பாயும் ஒளி நீ எனக்கு!


ரட்சகன் ஸ்ரீதரின் 'பாயும் ஒளி'

ரட்சகன் ஸ்ரீதர் என்பவர் பாடிய பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" பாடலை அண்மையில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பாடல் அருமையாகத் தான் இருக்கிறது. ஆனால் முன்பும் இந்தப்  பாடல் நிறைய வடிவங்களில் வந்திருக்கின்றது. அவற்றில் சிறந்ததாக நான் கருதுவது சைந்தவியின் "பாயும் ஒளி". அது 2013இல்  நிவாஸ் கே பிரசன்னாவின்  "Kannamma - Eternal Love" எனும் இசைத்தொகுதியில் வெளியானது. அதன் பெரும்பாலான பாடல்கள் இப்போதும் என் கைபேசியை ஆக்கிரமித்திருப்பவை. குறிப்பாக இந்த "பாயுமொளி", "நின்னையே இரதி என்று", "தூண்டில் புழுவினைப் போல்" மூன்றும்.


சைந்தவியின் பாயும் ஒளி.

பாரதியின் பாடல்களில்,  அருமையான ஒன்று இந்தப்"பாயுமொளி நீ எனக்கு". அதில் தொனிப்பது, நாயகியை நினைத்து நாயகன் கொள்ளும் அளவற்ற பெருமிதம். உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அத்தனை அன்பு இருக்கிறதோ - இல்லையோ, அந்த அன்பும் உண்மையோ - பொய்யோ, "நீ இல்லாமல் நான் இல்லை" என்பதை  உவமைகளால் நிரப்பி கொஞ்சம் ஓவராகவே செல்லும் அழகான பாடல் அது.  பாரதியிலும் தவறு சொல்ல முடியாது தான். வள்ளுவனின் குறளில் "நலம் புனைந்துரைத்தலாக", இறையனாரின் குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கையாக" வெளிப்படும் தமிழ் அகத்துறை மரபின் தொடர்ச்சி அது. அதை விடுங்கள், இன்று வரை  உங்களில் எத்தனையோ பேர்  கூட இப்படி (பயத்திலாவது) "மானே தேனே" போட்டுக்கொண்டு தானே இருக்கிறீர்கள்? 🤣


பாடல் முழுக்க பாரதி தனக்கும் கண்ணம்மாவுக்கும் பயன்படுத்தும் உருவகங்கள் வழக்கமானவை தான். தேன் -  அதைக்குடிக்கும் தும்பி. வீணை - அதை மீட்டும் விரல், ஆபரணம் - அதில் கோர்க்கும் வைரம், மழை - மழையைக் கண்டாடும் மயில், பானம் அது ஊற்றப்படும் பாண்டம். இப்படிப் பல. ஒன்றை ஒன்று விட்டுப் பிரியாத, ஒன்றை ஒன்று நிரப்புகின்ற இருமைகள். பாரதியை  பின்பற்றித் தான்  பாரதிதாசனும் பின்பொருமுறை "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று மகிழ்ந்திருக்கிறார்.

ஆனால் பாரதியின் உவமைகளில் திடுக்கிடச் செய்யும் ஒன்று, நான்காவது சரணத்தில் வருகின்றது. "வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நானுனக்கு" என்று தொடங்குகிறது அது.  வெண்ணிலவும்  கடலும்? நிலவு வானுக்குரியது. கடல் கரையோடு விளையாடுவது. ஆனால் இயற்கையின் நியதியில் நிலவும் கடலும் கூடிக்களிக்கும் தருணமொன்று வாய்த்துவிடுகிறது. 






நிலவொளி பிரதிபலிக்கும் கடலைப் பார்த்திருக்கிறீர்களா? சந்திரன் தன் மீது திகழும் அந்தக் கொஞ்சநேரம்  கடல் வெள்ளிநிறத்தில் பளபளக்கும். உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் இயற்கையின் அருமையான  காட்சிகளில் ஒன்று அது. அது நிகழ்ந்த பின்னர் நிலவு தன் பயணத்தை இயல்பாகத் தொடர்கின்றது. கடல் அலைக்கரங்கள் வீசி சாதாரணமாக கரையைத் தழுவிக்கொண்டிருக்கிறது. என்ன சொல்ல வருகிறான் பாரதி?


பாரதி உருகி உருகிப் பாடிய பல கவிதைகள் கண்ணம்மாவை நோக்கிப் பாடப்பட்டவை. மகாகவி ஒருவனின் உள்ளத்தை  இத்தனை ஆட்கொண்ட இந்தக் கண்ணம்மா யார் என்று நிறையப்பேர் ஆராய்ந்திருக்கிறார்கள். தன் மனைவி செல்லம்மாவைத் தான் அவர் கண்ணம்மா என்று  பாடுகிறார் என்று சொல்வார்கள் சிலர். பாரதி இறையேற்பர் - ஆத்திகன் என்பதால் தன் குலதெய்வமான கண்ணனைத் தான் அப்படி பெண் வடிவில் துதித்திருக்கிறார் என்றும், இல்லை இல்லை, சிவசக்தியையே நேரடியாகப் பாடுகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.


ஆனால், ஒருவேளை, பாரதியின் கற்பனையை நிறைத்திருந்த கண்ணம்மா அவர் மனைவி செல்லம்மா இல்லை என்று ஆகும் போது நமக்கு ஏற்படும் துணுக்குறல் கொஞ்சநஞ்சம் அல்ல.  செல்லம்மாவின் வாக்குமூலத்தின் படி, அவர்களது உறவு, ஊடலும் கூடலும் நிறைந்த ஒரு சாமானியத் தம்பதியின் போராட்டம் மிகுந்த உறவாகவே இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. கண்ணம்மா ஏன் வேறொருத்தியாக இருக்கக்கூடாது? 


வாசகனாக பாரதியிடம் நான் அத்துமீறுவதாக நீங்கள் கருதலாம். இல்லை. அவனை ஆராதிக்கிறேன். ஆனால் கலைஞனின் மனதை சாமானியர்களோடு ஒப்பிடமுடியாது.


ஒரு உதாரணம் சொல்கிறேனே. கிசுகிசுக்களில் இத்தனை ஆர்வம் காட்டுகிறோமே, ஏன் சினிமாத்துறையினர் , அரசியல்வாதிகள் மட்டுமே இத்தனை கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பிரபலம் என்பதால் என்று சிலர் சொல்லலாம். இல்லை அவர்கள் இப்படி உணர்ச்சிகரமானவர்களாக  இருப்பதற்குக் காரணம், மீறல். இத்தகையவர்களுக்கு மட்டுமே வாய்த்த மீறல்.

அந்த மீறல் இருப்பதால் தான் அவர்கள் சாதாரண மக்களிலிருந்து ஒருபடி மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அழகு, திறமை,  அறிவு, பலரை ஈர்க்கும் வல்லமை இவை எந்தவித முயற்சியுமின்றி இயல்பாகவே கிடைப்பது சிலருக்குத் தான். அப்படி அள்ளிக் கொடுத்த ஒருவரிடம், இயற்கை, நிகராக இன்னொன்றைப் பறித்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தராசை சமப்படுத்துவது ஒழுக்கமோ, மகிழ்வான மணவாழ்க்கையோ, புகழோ, உடல்நலமோ, பிள்ளைகளோ, நிம்மதியோ ஏதோ பெறுமதியான ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒரு  உதாரணத்துக்கு அரசியல் - திரைத்துறைக்குச் சொன்னாலும், இதை சமூகத்தால் கொண்டாடப்படும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாரிடமும் நீங்கள் காணலாம் - எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  விஞ்ஞானிகள், புத்திஜீவிகள் உட்பட. சில விதிவிலக்குகள் உண்டு தான். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


நான் பாரதியை வாசிப்பது இந்தக் கோணத்திலேயே. பாயுமொளி நீ எனக்கு என்று ஒரு பெண்ணை - பெரும்பாலும் செல்லம்மாவை, அல்லது மகள்  தங்கம்மாவை பாரதி போற்றுகிறான் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், மகளுக்கு இந்தப் பாடலை பாட வாய்ப்புக் குறைவு.


இன்னொரு துப்புக் கிடைக்கிறது. பாரதியாரின் இரண்டாவது மகள் பெயர் சகுந்தலா. துஷ்யந்தனுக்காகக் காத்திருந்தவள். எத்தனையோ புராணப் பாத்திரங்கள் இருக்க மகாகவி ஒருவன் தன் மகளுக்கு அந்தப் பெயரை வைக்கக் காரணம் என்னவாக இருக்கும்?

தனது வாழ்க்கை வரலாற்றில் தன் பள்ளிப் பருவக்  காதலி பற்றி சொல்லியிருக்கிறார் பாரதி. அவரது மணமே 12 வயதில் இடம்பெற்ற குழந்தைத் திருமணம் தான். அதில் காதலியா? ஆம். அவளை அவர் அறிமுகப்படுத்துவது..

'ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்'

இந்த சகுந்தலை  தான் பாரதியின் கண்ணம்மாவா? எது எப்படியோ சரஸ்வதி, திருமகள், காளி என்று மூன்று காதலாக, அவன் கனவுகளில் வெளிப்பட்ட பெண் செல்லம்மா அல்லாத வேறொருத்தி என்றே தெரிகிறது.


 பாரதியின் நிலை இப்படி இருக்க, பாயும் ஒளி கவிதை எழுந்த நனவிலிப் பெருவெளியில் அவனையும் மீறி வெளிப்பட்டவள் கண்ணம்மை. வெண்ணிலவு அவள், மேவும் கடல் அவன்.  அந்த இணை நீடிக்கப் போவதில்லை; ஆனால் இயற்கையின் இணைகளிலேயே அதியற்புதமானது. வெவ்வேறு இலக்குகளுடன் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட  இருவர்  ஒருவரையொருவர் கடந்து சென்ற போது,  மற்றவருக்கு நிகர்த்துணையாக நிற்க முடிந்த தருணமொன்று எனலாமா?


இந்தத் துணுக்குறலோடு வாசிக்கும் போது பாயுமொளி நீ எனக்கு பாடலில் தொனிப்பது பெருமிதம் தான் அல்லது, குதூகலம் தான் என்று சொல்லத் தோன்றாது; அது முழுத்த துயர். அல்லது நிர்மலமான விரக்தி. என்னைப் பொறுத்தவரை அந்தத் துயர்  முற்றாக வெளிப்படுவது சைந்தவியின் பாடலில் தான் என்பேன்.


"வெண்ணிலவு நீ எனக்கு மேவுகடல் நான் உனக்கு"
இந்த வரிகள் வரும் போது, மேல்ஸ்தாயிக்கு நகர்கிறது  பாடல். உள்ளே என்னவோ செய்கிறது. துயரம் வழியும் வயலின் இசை உடன் தொடர்கிறது.

"எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இல்லை நின் சுவைக்கு" என்று நெகிழும்  வரிகள் புகழ்வது கண்ணெதிரே நாயகன் பாடிக் கொண்டிருக்கும் நாயகியை அல்ல; எண்ணத்தை முழுவதுமாக நிறைத்த, நினைத்தால் மட்டுமே இனிக்கிற ஒருத்தியை.  அவள் இப்போது இல்லாதவள்; ஆனால் இப்போது இருப்பவளில் எழுந்தவள். அவளைக் கவிஞன் கண்டுகொண்ட கணம் பூரித்துப்போகிறான்.

"கண்ணின் மணி போன்றவளே, கட்டியமுதே, கண்ணம்மா" 
என்று ஆராதிக்கிறான்.

பாடல் தொடர்கின்ற போதும் இந்த சரணத்தோடு நிறுத்திவிட்டார் இசையமைப்பாளர். அவர் அனுபவித்துக் தான் இசையமைத்திருக்க வேண்டும்.  சைந்தவியின் குரலை இரசிக்கும் போது தான், துயர் தோய்ந்த இந்த வரிகளைப் பாட பெண் குரல் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறது.


கண்ணம்மா உண்மையில் யாராகவும் இருக்கட்டும். அவள் மகத்தான கவிஞன் ஒருவனை முழுவதுமாக நிறைத்து நின்ற காதலி.  உண்மையில்  பாரதியின் வாழ்வில் அவ்வாறு இருந்தவள்  எச்சமின்றி மறைந்து விட்டாள்.  ஆனால் என் கண் முன்னே, பல நண்பர்களின் வாழ்வில் கண்ணம்மாக்கள் இருந்திருக்கிறார்கள். என்ன, என் நண்பர்கள் எல்லாம் பாரதிகள் இல்லை. அதனால் அவர்களது கண்ணம்மாக்கள் முண்டாசுக் கவிஞனின் கண்ணம்மா போல அமரத்துவம் அடையவில்லை.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner