தினக்குரல் செவ்வி

"அலகிலா ஆடல் : சைவத்தின் கதை" என்ற உங்கள் நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் பெயர் பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் கூற முடியுமா?

தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், சைவ சித்தாந்த முன்னோடியான ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை பற்றிய கட்டுரையொன்றில், சிவசக்தியின் முடிவிலா நடனம் எனும் சைவக் கோட்பாட்டை விவரிக்க இந்த “அலகிலா ஆடல்” என்ற சொல்லாடலை எடுத்தாள்கிறார். சிறு வயதிலிருந்தே "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்ற பெரியபுராண வரிகள் ஏற்படுத்திய ஆர்வ உந்துதலே இப்பெயரைச் சூட்டவேண்டி நேர்ந்தது. நூலின் ஐந்து அத்தியாயங்களையும் ஐந்தொழில்களாலேயே அழைக்கலாம் என்ற சிந்தனை ஏற்பட்டதும் இந்நூல் இயல்பாக சிவநடனத்தை நோக்கியே செல்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் இருந்தது.  சிவனின் எல்லையற்ற திருவிளையாடல், முடிவற்ற நடனம் என்ற கோணத்தைக் காணும் எவருக்கும், அந்நடனம், அந்த ஆடல், இந்நூல் விவரிக்கும் சைவத்தின் வரலாற்றோடு எப்படிப் பொருந்துகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

“அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூலில் எத்தகைய விடயங்களை முக்கியமாகக் கூறியிருக்கிறீர்கள்?

நம்மைப் பொறுத்தவரை தொன்மங்களின் தொகுப்பைத் தான் வரலாறு என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் உலகம் கறாராக முன்வைக்கும் வரலாற்றை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்தை நாம் இன்னும் வந்தடையவில்லை. "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" அத்தகைய ஒரு முயற்சியே. முற்றுமுழுதாக சைவத்துக்கு வெளியே நின்று, சைவத்தின் வரலாற்றை ஆதாரபூர்வமாக - புறவயமாக கூற முற்படுகிறது. சைவத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, அது ஆசிய உலகில் பெற்ற வெற்றி, ஏனைய சமயங்களுடன் அதன் முரண், மற்றும் அதன் சமகால - எதிர்காலப் போக்கு என்பவற்றை விவரிக்க முயன்றிருக்கிறது.

தொன்மங்கள் என்று நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

தொன்மங்கள் என்பவை ஒரு சமூகத்தில் பண்டுதொட்டே நிலவிவரும் புராணங்கள், இதிகாசங்கள், கர்ணபரம்பரைக் கதைகள் ஆகியவையே.

உதாரணமாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாசமாலை, வையாபாடல் என்பன வட இலங்கை சார்ந்த தொன்ம இலக்கியங்கள். கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்பன கிழக்கிலங்கை சார்ந்த தொன்ம இலக்கியங்கள். தொன்மங்களில் இடைச்செருகல்களும் பிற்சேர்க்கைகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே எந்த வரலாறும் தொன்மமாக மாறலாம். ஆனால் எல்லாத் தொன்மமும் வரலாறு ஆக முடியாது. 

சூழலில் ஏற்படும் ஏதோ ஒரு தூண்டலால் தான் தொன்மங்கள் உருவாகின்றன என்பதால் அவை முழுக்கப் பொய்யானவை என்றோ வரலாற்றில் ஒதுக்கவேண்டியவை என்றோ முடிவெடுக்கவேண்டியதில்லை. ஆனால் அவற்றிலுள்ள அமானுஷ்ய நிகழ்வுகளையும் காலப்பிழை கொண்ட சம்பவங்களையும் அறிவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்த பின்னரே வரலாறாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நூல் சைவம் சார்ந்த தொன்மங்களை அப்படித் தான் அணுக முயன்றிருக்கிறது.

உங்கள் ஆய்வினூடாக, சைவம் மிகப்பழைய சமயம் என்பதைக் கூறியிருக்கிறீர்கள். மனிதனின் தொல்வரலாற்றிலே சைவத்தின் தோற்றம் எத்தகையதாக இருந்திருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

மனிதனின் தொல்வரலாற்றை கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் என்று மூன்று காலங்களின் தொகுப்பாகக் காண்பது மானுடவியலின் ஒரு தொகுப்புமுறை. கற்காலம் என்பது அண்ணளவாக பொ.மு 2000 ஆண்டில் முடிவடைகிறது. அதில் துவங்கும் வெண்கலக்காலம், பொ.மு 1200 அளவில் முடிவடைகிறது. பொ.மு 1200 அளவில் இரும்பு கண்டுபிடிக்கப்படுகிறது. 

சைவத்தின் மிகப்பழைய சான்றான ‘முந்துசிவன் முத்திரை’ கிடைக்கும் ஹரப்பா நாகரிகக் காலம், வெண்கலக்காலத்தில் அடங்குகின்றது, கற்காலச் சான்றுகளில் சிவலிங்கத்தின் மூலங்களில் ஒன்றாக ஆய்வாளர்கள் ஊகிக்கும் நடுகற்கள், கற்படுக்கைகள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்னாசியாவில் 8000 முதல் 5000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலவீச்சில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. மரபார்ந்த சைவத்தில் சிவனை அடிமுடி காண முடியாதோன் என்றே சொல்லுவார்கள். வரலாற்று ரீதியிலும் சிவன் எனும் கடவுள் இந்த ஆண்டு இந்தக் காலத்தில் தோன்றினான் என்று உறுதியாகக் கூறமுடியாது. மானுட வரலாற்றில் அவனுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உள்ளது என்பதொன்றே நாம் கூறக்கூடியது. 

சைவத்தின் திருத்தமான தோற்றம், எங்கே எவ்வாறு ஆரம்பமாயிருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவா?

சைவம் பற்றிய மிகப்பழைய தொல்பொருள் சான்றுகள் நான்கு புவியியல் பிராந்தியங்களில் சிற்சில வேறுபாடுகளுடன் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிடைத்த "யோகி" அல்லது ‘முந்துசிவன் முத்திரை’ அவற்றில் முதன்மையானது. சிந்துவெளிக்கு அருகே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் கிடைத்த மூன்று தலைகளைக் கொண்ட மிகப்பழைய சிவன் உருவங்கள் இரண்டாவது தொகுதி. இந்த முத்தலைச் சிவன் "ஒய்ஷோ" அல்லது ஈசன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். 

வேதங்களில் காணக்கிடைக்கும் உருத்திரன் எனும் தெய்வமும் வட இந்தியாவில் கிடைக்கும் பழைமை வாய்ந்த சிவ வழிபாட்டுச் சான்றுகளும் சமஸ்கிருத இலக்கியக் குறிப்புகளும் மூன்றாவது தொகுதி. தமிழ்நிலத்திலும் தெற்கே இலங்கையிலும் கிடைக்கும் சங்க இலக்கியச் சான்றுகள், பிராமிக்கல்வெட்டுகள், பழைய நாணயங்கள், என்பன நான்காவது தொகுதி. இவை நான்கும் சமகாலத்தில் தோன்றியவையா அல்லது சைவம் ஏதேனும் ஓரிடத்தில் தோன்றி ஏனைய இடங்களுக்குப் பரவியதா என்பது மேலதிக ஆய்வுக்குரியது. எல்லா சைவ மரபுகளும் சிவனை கயிலை சார்ந்தே அடையாளம் காண்பதால் இமயமலைச் சாரலிலே ஒரு பழங்குடிச் சமயமாக சைவம் தோன்றி, ஏனைய இடங்களுக்குப் பரவியிருக்கலாம் என்பது என் ஊகம்.

ஆரியர், திராவிடர் வருகைக்கும் சைவத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்க முடியுமா ?

ஒரு பண்பாட்டு - மொழியியல் அடையாளப்படுத்தலுக்கு வெளியே ஆக்கிரமிப்பு, அடிமைப்படுத்தல் சார்ந்ததாக முன்வைக்கப்படும் ஆரிய - திராவிட கருத்துருவாக்கத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆபிரிக்காவே மனிதகுலம் தோன்றிய கண்டம் என்ற கருதுகோள் உண்மையெனில் ஆரியர், திராவிடர் என்று இன்று இனங்காணப்படும் யாவருமே அங்கிருந்து வந்து தான் இங்கு குடியேறி இருக்க முடியும். வேண்டுமென்றால் ஆபிரிக்காவிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்கு இடம்பெயர்ந்த முதல் புலம்பெயர் குழுக்களை திராவிடர் என்றும் அவர்களுக்கு சிறிது காலம் பின்பு இடம்பெயர்ந்த குழுக்களை ஆரியர் என்றும் இனங்காணலாம். அதைத்தவிர்த்து இன்றுள்ள நிறவாதம், இன மேலாதிக்கவாதம் என்பவற்றோடு இணைத்து ஆரிய - திராவிட வாதம் பேசுவது அறியாமை. ஹரப்பா நாகரிகம், வேதகாலம் என்பன ஒன்றோடொன்று மேற்பொருந்தியவை என்பதால் ஆரியர் - திராவிடர் யாவரினதும் கடவுளாகவும் சிவன் விளங்கியிருந்திருக்கிறான் என்பதே நாம் எடுக்கக்கூடிய முடிவு. எனினும் வேதகாலத்து ஆரியருக்கு அப்போதிருந்த சிவனான "உருத்திரன்" மீது ஒவ்வாமை இருந்ததும் அது இன்று வரை சைவம் மீதான வைதிகத்தின் கசப்பாக வெளிக்காட்டப்படுவதும் மறுக்கமுடியாத உண்மைகள் தான்.

சைவம் பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் சுவாரசியமாகவும் புதுமையானவையாகவும் உள்ளன. இந்தத் தகவல்களை எந்தெந்த நூல்களிலிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?

உண்மையில் அறிவியல் கோணத்தில் சைவம் மீது செய்யப்படும் ஆய்வுகள் தற்போதும் தொடர்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. சமகால மேலைத்தேய ஆய்வாளர்களின் ஆய்வுநூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் சைவத்தின் வரலாறு, வளர்ச்சி பற்றி பல புத்தம்புதுத் தகவல்களுடன் தொடர்ந்தும் வெளிவந்தபடியே இருக்கின்றன. இவர்களில் சைவம் சார்ந்த சில மேலைத்தேய அறிஞர்களைக் குறிப்பாகச் சொல்வதென்றால், பேராசிரியர் அலெக்சிஸ் சாண்டர்சன், பேராசிரியர் மார்க் டிக்ஸ்கவுஸ்கி, பேராசிரியர் டொமினிக் குட்டோல், பேராசிரியர் டேவிட் என்.லொரன்சன் முதலியோரை முக்கியமாகப் பட்டியலிடலாம். இந்த ஆய்வாளர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலின் ஆக்கத்தில் உதவியிருக்கின்றன. இந்த ஆசிரியர்களின் நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இணையத்திலே கூட இலவசமாகக் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடிப்படிக்கலாம்.

சைவ சமயம் வேறு, இந்து சமயம் வேறு என்று முரண்பாடான கருத்துகள் இலங்கையில் அடிக்கடி எழுவதுண்டு. இதை எந்தக்கோணத்தில் பார்க்கிறீர்கள்?

முதலில் இந்து சமயம் என்பது ஒரு தனிச்சமயம் அல்ல; இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய பல சமயங்களின் தொகுப்பு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். "சமயம்" என்ற இன்றைய வரையறையை நோக்கும் போது சைவம், வைணவம் முதலிய பிரிவுகளை சமயம் என்று சொல்ல முடியுமே தவிர இந்து என்ற பொது அடையாளத்தை ஒரு "சமயம்" என்று கூறமுடியாது.

அந்த விதத்தில் இந்து சமயம் என்பதை சைவம், வைணவம், சாக்தம், சுமார்த்தம், புத்திந்துக் குழுக்கள், பிற மரபான இந்துக்கள் எனும் ஆறு பிரிவுகளின் தொகுப்பாகக் காண்பதும் நம் பொது அடையாளத்தை "இந்து சமயங்கள்" என்றும் கொள்வதே பொருத்தமானது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்றும் மரபான சைவப்பிரிவுகள். சுமார்த்தம் என்பது சங்கர மடத்தைப் பின்பற்றும் அத்துவைதப் பிராமணர்களை உள்ளடக்கும். புத்திந்துக்குழுக்கள் என்பது சமகால இந்து மறுமலர்ச்சி அமைப்புகளையும் பிற மரபிந்துக்கள் என்பது இந்துவாக தம்மை அடையாளப்படுத்தும் ஏனைய இந்துக்களையும் குறிக்கும். பிற மரபிந்துக்களில் இந்தோனேசிய – வியட்நாமிய - ஆபிரிக்க இந்துக்களையும் இந்தியப் பழங்குடிகளையும் ஏனைய ஐந்து பிரிவுகளிலும் அடங்காத எஞ்சியுள்ள இந்துக்களையும் அடக்கலாம். 

புத்திந்துக் குழுக்கள் என்று நீங்கள் வரையறுப்போரைப் பற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா, அவர்களின் இன்றைய தேவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட குருதேவரை ஆசாரியராக வரிந்துகொண்டு அவரை இறைவனின் அவதாரமாக வழிபடுகின்ற இந்து மறுமலர்ச்சி அமைப்புகளே புத்திந்துக் குழுக்கள் (Neo – Hindu Groups). உதாரணமாக சாயிபாபா, அம்மா பகவான், மேல்மருவத்தூர் அம்மா, ஈஷா, ஹரே கிருஷ்ணா, நித்தியானந்தா, இராமகிருஷ்ண மிஷன், சின்மயா மிஷன் போன்றோரின் அமைப்புக்களைக் கூறலாம். சில புத்திந்துக் குழுக்கள் மீது எனக்குத் தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால், அவர்கள் காலத்தின் தேவை கருதியே உருவாகியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். 

இன்றைய இந்துக்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்டல் வழங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அதைச் செய்வதும் இல்லை. அதன் விளைவே புத்திந்துக்குழுக்களின் பெருக்கம். மரபான நெறிகளான சைவமோ வைணவமோ சமகாலத்துக்கு ஏற்ற விதத்தில் தங்களை இற்றைப்படுத்திக் கொண்டு (update) தங்கள் பின்பற்றுநர்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவு வளர்ந்திருந்தால் புத்திந்துக் குழுக்கள் தோன்றியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது என் புரிதல். 

சமகாலத்தில் சைவத்தின் தேவை அல்லது முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துன்பத்தில் திட்டுவதற்கும், இன்பத்தில் போற்றுவதற்கும் இறைவன் என்ற ஒருவன் இல்லாவிட்டால், விரக்தியிலும் வேதனையிலும் நாம் எல்லோரும் எப்போதோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகி இருப்போம். இன்று நம் சமூகத்தில் தற்கொலைகளும் மனநலப் பாதிப்பும் அதிகரித்திருப்பதற்கு முக்கியமான காரணம், சமயம் சார்ந்த உளவியல் ஆற்றுப்படுத்தல்களோ, ஆன்மிக வழிகாட்டல்களோ எங்குமே நிகழ்த்தப்படுவதில்லை என்பது தான். இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களால் உறவுகளை இழந்தோரும் தனிமையில் வாழ்வோரும் அந்தத் துயரிலிருந்து மீண்டு வருவதற்கு இன்று சமயமே கைகொடுப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

திருவிழாக்கள், பண்டிகைகள், நோன்புகள் சமூக உறவாடலை வலுப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. எல்லா மிருகங்களுமே கடவுளரின் வாகனங்கள், எல்லா மரங்களுமே தெய்வங்களின் உறைவிடங்கள், எல்லா நீர்நிலைகளுமே தீர்த்தங்கள் என்றெல்லாம் உருவகித்திருக்கும் நம் சமயம் போல, உயிர்ப்பல்வகைமைக்கும் வளங்களின் நீடித்து நிலைத்திருக்கைக்கும் கைகொடுக்கும் சமயம் வேறு எது? இப்படி சைவத்தின் முக்கியத்துவம் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது.

(யனவரி 20, 2018 ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திரு.பாக்கியராஜா மோகனதாஸ் கண்ட செவ்வி)


0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner