எறியப்படும் காலணியைப் பார்த்து புன்னகைத்தல்

0 comments

கிரிக்கெட்டில் எனக்கு அத்தனை ஆர்வமில்லை. என்றாலும் நண்பர்களின் தயவில் சில நேரங்களில் போட்டித்தொடர்களைக் காணும் வாய்ப்புக் கிடைப்பதுண்டு. கடந்த வார இறுதியில் ஐ.பி.எல் இறுதிப்போட்டியையும் அப்படித் தான் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ஏதோ நினைவு தூண்ட அருகிலிருந்த நண்பனிடம் "போன ஆண்டு ஐ.பி.எல் போட்டில சப்பாத்து எறிஞ்சது உனக்கு ஞாபகமிருக்கா?" என்று கேட்டேன். அவன் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான். "டேய்... இந்தா எண்டமாதிரி இருக்குடா... நல்லா மறந்தே போய்ற்று என!"


போன ஆண்டு ஐபிஎல் காலப்பகுதியில் தான் காவிரிப் போராட்டம் தமிழகத்தில் வெடித்திருந்தது. அதில் குறித்த போட்டித்தொடரொன்றில் போராளிகளால் மைதானம் நோக்கி காலணிகள் வீசப்பட்டிருந்தன. விளையாட்டுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிகழ்வு வெறும் ஓராண்டு காலப்பகுதியில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது!

செய்திகள் எத்தனை வலிமையானவையோ அத்தனை பலவீனமானவை. தினம் தினம், கணம் கணம், நாம் செய்திகளின் அலைகளால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு உணர்ச்சித்தூண்டல். சிலவற்றைக் கேட்கும் போது மகிழ்ச்சி. சில துக்கம், சில பெருங்கோபம், சில பெரும் நகைச்சுவை. அடுத்த சில நாட்களிலேயே அவை பொருளில்லாதவையாக மாறிவிடுகின்றன. அவற்றைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல், நாம் அன்றைக்கு நம்மை பலமாக அறைந்தபடி கடந்து செல்லும் வேறு செய்தியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்போம்.

தகவல் தொழிநுட்ப உலகின் மிகப்பெரிய எதிர்மறை விளைவு இது. இன்று தகவல் பரிமாற்றம் என்பது கணப்பொழுதுக்கும் குறைவான நேரத்தையே எடுக்கும் ஒரு செயல். இதில் முந்திய கணத்தை எண்ணி சந்தோசப்படுவதற்கோ, கவலைப்படுவதற்கோ அடுத்த கணம் நம்மை அனுமதிப்பதில்லை. அது வேறொரு உலகை நமக்குக் காட்டுகிறது. "காலம் வேகமாகச் செல்கிறது" என்று சலித்துக்கொள்கிறோம். காரணம் ஒன்று தான். நம் மீது பொழியும் தகவல்களை பகுப்பாய்வதற்குள் காலம் கடந்துவிடுகிறது. சோகம் என்னவென்றால் அவற்றில் 90 வீதமானவை நமக்கு எவ்வித பயனும் அற்றவை.


Courtesy: AryNews

*********

பேஸ்புக், ருவிட்டர் முதலான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் தெரியும். பொதுவாக அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளில் உரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும். "உரையாடல்" என்பதை விட "வெட்டிப்பேச்சு" என்ற சொல்லாடல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு தேநீர்க்கடையில் - உள்ளூர் மொழியில் "கிழங்குக்கடையில்" நான்கைந்து பேர் கூடியிருந்து செய்கின்ற வீண் அரட்டைகளை ஒத்தவை அவை.

இன்று அரசியல் பிரச்சினை, நாளை ஒரு சமூகச்சிக்கல், நாளை மறுநாள் ஒரு விளையாட்டு, அடுத்த நாள் ஒரு சர்வதேசப் பிரச்சினை, அதற்கும் அடுத்த நாள் சினிமா கிசுகிசு ஒன்று, பிறகொருநாள் யாரையாவது கிண்டல் செய்வது என்று தான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்களின் நாட்கள் கழிகின்றன.

இப்படிச் சொல்வதை சமூக வலைத்தளப் பயனர்களை ஒட்டுமொத்தமாக குறைகூறுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியமான விவாதங்களே இடம்பெறுவதில்லை என்பதல்ல நான் சொல்லவருவது. இடம்பெறுகின்றன. ஆனால், அவை எண்ணிக்கையில் மிகக்குறைந்தவை. 

சமூக வலைத்தள 'உரையாடல்களில்' இரு பிரதிகூலங்கள் இருக்கின்றன. ஒன்று நான்கைந்து நாட்களின் பின் அந்த உரையாடல் முற்றாகவே மறக்கடிக்கப்பட்டு விடும். உரையாடலைத் தொடங்கியவரே அதில் பரிமாறப்பட்டுள்ள கருத்துக்களைப் பெறவேண்டுமென்றால், மீண்டும் தனது பேஸ்புக் கால வரிசையில் தேடிச் சென்று பார்க்க வேண்டிய கட்டாயம். இன்னொரு பிரதிகூலம், உரையாடல்கள் சிந்திப்பவர்களுக்கானவை. எனவே அவை தம்மை வாசிப்போரை கொஞ்சமாவது சிந்திக்கத்தூண்டும். சமூக வலைத்தளங்களுக்கு வருபவர்கள் அத்தனை ஆழமாக வாசிக்க விரும்புவதில்லை. எனவே பயனுள்ள உரையாடல்கள், பெருமளவு கவனிக்கப்படாமல் புறக்கணிக்கவும் படுகின்றன.

சமூக வலைத்தளப் பயனர்களாக "நீங்கள் சிந்திப்பதில்லை" எனும் கூற்று நம்மை சீண்டலாம். ஆனால் அது வெறும் குற்றச்சாட்டு அல்ல. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் வாசிப்பிலிருந்தும், அதனால் ஆழ்ந்த சிந்தனையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகி இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை இணையத்திலேயே நீங்கள் வாசிக்கலாம். வெளிப்படையாகவே ஒரு உதாரணம்.  இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள், பேஸ்புக்கில் "See More", "Continue Reading" வருகின்ற போது, எத்தனை தடவை நின்று நிதானித்து வாசித்திருக்கிறீர்கள்?

சமூக வலைத்தளத்தில் வாசிப்புக்கு இயல்பாகவே அத்தகைய இடம் மட்டுமே கிடைக்க முடியும். வரிசையாக கேளிக்கைக்கும் பொழுதுபோக்குக்கும் காணொளிகளும் நகைச்சுவைத் துணுக்குகளும் காத்திருக்கும் போது, உங்களால் வாசிப்பதில் கவனம் செலுத்த முடியாது. 

சமூக வலைத்தளங்களால் ஏற்படும் இந்த ஆபத்தான வழக்கத்துக்கு நன்கு வாசிக்கும் பலர் கூட விரைவிலேயே அடிமையாகிவிடுகிறோம். உங்களால் இப்போது ஞாயிறு வாரமலர் பத்திரிகைகளை பழைய வேகத்தில், பழைய மன ஒருமைப்பாட்டுடன் வாசிக்க முடிகிறதா? ஒரு புத்தகத்தை பழைய அதே சரளத்துடன் ஒரே எடுப்பில் வாசித்து முடிக்க முடிகிறதா?

*********

வாசிப்பு மிக முக்கியமான ஒரு அறிவியல் செயல்பாடு. மனிதன் ஒருவனின் தொடர்பாடல் திறனானது, முற்றிலும் மொழி சார்ந்தது. மொழி நான்கு செயற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. பேசுதல், சிந்தித்தல், கேட்டல், எழுதுதல். வாசித்தலும் கேட்டலும் மொழி உள்வாங்கலுக்கு உதவ, பேசுதலும் எழுதுதலும் மொழி வெளிப்பாடுக்கு உதவுகின்றன.  தகவல் தொழிநுட்ப உலகு நமக்கு வாசித்தல், எழுதுதல் ஆகிய இரண்டு செயற்பாடுகளையும் மட்டுப்படுத்தி விட்டது. அது தனிமனித தொடர்பாடல் திறனில் இன்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

தொடர்பாடல் திறனில் பாதிப்பு ஏற்பட்டால் கூட பரவாயில்லை. அது முற்றுமுழுதாக சிந்திக்கும் திறனை பாதித்திருக்கிறது. முன்பெப்போதும் இருந்ததை விட, மனிதர்கள் இப்போது அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதையும், அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவோராக இருப்பதையும், ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், மறுக்க முடியாத முக்கிய காரணம், இந்த சமூக வலைத்தளங்கள்.

*********

ஐபிஎல் - தகவல் தொழிநுட்ப உலகு - சமூக வலைத்தளங்கள் என்று, ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத இந்த நீண்ட பிரசங்கம் எதற்கு என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை. இன்றைய நாட்டின் அசாதாரணமான நிலைமையை விவாதிக்கத் தான்.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை அடுத்து ஏற்பட்ட நிலைகுலைவிலிருந்து இலங்கை இன்னும் முற்றாக மீளவில்லை. எல்லா இடங்களிலும் மெல்லிய அச்சமும் சந்தேகமும் பரவி இருக்கின்றது. இறுக்கமாகி இருக்கின்ற பாதுகாப்பு நடைமுறைகள் பலரையும் பொறுமையிழக்கச் செய்கின்றன. எப்போது நாடு பழைய நிலைக்குத் திரும்பும் என்பதே பலருக்கும் ஏக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டில் எங்கேனும் பதற்றநிலை ஏற்பட்டால் உடனே சமூக வலைத்தளங்களை முடக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டுவருகிறது. சமூக வலைத்தளப் பயனர்கள் பலர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி சேர் ஓடும்?" என்று திரைப்பட நகைச்சுவையை சொல்லி கிண்டலும் செய்கிறார்கள்.

உண்மையில் சமூக வலைத்தளங்களே வன்முறையைத் தூண்டும் அபாயகரமான சாதனங்கள். தேவாலயங்களில் உடல் சிதறிக் கிடந்த பச்சிளம் பாலகர்களின் சடலங்கள் சமூக வலைத்தளங்களில் தான் மிக வேகமாகப் பரவின. அவற்றைக் கண்டு உள்ளம் கலங்கி விம்மி அழாத ஒருவர் இங்கு இருக்க முடியுமா? அதே சூட்டோடு தான், இத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் வன்முறையைத் தூண்டும் பழைய காணொளிகள் சுற்றோட்டத்துக்கு விடப்பட்டன. மனித நேயம் கொண்ட எவரும் அவற்றைப் பார்த்து இரத்தம் கொதிக்காமல் இருந்திருக்க முடியுமா?

சமூக வலைத்தளம் முடக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களிலும் விபிஎன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இளைஞர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சாதாரணமாக ஐந்து நிமிடம் உள்நுழைந்து வெளியேறினாலே, அதில் குறைந்தது ஐந்து வன்முறையைத் தூண்டும் பதிவுகளைக் கடக்காமல் நம்மால் வரமுடியாமல் இருக்கிறது. நரம்பு புடைக்கச் செய்யும் வதந்திகள், குமட்டச் செய்யும் இனவாதக் கருத்துக்கள், வாழைமரத்தை வெட்டி எறி என்று இயல்பாகச் சொல்வது போல் குடும்பத்தோடு - சமூகத்தோடு வேரோடு பிடுங்கி எறி என்று கொக்கரிக்கும் மீம்கள், பதிவுகள். படிக்கும் போதே வாந்தி வருகிறது!

நாமெல்லாம் வெறும் உணர்ச்சி மிருகங்களாகி வருகிறோம், சிந்திக்கும் திறனை இழந்து வருகிறோம் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்? குண்டுவெடிப்பு இடம்பெற்ற அதே நாளில், குருதிக்கொடை வழங்குவதற்காக நாடெங்கும் வைத்தியசாலைகளில் திரண்ட நம் மக்களை - குறிப்பாக இளைஞர்களைக் கண்டு உலகமே ஆனந்தக்கண்ணீர் மல்கியது. அதே உலகை முகம் சுளிக்கச் செய்யும் செயல்களை இன்று செய்கின்றவர்களும் இளைஞர்கள் தான். ஒருவேளை இவர்களில் ஒருவன், அன்று குருதிக்கொடை வழங்க வரிசையில் நின்ற ஒருவனாகவும் இருக்கலாம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நாணய மாற்றுவிகிதங்கள் என்றுமில்லாதவாறு தளம்பல் நிலையைக் காண்பிக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் கடந்த மாதத்துக்கான வருகை, 167 ஆயிரமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, சுமார் 13 ஆயிரம் பேர் குறைவு, மார்ச்சோடு ஒப்பிடும் போது, 80 ஆயிரம் பேர் குறைவு. இத்தனைக்கும் ஏப்ரலில் தான் இலங்கைக்கான சுற்றுலாப் பருவகாலம் ஆரம்பமாகின்றது. இதையெல்லாம் என்ன செய்து மீட்கப்போகிறோம்?

எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர் இன்னொரு மனிதர் மேல் கொள்ளும் மரியாதையையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறோம். கடைகளுக்குச் செல்லும் போது இனத்தை, மதத்தை விசாரித்துப் போகும் இழிநிலை. தூரப்பயணங்களில் அருகில் அமர்ந்திருப்பவரை சந்தேகிக்கவேண்டிய நிலைமை. உதடுகள் புன்னகையை மறந்து நெடுங்காலமாகின்றது. பொருளாதாரத்தை தலைகீழாக நின்றாவது மீட்டுவிடலாம். இல்லாவிட்டால் இதுவரை இருந்தது போலவே, எப்படியோ மீளட்டும் என்று பாராமுகமாக இருந்துவிடலாம். ஆனால், இழந்த நம்பிக்கையைப் பெறுவது? இன்னொருவர் மீதான ஆதூரத்தையும் அன்பையும் பெற்றுக்கொள்வது? எத்தனை யுகங்கள் வேண்டும் அதற்கு?

குண்டுவெடிப்பு, அதைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை இதற்கெல்லாம் நாம் எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம், அரசியல் பின்னணி, சர்வதேச தலையீடு, வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டி, உள்நாட்டு அரசியல் ஸ்திரமின்மை என்று கூடியிருந்து ஆராயலாம். அதனால் எல்லாம் இப்போது எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. இப்போது தேவையானது ஒன்று மட்டுமே. பொறுமை!

"தீர்ப்புச் சொல்" என்று கூறி, ஜனநாயக ஆட்சி தன் குடிமகனின் கைகளில் தராசை நீட்டுவது, தேர்தலின் போது மாத்திரமே. நீங்கள் எந்த அரசியல் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர் என்றாலும், எந்த சமூக அந்தஸ்தில் இருப்பவர் என்றாலும், ஏனைய எல்லா சந்தர்ப்பங்களிலும், நீங்கள் ஒரு ஆணியைக் கூட பிடுங்க முடியாது. 

முடிவெடுக்கும் நிலையில் நீங்கள் இல்லாத நிலையில் இன்று நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே. பொறுமை காப்பது. பச்சையாகச் சொன்னால், "வாயை மூடிக்கொண்டு கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருங்கள்." தமிழ், சிங்களம், முஸ்லீம் என்று இல்லாமல், சைவன், பௌத்தன், இஸ்லாமியன், கிறிஸ்தவன் என்று இல்லாமல், உங்கள் ஒவ்வொருவரின் சிறு அசைவும், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடிய மிக மோசமான காலகட்டம் இது.

மிக முக்கியமாக சமூக வலைத்தளங்களைக் கைவிட்டு விடுங்கள். அது உங்கள் இரத்த அழுத்தத்தைத் தான் கூட்டப்போகிறது. இந்த நாட்களில் எந்த நல்ல விடயங்களுமே அங்கு பகிரப்படப்போவதில்லை. அப்படியே போனாலும், காலை வணக்கம் சொல்வது, புகைப்படம் பகிர்வது, நண்பர்களைக் கேலி செய்வது, ஏதாவது நகைச்சுவையைப் பகிர்வது என்று அன்றாடத்தில் மட்டும் திளையுங்கள். "பொழுதுபோக்கத்தான் பேஸ்புக் போகிறேன்" என்று சொல்கிறீர்களென்றால், அத்தனையும் போதும் தானே?

தொடக்கத்தில் சொன்ன ஐபிஎல் சப்பாத்து கதை போல, இந்த கொடூரமான நாட்கள் வெறும் செய்தியாக உங்களைக் கடந்து போகும் நாளொன்று வரும். அன்று நீங்கள் "அந்த அக்கிரமத்தில் என் சிறு பங்கு கூட இருக்கவில்லை" என்று திருப்தியுடன் புன்னகைக்க வேண்டும். அதுவரை எதுவுமே வேண்டாம். 

உண்மையிலேயே இந்த அமைதி உங்களை என்னவோ செய்கிறதென்றால், எப்படியாவது இந்த அசாதாரணத்திலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று விரும்புகிறீர்களென்றால், தயைகூர்ந்து பல்லைக்கடித்துக் கொண்டு அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள். இந்த நாட்டின் இன்னொரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்ளக்கூடியது அது ஒன்றே. ஆம். பூமி ஆள்பவர்கள் பொறுத்தவர்கள் மட்டுமே!


(அரங்கம் பத்திரிகையின் 2019.05.17 இதழில் வெளியான கட்டுரை)
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner