திருக்கோவில் முருகு
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி (நன்றி: Akish 4K Studio ) இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை. அறிமுகம் திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில...