசிக்கும் போது தான், துயர் தோய்ந்த இந்த வரிகளைப் பாட பெண் குரல் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறது.


கண்ணம்மா உண்மையில் யாராகவும் இருக்கட்டும். அவள் மகத்தான கவிஞன் ஒருவனை முழுவதுமாக நிறைத்து நின்ற காதலி.  உண்மையில்  பாரதியின் வாழ்வில் அவ்வாறு இருந்தவள்  எச்சமின்றி மறைந்து விட்டாள்.  ஆனால் என் கண் முன்னே, பல நண்பர்களின் வாழ்வில் கண்ணம்மாக்கள் இருந்திருக்கிறார்கள். என்ன, என் நண்பர்கள் எல்லாம் பாரதிகள் இல்லை. அதனால் அவர்களது கண்ணம்மாக்கள் முண்டாசுக் கவிஞனின் கண்ணம்மா போல அமரத்துவம் அடையவில்லை.
மேலும் வாசிக்க »

தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

1 comments
தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள
கல்வெட்டுக்களும் கற்றூண்களும்


காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன முறையிலான கற்கைகள், 1850களுக்கு பின்பே ஆரம்பமாகின. இந்தப் பின்னணியில், பிரித்தானியக் குறிப்புக்களில் திருக்கோணமலை மாவட்டத்திலும் பொலனறுவை மாவட்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப்படும் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தவிர்த்தால், இலங்கைக் கல்வெட்டியலில்  முதன்முதலாக விரிவாக ஆராயப்பட்ட தமிழ்க் கல்வெட்டு என்று தம்பிலுவில் கல்வெட்டைச் சொல்லலாம். இக்கல்வெட்டைக் கண்டறிந்தவர் பிரித்தானிய அலுவலர் ஹியூஜ் நெவில். கண்டறியப்பட்ட ஆண்டு 1885.


1847இல் பிறந்த ஹியூஜ் நெவில், தன் 17ஆவது வயதில் பிரித்தானிய நீதியரசரின் தனிப்பட்ட செயலாளராக இலங்கை வந்தவர். இலங்கையின் பல பாகங்களிலும் சிலோன் நிர்வாக சேவை எழுதுநர், மாவட்ட நீதிபதி, உதவி அரசாங்க அதிபர் போன்ற பதவிகளை வகித்த நெவில், மிகச்சிறந்த புலமையாளர். தொல்பொருளியல், கல்வெட்டியல், வரலாறு, இனவரைவியல், சமூகவியல், மானுடவியல், விலங்கியல், தொன்மவியல், புவியியல் என்று அவரது புலமைசார் பங்களிப்பின் பட்டியல் நீண்டது. சிங்களம், தமிழ், வேடர் மொழி என்பவற்றில் நல்ல சரளம் பெற்றிருந்த நெவில், தன் அறிவுசார் கண்டறிதல்களை, "தப்ரபேனியன்" எனும் ஆய்வேடொன்றில் பிரசுரித்து வந்தார். அதில் தான் "சிலோனில் தமிழ்க் கல்வெட்டு" என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது தம்பிலுவில் கல்வெட்டு.
நெவிலின் "தப்ரபேனியன்" ஆய்வேட்டில் வெளியான கட்டுரை, 1885 ஒக்டோபர் இதழ்


அப்போது மண்ணாலான ஓலைக்குடிசையாக இருந்த தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின், ஒரு சுவரோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது இக்கல்வெட்டு. அதைப் பிரித்தெடுத்து சுத்தம் பண்ணிய நெவில், அதில் மயில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, இது ஒரு முருகன் கோவிலுக்குரியது என்ற முடிவுக்கு வந்திருந்தார். எனவே அருகில் இருந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு இக்கல்வெட்டு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.  தற்போதும், இக்கல்வெட்டு திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலேயே வைத்துப் பேணப்படுகின்றது. 


தம்பிலுவில் கல்வெட்டு சுமார் ஐந்தடி உயரமான கற்றூண் ஒன்றாகும். அதன் ஒருபுறம் திரிசூலமும் மறுபுறம் மயிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய இருபக்கங்களிலும் முப்பத்தெட்டு வரிகளில் கல்வெட்டு பொளியப்பட்டிருக்கிறது. கல்வெட்டு வாசகத்தின் ஆரம்பத்தில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சூரியன் சந்திரன் உள்ளவரை, கல்வெட்டு சொல்லும் செய்தி நின்று நிலவவேண்டும் என்பது இதன் பொருள்.

தம்பிலுவில் கல்வெட்டின் மைப்படி,
பத்மநாதன்.சி, 2013, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, நூலிலிருந்து

கல்வெட்டு வாசகம் இது தான்:
"ஸ்ரீ சங்கபோதி பற்மரான திறிபுவனச் சக்கிறவத்திகள் ஸ்ரீ விசயவாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் ௨௰ தியதி,சிவனான சங்கரர்க் கோவிலுக்குக் கொடுத்த வோவில். இன்த தன்மத்துக்கு அகித்தம் சேதானாகில் கெங்கைக் கரையில் காரம்பசுவைக் கொந்ற பாவத்தை கொள்ளக் கடவராகவும்"

"ஸ்ரீசங்கபோதி வர்மரும் திரிபுவனச் சக்கரவர்த்தியுமான ஸ்ரீ விஜயபாகு தேவரின் பத்தாவது ஆட்சியாண்டில் வருகின்ற தை மாதம் இருபதாம் திகதி, சிவனான சங்கரர் கோவிலுக்கு வோவில் கொடுக்கப்பட்டது. இந்த அறச்செயலுக்கு யாரும் தீங்கு செய்தால் அவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவாராக" என்பது இக்கல்வெட்டின் பொருள்.

இக்கல்வெட்டு கூறுகின்ற விசயவாகு தேவர் யார் என்பதில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆய்வாளர் அமரர்.க.தங்கேஸ்வரி அவர்கள் இக்கல்வெட்டு சொல்லும் விசயவாகு, பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த கலிங்க மாகோன் என்கின்றார். பல்கலைக்கழக வரலாற்றறிஞர்களான சி.பத்மநாதன், கா.இந்திரபாலா, ஏ.வேலுப்பிள்ளை, செனரத் பரணவிதான உள்ளிட்டோர் இவனைக் கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1510 -  1521) என்கின்றனர். பெற்ற தந்தையை மூன்று மகன்மார் மண்ணாசைக்காகக் கொலை செய்த "விஜயபாகு கொள்ளை" என்ற துயர் மிகுந்த வரலாற்றுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவன்  இவனே. 

கல்வெட்டைப் பொறித்தது ஆறாம் விஜயபாகு தான் என்பதற்கு பேராசிரியர் பத்மநாதன் கொடுக்கும் வலுவான ஆதாரங்கள் இரண்டு. ஒன்று, இக்கல்வெட்டு பொலனறுவைக் காலக் கல்வெட்டுக்கள் போல் மன்னனை கிரந்தம் கலந்து 'விஜயBபாஹூ' என்று குறிப்பிடாமல், அவன் பெயரைத் தமிழ்ப்படுத்தி 'விசயவாகு' என்று குறிப்பிடுகின்றமை. இதே மன்னனின் கொழும்பு அருங்காட்சியகத் தமிழ்க் கல்வெட்டு, இதே போல இவனை "விசயவாகு தேவர்" என்றே அழைக்கிறது.

இரண்டாவது ஆதாரம் இக்கல்வெட்டின் வரிவடிவம். இன்றைய தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ வளர்ச்சி பெரும்பாலும் 16ஆம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்று விட்டது. இன்றும் ஓரளவு எளிதாக வாசிக்கும் நிலையிலுள்ள இக்கல்வெட்டு 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்கிறார் அவர். அந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

இங்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் என்றால் என்ன என்று இன்று யாருக்கும் தெரியாது. நூறாண்டுகளுக்கு முன் "Monograph of Batticaloa" எனும் நூலை (1921) எழுதிய கனகரெட்ணம் முதலியார்,  வோவில் அப்போது வேவில் என்று அழைக்கப்படுவதாகவும், திருக்கோவிலுக்குத் தெற்கே சுமார் நான்கு மைல் தூரத்தில்  அது இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெவிலும் இதையே சொல்வதை மேலே காணலாம்.

ஆனால் இன்று வோவில் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாத நிலையில், அதை  இனங்காணக் கைகொடுத்தது 1695இல் வரையப்பட்ட ஒரு இடச்சு வரைபடம். அதில், திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு நீர்நிலை வரையப்பட்டு, அது "Gravet van Bouwille" - போவில் மடு என்றும், அதற்கும் தெற்கே "Bouwilipattu" - போவில்பற்று என்ற இடமொன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகே இடச்சு மொழியில் "Tamblewielle: een groot vondel met v: water"  என்று எழுதப்பட்ட வரிகள் காணப்படுகின்றன.  "தம்பிலுவில்: இங்குள்ள ஒரு பெரிய நீர்நிலை" என்பது இதன் பொருள். எனவே தம்பிலுவில் கல்வெட்டில் சிவனான சங்கரர்க் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட வோவில் ஒரு நீர்நிலை என்பது தெரியவருகிறது. கோவிலுக்கு அல்லது கோவில் சார்ந்தோருக்கு, நீர்நிலைகளை, அல்லது அவற்றால் பாசனம் செய்யப்படும் வயல் வெளிகளைக் கல்வெட்டு பொறித்து தானம் கொடுப்பது, அந்தக்கால வழக்கம். 



Gravet van Bouwille, Dutch Map of Ceylon (1685 CE)

சங்கமன்கண்டி அருகே மனுநேய கயவாகு மன்னனால், முப்பத்திரண்டு மதகுகளுடன் இருபத்தாறு ஏரிகளை இணைத்து பெரும் ஏரி அமைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பொன்று, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலிலும் காணப்படுகின்றது. இன்று குறித்த பகுதியில் உவர்நீரேரியாகக் காணப்படும் "தாண்டியடிக் களப்பே" இந்த "வோவில்" ஏரி ஆகலாம்.

கல்வெட்டில் மயில் பொறித்திருப்பதால், அதை முருகன் கோவிலுக்குரியதெனச் சொல்வது எத்தனை உசிதமானது என்பதை ஆராயவேண்டும். திருக்கோவில் முருகன் அப்போது மட்டக்களப்புத் தேசத்தின் பெருந்தெய்வம் என்பதால், அவனால் காக்கப்படுவதைக் குறிக்கவும் மயில் பொறிக்கப்பட்டிருக்கலாம். மயிலை கோட்டை அரசின் அல்லது அப்போதைய மட்டக்களப்புச் சிற்றரசின் குலச்சின்னம் என்று கருதவும் இடமுண்டு.

ஒருவேளை கல்வெட்டுச் சொல்லும் "சிவனான சங்கரர் கோவில்" என்பது இன்றைய தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் அமைவிடத்தில் இருந்து பின் அழிந்தும் போயிருக்கலாம். பேராசிரியர்கள். கா.இந்திரபாலாவும் சி.பத்மநாதனும் இந்தச் சந்தேகத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊகத்துக்கு எதிரான இன்னொரு சான்றும் கிடைக்கிறது. திருக்கோவில் ஆலயத்தில் இன்று பேணப்படும் நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று சதுரப்பலகை வடிவில் கிடைக்கும் திருக்கோவில் கல்வெட்டு. "திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில்" என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடுகின்ற மிகப்பழைய ஆவணம் அது தான். 

"ஸ்ரீமத் சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகளான சிவஞான சங்கரிகள் ஸ்ரீ விசயவாகு தேவர்க்கு யாண்டு ௰வதில் தை மாசத்தில் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்கு கிழக்கு கடல் குணர் மேற்கு..." என்ற வரிகளின் பின் அது சிதைந்திருக்கிறது. வரிவடிவம், கல்வெட்டு வாசகம், பொறித்த மன்னன் முதலிய பல விடயங்களிலும் தம்பிலுவில் கல்வெட்டை ஒத்த  இக்கல்வெட்டில் வருகின்ற "சிவஞான சங்கரிகள்" என்பதை தம்பிலுவில் கல்வெட்டில் வரும் "சிவனான சங்கரரோடு" ஒப்பிடலாம்.

பேராசிரியர் பத்மநாதன் இதற்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்கிறார். சிவஞான சாகரி என்பது விஜயபாகு தேவரின் பட்டம் என்றும் கல்வெட்டைப் பொறித்தவர் சிவஞானசாகரி என்பதை, சிவஞான சங்கரி என்று தவறாகப் பொறித்துவிட்டார் என்றும் அவர் சொல்கிறார். தன் வாதத்துக்குத் துணையாக அவர் சொல்வது, ஆறாம் பராக்கிரமபாகுவின் முன்னேஸ்வரச் சாசனமொன்று அம்மன்னனை "சைவஞான மகோததி" என்று அழைப்பதாகும். மகோததி, சாகரம் இரண்டுமே பெருங்கடலைக் குறிக்கும். சிங்கள மன்னர்கள் பௌத்தம் சார்ந்த தானங்களில் "சங்கபோதி" என்றும், சைவம் சார்ந்த கொடைகளில் இப்படி "சிவஞானப்பெருங்கடல்" என்றும் தம்மைக் குறிப்பிட்டிருந்தால், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்கிறார் அவர்.

ஆனால் தம்பிலுவில் கல்வெட்டை வாசித்த யாருமே இரு கல்வெட்டுக்களிலுமுள்ள இந்த இரு ஒத்த சொற்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. 'சங்கரி' என்று முடிகின்ற ஆண்பால் பெயர்களைக் கொண்டிருந்த மட்டக்களப்பு வன்னியச் சிற்றரசர்கள் பற்றி ஐரோப்பியர் குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இக்கல்வெட்டு, அது பொறிக்கப்பட்ட காலத்தில் ஆண்ட கோட்டைப் பேரரசன் விஜயபாகுவையும், அவனுக்குக் கீழ் இருந்த உள்ளூர்ச் சிற்றரசன் சிவஞான சங்கரியையும் குறிப்பிடலாம் என்பது ஒரு ஊகம்.

அல்லது தம்பிலுவில் கல்வெட்டிலுள்ள சிவனான சங்கரர் என்பதையும் சிவஞான சங்கரி என்றே வாசித்து, அது ஒரே மன்னனின் பட்டமே என்று அமைதி காணலாம். இவ்வாறு வாசிப்பதே சரி என்றால், இக்கல்வெட்டும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரியது தான் என்று உறுதிப்படுத்த முடியும்.


சரி, இந்தக் கல்வெட்டில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? வெறுமனே ஒரு நீர்நிலையை தானம் செய்வதைச் சொல்லும் ஒரு கல்வெட்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் தான் என்ன?

அவசியம் இருக்கிறது. இந்தக் கல்வெட்டின் முதலாவது முக்கியத்துவம் ஒரு சைவக்கோவிலுக்கு இந்தக் கொடையைத் தமிழில் பொறித்த மன்னன்  விஜயபாகு எனும் சிங்கள அரசன் என்பது. இரண்டாவது முக்கியத்துவம், கோட்டை அரசனின் கை, கிழக்குக்கரையின் எல்லை வரை ஓங்கியிருந்தது என்பது. 

போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிந்தைய ஆவணங்களின் படி, கீழைக்கரையின் மட்டக்களப்பு வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் கீழ் திறைசெலுத்தி வரும் சிற்றரசுகளாகவே இருந்து வந்தன. அதற்கு முன் அவை என்னவாக இருந்தன என்ற விபரம் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த வரலாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை மட்டும் நம்புவது நம்மைத் தவறாக வழிநடத்திவிடும்.

பொலனறுவை அரசு காலத்தில் கிழக்கு உரோகணமாக இருந்த மட்டக்களப்பு நாடு, முதலாம் விஜயபாகுவிலிருந்து  ( 1072 –1110)  மகா பராக்கிரமபாகு  (1123–1186) வரையான மன்னர்களின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தது என்பது, மகாவம்சத்திலிருந்து தெரிகிறது. பின்பு தெற்கே நகர்ந்த தம்பதெனியா, கம்பளை சிங்கள அரசுகளின் காலங்களில்  இங்கு யார் ஆண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. நம் ஊகம் சரி என்றால், சோழராட்சியின் எச்சங்களான வன்னியர்கள் அப்போது சுதந்திரச் சிற்றரசர்களாக இங்கு இருந்து வந்தார்கள் என்று கொள்ளலாம்.

ஆனால் 1546இல் "மட்டக்களப்பு" என்ற தனி அரசை வரலாற்றுலகுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்யும் போர்த்துக்கேயப் பாதிரியார் சைமாவோ கோயம்பரா, கோட்டை அரசனிடமிருந்து தமது அரசை விடுவிக்கும் படி மட்டக்களப்பு மன்னன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததை எழுதியிருக்கிறார். அப்போது கண்டி அரசு முற்றாக வலுப்பெற்று எழவில்லை என்பதால், அவர் சொல்வதில் உண்மை இருக்கவேண்டும். கோயம்பரா சொல்வதை உறுதிப்படுத்த நமக்குக் கிடைக்கும் இன்னொரு சான்று தான் தம்பிலுவில் கல்வெட்டு.

கோட்டை அரசானது, விஜயபாகுவின் மாயாதனு (சிங்களத்தில் மாயாதுன்னை) முதலிய மூன்று மைந்தர்களால், சீதாவாக்கை, இறைகமம், கோட்டை என்று மூன்றாகத் துண்டாடப்படுவதற்கு முன்பு, அதன் கிழக்கு எல்லை, வங்காள விரிகுடா வரை நீண்டிருந்ததையே தம்பிலுவில் கல்வெட்டுச் சொல்கின்றது. இக்கல்வெட்டைப் பொறித்து குறைந்தது ஐந்தாண்டுகளுக்குள் விஜயபாகு மன்னன் கொலை செய்யப்படுகிறான். அப்போதைய கோட்டை அரசின் கிழக்கு அந்தத்தில் அவன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது, அரசியல் குழப்பங்கள் நிறைந்த அந்தக் காலத்தில், போர்த்துக்கேயருக்கோ தன் மக்களுக்கோ ஏதோ செய்தியைச் சொல்லத் தான் என்று தோன்றுகிறது. அதை இன்றுள்ள தலைமுறையினருக்கும் சொல்ல முயன்றுகொண்டிருக்கும் இந்த முப்பத்தெட்டு வரிகளைக் கொண்டாடுவதில் என்ன பிழை?


ஆறாம் விஜயபாகு எப்போது சரியாக ஆட்சிபீடமேறினான் என்பது தெரியவில்லை. குறிப்புக்கள் 1507, 1509, 1513 ஆகிய மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. அவன் குறைந்தது 10 ஆண்டுகள் அரசு புரிந்திருக்கின்றான் என்பதாலும், 1521இல் தன் சொந்த மக்களால் கொலையுறுகிறான் என்பதாலும், 1513ஆமாண்டு பொருத்தமாக வரமுடியாது. ஏனைய இரண்டில் எது சரியாயினும் தம்பிலுவில் கல்வெட்டுக்கு இன்று வயது 500 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது. அதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் 1509 தான் ஆறாம் விஜயபாகுவின் சரியான பட்டாபிஷேக ஆண்டு என்றால், இன்று தான் அந்த நாள்.  அப்படியே ஓடிப்போய் 2020 பெப்ரவரி மூன்றாம் திகதி பஞ்சாங்க நாட்காட்டியின் தமிழ்த் தேதியைப் பாருங்கள். தை மாதம் 20ஆம் திகதி! விசயவாகு தேவர்க்கு ஆண்டு பத்தாவதில் தை மாதம் 20ஆம் திகதி. சரியாக 501 ஆண்டுகள்! ♥ 


காற்றுப் புகாத ஒரு அறையில், கொங்கிரீட்டைக் கொட்டி அதில் இனிமேல் என்றுமே வாசிக்கமுடியாதபடி நட்டு வைத்துப் பாதுகாக்கிறோம் ஒரு பெருஞ்சொத்தை! அறம் மட்டுமல்ல, அறச்செயலைப் பொறித்த சாசனமும் புனிதமானதே. "இந்த தர்மத்துக்கு அஹிதம் செய்தானாகில் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடையக் கடவராகவும்" என்று இந்தக் கல்வெட்டு சபிப்பது யாரை? வீண்பெருமை மாத்திரமே பேசிக்கொண்டு, ஆனால் பெருமைக்குக் காரணமான பொக்கிஷங்களைக் கேட்பாரற்று  குப்பையாகப் போட்டு வைக்கும் நம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே அல்லவா?
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner