மரபு : எஞ்சியிருப்பதைத் தக்க வைத்தல்.

0 comments

நிறையத்தடவை எழுதி அழித்துவிட்டுப் பதிவு செய்கிறேன். இதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இதை வாசிக்கும் பெரும்பாலானோரை இந்தப்பதிவு மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை என்பதை அறிவேன். அப்படி இருந்தும் எழுதுவதற்கான காரணம் மூன்று.

முதலாவது, இந்தச் சம்பவம் ஒரே ஒரு ஊரில் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருப்பது.

இரண்டாவது, முழு தமிழ்க் கூட்டு மனமுமே இதை சரியென அங்கீகரிக்கின்றது. இதில் தவறேதும் இருப்பதாக அது எண்ணவில்லை. அந்த அபத்தத்தை யாராவது சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

மூன்றாவது நடந்தது நடந்தது தான். எதிர்காலத்திலாவது கொஞ்சம் இருப்பவற்றை காத்துக்கொள்ள மாட்டோமா என்ற நப்பாசை.

சரி. என்ன தான் பிரச்சினை?

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு இடம்பெற்று இனிதே நிறைவுற்றிருக்கிறது.

ஆம், அதனால் என்ன?

கோவில்களில் திருப்பணிகள் இடம்பெறும்போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

முதலாவது, கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பில் பழைமை மாறுமளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை.

இரண்டாவது, கோவிலின் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை.
முதலாவது பிரச்சினைக்கு வருவோம்.

கோவிலைத் திருத்திக் கட்டும்போது, மண்டபங்களை பெரிதாக்கிப் புதுப்பிக்கிறோம். அதனால் கோவிலின் அழகு கூடியிருக்கிறது. பழைமை வேண்டும் என்பதற்காக அப்படியே இடிந்துவிழும் நிலையில் கோவிலைப் பேணவேண்டுமா?

அப்படிச் சொல்லவில்லை. ஆலயங்கள் திருத்திக் கட்டவேண்டியவை தான். ஆனால் ஆகமப்படி அமைந்த கோவில்களுக்கு மட்டுமே கட்டுமானங்களில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மடாலயங்களுக்கு அப்படி விதிகளே இல்லை என்பதால் இருந்ததை இருந்தவாறே திருத்திக் கட்டினால் போதும்.

அங்குள்ள தூண் நம் அம்மப்பா, அப்பம்மா தொட்டு விளையாடியது, நமக்கு முன் வாழ்ந்து மறைந்த எத்தனையோ அடியவர்கள், மகான்கள் நடந்த, இருந்த மண்டபம் இது என்ற உணர்வு புல்லரிப்பை ஏற்படுத்துவது. அத்தனை பேரின் வேண்டுதல்களும் வழிபாடும் தான் அங்கு தெய்வத்தை வீற்றிருக்கச் செய்கிறது. அவர்கள் தொட்டு வழிபட்ட, சாய்ந்து அமர்ந்த ஓட்டுக்கூரை மண்டபங்களை அடியோடு மாற்றுவது கடவுளின் இருப்பையும் இல்லாமற் செய்வது தான்.

தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின் வடக்கு முகப்பு. அங்கிருந்த பரிகல வைரவர் கோவிலும் இன்று பரிவார ஆகம சன்னதியாகி விட்டது.


என்ன… பழைய ஓட்டுக்கூரை மண்டபமா! இப்போது கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?

யார் இல்லை என்றது, ஆனால் ஓடுவேய்ந்த கூரைகளே தமிழர் பாரம்பரியம்; கொங்கிரீட் சுவர்த் தளங்கள் அல்ல. பெரும்பாலான கிழக்கிலங்கையின் கோவில்கள் ஓட்டுக்கூரை கொண்டவையாகவே இருந்தன. நம் ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இடிக்கப்பட்டு தற்போது ஆடம்பரமாகக் கட்டப்பட்டுள்ள எல்லாக் கோவில்களினதும் 2004 - 2009இற்கு முந்தைய பழைய கட்டுமானத்தை நினைவுகூர்ந்து பாருங்கள்.

தம்பிலுவில் கண்ணகைக்கு அருகில் சுற்றிவர இருந்த எல்லா அம்மன் கோவில்களையும் இதே போல் இடித்து தூபியோடு ஆகமப்படி பெருங்கோவில்களாகக் கட்டிவிட்டோம். இப்போது அவற்றுக்கும் கண்ணகை கோவிலுக்கும் என்ன வேறுபாடு? எல்லாவற்றையும் அச்சில் வார்த்தாற்போல் ஒரே மாதிரி இப்படி இடித்து இடித்துக் கட்டி என்னத்தைக் காணப்போகிறோம்?

ஓடுவேய்ந்த மரக்கூரை கொண்ட கோவில்கள் ஈழத்தமிழரின் தொன்மையான கட்டடக்கலை மரபின் எஞ்சியுள்ள சாட்சிகள். வலுக்கட்டாயமாக அதை மாற்றுவதால் ஒரு பண்பாட்டு அம்சத்தை இழந்தவர்களாவோம் என்பது தவிர, பயனேதுமில்லை. பண்பாடு அழிக்கப்படுகிறது, சமயம் ஒழிக்கப்படுகிறது, இனம் நசுக்கப்படுகிறது, அந்நியர் ஆக்கிரமிக்கிறார்கள் என்று புலம்பும் நமக்கு, அதே பண்பாட்டு - வரலாற்று அடையாளமொன்றை நாசுக்காக நாமே அழித்து அப்புறப்படுத்தி விடுகின்ற அபத்தம் புரிவதே இல்லை. கொஞ்சம் குற்றவுணர்வு கூட இருப்பதில்லை.

ஓடுவேய்ந்த கூரைக் கோவில்களைக் கண்டால் உடனே “கேரளப்பாணி” அல்லது “சிங்களப்பாணி” என்று சொல்லத்தெரிந்த நமக்கு, “இலங்கைத்தமிழ்ப் பாணியும்” அதுவே என்று சொல்லத் தெரியாது. கிழக்கில் மண்டூரும் தெற்கே கதிர்காமமும் கூட அந்த மரபின் தொன்மைக்கு ஆதாரங்கள். எத்தனையோ வழிபாட்டு - கட்டுமான மாற்றங்கள் நடந்தபிறகும் அங்கெல்லாம் ஏன் இன்றும் “தெய்வம் பேசுகிறது” என்பதற்கான காரணம் மறைந்திருப்பது அங்கு தான்.



தெய்வம் நின்று பேசுவதற்குத் தான் கும்பாபிடேகம். ஆகமமே பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை கும்பாபிசேகம் செய்யச் சொல்கிறது.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவில் ஒரு மடாலயம். ஒரு மடாலயத்துக்கும் ஒரு ஆகமக்கோவிலுக்குமான வேறுபாட்டை அக்குவேறு ஆணிவேறு படித்துத் தானே எல்லோரும் சமயபாடத்தில் ஓ எல்லில் சித்தி பெற்றிருக்கிறோம்? இரண்டையும் குழப்பிக் கொள்வானேன்?

சரி, குடமுழுக்குக் கிரியைகளுக்கான விதிமுறைகள் சொல்லப்பட்டிருப்பது ஆகமங்களிலும் அவற்றின் வழி வந்த வடமொழிப் பத்ததிகளிலும். கண்ணகி அம்மனுக்கான கும்பாபிடேகத்துக்கான கிரியைகள் எந்த ஆகமப்படி அல்லது எந்த ஆகமப்பத்ததியின் படி நடைபெற்றன? “கண்ணகா பரமேசுவரி” பற்றி எந்த ஆகமம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது?

இது என்ன புது வழக்கமா? ஏற்கனவே 2000இன் ஆரம்பத்தில் குடமுழுக்கு நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்வரை சங்காபிடேகமும் நடந்தது தானே?

ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் அது சரியாகிவிடாது. கண்ணகை அம்மன் ஆலயம் மடாலயம். அதற்கு கும்பாபிடேகமோ சங்காபிடேகமோ செய்யக்கூடாது. செய்யமுடியாது. கண்ணகி ஆகமத்தெய்வம் அல்ல. அவளுக்கு குடமுழுக்குச் செய்வது – செய்தது, பிழை பிழை தான்!

மடாலயங்கள் சற்றுக் கீழானவை, ஆகமக்கோவில்களே மேலானவை என்ற உளநிலை இருப்பதால் நாம் மடாலயங்களை ஆகமக்கோவில்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சமூகவியல் ஆய்வாளர்கள் இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் ஒரு ஆதிக்க சக்தி இருப்பதாகக் கருதி இதை முன்பு “சம`ச்கிருத மயமாக்கம்” என்றார்கள். அப்படியொன்றும் இல்லை. எவரது திணித்தலும் திட்டமிடலும் இல்லாமலே அது அடித்தட்டு மக்கள் உட்பட எல்லோராலும் இயல்பாகவே செய்யப்படுகின்றது என்பதையும் இப்படிச் செய்து ‘தனது “தாழ்ந்த” பண்பாட்டை “உயர்த்த” வேண்டும்’ எனும் தாழ்வு மனப்பான்மை அதன் பின்னணியில் இருப்பதையும் பிறகு தான் அவதானித்தார்கள். எனவே இந்த செயன்முறையை இன்று “மேல்நிலையாக்கம்” என்று அழைக்கிறார்கள்.

இன்று நீங்கள் குடமுழுக்கு நடந்தது சரி என்கின்றீர்கள் என்றால், அங்கு இடம்பெறும் மேல்நிலையாக்கத்தை அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள். அதன் விளைவு நினைத்துப்பார்க்க முடியாதது. கப்புகனாரும் வழக்குரை பாடலும் கதவு திறத்தலும் இல்லாத கண்ணகை அம்மன் கோவிலை, ‘குளித்தில்’ நடக்காத தம்பிலுவில் ஊரை, கற்பனை பண்ணிப் பார்க்கமுடிகிறதா உங்களால்?
ஈழத்தமிழ்ப் பாணியில், ஓடுவேய்ந்த பழம்பெரும் கண்ணகி கோவில். இன்று கருவறை தவிர்ந்த முன்மண்டபங்களும் வீதி சுற்றுமண்டபமும் கொங்கிரீட் கட்டடங்களாகி எழுந்து சூழ்ந்திருக்கின்றன.

(2006ஆம் ஆண்டு படத்திலுள்ள நாகதம்பிரான் கோவில் இன்று இல்லை. அதன் விமானத்தூபியிலும் சுவர்களிலும் செதுக்கப்பட்டிருந்த புடைப்புச்சிற்பங்கள் மட்டக்களப்புத் தேசத்தின் மரபார்ந்த சிற்பக் கலையின் எச்சங்கள். ஒரோவழி எஞ்சியிருந்த அக்கலை இன்று முற்றாக அழிந்தொழிந்து போயிற்று.)





அப்படி எல்லாவற்றையும் மாற்ற அனுமதிக்க மாட்டோம். கும்பாபிடேகம் மட்டும் தானே நடந்திருக்கிறது?

கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றம் வழிபாட்டையும் மாற்றியே தீரும். குடமுழுக்கு இடம்பெற்ற எல்லாக் கண்ணகி கோவில்களும் இப்படித் தான் பழைய வழிபாட்டு முறைகளிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல மாறிவருகின்றன. யாழ்ப்பாணம் முழுக்க கண்ணகி கோவில்களுக்கு நடந்தது இதுதான். பக்கத்திலேயே காரைதீவும் செட்டிபாளையமும் மிகச்சிறந்த உதாரணங்கள். (செட்டிபாளையத்தில் குடமுழுக்குக்குப் பிறகு சைவப்பூசகருக்கும் கட்டாடியாருக்கும் கருவறை நுழைவில் பெரிய முரண்பாடே ஏற்பட்டது).

“குடமுழுக்கு நடந்துவிட்டது என்பதால் ஆகமவிதிப்படி தினமும் ஆறுகாலப்பூசையோ முக்காலப்பூசையோ இடம்பெறவேண்டும், இனி கதவு திறப்பது, ஏனைய நாள்களில் திரைக்கு பூசை செய்வது எல்லாம் ‘ஆகாது’. எனவே நித்திய பூசை செய்வோம். ஆகமவிதிப்படி கப்புகனார் கருவறை நுழையமுடியாது என்பதால் அவரை விலக்கிவிட்டு சிவாச்சாரியாரை நியமிப்போம். ஆகமத்தில் குறிப்பிடப்படாத குளிர்த்திச் சடங்கையும் வைகாசிப் பொங்கலையும் கைவிட்டுவிடுவோம், பதிலாக வைகாசி மாதம் கொடியேற்றி ‘கண்ணகா பரமேசுவரிக்கு’ மகோற்சவம் நடாத்தினால் சரி” என்று எவராவது கிளம்பி வந்தால் அதற்கு நாம் கூறக்கூடிய பதில் என்ன?



அப்படி என்றால் என்ன செய்திருக்கவேண்டும்?

வீட்டிற்கு ஒரு தடவை தான் குடிபுகுவோம். வீட்டைத் திருத்தி வண்ணமடிக்கும் ஒவ்வொரு முறையும் குடிபுகுவதில்லை. மடாலயங்களும் அவ்வாறே. தேவையென்றால் தூண்களை தாராளமாக இடித்துக் கட்டியிருக்கலாம், வண்ணம் பூசியிருக்கலாம், ஆனால் நம் பாரம்பரிய அடையாளமான மண்டபங்களின் ஓட்டுக்கூரைகளையேனும் விட்டு வைத்திருக்க வேண்டும்.

உண்மையில் நம் மடாலயங்களின் வழிபாட்டு விதிமுறைகள் எல்லாம் தமிழிலேயே எழுதப்பட்ட “பத்தாசிகளில்” இருக்கின்றன. தமிழ்ப்பத்தாசிகள் ஆகமப்பத்ததிகளுடன் ஒப்பிடும் போது சுருக்கமானவை, எளியவை. அவற்றில் ஆலயக்கட்டுமானம் பற்றியோ பரிகாரங்கள் பற்றியோ விரிவான விளக்கங்கள் கிடையாது. நீங்கள் கோவிலொன்றில் ஆகமத்தை இறுக்க இறுக்க அங்கு வடமொழி நுழையும். தமிழ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும்.



என்றால் கோவில்களை ஆகமமயப்படுத்துவது தமிழுக்கு எதிரானதா?

கோவில்களை அமைப்பதற்கும், அவற்றை ஆகமப்படி பெருங்கோவில்களாகக் கட்டுவதற்கும் எவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இங்கு சொல்லப்படுவது தொன்மையான மடாலயக் கோவில்களை மேனிலையாக்கி ஆகமமயப்படுத்துவது பற்றி மட்டுமே. அது நிச்சயமாகத் தமிழுக்கு எதிரானது தான்.

இனம், மதம், அரசியல் சார்ந்து பல்வேறு அச்சுறுத்தல் தொடரும் போதும், கிழக்கிலங்கையில் சைவப்பற்று மங்கி மறையாமல் நீடிப்பதற்கான முக்கியமான ஒரு காரணம் ஏற்கனவே பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள எல்லாத் தமிழ் ஊர்களிலும் இருக்கும் “இரட்டை வழிபாட்டு முறைமை.”

கிழக்கிலங்கையின் எல்லா ஊரவர்களுமே தங்கள் ஊரில் அல்லது பக்கத்து ஊரில் அமைந்துள்ள ஆகமப்படி வழிபாடு நிகழும் தேசத்துக்கோவில் அல்லது திருப்படைக்கோவில் அல்லது பெருங்கோவில் ஒன்றுடன் வழிபாட்டு ரீதியாகப் பிணைக்கப்பட்டிருப்பார்கள். அதேநேரம் தமிழ்ப்பத்தாசி முறையில் வழிபடப்படும் மடாலய ஊர்க்கோவில் ஒன்றையும் தமக்கெனக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இவை இரண்டும் அருகருகே அமைந்திருப்பதும் உண்டு. ஆகம பிள்ளையார்/முருகன் கோவில் - பத்தாசி அம்மன் கோவில் என்றவாறு.

ஊர்க்கோவில்களாக மடாலயங்களும் அங்கு தமிழ் முறையில் சடங்கு/ பள்ளய/ வேள்வி/ கலியாணப்படிப்பு வழிபாடும் எஞ்சியிருந்ததால் தான் தமிழகத்தில் பெரும் எடுப்பில் நிகழ்ந்த - நிகழும் ‘தனித்தமிழ் வழிபாட்டு இயக்கம்’ சார்ந்த முன்னெடுப்பு எதுவும் கிழக்கிலங்கையில் தாக்கம் செலுத்தவில்லை. இன்று அந்த ஊர்க்கோவில்கள் எல்லாவற்றையுமே தூபியும் இராசகோபுரமும் கொண்ட பெருங்கோவில்களாக்கி அழகுபார்க்கிறோம். வடமொழி - ஆகமப் பெருங்கோவில், தமிழ் - மடாலய ஊர்க்கோவில் என்ற இரட்டை வழிபாட்டு முறைமை கண்முன்னே அழிந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே நாமும் நம் முன்னோரும் தவறிழைத்திருக்கிறோம். 1980களில் இந்த மண்ணின் வாத்தியங்களான பறையையும் சொர்ணாளியையும் கண்ணகி கோவிலிலிருந்து அகற்றி நாதசுரம் - மேளத்தை உள்நுழைய அனுமதித்தோம். வைகாசி தவிர்ந்த நாட்களில் பூட்டப்பட்டிருந்த கோவிலில் வெள்ளிப்பூசை, செவ்வாய்ப்பூசை என்று இரு வாரப்பூசைகளைக் கொணர்ந்தோம். மரபு மாறாமல் வைகாசி மாதத்தில் மட்டும் ஒருவாரம் திறந்திருந்த அவள் கதவை 2000களில் தைப்பொங்கலன்றும் திறந்து மூட அனுமதித்தோம். மட்டக்களப்புத் தேசத்தின் பண்டைய சிற்பக்கலையின் எச்சசொச்சங்கள் நீடித்த அழகான நாகதம்பிரான் கோவிலை இடித்தழித்து ஆகமப்படி அமைந்த புதிய பரிவாரக்கோவிலொன்றை உள்வீதியில் அமைத்தோம். அதுவரைக்கும் போதும் என்று தான் இருந்தது. ஆனால் இன்று நிகழ்ந்தது அவ்வாறல்ல.

பரிவார பிள்ளையார் கோவில். இதன் தூபியும் பழைய நாகதம்பிரான் கோவில் போல கிழக்கிலங்கையின் மரபார்ந்த சிற்பங்களால் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

எல்லாம் முடியும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது பேசி என்ன பயன்?

ஊரே மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வை எதிர்ப்பதை எண்ணி வருந்துகிறேன். இதில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் பெரும்பாலானோர் வேண்டுமென்றோ திட்டமிட்டோ இதில் ஈடுபடவில்லை என்பதும் தெரியும். ஆனால் இந்த எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்டாக வேண்டும் என்று விரும்புகிறேன். நடந்தது நடந்ததாகட்டும், இனியாவது நாம் தவறிழைக்கக்கூடாது.

ஆகமக்கோவில்களை ஆகமப்படியும் மடாலயக் கோவில்களை தமிழ்ப்பத்தாசி முறைப்படியும் பேணுவதில் நாம் உறுதி பூணவேண்டும்.

அதிகம் வலிப்பது வேறொன்று. கிழக்கிலங்கையின் மிகப்பழைய கண்ணகி கோவில்கள் தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவு ஆகிய மூன்றும் தான். காரைதீவு 1980களின் முற்பாதியிலேயே கருவறையில் தூபி எழுந்து ஆகமக்கோவிலாகி விட்டது. பட்டிமேடு கடந்த பத்தாண்டுகளுக்கு முன் முற்றாக இடிக்கப்பட்டு தூபியோடு குடமுழுக்குக் கண்டு ஆகமக்கோவிலாகி விட்டது. எஞ்சியிருந்தது தம்பிலுவில் கோவில் மட்டும் தான். 2000ஆம் ஆண்டளவில் நாகதம்பிரான், பிள்ளையார் பரிவாரக்கோவில்களிலும், முன்மண்டபத்திலும் செய்யப்பட்ட விரிவாக்கங்கள் தவிர அதன் கட்டுமானம் நூறாண்டுகளுக்குக் குறையாத பழைமை வாய்ந்தது.

ஒரு ஆய்வாளனாக, பண்பாட்டு ஆர்வலனாக இந்த மண்ணுக்குத் தனித்துவமான ஓடுவேய்ந்த கூரை கொண்ட கட்டடக்கலை எஞ்சியிருக்கும் கண்ணகியின் ஒரேயொரு பழங்கோவில் என் தாய்மண்ணில் மாத்திரமே உள்ளது என்று இறுமாந்திருந்தேன். குழந்தை தன் விளையாட்டுப்பொருளைக் காட்டி பெருமைபீற்றுவது போல, நான் சந்திக்கக் கிடைத்த ஆய்வாளர்கள், அறிஞர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அதன் கட்டடக்கலைத் தனித்துவத்தைக் காண்பித்து இறும்பூது எய்திக்கொண்டிருந்தேன். இனி அது இயலாது. என்றைக்குமென ஓர் பாரம்பரியச் சின்னம் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. அது மீளப்போவதே இல்லை என்பதை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது.

கேரளப்பாணி - அல்ல - சிங்களப்பாணி - அல்ல - ஈழத்தமிழ்ப் பாணி கருவறைக்கூரை. அதன் அழகைக் கெடுக்க உள்வீதியில் ஆர்ப்பாட்டமாக எழுந்த சுற்றுமண்டபம். பழைய கூரையின் கட்டமைப்பும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தளவு எஞ்சியிருப்பதை எண்ணியே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியது தான்.

அத்தனை வேதனைக்குப் பின்னும் சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட வைப்பது எஞ்சியுள்ள அவளது கருவறைக்கூரை. புதிய ஓடு மாற்றப்பட்டிருந்தாலும், பழைமை மாறாத ஓட்டுக்கூரை. கேரள, இல்லை, சிங்கள, இல்லை ஈழத்தமிழ்ப்பாணி ஓட்டுக்கூரை. கொங்கிரீட் சுவர்களில் தீந்தைகளில் மின்னிக்கொண்டிருந்த முன்மண்டபங்களின் அத்தனை ஆர்ப்பாட்டங்களின் பின்னும் தான் குடியிருக்கும் கூரை மாறத் தேவையில்லை என்று திருவுளம் கொண்டிருக்கிறாளே! அதுபோதும். இப்போதைக்கு பத்தாண்டு கழிந்த பின்னர் வரும் தலைமுறை அதையும் ஒழித்து மாற்றாதிருந்தால் போதும்.
🙏

மேலும் வாசிக்க »

தூவெண்மதி சூடி

0 comments

நிலவில் இந்தியாவின் சந்திரயானம் போய் இறங்கி இருக்கிறது. நிலவு சிவனின் முடியில் இருக்க, சந்திரயானம் இறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி முனை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நிலவின் நிலைமை இப்படியிருக்க, முப்பரிமாணக் கோளப் பொருளான சந்திரனை சிவன் இருபரிமாணப் பிறையாக தலையில் சூடுவது பற்றி நண்பரொருவர் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தார்.


சிவன் தலையில் பிறை சூடியிருப்பது சங்க இலக்கியங்களிலேயே பதிவாகியிருக்கிறது. அதியமான் நெடுமானஞ்சியிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவை சிவனுக்கு "பால்புரைப் பிறைநுதல் பொலிந்த சென்னி" என்கின்றாள். சிவன் பிறையைச் சூடியது (உரு 1) பற்றி புராணக் கதைகள் உள்ளன.

.
உரு 1. தூவெண்மதி சூடி

ஒரு கதை, தக்கனின் 27 புதல்வியரை மணந்துகொண்ட சந்திரன், அவர்களுள் உரோகிணி ஒருத்தி மீது மாத்திரம் அன்பு கொண்டிருந்ததால், தக்கனால் தேய்ந்தழிந்து போகுமாறு சபிக்கப்படுகிறான். அச்சாபம் தேய்ந்து வளர்வதாக சிவனால் மாற்றப்படுகிறது. மனைவியை ஆடவன் கைவிட்டால் என்ன நிகழும் என்பதை (சில கதைகளின் படி சந்திரனின் பத்தியை ) உலகுக்கு உணர்த்த அவனை தேய்ந்துபோன பிறையாகவே சூடிக்கொள்கிறார் சிவன்.

இன்னொரு கதையில் தொந்தியைத் தூக்கி பிள்ளையார் நடனமாடியதைக் கண்டு சந்திரன் சிரித்ததால் அவன் தேயுமாறு சாபம் பெறுகிறான். அக்கதையின் நீதியில் "உருவு கண்டு எள்ளாமை" (உருவக்கேலி செய்யவேண்டாம் என்பது) சொல்லப்படுகிறது.

தக்க சாபக் கதையில் வருவது பழங்கால மனிதனின் மிக அடிப்படையான இயற்கை அறிவு தான். பன்னிரு இராசி மண்டலத் தொகுதிகளின் வழியே நிலவின் சார்பியக்கத்தை அளவிடுவது ஒரு தொன்மையான காலக்கணிப்பு முறை. இதன் வழியே கணிக்கப்படுவது விண்மீன் சார் மதிவழி மாதம் (Sidereal Lunar Month). இதற்கு 27.3 நாள் எடுக்கும். இந்த 27 நாள்களிலும் நிலவு பன்னிரு இராசி மண்டலங்களூடும் இயங்குகின்றது. அந்தப் பன்னிரு இராசி மண்டலங்களையும் ஆக்குபவை இருபத்தேழு "நட்சத்திரங்கள்".

தக்கனின் இருபத்தேழு புதல்வியருக்கும் இந்திய வானியலில் பயன்படும் இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்களே கூறப்படுகின்றன. நட்சத்திரங்கள் என்றாலும் அவை உண்மையில் உடுத்தொகுதிகள் (Constellations) தான். ஆக, ஒரு மாதச் சுற்றின் போது, சந்திரன் ஒவ்வொரு நாளும், தன் ஒவ்வொரு மனைவியோடு இருக்கிறான். சரி தான். தக்கனின் சாபத்துக்குப் பிறகு திருந்தி விட்டான்.

சரி, ஐயத்துக்கே போவோம். சந்திரனை சிவன் பிறையாகச் சூடுவதாகச் சித்தரிப்பது தவறல்லவா?

இல்லை. காரணங்கள் மூன்று.

முதலாவது, அழகியல் காரணம். பிறை என்பது வான்பிறை அல்ல; அது வான்பிறை வடிவில் அமைந்த ஒரு அணிகலன். சூரியன், சந்திரன் வடிவில் அமைந்த இரு தலையணிகளை இன்றும் பரதம் ஆடும் மகளிரும் தமிழ் மணப்பெண்டிரும் சூடுவதுண்டு (உரு 1). நிலாத்துண்ட வடிவான பிறை பெண்டிர் கூந்தலில் விரும்பிச் சூடப்பட்டது. ஆனால் பிறை அணிகலனின் தொல்வடிவமொன்றை முதலில் சூடியவன் ஒரு ஆடவன். அதனால் அவன் பிறைசூடி.

பிறை அணிகலனின் ஆரம்ப வடிவம் கூந்தலில் செருகிக்கொண்ட பன்றியின் கொம்பாக இருக்கக்கூடும். (திருமுறைகளின் படி பன்றிக்கொம்பை சிவன் மார்பிலே அணிந்துள்ளான்). ஏனென்றால் எலும்பு, புலித்தோல், யானைத்தோல், பன்றிக்கொம்பு, கொக்கு இறகு, ஆமையோடு, பாம்பு முதலிய விலங்குப் பாகங்களை அழகுணர்ச்சியோடும் அலங்கார விருப்போடும் உடலில் அணிந்து பார்த்து வியந்த தொல்மானுடன் ஒருவனின் சிந்தையில் தோன்றிய முதுமுதல்வன் சிவன்.

உரு 2. ஆடல்மகளிரும் மணப்பெண்டிரும் அணியும் தலையணி. நெற்றிச்சுட்டி, சூரியப்பிறை, சந்திரப்பிறை.

இரண்டாவது, பிறையின் குறியீட்டியல். சூரியனும் சந்திரனுமே மிகப்பழைய காலக்கணிப்புக் கருவிகள். உலக நாகரிகங்களில் இடையறாது வளர்ந்து தேயும் பிறை, இயற்கையின் இயக்கத்தையும் காலத்தையும் விளக்க முயலும் தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிவன் காலகாலன். காலம் கடந்தவன். ஓயாது தேய்ந்து வளரும் நிலவின் ஒரு கலையை முடிமீது நிறுத்துமளவு அவன் காலத்தை - இயற்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்.

இன்னொரு விதத்தில் நிலவின் தேய்வும் வளர்வும் பெண்டிரின் மாதமுறை வட்டத்தோடு தொடர்புடையது என்பதால் (இரண்டும் அண்ணளவாக 30 நாள் வட்டம்), சில இடங்களில் பிறை பெண்மையைக் குறிக்கும். மதியை சூடியவன் மங்கையோர் பாகனும் தான்.

(விந்தையாக "மாதர் பிறைக்கண்ணி" என்று தொடங்கும் அப்பரின் கயிலைப் பதிகத்தில் சிவன் பிறை சூடியதும் பாகம் பெண்ணுரு ஆனவன் என்பதும் மீண்டும் மீண்டும் இணைத்தே பாடப்படுகின்றது).

மூன்றாவது, வரலாற்றியல் ஊகம். (இந்த ஊகம் சிவனடியாருக்கு உவப்பில்லாது இருக்கலாம்). சிவன் மிகப்பழைய ஒரு மலைக்குடித்தெய்வம். சிவனை மலையாகக் காணும் வழக்கம் வடக்கே கேதாரம், கயிலையிலும் தெற்கே அண்ணாமலையிலும் இன்றும் நீடிக்கிறது. அந்த மலையின் சுருங்கிய வடிவமே சிவலிங்கம். அவன் மனைவி பார்வதியும் மலைமகள். ஆக, சிவன் மலை தான். சிவந்த செம்மலை. வெண் தூளி அல்லது வெண்பனி அந்தச் செம்மலை முழுதையும் திருநீறென மூடிவிளங்குகின்றது. ( "நீறணி பவளக்குன்றம்" - திருவிசைப்பா).

அந்த மலை உச்சியில் பரந்துள்ள அடர்ந்த காடே சடை. சிவமலையின் உச்சியில் ஊறி காட்டாறு ஒன்று பாய்கிறது. (சடா டவீகலச்சல - சடைத்திரியாகிய காட்டினூடே கங்கைநீர் பெருகி வர - சிவதாண்டவ தோத்திரம்). அம்மலை முழுதும் கொடிய பாம்புகளும் உருத்திராக்க மரங்கள் உதிர்த்த விதைகளும் கொன்றை எருக்கு இலைச் சருகுகளும் இறந்த புலியின் தோலும் யானையின் தோலும் காணப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், அந்த எரிமலையில் வெடித்துக் குழம்பைக் கொட்டும் மூன்றாம் விழி ஒன்று என்றோ குளிர்ந்து கனிந்து விளங்குகிறது. யாரும் எளிதில் நெருங்கவோ உச்சியை அடையவோ முடியாதவாறு ஓங்கியுயர்ந்தது என்பதால் அது "அடிமுடி காணமுடியா" அண்ணாமலை! (அண்ணுதல் = நெருங்குதல், அடைதல். நாவால் அண்ண எளிதானது அண்ணம். உறவில் அண்ணியவன் அண்ணன். அண்ணாதது - அடையமுடியாதது.) அம்மலையின் தயவில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அம்மலை "பசுபதி".

வானில் பிறை எழும் நாளொன்றில் நீங்கள் இந்த மலையிலிருந்து தொலைவில் நிற்கிறீர்கள். மாலை மங்கும் நேரத்தில் விண்ணில் உதிக்கின்ற பிறை அம்மலைச் சாரலில் பொருந்தும் காட்சியைக் காண்கிறீர்கள் (உரு 3). ஆகா! இதே காட்சியை அண்ணாமலையில் கண்ட சம்பந்தரும் "அந்தி பிறை அணையும் சாரல் அண்ணாமலையாரே" என்று நெக்குருகிப் பாடுகிறார். சம்பந்தருக்கும் எனக்கும் உங்களுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக்காட்சியை மனுக்குலம் நெடுநாளாய்க் கண்டு வந்திருக்கும். வானளாவ உயர்ந்து விண்ணில் செல்லும் நிலவையும் சில கணங்கள் தன் மீது தரித்துக்கொள்ளும் மலை!


உரு. 3. "அந்திப்பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே" - திருமுறை 1:69:07

ஆதிமனிதனின் கூர்ப்பில் இரசனை உணர்வு என்ற ஒன்று தோன்ற ஆரம்பித்த முதல் தருணங்களில் அந்தக் காட்சியைக் கண்டு நம் மூதாதைக் குரங்கு வியந்திருக்கக்கூடும். அதன் கண்களை நிறைத்த பிறைசூடிய பெருமலையைத் தான் புராணங்கள் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து பிறைசூடிய பெம்மானாக வளர்த்தெடுத்திருக்கின்றன என்று சொன்னால் அது தவறாகாது.

பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தின் முன்னிலையில் மிக எளியவனான மானுடன் தன்னை எப்படி முன்வைக்கிறான் என்பதில் இருக்கிறது அவனது செயலூக்கமும் தன்முனைப்பும். அழகான வான்பிறையை அணிகலனாகச் சூடலாமா என்ற வியப்பில் தோன்றிய இரசனையும் அழகுணர்ச்சியும் மானுடனின் தீராத்தேடலின் விளைவு தான். அந்தத் தேடலே தன்னை மீறிய பெருஞ்சக்தி நிலவைச் சூடுமளவு பெரியது, காலத்தை வென்றது என்று கண்டுகொண்டு அதை பிறைசூடிய பெம்மானாகச் சித்தரிக்க வழிவகுத்தது. நீல் ஆம்சுரோங்க் முதல் நேற்றைய சந்திரயானம் வரை மனிதகுலத்தை மதிக்கே கொண்டுவந்து விட்டதும், அதே தேடல் தான். அந்தத் தேடலை இறைநம்பிக்கையாளர்கள் சமயமாக எண்ணி இறும்பூதெய்தலாம். இறைமறுப்பாளர்கள், அதை மானுடப் படைப்பாற்றல் அடைந்த வளர்ச்சியாகக் கண்டு நிமிரலாம்.


தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான். மால் அயன் முதற்கொண்டு நமக்கு விதிக்கப்பட்டது அதுவே. அடிமுடி தேடல். என்றோ ஒருநாள் அந்தத் தேடல் தீரும். அன்று நாம் காலத்தைக் கடந்திருப்போம். அந்த நாள் எப்போதைக்குமென முடியில் நிலாச்சூடியவன் நம்முன் தோன்றிப் புன்னகைப்பான்.
மேலும் வாசிக்க »

பொலனறுவைச் சோழர் கோவில்கள்

0 comments

 (கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு இதழின் 2023 ஓகத்து மாத இதழில் வெளியான கட்டுரை. இதழை இங்கு படிக்கலாம்)

 

பொலனறுவை இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் “ஜனநாதமங்கலம்” என்ற பெயரில் ஆண்ட பூமி. அவர்களிடமிருந்து இலங்கையை மீட்ட விஜயபாகு மன்னன் அரசு புரிந்த மண். இலங்கையின் புகழ்பெற்ற மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் உள்ளிட்ட பலர் வாழ்ந்த தலைநகர். கலிங்க மாகோன் இறுதி மன்னனாக வீற்றிருந்து ஆண்ட நிலம்.


கடந்த ஒரு மாத இடைவெளியில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று நண்பர்களோடு பேசக்கிடைத்தது. அதிசயமாக மூவருமே பொலனறுவை பற்றிப் பேசினார்கள். இருவர் அங்கு குடும்பத்தோடு சுற்றுலா போய் அங்கிருந்த சைவ – வைணவக் கோவில்களைப் பார்வையிட்டு வந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவரால் இரண்டே இரண்டு கோவில்களையே பார்க்க முடிந்திருந்தது. அவர் பாவமாக “பொலனறுவையிலுள்ள பெரும்பாலான சோழர் காலக் கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. கூகிள் வரைபடத்திலும் ஒழுங்கான தரவு இல்லை. அந்தக் கோவில்கள் பற்றிய விபரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டார்.

 

பொலனறுவையில் அமைந்திருக்கும் பெரும்பாலான சைவ – வைணவக் கோவில்கள் ஈழத்தில் சோழரின் ஆட்சி ஏற்பட்ட பின்னணியிலேயே எழுந்தவை. அவற்றை மேலோட்டமாகப் பார்ப்பது, ஈழத்துக்கும் சோழத்துக்குமான வரலாற்று உறவைப் ஆராய்வதற்கு ஒரு அறிமுகமாக நமக்கு அமைவதுடன், பொலனறுவைக்குச் சுற்றுலா செல்லும் ஏனையோருக்கும் அவற்றைப் பார்த்துவருவதற்கு வசதியாக இருக்கும். எனவே இன்றைய தொடரில் அந்தக் கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம்.


இலங்கையின் பிரித்தானியர் காலத் தொல்லியல் ஆய்வேடுகளின் படி, பொலனறுவையில் மொத்தம் பதினான்கு சைவ - வைணவக்கோவில்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றை மேற்கோள் காட்டி, பேராசிரியர் பத்மநாதன் தன் “இலங்கையில் இந்து கலாசாரம்” நூலில் விரிவான தகவல்களைத் தந்திருக்கிறார். அவர் தரும் பட்டியலின் படி, சிவன் கோவில்கள் ஏழு, திருமால் கோவில்கள் ஐந்து, கொற்றவை கோவில் ஒன்று. இன்னொன்று அகழப்பட்டபோது இன்ன கடவுளுக்கு உரியதென அடையாளங் காணப்படாத கோவில் - ஆக மொத்தம் பதினான்கு.

 

அடையாளம் காணப்படாத கோவிலருகே பிற்காலத்தில் பிள்ளையார் சிலையொன்று கிடைக்கப்பெற்றதால் அதை பிள்ளையார் கோவில் என்று கருதுகின்றனர். சிவன் கோவில்களுக்கும் திருமால் கோவில்களுக்கும் அவை அகழாய்வில் இனங்காணப்பட்ட வரிசையில் முதலாம் இலக்க சிவாலயம், இரண்டாம் இலக்க சிவாலயம், முதலாம் இலக்க விண்ணகரம், இரண்டாம் இலக்க விண்ணகரம் என்றவாறு இலக்கமிடப்பட்டுள்ளன.  விண்ணகரம் என்றால் திருமால் கோவில். பொலனறுவையின் சிவாலயங்களுக்கும் விண்ணகரங்களுக்கும் சூட்டப்பட்ட பெயர்கள் அவை கண்டறியப்பட்ட ஒழுங்கில் தான் என்பதால் அதை வைத்து அக்கோவில்களின் பழைமையை அளவிடக்கூடாது.

 

ஆனால் இந்தப் பட்டியலையும் நேரடி அவதானிப்பையும் வைத்துப் பார்த்தபோது கிடைத்த பெறுபேறுகள் வேறு. பொலனறுவையில் ஏழு சிவாலயங்களுக்குப் புறம்பாக தொல்லியல் அறிக்கைகளில் “சிவாலயம் ஏ (A)” என்று அடையாளமிடப்பட்ட எட்டாவது சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. ரன்கொத் விகாரத்தை அண்டி “தேவாலயம்” என்று இனங்காணப்பட்டுள்ள குறைந்தது இரண்டு கட்டட இடிபாடுகள் காணப்படுகின்றன. இவையும் சைவ – வைணவத் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த கோவில்கள் என்று கொள்ளலாம்.

 

முதலாம் விண்ணகரம் என்று அடையாளமிடப்பட்ட திருமால் கோவில் இன்று இல்லை. பிரித்தானிய தொல்லியல் அறிக்கைகளை ஆராய்ந்தால், இரண்டாம் சிவாலயத்தையே ஆரம்பத்தில் “முதலாம் விண்ணகரம்” என்று அடையாளப்படுத்தி, பின்பு தொடர்ச்சியான அகழாய்வுகளின் வழியே அது சிவாலயம் என்பதை அறிந்து அதற்கு “இரண்டாம் சிவாலயம்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

 

ஐந்தாம் விண்ணகரத்தினதும் கொற்றவை கோவிலினதும் அமைவிடங்கள் பற்றிய தகவல்கள்  கிடைக்கின்ற போதும்,  புலத்தில் அவை இரண்டும் இன்று மறைந்துவிட்டன. அவை அங்கு தான் காட்டில் எங்கேனும் மறைந்திருக்கவேண்டும். அல்லது தெரிந்தோ தெரியாமலோ அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையின் தொல்லியல் முக்கியத்துவமிக்க சுற்றுலா நகரொன்றில் ஆவணப்படுத்தப்பட்ட இரு தொல்லியல் தலங்கள் வெறும் நூறாண்டுகளில் தடயமேதுமின்றி மறைந்துவிட்டன என்பது அவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தி இல்லை.

 

ஆக, இப்போது கிடைக்கின்ற தரவுகளின் படி, சிவாலயங்கள் எட்டு, விண்ணகரங்கள் மூன்று, பிள்ளையார் கோவில் ஒன்று என்றவாறு மொத்தம் 12 சைவ – வைணவக் கோவில்களை நீங்கள் பொலனறுவையில் தரிசிக்க முடியும் (உரு.01). அடையாளம் காணப்படாமல் ரன்கொத் விகாரத்தின் அருகே உள்ள இரு கோவில்களையும் சேர்த்தால், அதே பதினான்கு கணக்கே வருகின்றது.


உரு. 01 பொலனறுவைச் சோழக் கோவில்களின் அமைவிடம். இனங்காணல் வசதிக்காக பௌத்த விகாரங்களின் அமைவிடங்கள் காட்டப்பட்டுள்ளன. இலக்கங்கள் கோவிலைக் குறிக்கும். உ-ம். 1 – முதலாம் சிவாலயம்

 

கேள்விப்பட்டதும் தாமதிக்காமல் இந்தப் பதினான்கு கோவில்களையும் பார்ப்பதற்கு பொலனறுவைக்கு சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டீர்கள் என்றால், கொஞ்சம் பொறுங்கள். இந்தக் கோவில்களில் நாம் இரசிக்க வேண்டியவை என்னென்ன என்பதைப் பார்க்கவேண்டி இருக்கிறது. முதலாம் - இரண்டாம் சிவாலயங்கள் ஓரளவு பிரபலமானவை என்பதால் அவற்றைக் கண்டுபிடிப்பது சுலபம். ஏனையவற்றுக்கென நிறுவப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் பல சிதைந்துள்ளன. தெளிவான குறிப்புகளும் ஓரிரு கோவில்களுக்குத் தான் வைக்கப்பட்டுள்ளன.

 

பொலனறுவையில் பௌத்தத் தலங்களான  தலதா முற்றம், இரன்கொத் விகாரம், கிரி விகாரம், கல் விகாரம், பவள விகாரம் (சிங்களம்: பபளு விஃகார), மாணிக்க விகாரம் (சிங்களம்: மெணிக் விஃகார) என்பன சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என்பதால் அவற்றுக்கு தெளிவான வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. அவற்றை வைத்து இந்தக் கோவில்களைத் தேடிப் பிடிப்பது இலகுவாக இருக்கும்.

 

கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் A11 இலக்க திருக்கொன்றையடிமடு – மருதங்கடவலை வீதியானது பராக்கிரம சமுத்திரம், பெந்திவாவி (தோப்பவாவி) எனும் இரு ஏரிகளின் கரையோரமாக பொலனறுவை புனித நகரை ஊடறுத்துச் செல்கின்றது. பொலனறுவைத் தொல்லியல் மையத்துக்கான பிரதான நுழைவிடம், இந்த ஏ11 வீதியோடு இங்குராங்கொடை வீதி இணையும் சந்தியிலிருந்து தெற்கே ஒரு கிமீ தொலைவில் இடப்பக்கமாக வருகின்றது. பிரதான நுழைவிடத்தில் நுழைந்ததும் நுழைவுச்சீட்டு நிலையத்தின் அருகே வீதியின் மறுபுறம் அமைந்திருப்பது முதலாம் சிவாலயம். முதலாம் சிவாலயத்துக்கு வடக்கே தான் தலதா முற்றம் அமைந்துள்ளது. நான்காண்டுகளுக்கு முன்னர் பெய்த கடும் மழையில் முதலாம் சிவாலயம் சிதைந்துவிட்டபடியால் தற்போது தொல்லியல் திணைக்களத்தால் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

மேலும் வாசிக்க »

சுத்த சைவம்: சைவ மறுமலர்ச்சிக்கான பிள்ளையார் சுழி

2 comments

 சைவத்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான “பெரியபுராணம்” பற்றி ஒரு கதை இருக்கிறது. பெரியபுராணத்தை சேக்கிழார் தில்லையில் அரங்கேற்றி முடித்ததும், அப்போது சோழநாட்டை ஆண்ட அநபாயச் சோழன் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1113-1150), தன் பட்டத்து யானையில் அவரையும் நூலையும் தன்னுடன் ஏற்றி ஊர்வலமாகச் சென்றதுடன், தானே அவருக்குக் கவரியும் வீசினான். ஒரு பேரரசின் சக்கரவர்த்தி ஒரு நூலையும் அதன் ஆசிரியரையும் யானையில் ஏற்றி தானே சாமரம் இரட்டிக் கௌரவித்த பெருமையைத் தக்கவைத்ததாக உலகவரலாற்றில் பதிவு செய்துள்ள நூல், பெரிய புராணம் மாத்திரமே.


கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர், பெரியபுராணம் போலவே யானை மேல் எழுந்தருளிய பெருமையை  சைவத்துக்கும் தமிழுக்கும் முக்கியமான இன்னொரு பெருநூல் தட்டிக்கொண்டது. அந்நூலின் பெயர் சுத்தசைவம். பெரியபுராணம் யானை மேலெழுந்தருளியது சோழமண்ணில். சுத்தசைவம் யானை மேலெழுந்தருளியது ஈழமண்ணில்.


கொழும்பு சம்மாங்கோட்டுப் பிள்ளையார் கோவிலில் சுத்தசைவம் யானை மீது எழுந்தருளல்

“சுத்தசைவம்: வேத ஆகம மரபுகளும் பன்னிரு திருமுறை மெய்கண்ட சாத்திர உண்மைகளும் கூறும் வர்ணாசிரமம் நீங்கிய நன்மை பெருகு அருள்நெறி”  என்பது அந்நூலின் முழுப்பெயர்.  திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சைவ அறிஞர் திரு.செயச்சந்திரன் முருகவேள் அவர்களால் எழுதப்பட்டு கடந்த 2022இல் புனிதர் பேரவை அமைப்பால் அது வெளியிடப்பட்டது . ஒற்றைவரியில் சொல்வதென்றால், சைவ சமயம் வருணாச்சிரமம், சாதியம் முதலிய பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை வேதங்கள், ஆகமங்கள், தமிழ்ச்சைவ நூல்கள் முதலியவற்றிலுள்ள சான்றுகளைக் கொண்டு ஆணித்தரமாக நிரூபிக்கும் நூல், சுத்தசைவம்.



இந்தியப்பண்பாட்டில் மிக முக்கியமான கருத்தியல்களுள் ஒன்று வருணாச்சிரமம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர் (அந்தணர்), சத்திரியர் (அரசர்), வைசியர் (வணிகர்), சூத்திரர் (உழவர் முதலானோர்) என்று நான்கு வருணங்களாக மக்களைப் பிரிப்பதும், அவர்களிடையே படிநிலை கற்பித்து ஏற்றத்தாழ்வு கூறுவதும் வருணாச்சிரமத்தின் அடிப்படை. இந்திய சமூகத்தில் வருணாச்சிரமக் கோட்பாட்டின் பெயரில் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற அட்டூழியங்களும் அநியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல.  சுத்தசைவமோ இந்தப்படிநிலை ஏற்றத்தாழ்வைச் சொல்லும் வருணாச்சிரமக் கோட்பாட்டின் அடிப்படையையே தகர்த்தெறிவதுடன், வருணக்கோட்பாடு மீது சைவம் கொண்டிருந்த முற்போக்கான பார்வையையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. 


முதல் படலமான உபோற்காதம், சைவ சமயத்தைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தருகின்றது. சைவ சமயத்தில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்நூல் சைவம் என்று விசேடமாகக் குறிப்பது மெய்கண்டார் வழிவந்த சைவ சித்தாந்தத்தை. இந்த முதற்படலத்தின் சிறப்பம்சமே, சைவ சமயத்துக்கான சமயநூல் கட்டுமானத்தை அது தெளிவாக விவரிப்பது தான். கிறித்தவருக்கு விவிலியம், முகமதியருக்கு குரான், புத்தருக்கு திரிபிடகம் என்று கற்றவர்களுக்கு, சைவத்தின் நூற்கட்டுமானம் சற்று விந்தையாகவே தென்படும். ஏனெனில் சைவம் பொதுநூல், சிறப்புநூல் எனும் இருவகை நூல்களை ஏற்றுக்கொள்கின்றது. 


பொதுநூல் என்பதை “பல செய்திகளையும் பல தெய்வ வழிபாட்டையும் வெளிப்படையாகக் கூறி அவற்றின் உட்கிடையான பரம்பொருளை […….] மறைமுகமாகத் தெரிவிக்கும் முதல் நூல்களும், அவற்றின் வழிவந்த […..] நூல்களும் பொதுநூல்கள் எனப்படும். இவை ஏனைய சமயத்தவரும் தத்தமக்கு ஏற்புடைய வகையில் – தத்தம் பக்குவத்துக்கேற்பப் புரிந்துகொண்டு பொருள் கண்டு பிரமாணமாகக் கொள்வதற்கும், வெவ்வேறு தெய்வங்களை வழுத்துவதற்கும் இடமளித்து விளங்கும்” என்று வரையறுக்கிறது இந்நூல். 

நான்கு வேதமும் வேதவழி வந்த நூல்களும் சைவருக்கு பொதுநூல்கள். இவை சைவருக்கு மட்டுமன்றி வைணவர், சுமார்த்தர் முதலிய இந்தியச் சமயிகளுக்கும் முதன்மையான நூல் என்பதால் பொதுநூல். வேதவழி வந்த நூல்கள் புராணங்களும் இதிகாசங்களும். இவற்றோடு உலகப்பொதுமறை என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படும் திருக்குறளும் சைவருக்குப் பொதுநூல். “திருவள்ளுவர் சைவரா” என்பது தமிழ் அறிஞர் உலகில் அடிக்கடி எழும் ஒரு விவாதம். திருக்குறளை பொதுநூல் என்று அங்கீகரிக்கும் சுத்தசைவம், சைவர்கள் திருக்குறளுக்குக் கொடுக்கவேண்டிய இடம் என்ன என்பதை ஐயம்திரிபற நிலைநாட்டிவிடுகிறது.  


ஆனால் சிறப்புநூல்கள் என்பவை சிவபெருமானை பரம்பொருளாகத் தெளிவாக அடையாளப்படுத்துவன.  சைவத்தின் சிறப்புநூல்கள் மூன்று வகைப்பாட்டுக்குரியவை. ஒன்று, சிவாகமங்கள். இரண்டு, தமிழ் பன்னிரு திருமுறைகள், மூன்று, பதினான்கு சாத்திரங்கள் உள்ளிட்ட ஆகமத்தின் வழிநூல்கள்.


எவ்வாறெனினும், சிறப்புநூல்களே சைவத்தின் முதன்மையான நூல்கள் என்பதால், பொதுநூல்களை சிறப்புநூல்களைக் கொண்டே பொருள்கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.  ஆகமங்களும் திருமுறைகளும் வேதங்களைப் போற்றுவது உபசார வழக்கு என்பதும் வேதங்களை முழுமுற்றான உண்மைகள் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல், சைவனொருவன் ஆகமத்தின் நிழலிலேயே வேதத்தைப் பொருள்கொள்ளவேண்டும் என்பதை சுத்தசைவம் மேலும் வலியுறுத்துகிறது.


இப்படி பலநூல்களை பட்டியற்படுத்தும் சுத்தசைவம், இப்படி அளவுகணக்கின்றி பல்கிப்பெருகியுள்ள சைவநூல்களுக்கு எந்த எல்லை வரை முக்கியத்துவம் கொடுப்பது என்ற கேள்வியையும் எழுப்பி அதற்கான பதிலையும் சொல்கிறது.


“…இறைவனும் அவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார்களும் அருளிய நூல்களில், அறிவிக்கப்பட்டோரின் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சியில் உள்ள வேறுபாடுகளால், சிற்சில இடங்களில் கூறப்படும் செய்திகள் ஒன்றோடொன்று முரண்படுவது போல் வருவதுண்டு. [……] இவ்வாறு முரண்படுமாறு தோன்றும் செய்திகளை தக்கமுறையில் நடுநிலையோடு சீர்தூக்கி, விரோதமின்றி, அவற்றின் தாரதம்மியம் அறிந்து எவரும் ஏற்கும் வகையில் நின்று ஆய்ந்து தெளிவது அவசியம்.” 


இப்படி பலதரப்பட்ட நூல்களை சைவம் ஏற்கும் போதும், அத்தனை நூல்களையும் ஐயம் திரிபற முழுக்க முழுக்கப் பிரமாணமாக ஏற்பது தகாது என்ற புரட்சிகரமான கருத்தை சுத்தசைவம் முன்வைக்கிறது. நூல்களில் பல இடங்களில் இடைச்செருகல்கள், நீக்கல்கள், திருத்தங்கள், மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அருளாளர் வாக்குகளிலிருந்தும் புறச்சான்றுகளிலிருந்தும் மேற்கோள் காட்டும் நூலாசிரியர், “இவ்வனைத்து நூல்களும் சைவத்தையும் இறைவனையும் ஒருவாறு விளக்க எழுந்தனவேயொழிய வரையறுக்க அல்ல” என்பதை வலியுறுத்தி சைவர் நூல்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தின் எல்லையையும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிடுகிறார். எனவே சைவர்கள் “நூல் கருத்துக்களை ஒன்றோடொன்று வைத்து ஒப்பிட்டு, அதன் உட்கிடையைக் கருதி, ஏனைய அளவை முறைகளால் அறியப்படும் செய்திகளுக்கும், சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளோடு முரணாதவாறு இருக்கிறதா என்றும் கருதி” தங்கள் நூல்களைப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று கூறி நிறைவுபெறுகின்றது முதலாவது உபோற்காத படலம். 


இரண்டாவது படலம், வர்ணத்துவம் என்ற தலைப்பைக் கொண்டது. இந்தியப்பண்பாட்டில் அடிக்கடி ஒருமித்துக் கூறப்படும் வருணம், ஆசிரமம், சாதி இவை மூன்றும் ஒன்றல்ல என்ற வேறுபாட்டைக் கூறியபடி துவங்கும் இந்தப் படலம் வருணம் பிறப்பால் ஏற்படுவது என்பதை தகுந்த சான்றுகளைக் கொண்டு மிகக்கடுமையாக நிராகரிக்கின்றது. சூத்திரரும் பெண்களும் வேதம் ஓத அதிகாரம் படைத்தவர்கள் தான், ஒரு சைவரால் தனக்கென விதிக்கப்பட்ட வருணத்தை மாற்றமுடியும் முதலிய விடயங்கள் சிவமகாபுராணம் முதலிய வைதிக நூல்களிலிருந்து சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று பொதுவெளியில் பரவலாக விமர்சிக்கப்படுவது போலன்றி,  சூத்திரன் வேதம் கேட்டால் உருக்கிய ஈயத்தைக் காதில் ஊற்றச்சொல்லும் ஒரு மரபுக்கு முற்றிலும் எதிரான ஒரு மரபு சைவத்தின் பெயரால் நீடித்ததை இந்த வாதங்களின் வழியே நாம் கண்டடைகின்றோம்.


சுத்தசைவத்தின் மூன்றாவது படலத்தை இரண்டாவது படலத்தின் தொடர்ச்சி எனலாம். தமிழரின் நாற்பால் பாகுபாடுகளும் வர்ணத்துவமும். தொல்காப்பிய உரையாசிரியர்களிலிருந்து இன்றைய அறிஞர்கள் வரை மீளமீளச் சொல்லப்படும் பிராமணர் = அந்தணர், சத்திரியர் = அரசர், வைசியர் = வணிகர், சூத்திரர் = வேளாளர் என்ற சமப்படுத்தலை ஒவ்வொன்றாகத் தகர்க்கிறார் ஆசிரியர்.


கல்வெட்டுகளில் சூத்திரர் என்று குறிப்பிடப்படுவோரில் பல் சமூகங்களைச் சேர்ந்தோரும் சோழப்பேரரசில் உயர்பதவிகளை வகித்தோரும் அடங்குவதுடன், இராசராசசோழனுக்கே சூத்திரசோழன் என்றோர் பட்டம் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. மேலும், சங்ககாலத்திலிருந்தே நால்வருணத்துக்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் இருந்தன என்ற கூற்றுக்கு எதிராக பறையன், புலையன் முதலிய குடிசார் சொற்கள் எவ்வித இழிவுமின்றி இயல்பாகவே எடுத்தாளப்பட்டிருப்பதை சங்க இலக்கிய நூல்களிலிருந்து ஆசிரியர் நிறுவுகிறார்.


நான்காம் படலம் “சாதித்துவம்” என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது. சாதி என்பது நடைமுறைத் தேவைக்காக கற்பிக்கப்பட்டதே தவிர, சாதியம் உயிருக்கோ உடலுக்கோ அல்ல  என்பதை உபநிடத மற்றும் சைவ நூல் வரிகளை முன்வைத்து நிறுவுகின்றது இந்தப்படலம்.


ஐந்தாம் படலம் “தர்மமும் அறமும்” என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. தர்மம் என்ற வடமொழிச்சொல், பொருள், இடம், காலம் என்பவற்றைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்படக்கூடிய ஒரு பொருண்மையைக் குறிக்கும் என்பதும், அறம் என்ற தமிழ்ச்சொல் அருளை அடிப்படையாகக் கொண்டு “அறுத்து வாழ்தல்” என்று பொருள்படும் என்பதும் இதில் விளக்கப்படுகின்றன..


“தொடர்புடையோரிடம் வரும் ஈரம் அன்பு. தொடர்பற்றோரிடமும் வரும் ஈரம் அருள். அன்பின் முதிர்ச்சி அருள். இதை வள்ளுவர் அருளெனும் அன்பீன் குழவி என்று விளக்குவார். [……] அருளின்றிச் செய்யப்படுவது அறம் ஆகாது.”


ஆனால் வருணாச்சிரம தர்மம் அருளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால்,  அது அறத்தை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல. உதாரணம், இராமாயணத்தில் வருகின்ற சம்பூகன் வதைப்படலம். “சூத்திரன் தவம் செய்தல் தடை” என்ற வருணாச்சிரம தருமத்தைக் காப்பதற்காக சத்திரிய இராமனால் கொல்லப்பட்டவன் சூத்திரனான சம்பூகன்.  அது ஏன் அறமற்ற செயல் என்பது இராமாயணம் பற்றிய ஏனைய வியப்பூட்டும் தகவல்களுடன் இந்நூலில் விரிகின்றது.


வருணாச்சிரம விதிகளை வகுத்துரைப்பதால், தர்மசாத்திரங்களாக ஒரு சாராரால் கொண்டாடப்படும் சுமிருதி நூல்கள் (மனுசுமிருதி முதலியவை) அறமற்றவை. ஏனென்றால் சுமிருதி நூல்கள் சூத்திரரை பிறப்பால் தாழ்த்தி அவர்கள் மீது காழ்ப்பையும் வன்மத்தையும் கக்குகின்றன. பெண்களை ஒருபடி தரம்தாழ்த்தி நுகர்பொருளாக மாத்திரமே பார்க்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒரே சமூகத்தின் குடிமக்களில் ஒவ்வொருவரும் செய்யும் ஒரே குற்றத்துக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கின்றன. இன்னும், புலாலுண்ணலைப் போற்றுவது, சக மனிதனொருவனுடன் உடன் உண்ணாமை, பகிர்ந்துண்ணாமையை வலியுறுத்துதல், என்று இப்பட்டியல் நீள்கின்றது. அறமும் அருளும் அற்ற வருணாச்சிரம விதிகளைக் கூறும் சுமிருதிகளை சைவர் மாத்திரமல்ல; அறிவுடையோர் எவரும் தள்ளவேண்டும் என்பது சுத்தசைவம் விடுக்கும் அறைகூவல்.


இனி வருகின்ற ஆறாம் படலம் தான் இந்நூலின் மிக முக்கியமான - மிகப்பெரிய பகுதி. “சைவ நூல்களில் வர்ணமும் சாதியும்”. சைவதீட்சை பெற்றுக்கொள்வற்கு பிறப்பு அடிப்படையிலோ பால் அடிப்படையிலோ எவருக்கும் மறுப்புச் சொல்லப்படவில்லை. தீட்சையின்  பின்னர் அவனது பழைய சாதியும் வருணமும் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு சிவதீட்சை பெற்ற ஒருவனுக்கு சாதியும் வருணமும் இல்லை என்பது மதங்கபாரமேசுவரம், அசிந்திய விசுவசாதாக்கியம், உத்தர காமிகம், கிரணம், இரௌரவம் முதலிய ஏராளமான ஆகம வசனங்களைக் கொண்டு நிறுவப்படுகின்றது. மிகச்சிக்கலான ஆகம வசனங்கள், வைதிக நூல் வரிகளுக்கு இந்தப்படலம் சரியான பொருளைக் கொடுக்க முயல்கிறது.


பரமனைக் கயிலையில் கண்ட காரைக்கால் அம்மை, ‘மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்று வேண்டுகிறார். […..] அருளாளர்கள் எல்லாம் உணர்த்துவது இது. அடுத்த வினாடி நமக்கு என்ன நிலை என்பதை நாம் அறியோம். நமக்குக் கதியுண்டா மீண்டும் பிறவியடைந்து உழலும் விதி உண்டா என்பதும் நாம் அறியோம். திருவருள் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. நம் நிலையையே நம்மால் உறுதியாக அறிய இயலாத போது, அடுத்த உயிர் நம்மை விடத் தாழ்வானது / உயர்வானது என்பதெல்லாம் நம் சிற்றறிவுக்குப் புலப்படுமோ? எனவே [சாதி, வருணம் என்ற பெயர்களில் ஒருவரோடொருவர்] பேதம் பாராட்டுவது மட்டித்தனமே.


ஏழாவது படலம் அத்தனை சான்றாதாரங்களையும் தொகுத்து, சுத்த சைவம் வருணப் பாகுபாட்டைக் கடந்த ‘அதிவருணாச்சிரம’ நெறி என்பதை சாதிக்கிறது. அதற்கு முதற்பெரும் ஆதாரமே மெய்கண்ட சித்தாந்தத்தின் சந்தான குரவர் ஆசாரியர் பரம்பரை தான். வேளாண் குடியினரான மெய்கண்ட சிவனார், அவரது தந்தையின் குலகுருவாயிருந்து அவருக்குச் சீடராய் அமர்ந்த ஆதிசைவ குலத்து அருணந்தி சிவனார், அருணந்தியாரின் சீடரான பிராமணர் மறைஞான சம்பந்தர், மறைஞானசம்பந்தரின் சீடரான தில்லைவாழ் அந்தணர் உமாபதி சிவனார். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்நால்வரால் தாபிக்கப்பட்டது என்பதே சுத்த சைவம் ஓர் அதிவருணாச்சிரம நெறி என்பதற்கான வெள்ளிடை மலை ஆதாரம்.



சைவ சந்தானகுரவர்

இனி வரும் பின்னிணைப்புகளில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை மெய்யியல், சைவ ஆகமங்கள் பற்றிய சுவையான குறிப்புகள், உயிர்ப்பலியும் சைவமும், மந்திரங்களின் பலன், சிவலிங்க வழிபாடு என்பன பலவாறு விரித்துரைக்கப்படுகின்றன. 


இவற்றில் இரு அனுபந்தங்கள் முக்கியமானவை. முதலாவது   “சைவமும் சுமார்த்தமும்” எனும் பத்தாவது அனுபந்தம். “சுமார்த்தம்” என்ற புதிய சொல்லைக் கண்டு யாரும் மருட்சிகொள்ளத் தேவையில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணியிலோ அதற்கு முன்போ பொன்னியின் செல்வன் வாசித்தோருக்கு – பார்த்தோருக்கு இந்த சுமார்த்த சமயத்தவர் பரிச்சயமானவர்கள் தான். ஆழ்வார்க்கடியான் அறிமுகமாகும் அத்தியாயத்தில் / காட்சியில் அவர் ஒரு வீரசைவருடனும் வேதாந்தி ஒருவருடனும் வாதம் புரிந்துகொண்டிருப்பார் அல்லவா. சைவரோ வைணவரோ அல்லாமல் மூன்றாவது தரப்பாக நாவலாசிரியரால் ‘வேதாந்தி’ என்று சுட்டிக்காட்டப்பட்டவர் தான் சுமார்த்தர். அந்த சந்தர்ப்பத்தில் “அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு” என்று வந்தியத்தேவனின் தீர்ப்பாக வெளிவரும் வார்த்தைகள்  அதே சுமார்த்த மதத்தைச் சார்ந்த நாவலாசிரியரின் சமயக் கோட்பாடும்தான்.


பொன்னியின் செல்வன் பாகம் 01: ஆழ்வார்க்கடியான், வேதாந்தி, வீரசைவர்,  வந்தியத்தேவன்


சுமார்த்தம் என்றால் “சுமிருதிகளை அடிப்படையாகக் கொண்டது” என்று பொருள். சுமிருதிகள் தான் வருணாச்சிரமக் கோட்பாட்டை மிகக்கடுமையாக வலியுறுத்துபவை. சுமார்த்தர்களில் பெரும்பாலானோர் நடைமுறையில் புரோகிதத்தொழில் புரியும் பிராமணர்களாக உள்ள போதும், இவர்கள் கோட்பாட்டு அடிப்படையில் ஆதிசங்கரரையும் அவரது அத்துவைதக் கோட்பாட்டையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வர். சங்கரரின் அத்துவைதம், “கடவுள், உயிர் என்றெல்லாம் வெவ்வேறு பொருட்கள் உலகில் இல்லை; எல்லாம் ஒன்று தான்; கடவுளே ஆன்மா; நானே கடவுள்” என்கிறது.  எனவே சிவன், திருமால் என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை ஒரே பிரம்மத்தின் வடிவங்கள் தான். 


சைவமும் வைணவமும் ஒருதெய்வக் கொள்கையைக் கொண்டவை என்பதால், அவை கடும்போக்குவாத சமயங்கள் என்ற பொதுப்பார்வை ஏற்பட்டுள்ள நிலையில், சுமார்த்தர்கள், “இந்தச் சைவரும் வைணவரும் அடிப்படைவாதிகள். நாங்கள் மிதவாதிகள். எங்களுக்கு எம்மதமும் சம்மதம்” என்று சமரசம் பேசுவார்கள். வெளியிலிருந்து பார்ப்போருக்கு அவர்கள் கூறுவதே சரியென்று படும். இன்றைய இந்து மதத்தில் எல்லா விதத்திலும்  சைவ – வைணவக் குடிகளை விடப் பலம்பெற்றிருக்கும் சுமார்த்தர்கள், சுமார்த்த சமயத்தின் கோட்பாடுகளையே முழு இந்து சமயத்தின் கோட்பாடுகளாக திரித்துக்காட்ட முயல்வதால், சைவத்தினதும் வைணவத்தினதும் தனித்துவமான பல கோட்பாடுகள் மறைந்தும்  ஒழிந்தும் வருகின்றன.  சுத்தசைவம் நூல் இப்படி சைவ சமயத்தின் கோட்பாடுகளுக்கும், இந்துப்போர்வையில் இன்று பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கும் சுமார்த்த சமயத்தின் கோட்பாடுகளுக்கும் இடையிலான ஏராளமான வேறுபாடுகளை அட்டவணைப்படுத்திக் காட்டுகிறது.


அரசியல் – சமூக – பொருளாதாரக் காரணிகளால் இந்தியச் சமயங்கள் பற்றி போதிய புரிதலின்றி ஐரோப்பியர் உருவாக்கிக்கொண்ட “இந்து” என்ற சமயங்களின் தொகுதியை இந்தியத் தேசியத்தின் கீழ் "இந்து" எனும் தனிமதமாகக் கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு கடந்த நூற்றாண்டில் நிலவியது உண்மை. சட்டரீதியில் அந்தத் தேவை இந்தியர்களுக்கு இன்றும் இருப்பதும் உண்மை. ஆனால் சமயரீதியில் அந்த ஒற்றைப்படையாக்கம் தேவையற்றது. இன்னும் இந்தியாவுக்கு வெளியில் வாழும் “இந்துக்களுக்கு” அந்த ஒற்றைப்படையாக்கத்தால் விளையும் நன்மைகள் எதுவுமில்லை. பதிலாக, இந்து மதம் என்ற பெயரில் எல்லாவற்றையும் குழப்பியடிப்பதால் ஏற்படும் அடிப்படைச் சிக்கல்களுக்கு அவர்கள் சரியாக முகம்கொடுக்க முடியாமல் திணறுவதுடன், புதிது புதிதாக உருவாகிவரும் வழிபாட்டு அமைப்புகள், அவற்றால் திரிக்கப்படும் சைவ - வைணவ நம்பிக்கைகள், புதிய இந்து அமைப்புகளின் பெயரிலான ஊழல்கள், மோசடிகளுக்கும் சைவரும் வைணவருமே பதில்கூறவேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். 


அப்படி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் பிற்போக்குத்தனங்களில் ஒன்று, சுமார்த்தரின் வருணாச்சிரமம். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி சகமனிதனை ஒடுக்கும் அவலத்துக்கான அங்கீகாரத்தை வருணாச்சிரமத்தை ஏற்கும் நவீன இந்து சமயமும் கொடுக்கத்தான் செய்கிறது. மறுக்கமுடியாத இன்னொரு உண்மை, இன்று சைவத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்வோர் போல சாதியவாதியர் வேறு யாரும் இல்லை என்பதும் தான். சைவம் அதிவருணாச்சிரம நெறி என்பதை சைவரே உணர்ந்துகொண்டால் தவிர, அவர்களுக்கு விடிவு காலம் இல்லை. இந்துப்பொது அடையாளம் அவர்களை இன்னும் சாதியவாதிகளாகவும் வருணாச்சிரம ஆதரவாளர்களாகவுமே எஞ்சவைக்கும்.


“இ[ந்து என்ற பெயரில் சுமார்த்தரின் வருணாச்சிரம]க்கோட்பாடுகள் சைவத்துள் ஊடுருவும் போது அதைத் தடுப்பதும் நீக்குவதும் நம் கடமையே. […..] சுமிருதிகள், எல்லாவகையிலும் முன்னேறவேண்டும் என்ற மனிதனின் இயல்பான அவாவை எதிர்த்து, உணர்வுகளைக் கொன்று சீரழிக்கும் வன்மம் மிக்க நெறியை வகுக்கின்றது என்பது தெளிவு. அவை இச்சமூகம் பிளவுபட்டு, சீரழிந்து அதன் தாக்கத்தால் வாழ்க்கை வாய்ப்புகள் இழந்தோர் புறப்புறச் சமயங்களை நாடிச் செல்வதற்கும் அச்சமயங்கள் வளர்வதற்கும் ஒரு பெரிய காரணியே.” என்பது சுத்தசைவம் கூறும் யதார்த்தமான உண்மை. 


இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம். இறைவன் தான் எல்லாவற்றையும் நடத்துகிறான் என்றால், இன்று சைவம் – வைணவம் வலுவிழந்து சுமார்த்தத்தின் தலைமையில் இந்து எனும் தனிச்சமயக் கோட்பாடு உண்டாவதும் இறைவன் திருவுளம் தானே ? இந்தக் கேள்விக்கு வேறோரிடத்தில் சுத்தசைவமே பதிலளித்திருக்கிறது. [பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும்] இம்மாற்றங்களும் காலகாலனின் கருத்தே எனின், இவை கேள்விக்கு உட்படுத்தப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கூட அவன் கருத்தே என்று அறிக.


சுத்த சைவமான அதிவருணாச்சிரம நெறியின் பின்னணியில் நாம் பார்க்கவேண்டிய இன்னொரு விடயம் இந்நூலின் ஒன்பதாவது அனுபந்தமான “சைவமும் பகவத் கீதையும்” தான். இன்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டு, இந்துக்களின் புனிதநூல் என்ற அடையாளம் பகவத் கீதைக்கு வந்துவிட்டது. ஆனால் சைவ நூல்கள் பகவத் கீதைக்கு என்ன இடம் கொடுத்திருக்கின்றன?


சங்கரருக்கு முன் பகவத் கீதை அத்தனை முக்கியமான நூலாக இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவரே அதை எழுதி மகாபாரதத்தோடு சேர்த்திருக்கலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பகவத் கீதையில் வருணாச்சிரம தருமத்தை வலியுறுத்தும் பல இடங்கள் வருகின்றன. “அருச்சுனனை மயக்க கண்ணன் சொன்ன சொல்லை உன் நூல் என்று ஏற்பாய் என்றால், முப்புரங்களை எரிப்பதற்காக புத்தர் கூறிய திரிபிடக நூல்களையும் உன் சமய நூல்களாக ஏற்றுக்கொள்ளலாமே” என்று ஏளனம் செய்கின்றது அதிவருணாச்சிரம சுத்தசைவத்தை வலியுறுத்தும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார் (பரபக்கம் 293ஆம் பாடல்).


பகவத் கீதை சைவருக்குரியதன்று என்று கூறும்போது 'இந்து' எவரும் புண்படலாம். கீதையை ஏற்பது அவரவர் விருப்பம். ஆனால், அதைச்சைவ நூல் என்பதோ, சைவமும் அடங்கும் இந்துக்களின் புனிதநூல் என்பதோ பெருந்தவறு. ஆக, பகவத் கீதையை தன் முதன்மை நூலாக ஏற்கும் இந்து சமயத்தின் ஓர் பிரிவாக சைவம் வந்து உட்காரமுடியாது.


இப்படி சைவத்தின் தனித்துவத்தைக் காக்கச் சொல்லிக் குரலெழுப்புவதை சைவர்கள் உள்வீட்டுச் சண்டை பிடித்து ஒற்றுமையைக் குழப்புகிறார்கள் என்று திரித்துக் குற்றம் சாட்டி "ஐயோ சைவ அடிப்படைவாதம், சைவத் தீவிரவாதம்" என்று பலர் புலம்புவதுண்டு. அவர்களிடம் கேட்கவேண்டிய ஒரே கேள்வி சிவஞானசித்தியார் கேட்ட அதே கேள்வி தான். "சைவநூல் நிராகரிக்கும் பகவத் கீதையை சைவர் ஏற்கவேண்டுமென்றால் இந்து என்ற பொதுப்பெயரில வேதத்தை மறுக்கும் திரிபிடகத்தையும் புனிதநூலாக ஏற்கலாமே! இன்னும் கொஞ்சம் கனிந்து பரந்த மனப்பான்மையுடன் அப்படியே திருக்குரானையும் புனித விவிலியத்தையும் கூட ஏற்கலாமே! அவற்றில் கூறப்படாத நல்ல சிந்தனைகளா."


சைவம் தன் தனித்துவத்தைக் காட்ட நிர்ப்பந்திக்கப்படும் இடம் இதுதான். சுத்தசைவம் நூலின் ஒட்டுமொத்த சுருக்கமே இவ்வளவும் தான் என்றும் கூட சொல்லலாம். சுத்தசைவம் நூலில் மேற்கோள் காட்டப்படும் பாம்பன் சுவாமிகளின் திருப்பா நான்முக வரிகள். “தமிழ் மறையாகிய தேவாரத்தில் ‘சாத்திரம் பல பேசுவோரே, கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர்’ என்று சொல்லப்பட்டுள்ளதை நினைத்துப் பார்க்காது, சாதிச்சண்டையில் தம்மை உயர்த்திக்காட்டுவதே பேரின்பம் என்று [பலர்] வாழ்நாளைக் கழிக்கும் சிற்றறிவாளர்களாக இருக்கிறார்கள். மணம் புரிந்தோ பலவந்தத்திலோ எந்தப் பெண்ணும் எந்த ஆணும் சேரும் போதும் கருத்தரிக்க முடிவதைக் கண்டும் சாதி என்ற பாகுபாடு பொய்யானதென்று யோசிக்கிறார்களில்லை. சிறப்பாகத் தோன்றியதாகப் போற்றப்படும் ஒரு நூல் இறைவனே சொன்னதென்று சாதிப்பாகுபாட்டை வலியுறுத்திக் கூறினாலும் நாங்கள் கேட்கமாட்டோம். மனிதரே செய்ததென்றாலும், இந்த உண்மையை ஒத்துக்கொள்ளும் நூலை நாங்கள் ஏற்போம். இதுவே எங்கள் நடுநிலை. இறைவன் சொன்னதென எழுதப்பட்டிருப்பதாலே எந்த ஏட்டுச்சுவடியும் இறைவாக்காகிவிட முடியாது.”


உலகின் அத்தனை சமயங்களும் அஞ்சி நிற்கும் இடம் இது. “கடவுள் சொன்னது, வாயை மூடு. புனிதநூலில் உள்ளது; மறுத்துப்பேசாதே” என்று எவர் சொன்னாலும், கைகட்டி வாய்பொத்தி முழங்காலில் நிற்பதற்கே அத்தனை மதங்களும் தங்கள் பின்பற்றுநனைப் பயிற்றுவித்திருக்கின்றன. “வருணம், சாதி, என்பன இறைவனின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் – அநீதிகள். இவற்றை இறைவனே சொன்னாலும் ஏற்கோம்” என்று மார்தட்டி அறைகூவும் இந்த அசாத்தியத் துணிச்சல் தான் சைவனின் தனித்துவம். அடியாரை மதிக்காது அலட்சியத்தோடு நடந்துசென்ற சுந்தரமூர்த்தி நாயனார் மீது வெகுண்டு “எனக்கு இவனும் புறகு; இவனை ஆண்ட சிவனும் புறகு” என்று சொன்ன விறன்மிண்ட நாயனார் வழி வந்த  சைவத்தின் மிடுக்கு அது. “நெற்றிக்கண்  திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய நக்கீர நாயனாரின் தமிழ் தந்த செருக்கு அது.




சுத்தசைவம் நூலின் இலங்கை வெளியீடு இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் 2023 ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு சம்மாங்கோட்டு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோவிலில் யானை மீது எழுந்தருளிய சுத்தசைவம் நூல், விடைக்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க ஊர்வலமாகப் புறப்பட்டு அம்மண்டபத்தை அடைந்தபோது, அவ்வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றியிருந்த அத்தனை பேரும் வார்த்தைகளால் விளக்கமுடியாத உணர்வுகளுக்காளாகியிருந்தனர். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, அரகர நமப் பார்வதீபதயே, அரகர மகாதேவா” என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தன. ஏதோ தெய்வம் எழுந்தருளிச் செல்கின்றதென்று எண்ணி வீதியில் சென்ற சிங்களவரும் தமிழரும் இருகைகூப்பி வணங்கி அவ்வூர்வலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். சேந்தனாரின் திருப்பல்லாண்டு பதிகங்கள் பாடப்பட்டு அந்நூல் யானையிலிருந்து கொலுவிறங்கி மண்டபத்தை அடைந்தபோது “சுத்தசைவத்துக்கு அரோகரா” என்ற விந்தையான கோசமொன்றும்  ஊடே ஒலித்துக்கொண்டிருந்தது.  சுத்தசைவத்துக்கு யானை மேல் நிழற்றிய திருக்குடை, அந்நூல் மண்டபத்துக்குள் நுழைந்ததும் இந்தக் கட்டுரையாசிரியன் கையில் வந்து சேர்ந்தது.


சுத்தசைவத்தின் மிகவும் மூத்த வரைவு வடிவத்தை நான் 2019ஆம் ஆண்டு வாசித்திருக்கிறேன். அதன் ஆசிரியர் திரு.செ.முருகவேள் ஐயாவுடனும் சிறு பழக்கம் உண்டு. அப்போது அது சுமார் நூறு பக்கங்களுடன் வேறொரு பெயரிலமைந்த சிறுநூல். முதல் வாசிப்பிலேயே பிரமிப்பைத் தந்திருந்தது. அப்போது தான் ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ நூலை எழுதி முடித்த தலைக்கனத்தில் இருந்த எனக்கு, ‘அதை நிகழ்த்தியது நீ அல்ல; நான்’ என்று உணரும் படி சிலபல 'சம்பவங்களை செய்து' என்னைத் திருத்தியிருந்தான் ஈசன்.  எனவே பணிவோடு, சேர்க்கவேண்டிய சிலவற்றை மட்டும் நூலாசிரியருக்குச் பரிந்துரைத்திருந்தேன். அடுத்தடுத்த மாதங்களில் சுத்தசைவத்தின் பிற்கால வரைவுகள் பல செவ்வை பார்க்க வாய்ப்புக் கிடைத்தாலும்  வேலைப்பளுவால் அது சாத்தியமாகவில்லை.  கடந்த ஆண்டு அந்நூல் தமிழகத்தில் ஐநூறுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் ஒரு பெருநூலாய் வெளியிடப்பட்டபோது அடைந்த வியப்பும் மகிழ்ச்சிக்கும் அளவிருக்கவில்லை. சுத்தசைவம் போன்ற மாபெரும் நூலொன்றைப் படைத்த திரு. செ.முருகவேள் ஐயா அவர்களின்  பேருழைப்பையும் சீரறிவையும் வியக்காமலிருக்க முடியவில்லை. அவருக்குத் தமிழ்ச்சைவ சமூகம் கடன்பட்டிருக்கிறது. 'தமரைப்புகழ்தல்' என்றே ஆகுமெனினும், இந்நூலை இலங்கைச் சைவச்சமூகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஓயாது உழைத்த எமது இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.சிவத்திரு.கி.பிரதாப தேசிகர் அவர்களையும் இவ்விடத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

நூலாசிரியர் திரு. செயச்சந்திரன் முருகவேள் அவர்கள்


ஆரம்பநிலை வாசகர்களுக்கு சுத்தசைவத்தின் மொழிநடை சற்றுக் கடினமானதாக இருக்கலாம். அதில் குறையில்லை. சுத்தசைவம் ஒரு நாவலோ வெகுசனப் புதினமோ அல்ல. ஒரு தத்துவக்கோட்பாட்டை ஆராய்ந்து விளக்கி நிறுவும் ஒரு நூல், இப்படி ஒரு செறிவான நடையில் தான் இருக்க இயலும். அதனாலென்ன, ஆர்வமுள்ளவர்களுக்கு அதிலுள்ள அத்தனை சிக்கலான கதவுகளுமே இலகுவாகத் திறந்துகொள்ளும்.


இன்றைய இந்துப்பரப்புரையாளர்கள் பலர் “வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை; வீட்டில் ஒரு பகவத் கீதை வாங்கி வைத்திருங்கள்” என்று சொல்கிறார்கள். அப்படி, சைவர்களிடம் “நீங்கள் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை; வீட்டில் ஒரு சுத்தசைவம் வாங்கி வைத்திருங்கள்” என்று நான் சொல்வேன். ஏனெனில் இயற்கை இடர்கள் நம் கைகளை மீறியவை. ஆனால் மனித இடர்கள் மன்னிக்கமுடியாதவை. சைவத் தமிழர் கழுவாய் தேடவேண்டிய முதன்மையான  கொடும்பாவங்களில் குறிப்பிடத்தக்கவை கடந்த நூறு நூறாண்டுகளில் சாதி – வருணத்தின் பெயரால் தம் சகோதரர்களுக்கும் – சக சைவர்களுக்கும் இழைத்த அட்டூழியங்கள்.  மகத்தான இலக்கியங்களைப் படைத்த நாகரிகம் மிக்க தொன்மை வாய்ந்த இனம் இன்று சென்றடைந்திருக்கும் இழிநிலைக்கு ஒரு காரணம், இந்தக்கொடுமைகளால் சேகரித்துக்கொண்ட பெருஞ்சாபங்களும் தான். வக்கிரமான சாதிவெறியை உள்ளே மறைத்துக்கொண்டு வெளியே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று போலியாகப் புன்னகைக்கும் நாம் ஒவ்வொருவரும்   அச்சாபம் நம்மை இன்றும் பீடித்துள்ளமைக்கு நிதர்சனமான சாட்சிகள். 


பழைய தலைமுறையினருக்கு வேண்டுமென்றால் வருண – சாதியச் சாக்கடையிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இளந்தலைமுறையினர் அதிலிருந்து வெளியேறவேண்டும். சைவம் என்பது வருணாச்சிரமம் நீங்கிய நன்மைபெருகு அருள்நெறி என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொருவர் வீட்டிலும் இந்நூல் இருக்க வேண்டும். இந்த நூலின் கருத்துக்கள் துண்டுப்பிரசுரங்களாகவும் விவாதங்களாகவும் எல்லோரையும் சென்றடையவேண்டும். அவன் வாக்கு என்ற பெயரில் அவனது நூல்களிலேயே சேர்க்கப்பட்டுள்ள மாசுக்களைத் துடைத்து அவனே தன் கைத்தீயால் சுட்டுத் தந்தாற் போலல்லவா இந்தச் சுத்தசைவம்!


சுத்தசைவத்துக்கு நான் திருக்குடை நிழற்ற, அந்நூல் மண்டபத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மிகச்சிலரே சுத்தசைவம் நூலை அதற்கு முன் கண்டவர்கள்; அதிலும் ஓரிருவரே அந்நூலைப் படித்தவர்கள். ஆனால் அங்கிருந்த எல்லோருமே சன்னதம் பிடித்தவர்கள் போல் இருந்தார்கள். ஒரு வரலாற்றுத்தருணத்தில் நின்றுகொண்டிருப்பதை அறிந்தவர்கள் போல. மேளதாளம் முழங்க “சுத்த சைவத்துக்கு அரோகரா” என்ற வாழ்த்துரை மீண்டும் மீண்டும் ஒலிக்க, பலர் மெய்விதிர்த்துக் கைகூப்பி கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தார்கள்.  


என் கண்களும் ஏனென்று அறியாமல் கசிந்திருந்தன. இருபுறமும் திருமுறை வழுத்த, தம்மை மறந்தவர் போல் சிவாசாரியார் தூபதீபங்களைப் பலதடவை  காட்டி மகிழ சுத்தசைவம் என் கைகளிலிருந்த முத்துக்குடை நீழலில் மண்டபத்தினுள்ளே நுழைந்துகொண்டிருந்தது. இந்த நூலுக்கு குடைபிடித்துச் செல்லும் நான் அடைந்த அதே மயிர்கூச்செறிவைத் தான் அரசன் என்பதையும் மறந்து பெரியபுராணத்துக்குச் சாமரை இரட்டியபடி சென்ற  அநபாயச் சோழனும் அடைந்திருப்பானா?


பெரியபுராணம் எண்ணூறாண்டுகளுக்கு முன்னர் சைவத்தின் பொற்காலத்தில் உதித்த ஒரு நூல். சுத்தசைவம், சைவ சமயத்துக்கு இன்னொரு பொற்காலத்தைத் தொடக்கி வைக்க உதித்த நூல். சந்தேகமேயில்லை.


சுத்தசைவம் வாங்க:

இந்தியாவில்: ரூ. 850. 

9442271042 என்ற எண்ணிற்கு gpay மூலம் ₹ 850 ஐ அனுப்பி, பரிவர்த்தனை விபரங்களையும் முழு முகவரியையும் அதே எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும். விவரங்கள் வந்த ஓரிரு நாட்களில் நூல் அனுப்பி வைக்கப்படும்.


இலங்கையில்: ரூ. 1500

கொழும்பு, யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் கிடைக்கும். நாடளாவிய ரீதியில் விநியோகமுண்டு. தொடர்புக்கு: வட்சப் இலக்கம்: ±94716335511

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner