"போன ஆண்டுக்கான இலையைத்
தலையில் வைத்து, வரும் ஆண்டுக்கான இலையைக் காலில் வைத்து, முறைப்படி மருத்து நீர் வைத்து
நீராடி,
வருடம் பிறக்கும் அன்றைய
இலக்கினத்துக்கு உரிய நிறத்தில் புத்தாடை அணிந்து, பலவிதமான உணவுகள், சிற்றுண்டிகள் சாப்பிட்டு மகிழுங்கள்."
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது என்பதைச் சொல்லும், 709 ஆண்டுகள் பழைமையான குறிப்பு இது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால்,
சித்திரைப்புத்தாண்டு பற்றிக் கிடைக்கின்ற மிகப்பழைய குறிப்பே இது
தான். இன்னொரு வியப்பு
என்னவென்றால்,
இந்தக் குறிப்பு எழுதப்பட்டது இலங்கையில். அதிலும் ஒரு
சிங்கள மன்னனின் வேண்டுகோளின் அடிப்படையில்! தேனுவரைப் பெருமாள் எனும் போசராசபண்டிதரால் எழுதப்பட்ட 'சரசோதிமாலை'யில் தான் இந்தச் செய்யுள் வருகிறது.
"போனவாண்டிலை தலைக்குப் புகுதுமாண்டிலை காலுக்கு
மான நேர் வைத்துச் சொன்ன மருத்து நீராடி
வார
வான லக்கினத்து வண்ண
வண்டுகில் புனைந்து கூறும்
போனகமுன்னே துய்த்துப் போசனம்
பலவுஞ் செய்யே."
- 9:71
தம்பைமாநகரை ஆண்ட பராக்கிரமபாகு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவனது ஏழாம்
ஆட்சியாண்டில் இந்நூலை தான்
எழுதியதாக தேனுவரைப்பெருமாள் பாடுகிறார். நூலின்
பாயிரம் குறிப்பிடும் சக
ஆண்டுக் கணக்கு, பொ.பி
1310ஆம் ஆண்டோடு ஒத்துப்போகிறது.
இந்நூலின் ஒன்பதாவது சுபாசுப
படலம்,
வருஷப்பிறப்புக் கருமத்தைப் பாடுகிறது. சித்திரை முதலாம் திகதி
தான் வருடம் பிறக்கிறது என்று அது தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் வேறு
இடங்களில் 'சித்திரை முதல்
பங்குனி'
என்ற மாத ஒழுங்கையே அது பயன்படுத்துவதாலும், இன்றும் ஈழத்தமிழர் மத்தியில் அது கூறும் முறைப்படியே வருடப்பிறப்புக் கருமங்கள் கடைப்பிடிக்கப்படுவதாலும், சரசோதிமாலை, சித்திரைப்புத்தாண்டையே பாடுகிறது எனலாம்.
சரசோதிமாலை கூறும் "தம்பைமாநகர் பராக்கிரமவாகு", தம்பதெனியாவை தலைநகராகக் கொண்டு
ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு என்கிறார்கள். இன்று தம்பதெனியா, குருநாகலுக்கு அருகே உள்ள ஒரு
சிற்றூர். ஆனால் 14ஆம்
நூற்றாண்டு முழுவதும், அது சிங்கள
அரசரின் தலைநகராக விளங்கியது. அதை ஆண்ட மன்னர்களில் நான்காம் பராக்கிரமபாகு தலைசிறந்தவன். சிங்கள
இலக்கியம் வளர்வதில் மகத்தான
பங்களிப்பை ஆற்றிய அவன்
"பண்டித பராக்கிரமபாகு" என்று போற்றப்பட்டிருக்கிறான். சிங்கள
மூலங்களில் அவன் ஆட்சிக்
காலம் இன்னதென்று அறிய
முடியாமல் இருக்க, சரசோதிமாலைக் குறிப்பு மூலம்,
அவன் பொ.பி
1303இல் அரசுக்கட்டில் ஏறினான் என்பது
தெரியவருகின்றது.
தேனுவரைப் பெருமாள் கோவிலின் இன்றைய தோற்றம், தெவிநுவர.
நூலாசிரியரின் பெயர் தேனுவரைப் பெருமாள். அது ஈழத்தின் தென்கோடியில் தேவநகரத்தில் கோவில்
கொண்டிருந்த திருமாலின் பெயர்.
மாத்துறைக்கு அருகே அமைந்திருந்த தேவநகரத்தின் இன்றைய பெயர்
தெவிநுவர. அங்கே இன்றும்
திருமாலுக்கு ஒரு தேவாலயம் உண்டு. எனில் இந்நூலாசிரியர் தேனுவரை இறைவனைக் குலதெய்வமாகக் கொண்டிருந்தவரா?
அவருக்கும் தென்னிலங்கைக்குமான தொடர்பு என்ன?
பராக்கிரமபாகு ஏன் ஒரு
சோதிடநூலைத் தமிழில் எழுதித்
தரும்படி கேட்டான்? இன்று தனிச்சிங்களப்பகுதியான குருநாகல் பகுதியில்,
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்
ஒரு தமிழ் நூலுக்கான தேவை என்ன? இன்றும் சிங்களவர் கடைப்பிடிக்கும் வருடப்பிறப்புக் கருமங்களுக்கும், ஈழத்தமிழர் வருடப்பிறப்புக் கருமங்ளுக்குமான ஒற்றுமை - வேற்றுமைகள் என்னென்ன?
பல கேள்விகள். பல
பதில்கள். சில வெளியே
சொல்லமுடியாதவை. அவர்களிடம் நாம்
"சுப அலுத் அவுருத்தக் வேவா" சொல்லும் போதும், அவர்கள்
நம்மிடம் "இணிய புத்தாண்டு வாள்த்துக்கல்" சொல்லும் போதும், மலர்கின்ற புன்னகைகளில் பொதிந்திருக்கின்றன அந்த விடைகள்.
அனைவருக்கும் மனமார்ந்த சித்திரைப்பெருநாள் வாழ்த்துக்கள்! <3
சரசோதிமாலை தரவிறக்கிப் படிக்க: இங்கு அழுத்துங்கள்.
தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?
தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?
0 comments:
Post a Comment