யாழ் புத்தகத் திருவிழா : நாலு விடயம் சொல்வேன்

0 comments
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அனுசரணையில், இம்முறை யாழ் புத்தகத் திருவிழா ஓகஸ்ற் 27 முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.அதில் கடந்த ஓகஸ்ற் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சில மணித்துளிகளைக் கழிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது கண்ட அவதானிப்புகளிலிருந்து இந்தக் கருத்துக்கள்.

படம் மூலம்: tamil.news.lk


நான்கு குறைகள்:
- காட்சிப்படுத்தல் (பலர் பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமற்ற நூல்கள், ஒதுக்குப்புறமான இடங்களில் முக்கியமான நூல்கள்)
- ஒழுங்கான வகைப்படுத்தலின்மை, குழம்பிக் கிடந்த நூல்கள்.
- சிறுவர் நூல்கள், பாடநூல்களுக்கான முன்னுரிமை (அவை முக்கியம் தான்; அவை மட்டுமே முக்கியம் அல்ல)
- அவிழ்க்கப்படாத பொதிகளில் அகப்படாமல் போன அநாமதேய நூல்கள்.


நான்கு நிறைகள்:
- சகல வயதினரும் உள்ளடங்கலாக, மூச்சு விட முடியாமல் நிரம்பி வழிந்த கூட்டம். (நான் சென்றது வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில்) 
- அனைத்து விதமான முக்கியமான நூல்களும் நிறைந்திருந்த பல அரங்குகள்.
- இளைஞர்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி சர்வசாதாரணமாக காதில் விழுந்து கொண்டிருந்த டோல்ஸ்டோய், தஸ்தயவ்ஸ்கி, சாரு, ஜெமோ, எஸ்ரா, மனுஷ், தேவதச்சன் முதலிய சொற்கள். (நான் நின்றிருப்பது யாழ்ப்பாணத்தில் என்பதை, ஒரே நேரத்தில் அயலவனாகவும் பெருமிதத்துடனும் எண்ணிக்கொண்டேன்.) 
- ஊடே இடம்பெற்றுக்கொண்டிருந்த சிறகுகள் அமையத்தின் 'நூல் தானம் செய்யுங்கள்' முன்னெடுப்பு. 


நான்கு கருத்துக்கள்:
- குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடநூல்கள், பயிற்சிநூல்கள் என்பவற்றை மட்டும் காட்சிப்படுத்தும் அரங்குகளை தவிர்க்கத்தேவையில்லை; ஆனால் அடுத்த ஆண்டுகளில் குறைக்கலாம். வாசிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே புத்தகத்திருவிழாக்களின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.


- ஆற அமரக் கவனிக்க முடியவில்லை என்றாலும், பிரிட்டிஷ் கவுன்சிலின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு சிறப்பாக இருந்தது. பெரியவர்களுக்கு, கொழும்பு சர்வதேச புத்தகக்கண்காட்சியில் இடம்பெறும், இலக்கியவாதிகளின் சந்திப்புகள், உரையாடல்கள், கலைநிகழ்வுகள் என்பன, நல்ல இளைப்பாறலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்படி எதையும் இங்கு ஒழுங்கு செய்திருந்தார்களா தெரியவில்லை. அடுத்தடுத்த முறைகளில் முயலலாம். (ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் பற்றித் தெரிந்திருப்பதால் கொஞ்சம் பீதியோடு தான் இதைப் பரிந்துரைக்கிறேன். )


- புத்தகத்தின் உள்ளடக்கப் பெறுமதியை விட விலைப்பெறுமதியைப் பார்ப்பவர்கள் தமிழர்கள். நூல் விற்பனைத் துறை பொதுவாக இலாபகரமான துறை இல்லை தான் என்றாலும், இது போன்ற நிகழ்வுகளிலாவது வெளியீட்டகங்கள் கொஞ்சம் கூடிய விலைக்கழிவைக் கொடுக்கலாம். விலைக்கழிவுக்குப் பிறகும் பலர் முகம் வாடி நின்றதையும், ஆக்ரோசமாக பேரம் பேசிக்கொண்டிருந்ததையும் பொதுவாகக் கண்டேன். 


- இது எதுவுமில்லாவிட்டாலும், நூல்களை சரியான அறிவித்தல் சுட்டிகளோடு வகைப்பிரித்து ஒழுங்குபடுத்துவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம். குறுகிய நேரத்தில் குறித்த துறை நூல்களை அவசரமாகத் தேடிச் சென்ற என்னைப் போன்றவர்களின் பொறுமையை இது வெகுவாகச் சோதித்தது. வெண்பா அரங்கு மட்டுமே இதில் சிறப்பாக இருந்தது. இன்னொரு அரங்கில், நூலகத்துக்கு தொகையாக புத்தகம் பெற வருபவர்கள் எத்தனை அடுக்கினாலும் கலைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப்பட்டார்கள். அப்படி தொகையாகப் பெற வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களை அல்லது நேரத்தை ஒதுக்கலாம். புத்தகத்திருவிழா வாசகர்களுக்கானது. வ்ழக்கமாக பெருமளவு விற்பனையாகும் ஆன்மிக, ஜனரஞ்சக, சிறுவர் நூல்களைத் தவிர, ஏனைய நூல்களுக்கு வாசகர் மத்தியில் எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதை மதிப்பிட, வெளியீட்டகங்களுக்கும் இந்த வகைப்பிரித்தல் உதவும். 


இறுதியாக,
நான்கு வாழ்த்துக்கள்:
அதிக நல்ல புத்தகங்களைக் கொண்டிருந்த பூபாலசிங்கம்,புக்வின், வெண்பா, குமரன் பதிப்பகங்களுக்கு.
மேலும் வாசிக்க »

கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு

0 comments


ஒரு கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு.
எப்போது என் கையில் வந்தது
என்று தெரியவில்லை
கிழிந்திருக்கிறது என்று
கடைக்காரன் திருப்பித்தந்தான்.
அவனிடம் தான் இறுதியாக
பொருள் வாங்கியிருந்தேன்.
அவனே தான் அதை
எனக்கு தந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எப்படி
அத்தனை விரைவாக
அது கிழிந்திருப்பதை அறிந்தான்?

அதை நினைவு கூர்வதற்குள்
நெடுந்தொலைவு வந்திருந்தேன்.
இந்த ஐநூறு ரூபாய்
மிகவும் உறுத்துகிறது.
வீதியில் அழுதபடி தொடர்ந்து வந்து
பிச்சை கேட்கும் குழந்தை போல.
பேருந்தில் அருகே வந்து நின்று கொண்ட
அழுக்கான முதியவர் போல.
எத்தனை சீக்கிரம் விலகுகிறோமோ
அத்தனை சீக்கிரம் ஆறுதல்.

இரண்டு தடவை அதன் பிறகு
வேறு கடைகளுக்கு சென்றேன்
இரண்டு தடவையும்
அதை கொடுக்க முயன்று தயங்கி
மீண்டும் பையிலே வைத்துக் கொண்டேன்
கிழிந்த நோட்டை நீட்டுவது
அத்தனை பெரிய குற்றமா?
அல்ல;
அதை தெரிந்து கொண்டே கொடுப்பது கூசச் செய்கிறது

பணப்பையை தொடும் போதெல்லாம்
அதன் நினைவே வந்தது.
அதை மறக்க முயன்றேன்.
அப்படி ஒரு பணநோட்டு
என்னிடம் இல்லை என்று
என்னை நம்பவைக்க முயன்றேன்
என் பணப்பையில்
கை தொடாத பகுதியில்
அதை மறைத்துக் கொண்டேன்
ஆம். இப்போது கிழிந்த பணநோட்டு எதுவும் என்னிடம் இல்லை.

இன்று உணவகத்தில்
உணவுண்டு எழும்போது
பணப்பை தவறி வீழ்ந்து விட்டது
ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு நழுவிப் பறந்தது
கட்டணச்சீட்டுடன் வந்த பரிமாறுநர்
புன்னகைத்த படி அதை வாங்கிச் சென்று விட்டார்.

நினைவு வந்துவிட்டது.
அந்த நோட்டு தான்.
புத்தம்புதியது.
மூலையில் அதே சிறு கிழிசல்.
நன்று.
தானே நழுவி விலகிச் சென்று விட்டது.

ஏனோ நிம்மதிக்கு பதில்
சஞ்சலத்தை அடைந்தேன்.
அது என்னால் வெறுக்கப்பட்டது
ஐநூறு ரூபாய் என்பதால் தானே?
ஒரு கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுக்கும்
கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கும்
எத்தனை வித்தியாசம்?
கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டு
கையில் இப்படி பாரமாக இருப்பதில்லை.
இத்தனை அசௌகரியத்தை
யாருக்கும் கொடுப்பதும் இல்லை.

நம்மை சுற்றி நிறைய இருக்கின்றன
புதிதாய் இருந்தும்
பெறுமதியாய் பிறந்தும்
யாரோ ஒருவரின் கவனயீனத்தால்
மதிப்பிழந்த ஐநூறு ரூபாய் நோட்டுகள்
கற்றவர்களாய் இருந்தும்
நல்லவர்களாய் இருந்தும்
சந்தர்ப்பத்தின் சிறு தவறால்
மதிப்பிழந்த மனிதர்கள்.

நழுவிப் பறந்த நோட்டு போல
தன்னை வெறுக்கும் உலகிடமிருந்து
அவர்களாகவே விலகிக் கொள்கிறார்கள்
பெருந்தன்மையுடன்,
அல்லது
புறக்கணிப்பின் கண்ணீருடன்.
மேலும் வாசிக்க »

வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை

0 comments



தேவதைகளெல்லாம்
அமுதம் அருந்த வேண்டும்
என்ற வழமை இருந்தது.
வெண்தேவதை
அமுதம் அருந்த ஆசைப்பட்டது.
அது கருந்தேவதை ஒன்றை
கையில் அமுதத்துடன் கண்டது.
கருந்தேவதையும் வெண்தேவதையும்
அமுதத்தைப் பரிமாறும் வழக்கம்
முன்பு இருந்ததில்லை.


'நான் இதை
இன்னொரு கருந்தேவதைக்கென
வைத்திருக்கிறேன்'
என்றது கருந்தேவதை.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் கருந்தேவதை
தனக்கே அமுதம் தரும்
என்று நம்பியது.


கருந்தேவதையின்
அமுதக்கோப்பையை
வேறு கருந்தேவதைகள்
தட்டி விளையாடின.
கருந்தேவதையே சில துளிகளை
ஒன்றுக்கு ஊட்டியும் விட்டது.
அதை வெண்தேவதையிடம்
காட்டிச் சிரித்தது.
வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை.
கருந்தேவதை
தனக்கும் அமுதம் தரும்
என்று நம்பியது.


வேறு வெண்தேவதைகள்
அமுதக்கோப்பையுடன் வந்தன.
இந்த வெண்தேவதையை
ஏக்கத்துடன் கடந்து சென்றன.
"இதை உனக்கென வைத்திருப்பேன்"
என்று சொல்லி அழுது சென்றது
ஒரு தூய வெண்தேவதை.
'ஏன்? இது கருந்தேவதைகளிலேயே
மிக அசிங்கமானது'
என்று கூவிச்சென்றது
ஒரு பசந்த வெண்தேவதை.
'இது நிகழ்ந்தால்
எல்லா தேவதைகளுமே
உங்களை தண்டிப்போம்'
என்று சீறியது
ஒரு சிவந்த வெண்தேவதை.


கருந்தேவதைக்கு
இது எதுவும் தெரியாது.
அல்லது தெரிந்தும்
தெரியாதது போலிருந்தது.
அது தனக்கான கருந்தேவதையுடன்
இன்பமாக அமுதம் அருந்திக்கொண்டிருந்தது.


வெண்தேவதை
ஒன்றும் சொல்லவில்லை.
அது மௌனமாக
கண்ணீர் வடித்தது.
கண்ணீர்த்துளிகள்
இதழில் இனித்தன.
அது அமுதத்தை விட
சுவையாக இருந்தது.
அது மெல்லப் புன்னகைத்தது.
"ஆம். இதுவே" என்றது.


அதன் பிறகு என்றைக்குமே
வெண்தேவதை
கருந்தேவதையிடம்
அமுதத்தைக் கேட்கவில்லை.
வேறு வெண்தேவதைகளின்
அமுதத்தைப் பருகவும் இல்லை.
மேலும் வாசிக்க »

குரவை என்னும் ஆதியொலி

0 comments

குரவைச்சத்தம் கிழக்கிலங்கை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. திருமணமா, நல்ல காரியங்களா, கோவில் திருவிழாக்களா, எல்லாமே குரவையொலியோடு ஆரம்பமாவதே இங்கு வழக்கம். இப்போது பெருமளவு அருகி விட்டாலும், இன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குரவை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ்க் கிராமங்களில் மட்டுமன்றி முஸ்லிம் கிராமங்களிலிருந்து வீசும் காற்றும் அரிவையரின் குரவையொலியைத் தாங்கி வந்து வரவேற்றதை எண்ணி ஏக்கப்பெருமூச்சு  விடுவோர் இன்றும் இருக்கிறார்கள்.


குரவை அயரும் வங்கக் குமரியர் 


குரவை என்பது நாக்கையும் மேல் அண்ணத்தையும் மிக வேகமாக பயன்படுத்தி உயர்ந்த மீடிறனில் உருவாக்கப்படும் ஒரு மங்கல ஒலி.  பொதுவாக பெண்களே குரவையிடுவது வழக்கம். இதை பேச்சு வழக்கில் குலவை என்பார்கள். தமிழ்ப் பெண்கள் குரவையிடும் போது  வாயை வலக்கையால் மூடியபடி இடக்கையால் வலது முழங்கையைத் தாங்கியபடித் தான் குரவையிடுவது வழக்கம்.  அல்லது இடது கையை அருகிலுள்ள இன்னொரு பெண்ணின் தோளில் வைத்திருக்க வேண்டும். 

உலகெங்கும் பழங்குடிப் பண்பாடுகளில் குலவையிடுதல் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் குலவைக்கு  யுல்யுலேஷன் (Ululation) என்று பெயர். ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும்  தென்னிந்தியா, வங்கம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களிடம் தான் குலவை அவதானிக்கப்பட்டிருக்கிறது.  மிஸ்ராகி எனும் யூதப்பிரிவினர், எதியோப்பிய கிறிஸ்தவர்கள் போன்றோர் சமயச்சடங்குகள் செய்யும் போது  குலவையிடுவது வழமை. மத்திய கிழக்கு முஸ்லிம்கள், சமயச் சடங்குகளில் மாத்திரமன்றி, திருமணம், இறப்பு போன்ற  நிகழ்வுகளின் போதும் குலவையிடுகிறார்கள்.  ஆபிரிக்க சமூகங்களிடமும் குலவை அதிகளவு அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் வங்கமும் தென்னகமுமே இன்றும் குலவை நீடிக்கும் மையங்கள். வங்கத்திலும் ஒடிசாவிலும் குலவைக்கு உலுல்லத்வனிஎன்று பெயர். அவர்களும் சமயச் சடங்குகளுக்கும் திருமணம் முதலான மங்கல நிகழ்வுகளுக்குமே உலுல்லத்வனியை பயன்படுத்துகிறார்கள். தென்னகத்தில் தமிழில் குலவை என்றும்  மலையாளத்தில் குரவ என்றும் அழைக்கப்படும் இது, இன்றும் சமயச்சடங்குகளிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் ஒலிக்கப்படுகிறது.
    தேர்தலில் வாக்களித்த பின் குலவையிட்டு மகிழும் எகிப்திய மூதாட்டி, 2014

எகிப்தில் குலவையிடல் பற்றிய மிகப்பழைய எழுத்து பூர்வமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.  கிரேக்கப் பண்பாட்டிலும் முன்பு குலவையிடல் வழக்கில் இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குலவையிடல் கைக்கொள்ளப்படுகின்ற நாடுகளை ஒப்பிட்ட சில அறிஞர்கள், அவை பொதுவாக அரேபிய வணிகர்களின் வசிப்பிடம் அல்லது வருகை தரும் இடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டுமத்திய கிழக்கே குலவையின் தாயகம் என்கிறார்கள். 

ஆண்கள் அல்லாமல்பெண்களே குரவையிடுவதில் பெருமளவில் ஈடுபடுவதை சான்று காட்டி இதை மறுப்போர் உண்டுஆபிரிக்கா, இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதுமே குரவையொலி பழங்குடிகளில் அவதானிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு இடத்திலேயே தோன்றிப் பரவியது என்று கூறுவதற்கில்லை. கவனத்தைத் தூண்டும் எச்சரிக்கை, அபாயத்தை உணர்த்தும் பதகளிப்பு, மகிழ்ச்சியை சொல்லும் குதூகலிப்பு எல்லாமே குலவையொலியில் கலந்திருப்பதை நாம் காணலாம். காட்டுமிராண்டியாக மனிதன் உலவிய தொல்காலமொன்றில் தொடர்பாடலுக்கு உதவியிருக்கக்கூடிய ஒலி வடிவங்களில் ஒன்று அது. எனவே, பேச்சையும் எழுத்தையும் மனித இனம் அறியாத காலத்தில் பிறந்த ஆதியொலிகளில் ஒன்று அது என்பது சாதாரணமாகவே புரியும்.  ஆபிரிக்காவில் தோன்றிய மனுக்குலம் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பரவிய போது, இந்த ஒலி வடிவம் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்று கொள்வதே பொருத்தம் போலப் படுகிறது.

குலவையிடும் தமிழச்சி.

அதை ஆதியொலி என்பது சரி தானென்றால், இப்போது அதற்கு வயது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும். எத்தனை எத்தனை மூதாதையர் வாய்களில் ஒலித்திருக்கும் அந்த ஒலி? கொஞ்சமும் மாறாமல், குறைந்தது வழிபாட்டு நோக்கிலோ, அன்றாடப் பாவனையிலோ மட்டுமாவது, அந்த ஆதியொலியைப் பேணி வருகிறோம் என்பது மகிழ்ச்சியடைய வைப்பது தானே? அதுவும் தமிழ் மரபின் அம்சமாக குரவையொலிக்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது என்பதும், தமிழரில் மைய நீரோட்ட குடித்தொகையினரில் பெரும்பாலானோர் அதை இன்று மறந்துவிட்டனர் என்னும் போது, நம் சூழலில் மட்டுமாவது அது எஞ்சியிருக்கிறது என்பது எத்தனை நெகிழ்வை ஏற்படுத்தும் உணர்வு?


தமிழ்ப்பண்பாட்டில் குரவை பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியத்தில் தான் முதன்முதலாகக் கிடைக்கின்றன. குரவை அயர்தல் பற்றி பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பிட்டிருக்கின்றன. குரவையை தனியே ஒலிவடிவமாக ஒலிக்காமல் சேர்ந்து கூடவே நடனமாடும் குரவைக்கூத்தும் தமிழ்நிலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது. தொல்காப்பியம் அரசனின் தேருக்கு முன்னும் பின்னும் குரவை ஆடிச்சென்றதை பதிவு செய்திருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு குரவையாடியதையும், காஞ்சி, வேங்கை முதலான மரங்களின் நிழல்களில் குரவை ஆடப்பட்டதையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

வழிபாட்டில் தமிழரால் குரவைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். முருகனை வணங்கி குறவர்கள் குன்றக்குரவையாடும் சித்திரமும், திருமாலைப் போற்றி ஆய்ச்சியர் குரவையாடும் காட்சியும் அந்நூலில் அழகுற வந்திருக்கிறது.


ஆரம்பத்தில் முருகனோடும்  திருமாலோடுமே குரவை இணைத்துப் பார்க்கப்பட்டது என்றாலும், குரவை அயர்வது போர்க்களத்திலும் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது என்ற குறிப்பை  திருமுருகாற்றுப்படையும் பதிற்றுப்பத்தும் தருவதால், போர்த்தெய்வமான கொற்றவை வழிபாட்டிலும் குரவை நீடித்தமை தெரிகிறது. இன்றும் தமிழக மாரியம்மன் வழிபாட்டில் குரவைக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. புரிகிற மாதிரிச் சொல்வதென்றால், பக்திப் படங்களின் இறுதிக்கட்டத்தில்  அம்மன்  ஆத்திரமுற்று தாண்டவமாடும் போது பின்னணியில் குலவை ஒலிக்குமே, அது அந்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கும் குரவைக்குமான உறவைச் சொல்வது தான்.


இன்று தாய்த்தெய்வ வழிபாட்டில் குலவையொலி கேட்க, குலவையை பதிவு செய்துள்ள இலக்கியங்களில் சிலம்பு குறிப்பிடத்தக்க இடம் வகிக்க, அந்த சிலம்பே புகழும் சிலப்பதிகார நாயகியின் கோவிலில் இன்றும் குலவையொலியைக் கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றவன் இக்கட்டுரையாளன். வைகாசி மாதத்தில் அவனது பிறந்தகம் தம்பிலுவில்லில் உள்ள கண்ணகி கோவில் குலவையொலியால் நிறைந்துவிடும்.

அவன் சிறுவயதில் குலவையொலி கேட்டு மகிழ்ந்த இன்னொரு கோவில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில். இப்போது அங்கு அரோகரா சத்தம் மட்டுமே ஒலிக்கிறது.  முருகன் திருவீதியுலாவுக்கு புறப்படும் போதும், பின் உலா முடிந்து வசந்த மண்டபம் திரும்பும் போதும், குரவையொலி விண்ணைப் பிளக்கும் பால்யகால நினைவுகள் எப்போதாவது இருந்துவிட்டு அவன் நினைவில் வருவதுண்டு.

இன்று வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆர்வம் ஏற்பட்டு விட்ட பிறகு, குரவையின் தொன்மையையும் அபூர்வத்தையும் அறிந்த பிறகு, அதைக் கேட்பது எப்போதுமே எனக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அதிலும் குரவை அயர்வது குறிப்பாக தமிழ் மரபில் முருகனுக்குரியது என்பதை திருமுருகாற்றுப்படையிலும் சிலம்பிலும் படித்து முடித்த பிறகு, எப்போதாவது முருகன் கோவிலொன்றில் குரவையொலியைக் கேட்டுவிடக்கூடாதா என்று கொஞ்ச நாட்களாகவே ஏக்கம்.  வேறு சில முருகன் கோவில்களில் இப்போதும் திருவிழாக் காலங்களில் குரவை ஒலிப்பதாகக் கேட்டு அதைக் கேட்கச் சென்று முடியாமல் ஏமாந்திருக்கிறேன்.

கடந்த வாரம் ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  இரவுத் திருவீதியுலா முடிந்து இறைவன் வசந்த மண்டபத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அருகிலேயே நாதஸ்வரத்துடன் இணைந்து மெல்லிய பறையொலியை அடக்கமுயன்றுஆணவத்துடன் முனகிக் கொண்டிருந்தது மிருதங்கம்சலவைத்தொழிலாளர் நிலப்பாவாடையை விரிக்க, தீவட்டியும் கொடி, குடை ஆலவட்டங்களும் மெல்லப் பின்னகர, முருகன் மண்டபத்துக்குள் புறம் காட்டி நுழைந்தான்.  நல்லா ஆட்டி ஆட்டிக் கொண்டு போங்கோ என்று ஒருவர் உரத்துச் சொல்ல வாய் கட்டி வாகனம் காவியிருந்த இளைஞர்கள் வலம் இடமாக ஏடகத்தை அசைக்கத் தொடங்கினர். மென்மையாக ஊஞ்சலில் அசைந்தாடுவது போல அலைந்த படி பின்னகர்ந்தான் அழகு வேலன்
                

சட்டென நாதஸ்வரத்தின் தொனியைக் கிழித்தபடி எங்கோ வீறிட்டெழுந்தது குரவையொலி.  மண்டபத்துக்குள்ளே  பின்னகர்ந்து கொண்டிருந்த முருகன் அலையும் வேகம் கூடத் தொடங்கியது போலிருந்தது. அவன் ஆனந்தமாகக் கூத்தாடிக்கொண்டிருந்தான். நான் காத்திருந்த அரிய கணம். குமரன் கோவிலில்  குரவையொலி. சங்க காலத்திலிருந்தே நீடிக்கும் குன்றக்குரவை ஒலி. ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டியும் தமிழ் நிலத்தில் ஒலிக்கும் மானுட இனத்தின் ஆதியொலி. 


நான் ஒருகணம் நடுங்கினேன். உடல் சில்லிட்டது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கண்ணீர் பெருகி வந்து பார்வையை மறைத்தது. சட்டென விழிகளைத் துடைத்தபோது, மாடத்தூண்களும் மண்டபமும் மறைந்து அடர்ந்த மரங்களும் கொடிகளும் மேலெழுந்து வந்து சூழ்ந்து கொண்டன. எங்கும் காரிருள் பரவியது. தொலைவில் இரு தீவட்டிகள் உயர்ந்தன. இலைதழைகள் தீயில் கருகி கற்பூர வாசனை எழுப்பி நிமிர்ந்தன. சிறுபறைகள் ஒலிக்க குறமகளிர் கும்மி கொட்டி கூத்தாடிக் கொண்டிருந்தனர். நடுவில் வேலன் வெறியாடியபடி நின்றிருந்தான். மிக அருகில் தீனமாக ஒரு குரல் எழுந்தது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே, அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேலன்றேஆயிரமாண்டுகள் அகவை முதிர்ந்த அதே மூதாட்டி அப்போதும் விடாமல் ஓங்கிய குரலில் குரவை அயர்ந்து கொண்டிருந்தாள். அந்த ஆதியொலி என்னவோ செய்தது. விம்மியபடி முகத்தை மூடிக் கீழே அமர்ந்து கொண்டேன். குரவையொலி நில்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.


(அரங்கம் பத்திரிகையின் 2019.08.02ஆம் திகதிய இதழில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner