சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது (தி இந்து 2019).

சபரிமலைக்கோவிலுக்கு அதிகளவு அடியவர்களை அனுப்பிக்கொண்டிருப்பது தமிழகம். இப்போது  இலங்கையும் அடியவர்களை பெரும் எண்ணிக்கையில் அனுப்பத் தொடங்கியிருக்கிறது (Nagahawatte 2019). எனவே, சபரிமலைப் பிரச்சினையில் கருத்துக் கூறுவதற்கும், அதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும், கேரளத்துக்கு சமனான அளவு தார்மீக உரிமை, தமிழகம் மற்றும் இலங்கைக்கும் கிட்டியிருக்கிறது.

ஆனால் நம்மில் பலரும் சபரிமலைக் கோவிலின் பின்னணி, ஐயப்ப வழிபாட்டின் வரலாற்றுத் தோற்றம் இது எதுவுமே தெரியாமல், இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை அறியாமல், அந்தப் பிரச்சினை தொடங்கிய மையப்புள்ளியை நாம் அறிந்துகொள்ள முடியாது. 

சபரிமலைக் கோவில் (படம் நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்)
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு நம் கைகளில் இரண்டு வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்து, தமிழ் -  வடமொழி - மலையாள மொழிகளில் எழுந்த சபரிமலைத் தொன்மங்கள். இரண்டாவது ஓரளவு வரலாற்று நம்பகத்தன்மை கூடிய ஆவணங்களும் குறிப்புகளும். இவை இரண்டையும் சற்று விரிவாக ஆராய்வோம்.

1. சபரிமலைத் தொன்மங்கள்
'ஐயப்பன்' என்பது ஒரு அழகான தமிழ்ப்பெயர். அது ஐயன் + அப்பன் என்ற இரு சொற்களின் இணைவால் வந்தது. அப்பெயருக்கு ஆயிரம் ஆண்டு காலப் பழைமை உள்ளது என்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.

குமரி மாவட்டத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டுகளில் ஐயப்பன் என்பது ஆட்பெயராகவும் தெய்வப்பெயராகவும் பதிவாகி இருக்கிறது. உதாரணமாக,  கன்னியாகுமரி குகநாதசுவாமி ஆலயத்திலுள்ள இராஜாதிராஜசோழனின் 31ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (பொ.பி 1043) இடம்பெற்றுள்ள "ஐயப்பன் வேதிய சாஸ்தா"வைக் குறிப்பிடலாம் (Poduval 1990:76). (நாம் 'வேதிய சாஸ்தா' ஐயப்பனுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.)

ஆனால்,  இங்கு தவிர 'ஐயப்பன்' என்ற தனித்துவமான தெய்வமொன்று தமிழிலோ வடமொழியிலோ எங்குமே பதிவாகவில்லை. ஐயப்பன் பற்றிய  முதலாவது வடமொழி நூலான, பூதநாதோபாக்யானமே பொ.பி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது தான் (Sekar 1992:16). அத்தகைய தெய்வமொன்று பற்றிய பழைய இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைப்பதாயில்லை. பின்னர் ஐயப்பன் எனும் சபரிமலைத் தெய்வம் எப்படி வரலாற்றில் தோன்றினான்?

மகிஷி சங்காரம்
ஐயப்பன் பற்றிய பழைய இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்காதபோதும்,  அவன் மீதான பல நாட்டுப்புறப்பாடல்கள் கேரளப்பகுதியில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்படும் ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான கதை, பலரும் அறிந்தது தான்.  பாற்கடல் கடையும் போது திருமால் மோகினி வடிவெடுத்து அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். அதன் போது, சிவன் மோகினியின் அழகில் மயங்குவதை அடுத்து இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

பூவுலகில் தொல்லை கொடுத்துவரும்  மகிடாசுரனின் தங்கை மகிஷியை, அரிகரபுத்திரனான அக்குழந்தை அழிக்கும் என்று தேவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இரண்டு ஆண்களுக்குப் பிறந்த குழந்தையொன்றாலே தான் இறக்க வேண்டும் என்ற விபரீதமான வரத்தைப் பெற்றவள் அவள். அரிகரபுத்திரன் பந்தள நாட்டுக்கு அருகில் குழந்தையாகத் தோன்றுகிறார். குழந்தையில்லாமல் வருந்தி சிவனை நோக்கி நோன்பிருக்கும் பந்தள மன்னன் இராஜசேகரன், அப்பகுதிக்கு வேட்டையாட வரும் போது அந்தக்குழந்தையைக் கண்டெடுப்பதுடன், அதன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் 'மணிகண்டன்' (கண்டம் = கழுத்து) என்று பெயர் சூட்டி வளர்க்கிறான்.  

மணிகண்டன் வளர்கையிலேயே அரசனுக்கு இன்னொரு மகன் பிறக்கிறான். வளர்ப்பு மகனான மணிகண்டன் தன் சொந்த மகனின் அரசாட்சியில் உரிமை கோரலாம் என்ற அச்சத்தில் அவனை அழித்தொழிக்க முயல்கிறாள் பந்தள அரசி. அந்தத் திட்டன்படி அவள் தீராத தலைவலி வந்தவள் போல நடிக்க, அவள் குணமாவதற்கு புலிப்பால் தேவை என்று அறிவிக்கப்படுகிறது. அதை எடுத்துவரச் செல்லும் மணிகண்டன் காட்டில் மகிஷியுடன் போர் புரிந்து அவளை அழிக்கிறார். அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது.
மகிஷி மடிந்தாள்; மஞ்சள்மாது ஆனாள்!
(படம் நன்றி: Wings & Chirps)
சாபம் விலகி 'மஞ்சள்மாதா'வாக வடிவெடுத்த மகிஷி, மணிகண்டனை மணம்புரிய விரும்புகிறாள். இப்பிறவியில் தான் மணவொறுப்பு (பிரமச்சரிய) நோன்பு கைக்கொள்வதாகச் சொல்லும் மணிகண்டன், அவளை தன்னருகே மாளிகைபுரத்தம்மை என்ற பெயரில்  தெய்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.

மகிஷியின் கொட்டம் அடங்கியது என்று மகிழும் தேவர்கள், மணிகண்டன் புலிப்பால் பெற ஏதுவாக, புலிகளாக மாறி பந்தளம் வருகிறார்கள். அரசியும் ஏனையோரும் அதன் மூலம் மணிகண்டனின் தெய்வீக இயல்பை உணர்ந்து வணங்க, தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததாகச் சொல்லி விடைபெறும் மணிகண்டன் சபரிமலையில் யோகநிலையில் தவம் புரிய விரும்புகிறார். அங்கு அவர் தந்தை இராஜசேகரனால் ஒரு கோவில் அமைக்கப்படுகிறது. அதுவே இன்றைய சபரிமலை தர்மசாஸ்தா கோவில் (Jones & Ryan 2006:58-9). 

ஐயப்பன் பற்றிய மிகப்பிரபலமான இந்தக்கதை, சில இடங்களில் சிற்சில மாறுதல்களுடன் சொல்லப்படுகிறது. உதாரணமாக, தெய்வீகப் பெண்ணான லீலை, அவள் கணவன் தத்தாத்திரேயரின் சாபத்தால் மகிஷியாகப் பிறந்தாள் என்று ஒரு கதை சொல்கிறது (Sikand 2003:23-24). மற்றொரு கதை, தான் எய்யும் அம்பு சென்று வீழும் இடத்தில் தனக்குக் கோவில் அமைக்குமாறு பந்தள மன்னனுக்கு ஆணையிட்டு மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் வீழ்ந்ததாகச் சொல்கிறது (Varma 2018). இன்னொரு கதையில் மஞ்சள்மாதாவின் வேண்டுகோளை ஐயப்பனால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, 'சபரிமலைக்கு புதிய யாத்திரிகர்கள் (கன்னிச்சாமிகள்) யாரும் வருகை தராத ஆண்டில், தான் மணவொறுப்பு நோன்பை முடித்து, உன்னை மணப்பேன்' என்று மணிகண்டன் வாக்களிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கன்னிச்சாமிகள் யாத்திரை செய்வதை அறிந்து ஏமாந்தபடி மாளிகைபுரத்தம்மை காத்திருப்பதாகச் செல்கிறது அந்தக் கதை  (Haindavam Web 2011). இப்படிப் பல மாறுதல்களை ஐயப்பன் தொன்மங்களில் அவதானிக்கலாம்.

இந்த மகிஷி கதையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்ற, அதேவேளை வரலாற்று ரீதியில் முக்கியமான ஐயப்பன் பற்றிய தொன்மங்கள் இன்னும் நான்கு இருக்கின்றன. அவற்றில் ஒரு கதை மகிஷிக்குப் பதிலாக, மணிகண்டன் அழித்த உதயணன் எனும் கொள்ளையன் பற்றிச் சொல்கிறது. ஏனைய மூன்றும் முறையே சபரிமலை ஆளுகைக்கு உட்பட்ட பந்தள அரசகுலம்,  கேரளத்து சமூகங்களான ஈழவர், மலையரையர் ஆகிய மூன்று பிரிவினரிடையேயும் பிரபலமானவை.

அ) உதயணன் கதை
உதயணன் எனும் கொள்ளையன் சபரிமலை சாஸ்தா கோவிலை இடித்துக் கொள்ளையடித்து அதன் தந்திரியையும் (பூசகர்) கொல்கிறான். தந்திரியின் மகன் ஜயந்தன், மனம் வருந்தியபடி சாஸ்தாவைத் துதிக்கிறான். உதயணன் அருகிலிருந்த பந்தள அரசையும் சூறையாடி, அதன் இளவரசியைக் கவர்ந்து வருகிறான். சாஸ்தாவின் அருளால், ஜயந்தன் பந்தள இளவரசியைக் காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது. இருவரும் மறைவாக பொன்னம்பலமேட்டிற்குச் சென்று அங்கு மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மகனாக சாஸ்தாவே ஐயப்பனாக அவதரிக்கிறார்.

எருமேலிக்கு அருகே  கோட்டைப்பாடியில் குடியிருந்த பட்டாணியரான (இஸ்லாமியர்) பாத்தும்மா -  அலிக்குட்டி தம்பதிகளின் மகன் வாவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஐயப்பன், உதயணனைக் கொன்று, சாஸ்தா கோவிலையும் மீட்கிறார் (Sadasivan 2000:123).. அங்கு பிற்காலத்தில் ஐயப்பன் தெய்வமாக வழிபடப்படுகிறார்.  

ஆ) பந்தள அரச குலக்கதை.
பந்தள அரண்மனை - இன்றைய தோற்றம்

பந்தள அரசகுலத்தின் நம்பிக்கையின் படி, அவர்கள் பாண்டியரில் ஒரு பிரிவினர்.  சோழர் மற்றும் முகலாயப் படையெடுப்புகளை அடுத்து மேற்கே இடம்பெயரும் அவர்களது மூதாதையர், இறுதியில் இந்த பந்தளத்தில் குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி வந்த பந்தளத்து மூதாதையான இராஜசேகரனுக்கு மகனாகக் கிடைத்தவரே மணிகண்டன். 

சபரிமலை சாஸ்தா கோவிலை பந்தள அரசர்களிடமிருந்து தமிழ் மறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களை வெல்வதற்காக 'மூப்பில்' எனும் களரி ஆசான் துணையுடன் போருக்கு எழுகிறான் பந்தள இளவரசன் ஐயப்பன். இஞ்சிப்பாறையில் மறவரை வெல்லும் அவன், அங்குள்ள சாஸ்தா கோவிலில் துறவு பூண்டு யோகநிலையில் அமர்கிறான்.

இ) ஈழோதிசேஷம்
ஈழவர்கள் கேரளத்தின் முக்கியமான சமூகங்களில் ஒருவர்.  ஐயப்பன் பற்றிய ஈழவரின் தொன்மம், "ஈழோதிசேஷம்" எனும் நாட்டார் பாடல் வடிவில் கிடைத்திருக்கிறது. அதன்படி தண்ணீர்முக்கம் சீரப்பஞ்சிராவைச் சேர்ந்த 'மூப்பில்' எனும் ஈழவர் குல களரி ஆசானின் தலைசிறந்த மாணவன் ஐயப்பன். ஈழப்பயிற்று எனும் தற்காப்புக்கலையை மூப்பிலிடம் கற்றுக்கொண்ட ஐயப்பனுக்கும் மூப்பில் மகள் பூங்கொடிக்கும் காதல் மலர்ந்திருந்தது (Sadasivan 2000:123). மூப்பில் துணையுடன் சபரிமலையை ஆக்கிரமித்திருந்த மறவரை வெல்கிறான் ஐயப்பன். பின் அங்கேயே தங்கிவிடுகிறான். அவனைத் தேடி அங்கு வரும் பூங்கொடி, அவன் ஆணைக்கேற்ப தானும் துறவு பூண்டு பொன்னம்பலமேட்டில் தங்கியிருக்கச் செல்கிறாள். அவர்கள் மறைந்த பின்னர் தெய்வங்களாகி, ஐயப்பன் - மாளிகைபுரத்தம்மையாக கோவில் கொள்கிறார்கள்.

ஈ) மலையரையரின் மணிகண்டன்
1800களில் மலையரையர் குடியிருப்பு

இந்திய அரசால் பட்டியல் பழங்குடியினராக பதிவு செய்யப்பட்டுள்ள   மலையரையர்கள், கேரளத்தின் சபரிமலையை அண்டிய காடுகளில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்கள். அவர்களது நம்பிக்கையின் படி, கண்டன் -  கருத்தம்மை என்ற மலையரையத் தம்பதிகளுக்கு 41 நாள் நோன்பின் பயனாகப் பிறந்தவன் மணிகண்டன். மணிகண்டன் என்ற பெயர் அவன் கழுத்தில் மணி கட்டப்பட்டு இருந்ததால் வந்ததல்ல; கண்டனின் மகன் அல்லது இளைய கண்டன் என்பதே 'மணிகண்டன்' என்ற பெயரின் பொருள். அவனையே பந்தள அரசர் தத்தெடுத்து வளர்க்கிறார்.

சபரிமலையின் பதினெட்டுப் படிகளும் மலையரையர் வாழும் பதினெட்டு மலைகளைக் குறிப்பது தான். மகிஷியை அழிப்பதற்காகவன்றி, சோழரின் ஆக்கிரமிப்பிலிருந்து தம்மைக் காக்கவே மணிகண்டன் சாஸ்தா அம்சமாக அவதரித்தான் என்கின்றார்கள் மலையரையர்கள்.  (Ayyappan 2018). அவர்களின் கதையிலும் மணிகண்டனின் சீரப்பஞ்சிராக் காதலி பூங்கொடி வருகிறாள். 

ஐயப்பன் தொடர்பான இன்னும் பல நாட்டார் பாடல்கள் கேரளத்தில் வழக்கில் உள்ளன. அவற்றில் கவனத்தை ஈர்க்கும் சில பாடல்கள் ஐயப்பனுடன் இலங்கையை இணைக்கின்றன. அதில் ஒன்றின் படி, ஐயப்பன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டு இளவரசியொருத்தியை மணந்துகொள்கிறான். இன்னொரு பாடலின் படி, பூங்கொடியை உதயணன் கொலை செய்த பின்னர் மனமுடைந்து போகும் ஐயப்பன், இலங்கைக்குச் சென்று புத்த பிக்குவாக மாறுகின்றான் (Sadasivan 2000:124). 

ஐயப்ப வணக்கம் ஒரு மாவீர வழிபாடு
ஐயப்பன் ஒரு அவதாரம், இரத்தமும் சதையுமாக இந்த மண்ணில் நடமாடியவன் என்பதை ஐயப்ப அடியவர்களும் மறுப்பதில்லை. ஐயப்ப வழிபாடு, மறைந்த ஒருவர் தெய்வமாக மாறிய கதையே தான். மகிஷியின் கதை தவிர்த்து, ஏனைய நான்கு கதைகளிலும் ஒரு இயல்பான வரலாற்று அம்சம் இருப்பதைக் காணமுடிகின்றது. அந்த எல்லாக் கதைகளையும் தொகுத்து நோக்கும் போது, நமக்கு 'ஐயப்பன்' எனும் வரலாற்று நாயகன் ஒருவனின் வாழ்க்கை துலங்கி வருகின்றது.

அவன் மணிகண்டன் என்ற பெயரில் வாழ்ந்த பந்தள இளவரசன். எனினும் அவன் முறையான பந்தள அரச குலத்தவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மேற்படி எல்லாத் தொன்மங்களுமே உறுதி கூறுவதைக் காணலாம். ஆனால் அவனது வீரம், சபரிமலையை ஆக்கிரமித்திருந்த உதயணன் அல்லது சோழர் அல்லது மறவர் என்று இனங்காணப்பட்ட யாரோ ஒரு எதிரிகள் படையை வீழ்த்துவதில் உதவி இருந்திருக்கிறது.

மகிஷியின் கதையை, ஐயப்பனை அரிகரபுத்திரன் சார்ந்த பௌராணிக மரபுக்குள் உள்ளீர்க்க முயன்ற முயற்சியாகவே கொள்ளமுடியும். அல்லது சங்க இலக்கியங்களில்  'எருமை நாடு' என்று போற்றப்பட்ட இன்றைய மகிஷ ஊர் (மைசூரு) அரசுக்கும் சேர நாட்டுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடொன்றையும் அது மறைமுகமாகக் கூறக்கூடும். எவ்வாறெனினும், ஐயப்பன் வாழ்வில் பெண்ணொருத்திக்கு இடமிருந்தது என்பதை பூங்கொடி பற்றிய கதைகளும், அவனுக்கருகே இன்றும் கோவில் கொண்டுள்ள மாளிகைபுரத்தம்மை அல்லது மஞ்சள்மாதா சன்னதியும் சான்று கூறுகின்றன.

எந்தவொரு கதையிலும் ஐயப்பனுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. அவன் சபரிமலையில் யோகத்தில் அமர்வதாகவோ, அல்லது இலங்கைக்குச் செல்வதாகவோ அவை முடிவடைகின்றன. பூங்கொடியின் மறைவாலோ, அல்லது போரில் வெறுப்புற்றோ, அவன் மிக இளம்வயதிலேயே துறவு பூண்டிருக்கக்கூடும்; பல வரலாற்றாசிரியர்கள் ஊகிப்பது போலவே அவன் (இலங்கையில்?) பௌத்தத்தைத் தழுவியிருக்கவும் கூடும்.

மேற்படி தொன்மங்களில் துலங்கும் இன்னொன்றும் உள்ளது. சபரிமலையில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தது. மணிகண்டன் ஒரு உண்மையான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அந்த சாஸ்தா கோவில், அவனுக்கும் முந்தியது.  அவன் மறைந்த பிற்காலத்தில்,  சாஸ்தாவின் அவதாரம் ஆகின்றான். பின் சபரிமலையின் முதன்மைத் தெய்வமும் அவனே ஆகின்றான். 

2) ஆவணங்களும் குறிப்புகளும் 
மேலே, தொன்மங்களைப் பகுப்பாய்ந்து ஐயப்பன் என்ற வரலாற்றுப் பாத்திரமொன்றை மீள்கட்டமைக்க முயன்றிருந்தோம். மேலதிக வரலாற்றுத் தகவல்களை நாம் சேகரித்துக் கொள்வதற்கு, இருவகையான ஆவணங்கள் கைகொடுக்கின்றன. ஒன்று, பிரித்தானிய ஆவணங்கள், இரண்டு கடந்த நூற்றாண்டின் நேரடிச் சான்றுகள்.

வார்டின் கணக்கெடுப்பு அறிக்கை
பிரித்தானிய ஆவணங்களில் முக்கியமானது, 1819 அளவில் கொச்சி -  திருவிதாங்கூர் பகுதிகளைப் பற்றி மெட்ராஸ் அதிகாரி பி.எஸ்.வார்டு (B.S.Ward) என்பவர் எழுதிய கணக்கெடுப்பு அறிக்கை. இதுவே சபரிமலை பற்றி தற்போது கிடைத்துள்ள ஆவணங்களில் மிகப்பழைமையானது. கடந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தின் போது, 'இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் சூல்தகவு கொண்ட பெண்கள் இங்கு நுழைய அனுமதி இருக்கவில்லை' என்ற வாதத்திற்கு சார்பாக இந்த ஆவணமே முன்வைக்கப்பட்டது.  சபரிமலைக்கோவில் செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருப்பது, யனவரி மாதம் ஐந்து நாட்கள் அங்கு (மகரவிளக்கு) விழா நிகழ்வது, 10 - 15 ஆயிரம் அடியவர்கள் வருகை தருவது,  அங்குள்ள பதினெட்டு படிகள், பந்தள இராசாவின் பழைய வசிப்பிடம் பற்றிய குறிப்புகள் இதில் வருகின்றன. (Ward 1898:70, 71)
வார்டின் நூலில் வருகின்ற 'சௌரிமல்லை' (Chourymallay) பற்றிய குறிப்பு பப.69-70

சாமுவேலின் 'வேட்டைத்தெய்வம் ஐயப்பன்' 
இதற்குப் பின், சாமுவேல் மாட்டிர் (Mateer Samuel) என்ற பாதிரியாரால் 1883இல் எழுதப்பட்ட "Native life in Travancore" என்ற நூலில் வரும் குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  இதில் மலையரையர்கள் பற்றி எழுதும் போது சபரிமலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சாமுவேல். (Samuel 1883:75-77)  

"மலையரையர்கள் தமக்கு அருகிலிருந்த சபரிமலையை வழிபட்டு வந்தார்கள். தாளஞானி அல்லது தாலனானி என்ற மலையரையர், வேட்டைத்தெய்வமான ஐயப்பனின் வெளிச்சப்பாடாக (சாமியாடி) இருந்தவர். அவருடன் குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில், அருகில் குடியிருந்த சோக்கர் (ஈழவர்) குலத்தார் யாருக்கும் தெரியாமல் அவரைக் கொன்று  புதைத்து விடுகிறார்கள். ஐயப்பனின் வாகனமான புலிகள், அவரது புதைகுழியைத் தோண்டி பிணத்தை வெளியே எடுக்க, காட்டு யானைகள் அப்பிணத்தை இழுத்து வந்து, ஏனைய மலையரையர்கள் காணும் படி போட்டுச் செல்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து தீவிரமாகப் பரவிய அம்மை நோய், பல சோக்கர் உயிரைப் பறிக்கிறது. சோக்கரின் வெளிச்சப்பாடு, அது அவர்கள் செய்த கொடூரத்துக்காக சாஸ்தாவு தெய்வம் சீற்றம் கொண்டு தரும் தண்டனை என்று அறிவிக்கிறார். சாஸ்தாவு அல்லது சாத்தன் என்பது திருவிதாங்கூர் மலைப்பகுதி எல்லைத் தெய்வம்)
மலையரையர்கள் வழிபட்ட சிலை,
 சாமுவேலின் நூலிலிருந்து.

சோக்கர்கள் தம் தவறுக்குக் கழுவாயாக, கொல்லப்பட்ட மலையரைய வெளிச்சப்பாட்டை தெய்வமாக்கி ஒரு சிலை செய்து, ஒரு சிறுகோவில் கட்டிக்கொடுக்கிறார்கள். தாலஞானியின் வாரிசு ஒருவர் அக்கோவிலுக்கு பூசகராக அமர்கிறார். எனினும், ஹென்ரி பேகர் என்ற போதகரின் முயற்சியில் தாலனானியின் எல்லா வாரிசுகளும்  கிறிஸ்தவர்களாக மதம்மாறி விட்டார்கள். இறுதியாக  வழிபட்ட வாரிசும் அந்தச் சிலை, வாள், சிலம்பு உள்ளிட்ட வழிபாட்டுப்பொருட்களை இன்னொரு பாதிரியாரான டபிள்யூ ஏ ரிச்சர்டிடம் 1881இல் கொடுத்துவிட்டார்." 

சாமுவேலின் நூலிலுள்ள செய்தி இத்தனையும் தான்.  இந்த நூல்,  ஐயப்பனின் வாகனமாக புலியையும், கூடவே யானையையும் சொல்லும் தகவல் சிறப்பிடம் பெறுகின்றது. ஐயப்ப வழிபாட்டில் மலையரையர் மற்றும் ஈழவர் குடிகள் கொண்டிருந்த தொடர்பும் இந்நூலில் உறுதிப்படுத்தப்படுகிறது. ஐயப்பன் வேட்டைத்தெய்வம் என்றும் சாஸ்தாவு எல்லைத்தெய்வம் என்றும் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளதையும் நாம் ஊன்றி நோக்கவேண்டும்.

திருவிதாங்கூரும் பந்தளமும்
பிரித்தானியக் குறிப்புகளைத் தவிர, பந்தள மன்னர்கள் பற்றிய இரு குறிப்புகளும் இக்காலவேளையில் முக்கியம் பெறுகின்றன. திப்பு சுல்தானுக்கு எதிராக திருவிதாங்கூர் அரசு மேற்கொண்ட படையெடுப்புக்கு உதவித்தொகையாக அல்லது கப்பமாக, பந்தள அரசு சுமார் 2 இலட்சம் பெறுமதியான பணத்தைக் கொடுக்கவேண்டி இருந்தது. எனினும் அதைக் கொடுக்கமுடியாமையால் 1820இல் திருவிதாங்கூர் அரசிடம் தமக்கு வருமானம் அளிக்கின்ற தலமான சபரிமலையை ஒப்படைக்க நேர்ந்ததாக பந்தள அரசின் இக்கால சந்ததிகள் கூறிக்கொள்கிறார்கள் (Ayyappan 2018). அதே காலப்பகுதியிலேயே சபரிமலைப் பகுதியை மதிப்பாய்வு செய்த வார்டு, அங்கிருந்த குடில் முன்பு பந்தள ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததையும் தன் காலத்தில் அங்கு (திருவிதாங்கூர்?) அரசின் பணியாளர்களே இருப்பதையும் பதிவு செய்துள்ளார் என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

சபரிமலையிலுள்ள வாவர் சுவாமி நடை. (நன்றி: 'East Coast Daily' web)

இவற்றையெல்லாம் தவிர, வாவரின் வழியில் வந்ததாக உரிமைகோரிய ஒரு குடும்பத்தினர், சபரிமலை மீதான தமது பூசையுரிமையை நிலைநாட்ட கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்று கொல்லம் ஆண்டு 884 (பொ.பி 1708) இல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது (Sadasivan 2000:129). இந்த ஆவணம் எத்தகையது; இதில் சொல்லப்பட்ட தகவல் என்ன என்பது பற்றிய யாதொரு விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

1902  தீவிபத்தும் சிலை பிரதிஷ்டையும்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, சபரிமலை தொடர்பான சமகாலச் சான்றுகள் ஓரளவு தொடர்ச்சியாகக் கிடைத்தபடி இருக்கின்றன. அவற்றில் 1902இல் இடம்பெற்ற தீவிபத்து முக்கியமானது. இவ்விபத்தில் கோவிலின் பெரும்பாகம் சிதைந்தழிந்து போனதாகத் தெரிகின்றது (Daushanti & Panchajanyaa 2018).

கருவறையில் இருந்த ஐயப்பனின் திருவுருவத்தில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் அடுத்து முக்கியம் பெறுகின்றது. கொல்லம் ஆண்டு 1085இல் (பொ.பி 1910) அந்தப் பிரதிஷ்டையானது, பிரபாகர ஆச்சாரியாரால் செய்யப்பட்டதாக அச்சாசனம் சொல்கின்றது (Rao 1988:210). இதுவே ஐயப்பனின் முதலாவது உலோக வார்ப்பாகலாம். மேற்படி 1902இல் கோவில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பின் அங்கு இடம்பெற்ற திருப்பணிகளில் ஒன்றாகவே இந்த சிலை வார்ப்பைக் கொள்ளமுடிகின்றது. எனினும் இச்சிலை மீண்டும் 1950இல் கோவில் எரிக்கப்பட்டபோது சேதமானது.

1950 கோவில் எரிப்பு
இதை அடுத்து, சபரிமலை வரலாற்றில் முக்கியம் பெறுவது,  1950இல் நிகழ்ந்த கோவில் எரிப்பு. திட்டமிட்ட சதியாக அமைந்த இவ்வெரிப்பில் கோவிலின் கதவுகள், ஐயப்பன் திருவுருவம் என்பன கடுமையாகச் சேதமடைந்தன (OnManorama Web 2018).  இச்செயலின் சூத்திரதாரிகள் யாரென்பது இன்று வரை மர்மமாகவே இருக்கும் போதும், அப்போது சபரிமலை அருகே நிலங்களை வாங்கியிருந்த கிறிஸ்தவர்கள் (Daushanti & Panchajanyaa 2018) அல்லது தமிழர்கள் (Kjærholm 1984:5) இந்தச் சதியைச் செய்திருப்பார்கள் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. முரண்நகையாக, சபரிமலை மேலும் புகழ்பெறவும், தமிழரின் விருப்பத்துக்குரிய முதன்மைத் தெய்வமாக மாறவும், இந்த 1950 கோவில் எரிப்பே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

1950  சிதைப்பில் பின்னப்படுத்தப்பட்ட ஐயப்பன் திருவுருவமும் கோவிலும்
(நன்றி: 'My India My Glory' Web)

டென்மார்க்கின் மானுடவியல் ஆய்வாளரான லார் கியேர்கொல்ம் (Lars Kjærholm), தமிழகத்தில், குறிப்பாக மதுரைப்பகுதியில் 1940களுக்கு முன்பு ஐயப்ப வழிபாடு அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் (Kjærholm 1984:2-4). 1950 சபரிமலை தீவைப்பில் தமிழருக்கும் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு கழுவாய் தேடவேண்டுமென்று சில மதுரைவாசிகள் சிந்தித்தமை பற்றி அவர் தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் விவரிக்கின்றார். அவர்களில் முதன்மையானவர் தீவிர இறையன்பரான பி.டி.ராஜன்  என்று சுட்டிக்காட்டும் கியேர்கொல்ம், அவர் பின்னப்பட்ட ஐயப்பன் சிலைக்குப் பதிலாக புதிய சிலை செய்துகொடுப்பதில் முன்னின்றதையும், மதுரைப்பகுதி முழுவதும் ஐயப்ப வழிபாட்டுச் சங்கங்கள் பரவலடைவதற்கு காரணமாக இருந்ததையும் மேலும் குறிப்பிட்டுள்ளார் (Kjærholm 1984:4-6). இவ்வாறு உருவாக்கப்பட்டு இன்று சபரிமலையில் நிறுவப்பட்டுள்ள புதிய மூலவர் சிலை. தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு, செங்கன்னூரில் வசிக்கும் தட்டாவிழா குடும்பத்தைச் சேர்ந்த இரு சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டதாகும் (Sabarimalai Melsanthi Web n.d)

1975இல் தமிழ் -  மலையாளம் இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 'சுவாமி ஐயப்பன்' எனும் திரைப்படம் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைக்கிறது. மேற்படி "சுவாமி ஐயப்பன்" திரைப்படத்தில் தான் புகழ்பெற்ற ஐயப்பன் தாலாட்டான 'ஹரிவராசனம்' ஜி.தேவராஜன் இசையில் ஜேசுதாசால்  பாடப்படுகிறது. கும்பக்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பாடல், அத்திரைப்படம் வெளியான 1975இற்குப் பின் சபரிமலையில் தினமும் நடை அடைக்கும் போது ஒலிபரப்பப்படுவது கோவிலின் வழமையாகின்றது (MyNation 2018). அண்மையில், இப்பாடலைப் பாடியவர் ஸ்ரீநிவாச ஐயர் அல்ல; தனது பாட்டனாரின் தமக்கை 'கொன்னக்காது ஜானகி அம்மா' தான் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் திரு.பத்மகுமார் உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது (Kuttoor 2018

தொடர்ந்து,  தமிழகத்தை ஐயப்ப பக்தி அலை மிக வேகமாகத் தாக்க ஆரம்பிக்கின்றது. திரையுலக நட்சத்திரங்களான நம்பியார், பாடகர் கே.ஜேசுதாஸ் போன்றவர்கள் முன்னணியில் நிற்க, ஐயப்ப வழிபாடு பொதுமக்களை தீவிரமாகச் சென்றடைகிறது. தமிழகமெங்கும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் கோஷம் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

மகரவிளக்கு
பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு

சபரிமலை தொடர்பான முக்கியமான இன்னொரு நிகழ்வு, 2000களின் பிற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மகரவிளக்கு சர்ச்சை.  அதுவரை மகரவிளக்கு அல்லது மகரஜோதி என்பது, மகர சங்கிராந்தி அன்று,  பொன்னம்பலமேட்டில் கணநேரம் தோன்றி மறைகின்ற நட்சத்திரம்  என்றே அடியவர்களால் நம்பப்பட்டு வந்தது. 1990 மற்றும் 2011 மகரவிளக்கு  தரிசனங்களின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, மகரவிளக்கு அற்புதமல்ல; மனிதச்செயலே என்பதை கேரள அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முற்போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில், சபரிமலை மேல்சாந்தியான கண்டரரு மகேஸ்வரரும் அதை அடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் அது மனிதர்களால் உண்டாக்கப்படுவது தான், கேரள மின்வாரியப் பணியாளர்களே மகர விளக்கை பொன்னம்பலமேட்டில் ஏற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர் (Kuttoor 2011).

மலையரையரும் நம்பூதிரிகளும்
மகரவிளக்கு தொடர்பான உண்மை வெளியான பின்னணியில்,  சபரிமலையில் மறக்கப்பட்ட சில விடயங்கள் வெளிவர ஆரம்பித்தன. சபரிமலையில் இன்று மேல்சாந்திகளாக இருப்பவர்கள், செங்கன்னூர்  முந்தன்காவு பகுதியைச் சேர்ந்த 'தாழமோன் மடம்' எனும் குடும்பத்து நம்பூதிரிகள். சபரிமலை தமது வழிபாட்டுத்தலம் என்றும்,  1902்இல் பந்தள அரசு தம்மை சபரிமலையிலிருந்து வெளியேற்றி, தாழமோன் மடம் நம்பூதிரி குடும்பத்தை ஆந்திரத்திலிருந்து வரவழைத்து பூசைக்கு அமர்த்தியது என்றும் மலையரையர்கள் சொல்கிறார்கள் (Rakesh 2018;  Konikkara 2018). இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், மலையரையரின் இந்த வெளியேற்றத்துக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும்.

எனினும் மகர விளக்கை ஏற்றும் உரிமை மாத்திரம் அவர்களால் சபரிமலைக்கு வழங்கப்படும் ஒரு மரியாதையாக  தொடர்ந்து வந்திருக்கிறது.  மகரவிளக்கேற்றும் வழக்கம் 55 ஆண்டுகளாகவே கேரள அரசிடம் இருப்பதாகவும், அதற்கு முன் சபரிகிரி நீர்மின் திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மலையரையர்  பழங்குடியினரே மகரவிளக்கேற்றி வந்ததாகவும், கேரள அரசு நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. (The Hindu 2011)

சபரிமலை ஐயப்பனுக்கு தேனபிஷேகம் செய்யும் உரிமை தமக்கு இருந்தது என்றும் தற்போது அது நெய்யபிஷேகமாக மாற்றமுற்றிருக்கிறது என்றும் கூறுகின்ற மலையரையர்கள்,  தமக்கென்றிருந்த வெளிச்சப்பாடு கட்டுச்சொல்லும் வழக்கமும் 1950இற்குப் பின் ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் (Sudheesh 2018). மேலே பிரித்தானியக் குறிப்பில் 1800களை அண்டி வாழ்ந்த தாலனானி எனும் ஐயப்ப வெளிச்சப்பாட்டை இங்கு நாம் நினைவுகூரலாம். மகரவிளக்கு பற்றிய உண்மை வெளியான பின், மீண்டும் தமக்கு பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கேற்றும் உரிமை தரப்பட வேண்டும் என்று மலையரையர்கள் நீதிமன்றம் ஏறியிருந்தார்கள் (Varier 2016).

ஒட்டுமொத்த வரலாற்றுச்சுருக்கம்
இப்படி தொன்மங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து சபரிமலையின் ஒட்டுமொத்த வரலாற்றை நாம் இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

சபரிமலையில் இருந்த ஐயப்பன் கோவில், மிகப்பழைமை வாய்ந்தது.  சாதிபேதமின்றி நிறையக்குலங்கள் அங்கு சாஸ்தாவை வழிபட்டு வந்திருக்கிறார்கள். மலையரையர்கள், ஈழவர்கள் முதலிய குலங்கள் அதில் முதன்மை வகித்தாலும், பிற்காலத்தில் அப்பகுதியை ஆண்ட பந்தள மன்னர்கள் வசம் அக்கோவில் உரிமை சென்றிருக்கிறது. பாண்டியர் கோமரபில் வந்த பந்தள மன்னர்கள், இவ்வாறு இங்கு வந்தது சுமார் 12ஆம் நூற்றாண்டளவில் என்று சொல்லப்படுகிறது. எனினும், அவர்களிடம் நிலவும் பழங்கதையொன்றில் மதுரை திருமலை நாயக்கருடனும் பாண்டிநாட்டு மறவர்களுடனும் இவர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு நினைவுகூரப்படுவதால், இவர்கள் 17ஆம் நூற்றாண்டளவில் பந்தளத்தில் குடியேறியிருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும்.

பந்தள அரசின் ஆரம்பக் காலத்தில் அவ்வரசால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மணிகண்டன் எனும் மலையரையர் குல இளைஞன், கிழக்கே ஏற்பட்ட மறவர் அல்லது தமிழர் ஆக்கிரமிப்பொன்றிலிருந்து சபரிமலைப் பகுதியை காப்பாற்றியிருக்கிறான். அம்முயற்சியில் அவன் காதலியும் நண்பர்களும் மரித்ததால், அல்லது வேறு காரணங்களால், அவன் துறவு பூணுகிறான் அல்லது யாரும் அறியாமல் இலங்கை செல்கிறான். அவனது செயற்கருஞ்செயல்களால் அவனை சாஸ்தாவின் அவதாரம் என்று குடிகள் சபரிமலையில் வழிபட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் காதலி பூங்கொடி அவனருகிலேயே மாளிகைபுரத்தம்மையாகக் கோவில் கொள்கின்ற போதும், அவனை நெருங்கவும் வழிபடவும் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவனது களரி ஆசானும், இஸ்லாமிய நண்பனொருவனும் முறையே கடுத்தசுவாமி, வாவர் சுவாமி என்ற பெயர்களில் கோவில் கொள்கிறார்கள்.  இறுதியில் மணிகண்டனே ஐயப்பன் கோவிலின் மூலவரும் ஆகின்றான்.  


மலையரையர்களால் பொன்னம்பலமேட்டில் செய்யப்பட்ட விளக்கு வழிபாடு, மகரவிளக்கு எனும் சடங்காக வளர்ந்து சபரிமலையின் திருவிழாவாக மலர்கிறது. தொடர்ந்தும் சாதிபேதமின்றி பல குலங்கள் அவ்விழாவில் கலந்து கொள்கின்றன. தெற்கே திருவிதாங்கூர் அரசு பலம் வாய்ந்ததாக வளர்ச்சி கண்டபோது, பந்தள அரசு அதற்கு கீழ்ப்படிய நேரிட்டதுடன், ஒரு கட்டத்தில் சபரிமலையையும் அவ்வரசின் வசம் கையளிக்கவேண்டி ஏற்பட்டது.  


கேரளத்தின் எல்லா நாட்டார் தெய்வக் கோவில்களும் போலவே, சபரிமலையிலும் பிற்காலத்தில் நம்பூதிரிகளின் பூசனை ஏற்(கப்)பட்டிருக்கிறது. மலையரையர்கள் கோவிலிலிருந்து விலக்கப்பட்டு  தாழமோன் மடத்து நம்பூதிரிகள் பூசகர்களாக அமர்த்தப்படுகிறார்கள். இந்த முரண்பாட்டுக்கும் 1902 தீவிபத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கக்கூடும். கேரள மேல்சாந்திகளில் முதலாமவர் என்று கருதக்கூடிய கண்டரரு பிரபாகரரால் ஐயப்பனின்   திருவுருவம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவிதாங்கூரிலிருந்து கிழக்குப்புறமாக பாண்டிநாட்டிலும் ஐயப்ப வழிபாடு அறிமுகமாகின்றது. கோவில் தொடர்பில் முரண்பட்ட ஒரு குழுவினரால் 1950இல் கோவில் தீவைத்து சிதைக்கப்படுகிறது.  அது அக்கோவிலை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்தி, கோவிலின் பிரபலத்தை அதிகரிக்கிறது. திரைப்படங்கள், திரையுலக நட்சத்திரங்கள் என்போரால் சபரிமலை மேலும் புகழ் பெறுகிறது. ஐயப்பன் கலியுக வரதனாக தென்னகம் தாண்டி வளர்ந்தெழுகின்றான்.


சபரிமலை வரலாறு தொடர்பாக, நம் முன் இன்னும் சில கேள்விகள் பேருரு எடுத்து நிற்கின்றன.

1. ஐயப்பன் வரலாற்றில் சாஸ்தா தொடர்புறுவதைக் காணமுடிகின்றது. தமிழகத்தின் ஐயனாருடனும் அவரை அதிகம் தொடர்புபடுத்துகிறார்களே, இது சரியா?
2. வெறும், ஊடகப் பரப்புரை மாத்திரமே ஐயப்ப வழிபாட்டை ஊக்குவிக்கப் போதுமானதாக
இருந்திருக்குமா? ஐயப்பன் பிரபலமடைந்ததன் பின்னணியில் இருந்த வேறு வரலாற்றுக் காரணிகள் என்னென்ன?
3. இப்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூல்தகவு மகளிரின் கோவில் நுழைவு பற்றிய முடிவு எத்தகையதாக இருக்கவேண்டும்?

இவை இன்னும் முக்கியமான, சற்று ஆழமான கேள்விகள். இவற்றைப் பற்றி அடுத்த பதிவில் சற்று ஆறுதலாக விரிவாகப் பார்ப்போம்.



உசாவியவை:

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner