ஐரோப்பிய கால ஆவணங்களில் போரதீவுப்பற்று

2 comments


இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான போரதீவுப்பற்று, அம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பிரதேசமாகும். வடக்கே அத்தியாமுன்மாரி ஆற்றுக்கும் கிழக்கே பழுகாமத்து ஆறு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு வாவிக்கும் தெற்கே குரங்குத்தீவு ஆற்றுக்கும் மேற்கே இராசக்கல் மலை மற்றும் புளுகுணாவை ஏரி என்பவற்றுக்கும் இடைப்பட்டதாக சுமார் 180 சதுரகிமீ பரப்பில்  விரிந்து விளங்குகின்றது.

வரைபடம் 01. 1695இல் வரையப்பட்ட பழைய இடச்சு வரைபடம். இதில் போரதீவு கிராமம் (Farredive) காட்டப்பட்டுள்ளது. மூங்கிலாறு எருவிற்பற்று (?) ஆறு (Riv van E.patto) என்று காட்டப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியிருப்பு (Kalloewanje koederipoe), கோட்டைக்கல்லாறு (Chinnacalette சின்னக்கல்லாறு), நீலாவணை (Melewanone) ஊர்களும் தென்படுகின்றன.
மேலும் வாசிக்க »

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 02

0 comments

 முந்தைய பாகம்:

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01



6.2  பொபி 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷண்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religionகளை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார்.

 

மேலும் வாசிக்க »

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01

0 comments

 (எழுத்தாளர் ஜெயமோகனின் "இந்துமதம் என ஒன்று உண்டா" தொடருக்கான மறுப்பு)


இந்துமதம் என ஒன்று உண்டா (1)


இந்துமதம் என ஒன்று உண்டா (2)


இந்துமதம் என ஒன்று உண்டா (3)




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தங்கள் நலம் விழைகிறேன். '

வாசிக்கும் நண்பர்களுடன் ஏதாவது உரையாடும் போது உங்கள் பெயர் வந்துவிடும். உரையாடும் எல்லோருமே எங்கோ ஓரிடத்தில் உங்களோடு முரண்படுபவர்கள். ஆனால் தமிழ் இலக்கிய உலகிலும் சமகால  அறிவியக்கத்திலும் உங்கள் தவிர்க்கவியலாமையை ஏற்றுக்கொண்டவர்கள். ஓராண்டுக்கு முன் தங்கள் வாசகர்களுள் ஒருவனான நீதுஜன் பாலாவின் அழைப்பின் பேரில் “திகட சக்ர” அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெண்முரசு பற்றிய விவாதமொன்றில் நடுவராகப் பணியாற்றியிருந்தேன். அந்தப் பின்னணியில் பலநாளாகவே எழுதி வெளியிடாது வைத்திருந்த என் வெண்முரசு அனுபவத்தை அண்மையில் தான் முழுமைப்படுத்தி என் வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன்.  இலக்கிய உலகில் ஓய்வின்றி தாங்கள் படைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளுக்குப் பாராட்டு.

 

உங்கள் “நான் இந்துவா” கட்டுரை தான் எனக்கு உங்கள் வலைத்தளத்தை அறிமுகஞ்செய்து வைத்தது என்பதை என் முந்தைய மடலிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ‘இந்து’ அடையாளத்தையும் ஈழத்தமிழ்ச் சூழல் எனக்களித்த சைவ அடையாளத்தையும் சார்ந்து எழுந்த ஏராளமான சந்தேகங்களுக்கு விடை கண்டுகொண்ட பின்னர் தான், நான் ‘அலகிலா ஆடல்’ நூலை எழுதினேன்.

 

மேலும் வாசிக்க »

அனுராதபுரத்துக் கண்ணகி படிமங்கள்

0 comments

இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. 

அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின் அடையாளப்படுத்தலின் படி இவை இரண்டும் சைவ இறைமூர்த்தமான மாதொருபாகன் (அர்த்தநாரீசுவரர்) வடிவங்கள். ஆனால், இவை இரண்டின் உடலமைப்பும் ஆண் பாதி பெண் பாதி என்று இனங்காணமுடியாதவாறு  பெண்ணுடலின் அங்க இலக்கணங்களுடனேயே வடிக்கப்பட்டுள்ளன. 

மேலும் வாசிக்க »

வெண்முரசு - ஓர் அறிமுகம்

0 comments
கடந்த ஓகஸ்ட் மாதம் எனக்கு விவாதமொன்றின் நடுவராகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது.   அழைத்தவன் நண்பன் நீதுஜன் பாலா. "திகட சக்ர  அமைப்பினர் வெண்முரசு பற்றி விவாதமொன்று செய்கிறார்கள். நடுவராகப் பணியாற்றுகிறாயா?" என்று கேட்டான்.

 'திகட சக்ர' அமைப்பு பற்றி எனக்கு முன்பே தெரியும். முகநூலைக் களமாகக் கொண்டு தமிழ் இளைஞர்களிடையே  விவாதத்திறனை வளர்க்கும் அமைப்பு அது. அவர்களின் ஓரிரு விவாதங்களை நேரலையாகப் பார்த்திருக்கிறேன். இலங்கைத் தமிழ் இளந்தலைமுறையினர் மத்தியில் பேச்சாற்றல் குறைந்துவரும் சூழலில் அவர்கள் செய்துகொண்டிருப்பது அருமையான பணி.

ஆனால் விவாதத்துக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம். எழுத்து அளவுக்கு நான் பேச்சில் அத்தனை தேர்ந்தவன் அல்ல. விவாதப்போட்டியில் நடுவர் வேறா என்று திகைத்துப்போனேன். உமிழ்நீரை விழுங்கிக்கொண்டு "முடியாது" என்ற சொல்லை உச்சரிக்க முன்னே, ஒரு சொல் சிந்திக்க வைத்தது. வெண்முரசு! 

அதையே நீதுஜனும் சொன்னான் "இது உனக்கு ஒரு வாய்ப்பு. வெண்முரசை முழுமையாக வாசித்தவர்கள் மிகக்குறைவே. திகட சக்ரவில் பங்குபற்றுவோர், பார்வையாளர்கள் அத்தனை பேரும் தமிழார்வம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு பத்து பதினைந்து பேர் வாசிக்க ஆரம்பித்தாலே அது ஒரு சாதனை தான்.  இலங்கைத் தமிழ் வாசகப் பரப்பில் வெண்முரசு கவனம் பெறவும் வாய்ப்பிருக்கிறது" என்றான் அவன்.

"வெண்முரசை ஓரளவுக்கேனும் கவனிக்க வைத்தல்" என்றதும் தயக்கத்தை வெட்டியெறிந்து விட்டு சம்மதித்து விட்டேன். செப்டம்பர் 18ஆம் திகதி நிகழ்நிலையில் (online) பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக் கல்வி முடித்த இளைஞர்களைக் கொண்டு விவாதம். அது முடிந்ததும் நான் வெண்முரசு பற்றிய சிறு அறிமுகம் செய்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று முடிவு. திகட சக்ர அமைப்பின் நிறுவுநர் திரு. தயாநிதி உதயசங்கர் ஏனைய வழிகாட்டல்களைச் சொன்னார். தமிழின் பெருஞ்சாதனைகளில் ஒன்றான வெண்முரசை விவாதத் தலைப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் உதித்தது அவருக்குத் தான்.  



வெண்முரசு, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட புதினம்.  உலகின் இன்றுள்ள மிக நீளமான நாவல்களுள் ஒன்று அது.  மொத்தம் 26 நூல்கள், சுமார் 22,400 பக்கங்கள்! இதைப் படிக்கும் நாம் ஒவ்வொருவரும் நமக்கான வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த போது, தமிழ் கூறு நல்லுலகில் நடந்துகொண்டிருந்த மிகப்பெரும் சாதனைகளுள் ஒன்று, வெண்முரசு. நாளுக்கொரு அத்தியாயமாக 2014 ஜனவரியிலிருந்து 2020 யூலை வரை தொடர்ச்சியாக நிகழ்நிலையில் ஆறரை ஆண்டுகள் இது வெளியானது. ஒவ்வொரு அத்தியாயமும் நள்ளிரவு 12 மணிக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகும். 24 நூல்களை அன்றன்றைக்கே வாசித்திருக்கிறேன். இறுதி இரு நூல்களையும்  உடனுக்குடன் படிக்க முடியவில்லை. சற்று தாமதமாகவே படித்த போதும், அவற்றை முழு நூலாக வாசித்து முடித்ததால், சிக்கலான மொழிநடை கொண்ட நாவலொன்றை, அன்றன்றைக்கு ஒவ்வொரு அத்தியாயமாகப் படிப்பதிலும், ஒட்டுமொத்தமாக முழு நூலாகப் படிப்பதிலும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. 

வெண்முரசின் கதைக்களம் மகாபாரதம். மகாபாரதக் கதையை முழுமையாக நாவல் வடிவில் மீளச் சொல்கிறது வெண்முரசு.  மேலே என் திகட சக்ர நிகழ்வுக்கு நண்பன் நீதுஜன் உதவியது இதில் தான். அவன் வெண்முரசின் ஆரம்ப வாசகன் என்றாலும் கிசாரி கங்குலியின் மகாபாரதத்தை முழுமையாகப் படித்தவன். கிசாரி கங்குலியின் மகாபாரதம் தான் இன்றுள்ள முழுமையான மகாபாரதப் பதிப்புக்களில் தலைசிறந்தது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் திரு.அருட்செல்வப்பேரரசனின் மொழியாக்கத்தில் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது. மூல மகாபாரதத்தின் முக்கியமான இடங்களை நீதுஜன் விளக்க, வெண்முரசில் அது எவ்வாறு மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று நான் விவரிப்பேன். இரண்டிற்குமிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை விவாதிப்போம். இப்படித் தான் திகட சக்ர விவாத நிகழ்வுக்கு என்னால் தயாராக இயன்றது.

இதில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது என்னவென்றால், வெண்முரசு எழுதப்பட ஆரம்பித்த துவக்க காலத்திலிருந்தே அப்புதினம் கடும் சர்ச்சைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. அதற்கு அந்நூலின் ஆசிரியர் மீது சிலர் கொண்டுள்ள காழ்ப்பும் காரணம். “மகாபாரதத்தை மீண்டும் எழுதுகிறாராம், அதை வாசிப்பதற்குப் பேசாமல் நான் மகாபாரதத்தையே படித்து விடுவேனே” என்று இன்றைக்கும் பலர்  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “வெண்முரசு ஒரு நவீன நாவல். பின்நவீனத்துவப் பார்வையில் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்ய முயல்கின்றது” என்று தான் அதன் ஆசிரியர் சொல்கிறார். இந்த ‘மறு ஆக்கம்’ என்ற பதம் இலக்கிய வாசகர்கள் உட்பட நிறையப்பேருக்குப் புரியவில்லை. 


மறுவாக்கம்

மூலப்படைப்பொன்றைப் பின்பற்றி பிற்காலத்தில் வெவ்வேறு படைப்புகள் எழுதப்படுவது ஏற்கனவே நம் மரபில் இருப்பது தான். மூலநூலொன்றை "முதல் நூல்" என்றும் அதைப் பின்பற்றி எழும் நூல்களை "வழிநூல்" என்றும் வகைப்படுத்துகிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் சொல்லும் வழிநூல்கள் நான்கு வகைப்படும். தொகுத்தல் நூல், விரித்தல் நூல், தொகைவிரி நூல், மொழிபெயர்த்தல் நூல். வழிநூல் என்பதை இன்றைய காப்புரிமைச் சட்டங்களில் பயன்படும் "வருவிப்புப் படைப்பு" (Derivative Work) என்ற பதத்தோடு ஒப்பிடலாம். 

தமிழ் மரபில் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இருக்கிறது. சுந்தரரின் திருத்தொண்டத்தொகையை விரித்து நம்பியாண்டார் நம்பி, "திருத்தொண்டர் திருவந்தாதி" எழுதினார். திருத்தொண்டத்தொகையை தொகுத்தும் விரித்தும் சேக்கிழார் பெரியபுராணம் இயற்றினார். அந்தப்  பெரியபுராணம் "உபமன்யு பக்தவிலாசம்" என்ற பெயரில் வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. மாதவச் சிவஞான முனிவர் பெரியபுராணத்தைத் தொகுத்து, "திருத்தொண்டர் திருநாமக்கோவை"யைப் படைத்தார்.  ஆக, இவை அத்தனைக்கும் மூலநூல், சுந்தரரின் திருத்தொண்டத்தொகை. ஏனையவை அந்த மூலநூலின் வழிநூல்கள்.

மூலநூலொன்றிலிருந்து இன்னொரு நூலை வேறு முறைகளிலும் உருவாக்கலாம். அந்த முறைகளில் அடங்கும் புலமைத்திருட்டு / இலக்கியத்திருட்டு (Plagiarism), தழுவல் (Adaptation), மறு ஆக்கம் (Retelling) முதலிய வரையறைகளுக்கிடையிலான ஒற்றுமை - வேற்றுமைகள் பற்றி முன்பொருமுறை ஜெயமோகனே விரிவாக எழுதியிருக்கிறார்.

புலமைத்திருட்டு - மூலப் படைப்பைக் குறிப்பிடாது அல்லது மறைத்து, அப்படைப்பின் கருவையோ சாரத்தையோ திருடி அப்படியே தன் படைப்பாகக் காட்டிக் கொள்வது.

தழுவல் - மூலப் படைப்பைக் குறிப்பிட்டு, அல்லது குறிப்பிடாமல் அதன் கருவை அல்லது சாரத்தை புதியதோர் படைப்பில் பயன்படுத்துவது.

மறுவாக்கம் - முதல் படைப்பைக் குறிப்பிட்டு, நூலாசிரியனின் பார்வைக்கோணத்தில் அதன் கருவை அல்லது சாரத்தை அப்படியே திரும்பச்சொல்வது. இது பின்நவீனத்துவ இலக்கிய வகைகளில் ஒன்று. 

மூலநூலில் வெளிப்படையாகக் கூறப்படாத எழுத்தாளனின் மாறுபட்ட வாழ்க்கைப் பார்வையொன்று மறு ஆக்கத்தில் மேலதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கும். மூலப்படைப்பை, முற்று முழுதாக சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் மீளச்சொல்கிறது என்பதே மறுவாக்கத்தின் சிறப்பாகும். இந்த விதத்தில் தான், வெண்முரசும் மகாபாரதத்தின் மறுவாக்கம் ஆகின்றது. 

மகாபாரத மறுவாக்கம்
வெண்முரசு, மகாபாரதப் போருக்கு மாறுபட்ட பார்வைக்கோணங்களை வழங்குகிறது. அதை இப்படி இரண்டாகத் தொகுக்கலாம்.  

முதலாவது, மகாபாரத யுத்தம் என்பது கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம். அந்தக் கொள்கைகளை பழைய வேதங்கள் எதிர் புதிய வேதம் என்று வரையறுக்கின்றது வெண்முரசு. மகாபாரத யுத்தம், வேதங்களை ஒட்டியும் வெட்டியும்  உபநிடதங்கள் தோன்றிக்கொண்டிருந்த நிலைமாறு காலகட்டத்தில் நடந்தது. சடங்குகளை மையமாகக் கொண்டிருந்த வேதம் ஆசாரவாதத்தில் உறைந்துபோயிருந்தது. வேதத்தின் தொடர்ச்சியான புதிய வேதம், தன்னை வேதத்தின் இறுதி முடிவு (வேத+அந்தம் = வேதாந்தம்; வேதமுடிபு) என்று அறிவித்துக் கொண்டது. வேதத்தைக் குலநெறிகள், மரபான வழக்கங்கள் மூலம் வலியுறுத்திக்கொண்டிருந்த பீஷ்மர், துரோணர், துரியோதனன் முதலியோர் வேதத்தின் பிரதிநிதிகள். தலைசிறந்த வேதாந்த நூலான பகவத் கீதையைப் படைத்த கண்ணன் வேதமுடிபுக் கொள்கையின் நேரடிப் பிரதிநிதி. அவன் ஆதரித்த பாண்டவத் தரப்பின் வெற்றியுடன் வேதாந்தம் வேதத்தை வென்று வெற்றிக்கொடி நாட்டுகிறது.

இரண்டாவது, மகாபாரதப் போரை, பழைய அரசுகளுக்கும் புதிய அரசுகளுக்குமான போராட்டமாகச் சித்தரிக்கிறது வெண்முரசு. மகாபாரத கால நாடுகளான அத்தினாபுரி, மகதம், அங்கம், காசி முதலியவை சிந்து - கங்கை - யமுனைச் சமவெளிகளை அண்டி விரிந்தவை. இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழைய அரசுகளான "ஜனபத" அரசுகள் அங்கு தான் உருவாகின. அந்நாடுகளை ஆண்ட அரசர்கள் பரம்பரை பரம்பரையாக தாங்களே மெய்யான தூய சத்திரியர் என்றும், வேதங்களின்  மூலம் தாம் ஆளும் அதிகாரம் பெற்றவர்கள் என்றும் கூறி வந்தனர்.

ஆனால் வேடர், மீனவர், அரக்கர், இடையர்  முதலிய குலங்கள் தொடர்ந்தும் புதிய புதிய அரசுகளை உருவாக்கி வந்தன. இடையர்களின் யாதவ குலத்தில் உதித்த வாசுதேவ கிருஷ்ணன் ஒடுக்கப்படும் குலங்களை சத்திரியர்களாக அங்கீகரிக்கும்  "நாராயண வேதத்தின்" ஆசிரியனாக இருந்தான். அவன் துவாரகையில் யாதவப் பேரரசை அமைப்பதுடன், பழைய சத்திரியர் - புதிய சத்திரியரிடையையேயான முறுகல்  உச்சமடைகிறது. 

ஒரு எளிய பங்காளிச் சண்டையைக் காரணமாக வைத்துக் கொண்டு இந்த இரு தரப்புகளும் "வேதம் - புதிய வேதம்" சார்ந்து இரண்டு அணிகளாகின்றன. தங்களுக்கு வேதம் கொடுத்த அதிகாரம் தங்களிடமே இருக்கவேண்டும் என்று உரிமைகோரும் தொல் சத்திரிய அரசுகள் வேதத்தின் தரப்பாக கௌரவர் பக்கம் அணி திரள்கின்றன. அதன் முக்கிய கண்ணிகளாக சத்திரிய காந்தார அரசில் தோன்றிய சகுனியும் பிராமணரான கணிகரும் அமர்கிறார்கள். 

மறுபுறம் உறைந்துபோன வேதத்துக்கும் அதன் பெயரில் நிகழ்த்தப்பட்ட 'பாஞ்சாலி துகிலுரிதல்' எனும் மாபெரும் பெண்பழிக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் அசுரர், நிஷாதர் முதலிய புதிய சத்திரியர்களின் கூட்டமைப்பு  பாண்டவர்களுக்குச் சார்பாக அணிதிரள்கிறது.  யாதவக் குலத்தில் பிறந்த குந்தி தேவியும், வேதாந்தக் கொள்கையின் ஆசிரியனான அவள் மருகன் கண்ணனும்  அந்த அணியின் முதன்மையான இராஜதந்திரிகள். 

பாரதப்போர் நடக்கிறது. பாண்டவர்கள் வெல்கிறார்கள். வேதமுடிபுக்கொள்கை வெல்கிறது. வென்ற தரப்பான யாதவர்கள் கண்ணனை பெருந்தெய்வமாக வளர்த்தெடுக்கிறார்கள். நவீனயுகத்தில் மாபெரும் உலகப்போர்களுடன் உலகில் முடியாட்சி மறைந்து குடியாட்சி எழுந்தது போல, பாரதப்போருடன் சிறு சிறு சத்திரிய அரசுகள் மறைந்து சூத்திரப் பேரரசுகள் இந்தியாவில் எழுகின்றன. அதற்கான சமூக - பொருளாதார - அரசியல் காரணிகளை "வேதம் எதிர் வேதமுடிபு" என்ற கருத்தியல் மோதலின் பின்னணியில் திறம்பட ஆராய்கிறது வெண்முரசு.

இந்த விரிவும் ஆழமும் மூல மகாபாரதப் பிரதியைப் படிக்கும் போது நமக்கு முழுமையாகக் கிட்டுவதில்லை. அங்கிருப்பது தகவல்களின் குவியல். "மகாபாரதம் தர்மமே வெல்லும் என்பதைச் சொல்கிறது" எனும் வழிபாட்டு மனோநிலையில் மகாபாரதத்தை பக்தியுடன் நெருங்கும்  வாசகர்களுக்கு அது போதுமானது. ஆனால் ஒரு நவீன இலக்கிய வாசகனுக்கு இன்றுள்ள வியாச பாரதம், பக்தி இலக்கியமாக, இரண்டாயிரமாண்டு பழைய நூலாக, பெரும்பாலும் ஒவ்வாமையையும் ஏமாற்றத்தையுமே அளிக்கின்றது. உரிய பயிற்சியும் பக்குவமும் இல்லாவிட்டால் அது கூறவரும் சில கருத்துக்களை அவனால் சமகாலத்திற்குப் பொருத்திப்பார்க்க முடியாது.  மகாபாரதத்தை மறுவாக்கம் செய்யவேண்டிய தேவை ஏற்படுவது இதனால் தான்.  இந்த இடைவெளியையே வெண்முரசு நிரப்ப முயல்கின்றது என்று சொல்லலாம்.

சரி. நாம் இனி இரண்டு விடயங்களைப் பார்த்தால் போதும். வெண்முரசை ஏன் வாசிக்கவேண்டும்? அப்படி வாசிக்கும் போது நாம் முகம் கொடுக்கும் சவால்கள் என்னென்ன? இந்த இரு கேள்விகளுக்கும் விடையளித்தால், வெண்முரசின் சமகாலத்தேவையை நாம் பூரணமாக உணர்ந்துகொள்ளமுடியும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வெண்முரசை ஏன் வாசிக்க வேண்டும்?

வடிவமைப்பு: திரு.இளம்பரிதி 

1. அதிலுண்டு ஒடுக்கப்பட்டோரின் குரல்
நவீன வாசகன் வெண்முரசைக் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஐந்தைச் சொல்லலாம். முதன்மையான காரணம், அது பக்கச்சார்பற்றது என்பது தான். வழக்கமாகச் சொல்லப்படும் பாண்டவர்கள் நல்லவர்கள், கௌரவர்கள் தீயவர்கள் என்ற கருப்புவெள்ளைப் படம், வெண்முரசில் இல்லை.  மகாபாரதத்தின் எதிர்மறைப் பாத்திரங்கள் ஒவ்வொன்றினதும் தரப்பு நியாயங்களை நடுநிலையாகச் சொல்லிச் செல்கிறது வெண்முரசு. 

இங்கு கருணன், துரியோதனன், சகுனி ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைப்பாட்டுக்கான காரணம் திருத்தமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான பார்வையில் அருச்சுனனையும் பீமனையும் கர்ணனையும் கதாநாயகர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் சராசரி வாசகன் கூட துரியோதனனும் ஏனைய கௌரவர்களும் செத்துவிழும் போது கண்ணீர் விட்டுக் கதறுகிறான். அருச்சுனன் மீது, பீமன் மீது, ஏன் கண்ணன் மீது கூட அவன் சீற்றம் கொள்ளும் தருணங்கள் அங்கு வருகின்றன.

மகாபாரதத்தில் மிகச்சிறுபொழுதே வந்து செல்லும் பாத்திரங்கள் இங்கு இரத்தமும் சதையுமாக பேராளுமைகளாக வலம் வருகிறார்கள். எளிய காவலர்களின் கசப்பான வாழ்க்கையும், அந்தப்புரத்தின் இருளிலேயே வாழ்ந்து மறையும் சேடிப்பெண்களின் துயரும் நம் முன் திரைப்படங்களாக நகர்கின்றன. ஏகலைவனின் நிஷாத குலம், இரணியன், சூரபதுமன், மாவலி முதலிய மாவீரர்கள் தோன்றிய அசுர குலம், நஞ்சாலேயே நசுக்கப்படும் நாகர் குலம், என்று ஒடுக்கப்பட்ட அத்தனை குலங்களின் தரப்பு நியாயங்களும் ஓங்கி ஒலிக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் மாத்திரமன்றி, ஒடுக்கப்பட்ட பாலினங்கள் மாற்றுத்திறனாளிகளின் குரலும் வெண்முரசில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாற்புதுமையினர் - மாற்றுத்திறனாளிகள்
பெண்ணாய்ப் பிறந்து ஆணாய் வாழும் சிகண்டி, பிருகன்னளையாய் அஞ்ஞாத வாசம் செய்யும் அருச்சுனன், ஸ்தூனகர்ணன் எனும் திருநங்கைத் தெய்வம், களப்பலியாகும் அரவானை மணந்துகொள்ளும் உரோகிணி எனும் "ஆணிலி", அரசகுலத்தாரை குளிப்பாட்டும் - அலங்காரம் செய்யும் திருநங்கைகளான "சமையர்கள்" என்று, பாலினச் சிறுபான்மையினரைச் சேர்ந்த பல அற்புதமான பாத்திரங்கள் வெண்முரசில் வருகின்றன. விழியின்மை கொண்ட திருதராட்டிரன்,  கண்ணன் பெற்றெடுத்த எண்பது மைந்தர்களுக்குள்ளும், அவனது மனதுக்குப் பிடித்த 'முரளி' எனும் மாற்றுத்திறனாளி மகன் ஆகியோர் பற்றிய தகவல்கள், உடற்குறை தொடர்பான நம் பொதுமனப்பாங்கு எண்ணங்களை அடியோடு மாற்றியமைக்கக் கூடியவை.

பெண்கள்
அத்தனைக்கும் மேல், இது பெண்களைப் பேச அனுமதித்த ஒரு புதினம். பெண்களின் உளவியலை இத்தனை அப்பட்டமாகவும் நுணுக்கமாகவும் சித்தரித்த நாவல், வெண்முரசாகவே இருக்க இயலும்.  பெண்மை சிறுமை செய்யப்பட்டால் அதற்குக் கழுவாயாக கணக்கிறந்த ஆண்களின் குருதி ஆறாக ஓடவேண்டும் என்கிறது வெண்முரசு. ஏனென்றால், அம்பையும் திரௌபதியும் வேறு எதற்காகவுமல்ல; பெண் என்பதாலேயே அவமானப்படுத்தப்பட்டார்கள்.

அம்பை



மகாபாரதக் கதை தெரிந்த எல்லோருக்குமே அம்பையைத் தெரியும். வழக்கமான மகாபாரதப் பிரதிகளில் உள்ளது போல், பீஷ்மரால் சிறையெடுக்கப்பட்டு அவர் அனுமதியுடன் சால்வனிடம் சென்று, பின் அவனாலும் மறுதலிக்கப்பட்டு வேறு வழியின்றி பீஷ்மரிடம் தன்னை மணக்குமாறு வந்து நின்ற நிலையற்ற உள்ளம் கொண்ட பெண் அல்ல, வெண்முரசின் அம்பை.  

தன்னை சால்வனிடம் செல்ல பீஷ்மர் அனுமதித்த அந்தக் கணத்திலேயே அவள் அவர் மீது காதல் கொண்டுவிட்டாள். ஒருவேளை சால்வன் அவளை மணந்திருந்தாலும், ஆழத்தில் பீஷ்மர் மீதான காதலை மறைத்து கொண்டே அம்பையால் அவனோடு வாழ்ந்திருக்க முடியும். சால்வன் மறுத்ததும் பெருங்காதலுடன் மீண்டும் பீஷ்மரிடம் வருகிறாள். ஆனால் தன் சபதத்தை நினைத்து தடுமாறும் பீஷ்மர் அவளது காதலை வெல்ல எடுக்கும் ஆயுதம் ஒன்று தான். அம்பையின் பெண்மையை இழிவு செய்வது. வெண்முரசில் ஆண் - பெண் உறவின் நுண்மையான சரடுகள் வெளிப்படும் சிறப்பான இடங்களில் ஒன்று அது.

“ஏன்?” என்று கண்களை சுருக்கியபடி அம்பை கேட்டாள். “ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை” என்றார் பீஷ்மர். அம்பை உதடுகளை இறுக்கியபடி “என்னை அவமதிக்க நினைக்கிறீர்களா?” என்றாள். “…இளவரசி நீங்கள் கேட்ட கேள்விக்கு இந்த பதிலே போதுமென நினைக்கிறேன். ஆணை வெற்றிகொள்பவள் பெண், பெண்மை மட்டுமே கொண்ட பெண்.”                                                 


அம்பை மனம் திரிந்தவளாக கதறியழுதபடி அங்கிருந்து விலகிச்செல்கிறாள். அவள் பெண்மை அடைந்த அவமானமே குருசேத்திரப் பெருவேள்விக்கென மூட்டிய முதல் நெருப்பு - முதற்கனல்.  

இரண்டாம் கனல், பாஞ்சாலி துகிலுரிதல். அந்தத் தருணத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறது வெண்முரசு. சபையில் ஒற்றையாடையுடன் நிற்கும் திரௌபதி முன் துரியோதனனும் கர்ணனும் உதிர்க்கும் சொற்கள் ஆண்மகனின் ஆழத்திலுள்ள கீழ்மையின் வெளிப்பாடுகள்.


"திரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ! விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய்? உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்?” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்று அமர்ந்து “அன்னையா? நீயா? நீ விலைமகள். ஆண் ஒருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே குலப்பெண். நீ ஐவரை அணைந்தவள். ஐநூறு பேரை உளமறிந்திருப்பாய்…” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்… நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான். கர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடல் இருக்கையில் பிற நால்வருடனும் உளம் இருக்குமா?” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடன் இருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான்." 
                                                                                                                 - பன்னிரு படைக்களம் 87

பாஞ்சாலியை அவர்கள் குலமகள் அல்ல, விலைமகள் என்கிறார்கள். ஒரு பேரரசி என்பதையும் மறந்து அவள் ஆடையைக் களைகிறார்கள். அவள் சிந்திய கண்ணீரின் சூட்டில் அத்தினாபுரி எரிகிறது. அப்பால் அந்தச் சூட்டில் எழுந்த குருசேத்திரத்து வேள்வித்தீயில் ஆகுதி ஆகிறார்கள் கர்ண துரியோதனனாதியர்.


அடுக்கப்பட்ட கண்ணாடி விம்பங்கள் போல, வெண்முரசின் பெண்கள் பெருகிக்கொண்டே செல்கிறார்கள். அத்தனை பேருமே தனித்தனி பாத்திர வடிவமைப்புக் கொண்டவர்கள். ஆனால் எங்கோ ஓரிடத்தில் இவர்கள் எல்லோருமே ஒருவர் தானோ என்றும் எண்ண வைப்பவர்கள். குந்தி, காந்தாரி, பானுமதி, சுபத்திரை, சத்தியபாமை, அசலை, தாரை, லட்சுமணை, சம்வகை என்று தன்னாளுமையும் நிமிர்வும் கொண்ட பெண்களின் வரிசை வந்துகொண்டே இருக்கிறது. வெண்முரசின் கதைக்களத்துக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த  தேவயானி, சர்மிஷ்டை, அசோக சுந்தரி, தமயந்தி, முதலிய பெண்ணரசியரும் தனித்தனி ஆளுமைகளுடன் வலம் வருகிறார்கள். அரசியல் சதுரங்கத்தின் உள்ளும் வெளியிலும் நின்று கொண்டு, அரசியராக, காதலியராக, மனைவியராக, அன்னையராக, புதல்வியராக, அத்தனைக்கும் மேல், ஆடவரை ஆளும் எளிய பெண்களாக அவர்கள் ஆடும் ஆட்டங்கள் அத்தனையும் இரசிக்க வைப்பவை.




2. சுவையான யதார்த்தச் சித்தரிப்புகள்
வெண்முரசின் இரண்டாவது தனித்தன்மை அதன் யதார்த்தப்பாங்கு. வெண்முரசை "மாய யதார்த்தவாதம்" (Magic realism) எனும் இலக்கிய வகைமைக்குள் அடக்க முடியும். அதாவது மிகைப்புனைவுகளும் மீமாந்தச் செயல்களும் விரிவாக வர்ணிக்கப்படும் போதும், அவை பெரும்பாலும் யதார்த்தத்திற்கு சாத்தியமானவையாகவே விவரிக்கப்படுகின்றன. மாய யதார்த்தவாதம் எனும் கலைச்சொல்லைப் பயன்படுத்தாமல், வெண்முரசை இந்தியப்பண்பாடு சார்ந்து 'புராண யதார்த்தவாதம் - Puranic realism' எனும் வகைப்பாட்டிலேயே அடக்க வேண்டும் என்பார் அதன் நூலாசிரியர்.

உதாரணமாக, வேத வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் தன் தந்தத்தை ஒடித்து எழுதிய நூல் மகாபாரதம் என்பது மூலக்கதை. மதயானை ஒன்று கல்லால மரத்தில் கொம்பால் குத்தியபோது உடைந்து சிக்கிய அதன் தந்தத்தை எடுத்து "ஓம்" என்று எழுதி மகாபாரதத்தைத் தொடங்குகிறார் வியாசர் என்பது வெண்முரசின் யதார்த்தவாதம். பாஞ்சாலி துகிலுரிதல், தருமரின் தேர் பொய் சொன்னமையால் தரையில் உருண்டோடியமை, ஜயத்ரதனின் மறைவு, சாம்பனுக்கு சாபத்தால் உலக்கை பிறந்து யாதவக்குலம் அழிவது, அத்தனையும் நடைமுறைக்குச் சாத்தியமாகவே வெண்முரசில் விவரிக்கப்படுகின்றன. 

பீமன், துரியோதனன் போன்றோரின் பிறப்பு, கர்ணனின் கவசகுண்டலங்கள் போன்ற இடங்கள் புனைவின் உச்சம் எனினும் "நடக்கச் சாத்தியமானவை" என்ற எண்ணத்தையே ஏற்படுத்தக் கூடியவை. வெண்முரசில் மிகுபுனைவுகள், மீமாயம் இடம்பெறுகின்ற இடங்களில் எல்லாம், பிரதான பாத்திரங்கள், கனவிலோ, மயக்கத்திலோ, கள்மயக்கிலோ, பசியிலோ, தூக்கக் கலக்கத்திலோ, தான் அக்காட்சிகளைக் காண்கின்றன. அல்லது உருவெளித்தோற்றமொன்றைக் காணச் சாத்தியமுள்ள உளம் பாதிக்கப்பட்ட நிலையில் அவை இருக்கின்றன. எனவே அவை யதார்த்தமாக இப்படித்தான் நடந்திருக்கும் என்றே வாசகனின் தருக்க மனம் முடிவெடுக்கிறது. கார்க்கோடகன் முன்னிலையில் தன் மூத்த மைந்தன் கர்ணனைத் துறக்கும் முடிவை குந்தி எடுக்கும் இடம், அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்று.

இந்த யதார்த்தவாதம், நவீனவாசகனுக்கு ஆர்வமூட்டக்கூடியது. ஏனெனில் மானுட மனத்தின் ஆழத்திலுள்ள குழந்தையொன்று இரசிக்கும் மிகுபுனைவுக் கதை (Fantasy) ஒன்றையும், வளர்ந்த ஒருவன் கட்டியெழுப்பக்கூடிய பகுத்தறிவுக்குச் சாத்தியமான கதை ஒன்றையும் அந்த வாசகன் ஒரே நேரத்தில் வாசிக்கிறான். வெண்முரசு வாசகன் பெரும்பாலும் முன்பே மகாபாரதக்கதையை அறிந்தவனாயிருப்பதால், குறித்ததொரு மகாபாரத மாயாசாலச் சம்பவம் வெண்முரசில் எவ்வாறு இயல்பாக இடம்பெறுகிறது என்ற எதிர்பார்ப்பு, வாசிப்பை இன்னும் சுவையாக்குகின்றது. அவற்றைப் படித்து முடித்ததுமே "வேறெப்படி இது நிகழமுடியும்!" என்ற குதூகலத்தோடே  மகாபாரதத்தின் அரிய தருணங்களை வெண்முரசில் கடக்க இயலும். 

3. அவிழ்க்கப்படும் உளவியல் சிடுக்குகள்
வெண்முரசின் மூன்றாவது தனித்துவம், அது ஏராளமான உளவியல் படிமங்களையும் குறியீடுகளையும் கொண்டது என்பது தான். காலங்கள் மாறினாலும் மனித மனங்கள் மாறுவதில்லை.   நட்பு, காதல், பாசம், காமம், வன்முறை, கீழ்மை, அத்தனையுமே அன்றும் இன்றும் ஒன்று தான்.  வெண்முரசின் பெரும்பாலான பாத்திரங்களோடு நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அந்தப் பாத்திரங்கள் கடந்துவந்த சங்கடங்களை, புறக்கணிப்புகளை, நாமும் கடந்து வந்திருப்போம். சில பாத்திரங்களின் கீழ்மையும், வஞ்சமும் நமக்குள் கனன்று எரிவதை எங்கோ உணர்ந்து திடுக்கிடுவோம். மனித உணர்வுகளுக்கு வெண்முரசு கொடுக்கும் இத்தனை வெளிப்படையான இடம்  மகாபாரதத்தில் இல்லை. 

வெண்முரசு போன்ற பேரிலக்கியமொன்றை வாசித்து முடிக்கும் போது, அதில் வந்து சென்ற ஆயிரக்கணக்கான ஆளுமைகளோடு மிக நெருக்கமாகப் பழகிய உணர்வு ஏற்படுகிறது. நிஜ வாழ்வில் நம்மை கடக்கும், கடந்த அத்தனை நபர்களையும் வெண்முரசு காண்பித்த ஆயிரம் பேரில் ஒருவராகக் கண்டுகொள்ள முடியும். அது தருகின்ற அறிதலும் பக்குவமும் எளிய மானுடராக நமக்கு அத்தனை பிரமாண்டமானது. எத்தகைய மனிதரையும், எத்தகைய சூழலையும் எளிதாகச் சந்திக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வெண்முரசு வாசகனுக்கு இயல்பாகக் கைகூடுகின்றது.

பொதுமனப்பாங்குகளை (Stereotype) உடைத்தெறியும் வல்லமையையும் வெண்முரசு தன் வாசகர்களுக்குத் தருகின்றது. உதாரணமாகச் சொன்னால், கருநிறம். தமிழர்களைப் போல், தங்கள் கருநிறம் மீது தாழ்வு மனப்பான்மை கொண்ட வேறோர் இனம் இருக்கமுடியாது. அண்மையில் "தமிழணங்கு" சர்ச்சையில் கொந்தளித்த அத்தனை பேரையும் ஆழத்தில் கொதிக்கச் செய்தது தமிழன்னையை  அழகற்ற - இழிவான கருப்புத் தோலில் சித்தரித்துவிட்டார்களே என்பது தான்.
திரௌபதி

ஆனால் வெண்முரசில் கருப்பு மீண்டும் மீண்டும் பேரழகின் நிறமாகவே வருகிறது. கண்ணன், அருச்சுனன், கருணன் முதற்கொண்டு கட்டழகி திரௌபதி வரை எல்லோருமே கருப்பர்கள் தான். மகாபாரதமே பேரழகனாகச் சொல்கின்ற நகுலனும் கருப்பன். கருப்புத் தோலை அத்தனை அழகாக வர்ணிக்கிறது வெண்முரசு. குறிப்பாக திரௌபதியின் பளிங்குக் கருநிறம் வருணிக்கப்படும் இடங்களில் கரியவர்கள் தம்மை நினைத்து பெருமிதம் மட்டுமே கொள்ள முடியும். வெண்முரசின் வாசகன் பின்பொருமுறை எப்போதும் கருப்புத்தோலுக்காக சகமனிதன் ஒருவனை நகையாடமாட்டான்.



4. ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்பட்ட அறிவுத்தொகை
வெண்முரசு, இந்திய மற்றும் தமிழ் மரபிலிருந்து நிகரற்ற அறிதல்களைக் குவித்து வைத்திருக்கின்றது. வெண்முரசின் "களிற்றியானை நிரை" என்ற ஒரு நூலின் பெயர், அகநானூற்றில் வருவது. "மாமலர்", "இருட்கனி", "முதலாவிண்" உள்ளிட்ட நூல்களின் பெயர்களும் தமிழ் இலக்கியங்களின் பாதிப்பால் உருவானவை தான். திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், வைணவ - சைவ பக்தி இலக்கியங்கள் அத்தனையிலும் இருந்து மேற்கோள்கள், உவமைகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

கீதையில் வரும் "பெருவெள்ளம் வரும் போது, உங்கள் கிணறுகளால் என்ன பயன்?" என்ற அரிதான உவமை வெண்முரசில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருகிறது. வேதங்கள், உபநிடதங்கள், அர்த்த சாத்திரம், மனுசுமிருதி உள்ளிட்ட வடமொழி நூல்களில் பதிவாகியுள்ள கணக்கிறந்த பண்டைய மரபுகள் வெண்முரசில் வருகின்றன. உதாரணமாக, நியோக முறையில் தருமனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர், பாண்டுவுடனும் மாத்திரியுடனும் குந்தியின் சேடிப்பெண் அனகை மேற்கொள்கின்ற உரையாடல் மிக முக்கியமானது.

"நீர், நெருப்பு, காற்று, மண், வான் போல குழந்தையும் இயற்கையின் அழிவில்லாத முதலிருப்புகளில் ஒன்று. ஆகவே மண்ணில் பிறந்துவிட்ட அத்தனை குழந்தைகளையும் மானுடகுலம் முழுமனதுடன் உவந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது எவ்வகையில் எவரால் பெறப்பட்டிருந்தாலும் அது தெய்வங்களால் பேணப்படுவதே. எங்கு பிறந்திருந்தாலும் மூதாதையரால் வாழ்த்தப்படுவதே. ஒரு குழந்தையை விலக்கும் கரம் உறவுகளை மூதாதையரை தெய்வங்களை விலக்குகிறது"

என்று மக்கட்செல்வத்தின் அருமையைச் சொல்லும் அனகை, மணவாழ்க்கைக்கு அப்பால் ஒரு கணவன் மனைவி பெற்றெடுக்கக் கூடிய பன்னிரண்டு வகையான மைந்தர்களைப் பட்டியலிடுகிறாள். அந்தப் பட்டியல் அப்படியே மனுசுமிருதியில் இடம்பெற்றிருக்கிறது. சமகாலத்தில் பலரையும் அருவருப்படையச் செய்யும் பட்டியல் அது. ஆனால் அந்தக்கால மக்களிடம் குழந்தைப்பேறு எத்தனை அருமையான ஒன்றாக மதிக்கப்பட்டது என்பதை ஆய்வதற்கு அது முக்கியமான தகவல்.

மகாபாரதம் என்றதும் நாம் வெறுமனே பாரத யுத்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறோம். ஆனால் அத்தனை ஆயிரம் பேர் போர்க்களத்தில் பங்குபற்றினால் வீரர்கள் எவ்வாறு பாடிவீடு அமைத்துத் தங்கியிருப்பார்கள், அவர்களுக்கான உணவுகள் எப்படி வந்திருக்கும், காயமுற்றோர் எப்படி மருத்துவ உதவிகளைப் பெற்றிருப்பார்கள், இறந்த பிணங்களை எப்படி அப்புறப்படுத்தியிருப்பார்கள், போர்க்கருவிகள் பதினெட்டு நாளும் தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும், அவர்கள் குளித்தது எப்படி, மலசலம் கழித்ததெப்படி, யானைப்படை - குதிரைப்படை எப்படி கவனிக்கப்பட்டிருக்கும், என்பதெல்லாம் நாம் சிந்தித்தே இருக்காத விடயங்கள். வெண்முரசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதில், சும்மா புகுந்து விளையாடுகிறது என்றே சொல்லவேண்டும்.

வெண்முரசில் விலங்குகள், தாவரங்கள் வணிகம், அரசியல் பற்றிய  அரிய தகவல்கள் பல வருகின்றன. யானைகள், குதிரைகள் பற்றி நிறையத் தகவல்களைச் சேகரிக்க முடிகின்றது. சிறந்த சமையலை இன்றும் நளபாகம், பீமபாகம் என்றெல்லாம் சொல்வதுண்டு. நளன், பீமன் இருவருமே வெண்முரசில்  சமையல் செய்யும் காட்சிகள் அற்புதமாக இடம்பெற்றுள்ளன. குருசேத்திரத்தின் மருத்துவநிலைகளில் மருத்துவமும், இந்திரப்பிரஸ்தம் - துவாரகை போன்ற பெருநகரங்கள் அமைக்கப்படும் போது விரிவான கட்டிடக்கலையும் வருகிறது.  துவாரகை மூலம் கடல் வணிகம் எழுந்து வந்ததையும், பீதர் (சீனர்), சோனகர் (அரேபியர்), யவனர் (ஐரோப்பியர்), காப்பிரிகள் (ஆபிரிக்கர்) முதலிய சர்வதேச வணிகர்கள் இந்தியாவில் கூடத்தொடங்கியதும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றிலுமே தனித்தனியே முனைவர் ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளுமளவு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 


5. அற்புதமான வாசிப்பனுவபவம்
வெண்முரசு தருகின்ற வாசிப்பனுபவம் அபாரமானது.  உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் பார்ப்போம். இந்திரப்பிரஸ்தத்தில் பளிங்குநீர் மண்டபத்தில் துரியோதனன் தடுக்கி விழுந்த போது திரௌபதி சிரித்ததாலேயே அவன் வஞ்சம் கொண்டான் என்பது பாரதக்கதை. ஆனால் வெண்முரசில் இந்த இடம் எப்படி வருகின்றது, தெரியுமா?

துரியோதனன் அந்த சந்தர்ப்பத்தில் மனங்கனிந்து இருக்கிறான். பழைய பகையெல்லாம் மறந்து பாண்டவர்களை சகோதரர்களாக அணைத்துக்கொள்ளவேண்டும் எனும் பெருந்தந்தை மனநிலை.  அவன்  திரௌபதியைக் காணும் போது, அவளுக்கு வணக்கம் சொல்லச் செல்கிறான். விபரீதத்தை உணர்ந்து அவனைத் தடுக்கிறான் கருணன். கருணனை விலக்கி "நான் அவளுக்கு அயலோன் அல்ல. அவள் என் குலமகள்" என்று சொல்லி நடக்கும் போது தான் அவன் தரை என்று தவறாக எண்ணி பளிங்குநீரில் இடறி விழுகிறான்.

"அக்கணத்தில் உண்டாட்டுக் கூடமே பெருங்குரலில் சிரித்தது. துரியோதனனின் முகம் எதிர்பாராதபடி மூத்தவரால் அடிக்கப்பட்ட கைக்குழந்தையினுடையது போல கணக்காலத்தில் உறைந்து கர்ணனின் விழிகளில் நின்றது. அவன் நீரில் இறங்கி வெண்பளிங்கில் கால்வைத்து மீண்டும் நீரில் நடந்து துரியோதனனை தோள்பற்றி தூக்கினான். அவ்விசையில் திரும்பி அவன் திரௌபதியை விழிதொட்ட அதே கணத்தில் துரியோதனனும் அவளை பார்த்தான். விழிகள் நகைக்க இதழ்கள் ஏளனத்துடன் மெல்ல வளைய அவர்களை ஒருகணம் விழிதொட்டுவிட்டு அவள் திரும்பி விஜயையிடம் சொல்லிக்கொண்டிருந்த மொழியாடலை தொடர்ந்தாள்."                                                                                                 

துரியோதனன் வழுக்கி வீழ்ந்தபோது, திரௌபதி கலகலவென சிரிக்கவில்லை. சிரிப்பும் ஏளனமும் தென்படும் வெறும் ஒருகணப்பார்வையையே வீசுகிறாள்.  துரியோதனன் ஜென்மவிரோதிகள் முன் தடுக்கி விழுந்து அவமானமுற்றான் என்பதை விட, அப்படி அவமானப்படுவதற்கு ஒரு கணம் முன்பு, அந்த ஜென்மவிரோதிகளை உற்ற உறவுகளாய் அணைத்துக்கொள்ளும் அளவு, திரௌபதி "என் குலமகள்" என்று சொல்லுமளவு, மனம் விம்மிதமடைந்த நிலையில் இருந்தான் என்பது, இந்த வாசிப்பை  வேறொரு தளத்துக்கே கொண்டு செல்லக்கூடியது. போதாததற்கு துரியோதனனுடன் சேர்ந்து கர்ணனும் அவளது ஒருகண வஞ்சச் சிரிப்பைப் பார்த்து விட்டானல்லவா? அந்த ஏளனச் சிரிப்பு அவனுக்கும் சேர்த்துத் தானே? அவன் இறுதி வரை துரியோதனன் தரப்பிலேயே இருந்ததில் என்ன பிழை?  அந்தக் கணத்தில், தன்னால் அடைய முடியாத, தனக்குப் போட்டியாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பெண்ணின் ஒருகண அலட்சியப்பார்வை, அவளால் நிராகரிக்கப்பட்ட ஆண்மகனுக்கு பெருஞ்சிரிப்பாகத்தானே இருந்திருக்கும்? 


இப்படி நுட்பமான ஆயிரக்கணக்கான இடங்கள் வெண்முரசில் வருகின்றன. மூல மகாபாரதத்தில் இந்த வாசிப்பின்பம் அப்படி முழுமையாகக் கிடைக்காது. 


வெண்முரசை வாசிப்பதிலுள்ள சவால்கள்



1. சிக்கலான மொழிநடை
வெண்முரசை வாசிப்பதற்கு அதன் மொழிநடையில் சற்று பயிற்சி இருந்தாக வேண்டும்.  உதாரணமாக நூலாசிரியர் "Ba" உச்சரிப்பைக் குறிக்க ஃப என்ற வரிவடிவைப் பயன்படுத்துகிறார். "Bānu, Bālhika" முதலிய பாத்திரங்களின் பெயர்கள் "ஃபானு, ஃபால்ஹிகர்" என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் சங்கதப் பெயர்ச் சொற்கள் தவிர வடசொற்கள், வட எழுத்துக்கள் பெருமளவு தவிர்க்கப்பட்ட தூய தமிழ் நடை அது. சங்கதப் பெயர்களிலுமே கூட விஜயா, சர்மிஷ்டா, சுபத்ரா என்றில்லாமல், விஜயை, சர்மிஷ்டை, சுபத்ரை என்று ஐகாரப் பெயரீற்றுத் தமிழ் மரபே பின்பற்றப்பட்டிருக்கிறது.  வெண்முரசில் இடம்பெறும் தனித்தமிழ்ச்சொற்கள் ஆரம்பநிலை வாசகர்களுக்கு சற்று கடினமாக இருக்கக் கூடும். ஆனால் ஆர்வத்தோடு வாசிக்கும் போது, சில அத்தியாயங்களிலேயே அந்த மொழிநடை உள்ளே இழுத்து விடும். 

குறிப்பாக வெண்முரசின் நான்காவது நூலான நீலம், சந்தம் ஓடுகின்ற தாள நடையில் முழுக்க முழுக்க கவிதையாகவே எழுதப்பட்ட நூல். வரிகளை மீள மீள வாசித்தே புரிந்துகொள்ளக்கூடியவாறு வாசகனை அறைகூவும் பித்து முற்றிய  வரிகள் நீலத்தினுடையவை. அத்தகைய ஒரு நாவல் தமிழில் இனியும் இதற்குப்பின்பும் நீலம் ஒன்றே தான். வெண்முரசின் எழுத்துநடையை சவாலாக எடுத்து பயில்பவர்கள், தாம் எத்தகைய நவீன இலக்கிய மொழிநடையையும் வாசிக்கக் கூடியவர்கள் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியும். 

2. நாவலின் நீளம்

இருபத்தாறு நூல்கள், 22,400 பக்கங்கள் என்றதுமே உஷ்.... அம்மாடீ.... என்றிருப்பீர்கள். நமக்கு முதலில் எழும் மலைப்பு, இதை எப்படி, எப்போது வாசித்து முடிப்பது என்பது தான். நீளத்தைக் கண்டு அஞ்சத்தேவையில்லை. மொழிநடைக்கு பழக்கப்படுத்திக் கொண்டால், வெகு இலகுவாக வெண்முரசை வாசிக்கலாம். தேர்ந்த வாசகர்களுக்கு வெண்முரசின் நீளம் ஒரு சவாலே அல்ல. அத்தனை விரைவாக, அத்தனை நேரமின்மையோடு அவதிப்பட்டு வாசிக்க முயல்வோர் வெண்முரசில் பெறப்போவதும் ஒன்றுமில்லை. 

வெண்முரசு நாளுக்கொரு அத்தியாயம் என்று எழுதப்பட்ட நூல். முழுநூல்களாகப் படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் வேறு.  26 நூல்களையும், இருபத்தாறு தனித்தனி நாவல்களாகவே படிக்கலாம். ஒரு அத்தியாயத்தையே சிறுகதையாகக் கருதி தனித்துப் படிக்குமளவுக்கு கூட சில அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. 


என்றாலும் இப்படித் துண்டு துண்டாகப் படிப்பதை விட, முதற்கனல் முதல் முதலாவிண் வரை வரிசையாகப் படிப்பதே சிறந்தது என்று வாசகனாகப் பரிந்துரைப்பேன். ஆறுதலாக, ஒரு நாளுக்கு சில அத்தியாயங்கள் என்று கூட, வாசித்து முடிக்கலாம்.  மீள்வாசிப்புக்கு வேண்டுமெனில் சில குறிப்பிட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். மொழியழகுக்காக நீலத்தை வாசிக்கலாம். குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய வீரதீரக் கதைகளாக இருப்பவை, அருச்சுனனின் பயணங்களைக் கூறும் காண்டீபமும் கிராதமும். முதல் மூன்று நூல்களான முதற்கனலும் மழைப்பாடலும் வண்ணக்கடலும், அவற்றின் சுவையான கதை சொல்லலுக்காகவும், கவித்துவ அழகுக்காகவும் வாசிக்கவேண்டியவை. குருசேத்திரப் போர் தொடர்பான பாகங்களை மட்டும் வாசிக்க விரும்புபவர்கள், திசைதேர்வெள்ளம் முதல் நீர்ச்சுடர் வரை படிக்கலாம்.


தீயின் எடை எனும் 22ஆம் நூல் வரை அச்சிலும், ஏனையவை "கிண்டில்" மின்னூல் வடிவிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இருபத்துமூன்றாவது நீர்ச்சுடர் நூல் அச்சுப்பதிப்புக்கு தற்போது முன்பதிவு நடந்துகொண்டிருக்கிறது.

வெண்முரசு அச்சுப்பதிப்புகள் பெறுமதியானவை. இலங்கையின் பணப்பெறுமதியில் ஓராண்டுக்கு முன்பே மூவாயிரத்திற்குக் குறையாமல் தான் வெண்முரசு நூல்கள் கிடைத்தன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஐயாயிரத்தை நெருங்கியிருக்கக் கூடும். 

ஆனால் வெண்முரசு வாங்கப் பணமில்லை, அதை வாசிக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்வது வெறும் சாட்டுத் தான்.  நூலாசிரியரின் வலைத்தளத்திலும், வெண்முரசு வலைத்தளத்திலும் இந்நாவல் வரிசையை முழுமையாக இலவசமாகப் படிக்க முடியும். ஒரு வாசகனாக ஜெயமோகனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் கூறவேண்டிய இடம் இது. எத்தனையோ வாசகர்கள் கேட்டுக்கொண்ட போதும், தன் வலைத்தளத்தைக் கட்டணத்தோடு இயக்க மறுத்தவர் அவர். அறிதலுக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருப்பதால் தான்  நூலாக்கப்பட்ட  அவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் இன்றும் வலையில் இலவசமாகக் கிடைக்கின்றன. 

வெண்முரசு தொடர்பான வாசகர் உரையாடல்கள், "வெண்முரசு விவாதங்கள்" என்னும் இன்னொரு வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரு வெண்முரசு நூலை வாசிக்கும் போதே சமாந்தரமாக இந்தத் தளத்திலுள்ள விவாதங்களையும் வாசிப்பது, வெவ்வேறு வாசிப்புக் கோணங்களை நமக்கு அறிமுகப்படுத்தும்.


3. முன்முடிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் மீது இலங்கைத் தமிழ் வாசகரில் பலருக்கு கசப்பு இருக்கிறது.  ஈழப்போர் தொடர்பாக எதிர்மறைக் கருத்துக் கொண்டவராகவும் இந்துத்துவத்தை முன்னிறுத்துபவராகவுமே அவர் இங்கு அறியப்படுகிறார். அவர் மீது எழுந்த கசப்புக்கு, அண்மையில் "இலங்கையில் நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் இருந்தால், பூச்சிமருந்து அடித்துக் கொல்லவேண்டும்" என்று அவர் நகைச்சுவையாகத் தெரிவித்த கருத்தும் ஒரு காரணம்.

கருத்துச் சுதந்திரம் இங்கு எவருக்கும் உண்டு. இலங்கை உள்நாட்டு யுத்தம் தொடர்பிலும் இலங்கையின் சமகால நவீனத் தமிழ் இலக்கியத்தின் வீச்சு தொடர்பிலும் ஜெயமோகனுக்கு ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கக்கூடாது என்று சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் நின்று இலங்கையின் சமகால இலக்கியங்களை வெளியில் நின்று ஆராயும் எந்தவொரு ஈழத்து வாசகனும், இலங்கையின் இலக்கியப்போக்கு தொடர்பில் அவர் சொன்ன கருத்தையே வந்தடைவான். 

மேலோட்டமாகப் பார்த்து சிலர் வெண்முரசு முன்வைக்கும் வேதாந்தக் கருத்தியல், ஏதோ ஒரு புள்ளியில் இலங்கைத்தமிழர் மத்தியில் பெரும்பான்மையாகவுள்ள தமிழ்த்தேசிய மற்றும் சைவசித்தாந்த ஆதரவு மனநிலைக்கு எதிரானது என்று சித்தரிக்கலாம். என்னிடம் அப்படிச் சிலர் சொன்னதுண்டு. ஆனால், அவ்வாறு கூறி அந்த நாவலின் மகத்துவத்தைக் குறுக்குவது தரம் தாழ்ந்த செயல். 

வெண்முரசின் மூன்றாவது நூலான வண்ணக்கடலும் இறுதி இருபத்தாறாவது நூலான முதலாவிண்ணும் தென்தமிழ் நிலத்தைக் களமாகக் கொண்டவை. வெண்முரசின் பன்னிரண்டாவது நூலான கிராதம் ஒரு சைவப் புதினம்.  அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபதம் பெற்ற கதையைச் சொல்வது. அதில் ஓரிடத்தை இங்கு சொல்லவேண்டும். பாசுபதத்திற்காக தவம் செய்கையில் பன்றிக்காக சண்டையிட்டு "காளனிடம்" தோற்கும் அருச்சுனன் பின்பு, காளன் அவன் மனைவி காளி ஆகியோரால் தமது வாழ்விடமான கைலைத்தாழ்வரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அப்போது,  தங்களோடு கூடவரும் காளனின் மகனைப் பார்க்கிறான் அருச்சுனன்.

"அவனுக்கு ஐந்து வயதுகூட இருக்காதென்று முகம் காட்டியது. ஆனால் அர்ஜுனனின் தோள் அளவுக்கு உயரமிருந்தான். “உன் பெயர் என்ன?” என்றான். “கொம்பன்” என்றான் அவன். அவ்வொலி அர்ஜுனனை சற்று திகைக்கச் செய்தது. “அதன் பொருள் என்ன?” என்றான். “களிற்றுயானை. பெருங்கொம்பு கொண்டது” என்றான் கொம்பன். “என் இளையோன் பெயர் குமரன்… சிறுவன் என்று அதற்குப் பொருள். தந்தை அவனை அழகன் என்று அழைப்பார்.” 


அஞ்சிய முட்பன்றியென அர்ஜுனனுக்குள் அனைத்துப் புலன்களும் முள்கொண்டன. அவன் நின்றுவிட்டான். “ஏன்?” என்றான் கொம்பன். “இந்தப் பெயர்கள் தென்மொழியில் அமைந்தவை…” என்றான். “தென்மொழியா?” என்றபடி கொம்பன் அவனை ஏறிட்டு நோக்கினான். “பாரதவர்ஷத்தின் தென்முனம்பில் பேசப்படும் மொழி அது. தென்னவர் தொன்மையான கடலோடிகள். முத்துக்களை பணமாகக் கொண்டு உலகுடன் வணிகம் செய்பவர். இசை தேர்ந்தவர்கள். ஏழுவகை யாழ்கொண்டவர்கள். அவர்களின் மொழியிலமைந்த பெயர்கள் இவை.”

 
ஜெயமோகன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். வெண்முரசிடம் ஒவ்வொரு தமிழனும் பெற்றெடுக்கவேண்டியது ஏராளம்.  அவர் மீதான முன்முடிவுகளை தீட்டிவைத்துக்கொண்டு வெண்முரசில் கூர் பார்ப்பது வீண்வேலை. ஒரு இடதுசாரி வாசகனுக்கோ நவீனத்துவ வாசகனுக்கோ வெண்முரசில் வேறு எதையோ பெறமுடியுமாயிருக்கும்.  கருத்தியல் பார்வைக்கும் நூலாசிரியர் தொடர்பான தனிப்பட்ட முன்முடிவுகளுக்கும் வெளியே இலங்கைத் தமிழ்ச்சூழலில் வெண்முரசு தொடர்பான விரிவான வாசிப்பும் உரையாடலும் நிகழவேண்டும். 

 "திகட சக்ர" ஒழுங்கு செய்திருந்த "வித்தகத் தமிழ் வேள்வி 2021" நிகழ்வில்  "ஜெயமோகனின் வெண்முரசு மகாபாரதத்தை பொருத்தமாக மறுசீரமைத்திருக்கிறது / இல்லை" என்ற தலைப்பில் தான் விவாதம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உண்மையில் வேலைப்பளு, போதுமாகத் தயாராவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. இலங்கையில் கொவிட்- 19இன் மூன்றாம் அலை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலம் அது. வார இறுதி நாள்களிலும் அலுவலகப் பணி. சம்பந்தமே அற்ற விவாத மேடையில், ஒன்றுமே தயாராகாமல் போய் உட்கார்ந்து, எதிர்பார்ப்புக்கு மாறாக வெண்முரசு மீது எதிர்மறை எண்ணத்தை விதைத்துவிடுவேனோ என்று கூட அச்சமாக இருந்தது. ஒரே ஆறுதல் நீதுஜன் மட்டும் தான். வெண்முரசிலிருந்து நான் பெற்றதை மீட்டுப்பார்க்கவும், தொகுத்துக்கொள்ளவும் அவனோடான உரையாடல்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டேன்


விவாதத்தில் வாதிட்ட விவாதிகள் அத்தனை பேருமே வயதிற் சிறியவர்கள். ஆனால் ஜெயமோகனையும் வெண்முரசையும் அந்தப் போட்டிக்காகவேனும் அவர்கள் தெரிந்து கொள்ள முயன்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.  அதுவரையில் அவர்களுக்கு அன்பும் பாராட்டும்.

நிகழ்வில் கலந்துகொண்டபோது, தொழிநுட்பச் சிக்கல் பாடாய்ப் படுத்திவிட்டது. நிகழ்நிலை நிகழ்வுகளில் உள்ள பிரச்சினை இது தான். எத்தனை தயாராக இருந்தாலும், ஏதோ ஒரு குழப்பம் எதிர்பாராமல் வந்துவிடும். திகட சக்ர ஏற்பாட்டாளர்கள் அந்த சந்தர்ப்பத்தை திறம்பட சமாளித்தார்கள். நான் தான் தடுமாறிவிட்டேன்.  தீர்ப்பையும் சரிவரச் சொல்லவில்லை. என் உரையில் "மறுசீரமைப்பு" என்ற தலைப்பை "மறுவாக்கம்" என்று வரையறுத்துக்கொண்டு அந்தத் தலைப்பின் பொருத்தப்பாட்டை விளக்கினேன்.  முன்பே சொன்னது போல், என் நடுவர் பணியை சிறப்பாகச் செய்தேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், வெண்முரசை இலங்கைத் தமிழ்ச் சூழலில் முன்வைத்த ஒரு முக்கியமான நிகழ்வொன்றில் நானும் பாகமாக இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு பூரண நிறைவு ஏற்பட்டிருக்கிறது.  


வெண்முரசை தமிழ்ச்சூழலுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு திகட சக்ர நிறுவுநர் திரு. உதயசங்கருக்கே நன்றி கூறவேண்டும். அடுத்தது கலந்துகொள்ள வாய்ப்பளித்த நீதுஜனுக்கு. ஜெயமோகனின் தலையாய வாசகன் எனினும் கொள்கை ரீதியில் என்னைப்போலவே அவரோடு முரண்படுபவன். வெண்முரசு விவாதத்தில் என் பங்களிப்பு பற்றி எனக்கு சந்தேகம் இருந்தது. "சொல்ல வந்ததை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை முதலில் எழுத்தில் தொகுத்தெடுத்துப் பிரசுரி, கொஞ்சப் பேரையாவது சென்றடையட்டும்" என்று வலியுறுத்தியது அவன் தான். இக்கட்டுரை அப்படி எழுந்தது தான். பிரசுரத்துக்கு நாளெடுத்திற்று. அவனுக்கு என் நன்றி.

கடைசியாக. வெண்முரசு தொடர்பான உரையாடல்களில் மீண்டும் மீண்டும் இரு விடயங்கள் சொல்லப்படுவதுண்டு. ஒரு கூழாங்கல்லின் நுண்மையையும் மலைமுடியின் பிரமாண்டத்தையும் ஒரே நேரத்தில் சொல்வது பேரிலக்கியம். அதேபோல்  ஒரு பண்பாடு உருவாக்கிய ஒரேயொரு நூல் தவிர, அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளும் அழிக்கப்பட்டால், அந்த எஞ்சிய ஒரே நூலிலிலிருந்து  அந்தப் பண்பாட்டை மீள உருவாக்கலாம் எனில் அந்த நூல், பேரிலக்கியம். இந்த இரு வரையறைகளுக்கும் பொருந்தக்கூடிய நூல் வெண்முரசு. அதன் மூலம் தமிழ்ப்பண்பாட்டை மாத்திரமல்ல; ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டையே மீளக்கட்டியெழுப்ப முடியும். ஐயமின்றி, தமிழில் தோன்றிய மகத்தான நூல் அது. 

வெண்முரசு வளம் பொலிக. 
அதைப் படைத்த ஜெயமோகன் நலம் திகழ்க.  

எழுத்தாளர் ஜெயமோகன்

மேலும் வாசிக்க »

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

0 comments


ஓரிரு மாதங்களுக்கு முன்னர், திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு, இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் .புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா.இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை, அவர்களால் கலிங்க மாகோனாக அடையாளம் காண முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது. கலிங்க மாகோனை  பாலி - சிங்கள நூல்கள் கொடுங்கோலனாகவும்இலங்கைத் தமிழ் நூல்கள் சரித்திர நாயகனாகவும் சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு:

 

[சிதைந்த வடமொழி சுலோகம்] 

ஸ்வஸ்திஸ்ரீ …….[த்திகள்?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் காலிங்கராயனேன் ஈழ [மண்டலமான மும்முடிச்] சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட[நேமி பூசை கால]ங்களில் ஆதிக்ஷேத்ரமாய் ஸ்வயம்புவுமான திருக்கோ[ணமாமலை]யுடைய[1] நாயனாரை தெண்டன் பண்ணி இந்நாயனாற்கு [க்தி]ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[][2] நாட்டில் லச்சிகா[]புரம்[3] இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நிலமும் …….. இதில் மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்  பேருடரை நீக்கி குடிமக்களுள்பட  இந்நா[ச்சியார்க்கு திருப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்றுக்கும் சாந்த்ராதித்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் பண்ணிக் குடுத்தேன்.  ....லுள்ளாரழிவு படாமல்……. பெறுக்கிவுண்டார்கள் []ய் நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்குரால் பசுவைக் கொன்றா[ர்பாவ]ங் கொண்டார்கள் ஆயிரம் ப்ராஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு..மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ..[?]த்தியஞ் செய்வார் செய்வித்தார்”  



கிவுலக்கடவலை தமிழ்க் கல்வெட்டு
(படம்: மரு.த.ஜீவராஜ் அவர்கள்)

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner