ஆர்கலியில் ஓர் துளி!

0 comments
பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.”

இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” என்ற பொதுமைப்படுத்தல் சிந்தனை தவறென்பதை உணரும் கணத்தில், பொறுக்கமுடியாமல் அவர்களிடம் நாமோ, நம்மிடம் அவர்களோ இவ்வசனத்தைச் சொல்வதுண்டு.

முகநூல் பதிவுகளிலும், நட்பார்ந்த அரட்டைகளிலும், தனிநபர் நடத்தையிலும் மேற்சொன்ன ஒவ்வொரு நண்பர்களும், இனப்பிரச்சினை சார்பான தம் நிலைப்பாட்டை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தனி ஒருவனின் பழக்கம், ஒரு இனக்குழுமம் சார்ந்த அவர்களது பொதுக்கருத்தை மாற்றியதை (குறைந்தபட்சம் மாற்ற முயன்றதை) தம் வாயாலேயே அவர்கள் ஒப்புக்கொண்டபோது ஒன்றை உணர்ந்தேன். என்னையறியாமலேயே அவர்களுடன் - புன்னகைத்த - பேசிய – உணவு உண்ட - ஒவ்வொரு கணத்திலும், இந்தச் சிறுதீவுக்குள் சுமார் நான்கு மில்லியன் குடித்தொகை கொண்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக நின்றிருக்கிறேன். நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருந்தது.

அடையாளங்களும், அடையாளப்படுத்தல்களும் நம்மை பல்லாயிரம் பேரோடு இணைத்து நமக்குப் பேருருவத்தை அளிக்கின்றன. இதையே நாம் ஒரு வேற்றுலகவாசியை சந்திப்பதாக சிந்தித்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர் என்பதை உலகத்தமிழர் என்று விரித்தால், எண்பது மில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். உலகம் என்று பார்த்தால், ஏழரை பில்லியன் பேரின் ஒட்டுமொத்த பிரதிநிதி நீங்கள். கற்பனை பண்ணவே மூச்சுமுட்டுகிறது!

தனி ஒருவன் என்று பார்த்தால், நாம் இயற்கையில் எந்தளவு பொருளற்றவர்கள்? நம்மை ஒரு பொருட்டாக கருதாமலேயே இயற்கை தொடர்ந்து இயங்கிக்கொண்டு தானே இருக்கிறது! இடையில் நாம் வந்து போகும் இந்த அறுபது எழுபது ஆண்டுகளில் தான் எத்தனை ஆட்டம் போடுகிறோம்!

பிரபஞ்சப் பெருங்கடலில் நான் வெறுமனே ஒரு சிறுதுளி என்பதை எப்போதும் மறவாதிருப்பேனாகட்டும்.
மேலும் வாசிக்க »

கொழும்பு - தெரிந்த பெயர்கள், தெரியாத கதைகள்!

0 comments
இலங்கைத்திருநாட்டின் தலைநகரான கொழும்பு, ஈழத்தில் மாத்திரமன்றி, தென்னாசியாவிலேயே பல்லாண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்திருந்த துறைமுகப் பெருநகர்! அதன் சில இடப்பெயர்களே அதன் வரலாற்றைத் தன்னுள் உட்பொதித்திருப்பதைக் காணலாம். இங்கே அத்தகைய சில இடப்பெயர்களின் பின்னே மறைந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் தேடுவோம், வாருங்கள்!
 காலிமுகத்திடல் - அன்றும் இன்றும்
                         (நன்றி: roar.lk)


இலங்கையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான "காலி வீதி" துவங்கும் இடம் என்பதாலேயே, காலிமுகத்திடலுக்கு அப்பெயர் வந்தது. முன்பு சதுப்புநிலமாக இருந்த இது, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் முயற்சியால் இன்று போல், மாபெரும் களியாடுகளமாக மாற்றப்பட்டிருக்கின்றது


பிரித்தானியர் காலத்தில் கொழும்பின் முதன்மையான வணிகர்களுள், தமிழ்நாட்டுச் செட்டியார்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் வசித்த இடம் தமிழ்வழக்கில் புறநகர்ச் சந்தையைக் குறிக்கும் "பேட்டை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அது "பெற்றா" என்று மருவியது. அதேபொருளிலேயே சிங்களத்தில் "பிட்டக்கொட்டுவ", புறக்கோட்டை!
       1950களில் பேட்டை  பெற்றா!
             (நன்றி: lankapura.com)


இலங்கையின் மிகப்பழைமையான தேவாலயங்களில் ஒன்று, பம்பலப்பிட்டி மிலாகிரிய புனித பவுல் தேவாலயம். போர்த்துக்கேயரால் இது முதன்முதலில் அமைக்கப்பட்டபோது, அற்புத அன்னை ஆலயமாக (Nossa Senhora dos Milagres - Our Lady of Miracles) விளங்கியது. "மிலாக்ரஸ்" எனும் அந்தப் போர்த்துக்கேயச் சொல்லின் சிங்களத் திரிபு தான் "மிலாகிரிய"!

கோட்டை அரசின் ஒரு "முற அட்டுவ" (காவலர் கண்காணிப்புக் கோபுரம்) அமைந்திருந்த இடம் தானாம் இன்றைய "மொரட்டுவை"!

பம்பலப்பிட்டியின் பெயர், “பம்பளிமாஸ் பழத்திலிருந்து” (Grape fruit) வந்ததாக நம்பப்படுகின்றது. அதன் சிங்களப்பெயர், ஜம்புல. 

தமிழகத்திலிருந்து வந்து குடியேறி, கம்பளை அரசுடன் உறவு கொண்டாடிய "அழகக்கோன்" (1397-1411) எனும் தமிழ்ப்பௌத்தன் தான் (ஜயவர்த்தனபுரக்) கோட்டையை அமைத்து, கோட்டை இராச்சியம் புதிதாக உருவாகக் காரணமானவன். இன்று "அத்துல்கோட்டே" என்று அறியப்படுவது தான் அப்பகுதி. யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்திகளின் மேலாதிக்கத்திலிருந்து இன்றைய கொழும்புப் பகுதியை இவன் விடுவித்ததாக வரலாறு கூறும். 
 1853இல் மிலாகிரிய தேவாலயம்
(நன்றி: canon-corea-tribute.com

கொழும்பு வணிகத் தலைநகராக விளங்கியபோதும், இலங்கையின் உத்தியோகபூர்வத் தலைநகராக ஜயவர்த்தனபுரக்கோட்டை பிரகடனப்படுத்தப்படக் காரணம், அதுவே பண்டைய கோட்டை இராச்சியத்தின் தலைநகர் என்பது தான். இன்றைய "கோட்டை" ஐரோப்பியர்கள் அமைத்த கோட்டை அமைந்திருந்த இடமாகும்.

கோட்டை அரசின் சமையற்கூடம் அமைந்திருந்த இடமே பத்தரமுல்லை. தியவன்னை ஓயாவின் அக்கரையில் இருந்த அது, ஆரம்பத்தில் பத்கொடமுல்ல (சோறு வந்திறங்கும் மூலை) என்று அழைக்கப்பட்டிருந்ததாம்!

புதுக்கடை அல்லது கோட்டடி என்று அறியப்படும் பகுதியின் ஒல்லாந்துப்பெயர் "Hulftsdorp" (ஹல்ஃப்ஸின் ஊர்). ஹல்ஃப்ஸ் என்பவன் ஒல்லாந்துத் தளபதி. கோட்டையைக் கைப்பற்ற, போர்த்துக்கேயருடன் இடம்பெற்ற போரில் அவன் இறந்ததன் நினைவாக அவ்விடம் அப்பெயர்பெற்றது. 

கோட்டைப்பகுதிச் சிறுகாடுகளில் உலவிய நரிகளை ஓநாய் என்று தவறாகக் கருதிய ஒல்லாந்தர், அதற்கு வைத்த பெயர் தான் "Wolfendhal" (இடச்சு:Wolvendaal, ஓநாய்ப்பள்ளத்தாக்கு), இன்றைய ஸ்ரீ ரத்னஜோதி மாவத்தைப்பகுதி. 

வெள்ளவத்தை என்றால் "கடற்கரைத் தோட்டம்" என்று பொருள். இப்படியே, "கொஸ்வத்தை" (பலாத்தோட்டம்),  "கெசல்வத்தை" (வாழைத்தோட்டம்), "கடவத்தை" (எல்லைத்தோட்டம்), "பெலவத்தை" (குடில் தோட்டம்), என்று பல வத்தைகள் உண்டு.  

வாதுமை / பாதாம் மரங்களின் தோட்டம் அமைந்திருந்த இடம் கொட்டாஞ்சேனை. கொட்டான்/கொட்டம்ப என்பது வாதுமையின் (Indian almond) சிங்களப்பெயர். அதுவே கொட்டஹேன. 

17ஆம் நூற்றாண்டளவில் கண்டிமன்னன் இரண்டாம் இராசசிங்கனுக்கெதிராக, கிளர்ச்சி செய்து, தப்பியோடி வந்த அம்பன்வெல அப்புகாமி, ஒல்லாந்தரின் நட்பைப்பெற்று, “பரதெனிய” என்ற கிராமத்தில் பிழைப்புக்காக தெங்குத்தோட்டம் நடத்தலானான். மெல்ல மெல்ல, அவன் செல்வாக்கு அதிகரித்து, அவனால் உள்ளூர்வாசிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அந்நிலங்கள் அமைந்த பகுதி, அவர்களால் ஆற்றாமையுடன் “கொள்ளையிடப்பட்ட பூமி” என்ற பொருளில், சிங்களத்தில் “கொல்லன் பிட்டிய” என்றழைக்கப்பட்டன. அது பரதெனியவின் பெயரையே மாற்றியது – கொள்ளுப்பிட்டி என்று! 
மெய்ட்லாண்டும் லவினியாவும் 
(நன்றி:dailynews.lk)

கோட்டை அரசுக்குத் தேவையான எலுமிச்சைகள் பயிரிடப்பட்ட பகுதி "தெகிவளை". "தெஹி" என்றால் எலுமிச்சை என்று பொருள். பல நீர்நிலைகள், குளங்கள் அமைந்திருந்த "தியவல" (நீர்க்குழி/பூவல்) என்பதே திரிந்து தெகிவல ஆனது என்பாரும் உண்டு. தெகிவளையில் உள்ள, "களுபோவில" (களு+போ+வில் = கருப்புப் போதிமரத்தடிக் குளம்) முதலான இடப்பெயர்கள் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும்.

இறுதியாக…… கல்கிசைக்குப் பெயர் தந்த காதலி. 😊

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்களுள் ஒருவரான தோமஸ் மெய்ட்லாண்ட், தன் மனங்கவர் ஆடலரசியான லவினியாவின் பெயரைக் கல்கிசையில் தன் மாளிகை அமைந்திருந்த சிறுகுன்றுக்குச் சூட்டினார்…. மவுண்ட் லவினியா என்று! ஆங்கிலேய அரசுடனான தன் உத்தியோகபூர்வக் கடித முகவரிகளில், அதே பெயரையே அவர் பயன்படுத்தியதால், அதுவே ஆங்கிலத்திலும் நிலைபெற்று விட்டது.


இப்படி நிறைய இருக்கிறது. ஏன் வீதிகளின் பெயர்களின் பின்னேயும் கதைகள் இருக்கின்றன. ஆர்வம் இருந்தால் விசாரித்துப் பாருங்கள்! 
மேலும் வாசிக்க »

வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

0 comments
கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள்
படம்: tripadvisor.in
மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு.

ஆனால், தமிழருக்கென்று இத்தகைய நிற விதிகள் எதுவும் இல்லை. தமிழரின் ஆடை அலங்காரங்கள் பகட்டானவை. சில இடங்களில் அவை சமூக ஏற்றத்தாழ்வை வெளிக்காட்டுவனவாகவும் அமைவதுண்டு. இதுபற்றிய விவாதமொன்றில் , மலையாளிகளும் சிங்களவரும் தமிழருக்கு எத்தனை நெருக்கமான பண்பாட்டுப் பங்காளிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைப் போலவே தமிழரும் வெண்ணிறாடையை தம் சீருடையாக ஏற்றுக்கொண்டால் நல்லது என்று கருத்துத் தெரிவித்திருந்தேன்.

குறைந்தபட்சம் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும்போதாவது தமிழச்சிகள் அதைக் கடைப்பிடிக்கலாமே என்று அந்த விவாதம் வளர்ந்தது (ஆண்கள் ஏற்கனவே வெள்ளை வேட்டி அணிகிறார்கள்) பின்பு அது “விதவையரின் ஆடைநிறம்” (மெச்சிங்கா தலையில மல்லிகைப்பூ வைங்களன்?) என்றும் “அவள் உடை அவள் உரிமை” (ஏன் வெள்ளைச்சாறி கட்ட விருப்பமான பொம்பிளையள் இல்லையா?) என்றும், பெண்ணிய விவாதமாக மாறிவிட்டதால் அத்தோடு விவாதம் நின்றுபோனது. :)

ஆனால், இந்த திருவிழா நாட்களில், கோயில் கோயிலாகச் சுற்றும்போது தான் அக்கருத்து எத்தனை தவறு என்று உணர்கிறேன். பஞ்சவர்ணத்திலிருந்து பஞ்சுமிட்டாய் நிறம் வரை, இளவட்டங்கள் ஜொலிக்கின்றன. மின்மினிகள் போல மின்னும் சரிகைச்சேலைகளும் ஜிங்கிச்சா ஜிங்கிச்சா ஆடைகளும், உண்டாக்கும் களிவெறிக்கு வேறெதையும் ஈடு இணை கூறமுடியாது. :)

நம் பண்பாடு தான் எத்தனை வண்ணமயமானது? இதையே முன்பு கனவுகண்டவாறு, வெண்ணிறத்தோடு எல்லோரும் உலவுவதாக கற்பனை பண்ணிப் பார்த்தேன். அதில் கருத்தைக் கவரும் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கும். ஆனால் வெவ்வேறு நிறங்களின் சீரின்மையில் ஏற்படுகின்ற இந்த வினோதமான கவர்ச்சி, அந்தத் தனிநிறத்தில் கிடைத்துவிடாது. ஆம். வேறுபாடுகள் இருப்பதால் - உயிர்ப்பல்வகைமை என்பதால் தானே இயற்கையும் பேரழகாகக் காட்சியளிக்கிறது?
தமிழர் திருவிழாக் காட்சி ஒன்று, பெரம்பலூர், தமிழ்நாடு
(படம்:travelwhistle.com)

தூவெள்ளைச் சீருடை என்பதன் அபத்தத்தை எண்ணி ஒருதடவை எனக்குள் சிரித்துக்கொண்டேன். கூடவே அப்படி விதியொன்றும் உருவாகி எழாதவாறு, பண்பாட்டை வண்ணமயமாகவே வளர்த்தெடுத்த நம் முப்பாட்டனார்களின் கலாரசனையையும் எண்ணி வியந்துகொண்டேன்.  
மேலும் வாசிக்க »

அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்

0 comments
சங்க இலக்கியமான கலித்தொகையைப் புரட்டவேண்டி வந்தது. கண்ணில் பட்டது இந்த வரி. “புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன்; அருளிமோ, பக்கத்துப் புல்லச் சிறிது. ” (கலி.94)
மேலும் வாசிக்க »

மரபில் அறிமுகம் வேண்டும்!

0 comments
"தளபதி" திரைப்படத்தின் "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? குறிப்பாக அதில் இந்தப்பாகத்தை யார் அதிகம் இரசித்திருக்கிறீர்கள்?
                                             

நீங்கள் "90 kids" அல்லது "2K kids" வகையறா என்று பெருமை பேசுபவர் என்றால் இந்தப் பாட்டோடு சேர்ந்து இன்னொரு காட்சியும் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
                                              

இந்தப் பாடல்வரிகள் மூன்றாவது தடவையாக இன்னொரு திரைப்படத்தையும் நினைவூட்டலாம், நீங்கள் தீவிர அஜித் விசிறி என்றால்! வீரம் திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? என்றால் இந்தக் காட்சியையும் பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

ஏன் இப்படி ஒரே பாடல் இடம்பெற்ற மூன்று திரைப்படக் காட்சிகளை வரிசையாகப் பார்க்கச் சொல்கிறாய் என்றால், "குனித்த புருவமும்" என்று தொடங்கும் பாடல், அப்பர் பாடிய சைவத் தேவாரங்களில் ஒன்று. வீரம் திரைப்படத்தில் அதே பாடலுக்கு நடனமாடியபடி தான் நாயகி தமன்னாவின் கதாபாத்திரம் அறிமுகமாகின்றது. அப்போது மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளும் அவருக்கு ஆண்டாள் வேடம். தேவாரம் பாடியபடி கண்ணனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்!

அதே போல இரண்டாயிரங்களில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த பாடகர் ஸ்ரீநிவாசின் "உசேலே உசேலே" எனும் இசைத்தொகுதி. செவிபன்னி செயலிழக்க செயலிழக்க, இன்றுவரை கேட்கும் பாடலொன்று அதில் இருக்கிறது. உன்னி கிருஷ்ணனின் குரலில் கர்நாடக - மேலைத்தேய கலப்பிசையில் வெளியான "எப்போ வருவாரோ!". அந்தப்பாடலின் வரிகள், சிவன் மீது கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய கர்நாடக சங்கீத கீர்த்தனையிலிருந்து பெறப்பட்டிருந்தது. (இது மீண்டும் அண்மையில் வெளியான ஒருநாள் கூத்து திரைப்படத்தில் முழுமையான பாடலாக இடம்பெற்றிருக்கிறது). 

ஆனால் இந்த "உசேலே உசேலே" எப்போ வருவாரோ பாடலில் ஒரு வரி வந்திருக்கும். "மாயக்காற்று மதி கொள்ளை கொண்ட ஆயர் செல்வியே!" ஆயர் செல்வி. இராதை. சிவன் மீதான கீர்த்தனை, ஒரே வரியில் கண்ணன் மீதான இராதையின் ஏக்கமாக மாறிவிட்டது!

எப்போதும் அடிபட்டுக் கொண்டிருக்கும் சைவ - வைணவங்களுக்கு இடையே பாலம் அமைப்பதற்காகவே சமய சமரச மனப்பாங்கு கொண்ட நம் திரையுலகினர் இப்படி சித்தரித்தார்கள்    என்று இதைப்புரிந்துகொள்ளலாமா?

சமயத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள். ஒரு கவிதாயினியை, கவிஞரை அவமானப்படுத்துக்கிறோம். தான் பாடிய நூற்றைம்பது பாசுரங்களை விடுத்து, அப்பரின் தேவாரத்தை ஆண்டாள் பாடுவது போல் காட்சியமைப்பது, அவளுக்கு மட்டுமல்ல; அப்பருக்கும் அவமானம். கோபாலகிருஷ்ணருக்கும் அதே தான். புலமைச்சொத்து அத்துமீறல், இல்லையா? 

மரபில் நமக்குக் கொஞ்சமாவது அறிமுகம் இருக்கவேண்டும். தவிர, பொதுவெளியில் ஒரு விடயத்தை - கருத்தைச் சொல்லும் போது அது சரியா என்பதிலும் அவதானம் இருக்கவேண்டும். அது மேற்படி திரையுலகினருக்கு மட்டுமல்ல; நம் பேஸ்புக் -  இணைய உலகினருக்கும் பொருந்தும் அறிவுரை தான்.
மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)

0 comments

மட்டக்களப்பு எட்டுப்பகுதியின் தேசத்துக்கோவில் !



இலங்கையின் பிறபகுதியைச் சேர்ந்த நண்பன் ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பேச்சோடு பேச்சாக, “இலங்கையில் இன்று வழிபாட்டுக்குத் தகுதியாக எஞ்சியிருக்கும் புராதனமான சைவசமயக் கட்டுமானங்கள் மூன்றே மூன்று தான். ஒன்று இரண்டாம் சிவாலயம் என்று இனங்காணப்படும் பொலனறுவை வானவன் மாதேவீச்சரம்; இரண்டாவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்; மூன்றாவது சிலாபம் முன்னேச்சரம். மூன்றிலும் திருக்கோவிலும் முன்னேச்சரமும் தான் இன்றும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த இரண்டில் கூட திருக்கோவிலே பழைமையானது.” என்றேன். அவன் “போடா” என்றான். “பொலனறுவையும் முன்னேச்சரமும் சரி. திருக்கோயில எப்பிடி பழைய கோயிலெண்டு சொல்லுவாய்?” என்று அவன் கேட்டான். “கோட்டை, கண்டி மன்னர்களுடன் தொடர்புறும் வரலாறு அதற்கும் உண்டு.” நான் ஊர்ப்பற்றால் மிகைப்படுத்திப் பேசுகிறேன் என்ற அவநம்பிக்கை, அவன் முகத்தில் தெரிந்தது. “திருக்கோயில் மட்டக்களப்பெல்லோ? அங்கெப்பிடி கோட்டை – கண்டி மன்னனெல்லாம் வந்திருப்பான்?”

நம் கோவில் கட்டிடக்கலையில் காலத்தை ஓரளவு கணிப்பதற்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அதன் பெயர் போதிகை. கருவறைச் சுவரில் பாதி புதைந்தது போன்ற தூண்களைக் கண்டிருக்கிறீர்களா? பாதி மறைந்திருப்பதால், அவற்றுக்கு ‘அரைத்தூண்’ என்று பெயர். இந்த அரைத்தூண்கள், சுவரின் மேற்பகுதியைச் சேரும் புள்ளியில் அமைந்திருக்கும் அலங்கார அமைப்பு தான் போதிகை. போதிகைகளை வைத்து, அவை எந்த மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்று காலத்தைக் கணிக்கமுடியும்.


திருக்கோவிலின் கருவறைச் சுவரில் தென்படுபவை, முதலாம் இராஜராஜரால் (கி.பி 985 - 1014) அறிமுகப்படுத்தப்பட்ட வெட்டுப்போதிகைகள். அவை பிற்காலச் சீமெந்துப் பூச்சால் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றில் மலர் அலங்காரம் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவை இரண்டாம் இராஜராஜர் (கி.பி 1146 - 1173) காலத்துக்குப் பிந்தியவை. ஆனால், முன்னேச்சரத்தில் இருப்பவை, விஜயநகரப் பேரரசின் (கி.பி 1336 - 1646) கலைப்பாணியில் அமைக்கப்பட்ட பெரிய பூமொட்டுப் போதிகைகள். ஆக, போதிகைகளின் அமைப்பின் மூலம், திருக்கோவிலின் இன்றைய கட்டுமானம், முன்னேச்சரத்தின் இன்றைய கட்டுமானத்தை விடப் பழையது என்பது நிரூபணமாகிறது.

எவ்வாறெனினும் போதிகைகளை வைத்துக் காலத்தைக் கணிக்கும் போது, நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அவற்றை அறிமுகப்படுத்தியவன் குறிப்பிட்ட மன்னனாக இருக்கலாம் என்று ஊகித்தாலும், அவனது காலத்திலேயே இது நிச்சயமாக எழுந்தது என்று கூறமுடியாது. அதே கலைப்பாணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கூட ஒரு கோவிலைக் கட்டிவிட்டு, இது அந்த மன்னன் அமைத்தது என்று வாதாடலாம் அல்லவா? எனவே கோவிலின் ஏனைய கட்டுமானங்களையும் சேர்த்தே ஆராயவேண்டும். அந்த வகையில், பேராசிரியர்.கா.இந்திரபாலா, பேராசிரியர்.எஸ்.பரணவிதான, பேராசிரியர்.சி.பத்மநாதன், என்று நிறையப்பேர் நமக்கு உதவிக்கு வருவதால், திருக்கோவில் கட்டுமானம், கி.பி 13ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது தான் என்று சொல்வதில் நாம் இறும்பூது எய்தலாம்.

அது இருக்கட்டும். திருக்கோவிலுடன் கோட்டை – கண்டி மன்னர் உறவு பற்றி பிறகொருமுறை பார்க்கலாம். திருக்கோவிலை ஆவணப்படுத்திய ஒரு ஒல்லாந்தரை, ஒரு போர்த்துக்கேயரை கடந்த வாரங்களில் பார்த்தோம். இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது ஒரு பிரித்தானியரை. பெயர் தோமஸ் கிறிஸ்ரி. பிரித்தானிய ஆளுநரான பிரடரிக் நோர்த், 1803ஆமாண்டு திருக்கோணமலையிலிருந்து கிழக்குக் கரையோரமாக மாத்துறைக்குப் பயணித்த போது, அவரோடு உதவியாளராகச் சென்றவர் இவர். 1803ஆமாண்டு மே 6ஆம் திகதியிட்ட அவரது நாட்குறிப்பில் பின்வரும் வரிகள் இருக்கின்றன.

“காலை ஐந்து மணிக்கு கருங்கொட்டித்தீவிலிருந்து புறப்பட்ட நாங்கள், ஏழே கால் அளவில் திருக்கோவிலை அடைந்தோம். இந்தப் பயணத்தின் முதல் அரைவாசித்தூரம் சிறிது விவசாயம் செய்யப்படும் திறந்தவெளியாகவும், அடுத்த அரைவாசித்தூரம் கடற்கரை ஓரமாகவும் அமைந்தது. ஒரு அளவான கிராமமான திருக்கோவிலில் மிகப்பழைமைவாய்ந்த இந்துக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுண்ணம் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இக்கோவில் ஓரளவு பெரியது. பழைமைவாய்ந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதன் சுவரில் பல வகையான தேய்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. அதைச்சுற்றியுள்ள இரு வீதியிலும் நாங்கள் நடந்தோம். ஆனால் கோவிலுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீதிக்கு வெளியே ஒரு குடிலில் வைக்கப்பட்டிருந்த சுவாமியின் தேரில் இயற்கைக்கு மாறான பல மரச்சிற்பவேலைப்பாடுகள் காணப்படுகின்றன.”

இந்த விவரணத்தில் ‘கருங்கொட்டித்தீவு’ என்று சொல்லப்படுவது, இன்றைய அக்கரைப்பற்று நகர். திருக்கோவிலின் விமானம் பழுதடைந்து செங்கல் – சுண்ணம் என்பன வெளித்தெரிவதையும், சிற்பங்கள் தேய்ந்து போய் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதையும் தோமஸ் கிறிஸ்ரி அவதானித்திருக்கிறார் என்பது இருநூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவில் எப்படி இருந்திருக்கிறது என்பதைச் சொல்லப்போதுமானதாக இருக்கிறது. ஆனால் அங்கு தேரோட்டம், உற்சவம் எல்லாம் குறைவின்றி இடம்பெற்றிருக்கிறது என்பதற்கான ஆதாரம், அவர் குறிப்பிடுகின்ற தேர். அந்தத் தேரைக் காணும் பேறு நமக்கு இன்று கிடைக்கவில்லை.

இந்த இடச்சு – போர்த்துக்கேய – பிரித்தானிய சான்றுகளோடு ஐரோப்பிய ஆவணங்களை மூட்டை கட்டி வைத்துவிடுவோம். சொல்லுங்கள், நம்மிடம் திருக்கோவில் பற்றிய என்னென்ன ஆவணங்கள் இருக்கின்றன? உப்புச்சிரட்டைக்குள் தான் தலையைப் புகுத்தவேண்டும். சத்தியமாக இன்று ஒன்றுமே இல்லை. 2004 கடற்கோள், காணாமல் போதல் என்று கோவில் தொடர்பான பெறுமதி மிக்க நிறைய ஆவணங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன. ஆபத்பாந்தவனாக ஒரேயொருவர் கைநீட்டுகிறார். உண்மையில் அவருக்குத் கோவில் அருங்காட்சியகத்தில் ஒரு சிலை அமைத்துக் கும்பிட்டாலும் தகும். அன்னார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த பெருமகனார் அமரர்.சி.கணபதிப்பிள்ளை.



அவரது “பூர்வீக சப்தஸ்தலங்கள்” என்ற நூல் இன்று கிடைக்காவிட்டால், மிக அருமையான வரலாற்றுத் தகவல்களை இழந்திருப்போம். கி.பி 1803இற்கும் 1820இற்குமிடையே திருக்கோவிலில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச்சம்பவம் தோற்கடிக்கப்பட்டதையும், அதில் மீட்கப்பட்ட பெருமளவு செல்வங்களையும் ஒரு ஏட்டுச்சுவடியில் கண்டபடி அப்படியே பதிவுசெய்திருக்கிறார் அவர். 1823இல் கோவிலில் ஒரு தீவிபத்து இடம்பெற்றதையும், 1826 நவம்பர் 06ஆம் திகதி, குடமுழுக்கு இடம்பெற்றமையும், 1851 ஒக்டோபர் 30ஆம் திகதி இன்றுள்ள மகாமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டதும் அவரது நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

“சுத்துப்பட்டு எட்டுக்கிராமத்துக்கும் நாட்டாமையாக” இருந்தவர்கள் பற்றி தமிழ்த் திரைப்படங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது சித்திரவேலாயுதனும் அப்படி பெரிய நிலப்பரப்புக்கு ‘நாட்டாமை’’ தான். அதனால் தான் சுத்துப்பட்டு எட்டுப்பகுதியை – சுற்றியுள்ள எட்டுப்பற்றுக்களை - ஆள்கின்ற அவன் கோவில் தேசத்துக்கோவில் ஆனது. இன்று மட்டக்களப்பு, அம்பாறை என்று இரு மாவட்டங்களாகப் பிரிந்துள்ள பழைய மட்டக்களப்புத் தேசம், பதினொரு பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில், ஏறாவூர், மண்முனை, போரதீவு, எருவில், கரைவாகு, சம்மாந்துறை, அக்கரை ஆகிய ஏழு பற்றுக்களே காலனிய ஆட்சியில் மட்டக்களப்பு என்று குறிப்பாக அறியப்பட்டன. பாணமை, நாடுகாடு, கோரளை, விந்தனை ஆகிய எஞ்சிய நான்கு பற்றுகளும் மட்டக்களப்பின் ஆட்சியின் கீழேயே வந்தாலும், சனச்செறிவு மிக்கவையாக முற்சொன்ன ஏழு பற்றுகளே விளங்கின. அந்த ஏழு பற்றுகளில் ஏறாவூர்ப்பற்றைத் தவிர்த்து, நாடுகாடுப்பற்றையும் பாணமைப்பற்றையும் சேர்த்து, திருக்கோவிலை தேசத்துக்கோவிலாகக் கொண்டாடியவர்கள் “மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்கள்” என்று அறியப்பட்டார்கள்.


மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்கள் ஒன்றுகூடி 1870இல் இங்கு தேரோட்டத் திருவிழா செய்திருக்கிறார்கள். 28.12.1952 திகதியிட்ட கோவில் ஆவணமொன்றில், அவ்வாறு திருக்கோவிலில் உரிமை கொண்டாடிய இந்த எட்டுப்பகுதியைச் சேர்ந்த முப்பது வட்டாரங்கள் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. பாணமை, பொத்துவில், கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, பனங்காடு, கோளாவில், அக்கரைப்பற்று, பனையடிப்பிட்டி, மல்வத்தை, அம்பாறை, மல்லிகைத்தீவு, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருதூர், கல்முனை, சவளக்கடை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, மகிழூர், எருவில், களுதாவளை, பெரிய போரதீவு, கோவிற்போரதீவு, பழுகாமம், வெல்லாவெளி, நாவற்குடா என்பவை அவை. கிழக்கிலங்கையின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாகவும், இந்த வட்டாரத்தகவல் இன்னொரு விதத்தில் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகின்றது. உதாரணமாக இன்று - வெறும் அறுபதாண்டுகளில் - பனையடிப்பிட்டி என்ற ஒரு ஊரே இல்லை. பின்னாளில் மீனோடைக்கட்டு என்று அறியப்பட்டு, இன்று அடியோடு மறைந்துவிட்ட தமிழ்க்கிராமம் அது.

தற்போது மேற்படி முப்பது வட்டாரங்களில் பல விலகி, சில புதிதாக இணைந்துள்ளன. பொத்துவில், கோமாரி, தாண்டியடி, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, கோளாவில், பனங்காடு, நாவற்காடு, கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, பெரிய நீலாவணை ஆகிய பதினெட்டு வட்டாரங்களே இன்று திருக்கோவிலில் பூசையுரிமை கொண்டுள்ளன. பழைய வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்பு போல் பூசைகளில் பங்கேற்பதில்லை என்றாலும், இன்றும் வந்து வழிபடுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி பதினெட்டு நாள் திருவிழா இடம்பெறுகின்றது. திருவிழாவிலும் பெரும்பாலான நாட்கள் தனியார் குடும்பங்களின் உபயமாகவே இடம்பெறுகின்றது. அது காலத்தின் கோலம். அதில் தவறொன்றும் கூறமுடியாது.

காலம் நிறையவே மாறிவிட்டது. திருக்கோவில், தொடர்ந்தும் தேசத்துக்கோவிலாகக் கட்டிக்காக்கப்படும் போதே அதன் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பேணமுடியும். மெல்ல மெல்ல ஒரு சிலர் கைகளுக்குக் கோவில் செல்லும்படி அனுமதித்துவிட்டு, அதற்குப் பின்பும் அது தேசத்துக்கோவிலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அப்படி நடக்கக்கூடாதது நடந்த பின்னர், கோவிலின் புகழ் மழுங்கடிக்கப்படுகிறதே, அதைச் சீண்டுவார் யாருமில்லையே என்று வருந்துவதில் பலனில்லை. திருக்கோவில் வேலவனின் தொல்புகழும் சரித்திரப்பிரசித்தியும் தொடர்ச்சியாகக் காப்பாற்றப்படவேண்டும். நிர்வாகமும், ஊர்ப்பொதுமக்களும், கூடவே பண்டைய மட்டக்களப்பு எட்டுப்பகுதி மக்களும் கைகோர்த்து, அந்த வரலாற்றுக்கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதே இக்கட்டுரையாளனின் வேணவா. திருக்கோவில் வடிவேற்படையுடையான் அதற்கு மனம் வைப்பானாக.
மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 02)

3 comments
அசவீடோ அழித்த அருஞ்சிற்பக் கூடம்!


வரலாற்றில் திருக்கோவில்  - பாகம் 01

திருக்கோவில் பற்றிய இன்றைய கட்டுரை, மகிழ்ச்சியை விட, சோகத்தையும் ஏக்கத்தையுமே உங்கள் மத்தியில் எஞ்சவிட்டுச் செல்லப்போகிறது. ஏனென்றால் நாம் இந்த வாரம் பார்க்கப் போவது, திருக்கோவில் இடித்துத் தள்ளப்பட்ட கதையை! போர்த்துக்கேயர் இந்தத் திருத்தலத்தில் செய்திருக்கக் கூடிய நெஞ்சைப் பிழியும் அட்டூழியங்களை!


சுற்றாலையில் கேட்பாரற்றுக் கிடக்கும்
உடைந்த தூண்கள், திருக்கோவில்
திருக்கோவிலில் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த கற்றூண்களையும், கற்பாளங்களையும் காணலாம். திருப்பணி வேலைக்காகத் தோண்டிய இடத்திலெல்லாம் வேலைப்பாடு கொண்ட கற்றுண்டங்கள் கிடைத்தவாறே இருக்கின்றன. பழைய கற்றளி மண்டபங்கள் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இவை.


ஆனால், ஆலயம் முற்றாக உடைக்கப்படவில்லை. அல்லது உடைக்கப்படும் போது, அரசியல் செல்வாக்கால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது! ஆம். பேராசிரியர் இந்திரபாலா உறுதியாகவும், பேராசிரியர் பத்மநாதன் சற்று ஐயத்துடனும், திருக்கோவில் கருவறை 13ஆம் நூற்றாண்டு பாண்டியர் கலைப்பாணியை வெளிக்காட்டுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

விமானத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள யாளி வரிசைச் சிற்பங்களும், கருவறை வெளிச்சுவரின் மழுங்கிய சிற்பங்களும் அபூர்வமான அரைத்தூண் வேலைப்பாடுகளும், இலங்கையில் வேறெங்கும் காண அரிதான மிகப்பழைமையான சிற்பக்கலை அம்சங்கள். தனித்துவமான வேலைப்பாடுகளைக் கொண்ட திருக்கோவிலின் விமானத்தை, பேராசிரியர் இந்திரபாலா, பொலனறுவை இரண்டாம் சிவாலயத்துடனும், க.தங்கேஸ்வரி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் முந்தைய விமானத்துடனும் ஒப்பிட்டிருக்கிறார்கள். திருக்கோவில் விமானத்தின் பழைமை தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவை. ஆனால், போர்த்துக்கேயரால் கல் மண்டபங்கள், தூண்கள் இடிக்கப்பட்டாலும், கருவறை சிதைக்கப்படவில்லை என்று சொல்வதற்கு இவை போதுமான ஆதாரங்கள்.

சரி, போர்த்துக்கல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெர்னான்டோ டி குவரோஸ் (Fernão de Queirós, 1617- 1688) என்பவர், இலங்கைக்கு வந்து நீண்ட நாள் தங்கியிருந்த போர்த்துக்கேய மதபோதகர். அவரால் 1687இல் எழுதப்பட்ட “இலங்கை மீதான உலகியல் மற்றும் ஆன்மிக வெற்றி” (The Temporal and Spiritual Conquest of Ceylon) எனும் நூல் குறிப்பிடத்தக்க வரலாற்று நூலாகவும், போர்த்துக்கேய இலங்கை தொடர்பான விரிவான சித்திரங்கள் அடங்கிய சிறந்த நூலாகவும் கொள்ளப்படுவது. அதில் ஓரிடத்தில் குவரோஸ் பின்வருமாறு சொல்கிறார்: 

“பெற்றிகலோ சிற்றரசில் உள்ள 34 குடியிருப்புகளில், இருபத்துநான்கு, சனச்செறிவு மிகுந்தவை. அவற்றில் ட்ரிகோவிலைச் சூழவுள்ள பகுதி மிக மோசமாகக் காட்சியளிக்கிறது. குடிமக்கள் பெற்றிகலோவின் ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் இங்குள்ள பரந்த வயல்கள் உவராகியிருக்கின்றன. சிலோனின் ஏனைய பகுதிகளை விட, இச்சிற்றரசின் இந்தப்பகுதி தான் நல்ல சாயவேரைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. தேன்மெழுகு, யானைத்தந்தம், எலுமிச்சை, தோடை, அதிக விளைச்சலைத் தரும் அரிசி என்று இங்கு வளம் கொழிக்கிறது. பெற்றிகலோ துறைமுகத்திலிருந்து தென்புறமாக 12 குடியிருப்புக்களைக் கடந்ததும், சிலோனின் புகழ்மிக்க வழிபாட்டுத்தலமாக விளங்கிய அந்த "ட்ரிகோயிலி பகோடா"வைக் காணலாம். “துங்கோவிலே” என்பதே அதன் சரியான பெயர். மூன்று தளம் கொண்ட கோவில் அல்லது மூன்று கோவில்கள் என்று அதற்கு அர்த்தம். அங்கு பல சிற்பங்களும் விக்கிரகங்களும் அமைந்திருந்தன. ஜெனரல். டி.ஜெரோனிமோ டி அசவீடோ அதை இடித்துக் கொள்ளையடித்து, அங்கு ஊழியம் செய்த ‘கணேசேகளைக்’ கொன்றொழித்த காலம் வரை, அந்தப் பகோடா புகழ்பெற்றிருந்தது." 

பகோடா என்றால் கோவில். திருக்கோவிலைச் சூழவுள்ள பகுதி என்று குறிப்பிட்டு, அதன் செழிப்பை குவரோஸ் விவரிப்பதைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக கண்டு வியந்து சொன்ன சொற்கள் அவை என்பதை ஊகிக்க முடிகின்றது. பெற்றிகலோ துறைமுகத்திலிருந்து 12 குடியிருப்புக்கள் தாண்டி என்று தூரத்தை அவர் துல்லியமாகக் குறிப்பிடுவதன் மூலமும் அவர் இங்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தலாம். அவர் துறைமுகம் என்று சொல்வது இன்றைய மட்டுநகராக இருக்கக்கூடும். திருக்கோவிலைக் கொள்ளையடித்தவன் என்று குவரோஸ் குறிப்பிடும் இந்த அசவீடோ (Jerónimo de Azevedo) இலங்கையின் போர்த்துக்கேயத் தளபதியாக கி.பி 1594 முதல் 1613 வரை பதவி வகித்தவன். 1603ஆம் ஆண்டு யூலை மாதம் திருக்கோவில் சாதாரணமாகவே இயங்கி வந்ததை நாம் போன கிழமை பார்த்தோம். எனவே திருக்கோவில் கொள்ளையடிக்கப்பட்டது, 1604இற்கும் 1613இற்கும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டு கால இடைவெளியிலேயே இடம்பெற்றிருக்கவேண்டும்.

கண்டியை ஆக்கிரமிப்பதில் போர்த்துக்கேயர் ஏற்கனவே பேராசை கொண்டிருந்தனர். அசவீடோவின் தலைமையிலான இறுதியானதும் மிகக்கொடூரமானதுமான கண்டிப்படையெடுப்பு 1611இல் இடம்பெற்றது. கண்டியின் ஆதிக்கத்திலிருந்த கீழைக்கரையில், 1611இற்கு முன்பின்னாகவே போர்த்துக்கேயரின் வன்செயல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதால், திருக்கோவில் சிதைப்பு நிகழ்ந்தது குறிப்பாக 1610 - 1612இற்கு இடையே என்று கொள்ளலாம்.

குவரோஸ் சொல்லும் சாயவேர் அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்களின் முக்கியமான வாணிகப்பொருள்களில் ஒன்று. இம்பூரல் அல்லது சிறுவேர் என்று தமிழில் அறியப்படும் சாயவேர் (Oldenlandia umbellata), சிவப்புநிறத்தைப் பெறுவதற்கும், பட்டு, பருத்தி முதலான துணிகளைச் சாயமிடவும் வரலாற்றுக் காலத்திலிருந்தே பயன்பட்டு வந்த ஒருவகைப் பூண்டுத் தாவரமாகும். திருக்கோவிலைச் சூழப் பெறப்படும் சாயவேரே இலங்கையில் மிகச்சிறந்தது என்ற சொற்கள், அவர் இங்கு நேரடியாக வந்து அவதானித்திருக்கிறார் என்பதற்கான இன்னொரு சான்று. ஆனால் நேரடியாக வந்திருக்கிறார் என்பதற்காக அவரது முழுக்கூற்றையும் உண்மையாகக் கொள்ளமுடியவில்லை. திருக்கோவிலின் சரியான பெயர் என்று, மூன்று கோவில் என்று சிங்களத்தில் பொருள்படும் துன்கோவில (Tuncoule) என்ற பெயரை குவரோஸ் குறிப்பிடுகிறார். திருக்கோவிலை ‘திரிக்கோவில்’ (திரி = மூன்று) என்று பிழையாகப் புரிந்துகொண்டு அவரது சிங்கள உதவியாளர் இதைச் சொல்லியிருக்கக்கூடும். இதே குழப்பமே திருக்கோணமலையின் பெயர் விடயத்திலும் (திரிகோணமலை?) நிலவிவந்ததை – நிலவிவருவதை நாம் காணலாம்.

திருக்கோவிலின் சரியான பெயர் திரிக்கோவில் என்பதற்கு வேறெந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. இலங்கை மொழிவழக்கில் அத்தகைய ஒரு பெயருக்கான வாய்ப்பும் மிக அரிது. நிலைமை இப்படியிருக்க, ‘Tuncoule’ என்பதை துங்கோள என்று வாசித்து திருக்கோவிலின் பழைய பெயர் ‘துங்ககோளப்பட்டினம்’ என்று சொல்லும் கட்டுரைகள் கடந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. கிழக்கிலங்கை வரலாற்றறிஞர்கள் பலர் குவரோசின் கூற்றை அப்படியே நம்பி, திருக்கோவிலில் மூன்று கோபுரங்கள் இருந்தன என்றும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். உண்மையில் குவரோஸ் கோபுரங்கள் பற்றித் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. துங்கோவில என்ற (தவறான) பெயருக்கு காரணம் தேடும் நோக்கில் “மூன்று தளம் கொண்ட பகோடா அல்லது மூன்று பகோடாக்கள்” என்றே அவர் விளக்கம் கூறுகிறார். 

குவரோசின் நூலை வாசிக்கும் எவரும் அவர் உள்ளூர் இடப்பெயரை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெரும்பாலும், தான் விவரிக்கின்ற இடங்களைச் சொல்லும் போது அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதற்கான விளக்கத்தையும் கூடவே அவர் கொடுத்திருக்கிறார். எனவே மூன்று கோபுரங்கள் திருக்கோவிலில் அமைந்திருந்தன என்பதை இப்போதைக்கு நம்மால் உறுதியாகக் கூறமுடியாது. எனினும் ‘ட்ரிகோயிலி பகோடா’வின் சிற்பங்கள், விக்கிரகங்களை குவரோஸ் விசேடமாகச் சொல்வதால், கருவறை விமானச் சிற்பங்களோ அல்லது மண்டபங்களிலிருந்த கலையழகு நிறைந்த அருஞ்சிற்பங்களோ அசவீடோவால் தகர்த்து வீசப்பட்டிருக்கின்றன என்பதையேனும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.

குவரோசின் கூற்றில் இறுதி வரி தான் முக்கியமானது. திருக்கோவிலை இடித்த தளபதி அசவீடோ, அக்கோவிலின் சேவைக்காக நியமிக்கப்பட்டிருந்த கணேசேக்களைக் (Ganezes) கொன்றான் என்று அவர் குறிப்பிடுகிறார். குவரோசின் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஸ்.ஜி.பெரேரா, வேறொரு இடத்தில் வரும் “Ganez” என்ற சொல்லுக்கு “கணனான்சே – வணக்கத்துக்குரிய பௌத்தத் துறவி” என்று விளக்கமளித்திருக்கிறார். திருக்கோவில் ஆலயச்சூழலில் இன்றுவரை எந்தவொரு பௌத்தத் தொல்லியல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதால் அந்த விளக்கம் இங்கு பொருந்தாது.. என்றால் கணேசே என்பதற்கு வேறென்ன பொருள் தான் கொள்ளமுடியும்?

ஒரேயொரு சாத்தியமே இருக்கிறது. கணிகை! கணிகையர், பழங்காலக் கோவில்களில் நடனம், கலைத்தொண்டு என்று ஊழியம் செய்து வந்த பெண்கள். சுந்தரமூர்த்தி நாயனாரின் மூத்த மனைவி பரவையார் கணிகையர் குலத்தவர் தான். கணிகையர் சோழ - பாண்டிய ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களையே “தளிச்சேரிப் பெண்டுகள்” என்று விளித்து தஞ்சைப்பெருங்கோவிலில் குடியமர்த்தினான் இராஜராஜசோழன். மன்னராட்சி மறைந்த பிற்காலத்தில் இவர்களது பரம்பரையினர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இழிதொழில் செய்யும் பரிதாப நிலையை அடைந்தாலும், கணிகையரின் அன்றைய மதிப்பு மிக்க வாழ்க்கை, அவர்களது செல்வச்செழிப்பு பற்றி தமிழகக் கல்வெட்டுகள் கதை கதையாகச் சொல்கின்றன. 'கணிசை' என்பது பிற்காலத்தமிழில் விலைமகளிரைக் குறிக்கும் இழிசொல்லாக விளங்கியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். 

இலங்கையில் கூட மாத்துறை தேனவரை நாயனார் கோவிலிலும், மாவிட்டபுரம், பொன்னம்பலவாணேச்சரம் முதலிய தலங்களிலும் வசித்த கணிகையர் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படிப் பார்த்தால், குவரோசின் ‘திருக்கோவில் கணேசேக்கள்’ கணிகையராகவே இருக்கவேண்டும். கோவிலுக்கு ஊழியம் செய்த கணிகையர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதை குவரோஸ் விதந்து குறிப்பிட அதிக வாய்ப்பு இருக்கிறது. கோவிலைக் கொள்ளையிட்டுச் சூறையாட வந்தவர்கள், பெண்களைக் கண்டால் சும்மா விட்டா சென்றிருப்பார்கள்?

போர்த்துக்கேயர் திருக்கோவிலை இடித்தல் - தரிசன மண்டப சுதைச்சிற்பம்

கிடைக்கின்ற இந்தக் குறிப்புகளே குலைநடுங்கச் செய்கின்றன. கோவிலும் அதன் அழகிய சிற்பங்களும் சிதைக்கப்பட்டன; பெருமளவு செல்வம் கொள்ளையிடப்பட்டது; கோவிற்பெண்டிர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்; கோவிலைச் சூழ வாழ்ந்த மக்கள் அஞ்சி இடம்பெயர்ந்து விட்டார்கள்; என்ற இந்தச் செய்திகளே ‘வேறென்ன நடந்திருக்கும்’ என்று ஊகிக்கப் போதுமானவை.

திருக்கோவிலில் மட்டுமல்ல; பெரும்பாலான ஆலயங்களில், பொதுவெளிகளில் இன்றும் இத்தகைய அராஜகங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. மனிதனின் கீழ்மை வெளிப்படும் இந்தக் கொடுஞ்செயல்களுக்குப் பொருள் தான் என்ன? கருவறைக்குள் எட்டிப் பார்த்துக் கேட்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் மாறாத அழகுப்புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருக்கிறான் அந்தக் கள்வன். அதுவும் சரி தான். மானுடர்கள் எளியவர்கள் நாம். நமக்குத் தான் காலத்தின் மர்ம முடிச்சுகள் புரிவதில்லை. அவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா, என்ன?

மேலும் வாசிக்க »

வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)

0 comments

திருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் !

('கோவில்' என்பது சைவரைப் பொறுத்தவரை மிகப்புனிதமான சொல். ஆனால் ஒரு ஆலயம் மாத்திரமன்றி ஒரு ஊரே 'திருக்கோவில்' என்று அழைக்கப்படும் பெருமையை தமிழகத்தில் கூட எந்தவொரு தலமும் பெற்றதில்லை. அந்த விதத்தில் ஈழவளநாடும் கீழைக்கரையும் பெருமைப்படும் படி கோவில் கொண்ட இறைவன் திருக்கோவில் சித்திரவேலாயுதன். கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்பெற்ற முருகத்தலமாகவும் விளங்குகின்ற திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் கடந்த ஆண்டு 2018 யூன் 25ஆம் திகதி அன்று திருக்குடமுழுக்குக் கண்டது. அதை முன்னிட்டு அரங்கம் பத்திரிகையில் வெளியானது இந்த வரலாற்றுக் கட்டுரைத்தொடர்.)

திருக்கோவில் இலங்கையின் மிகப்புராதனமான வழிபாட்டிடங்களில் ஒன்று. சரி. வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியர் திருக்கோவிலைப் பற்றி எங்காவது குறிப்பிட்டிருக்கிறார்களா? இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், அக்கோவில் அவர்களால் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறது? இப்படித் தேடிப்பார்க்கும் போது கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருக்கும். கூடவே வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை ஓரளவு கூடியதாகவும் இருக்கும் இல்லையா? அப்படியான குறிப்புகளை மாத்திரம் நாம் இத்தொடரில் ஆராய இருக்கிறோம்.

உண்மையில் திருக்கோவில் பற்றி ஐந்துக்கு மேற்பட்ட ஐரோப்பியர் குறிப்புகளும் பதினைந்துக்கு மேற்பட்ட வரைபடங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. என்றாலும் வெள்ளையர் – ஐரோப்பியர் என்று சொல்லும் போது நாம் இன்னொரு விடயத்தை நினைவு கூரவேண்டி இருக்கிறது. அவர்கள் பிற நாட்டினர், பிற சமயத்தவர்கள் என்பதால் சைவ சமயம் பற்றிய போதிய அறிமுகம் அவர்களுக்கு இருந்திருக்காது. உள்ளூர்ச் சமயங்கள் பற்றி அவர்கள் ஒரு உல்லாசப்பயணியின் பார்வையில் எழுதியிருப்பார்களே தவிர, ஒரு ஆய்வாளராகவோ வரலாற்றறிஞராகவோ அல்ல. அவர்கள் கண்ட – கேட்ட விடயங்களில் சில உள்ளூர்வாசிகளால் அவர்களுக்குத் தவறாகவும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கக்கூடும். இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் அவர்களது குறிப்புகளை நாம் அணுக வேண்டும்.

1602 ஆமாண்டு ஒல்லாந்திலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வருகை தந்த ஒல்லான்டிஸ்சே சவுன் (Holländische zaun) எனும் கப்பலில் பயணித்தவர் 'ஜொஹான் ஹேர்மன் வொன் ப்ரீ' (Johann Herman Von Bree) எனும் இடச்சுப் பெருவணிகர். இந்தக் கடற்பயணத்திலேயே நோய்வாய்ப்பட்டு உயிர்நீத்த இவரது நாட்குறிப்பேடு இலங்கை தொடர்பான மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. திருக்கோவில் பற்றி முதன்முறையாகக் குறிப்பிடும் ஐரோப்பியரும் இவர் தான்.
கல்லாலான அர்த்த மண்டப நுழைவாயில், திருக்கோவில்.


இலங்கையின் கீழைக்கரைக்கு 1603 இற்கு வருகை தந்த வொன் ப்ரீயின் கப்பல், மட்டக்களப்பை ஆண்ட வன்னிமையூடாக அப்போதைய கண்டி மன்னன் முதலாம் விமலதர்ம சூரியனைத் தொடர்பு கொண்டு தன் வணிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வொன் ப்ரீயின் குறிப்புகளில் மட்டக்களப்பு வன்னிமையும், 'அரசன்' என்றே அழைக்கப்படுகிறான். மட்டக்களப்பு வன்னிமையையே அவர்கள் இலங்கையின் அரசன் என்று முதலில் கருதியதும், அவனை விட கண்டி மன்னன் பலம் வாய்ந்தவன் என்று அறிந்தபோது அவர்கள் அடைந்த அதிர்ச்சியும் இந்த ஒல்லாந்துக் குறிப்புகளில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு ஆதாரங்களின் மூலம் இந்த மட்டக்களப்பு வன்னிமையின் பெயர், தர்மசங்கரி அல்லது தர்மசிங்கத்துரை என்று தெரிகிறது. (இங்கு சொல்லப்படுகின்ற மட்டக்களப்பு சம்மாந்துறைக்கு அண்மையில் இருந்த பழைய மட்டுநகர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.)

தனது 1603 ஆமாண்டு யூலை 13ஆம் திகதிய நாட்குறிப்பில், வொன் ப்ரீ தமக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமை ஒன்றை எழுதுகின்றார். அவர்களது கப்பலும் படகொன்றும் அப்போது பொலிகாம நதியில் (பழுகாம ஆறு – மட்டக்களப்பு வாவி!) நங்கூரமிட்டிருந்தன. கண்டி மன்னன் விமலதர்மசூரியனிடம் தாங்கள் (ஒல்லாந்தர்) அனுப்பிய தூதர் திரும்பி வரவில்லை. தங்களுக்கு எந்த விதமான பதிலோ, கோரிய வணிகப்பொருட்களோ எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் உண்மையில் கண்டி மன்னனின் பதிலுக்காக மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருந்தார்கள். எனவே அக்கப்பலை ஓட்டி வந்திருந்த ஒல்லாந்து துணைக் கடற்படைத் தளபதி பொறுமை இழந்திருந்தான். ஆனால் அன்றைக்கு மட்டக்களப்பிலிருந்து வந்திருந்த 'ஆராச்சி' ஒருவரை அவர்களால் சந்திக்கமுடிந்தது. அது தொடர்பாக வொன் ப்ரீ வருமாறு எழுதுகிறார்.

'மாத்துறை அல்லது அருகிலுள்ள வேறோர் இடத்திலிருந்து பாக்கு, கறுவா, மிளகு என்பன வருவதாகவும், அவற்றை எடுத்து வரும் இரு சம்பான்களுக்கு அனுமதிப்பத்திரங்களைத் தந்தால், அவற்றை ஒல்லாந்தர் எடுத்துக்கொள்ள அனுமதிப்போம் என்றும் ஆராச்சி தெரிவித்தார். அங்கிருந்து நான்கு அல்லது ஐந்து மைல் தெற்கேயுள்ள திரக்கோய் எனும் இடத்துக்கு மட்டக்களப்பு மன்னன் அடுத்த நாள் செல்லப்போவதாக அவர் மேலும் கூறினார். அங்குள்ள ஒரு கோவிலுக்கு அல்லது தெய்வத்துக்கு பெரிய விழா ஒன்று நடக்கப்போகின்றது. அந்த விழா முழுநிலவு வரை ஒன்பது, பத்து நாட்கள் நீடிக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுற்றிவர உள்ள எல்லா இடங்களிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள். எனவே அந்த நாட்களில் எங்களுக்குக் பண்டமாற்றுக்காக வருகின்ற கோழியோ பழங்களோ மிகக்குறைவாகவே கிடைக்கும் அல்லது சிறிது கூட கிடைக்காமலும் போகலாம் என்பதைத் தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த வழக்கத்தை ஆண்டு தோறும் தீவின் வெவ்வேறு இடங்களில் அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.'

சம்பான்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்த இடம் தான் சம்பாந்துறை - இன்றைய சம்மாந்துறை என்று முன்பே அறிந்திருப்பீர்கள். சம்பான் என்று அழைக்கப்பட்ட படகுகள் தான் அக்காலத்தில் இலங்கை வியாபாரத்தில் முக்கியமான பங்கு வகித்தன. ஆராய்ச்சி என்பது, கண்டி இராசதானி காலத்தில் அரச அலுவலர் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டம். அந்தப் பட்டத்தைக் கொண்டிருந்த ஒருவர் மூலம், வணிக நோக்கில் வந்திருந்த ஒல்லாந்தர் இராஜதந்திர ரீதியில் கையாளப்பட்டிருக்கிறார்கள் என்பது வொன் ப்ரீயின் குறிப்பின் மூலம் புரிகின்றது.


அர்த்த மண்டப நுழைவாயில்,
இன்னொரு கோணத்தில்.
இனி திரக்கோய் என்று வொன் ப்ரீ குறிப்பிடுகின்ற இடம் திருக்கோயில் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மட்டக்களப்பிலிருந்து நான்கைந்து மைல் தெற்கே அது இருக்கின்றது என்கிறார் அவர். பழங்கால இடச்சு மைல் ஒன்றின் அண்ணளவான தூரம், இன்றைய சர்வதேச அளவீட்டில் 5 – 6 கிமீ ஆகலாம். எனவே திருக்கோவில் மட்டக்களப்பிலிருந்து 20 – 30 கி.மீ தொலைவில் இருக்கின்றது. இங்கு சொல்லப்படும் மட்டக்களப்பு, சம்மாந்துறை என்பதை மீண்டுமொருமுறை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றுள்ள பெருந்தெருக்களின் கணக்குப்படி, திருக்கோவிலுக்கும் சம்மாந்துறைக்குமான இடைத்தூரம் 35 கி.மீ

முழுநிலவு வரை ஒன்பது பத்து நாட்கள் நடக்கப்போகும் விழாவுக்காக மட்டக்களப்பு மன்னர் அங்கு செல்கிறார். 1603 ஆமாண்டு நாட்காட்டியைப் பார்த்தால் வொன் ப்ரீ இக்குறிப்பை எழுதும் யூலை 13இற்கு சரியாக பத்து நாட்கள் கழித்து யூலை 22ஆம் திகதி முழுநிலவு வருகின்றது. ஆடிப்பூரணை! திருக்கோவிலில் அப்போது தீர்த்த உற்சவம் இடம்பெற்றது ஆடிப்பூரணையில்!

ஆடிப்பூரணை இலங்கைப் பண்பாட்டில் இன்றும் மிக முக்கியமான நாளாக விளங்குவதைக் காணலாம். 'தீவின் வெவ்வேறு இடங்களில் ஆண்டுதோறும் மக்கள் கடைப்பிடிப்பதாக' வொன் ப்ரீ குறிப்பது ஆடிப்பூரணை விழாவைத் தான் என்று கொள்ளமுடியும். கண்டிப் பெரகரா இடம்பெறுகின்ற சிங்கள  எசல போயா தினம் பெரும்பாலும் தமிழ் ஆடிப் பௌர்ணமியிலேயே வரும். கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா முடிவடைவதும் அதே நாளில் தான். நானூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலிலும் அதுவே விழா நாளாக இருந்திருக்கிறது என்பதை இந்த ஒல்லாந்துக் குறிப்பு கூறுகின்றது.

ஆனால் இன்றைக்கு திருக்கோவிலின் தீர்த்தோற்சவம் இடம்பெறுவது ஆடி அமாவாசையில். இந்த உற்சவ தின மாற்றத்திற்கும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் வருகின்ற 'ஆடகசௌந்தரி மாமாங்கத்தில் ஆண்டு தோறும் தீர்த்தமெடுத்துக் கொண்டு திருக்கோவில் சமுத்திரத்தில் கலந்து ஆடித்திங்கள் அமாவாசை அன்று ஸ்நானம் செய்து கொண்டாடி வந்தனள்' என்ற குறிப்புக்கும் தொடர்பு இருக்கக்கூடும். திருக்கோவில், மாமாங்கம் இரண்டின் திருவிழாக்களுமே கிழக்கிலங்கை மக்களின் பேச்சுவழக்கில் 'தீர்த்தக்கரை' என்றே அறியப்படுகின்றது என்பதை நாம் இங்கு நினைவுகூரலாம்.

இன்றைய தரிசன மண்டபம்
எது எப்படியோ, நானூறு ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலின் ஆடிவேல் விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர் ; விழா முழுவதும் மட்டக்களப்பை ஆண்ட மன்னன் அங்கு சென்று தங்கியிருந்தான் ; அந்தப் பத்து நாட்களும் ஒல்லாந்தரின் வியாபாரம் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது என்ற குறிப்புகள் மிக உறுதியாகச் சொல்வது ஒன்றையே. கிழக்கின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் ஐரோப்பியர் கால் பதித்து விட்ட 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இலங்கையில் – குறிப்பாக கிழக்கிலங்கையில் புகழ் பூத்திருந்த ஆலயம். அதற்கும் பல்லாண்டுகள் முன்பு அது எப்படி இருந்திருக்கும்? அதை நாமே கற்பனை பண்ணிப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.


பாகம் 02

பாகம் 03

மேலும் வாசிக்க »

அம்பாறை மாவட்டம் பிறந்த கதை!

0 comments

இலங்கையின் இளைய வயதுடைய நான்கு மாவட்டங்களில் ஒன்று அம்பாறை மாவட்டம். அதற்கு இன்று வயது வெறும் ஐம்பத்தேழு தான். அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி, 1961ற்கு முன்பு,  மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சொந்தமாக இருந்தது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்து உருவாகக் காரணமாக இருந்த  உள்ளூராட்சிப் பிரிவுகள் எவை, அது உருவான பின்னணி என்ன என்பதை நாம் இங்கு சுருக்கமாகப் பார்க்க இருக்கிறோம். அப்படிப் பார்ப்பதென்றால் மட்டக்களப்பிலிருந்து தான் தொடங்கவேண்டும்.
மேலும் வாசிக்க »

“நாம் இந்து அல்ல; சைவர்கள்”

0 comments
இலங்கை சைவநெறிக் கழகம் நிகழ்த்திய “சைவம் போற்றுதும்” எனும் கலைவிழாவானது கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி (சனிக்கிழமை) கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் கோலாகலமாக இடம்பெற்றது. அங்கு கவனிப்பதற்கு இரு விடயங்கள் இருந்தன.

மேலும் வாசிக்க »

கரையைக் கொள்ளும் கடலன்னை

1 comments
கிணற்றைக் கொண்ட கடல், திருக்கோவில்
நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் வசிப்பவர் என்றால், அல்லது அம்பாறை மாவட்டத்தில் உறவினர்களைக் கொண்டிருப்பவர் என்றால், எப்போதாவது அங்குள்ள கடற்கரையொன்றுக்குச் செல்பவர் என்றால், ஒரு விடயத்தை அவதானித்திருக்கலாம். அது கடலரிப்பு!

மேலும் வாசிக்க »

தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

0 comments
அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன் மனுநேய கயவாகு, ஒரு குளம் கட்டி அந்தப்பெயரைச் சூட்டியதாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். காலனித்துவ இலங்கை வரைபடங்களில் அவ்வூர் தம்பொலிக்குளம், தமொலிகாமம், தம்பலி ஊர் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க »

இலங்கை முஸ்லீம்களின் இனத்துவ அடையாளம்

0 comments
"இனம் என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் ஏன் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழ் இனமாக இல்லை?” என்பது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி. முகநூலில் இவ்வினா தொடர்பான ஒரு நண்பனின் பதிவுக்கு அளிக்கப்பட்ட பதில் இந்தப் பதிவு.


"இலங்கை முஸ்லீம்கள் ஏன் தமிழர் இல்லை?" என்ற இந்தக் கேள்வியை வேறு விதமாக இரண்டாகக் கேட்கலாம். ஒன்று, “மதம் சார்ந்து இனத்தை வரையறுக்கலாமா?” இரண்டு, “ஒரே மொழி பேசுவோர் எல்லோரும் ஒரே இனம் தானே?”

மேலும் வாசிக்க »

திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு!

0 comments

தமிழருக்கான ஆண்டுக்கணக்குக்கு "திருவள்ளுவர் ஆண்டு" என்று பெயர். நாட்காட்டிகளிலோ பஞ்சாங்கங்களிலோ பார்த்தீர்கள் என்றால் "திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு" என்று போட்டிருப்பார்கள். 2021ஆம் ஆண்டு ஜனவரி 13இல், அதாவது தை முதலாம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2052 பிறக்கிறது. 

கிரகோரியன் நாட்காட்டியுடன் 31 ஆண்டுகள் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். ஆனால் அது எத்தகைய பின்னணியில் தோற்றமுற்றது, அதன் தோற்றத்தின் பின்னே இருந்த சமூக, அரசியல், வரலாற்றுக் காரணிகள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. 

தமிழனை ஒரே சொல்லில் வரைவிலக்கணப்படுத்துவதென்றால், உணர்ச்சிபூர்வமானவன் என்று சொல்லிவிடலாம். உணர்ச்சிகரமான எதையும் மறுபேச்சின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு மாற்றுத்தரப்பை மிகக்கடுமையாக விமர்சிப்பதே தமிழ்ப்பற்றாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோரின் வழமையாக இருக்கிறது. அதற்கான மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு. திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு என்ற பெயரில் இணையத்தில் காணக்கிடைக்கும் கட்டுரைகள் எல்லாமே வரலாற்று நோக்கு என்பதே துளியும் இன்றி, யாரோ ஒருவர் சொன்ன ஒரே விடயத்தை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்பவை. எவ்வித ஆதாரங்களும் அற்றவை. அவற்றில் வரலாற்றுணர்வோ யதார்த்தமோ சிறிதும் இல்லை.  அவற்றைப் படித்தபோது அடைந்த கசப்பில் எழுந்ததே இக்கட்டுரை.


மேலை நாடுகளின் காலக்கணிப்புக்காக கிரகோரியன், யூலியன் என்பனவும், அரபுலகு மற்றும் இஸ்லாமியர் மத்தியில்  ஹிஜ்ரி நாட்காட்டியும், இந்திய சமூகங்கள் மத்தியில் சக வருஷம், விக்கிரம வருஷம், கலியுகாதி வருஷம் என்பனவும் வழக்கில் இருக்கின்றன. தமிழிலிருந்து பிரிந்த கடைக்குட்டி மலையாளத்துக்கே கூட "கொல்லம் ஆண்டு" என்று தனியே ஒரு ஆண்டுக்கணக்கு இருக்கின்றது. ஆனால், முன் தோன்றிய மூத்த குடி என்று பெருமை பீற்றிக்கொண்ட தமிழினத்துக்கென தனி ஆண்டுக்கணக்கு ஒன்று கிடையாது. தமிழை நேசித்த எவருக்குமே இது ஒரு பெரிய உறுத்தலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. அவ்வாறான ஒரு தனி ஆண்டு பிறப்பதற்கான காலமும் கனிந்து வரவேண்டுமல்லவா? இந்த நிலையில் தான் தமிழரின் ஆண்டுக்கணக்குக்கான கால்கோள்  கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இடப்பட்டு விட்டது.

திருவள்ளுவர் திருநாள் மலர்
1955ஆம் ஆண்டு, இலங்கை தமிழ்மறைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "திருவள்ளுவர் திருநாள் மலர்" திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை அறிவதற்கான முக்கியமான ஆவணம். அதில் கூறப்பட்ட  மூன்று விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, தமிழருக்கான ஆண்டுக்கணக்கு திருவள்ளுவர் பெயரிலேயே ஆரம்பமாக வேண்டும் என்ற கொள்கை  1920களில் தோற்றம் பெற்றுவிட்டது. இரண்டாவது, வள்ளுவர் கிமு 31ஆம் ஆண்டு வைகாசி அனுச நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று மறைமலையடிகள் கணித்திருந்தார். மூன்றாவது, திருவள்ளுவர் ஆண்டுத்தொடரின் படி அமைந்த திருக்குறள் நாட்குறிப்பொன்றை திருநெல்வேலி சைவசித்தாந்தப் பதிப்புக் கழகம், 1922இல் வெளியிடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தது (பப.27 - 32). இக்காலப் பின்னணியை ஊன்றி நோக்கினால் தமிழரின் மகத்தான அடையாளமான திருவள்ளுவர் பெயரில் ஒருநாள் விழாவெடுக்க வேண்டும் என்ற அறிஞர்களின் ஆர்வமும் திருவள்ளுவர் ஆண்டுத்தொடர் பற்றிய சிந்தனையும் ஒரே நேரத்தில் தான் தோற்றம் பெற்றிருக்கின்றன  என்பது தெரியவருகிறது.  


திருவள்ளுவர் தமிழரின் அடையாளம்
உலகப்பொதுமறை எனும் புகழை தமிழர் மத்தியில் தக்கவைத்துக்கொண்ட நூல், திருக்குறள். உலகின் 35இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ள திருக்குறள், பல்வேறு நாடுகளிலும் புகழ்பெற்ற ஒன்று. திருக்குறளின் உலகளாவிய தன்மையால், தமிழின் ஏனைய தலைசிறந்த மெய்யியலாளர்களை விட, வள்ளுவப்பிரானை தமிழின் அடையாளமாக முன்வைப்பதே பொருத்தம் என்ற கருத்து, பல்லாண்டுகளுக்கு முன்பே நிறையப்பேருக்குத் தோன்றிவிட்டது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் முழுவீச்சுடன் எழுந்த தனித்தமிழியக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம்,  திராவிட இயக்கம் என்பவற்றின் பங்களிப்புடன் தமிழகமெங்கும் உருவான திருவள்ளுவர் கழகங்களில் இப்படி திருவள்ளுவர் திருநாள்கள் கொண்டாடப்பட்டன. அவற்றில் 1927 முதல் தொடர்ச்சியாக  வைகாசி அனுசத்தில் திருவள்ளுவர் விழாக் கொண்டாடிய பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளையின் தலைமையில் அமைந்த தென்காசித் திருவள்ளுவர் கழகம் பற்றிய தகவல் மட்டும் இப்போது கிடைக்கிறது. (மேற்படி, பப.26, 30).

திருவள்ளுவர் திருநாள்
இந்தப் பின்னணியில், வள்ளுவன் விழாவை உலகெங்கும் தமிழரை இணைக்கும் பெருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற வேணவா, இருவருக்கு ஏற்பட்டது. அவர்கள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளராக இருந்த பத்மஸ்ரீ.வ.சுப்பையாபிள்ளை  மற்றும் அவர் நண்பர் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை. இவர்கள்,  17.01.1935 செய்துகொண்ட தீர்மானத்தின் பயன் தான் "திருவள்ளுவர் திருநாட்கழகம்" எனும் அமைப்பு.

தொல்காப்பியம், ஆத்திசூடி முதலான பல்வேறு நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்த தமிழறிஞர் பேரா.நமச்சிவாய முதலியார் அதன் தலைவராகவும் பாரிப்பாக்கம் கண்ணப்பர், வ.சுப்பையா ஆகியோர் முறையே செயலாளர், பொருளாளர் ஆகவும் அமர்ந்தனர். இவர்களது தலைமையில் உருவான திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் முதன்மையான பணி, வள்ளுவனுக்கென ஒருநாளை ஒதுக்கி அன்று ‘திருவள்ளுவர் திருநாள்’ எனும் விழாவைக் கொண்டாடுவது. அந்த நாளை இந்தியாவில் மாத்திரமன்றி தமிழர் விரவி வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளிலும் கொண்டாடுவதற்கான கோரிக்கை அக்கழகத்தினரால் விடுக்கப்பட்டு 1935இல் வைகாசி அனுசம் அமைந்த மே 17, 18 திகதிகளில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இவற்றில் முதன்மையான விழா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்,மறைமலையடிகள்,திரு.வி.கலியாணசுந்தரனார்,தெ.பொ.மீனாட்சிசுந்தரம்பிள்ளை முதலான முக்கியமான தமிழறிஞர்களின் தலைமையில் இடம்பெற்றது. வெற்றிகரமாக இடம்பெற்ற அன்றைய விழாவில், திருவள்ளுவர் திருநாளை இனி ஆண்டு தோறும் கொண்டாடுவதென்றும், தமிழகம் மாத்திரமன்றி, உலகெங்கும் தமிழர் பரந்து வாழும் இடங்களிலும் அது அதே நாளில் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகின்றது.




திருவள்ளுவர் திருநாளின் பிற்காலம்
வைகாசி அனுசத்து திருவள்ளுவர் திருநாள் 1935இற்குப் பின் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அடுத்த ஆண்டு 1936 யூன் 4ஆம் திகதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் உ.வே.சாமிநாதர் தலைமையில் அது நடைபெற்றது. அதே ஆண்டு தென்காசி விழாவுக்கு வி.கலியாணசுந்தரனாரும், கோவை விழாவுக்கு துடிசைக்கிழாரும் தலைமை தாங்கினர். அடுத்த 1937இல் மே 22 ஆம் நாள் இராமநாதபுரம் பாகனேரியில் கோவை சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியனார் தலைமையில் அவ்விழா நடைபெற்றது. 

1940 பங்குனியில் வெளியான செந்தமிழ்ச்செல்வி இதழின் குறிப்பின் படி, தமிழகத்தில் திருவள்ளுவர் திருநாள்கள் பெரும்பாலான ஊர்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.  எனினும் 1935இல் இடம்பெற்ற திருவள்ளுவர் திருநாள் போல உலகெங்கும் அதைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வாய்ப்பு 1954ஆம் ஆண்டே மீண்டும் ஏற்பட்டது. அந்தக் கொண்டாட்டத்துக்கு அயராது பாடுபட்டவர்,  ஒரு ஈழத்தமிழ்மகன். பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள்!



குறள் புகழ் பாடிய ஈழத்தவர்
திருக்குறளின் பெருமையைப் பரப்புவதற்காக தமிழ்மறைக் கழகம் என்ற அமைப்பை நிறுவியிருந்த இரத்தினத்தார், 13.1.1952 அன்று அந்த அமைப்பூடாக "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள், தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்" என்ற சொலவடையுடன் அனைத்துலகத் தமிழ் அமைப்புகளுக்கும், அவ்விழாவை மீண்டும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். குன்றக்குடி அடிகளார், டாக்டர். மா.இராசமாணிக்கனார், டாக்டர் மு.வரதராசன், அ.ச.ஞா, கி.வா.ஜ, முதலான பல்வேறு தமிழறிஞர்களும் அதை ஏற்று வழிமொழிந்ததை அடுத்து, 1954ஆம் ஆண்டு, திருவள்ளுவர் திருநாள் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகம், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மாத்திரமன்றி, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தென்னாபிரிக்காவின் ஜொகன்னர்ஸ்பேர்க் முதலான நாடுகளிலும் அது கொண்டாடப்பட்டிருக்கிறது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலிருந்து கிடைக்கின்ற 1956 மற்றும் 1959 ஆண்டறிக்கைகளில், அங்கு திருவள்ளுவர் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளைக் காணலாம். சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலையை திருவள்ளுவர் திருநாளான 1966 யூன் 02ஆம் திகதி, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

திருவள்ளுவர் திருநாள் எப்போது?

1922இல் தென்காசித் திருவள்ளுவர் விழாவில் தொடங்கிய திருவள்ளுவர் திருநாளானது, வள்ளுவர் பிறந்த தினமாக நம்பப்படும் வைகாசி அனுசத்திலேயே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை அக்கால ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறது திருவள்ளுவர் திருநாள் மலர். ஆனால், வைகாசி அனுசத்துக்கு எதிரான நான்கு குரல்கள் அப்போது ஒலித்தன என்ற செய்தியும் அதே மலரில் பதிவாகி இருக்கின்றன.

முதல் குரல் திருவள்ளுவர் திருநாளை, அவர் பிறந்த வைகாசி அனுசத்தில் அன்றி, வள்ளுவர் குருபூசை நிகழ்த்தப்படும் மாசி உத்தரத்திலேயே கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அடுத்து வள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றியதாக நம்பப்படும் வைகாசி விசாகத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்றது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு ஆடிப்பெருக்கை அண்டிய ஒருநாளில் வள்ளுவர் விழா கொண்டாடலாம் என்றது. இறுதித் தரப்பு, நம்பிக்கை சார்ந்த நட்சத்திரங்களைப் பார்க்காமல், தமிழர் திருநாளான தைப்பொங்கலன்று தான் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று கோரி வந்தது. இதில் இறுதிக் கோரிக்கையை முன்வைத்த தரப்பு சற்று வலுவானது.  அந்தத் தரப்பில் மிக முக்கியமானோர் இருவர். கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் சோமசுந்தர பாரதியார், 


இரத்தினத்தார் 1954இல் திருவள்ளுவர் திருநாளுக்கான கோரிக்கையை விடுத்தபோது, அதற்கான மறுப்பொன்றை விசுவநாதத்தார், சுதந்திரன் இதழில் எழுதியிருந்தார்.  "திருவள்ளுவர் பிறந்தது வைகாசி அனுடம் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. திருவள்ளுவர் திருநாளை இனி நாம் தைப்பொங்கலன்றே கொண்டாட வேண்டும். ஏனெனில் அதுவே காலம் காலமாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது" என்பது அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

நாம் மேலே பார்த்த திருவள்ளுவர் திருநாள் மலரே, விசுவநாதத்தாரின் அந்த மறுப்புக்கான இரத்தினத்தாரின் விரிவான பதிலுரையைக் கொண்டிருக்கிறது. ஏன் வைகாசி அனுசத்தையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடவேண்டும் என்பதை தகுந்த சான்றாதாரங்களுடன் அடுக்குகிறார் இரத்தினத்தார். அதில் அவர் எடுத்துக்காட்டும் சில செய்தித் துணுக்குகளை கீழே காணலாம்: 

”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டியதுதான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”
- கலைமகள் (வைகாசி 1952)

“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”
-  செந்தமிழ்ச்செல்வி (வைகாசி, 1953)

“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்”
- குமுதம் ( 20.4.54)


“மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்படும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”
- கல்கி (ஏப்ரல் 12, 1958)

வைகாசி அனுடமே திருவள்ளுவர் திருநாள்!

“வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தை தந்ததெனினும், ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை...... 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் பெரியார். ஈ.வே இராமசாமிநாயக்கர், அறிஞர்.சி,என். அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர். அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம்.........அரசியற் கட்சி வேறுபாடுகளைத் திருவள்ளுவர் திருநாளுடன் மோதச் செய்யாதிருக்குமாறு தமிழ்மக்கள் யாவரையும் வேண்டிக்கொள்கிறோம்."

பப.18 -19
விசுவநாதத்தாருக்கான இரத்தினத்தாரின்  மறுப்புரையின் ஒரு பகுதி இது: எத்தனை தீர்க்கதரிசனமாகவும் இன அக்கறையுடனும் இரத்தினத்தார் வருந்தி எழுதியிருக்கிறார் என்பது இந்த வரிகளில் தெரிகின்றது. ஏதாவதொரு முடிவுக்கு வரவேண்டும், அப்போதைக்கு பொருத்தமானது பெரும்பான்மை ஏற்றுக்கொண்ட வைகாசி அனுசம் தான். அதையே கொண்டாடுவோம் என்கிறார் அவர். ஆனால் நடந்தது என்ன? காலத்தின் புன்னகை எத்தனை விசித்திரமானது.


தமிழர் திருநாள் தைப்பொங்கல்
"அன்பர்‌ விசுவநாதம்‌ குறிப்பிடும்‌ திருவள்ளுவர்‌ தொடராண்டு தமிழ்‌ நாட்டிலே நிலைத்துவிட்டது என்பதை யாவரும்‌ மறுக்கமாட்டார்கள்‌; இதனை அழிக்க இனி எவராலும்‌ முடியாது. தெய்வப்‌ புலவர்‌ எனத்‌ தமிழ்‌ மக்கள்‌ போற்றும்‌ திருவள்ளுவர்க்‌குப்‌ பெருமையளிக்கும்‌ முறையில்‌ இத்தொடராண்டை ஏற்‌படுத்திய பெருமையை மதித்துப்‌ போற்ற வேண்டியதும்‌, இந்தத்‌ தொடராண்டையே வழங்கவேண்டியதும்‌ தம்மைத்‌ தமிழர்‌ என்று கூறும்‌ ஒவ்வொருவருடைய கடமையுமாகும்‌, தமிழ்த்‌ திருநாளெனவும்‌, தமிழர்‌ திருநாளெனவும்‌, பொங்கற்‌ புதுநாள்‌ எனவும்‌ பலவாறு போற்றப்படும்‌ தைத்திங்கள்‌ முதல்‌ நாளிலிருந்து திருவள்ளுவர்‌ ஆண்டைத்‌ தொடங்குவது பொருத்தமானதே."
- 32அ
என்று சொல்லும் இரத்தினத்தார், தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாக ஏற்கும் போதும், வைகாசி அனுடத்தில் கொண்டாடும் திருவள்ளுவர் திருநாளை  தை முதலாம் திகதிக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

"பெரும்பாலும்‌ தை முதல்‌ நாள்‌ பொங்கற்‌றிருநாள்‌ என்பது தான்‌ தமிழ்‌ மக்களிடையே திருவள்ளுவர்‌ தொடர்‌ ஆண்டை வழங்கத்‌ தொடங்குதற்கு முன்னரும்‌,  தமிழர்‌ புத்தாண்டு நாளைச்‌ சிலர்‌ கொண்டாடுதற்கு முன்னரும்‌, நிலைத்‌துள்ள கருத்தாகும்‌..........தெய்வப்‌ புலவராகவும்‌, உலகப்‌ புலவராகவும்‌ விளங்கும்‌ திருவள்ளுவரைக்‌ கொண்டாடுதற்குத்‌ தனிச்சிறப்புடையதொரு நாள்‌ வேண்டும்‌ என்பதை அறிஞர்கள்‌ யாவரும்‌ ஏற்றுக்‌கொள்‌வர்‌. ஆகவே பல காரணங்களுக்காகப்‌ போற்றப்படும்‌ தைத்‌திங்கள்‌ நாளை வள்ளுவர்‌ திருநாளாகக்‌ கொள்ளாது பல ஆண்டுகளாகத்‌ திருவள்ளுவருக்கே உரியதாகக்‌ கொண்டாப்பட்ட வைகாசி அனுட நாளைக்‌ கொண்டாடுதல்‌ எவ்வாற்றானும்‌ ஏற்றமுடையதே. திருவள்ளுவருடைய பெருமையையும்‌ நினைவையும்‌ தமிழ்‌ மக்களுடைய உள்ளத்தில்‌ நிலைநாட்டுதற்கு. இதுவே மிகப்‌பொருத்தமான நாளாகும்‌." 
- ப.32ஆ

இரத்தினத்தாரின் குறிப்பிலிருந்து நமக்கு இரு துப்புகள் கிடைக்கின்றன. முதலாவது இக்கட்டுரையை அவர் எழுதும் 1954இல் திருவள்ளுவர் தொடராண்டை சிலர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பது. இரண்டாவது, தை முதல் நாளை சிலர் தைப்புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் என்பது. 

தை முதல் நாளில் தைப்புத்தாண்டு அல்லது திருவள்ளுவர் தொடராண்டு மிகச்சரியாக யாரால், எப்போதிருந்து கொண்டாடப்பட ஆரம்பித்தது என்ற குறிப்பேதும் கிடைக்கவில்லை. ஆனால் இரத்தினத்தாரே இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்:


"பொங்கற்றிருநாளைக்‌ கொண்டாடவேண்டுமென்று அறிக்கைகள் விட்டு ஆர்வத்தை உண்டாக்‌கியவர்கள்‌ சென்னைத்‌ தமிழறிஞர்‌ கழகத்தாராவர்‌. இவர்கள்‌ 1941ஆம்‌ ஆண்டு கார்த்திகை மாதத்தில்‌ விட்ட அறிக்கையிலே தை முதல்‌ வாரத்தைத்‌ தமிழ்‌ வாரமாகவுங்‌ கொண்டாடுமாறு கேட்டுள்ளனர்‌. இந்த அறிக்கையிலே ஐந்தாம்‌ நாளைப்‌ புலவர்‌ தம்‌ திருநாளாகக்‌ கொண்டாட வேண்டும்‌ என்றுங்‌குறிப்‌பிட்டுளர்‌. இந்த வாரத்தைக்‌ கொண்டாடிய இரண்டொரு சங்கங்கள்‌ இந்த வாரத்தில்‌ ஒரு நாளை வள்ளுவர்‌ திருநாளாகவும்‌ பின்னர்‌ கொண்டாடியுளவேயன்றி முதல்‌ நாளை - தைப்பொங்கற்‌ புதுநாளை வள்ளுவர்‌ திருநாளாகக்‌ கொண்டாடவில்லை." 
-ப.32அ


எனவே நமக்கு அறுதியான ஒரு சான்று கிடைக்கிறது. தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடும் கோரிக்கை  குறைந்தது, 1942இலிருந்து நடைமுறையிலிருந்து வருகிறது. ஆக, தைப்புத்தாண்டு வழக்கத்தில் இருப்பதற்கான திருத்தமான கால வரையறை, சுமார் 80 ஆண்டுகள்.

இதே போல், இரத்தினத்தாரது கூற்றை வைத்தே சைவசித்தாந்தப் பதிப்புக் கழகம் நாட்குறிப்பு வெளியிட முற்பட்ட 1922ஐ திருவள்ளுவர் ஆண்டுத் தொடருக்கான மிகப்பழைய கால வரையறையாக முடிவெடுக்கலாம். (1922இல் வெளியிட முற்பட்டது முயற்சி தான். பத்தாண்டுகளுக்குப் பின் 1932இலேயே திருக்குறள் நாட்குறிப்பு வெளியிடப்பட்டது.) ஆக, திருவள்ளுவர் ஆண்டுத்தொடர் தைப்புத்தாண்டு கோரிக்கைக்கும் முன்பே புழக்கத்தில் வந்து விட்டது தெரிகிறது. கணக்குப்பார்த்தால், சரியாக 100 ஆண்டுகள்.

தை வந்த தமிழ்மறையார்!
திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிப்பதையோ, அதை தை முதல் நாளில் ஆரம்பிப்பதையோ இரத்தினத்தார் முதலிய தமிழறிஞர்கள் மறுக்காத போதும், திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்திலேயே கொண்டாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.  அன்று விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. நட்சத்திர நாள் மாறுபடும் என்பதால்,  1962இலிருந்து, கிரகோரியன் யூன் 02ஆம் திகதி திருவள்ளுவர் திருநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1967இல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, 1971இல், திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலன்று மாற்றப்பட்டது.  அது ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால், அதற்கடுத்த தை 02ஆம் நாள், திருவள்ளுவர் திருநாளுக்கான விடுமுறையானது. 

"தமிழ்‌ மக்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே எனினும்‌ தமிழினத்‌தின்‌ நன்மைக்காக, முன்னோர்‌ காட்டிய நல்வழியில்‌ நின்று, தமிழினத்துக்குப்‌ பெருமையளிக்கும்‌ புலவரைப்‌ போற்றும்‌ பெருமுயற்சியிலே வேறுபாடுகளைக்‌ கைவிட்டு ஒற்றுமையாக ஈடுபட வேண்டியது தமிழ்‌ மக்களின்‌ கடமையாகும்‌, தமிழினத்‌துக்குத்‌ தொண்டு செய்கிறோம்‌ என்று கூறுகிறவர்கள்‌: ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டுமேயன்றி, வேற்றுமையை உண்டாக்கும்‌ முறையில்‌ பேசுதலோ எழுதுதலோ கூடாது"
என்று தூரநோக்கோடு எழுதிவைத்த இரத்தினத்தாரின் வார்த்தைகள் பொய்யாகின. தை முதல் நாளிலேயே திருவள்ளுவர் திருநாளும் திருவள்ளுவர் ஆண்டும் ஆரம்பமாக வேண்டும் என்று வாதிட்ட விசுவநாதம் அவர்களின் தரப்பே இறுதியில் வென்றது. 



உத்தியோகபூர்வமான திருவள்ளுவர் ஆண்டு!
திருவள்ளுவர் ஆண்டை ஏற்று, 1971இல் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. 1981இல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்,  மதுரையில் இடம்பெற்ற உலகத்தமிழ் மாநாடு தொடர்பான சகல அரச ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். அதையடுத்து நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கங்களிலும்  திருவள்ளுவர் ஆண்டு இடம்பெற்றது. தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு பிறந்த கதை இது தான்!



என்னென்ன சாதகங்கள்?
தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு இருப்பது, தமிழின் தனித்துவத்துக்குச் சிறப்பானதே. உலகின் பெரும்பாலான சமூகங்கள், தம் மதம் சார்ந்து அல்லது தம் இனம் சார்ந்து தத்தமக்கென தனித்துவமான ஆண்டுக்கணக்கைக் கொண்டிருக்கின்றன. உலகின் பழம்பெரும் இனக்குழுமங்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருக்கு ஒரு ஆண்டுக்கணக்காக திருவள்ளுவர் ஆண்டு முன்னிலைப்படுத்தப்படுவது பொருத்தமானது தானே?

பாதகங்கள் ஏதும் இருக்கின்றனவா?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று - முப்பெரும் பாதகங்கள் இருக்கின்றன.

ஒன்று, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்குக்கு சான்றேதும் இல்லை. ஒரு இனக்குழுமத்தின் ஆண்டுக்கணக்கானது, வரலாற்று ரீதியாகவோ அல்லது இலக்கிய ரீதியாகவோ நிறுவப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவர் ஆண்டுக்கு எவ்வித புறச்சான்றுகளும் இல்லை. மறைமலையடிகள் கணித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு முற்றிலும் வரலாற்று பூர்வமானதல்ல. திருவள்ளுவர் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்ற வாதங்களும் இருப்பதை நாம் கவனிக்கவேண்டும். கி.மு 31 வள்ளுவர் பிறந்தார் என்று அவர் முன்வைக்கும் கருத்தை உறுதிப்படுத்த எவ்வித தொல்லியல் - வரலாற்று - இலக்கியச் சான்றுகளும் கிடைக்கவில்லை. 

இரண்டு, தை முதலாம் திகதி, தமிழர் திருநாள் என்ற நம்பிக்கை. தை முதலாம் திகதி, தமிழர் தனித்துவம் என்ற ஆண்டுக்கணக்கையே ஆட்டம் காணச்செய்கின்றது!  போதுமான ஒப்பீட்டியல் ஆய்வுகள் நிகழாத ஐம்பதாண்டுகளுக்கு முன், தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்று நம்மவர் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இன்றும் அதைச் சொல்லலாமா? தமிழருக்குச் சிறப்பானது, மதம் சாராதது என்பதால் தானே தைப்பொங்கலை 'தமிழர் திருநாள்' என்ற பெயரில் முன்வைத்தார்கள்! மதம் சாரா என்பது சரி. ஆனால் அது தமிழருக்கு மட்டுமே உரியதா? இமாச்சல - உத்தர பிரதேசப் பகுதிகளில் "லோஹ்ரி", வங்கத்தில் "கங்கா சாகர் மேளா", பஞ்சாபில் "மகி", தெலுங்கு - கன்னட நிலங்களில் "மகர சங்கிராந்தி" என்றெல்லாம் கொண்டாடப்படும் தை முதலாம் திகதியை, எப்படி தமிழருக்கே மட்டும் தனித்துவமான ஒரு நாள் என்று சொல்லமுடியும், கூறுங்கள்?

மூன்றாவது, தைப்புத்தாண்டு! அதுவரை எங்குமே சான்று கிடைக்காத நாளொன்றை தமிழர் புத்தாண்டாக முன்மொழிந்தவர்கள், தங்கள் போலி வாதத்துக்கு ஆதரவாக, அரசியல் - அதிகார பலத்தால், திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுசத்திலிருந்து தை முதலாம் திகதிக்கு மாற்றி, திருவள்ளுவர் ஆண்டுத்தொடரையும் அன்றே தொடங்கி தங்கள் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்கள். 

2000களில் மிக வலுவாக தைப்புத்தாண்டு கோஷமிட்டவர்கள் முன்வைத்த வாதங்களின் அபத்தத்தை எல்லோரும் அறிவார்கள். திருவள்ளுவர் திருநாளுக்காக 1935இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூட்டப்பட்ட கூட்டம், 1921இற்கு மாற்றப்பட்டது. "திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31 வைகாசி அனுடத்தில்" என்று கூறிய மறைமலையடிகள், திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை தைப்புத்தாண்டில் அறிமுகப்படுத்தியவராக சுட்டிக்காட்டப்பட்டார். மறைமலையடிகளும், ஏன், ஈ.வெ.ராவுமே கூடக் கலந்துகொண்டதாகச் சொல்லப்படும் வைகாசி அனுசத் திருவள்ளுவர் திருநாள், தைப்பொங்கலன்று நடந்ததாக மாற்றப்பட்டது! 

இத்தனையும் பரவாயில்லை, ஈழத்தமிழறிஞர் இரத்தினத்தின் குரலுக்கு செவிசாய்த்து 1953இல் திருவள்ளுவர் திருநாள் கொண்டாட ஆதரவு தெரிவித்த எல்லாத் தமிழறிஞர்களுமே "ஆரியர் திணித்த புத்தாண்டுக்கெதிராக தைப்புத்தாண்டு கொண்டாட" 1935இல் அல்லது 1921இல் சம்மதம் தெரிவித்தவர்களாக சோடிக்கப்பட்டார்கள்! தங்கள் பசப்புக்காக தமிழறிஞர்களை இழுத்து வந்து நிறுத்திய இவர்களின் கபடத்தை தமிழன்னை மன்னிப்பாளா? 


இரத்தினம் அவர்களோ, 1941இல் தைப்புத்தாண்டு கொண்டாட அறிக்கை விடுத்த சென்னை தமிழறிஞர் கழகத்தினரோ, தையே தமிழ் ஆண்டின் முதல் நாள் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது உண்மையே. ஆனால் அது ஒரு இயக்கமாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல, கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகத்தமிழர் அத்தனை பேரிடமும் திருவள்ளுவர் பெயரில் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு, திருவள்ளுவர் திருநாளுக்கானதே தவிர, தைப்புத்தாண்டுக்கானதல்ல. 

இரத்தினத்தார் அஞ்சியது போலவே நாம் அத்தனை பேரும் தைப்பொங்கலையே இந்த நாளில் நினைவுகூர்கிறோம். இன்று அந்நாளுக்கு மாட்டுப்பொங்கல் என்ற மதிப்பிருக்கிறதே தவிர, திருவள்ளுவர் திருநாள் என்ற மதிப்பு கிஞ்சித்தும் இல்லை. தமிழர் ஒற்றுமைக்காக முன்வைக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்திலிருந்து ஏற்கனவே கொண்டாடப்பட்டுவந்த மாட்டுப்பொங்கலன்று  மாற்றியது, மிகப்பெரிய அடையாள அழிப்பும், பண்பாட்டுத் துரோகமும். அதில் மறைந்திருக்கும் உள்நோக்கத்தை தேசியம், இனமானம் என்று பேசிக்கொள்ளும் தமிழறிஞர்கள் இன்றுவரை இனங்கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றைய தமிழ் அறிஞர்களில் 90 வீதமானவர்கள், தைப்புத்தாண்டை ஆதரிக்கிறார்கள்.  தமிழ் காலக்கணிப்பின் தொன்மையையும் இலக்கியச் சான்றுகளையும் சுட்டிக்காட்டி, தமிழருக்கு ஆண்டுத்தொடக்கம் ஐப்பசியின் அல்லது சித்திரையின் முதல் நாளாகவே இருக்கமுடியும் என்பதை நிறுவிவிட்ட போதும் கூட, தைப்புத்தாண்டு என்ற  மாயையிலிருந்து அவர்கள் யாரும் வெளிவரத் தயாரில்லை.

தமிழ் அறிவுச்சூழல் வெறும் ஆரியக்காழ்ப்பால் விழுந்த இடம் இது. நாம் அறிவியக்கத்தில் முன்னகராமல் எத்தனை உறைந்துபோயிருக்கிறோம்? உண்மையை தேடுவதில் எத்தனை பாராமுகமாக இருக்கிறோம்? நம்புவதற்கு தோதாக இருக்கும் ஒன்றை யாரோ ஒருவர் அல்லது ஒருசிலர் கூறுகிறார்கள் என்பதற்காக சிறிதும் யோசியாது சான்றுகளைத் தேடாது எப்படி அப்படியே நம்மால் நம்பிவிட முடிகின்றது என்பதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.  

 
என்ன தான் செய்வது?
இப்போது நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி, திருவள்ளுவர் ஆண்டின் எதிர்கால வகிபாகம் என்ன என்பது தான். எந்த அறிவியல் பூர்வமான சான்றுமற்ற “கிரகோரியன் + 31”  என்ற சூத்திரத்தை, இந்த அறிவியல் யுகத்தில் ஒரு பழம்பெருமை மிக்க  இனக்குழுமம் தன் நாட்காட்டியாக அறிவித்துக்கொள்வது அத்தனை வரவேற்கத்தக்கதல்ல. ஆனால், தமிழரின் ஆண்டுத்தொடருக்குப் பெயர் கொடுக்கக்கூடிய எல்லாத்தகுதியும் வள்ளுவருக்கு உண்டு. வள்ளுவரோ, அவர் சார்ந்த எந்தவித தொன்மங்களோ கூட தொடர்புறாமல், தமிழரின் ஆண்டுக்கணக்குக்கு அவரை முன்னிறுத்துவதும், திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்டுவதும் பொருத்தமானதே! ஆனால், எந்த ஆண்டிலிருந்து அந்தத் தமிழ் ஆண்டுக்கணக்கைத் தொடரலாம்?

"தமிழறிஞர்கள் பலர் கூடி முன்மொழிந்ததே தைப்புத்தாண்டு" என்ற தை முதல் நாள் பற்றிய இறுதி நம்பிக்கையும், மேற்படி திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு மூலம் சுக்குநூறாவதால், "அதைக் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" என்று சொல்லிக் கடந்துசெல்ல முடியாது. தமிழர் புத்தாண்டுப் பந்தயத்தில் சித்திரை, ஆவணி, மற்றும் திராவிட தை ஆகிய மூன்று முதல் நாள்கள் போட்டியிடுகின்றன. திருவள்ளுவர் திருநாள் விடயத்தில் இரத்தினம் அவர்களே கூறுவது போல்,  "நிலைத்துவிட்ட நாளை மாற்றுதல் மரபாகாது" என்பதால் சித்திரையே புத்தாண்டாகத் தொடரட்டும். அதுவே பொருத்தமானது என்பதற்கான, அறிவியல், புவியியல், வானியல் காரணங்களும் ஏற்கனவே போதுமான அளவு பொதுவெளிக்கு வைக்கப்பட்டு விட்டன. எனவே அன்றைக்கே  திருவள்ளுவர் ஆண்டைத்  துவங்கலாம். 

கல்வெட்டு அல்லது குகை ஓவியம், பிராமிச்சாசனம், கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்பொருட்கள் எதுவும் ஆகட்டும் -  தமிழ் சார்ந்த மிகப்பழைய தொல்பொருளாக இன்று இனங்காணப்படும் பொருள்  எதுவோ, அதன் ஆயுளை காபன் திகதியிடல் மூலம் அல்லது, சமகால முன்னேற்றகரமான ஒரு  தொழிநுட்பம் மூலம் காலம் கணித்து, அன்றிலிருந்து திருவள்ளுவர் ஆண்டைத் தொடரலாம். எதிர்காலத்தில் அதைவிடப் பழைமையான தமிழ் சார் தொல்பொருள் கிடைத்தாலும் இதை மாற்றவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இது வெறுமனே சொல்லப்படும் "கிரகோரியன் + 31"ஐ விட, நம்பகரமானது, ஆதாரபூர்வமானது.

கிறிஸ்துவுக்குப் பின்பு தான் அது காலம் காட்டுகிறது என்றால் கூடத் தயங்கத்தேவையில்லை. நமக்குத் தேவை ஒரு ஆதாரபூர்வமான ஒரு ஆண்டுக்கணக்கு. அது நாம் நம் வரலாற்றின் அதிகுறைந்த எல்லையிலுள்ள எச்சத்துக்கு நாம் கொடுக்கும் கௌரவமாக இருக்கட்டும். அது ஏனைய ஆண்டுக்கணக்குகளுடன் ஒப்பிட்டு  கூடவா குறையவா என்றெல்லாம்  ஆராய்ந்து நாணத் தேவையில்லை.  தமிழர் குறைந்தது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கு முந்திய இனக்குழுமத்தினர் என்பது வரலாறே சொல்லும் உண்மை!

அதுவரை, சாதகங்களை விட பாதகங்கள் அதிகமான, இன்றைய திருவள்ளுவர் ஆண்டின் பாவனையைத் தவிர்த்து அல்லது மட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். இயன்ற விரைவில் இதற்கான பதிலை தமிழ்ச்சமூகத்துக்கு, தமிழறிஞர் அமைப்புக்கள் சொல்லியே ஆகவேண்டும் என்று கோருவதைத் தவிர, நம்மால் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை!


"நம்முன்னோர்‌ தம்‌. பெருஞ்‌செயலைப்‌ பின்பற்றாமலும்‌, சிறந்த மரபைத்‌ தழுவாமலும்‌, நம்மினத்தின்‌ ஒற்றுமையைச்‌ சிதைத்‌துப்‌ பழியையும்‌ அழிவையும்‌ தேடிக்கொள்ளும்‌ நிலைமைக்கு நாம்‌ வந்து விட்டோம்‌. இந்த நிலைமையை மாற்ற இனியாவது யாம்‌ எல்லோரும்‌ முயலல்‌ வேண்டும்‌."
- கா.பொ.இரத்தினம்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-குறள்:423

உசாத்துணைகள்:


1. கணேசன், நா (5 மே 2012). "திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்". குமரிநாடு.நெற்.  இலிருந்து 2 சனவரி 2018 அன்று மீள்விக்கப்பட்டது.

2. தியாகராஜன், சாமி (15 மே 2014). "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்". Vedic Science Research Centre.இலிருந்து  2 சனவரி 2018 அன்று  மீள்விக்கப்பட்டதுபார்த்த நாள் 

3. Thiagarajan, Sami. and Gauthaman, Bala., (28 December 2014), "Thiruvalluvar Birth Anniversary Celebrations: Heralding a glorious future" Retrieved on 3rd January 2018.

4. 14,15ஆம் ஆண்டறிக்கை (1956-57),  மற்றும் 16,17ஆம் ஆண்டறிக்கை, (1958-59), கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

5. விசுவநாதம், கி.ஆ.பெ, (1984). "எனது நண்பர்கள்", பப.8-51

6. விசுவநாதம், கி.ஆ.பெ, (1953) “வள்ளுவரும் குறளும்”, ப.13

7. ஆச்சாரி, (2012). "திருவள்ளுவர் காலம் - இளங்குமரனார் கருத்து", சிறகுகள் வலைத்தளம். 
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner