தெத்தாதே உஞ்சில் தெத்தாதே!
புத்தாண்டு இனிதே கடந்து விட்டது. இன்னொரு ஆண்டு. இன்னொரு வயது. இந்தக் கட்டுரையாளனுக்கு வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. இந்த முப்பது ஆண்டுகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்டு வந்த - வருகின்ற மாற்றத்தை கண்ணெதிரே, கண்டு உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான் அவன்.
ஏழாண்டுகளுக்கு முன்பு அவன் பிறந்தகமான தம்பிலுவில்லில் நாட்டுக்கூத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. சுமார் நாற்பதாண்டு இடைவெளிக்குப் பின் சித்திரைக்காக வட்டக்களரியில் இடம்பெற்ற கூத்து அது என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் சித்திரை பிறந்தாலே கூத்துத் தானாம். வைகாசியில் கண்ணகியம்மன் கோவில் கதவு திறக்கும் வரை, ஏன் திறந்த பின்னும் கூட, நாட்டுக்கூத்தும் வசந்தனும் விலாசமும் நாடகமும் மாறி மாறி இடம்பெறுமாம்.
“உப்ப நீங்க இரிக்கிர வூடு இரிக்கே. அதுக்கு முன்னுக்கு இரிந்த பாழ்வளவுக்குப் பேர் வெள்ளமணல் வளவு. சித்திராபோர்ணமில அங்க வட்டக்களறி போட்டு ஆடினா நிலவுல சும்ம அந்தமாதிரி இரிக்கும். மத்தளம் பேசின அரவாசிக் கூத்து அங்க தான் அரங்கேறிரிக்கி. அப்ப எங்களுக்கு பத்து பன்ரண்டு வயது. பூலோகறம்பை பொம்பிள வேசம் போட்டுக்கொண்டு போடியார் கூத்துத் தொடங்கமுந்தி சுறுட்டொண்டு பத்திக்கொண்டு நடப்பாரு. ‘என்னகா றம்பை இது கோலம்’ எண்டு நாங்க பின்னுக்கு நக்கலடிச்சி கைதட்டிச் சிரிப்பம். எங்களக் கணக்கே எடுக்காம 'நடங்கோடா அங்கிட்டு' எண்டுகொண்டே பூலோகறம்பை இரும்புக்கதிரைல அட்டணக்கால் போட்டு சுறுட்ட இன்னொரு இளு இளுத்து புகை வுடுவாவு.” என்றார் ஒரு முதியவர். அவர்களது அந்த சித்திரையை நான் அனுபவித்ததில்லை. நான் அனுபவித்த சித்திரையையா இன்றுள்ள சிறுவர்கள் அனுபவிக்கிறார்கள்?
வருசம் பிறக்கிறதென்றால், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘உஞ்சில்’ தான். ஊஞ்சல்! உஞ்சில் போடுவதற்கு பெரும்பாலும் ஒரு நிமித்தம் பார்ப்பது நினைவிருக்கிறது. குயில் கூவவேண்டும். குயில் கூவினால் உஞ்சில் போடவேண்டும், அல்லது போன வருடம் போட்டு இடையில் அறுந்துவிட்ட உஞ்சிலை திருத்திப் போடவேண்டும் என்று அடம் பிடிப்பேன். பெரும்பாலும் மார்ச் நடுப்பகுதியில் முதல் குயில் கூவும். வருடம் பிறப்பதைச் சொல்வது குயிலிசை தான் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த பருவம் அது.
இன்று யோசித்தால் அதுவும் உண்மை என்றே தோன்றுகிறது. தமிழரின் வருடத்தை அறிவிப்பது பஞ்சாங்கமா, நாட்காட்டியா? இரண்டுமே இல்லையே, இயற்கையல்லவா? கொன்றை பூப்பதும், மரங்களெல்லாம் மஞ்சளில் குளித்து நிற்பதும் இளவேனிலில் பிறக்கும் புத்தாண்டை வரவேற்கத்தானே?
பெரும்பாலும் மார்ச் மாத முடிவில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் நிற்கும் மாமரத்தில் அப்பா ஊஞ்சல் போடுவார். அது ஒருவர் ஆடும் சிறிய ஊஞ்சல் அல்ல. நீளமான கட்டில் பலகை ஒன்றின் இரு அந்தங்களிலும் தவாளிப்புகளை ஏற்படுத்தி ஊஞ்சல் பலகை தயாராகும். தடித்த நைலோன் கயிற்றை வாங்கி வந்து அதை தவாளிப்புகளில் இணைத்து மேலே மாமரக் ‘கந்தில்’ கட்டினால் ’உஞ்சில்’ தயார். எத்தனை முறுக்குகளை இருபுறமும் போடுகிறோமோ அத்தனை உறுதியாக இருக்கும் உஞ்சில்.
ஆனால் முன்பு உஞ்சில் போடுவதற்கு தென்னைமரங்களைத் தான் தேர்வார்களாம். தெரிந்தெடுக்கும் தென்னைமரம் சற்று வளைந்ததாக இருக்கவேண்டும். அருகே கமுகமரத்தை வெட்டிக் கொணர்ந்து தலைகீழ் V வடிவில் தென்னைமரத்துடன் சேர்த்துக் கட்டுவார்களாம். நீண்ட உலக்கைப்பொல் அல்லது தடித்த கம்பு அச்சுலக்கையாக வைத்து அதில் தான் உஞ்சில் கட்டப்படும். தென்னமட்டைகளிலிருந்து தயாரித்த வலுவான தடித்த பனங்கயிறுகளைக் கட்டி உஞ்சில் தயாராகும். வருடம் பிறந்தால் மூன்று நான்கு வாரங்கள் உஞ்சிலாடும் வாரம். முன்னிரவில், சித்திரை நிலவொளியில் அக்கம்பக்கமுள்ள இளந்தாரிப் பொடியனுகளும் குமர்ப்பிள்ளேலும் உஞ்சில் பாட்டுகள் பாடி ஆடி மகிழ்வதும், அதை அயல் வீட்டார் கூடியமர்ந்து பார்த்து இரசிப்பதும், அக்கால வரிசத்தில் முதன்மையான விடயங்கள் என்பார்கள். ஆனால் அது எங்கள் இளமைக்காலத்திலேயே அருகிப்போயிற்று. நாங்கள் ஆடியதெல்லாம் மாமரத்திலோ வேப்பமரத்திலோ போட்ட சிறுவர்கள் ஆடும் சற்று சிறிய உஞ்சில்கள் தான்.
உஞ்சில் ஆடுவது என்பது ஒரு கலை. குறைந்தது மூன்று பேர், கூடியது ஐந்து பேர் அதற்குத் தேவை. பலகையின் இருபுறமும் இருவர் நின்று கயிற்றைப் பிடித்துக் கொள்வோம். ஒன்று தொடக்கம் மூன்று பேர் நடுவில் உட்கார்ந்து கொள்வோம். முதலில் பலகையில் அமர்ந்திருப்பவர்கள் கால்களால் தரையைத் தட்டித் தட்டி உஞ்சிலுக்கு விசை கொடுக்க வேண்டும். உஞ்சில் ஊசல் போல மெல்ல ஆட ஆரம்பித்ததும், இருபுறமும் கயிற்றைப் பிடித்தபடி நிற்பவர்கள் ஒருவர் மாறி ஒருவர் என்று, மெதுவாகக் குந்தி எழுந்து கால்களால் பலகைக்கு விசையைக் கொடுப்பார்கள். அதற்குப் பெயர் உன்னுதல்.
நிற்கும் இருவரும் மாறி மாறி உன்னி விசை கொடுக்க, உஞ்சில் வேகமாக இருபுறமும் ஆடத்தொடங்கும். ஒரு அந்தம் உஞ்சில் கட்டப்பட்டிருக்கின்ற கிளைக்குச் சமாந்தரமாக வரும் வரை அதிக பட்ச விசை கொடுத்து உஞ்சில் ஆடலாம். அதற்குப் பிறகு ‘உன்னக்’ கூடாது. நிற்பவர்கள் இருவரும் அமர்ந்துவிட வேண்டும். எல்லாரும் கூச்சலிட்டு மகிழ உஞ்சில் மெல்ல மெல்ல சமநிலைக்கு வரும்.
ஒருவேளை தெரியாமல் தொடர்ந்து உன்னிக்கொண்டிருந்தோமென்றாலும் நாம் எல்லைமீறுகிறோம் என்பதை அறிய ஒரு வழியிருந்தது. உஞ்சில் 180 பாகைக் கோணத்தில் இயங்கும் போது எப்படியும் கிடுகுவேலிக்கு மேலால் பக்கத்து வீட்டுக்கும் உஞ்சில் போய் வரும். சமைத்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு சித்தி அல்லது அத்தை எப்படியும், ‘குசினி’ யன்னலால் நம்மை பார்த்து விடுவார். பெரும்பாலும் அவர் பிள்ளையும் நம்மோடு உஞ்சிலில் ஆடிக்கொண்டிருக்கும் என்பதால், உஞ்சிலுக்குப் போட்டியாக ஆடியபடி அவர் கூச்சலிடுவார். சிலநேரங்களில் பக்கத்து வீட்டுச் சித்தி கத்தத் தொடங்குவது தான் ஆபத்தான புள்ளி என்று அளவிடத் தொடங்கி, அதுவரை உன்னிக் கொண்டிருப்பதும் நடந்திருக்கிறது.
உன்னி முடித்ததும் ஊஞ்சல் சமநிலைக்கு வரும். அந்த இனிய மயக்கமும் கிறுகிறுப்பும் தீரும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படி ஆறிய பிறகு தான் அடுத்த சுற்று ஆரம்பமாகும். உஞ்சிலாடும் போது பாடுவதற்கென்று நிறைய ஊஞ்சல் பாடல்கள் இருந்தன. எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒன்று தான்.
“ஒரு கொத்துக் கச்சான் வறுத்துக் குத்தி
ஒம்பது பொண்டுகள் சேந்து குத்தி
கல்லும் மண்ணும் கலந்து குத்தி
கல்லடி மீனாச்சிக்குக் கலியாணம்
காரில போவுதாம் பலகாரம்
வேப்பங்குச்சி மாப்பிள்ளையாம்
வெக்கங்கெட்ட றோசாவாம்”
திருமணமொன்றைக் கேலி செய்யும், ஏதோ இடக்கரடக்கலாக அமைந்த பாடல். இப்போதும் அதன் அர்த்தம் தெளிவாகப் புரியவில்லை. பொண்டுகள், கலியாணம் இந்த இரண்டு சொற்களும் அப்போது சிறுவர்கள் உச்சரிக்க வெட்கப்படுபவை. எனவே இந்தப் பாடலை கூட்டாகப் பாடும் போது இடையில் யாரோ களுக்கென்று சிரிப்பார்கள். பிறகு எல்லோருமே சிரிப்போம். காரணமில்லாத சந்தோஷங்கள் எத்தனை இனிமையானவை!
ஒருவேளை அன்று உஞ்சில் ஆடுவதற்கு இன்னும் ஓரிருவர் அதிகமாக வந்து விட்டார்கள் என்றால் தயங்காமல் அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். ‘உஞ்சில்ற கவுறு பாரங்கூடினா நீளும், அந்து போகாது’ என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், ஆட்களின் எண்ணிக்கை கூடும் போது, கயிறு மரத்தில் நெருக்கமாக உரோஞ்சுவதால் ‘கடக் கடக்’ என்று சத்தம் கேட்கும். கூடவே நேராக ஊசல் போல எளிமை இசை இயக்கத்தை ஆற்றுவதற்குப் பதில் உஞ்சில் பக்கவாட்டில் அலையத் தொடங்கும். அதற்கு தெத்துதல் என்று பெயர். அதற்கும் ஒரு பாடல் பாடுவோம்.
“தெத்தாதே உஞ்சில் தெத்தாதே
தெத்துப் பலகாரம் சுட்டுத்தாறேன்
நேரே போ உஞ்சில் நேரே போ
நேத்தடிச்ச காத்தோரம்”
தெத்துப்பாட்டு படித்துக் கொண்டே உன்னுபவர்கள் செய்யும் முயற்சியில் எப்படியும் உஞ்சில் நேராக ஆடத்தொடங்கும். அது தெத்துப்பாட்டின் சக்தி தான் என்று வியந்தபடியே அடுத்த சுற்றை மகிழ்ச்சியாக ஆரம்பிப்போம்.
உஞ்சில் மட்டுமா? எத்தனை சந்தோஷங்கள் அப்போது? வருசத்துக்கான சிற்றுண்டிகள் செய்வதெல்லாம் பெரும்பாலும் குழுக்களாகவே இடம்பெற்று வந்தன. உறவினர்கள் மட்டுமன்றி, அடுத்த வீட்டு எல்லைமானக் காரர்களும் முறை வைத்துக்கொண்டு இணைவார்கள். இன்று இங்கு பலகாரம் சுடுவோம், நாளை அங்கு தொதல் கிண்டுவோம், நாளை மறுநாள் அடுத்த வீட்டில் முறுக்கு, அதற்கும் அடுத்தநாள் பின்வீட்டில் பயற்றமுருண்டை என்று பங்கு போட்டுக்கொண்டு சிற்றுண்டிகள் செய்து பகிர்ந்து உண்ட அழகான காலம் அது.
குஞ்சாத்தை, அம்மம்மா, அப்பம்மா, சீனியம்மா, ஆசையம்மா, முன்வீட்டு சித்தி, பக்கத்து வீட்டு அத்தை, பின் வீட்டு அன்ரி என்று பலரும் கூடியிருக்கும் அந்த சிற்றுண்டி தயாரிப்பு முகாம்களில் சுவாரசியமான உரையாடல்கள் இடம்பெற்றபடி இருக்கும். பெண்கள் கூடினால் கேட்கவும் வேண்டுமா? அடுத்த வைகாசிக்கு வர இருக்கின்ற திருமணங்கள், வைகாசிச்சடங்கு எப்போது, கதிர்காம யாத்திரைக்கு ஆராரு போறாங்கள், பேய்க்கதைகள், கூடவே சிலபல ஊர் வம்புகள் என்று சுவையான பல கதைகள்.
முறுக்கைக் கடிக்கச் செல்வது போல ஆர்வமற்ற கண்களைக் காட்டிக்கொண்டு ஊர் வம்புக் கதைகளை கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். பேச்சு எல்லை மீறும் தருணத்தில் எப்படியோ உணர்ந்து கொண்டு “குளந்தப்பிள்ளேலுக்கு இஞ்சென்ன வேல, ஓடுங்கோ” என்று அகப்பையால் விரட்டி விடுவார்கள். ஆனால், வட்டக்காவடி விளையாடும் போதோ, கிட்டிப்புள்ளு அடிக்கும் போதோ அவர்கள் முணுமுணுத்துக்கொண்ட முழுக்கதை எங்களுக்கும் தெரிந்துவிடும். யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி முழுமையாக மோப்பம் பிடித்திருப்பான்/ள்.
"வரிசம் பிறக்கப்போது" என்றால் வீடுகளில் துப்பரவாக்கும் வேலைகள் அதிகமாக இருக்கும். பழந்துணிகள், பழைய பாத்திரங்கள் "வூடு வெளியாக்கும்" போது குப்பைமேட்டுக்குச் செல்வதால் குப்பைமேடுகள் கொளுந்துவிட்டெரியும். இனி பாவனைக்குதவாது எனும் போதும், தீயில் கருகும் முன்னாள் விளையாட்டுப் பொம்மைகளைக் காணச் சகியாது அவற்றை குச்சியால் தட்டி நெருப்பிலிருந்து மீட்போம். அப்பாவோ அம்மாவோ மண்டையில் தட்டி அதை மீண்டும் நெருப்பில் போடுவார்கள். விசும்பியபடியே அவை கருகுவதைக் கண்டு கண்ணீர் மல்குவோம். அந்தப்பக்கம் வரும் மாமாவோ சித்தியோ முதுகில் தட்டி "செரி குளறாதை. தீர்த்தக்கரைல புதிசி வாங்கித்தாறனா" என்று சொல்லும் போது "ஆ செரி" என்றபடியே கன்னத்தைத் துடைத்து துயரத்திலிருந்து மீண்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம்.
"வரியம்" பிறப்பதற்கு முன் சிலர் வீடுகளுக்கு கிடுகு புதிதாகப் போட்டு கூரை மேய்வார்கள். வரிச்சுக்கட்டிய செத்தை வீடுகளில் இருப்போர் சுவர்களுக்கு களி பூசுவார்கள். பெரும்பாலும் அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடிச் செய்வது தான் அது. இன்றுபோல் கூலிக்கு ஆள்பிடித்துச் செய்யும் வேலைகள் அல்ல அவை. சாணத்தால் மெழுகிய அந்த வீடுகளின் மெல்லிய மணம் இப்போதும் மூக்குநுனியில் வீசிச் செல்கிறது.
கொஞ்சம் வசதியானவர்கள் தங்கள் கல்வீடுகளுக்கு வெள்ளையடிப்பார்கள். சுண்ணாம்புச் சூளையிலிருந்து சுட்ட சிப்பி வாங்கிவந்து நீரூற்றும்போது அது "பக்பக்" என குமிழி விட்டபடியே கொதித்து சுண்ணாம்பாக மாறும். "இதெப்புர்றா" என்று வியந்தபடியே அருகில் சென்றால் "தொடாதை சுட்டுப்போட்றும்" என்று மூத்தவர்கள் எச்சரிப்பார்கள். கொதித்தாறிய சுண்ணாம்பை வாளியில் ஊற்றி தும்புநாரால் சுவர்களுக்குப் பூசும்போது மெல்லிய நீலவண்ணத்தில் காட்சியளிக்கும் வீட்டுச்சுவர் ஈரம் காய்ந்ததும் சட்டென வெண்ணிறத்தில் பொலியும். அப்படி நிறம் மாறும் வரை காத்திருந்து அந்த விந்தையை எண்ணி வாய்பிளந்து நிற்போம்.
வரியகாலத்தைக் குறிவைத்து ஊரில் "உடுப்பு யாவாரிகள்" மொய்ப்பார்கள். அப்போது பெருவலமாக இருந்த "தபால் நைன்ரி" உந்துருளியில் பின்புறம் சேலைகளை பெட்டியிலிட்டுக் கட்டி, வீடுவீடாய் வந்து சேலை விற்கும் அக்கரைப்பற்று, நிந்தவூர், சாஞ்சமருது, மருதமுனை உள்ளூர் 'காக்காமார்' இருந்தார்கள். வடக்கிலிருந்து "மதராசிகளும்" வருவதுண்டு. சுனாமிக்குப் பின்னர் காக்காமார் ஊரூராக வருவது மெல்லக் குறைந்தது. ஆனால் அப்போதும் எப்போதாவது வந்துகொண்டிருந்த மதராசிகளை "சாறி விக்கிர இந்தியன்" என்று அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
தபால் நைன்ரி. கொண்டா எம்டி90 ரக உந்துருளி
வருடம் பிறக்கும்போது மருத்துநீர் வைக்கவேண்டும். அம்மம்மா சின்னச் செம்பொன்றும் ஐம்பது சத நாணயக் குற்றியும் நீட்டி "ஓடிப்போய் அரப்பு வாங்கிக்கொண்டா" என்பார். மருத்துநீர் தான் அரப்பு. அரப்பு என்பது இன்றைய சாம்பூ போல. தலைக்கு வைத்து நீராடும் எல்லா மூலிகைக்கலவைகளும் அரப்பு என்றே சொல்லப்பட்டிருக்கின்றன. அரைத்துச் செய்வதால் போலும். தமிழகத்தில் "உசிலை" என்றழைக்கும் மரம் இந்த அரப்புச் செய்யப் பயன்பட்டிருக்கிறது என்பதால் அதற்கு இலங்கையிலும் அரப்புமரம் என்றே பெயர். இன்று அரப்பு இறுதிக்கிரியைகளில் மட்டுமே பயன்படுவதால் சிலர் அதை அமங்கலச்சொல்லாக்கி விட்டார்கள். ஆனால் "சம்பூ" என்பதற்கான அழகான தமிழ்ச்சொல் தான் அரப்பு.
வருச அரப்பில் நிறைய மூலிகைகள் சேர்த்திருப்பார்கள். பக்கத்தில் சிவன் கோவிலுக்கு போய் வாசலில் அடுப்பில் மருத்துநீர் கொதிக்கும் பானைக்குள் நாணயக்குற்றியைப் போடவேண்டும். அந்த இடைவெளிக்குள் நாணயக்குற்றியின் பெறுமதி கணிக்கப்பட்டு செம்பு நிறைய கூடவோ குறையவோ அரப்பு கிடைக்கும். "மறந்துறாதை, இது காலுக்கு, இது தலைக்கு" என்று ஐயர் அல்லது அங்கு நிற்கும் ஒரு பெரியவர் இரண்டு இலைகளை நீட்டுவார். சிலநேரங்களில் வீடுவந்து சேரும் போது காலுக்கு எது தலைக்கு எது என்று குழம்பிவிடும். அப்போது வீட்டில் அம்மப்பாவோ அம்மம்மாவோ பஞ்சாங்கத்தைப் பார்த்தும் அவர்களது தாவரவியல் அறிவைக்கொண்டும் இலைகளைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள்.
பெரும்பாலும் அரப்பு வைப்பது "வரியம் பிறக்குற முழுத்தத்தில" வீட்டுக் கிணற்றடியில் நடக்கும். வயது ஒழுங்கில் ஒவ்வொருவரும் காலுக்கான இலை மீது கிழக்குப் பார்த்து நிற்க, தலைக்கான இலையால் செம்பிலுள்ள அரப்பை எடுத்து தலைப்பாகை கட்டியபடி அம்மப்பா ஒவ்வொருவர் தலைமீதும் மூன்றுமுறை வைப்பார். நாங்கள் குஞ்சுகுராலுகள் மன்றாடிக் கேட்பதால், எங்களுக்கு மூன்றாவது தடவை செம்பைக் கவிழ்த்து தலையில் கொஞ்சம் ஊற்றிவிடுவார். குளிர்ந்த அரப்பு உச்சியிலிருந்து அருவியெனப் பாய்ந்து முதுகை நனைக்கும். கூவென்றபடியே ஓடி நீராடி புத்தாடை அணிந்துவந்து சிரித்தபடி நிற்போம். பின்னர் பொங்கல் பொங்கி சாமிகும்பிடுவோம். பெற்றோர் பெரியவர் காலில் விழுந்து வணங்கி, பின் குடும்பமாகப் கோவிலுக்குப் போய் வந்த பின்னர் தான் எங்கள் முக்கியமான கடமை தொடங்கும்.
சிறுவர்களுக்கு வருடப்பிறப்பில் கிடைக்கும் முதன்மையான மகிழ்ச்சியே அது அவர்களின் உழைப்பாளர் தினம் என்பது தான். கைமுழுத்தம் அல்லது கைவியளம்! ஒருவர் விடாமல் எல்லா உறவினர்களிடமும் “கைமுழுத்தம்” வாங்கி விட வேண்டும். தன் நண்பனை அல்லது அண்ணாவை தங்கையை விட, தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் அவர்கள் பல்வேறு ராசதந்திரங்களை வகுப்பார்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் உறவினர் வீட்டுக்குப் போவதும், சில்லறைகளைக் கொட்டி எண்ணி “உன்ன விட எனக்கு ரெண்ட்றூவா கூடவே”, “இல்லயே, நான் உப்ப அம்மாச்சி வீட்ட போய் அஞ்ச்றூவா கைமுழுத்தம் வாங்குவனே” என்று தங்கள் சேகரிப்பைப் பற்றி பெருமிதமாகப் பேசுவதும், அடுத்த வரிசம் வரை தன் கைமுழுத்தத்தை பொக்கிஷம் போல் காப்பதும், ஒருவரின் கைமுழுத்தச் சேமிப்பில் இன்னொருவர் ரகசியமாகக் கைவைப்பதும், அம்மங்கோவில் சடங்கில் அல்லது திருக்கோவில் தீர்த்தக்கரையில் தன் சொந்தச் சேமிப்பில் விளையாட்டுச் சாமான் வாங்கி மகிழ்வதும், சிறுவயது வருஷப்பிறப்புகளின் இனிமையான நினைவுகள்.
இன்று சமூக வலைத்தளங்களிலெல்லாம் 'நைண்டிஸ் கிட்ஸ்' என்று கிண்டல் செய்யும் துணுக்குகளைக் காணும் போதெல்லாம் புன்னகைத்தபடியே இழந்தவற்றை எண்ணி ஏக்கப்பெருமூச்சு விடுவேன். வெறும் முப்பதாண்டுகளில் எத்தனை மாறக்கூடும், உண்மையில் எத்தனை இழந்திருக்கிறோம் என்பது உண்மையிலேயே திகைக்க வைக்கிறது. இன்று உஞ்சில் இல்லை. உறவினர்கள் ஒன்று கூடி சிற்றுண்டி செய்வதும் இல்லை, வெள்ளையடித்தல், ஊஞ்சலாடல், சடங்குகள் இல்லை. அரப்பு வைத்த அம்மப்பா, அம்மம்மா இன்றில்லை.
ஆனால் கைமுழுத்தம் கொஞ்சமாக எஞ்சியிருக்கிறது, சில்லறைகள் முற்றாக மறைந்துபோய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாயென. கைகளுக்குப் பாரமில்லாத, ஆனால் மனதுக்குப் பாரமான கைமுழுத்தங்கள். மனம் எப்போதாவது இருந்து விட்டு ‘தெத்தாதே உஞ்சில் தெத்தாதே’ பாடுகின்றது. என்ன, இந்த உஞ்சிலில் முன்னே மட்டும் தான் செல்லமுடியும். திரும்பிச் செல்லவே முடியாது!
(அரங்கம் பத்திரிகையின் 19.04.2019 இதழில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். திருத்தப்பட்டது 21.04.2026)





இரி என்பது சரியான தூய தமிழ்ச்சொல்.
ReplyDeleteஇரி என்பது சரியான தூய தமிழ்ச்சொல்
Deletehttps://www.youtube.com/watch?v=VqlTKsnMbCk