ஹம்ச கமனா

0 comments



தம்பலகாமம் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். பிறந்தகத்தின் பெயரை ஒத்திருப்பதாலோ என்னவோ அவ்வூர் மீது எனக்கு நெடுநாளாகவே ஈர்ப்பு உண்டு. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அது திருக்கோணமலையின் நான்கு பற்றுக்களில் ஒன்றின் தலைநகராக இருந்தது. பற்று என்பது பழங்கால இலங்கையின் ஒரு நிர்வாக அலகு. இன்று மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராம சேவகர் பிரிவு என்று இலங்கையின் உள்ளூர் அலகுகள் பிரிக்கப்பட்டிருப்பது போல, அக்காலத்தில் இங்கு ரட்டை/தேசம், கோரளை, பற்று, ஊர் என்று நிர்வாக அலகுகள் காணப்பட்டிருந்தன. இந்தப் பிரிவுகளுக்கென சிங்களப்பகுதிகளில் ரட்டமகாத்தயா, கோரளை, அத்துகோரளை, பத்து, அத்தபத்து முதலிய பதவிகளும், தமிழ்ப்பகுதிகளில், வன்னியர், உடையார், முதலியார், போடியார் முதலிய பதவிகளும், இந்த நிர்வாக அலகுகளில் அதிகாரமிக்க பதவிகளாக விளங்கின.

இன்றைய திருக்கோணமலை மாவட்டம் என்பது அப்போது திருக்கோணமலைத் தேசமாக - திருக்கோணமலைப்பற்று, கட்டுக்குளம்பற்று, கொட்டியாறுப்பற்று, தம்பலகாமம்பற்று என்னும் நான்கு பற்றுக்களின் தொகுப்பாக இருந்தது. தம்பலகாமப்பற்று இன்று தம்பலகமம், கந்தளாய், கிண்ணியா என்று மூன்று பிரதேசங்களாக உடைந்து நீடிக்கின்றது. அந்தப்பற்றின் தலைநகராக விளங்கிய ஊர் தான் தம்பலகாமம். இன்று பண்டைய பெருமையின் எச்சச்சொச்சங்களை மாத்திரம் சுமந்து ஒரு சிற்றூராக களையிழந்து காணப்படுகிறது.

தம்பலகாமத்தின் பெருமையே அங்கு கம்பீரமான இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் "ஹம்ச கமனாம்பிகா சமேத ஆதிகோணநாதர் ஆலயம்" தான். ஈழத்தின் பாடல் பெற்ற இரு தலங்களில் ஒன்றான திருக்கோணேச்சரம் போர்த்துக்கேயரால் 1624ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து அமைக்கப்பட்ட ஆலயம் இது.

கிழக்குலகின் உரோமாபுரி என்று புகழப்பட்ட திருக்கோணேச்சரம், போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டபோது அங்கிருந்த வழிபாட்டுச்சின்னங்கள் பல இடங்களிலும் பாதுகாப்புக் கருதி மறைத்து வைக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விக்கிரகங்கள், தம்பலகாமத்தின் கழனிமலையில் வைத்து வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. பின்னாளில் அவற்றை தற்போது கோவில் அமைந்துள்ள இடத்துக்குக் கொணர்ந்து, கண்டி அரசின் அனுசரணையுடன் இக்கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். சரி, கோணேச்சரம் இடிக்கப்பட்ட பின்னர், தம்பலகாமத்தில் ஆதிகோணைநாயகர் கோவில் உருவாகக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு ஊகத்தை முன்வைக்கலாம். அதற்குமுன், பழங்காலத்தில் நிலவிய "கோவில்மைய நிலவுடைமைச் சமுதாயக் கட்டமைப்பு" பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

அரச ஆதரவில் ஒரு பெரிய பிரதேசமொன்றையும் அதில் வசிக்கும் சகல சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் "கோத்தளி" (Royal Temple) ஒன்று நிறுவப்படும். குறித்த கோவிலில் இன்னின்ன ஊரவர்கள் அல்லது இன்னின்ன சமூகத்தவர்கள் இன்னின்ன கடமைகளை அல்லது தொழும்புகளைச் செய்யவேண்டும், அதற்கு பிரதிபலனாக குறித்த தரப்பினருக்கு கோவில் சார்பில் வாழ்வாதார உதவிகள் இலவசமாக வழங்கப்படும். அது விவசாயம் செய்வதற்கான வயலாகவோ, கால்நடைகளாகவோ, அல்லது வேறு மானியங்களாகவோ இருக்கலாம். கோவிலில் அந்த தரப்பினரின் கடமை/தொழும்பு "சந்திராதித்தவல்" (சூரிய சந்திரன் உள்ளவரை) தொடரவேண்டும் என்ற ஆணை பெறப்படுவதால், குறித்த குடும்பங்கள் அப்பணியைச் செய்து கோவில் உதவியிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்க்கை நடத்த முடியும். இதுதான் கோவில்மைய நிலவுடைமைச் சமுதாய அமைப்பு.

இதற்கான கால்கோள் தமிழகத்தில் சோழர் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது தெரிகிறது. இலங்கையில் கிழக்கே திருக்கோணேச்சரம், திருக்கோவில், கொக்கட்டிச்சோலை கோவில்களிலும், மேற்கே முன்னேச்சரத்திலும் இவ்வழமை மத்திய காலத்திலும் நீடித்ததற்கான சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

திருக்கோணமலைத் தேசத்தில் திருக்கோணேச்சரத்தை அடிப்படையாகக் கொண்டு நூறுநூறு ஆண்டுகளாக கோவில்மைய நிலவுடமைச் சமுதாயக் கட்டமைப்பு ஒன்று நிலவி வந்திருக்கிறது. கோணேச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டபோது, இந்த நிலவுடைமைப் பொருளாதாரக் கட்டமைப்பு முற்றாகச் சிதைந்தொழிந்து போகிறது. கோணேச்சரத்துத் தொழும்பில் ஈடுபட்டிருந்த தானத்தார், வரிப்பத்தர், இருபாகை முதன்மைகள், வன்னிமைகள் முதலிய மேற்றட்டு வர்க்கத்தினரும் ஏனைய மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்களும் பொருளாதார அமைப்பு சீர்குலைந்ததால் இடர்களுக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள். கோணமாமலையை உள்ளடக்கி போர்த்துக்கேயரும் பின்பு ஒல்லாந்தரும் வலிமையான கோட்டை கட்டி அங்கேயே தங்கிவிட்ட பின்னர், இனி திருக்கோணேச்சரம் மீள எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற வேதனையான முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். "முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே இனி மீளவும் இயற்ற எண்ணாரே வரும் வேந்தர்கள்" என்று சொல்லும் பிரடரிக் கோட்டைக் குளக்கோட்டன் கல்வெட்டு இந்தக் காலத்தில் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதே காலத்திலேயே வேறுவழியின்றி, தம்பலகாமத்தில் கோணேச்சரத்தின் மாதிரி அமைப்பில் ஆதிகோணைநாதர் கோவில் எழுந்திருக்கிறது. அப்படி ஒரு தேசத்துக்கோவிலொன்றை புதிதாகக் கட்டுவதற்கு, உள்ளூரில் அப்போது வலிமையாக விளங்கிய கண்டி அரசு ஆதரவு அளித்திருந்தால், அதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை.

பழைய கோணேச்சரத்தின் தொழும்புகளை விவரித்து அல்லது மீள்வரையறுத்து "கோணேசர் கல்வெட்டு" எனும் இலக்கியம் இந்தக் காலத்தில் தான் தம்பலகாமம் ஆதிகோணேச்சரம் மீது பாடப்பட்டிருக்கவேண்டும். அதிலுள்ள காவிய அழகு கொண்ட தொன்மங்களும் பிற்சேர்க்கைகளும், கோணேச்சரக்கோவிலையும் அதன் உண்மை வரலாற்றையும் முற்றாக மறந்துவிட்ட நான்கைந்து தலைமுறைகள் கடந்த பின்னரே அந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.

கடந்தவாரம், வேறு விடயமாக அந்தப்பக்கம் போனபோது தம்பலகாமத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திடீர் விஜயம் என்பதால் போதுமான ஆயத்தங்களுடன் செல்லவில்லை. அம்மண்ணின் மைந்தரும் ஆய்வாளருமான மருத்துவர் தங்கராஜ் ஜீவராஜ் அவர்களை கைபேசியில் அழைத்துப் பேசினேன். (தம்பலகாமம் மற்றும் திருக்கோணமலை பற்றிய அவரது அருமையான பல வரலாற்று ஆய்வுகளை அவரது ஜீவநதி வலைத்தளத்தில் படிக்கலாம்) அப்பகுதியிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், தமிழகத்திலோ ஈழத்திலோ வேறெங்குமே இன்றி தம்பலகாமத்தில் மட்டுமே நீடிக்கும் தனித்துவமாக வழிபாட்டு மரபுகளையும் பற்றியும் அவர் விவரித்தார்.

கோணேச்சரத்திலிருந்து எடுத்துவரப்பட்ட சிறு கல் கூட கோணேச்சரப் பெருமானாகவே பார்க்கப்பட்ட ஒரு வலிமிகுந்த காலத்தை ஜீவராஜ் அண்ணா சுட்டிக்காட்டினார். தம்பலகாமத்தில் ஆதிகோணைநாயகர் என்ற பெயரில் வழிபடப்படுபவர் உண்மையில் யார் என்பதை தமிழ் உருவவியலிலும் தென்னகச் சிற்பநூல்களிலும் அறிமுகம் உள்ள எவருமே இலகுவாக இனங்கண்டுவிடலாம். அதைப் பொதுவெளியில் பேசினால் அடியவர் மனம் புண்படும். அது இறைவன் திருவுளம் என்று நகரவேண்டியது தான் என்று சொல்லி ஆமோதித்தேன்

தம்பலகாமம் ஆதிகோணநாயகர்


ஆனால் தம்பலகாமம் கோவிலில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய திறப்பு வேறொன்று. அது அங்கு வினோதமான பெயருடன் வீற்றிருக்கும் அன்னை. ஹம்சகமனாம்பிகா!

கமனம் என்றால் வடமொழியில் போதல் என்று அர்த்தம். சிங்களத்தில் கூட இலங்கை போக்குவரத்து சபையை ஸ்ரீலங்கா கமனாகமன மண்டலய என்பார்களே! அது அதே அர்த்தம் தான். ஹம்சம் போல் செல்பவள். அன்னம் போல் நடப்பவள். அன்னநடை மடவாள்!

சட்டென்று எனக்கு பற்றிக்கொண்டது. திருஞானசம்பந்தர் தேவாரம், கோணேசர் கல்வெட்டு, தட்சிணகைலாய புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்று பல இலக்கியங்களைப் புரட்டி, கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் அன்னையின் உண்மைப்பெயர் மாதுமை அல்ல; "பிடியன்ன மென்னடை" என்பதைச் சொல்லி சில மாதங்களுக்கு முன் தான் வீரகேசரி வாரவெளியீட்டில் கட்டுரை வரைந்திருந்தேன். அதை உறுதிப்படுத்தி சிரித்துக்கொண்டிருந்தாள் தம்பைமாநகரத்து அன்னநடை மடவாள்.

அதெப்படி? பிடியன்ன மென்னடையும் அன்னநடையும் ஒன்றா? பெயரிலேயே ஒற்றுமை இல்லையே?

இல்லை. கோணேச்சரம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னர், அங்கிருந்த மரபுகளையும் தொழும்புகளையும் தொடர்வதற்காகவே தம்பலகாமத்தில் ஆதிகோணேச்சரம் எழுந்தது என்பதைச் சொன்னேன் அல்லவா? தம்பலகாமத்து இறைவன் கோணைநாயகன் என்ற பெயரைச் சூடியது போலவே, இங்கு எழுந்தருளிய தேவியும் பிடியன்ன மென்னடை என்ற பழைய தேவியின் பெயரையே தானும் சூடியிருக்கிறாள். பிடியன்ன மென்னடை மருவி பின்னாளில் அன்னமென்னடை என்று ஆகியிருக்கிறது. அதை வழக்கம் போல யாரோ வடமொழி தெரிந்த பண்டிதர் ஹம்சகமனா என்று மாற்றியிருக்க வேண்டும்.

அல்லது பிடியன்ன மென்னடை என்ற பெயரே, பிடி+அன்ன+மென்னடை = பிடியானை மற்றும் அன்னம் போல் நடப்பவள் என்று புரிந்துகொள்ளப்பட்டு "கரிணீஹம்சகமனா" என்று வடமொழியில் அழைக்கப்பட்டிருக்கக் கூடும். பிடியின் வடமொழிப் பெயரான "கரிணீ" புரியாத பிற்காலத்தவர்கள் அதைத் தவிர்த்து விட்ட ஹம்சகமனாவை மட்டும் தக்கவைத்திருக்கலாம்.

எது எப்படியோ மாதுமையம்மையின் உண்மைப் பெயர் பிடியன்ன மென்னடை என்பதை இன்னொரு தடவை உறுதிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இந்தப் பயணத்தின் மூலம் கிடைத்தது. உண்மையைச் சொன்னால், ஒரு தமிழ் ஆர்வலனாக எனக்கு மாதுமையோ பிடியன்ன மென்னடையோ எதுவுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய அழகான பெயர்களே. ஆனால் வரலாற்று ஆர்வலனாகவும் இறைநம்பிக்கையாளனாகவும் பிடியன்ன மென்னடை என்ற பெயரே எனக்கு உவப்பானது. அதற்கான வரலாற்று ரீதியான காரணங்களை முன்பே வீரகேசரியில் எழுதியிருக்கிறேன்.

மேலும் இறைநம்பிக்கையாளனாக அப்பெயர் தெய்வீகமானது. தமிழ்ச்சைவத்தின் நான்கு ஆசான்களில் - சமய நாற்குரவரில் ஒருவரான சம்பந்தரின் அருள்வாக்கில் இடம்பெற்ற பெயர் அது. கோணமலைப் பதிகத்தில் "பிடியனநடையாள் பெய்வளை மடந்தை" என்று பாடப்பட்ட பெயர் அது. தமிழ்ச் சைவ சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவனுக்கு தேவாரம் என்பது களங்கமேதுமற்ற பதிவாக்கியம். இறைவனருளால் நேரடியாக வெளிப்பட்டது. எனவே மாதுமையா? பிடியன்ன மென்னடையா? என்று கேட்டால், ஐயமின்றி பிடியன்ன மென்னடையே உயர்ந்தது என்பேன்.

நாமெல்லோருமே ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனிதர்கள் . ஆனால் எவனோ ஒருவன் கையில் நாம் அம்பாக இழுக்கப்படும் தருணங்களில் செய்வதறியாது அச்சத்துடன் கைகூப்புவது ஒன்றே நாம் செய்யக்கூடியது. ஹம்சகமனாவிலிருந்து பிடியன்ன மென்னடைக்கு என்னை இழுத்துச் சென்றது அந்த வில்லின் விசை தான். தன்னைத் தரிசித்த அந்தக்கணத்தில் அப்படி அன்னம் போல் நடந்து நெருங்கி வந்து ஒரு ஊகத்தை உருவாக்கி புன்னகைத்திருக்கிறாள் அன்னநடை அம்மை. அவள் வாழி. அவள் பெயர் வாழி. கோணையங்கிரி உள்ளவரை கோமகள் பிடியன்னமென்னடை வாழி.

🔱🙏
மேலும் வாசிக்க »

கிழக்கிலங்கை - ஒரு சூம் உரையாடல்

0 comments




கடந்த யூலை 19ஆம் திகதி அரங்கம் பத்திரிகையும் Tamil Institute for Leadership excellence அமைப்பும் இணைந்து நடாத்திய சூம் கலந்துரையாடலின் யூடியூப் இணைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.

"ஐரோப்பியர் வருகையின் பின்னர் கிழக்கிலங்கை வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினேன் (50:00 - 1:05:00). திரு.ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைக்க, திரு.சீவகன் பூபாலரட்ணம் ஐயா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். சூம் உரையாடல் முழுவதிலும் தொகுப்புரை செய்து கலந்துரையாடலைச் சீராகக் கொண்டு சென்றவர் பேராசிரியர் மௌனகுரு ஐயா அவர்கள். 

உண்மையில் கிழக்கிலங்கை பற்றிய தோராயமான அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முழுமையான உரையாடல் போதுமானது. "கிழக்கிலங்கை பூர்வீக வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பிலான திரு விஜயரட்ணா எட்வின் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கையின் தமிழ் சமூக உருவாக்கமும் பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான கலாநிதி சுந்தரம்பிள்ளை சிவரட்ணம் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் உருவாக்கமும் இஸ்லாமிய பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஐயா அவர்களின் உரை, என்பவற்றை ஒட்டுமொத்தமாகச் சேர்த்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமை பெற்றுவிடுகிறது. 

கிழக்கிலங்கையின் அரசியல், நிர்வாகம், நிலப்பரப்பு, பொருளாதாரம், சமயம், துறைமுகங்கள், பண்பாடு, உணவுப்பொருட்கள், அன்றாட வாழ்க்கை என்பவற்றில் ஐரோப்பியரால் அல்லது அவர்களின் பின்னணியில் உருவான அகக்காரணிகளால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது திருப்பங்கள் என்னுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இறுதியாக இடம்பெற்ற பேராசிரியர் மௌனகுரு ஐயாவின் உரை மிக முக்கியமானது. சமூகவியல், மானுடவியல் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாதது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்கின்ற கேள்வி பதில் பகுதியையும் அவதானிக்கலாம்.




மேலும் வாசிக்க »

பிறந்தகத்தை ஆவணப்படுத்தல்

0 comments


பிறந்த மண்ணை பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆசை எப்போதிருந்தோ இருக்கிறது. ஆனால் அந்நூல் தகவல் தொகுப்பில் முழுமையானதாக, ஏனைய ஊர் வரலாற்று நூல்களுக்கு முன்மாதிரியானதாக அமைய வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை எடுப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது.


மூன்றாண்டுகளுக்கு முன், நூலகம் நிறுவனத்தின் 'ஊர் ஆவணப்படுத்தல்' செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டபோது, நூலின் உள்ளடக்கத்துக்கான ஒரு வரைவை தயாரித்துக்கொள்ள முடிந்தது. எனினும் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் செயற்றிட்டத்தில் முழுப்பங்களிப்பை அளிக்க முடியவில்லை. (அந்த வரைவை ஆவணகம் வலைத்தளத்தில் இங்கு படிக்கலாம்.)

எனினும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்யலாம் என தீர்மானித்தேன். எனது தகவல் சேகரத்தின் ஒரு பகுதியை தம்பியொருவனின் பாடசாலை ஆண்டு மலருக்கு வழங்கினேன். அதைத் திருத்தி இன்னும் சில விடயங்களை சேர்த்து, மறைந்த சகோதரர் அமரர். கோவேந்தன் அண்ணாவின் நினைவு வெளியீடான 'கோவேந்த வியாசத்துக்கு' வழங்கினேன்.

எதிர்பார்த்தது போலவே அக்கட்டுரை ஊரில் சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அக்கட்டுரையில் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்த ஊரின் சமூக அடுக்கு சார்ந்த குடி முறைமை, தத்தி, கத்தறை, வறுகை, பாகை, முதலிய மறைந்து வரும் மரபுகள் அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும் எதிர்கொள்ளப்பட்டன. சிலர் நீதி கேட்டு வீட்டுப் படி கூட ஏறினார்கள்.
🙂

முற்றாக அருகிவிட்ட அந்த சமூகவியல் தரவுகளை சேகரிப்பதில் நான் விட்டிருந்த இடைவெளிகளை அந்த சர்ச்சைகள் மூலம் பெருமளவு நிரப்பிக் கொள்ள முடிந்தது.
அந்தக்கட்டுரையின் பிரசுரத்துக்கு முந்திய வடிவம்
Prasad
அங்கிளின் முயற்சியில், சில திருத்தங்களுடன் ஆரையம்பதி இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதைப் படித்த அன்பிற்குரிய ஆசான் பேராசிரியர் மௌனகுரு ஐயாவும் அழைத்து அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை சிலாகித்து பேசியது ஆன்ம திருப்தியை தந்திருக்கிறது. இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் சகல ஊர்களும் தங்கள் வரலாற்றைத் தொகுத்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமைபெறும் என்றார் அவர்.

அக்கட்டுரையின் உண்மை நோக்கமும் அதுவே. புள்ளி வைத்து தான் கோலம் போட முடியும். வரலாறு என்பது பிரதேசம், குழுக்கள், பிராந்திய மரபுகள் என்றெல்லாம் சுருக்கி எழுதப்படும் நுண்வரலாறுகளின் தொகுப்பு என்பதை இங்கு ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இன்று வரை ஒழுங்கான வரலாறு இன்றி, தொன்மங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் பக்கச்சார்பின்றி தத்தம் ஊர்வரலாற்றை தொகுத்துக் கொண்டாலே போதும். அத்தனையையும் ஒட்டுமொத்தமாக்கி இலங்கைத்தமிழர் வரலாற்றை கட்டியெழுப்பி விடலாம்.
ஐயமின்றி இந்தக் கட்டுரை தகவல் பிழைகளும் குறைகளும் கொண்டதே. சில இடங்களில் நடுநிலைமை தவறி வெளிப்பட்டுள்ள ஊர்ப்பற்றும் உள்நோக்கம் கருதியது தான்.
இதையே ஒரு சவாலாக எடுத்து, இதே மாதிரியில் அல்லது இதைவிட சிறப்பான உள்ளடக்கங்களுடன் ஏனைய ஊர் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படட்டும். சில ஊர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கின்றன. என்றால் அந்நூலை அல்லது அக்கட்டுரையை தகவல் பிழைகள் திருத்தி இற்றைப்படுத்த முயலலாம். இயன்றால் பத்தாண்டுகளுக்குள் பக்கச்சார்பின்மை கொண்ட சமூகவியல் - மானுடவியல் ரீதியிலும் முழுமையான ஒரு இலங்கைத் தமிழ்ச்சமூக வரலாற்று நூல் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் நப்பாசை. ஆர் குத்தி என்ன, அவலானால் சரி.
கோலத்தை திட்டமிட்டாயிற்று. புள்ளிகளை வைப்போமா? ❤️



மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner