ஐரோப்பிய கால ஆவணங்களில் போரதீவுப்பற்று


இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான போரதீவுப்பற்று, அம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பிரதேசமாகும். வடக்கே அத்தியாமுன்மாரி ஆற்றுக்கும் கிழக்கே பழுகாமத்து ஆறு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு வாவிக்கும் தெற்கே குரங்குத்தீவு ஆற்றுக்கும் மேற்கே இராசக்கல் மலை மற்றும் புளுகுணாவை ஏரி என்பவற்றுக்கும் இடைப்பட்டதாக சுமார் 180 சதுரகிமீ பரப்பில்  விரிந்து விளங்குகின்றது.

வரைபடம் 01. 1695இல் வரையப்பட்ட பழைய இடச்சு வரைபடம். இதில் போரதீவு கிராமம் (Farredive) காட்டப்பட்டுள்ளது. மூங்கிலாறு எருவிற்பற்று (?) ஆறு (Riv van E.patto) என்று காட்டப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியிருப்பு (Kalloewanje koederipoe), கோட்டைக்கல்லாறு (Chinnacalette சின்னக்கல்லாறு), நீலாவணை (Melewanone) ஊர்களும் தென்படுகின்றன.

இன்றுள்ள போரதீவுப்பற்று என்ற நிர்வாகப் பிரிவானது, வரலாற்றுக் காலத்திலும்  காலனித்துவக் காலத்திலும் வேறுவேறு விதமாகத் தன் எல்லைகளைக் கொண்டு அமைந்திருக்கிறது (வரைபடம் 01). அவை பற்றி சுருக்கமாக ஆராய்வதே இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

 

போரதீவுப்பற்றிலுள்ள, போரதீவு, பழுகாமம், மண்டூர், வெல்லாவெளி என்பன மிகத்தொன்மையான இடங்கள். இன்று விவேகானந்தபுரம், கண்ணபுரம், களுமுந்தன்வெளி, தும்பங்கேணி என்றெல்லாம் அறியப்படும் போரதீவுப்பற்றின் குடியிருப்புக்களில் பொது ஆண்டுக்கு[1] முந்தைய காலத்தைச் சேர்ந்த மாந்தர் வாழ்ந்தததற்கான  தொல்பொருட்கள் வெளிப்பட்டுள்ளன.

 

போரதீவுப்பற்றின் புவியியல் அமைவு.

ஒரு இடத்தில் மனிதன் எப்போது குடியேறினான், அங்கு அவன் தன் அடிப்படைத்தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொண்டான் என்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண முதன்மையாக உதவுவது, அவ்வூரின் புவியியல் அமைவாகும். குடிநீர், உணவுத்தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய தாவரங்கள் வளரக்கூடிய மண்வளம், வேட்டையாடக்கூடிய விலங்குவளம், தங்கள் வாழிடத்தை சற்று அப்பால் வாழும் ஏனைய மக்களின் வாழிடங்களோடு இணைக்கும் போக்குவரத்துக்கான பாதை, உணவு – உடை – உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏனைய நிபந்தனைகள் என்பன இவ்வாறு கவனிக்கவேண்டியவை.

 

போரதீவுப்பற்று வளமான பிரதேசம். அங்கு மூங்கிலாறு, நவகிரி ஆறு ஆகிய இரு நன்னீர் ஆறுகள் பாய்ந்துகொண்டிருக்கின்றன. அவை திறக்கின்ற மட்டக்களப்பு வாவி[2]யானது, நீர்ச்சமநிலையைப் பேணுவதால் வாவிக்கரையோரமாகத் தோண்டும் போது நன்னீர் கிடைக்கின்றது. இதனாலேயே ஆற்றங்கரையையும் வாவிக்கரையையும் அண்டி பழுகாமம், போரதீவு, நாதனை, மண்டூர் முதலான பழங்குடியிருப்புகள் உருவாகின.

 

போரதீவுப்பற்றின் தரையானது, வாவிக்கரையிலிருந்து உள்நாடு நோக்கிச் செல்லச்செல்ல மலைப்பாங்கான நிலப்பகுதியைக் கொண்டது. எனினும் மூங்கிலாறு மற்றும் நவகிரியாற்றின் படுகைகள் மணற்பாங்கானவையாகக் காணப்படுவதுடன், இந்த ஆறுகளில் அடித்துவரப்பட்ட வண்டல்மண் படிவால் வளமூட்டப்பட்டு விவசாயத்துக்குப் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன. இந்த ஆறுகள் கொண்டுவரும் வண்டல் படிவால், மட்டக்களப்பு வாவியின் கரையோரம் சதுப்புநிலமாக மாறி, பின்னாளில் நெற்செய்கைக்கு இயைந்த சேற்றுநிலமாக மாறியிருக்கின்றது.

 

ஒருகாலத்தில் இருபுறமும் நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு ஆற்றிடைக்குறையாக  -  ஒரு தீவாக விளங்கிய போரதீவு இன்று மேற்குப்புற படுவான்கரை நிலத்தோடு தரைத்தொடர்பு கொண்டுள்ளமைக்குக் காரணம், கோவிற்போரதீவுக்கும் பொறுகாமத்துக்கும் இடையே  படிந்த வண்டல்மண்ணால் அங்கிருந்த ஆறு ஆழங்குறைந்து சதுப்பாக மாறி, பின்னாளில் மேட்டுநிலமாக உயர்ந்துவிட்டதனால் தான்.

 

கிழக்குப்புறமாகவும் போரதீவு ஆற்றிடைத் தீவின் பரப்பளவு அதிகரித்து, பட்டிருப்புப் பாலத்தில் மாத்திரமே மிக ஒடுங்கிய நீர்ப்பரப்பால்  எழுவான்கரை நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதை செய்மதிப் படங்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது (உரு 01). வரலாற்றுக்காலத்தில் இந்த வண்டல்மண் படிவு குறைவாக இருந்திருக்கும் என்பதால், போரதீவு சுற்றிலும் நீர் சூழ்ந்த தனித்தீவாகவே விளங்கியிருக்கும். எவ்வாறெனினும் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்பேயே இன்றுள்ள தோற்றத்திலேயே போரதீவு, பழுகாமம் கிராமங்களின் நிலப்பகுதிகள் நிரந்தரமாக மாற்றமடைந்துவிட்டன என்பதற்கு இடச்சு வரைபடங்கள் ஆதாரமாகின்றன (வரைபடம் 02).

 

உரு. 01 மட்டக்களப்பு வாவியில் வண்டல் மண் படிவால் “போரதீவு” ஆற்றிடைக்குறைக்கு நிலத்தொடர்பு ஏற்பட்டுள்ளமையைக் காட்டும் செய்மதி வரைபடம். சிவப்புக்கோடு வண்டல்மண் படிவுக்கு முந்தைய நிலப்பகுதிகளையும், மஞ்சள் கோடு இன்றுள்ள நீர்ப்பரப்புகளையும் எல்லைப்படுத்துகிறது. இரண்டுக்கும் இடையிலுள்ளவை, நாதனை ஆறு சேர்ப்பித்த வண்டல்மண் படிவால் உருவாகியுள்ள சதுப்புநிலங்களும் மேட்டுநிலங்களுமாகும்.

 

போரதீவுப்பற்றின் மேற்குப்புறமானது கிழங்கு, தேன், காய்கறிகள் அடர்ந்த சிறுகாடாகவும் அதில் வாழ்ந்த இறைச்சிக்குத் தகுந்த வேட்டை மிருகங்களும், இன்னொருபுறம் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்திருக்கும். ஆங்காங்கு இருந்த மலைக்குன்றுகளும் அதில் இருந்த குகைகளும் மலைச்சாரல்களும் இருப்பிடத்துக்குப் போதுமானவை.  இவ்வாறு நீர்த்தேவை உட்பட உணவு, உறையுள், தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுற்றாடலும், ஆறுகளால் வளமூட்டப்பட்ட பயிர் உற்பத்திக்குத் தோதான சிறந்த விவசாய நிலமும் காணப்பட்டதால், போரதீவுப்பற்றில் மிகப்பழங்காலத்திலிருந்தே மக்கள் குடியிருக்கத் தகுந்த சூழல் காணப்பட்டிருக்கிறது. கிழக்கிலங்கையில் பேராசிரியர் சி.பத்மநாதன் கண்டறிந்த பொது ஆண்டை அண்மித்த 15 நாகர்குல வேள்புல அரசுகளில் ஒன்று வெல்லாவெளியைச் சூழ அமைந்திருக்கின்றது (பத்மநாதன் 2016:1-48). பொதுக்காலத்துக்கு முந்தைய ஈமச்சின்னங்கள், பிராமிக்கல்வெட்டுக்கள், தொல்பொருள் இடிபாடுகள் என்பன இப்பகுதியில் பரவலாக அவதானிக்கப்பட்டமைக்கு வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் வாழ்வதற்கு உகந்த இப்புவியியல் சிறப்பம்சங்களே காரணமாக அமைந்திருக்கும்.

 

நீர்வழிப் போக்குவரத்தும் வணிகப்பாதையும்:

அடர்காடுகளுக்கும் கொடிய வனவிலங்குகளுக்கும் நடுவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த பழங்கால மக்கள், நீர்வழிப் பாதையையே பாவனைக்கு இலகுவான பிரதான போக்குவரத்து மார்க்கமாகப் பயன்படுத்தி வந்தார்கள். இடச்சுக்காலத்திலும் வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்கு நீர்வழிப் பாதைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன (Gunawardena, 2005:121) மட்டக்களப்பு வாவியின் இந்த நீர்வழிப்பாதை திருக்கோவிலிலிருந்து திருக்கோணமலை வரை மிக நீண்டது என்பதும் ஒரு அனுகூலமாகும். அதன்படி, 1650களில் அக்கரைப்பற்றின் தென்பகுதியில் நேரடியாக தச்சனின் பட்டறையிலிருந்தே மாங்களை ஏற்றும் ஒருவர், திருக்கோணமலை வரை தடையேதுமின்றி படகில் சென்று, அங்கு துறைமுகத்தில் மரங்களை இறக்கித் திரும்பமுடியும் (Ferguson 1998:173).

 

அக்கரைப்பற்று பெரிய களப்பு, அங்கிருந்து சம்மாந்துறை வரை பட்டிப்பளை ஆற்றின் (கல்லோயா) கிளையாறுகள், சம்மாந்துறையிலிருந்து ஏறாவூர் வரை மட்டக்களப்பு வாவி,  ஏறாவூரிலிருந்து மாங்கேணி கொக்குவில் வரை, வாழைச்சேனைக் களப்பு என்று இந்தத் தொடர்ச்சியான நீர்வலையை இன்றும் நாம் காணலாம். கொக்குவில்லிலிருந்து பனிச்சங்கேணிக்களப்புக்குச் செல்வதோ, அங்கிருந்து வெருகல் கங்கையூடாக மகாவலி கங்கைக்குள் நுழைந்து திருக்கோணமலைத் துறைமுகத்தை அடைவதோ அத்தனை சிரமமான பாதையும் அல்ல. இவ்வாறு தெற்காசியாவின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கிய திருக்கோணமலைத் துறைமுகத்தை  வணிக – போக்குவரத்துத் தேவைகளுக்காக எளிதாக அணுகும் வாய்ப்பு, அங்கிருந்து 200 கிமீ வரை தெற்கே வாழ்ந்துவந்த வரலாற்றுக் கால மக்களுக்குக் கிடைத்திருந்தது (உரு 02).

 


உரு. 02. கிழக்கிலங்கைக்கென பொதுப்பண்பாட்டை உண்டாக்கிக் கொடுத்த தொன்மையான வணிக - போக்குவரத்து நீர்வழிப் பாதை. 

ஆதலால், கிழக்கிலங்கையின் மக்கள் நீளவாக்கில் நெடுந்தூரத்துக்குப் பயணஞ்செய்யவும், அதனூடாக தங்களுக்குள் இடைத்தாக்கம் புரிந்து ஒரு பொதுப்பண்பாட்டை உருவாக்கவும் கூடிய வாய்ப்பொன்றை வரலாறு இயல்பாகவே உருவாக்கித் தந்திருந்தது. இந்தப் பின்னணியில் தான் போரதீவுப்பற்றின் இன்றுள்ள ஊர்களான போரதீவு, பழுகாமம், வெல்லாவெளி, மண்டூர் என்பன பெற்றுக்கொண்ட சமூக அரசியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

நவகிரியாறும் மூங்கிலாறும்:

போரதீவுப்பற்றில் பாயும் இரு ஆறுகள் மூங்கிலாறும் நவகிரியாறும். ஊவா மலைத்தொடரின் கிழக்கே குடும்பி மலையருகே களுகல் ஓயா (கருங்கல்லாறு) என்ற பெயரில் ஊற்றெடுக்கிறது நவகிரியாறு. பழைய வரைபடங்களிலிருந்து நவகிரியாறு “வெள்ளியங்கிரி ஆறு” என்று அழைக்கப்பட்டது என்பது தெரிகின்றது[3].  இவ்வாற்றுடன்  கல்லோயா ஆற்றிலிருந்து வரும் இடதுகரைக் கால்வாய்  இணையுமிடத்தில், 1950-1954 இற்கிடையே நவகிரி நீர்த்தேக்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது (Arumugam 1979:181). நவகிரி நீர்த்தேக்கத்தின் அருகே தான் வரலாற்றுப்புகழ் பெற்ற இராசக்கல் மலை அமைந்துள்ளது. இராசக்கல் மலையோ, அல்லது நவகிரி ஆறு ஊற்றெடுக்கும் குடும்பி மலையோ முன்னைய காலத்தில் வெள்ளியங்கிரி என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடும் (வரைபடம் 02).

 

வரைபடம் 02. 1853 பிரித்தானிய வரைபடம். பழுகாமம் (Palogammu), கோவில் போரதீவு (Koil Poretivo), நாதனை (Nadene), மண்டூர் (Mandur), குப்பந்தை (Kupenda - மாலையர்கட்டு) ஆகிய போரதீவுப்பற்றுக் கிராமங்கள் காட்டப்பட்டுள்ளன. நவகிரி ஆறு வெள்ளங்கிரி ஆறு (Veurigari Aru – வெயுரிகரி ஆறு?) என்ற பெயரிலும் மூங்கிலாறு ஆண்ட எல்ல (Anda Ela) என்ற பெயரிலும் காண்பிக்கப்படுகின்றன.


நவகிரித்தேக்கத்திலிருந்து பெருக்கெடுக்கும் நவகிரியாறு பல சிற்றோடைகளாகப் பிரிந்து அதன் ஒரு கிளை வெல்லாவெளியில் நாதனையாறாக மட்டக்களப்பு வாவியுடன் கலக்கின்றது. மறுகிளை கிழக்கே சென்று மூங்கிலாற்றுடன் கலக்கிறது.

 

இங்கினியாகல் மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் நாமல் ஓயாவும் வேறு துணையாறுகளும் உஃகணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தலோயாக் குளத்தில் தடுக்கப்பட்டு கிழக்கே ஆந்தலோயாவாக நகர்கின்றன. ஆந்தலோயாவில் நவகிரியாற்றின் ஒரு கிளை திறந்ததன் பின்னர், அவ்வாறு மூங்கிலாறு எனும் பெயருடன், மண்டூருக்கு வடக்கே மட்டக்களப்பு வாவியில் திறக்கிறது (Arumugam 1969:177-180). இடச்சு வரைபடங்களிலிருந்து ஆந்தலோயாவின் பழைய சிங்களப்பெயர் “அந்த எல்ல” (Anda Ella) என்றும், மூங்கிலாற்றின் பழைய பெயர் ‘வட்டவான் ஆறு’ (Woddowanne Aar) என்றும் தெரியவருகிறது (பின்னிணைப்பு வரைபடம் 03).  

 

வரைபடம் 03. 1901 பிரித்தானிய வரைபடம். வெள்ளியங்கிரி ஆறு (Vellirigirri Aar) ஆண்ட எல்ல (Anda Ella) ஆற்றில் கலப்பதும் அதன் பின்னர் அது வட்டவான் ஆறு (Woddowanne Aar) என்று பெயர் பெறுவதும் சுட்டப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி ஆற்றின்  இன்னொரு கிளை நாதனையில்  (Nadene) களப்பில் கலப்பதும் காட்டப்படுகிறது. நாதனை (Nadenne), போரதீவு (Porativu), மண்டூர் (Mandoor), பெரியபோரதீவு (Peripore Tivo), குப்பந்தை (Coopende) ஆகிய இடங்கள் காட்டப்பட்டுள்ளன.

நவகிரியாற்றின் படுகையில் உஃகணையிலுள்ள இராசக்கல் மலை மற்றும் வெல்லாவெளிப் பிரதேச தொல்லியல் மையங்கள் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் காணப்படுவதால், இவ்வாற்றின் கரையிலும் பெருமளவு ஆதிகாலக் குடியிருப்புகள் தோன்றி வளர்ச்சி கண்டுள்ளன என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.

 

வரலாற்றுப்பின்னணி:

கிழக்கிலங்கையின் மிகநீண்ட நீர்வழிப்பாதையின் பெரும்பகுதியை மட்டக்களப்பு வாவி அடக்கியிருந்தது. அவ்வாவி கடலோடு திறக்கும் இடங்களாக பாலமீன்மடு, கல்லாறு, காரைதீவு ஆகிய மூன்று இடங்கள் அமைந்திருந்தன[4]. கிழக்கிலங்கையில் அதிகாரம் செலுத்தும் எந்த அரசும், புறச்சக்திகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்தக் கடல்வழி நுழைவாயில்களையும், அவற்றுக்கு இடைப்பட்ட வாவிக்கரையையும் கண்காணித்துக்கொண்டிருக்கவேண்டும். அதனால் தான் ஒல்லாந்தர் காலத்தில் பாலமீன்மடுவுக்கு அருகே புளியந்தீவு, கோட்டைக்கல்லாறு, காரைதீவு ஆகிய மூன்று இடங்களில் காவல் கோட்டைகள் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்டிருந்தன.

 

மட்டக்களப்பில் தொல்காலத்திலிருந்து நீடித்தவை வன்னிய அரசுகள். தங்களுக்கென சிறுசிறு நிலப்பிரிவுகளைப் பிரித்து ஆண்டு கொண்டு ஆனால் தங்களுக்குள் உடன்பட்டு ஒற்றுமையாக ஆண்ட அரசுகள் இவை. தற்காலத்தில் கிடைக்கும் சான்றுகளை வைத்து, ஒரே அரசாக நீடித்து பிற்காலத்தில் தனித்தனியாக உடைந்தவை இவை என்று கூறமுடியாதுள்ளது. ஏனெனில் வரலாற்றில் சிற்றரசுகள் தோன்றி, அவற்றில் சில ஒன்றுகூடி இணைந்து, அல்லது பணிந்தே பேரரசுகள் உருவாகின்றன. பொது ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கதிர்காமம் முதல் ஏறாவூர் வரை காணப்பட்ட “பத்து சகோதரர்களின் அரசுகள்” (Ranawella, 2018:11),  அண்மையில் வாகரை முதல் சங்கமன்கண்டி வரை பேராசிரியர்.சி.பத்மநாதன் (2016:462) அடையாளம் கண்டுகொண்ட பதினைந்து நாகர் வேள்புலங்கள்  முதலிய சான்றுகள் மூலம், மட்டக்களப்புப் பகுதியானது பழங்காலத்திலிருந்து பல சிற்றரசுகளின் தொகுப்பாகவே நீடித்து வந்திருக்கிறது என்றே கூறமுடியும்.

 

இந்த அரசுகளின் கூட்டமைப்பில் எப்போதாவது, ஒரு அரசு பலம் பெற்று ஏனைய அரசுகளை அடக்கி ஆண்டிருக்கக்கூடும். ஆனால், அது நெடுங்காலம் நீடித்தது என்று கொள்ளமுடியாது. அனுராதபுரம், பொலனறுவை, கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் போல முழுத்தீவை அல்லது தீவின் பெரும்பகுதியை ஆளும் அளவு வல்லமை பெற்றிருந்த ஒரு தனி அரசு, மட்டக்களப்புப் பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமேனும் நீடித்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்றுவரை சான்றுகள் இல்லை. 

 

எனினும் ஊகத்தின் அடிப்படையில் இங்கு நிலவிய பலம்வாய்ந்த அரசு ஒன்று பற்றி மட்டும் தரவுகள் கிடைத்திருக்கின்றன. அது  சம்மாந்துறைக்கு அருகே அமைந்திருந்த “மட்டுக்களப்பு” எனும் அரசு. வாழைச்சேனை நட்டூர் ஆறு முதல் சங்கமன்கண்டி மலை வரையே மட்டக்களப்பு என்ற குறிப்பொன்று கிடைப்பதால், இது அந்தப் பழைய அரசின் ஆதிக்க எல்லை என்று கொள்ளமுடியும் (Ferguson 1998:161).  போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது இங்கு மட்டுக்களப்பு அரசும் அதற்குத் தெற்கே யால (அல்லது வியாழை) அரசுமே நிலவின என்கின்றன பழைய போர்த்துக்கேயக் குறிப்புகள்.

 

15ஆம் நூற்றாண்டில் கண்டி அரசை சேனாசம்மத விக்கிரமபாகு மன்னன் தோற்றுவித்தபோது அவன் திருக்கோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் இருந்த இரு அரசுகளை வென்று தனக்குக் கீழ் கொணர்ந்திருக்கிறான் (Codrington, 1994:13-15). அவனுக்குப் பின் போர்த்துக்கேயர் இலங்கை வந்த வேளையில், மட்டக்களப்பு அரசு கோட்டை அரசன் ஆட்சியின் கீழ் சென்றுவிட்டதையும், அவன் அவ்வாட்சியிலிருந்து விடுபட போர்த்துக்கேயர் உதவியை நாடியதையும், அம்முயற்சிக்குத் அவனது மாமியான வியாழையின் அரசி தடையாக இருந்தாள் என்பதையும் சிமோ டி கோயம்பரா (Simao De Coimbra) என்ற போர்த்துக்கேயப் பாதிரியாரின் கடிதம் சொல்கின்றது (de Silva, 2009:106-108). 1519ஆம் ஆண்டில் கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகுவால் பொறிக்கப்பட்ட தம்பிலுவில் கல்வெட்டு,  கிழக்கிலங்கை அப்போது கோட்டை அரசின் பிடியில் இருந்தது என்பதை உறுதிப்படுத்தக் கிடைக்கும் இன்னொரு சான்றாகும் (துலாஞ்சனன், 2020).

 

பழுகாம அரசும் போரதீவு அரசும்:

இந்நிலையில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் மட்டக்களப்புப் பகுதி மீண்டும் கண்டி அரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதை அக்கால ஐரோப்பியர் குறிப்புகள் சொல்கின்றன. 1590களில் கண்டி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பாணமை, சம்மாந்துறை, பழுகாமம், ஏறாவூர், கொட்டியாறு (மூதூர்) எனும் ஐந்து அரசுகள் கிழக்கிலங்கையில் இருந்திருக்கின்றன (Baldaeus 1703:693, Queyroz 1992).

 

கண்டிச் சிங்களவரின் ஆதிக்கம் நிலவிய பாணமை, திருக்கோணமலையின் தனித்த அரசாக நீடித்த கொட்டியாறு என்பவற்றைத் தவிர்த்துப் பார்த்தாலும், மூன்று அரசுகள் எஞ்சுகின்றன. போர்த்துக்கேயப் பாதிரியார் கோயம்பரா காலத்தில் (1540களில்) காணப்பட்ட மட்டுக்களப்பு அரசு தான் இப்படி மூன்றாக 1590களில் உடைந்துவிட்டதா, அல்லது மட்டுக்களப்பைக் குறிப்பிட்ட கோயம்பராவின்  காலத்திலேயே ஏறாவூரும் பழுகாமமும் இருந்து, அவை சம்மாந்துறையை ஆண்ட மட்டுக்களப்பு அரசனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்தனவா, அல்லது, ஏனைய இரு அரசுகளையும் ஐரோப்பியர் குறிப்பிடுவதற்கான தேவை எழவில்லையா என்ற கேள்விகளுக்கு திருத்தமான பதில்கூற முடியவில்லை.

 

ஆனால், மட்டுக்களப்பு அரசுக்குச் சமனாகவே ஏனைய இரு அரசுகளும் ஓரளவு தனிப்பலத்துடன் இருந்தன என்ற குறிப்பு அதே நூலிலேயே கிடைத்திருக்கிறது. 1594ஆம் ஆண்டு, கண்டியை ஆண்டுவந்த முதலாம் இராஜசிங்கன் இறந்ததும் ஆட்சியுரிமை கோரிய ஒருவன் (Janeire Wandaar - யானையேறி பண்டாரம்?) போர்த்துக்கேயருடன் இணைந்து முதலாம் விமலதர்மசூரியனுக்கு எதிராக படையொன்று திரட்டினான். அப்போது கோட்டை அரசும் தென்னிலங்கையின் சிற்றரசுகள் பலவும் போர்த்துக்கேய ஆதரவு நிலைப்பாடே எடுத்திருந்தததனால், வடக்குக் கிழக்குத் தமிழ் அரசுகளும் அவனுக்கே ஆதரவளித்திருந்தன. அவற்றில் யாழ்ப்பாண அரசு, கொட்டியாறு, பழுகாமம், மட்டுக்களப்பு, பாணமை ஆகிய அரசுகள் குறிப்பிடத்தக்கவை. பழுகாமம், மட்டுக்களப்பு அரசுகள் விமலதருமனுக்கு எதிராக அளித்த படையுதவிகள் அட்டவணை 01இல் காட்டப்படுகின்றன:

அட்டவணை 01: முதலாம் விமலதர்ம சூரியனுக்கு எதிராக தமிழரசுகள் கொடுத்த படையுதவி. (மூலம்: Baldaeus 1702:672)

அரசு

காலாட்படை

முன்வரிசை காலாள்

எருது

யானை

போர்யானை

மட்டுக்களப்பு

9,890

2,000

2,500

30

04

பழுகாமம்

5,890

1,000

-

25

03

கொட்டியாரம்

7,890

600

1,000

25

30

யாழ்ப்பாண அரசு

19,900

2,000

3,000

40

10

 

இந்த எண்ணிக்கை எத்தனை திருத்தமானது, நம்பகத்தன்மையானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், அக்காலத்தில் இருந்த தமிழ் அரசுகளின் படைபலத்தையும் பொருளாதார நிலையையும் ஒப்பீடு செய்ய இந்தப் படையுதவி எண்ணிக்கை உதவுகின்றது.

 

ஆனால், திடுதிப்பென்று 1611ஆம் ஆண்டு, போரதீவு எனும் புதியதோர் அரசு தோன்றிவிடுகிறது. அப்போது கண்டியை ஆண்ட சேனாரத்தின மன்னனின் அரசவையில் பழுகாம மன்னன் செல்லப்பண்டாரத்தின் தூதன் போய் நின்று முறையிடுகிறான். “போரதீவு அரசன் ஞானசங்கரி தங்களுக்கெதிராக போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான்” என்று. சேனாரதன் அதை விசாரிக்கப் போகும்போது, பழுகாம மன்னனுக்கும் போரதீவு மன்னனுக்கும் பழுகாமத்து ஆற்றில் சுங்கம் வசூலிப்பதில் மோதல் இருப்பது தெரியவருகிறது. “வரி அறவிடுவது தொடர்பில் தான் தீர்மானமெதுவும் எடுக்கும் வரை, இரு அரசர்களும் ஒருவரோடொருவர் இணங்கி நடக்கவேண்டும்” என்ற எச்சரிக்கை அவர்கள் இருவருக்கும் விடப்படுகிறது

 

பழுகாம மன்னன் செல்லப்பண்டாரமும் போரதீவு அரசன் ஞான சங்கரியும் உடன்பிறந்தவர்கள் என்பதும், அவர்களோடு உடன்பிறந்த இன்னொருவனை செல்லப்பண்டாரம் பதவியாசையில் கொன்றான் என்பதும் இச்சம்பவங்களினூடே சொல்லப்படுகிறது. செல்லப்பண்டாரத்துக்கும் ஞானசங்கரிக்கும் சமகாலத்தில் தெற்கே சம்மாந்துறை மட்டுக்களப்பில் குமாரபண்டாரம் எனும் இன்னொரு மன்னன் ஆட்சி செலுத்திவந்தான் என்ற குறிப்பும் அங்கு இடம்பெற்றுள்ளது (Baldaeus 1703:657).

 

எனவே பழுகாம அரசிலிருந்து பிரிந்தே போரதீவு அரசு தோன்றியிருக்கவேண்டும் என்று ஊகிக்கமுடிகின்றது. பழுகாமம் மட்டுக்களப்பு ஆட்சியாளர்கள் ஒல்லாந்துக் குறிப்புகளில் “அரசன்” (King) என்றே அழைக்கப்பட, போரதீவின் ஞான சங்கரி, "பிரபுவும் இளவரசனும்" (Lord and Prince) என்றே கூறப்படுவதை இங்கு ஒப்புநோக்கலாம்.  போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் பயன்பட்ட பழுகாமத்து ஆற்றில் அல்லது மட்டக்களப்பு வாவியில் சுங்கமும் வரியும் விதிப்பதன் மூலமே பழுகாம அரசும் சம்மாந்துறை அரசும் வணிக நகரங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பழுகாம அரசன் செல்லப்பண்டாரம் தன் ஒரு சகோதரனைக் கொன்று, இன்னொரு சகோதரனை ஒடுக்கி ஏகாதிபத்தியம் செலுத்த முயன்றபோது அவன் இளவல் ஞானசங்கரி அவனோடு முரண்பட்டுப் பிரிந்து போரதீவில் தனியரசு அமைத்திருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

 

ஆனால் 1614ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கலவரத்தில் பழுகாம அரசனின் தூதர்களை மட்டுக்களப்பு மக்கள் கொன்றுவிடுகிறார்கள். இந்தக் கலவரம் ஏன் நிகழ்ந்தது என்ற தகவல் ஐரோப்பியக் குறிப்புகளில் தெளிவாக இல்லை. எனினும் தன் தூதர்கள் கொல்லப்பட்டதால் சீற்றமடையும் செல்லப்பண்டாரம் மட்டுக்களப்பு குமாரபண்டாரம் மீது போர்ப்பிரகடனம் செய்கிறான். அவனுக்குத் துணையாக, ஊவாப்பகுதியை ஆளும் குருவிட்டை இறாலகாமி  அரசனின் படையுதவி கிடைக்கிறது. பெரும்படையுடன் மட்டுக்களப்பு செல்லும் செல்லப்பண்டாரம் அதன் அரசன் குமாரபண்டாரத்தைக் கொன்றுவிடுகிறான். பழுகாமத்தோடு மட்டுக்களப்பு இணைக்கப்பட்டு செல்லப்பண்டாரத்தால் ஆளப்படுகின்றது (Baldaeus 1703:693).

 

பழுகாம அரசின் மிக அருகிலேயே போரதீவு அரசு பலம் வாய்ந்த ஒன்றாக விளங்கியபோதும், சில ஆண்டுகளுக்கு பழுகாம அரசின் ஆதிக்கம் நீடித்திருக்கிறது என்றே தெரியவருகிறது. 1620களில் மட்டக்களப்பு ஊடாக வருகை தந்து கண்டிக்குச் சென்ற டென்மார்க்கு நாட்டு அதிகாரி ஓவகேட், இலங்கையில் கண்டி அரசு – போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் முக்கோண முரண் உச்சத்திலிருந்த 1620ஆம் ஆண்டு பழுகாமம், சம்மாந்துறை பாதையூடாக கண்டிக்குச் சென்றவர் (வரைபடம் 04). அவர் சம்மாந்துறையிலும் பழுகாமத்திலும் தனக்களிக்கப்பட்ட வரவேற்பை சிலாகித்து எழுதியுள்ளார் (Brohier, 1961:6-11). ஒருவேளை இரு அரசுகளையும் வென்றிருந்த செல்லப்பண்டாரமே அப்போது இருநாடுகளுக்கும் அரசனாக இருந்திருக்கக்கூடும்.  தனக்கு அருமையான விருந்தளித்த பழுகாம மன்னன் தன்னோடு தோணியில் வந்து, ஆற்றின் நடுவே நள்ளிரவில் கேட்கும் இனிய இசையைக் கேட்கச் செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓவகேட் “ஆற்றில் கேட்ட இன்னிசை”, மட்டக்களப்புக்குத் தனித்துவமான “பாடுமீன்” ஓசையன்றி வேறொன்றாக இருக்க வாய்ப்பில்லை.

 

வரைபடம் 04: பழுகாமம் ஊடாக கண்டிக்கு ஓவகேட்டின் பயணப்பாதையைக் காட்டும் அவரது வரைபடம், 1620. இதன் மூலப்படத்தில் பழுகாமம், Palligamme என்று காட்டப்பட்டிருக்கிறது. 

எவ்வாறெனினும், ஒல்லாந்தர் காலத்திலும் பின் பிரித்தானியர் காலத்திலும் பழுகாமம் அன்றி, போரதீவு ஆட்சிப்பிரிவு பற்றிய தகவல்களே கிடைப்பதால், செல்லப்பண்டாரத்துக்குப் பின்னர், போரதீவு அரசு மேலெழுந்து பழுகாம அரசை வென்று தன்னோரு இணைத்திருக்கவேண்டும். அதன் பின் உள்ளூர்க் குழப்பங்களை விட காலனித்துவ ஆட்சியாளர்களின் கெடுபிடிகளே அதிகரித்தமையால் மட்டக்களப்பு அரசர்கள் பங்காளிச்சண்டை புரிவதிலிருந்து விலகி அமைதியாகியிருக்கிறார்கள் போல் தென்படுகின்றது.  1800களின் பின்னர், இந்த ஆட்சிப்பிரிவுகளின் தலைமையிடத்தை வகித்த வன்னியர்கள், ஐரோப்பிய அரசுகளின் கீழ் அலுவல் புரிவோராக சுருங்கிப் போனார்கள்.

 

போரதீவுப்பற்று:

“போரதீவுப்பற்று” என்ற இன்றுள்ள நிர்வாகப்பிரிவு  1611ஆம் ஆண்டு போரதீவு அரசை உருவாக்கியதாக ஊகிக்கத்தக்க ஞானசங்கரி காலத்திலிருந்தே ஒரு தனி நிர்வாகப்பிரிவாக  நிலவி வந்திருக்கிறது. 1790களில் போரதீவு என்ற பெயரை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உட்பட்ட 11 மாகாணங்களில் ஒன்றாகச் சொல்கிறார், அப்போதைய ஒல்லாந்து ஆளுநர் ஜேகொப் பெர்னாட் (McGilvray, 2008:66) (வரைபடம் 4.1) .

 


வரைபடம் 4.1 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நிலவிய மட்டக்களப்பின் 11 "மாகாணங்கள்"


பிரித்தானியர் காலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பற்றுக்கள் இணைந்த நிர்வாக அலகுக்கு ஒரு வன்னியனார் நியமிக்கப்பட்டிருந்தார்.  வன்னியனாரின் கீழ் பற்றுகளின் நிருவாகிகளாக “உடையார்”கள் காணப்பட்டனர். உதாரணமாக  வேலாயுதர் தம்பிமுத்து முதலியார் என்பவர் 1839இல் எருவில்-போரதீவு-கரைவாகு-நிந்தவூர்ப்பற்றுகளின் வன்னியனாராக இருந்தார். அவரின் கீழ் மூத்தப்போடி போர்வீரகண்டப்போடி என்பவர் போரதீவுப்பற்றின் உடையாராக இருந்தார் (Ceylon Almanac, 1839:39).  1847இல் நிலமை சின்னத்தம்பிப் போடியார் என்பவர் எருவில்-போரதீவு-கரைவாகுப்பற்றுகளுக்கு வன்னியனாராக இருந்தார். அவரின் கீழ் போரதீவுப்பற்று உடையாராக இருந்தவர் எம்.பி.கந்தப்போடி என்பவர் (Ceylon Almanac, 1847: 251). 1860இலும் நிலமை வீ.சின்னத்தம்பிப் போடியாரே மேற்கண்ட பற்றுகளின் வன்னியனாராக விளங்க, போரதீவு நாதனைப்பற்றின் உடையாராக  இருந்தவர் ஈ.முன்னிலைப்போடி. (Ceylon Almanac, 1860: 424).

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் போரதீவுப்பற்றில் நான்கு கிராமங்களே இருந்தன. பெரிய போரதீவு, கோவிற்போரதீவு, பழுகாமம், நாதனை என்பன அவை (Chitty, 1834:192).

 

பெரிய போரதீவு – கோவிற்போரதீவு

இன்று பெரிய போரதீவு, கோவிற்போரதீவு எனும்  பெயரிலுள்ள இரு பேரூர்கள், முற்காலத்தில் போரதீவு எனும் ஒரே கிராமமாகக் காணப்பட்டன. மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தில்  உள்ள குறிப்பின்படி காளிசேனன் அழித்த காளிகோவில், முருகன் கோவில் என்பவற்றின் தொடர்ச்சியாக இன்றுள்ள பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் கோவிலும், கோவிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி கோவிலும் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் (கமலநாதன் & கமலநாதன், 2005:37).




வரைபடம் 05.  1753. போரதீவு (Porredive), கோவிற்போரதீவு ஆலயம் (de pagoda van Hoelvatte) என்பன காட்டப்பட்டுள்ளன. Sallagam என்று காட்டப்பட்டிருப்பது பழுகாமம் ஆகக்கூடும். வலப்புறம் அம்பிளாந்துறை (Ambelam – அம்பலம்), கொக்கட்டிச்சோலை (Schoekettechulle) என்பனவும் அக்காலத்தில் போரதீவுப்பகுதி நிருவாகத்தின் கீழேயே காணப்பட்டது என்பது காட்டப்பட்டுள்ளது. அதற்கும் வடக்கே மண்முனை (Mamona) பிரிவும் முதலைக்குடா (Mandelecedave), ஈச்சந்தீவு (Itiandive), வவுணதீவு (Bammedive) ஊர்களும் குறிக்கப்பட்டுள்ளன. தெற்கே சம்பாந்துறை (Chiampanture) பிரிவும் அதிலடங்கும் சவளக்கடை ஊரும் (Chorlecodde Oeruy), சொறிக்கல்முனையும் (Chorelammere) காட்டப்பட்டுள்ளன. 

போரதீவின் தலைமைக் கிராமமான போரதீவில் முழுதும் கல்லால் கட்டப்பட்ட கோவிலும் மதிலும் கொண்ட முருகன் ஆலயம் ஒன்று இருக்கிறது என்கின்றது 1834இல் எழுதப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு. (Chitty, 1834:192). பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வரையப்பட்ட இடச்சு வரைபடங்களில் போரதீவுக்கு அருகே “கோவில்வத்தை ஆலயம்” (de Pagode van Hoevelvatte / de pagood van Koewelwatte ) என்று காட்டப்பட்டிருப்பது இந்த  கோவிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயமாகவே இருக்கவேண்டும் (வரைபடம் 05).

 

பழங்காலத்தில் நிலவிய மட்டுக்களப்பு, போரதீவு, பழுகாமம் ஆகிய மூன்று அரசுகள் தங்களுக்கென அமைத்துக்கொண்ட முக்கோவில்களே இன்றும் நீடிக்கும் மட்டக்களப்பின் முப்பெரும் திருப்படைக்கோவில்களாகும் (McGilvray, 2008:357). அதன்படி, மட்டுக்களப்பு அல்லது சம்மாந்துறை அரசுக்காக அமைந்த திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம், பழுகாம அரசுக்காக அமைந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், போரதீவு அரசுக்காக அமைந்த கோவிற்போரதீவு சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் என்பன கடந்த நூற்றாண்டு வரை, மட்டக்களப்பின் முக்கியமான  சிவாகமப்பெருங்கோவில்களாக விளங்கின[5]

 

நாதனை:

நாதனைப்பகுதியானது நாதனையாற்றுக்கும் மூங்கிலாற்றுக்கும் இடையில் துவங்கி மேற்கே விந்தனைக்காடு வரை நீண்டு விளங்கிய ஒரு ஆட்சிப்பிரிவாகும். நாதனையை உள்ளடக்கி பின்னாளில் எழுந்த வெல்லாவெளிக் கிராமம், இன்று போரதீவுப்பற்றின் தலைமையகமாக மாறியுள்ளது.

 

ஒல்லாந்தர் காலத்து நிர்வாகத்தில் நாதனையும் தெற்கே இறக்காமம் - மல்வத்தை உள்ளடங்கிய நாடுகாடும் இணைந்து தனித்த "நாதனை நாடுகாடுப்பற்று" பிரிவாக கருதப்பட்டன.  1804 பிரித்தானிய சிலோன் அறிக்கையில், வேடர் தலைவர் (Head of Vidos) என்ற குறிப்புடன் நாதனை வன்னியர் அம்பகப் பண்டார வேலப்பன் பட்டியலிடப்பட்டிருக்கிறார் (Skeen, 1853:77). 1842இல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஒத்துழைப்போடு நாதனையில் வேடர்களுக்கென ஒரு கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது (Pascoe, 1901:677).

 

நாதனை இன்று வெல்லாவெளிக் கிராமத்தில் ஒரு சிறுபாகமாக மாறியுள்ளபோதும், அதன் தொல்பெருமையைச் சுட்டிக்காட்டுமாப்போல், சுவாதியம்மன் கோவிலும், நாதனை கல்லடிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துவிளங்குகின்றன. கல்லடிப் பிள்ளையார் கோவில் நாயன்மார் கோவில் என்றும் வதனமார் கோவில் என்றும் முன்பு அறியப்பட்டது. நாதனை வன்னியருக்கு குலதெய்வமாகவும், முழு மட்டக்களப்பும் ஆண்டுக்கொருமுறை கூடி வழிபடும் பெரும் தெய்வமாகவும் விளங்கியவள் தான் நாதனைச் சுவாதியம்மன். சுவாதி அம்மன் முற்குறிப்பிட்ட நாதனை வேடர்களின் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட பழங்குடியினரின் தாய்த்தெய்வமாக இருந்திருக்க வேண்டும்.

 

"நாச்சிமார் கல்லு" எனும் இடத்தில் பத்து நாட்கள் பிரமாண்டமான திருவிழா இடம்பெறுவது வழக்கம். அதில் மட்டக்களப்பின் எல்லாக் குலத்தினரின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள் என்கின்றது சைமன் காசிச்செட்டியின் குறிப்பு (Chitty, 1834:168). சுவாதியம்மனோடு இணைத்துச் சொல்லப்படும் வதனமார் என்போர் குழுமாடு (காட்டுமாடுகளும் காட்டெருமையும்) பிடித்தோராகச் சொல்லப்படுகின்றனர்.  அவர்களது வழிபாட்டுக்கு நாதனையில் "வில்லை கட்டிச்சடங்கு" என்று பெயர். இன்றும் கால்நடைகளின் நலனுக்காக வதனமாரை வழிபடும் வழக்கம் கீழைக்கரையின் பல ஊர்களில் நிலவுகிறது.

 

விவசாயம், உணவுத்தேவைக்கு மாடுகள் அவசியமாக இருந்ததால், நாதனை போன்ற அடர்காடுகளில் அலைந்த குழுமாடுகள் இப்படி பிடித்து அடக்கப்பட்டு நாட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. உயிராபத்தும் வீரமும் நிறைந்த அருஞ்செயல் என்பதால், குழுமாடு பிடித்தல், இப்பகுதியை ஆண்ட சிற்றரசரின் ஆதரவில் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. பிற பகுதிகளிலிருந்து இதைக் கேள்வியுற்று வந்து இவ்விழாவில் குழுமாடு பிடித்தபோது இறந்த வீரர்கள் பின்னாளில் வதனமாராக தெய்வ நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னாளில் இது மருவினாலும், இவ்விழா வில்லைகட்டுச் சடங்காக எஞ்சி நிற்கிறது.

 

பேராதனை அப்பு என்ற ஒருவன் பேய்கள் மூலம் செய்யும் அழிச்சாட்டியத்தைக் கண்டு சீற்றமுற்ற இராசகுலதெய்வம் (பிள்ளையார்) நாதனை வில்லைகட்டிச் சடங்கின் பின்னர், யானை வடிவில் நாடுகாட்டுப்பற்றை அழித்து நிர்மூலமாக்கியமையை நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டு பாடுகிறது (பத்மநாதன், 1976:88-90). நாதனை வில்லைகட்டிச் சடங்கில் இன்றும் போரதீவுப்பற்று, எருவிற்பற்று, சம்மாந்துறைப்பற்று, நாதனைப்பற்று மக்கள் நினைவுகூரப்படுவதுண்டு. வில்லைகட்டிச் சடங்கில் கல்லடிப்பிள்ளையார் கோவிலடியில் ஏற்பட்ட ஏதோவொரு குழப்பம் காரணமாக நாடுகாட்டுப்பற்று அழிந்தொழிந்துபோனது என்றவாறு பரவணிக்கல்வெட்டு சொல்வதை வாசிக்கமுடியும்.

 

பழுகாமமும் மண்டூரும்:

பழுகாமம் தொல்லியல் சான்றுகள் பலவும், வரலாற்றுத்தனித்துவங்கள் பலவும் கொண்ட தொல்புகழ் வாய்ந்த ஊர். 14ஆம் நூற்றாண்டில் எழுந்த சிங்கள கடையம்பொத் நூல்களில் “பலுகம் தானவ” என்ற பெயரிலான ஆட்சிப்பிரிவு உரோகண நாட்டில் தீகவாபிக்கு அருகே அமைந்துள்ளமை குறிக்கப்பட்டுள்ளது (Abeyawardana, 1999:96). மகாவம்சத்தில் முதலாம் பராக்கிரமபாகுவால் உரோகணத்தில் கலவரம் அடக்கப்பட்ட ஊர்களில் ஒன்றாகச் சொல்லப்படும் போலகாமம் பழுகாமம் ஆகக்கூடும்.

 

பழுகாமம், ஐந்து பாண்டவ வீரருக்குரிய கோவிலால் புகழ்பெற்றது. வருடாந்தம் நிகழும் சடங்கானது பத்து நாட்களுக்கு இடம்பெறுவதுடன், அதில் எரியும் தீக்கங்குகளின் மேல் வெறும் காலோடு பெருமளவானோர் நடக்கிறார்கள் என்பதை 1850களில் சைமன் காசிச்செட்டி அவதானித்து எழுதியுள்ளார் (Chitty, 1834:112).

 

எவ்வாறெனினும், இன்றுள்ள போரதீவுப்பற்றானது, வரலாற்றுக்காலத்தில் போரதீவு, எருவில், நாதனை எனும் மூன்று பகுதிகள் இணைந்ததாக இருந்தது (வரைபடம் 06). நாதனையாறு முதல் மூங்கிலாறு வரை நாதனைப்பகுதியாகவும், மூங்கிலாற்றுக்குத் தெற்கே உள்ள பகுதி, எருவில்லின் பாகமாகவும் இருந்தது. 1876ஆம் ஆண்டு குடித்தொகைக் கணக்கெடுப்பிலும் மண்டூர் எருவிற்பற்றின் ஊராகவே காட்டப்படுவதைக் கொண்டு இதை உறுதிப்படுத்தலாம். இன்று நாம் எண்ணுவது போல, நீர் நிலத்தொடர்பிற்குத் தடையில்லை என்பதாக அக்கால மக்கள் கருதினார்கள் என்பதும் இதிலிருந்து தெரியவருகிறது.




வரைபடம் 06. 18ஆம் நூற்றாண்டு இடச்சு வரைபடம். போரதீவு (Poretiwoe), நாதனை (Nadene), எருவில் (Erroewiel) என்பன காட்டப்பட்டுள்ளன. நாதனை (மூங்கிலாறு, நாதனையாறு ஆகிய) இரு ஆறுகளுக்கிடையே எல்லை வகுக்கப்பட்டிருப்பதையும், எருவில் நிர்வாகப்பிரிவானது, பழுகாம ஆற்றுக்கு இப்பால் வரை நீண்டிருந்ததையும் இப்படம் காண்பிக்கிறது.  

 

முடிவுரை:

தன் புவியியல் அமைவுச்சிறப்பாலும், அதன் காரணமாக தான் பெற்றுக்கொண்ட வரலாற்று முக்கியத்துவத்தாலும், மத்திய கால இலங்கையின் சமுக – அரசியல் வரலாற்றில் போரதீவுப்பற்றும் அதன் கிராமங்களும் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது தெரியவருகின்றது. அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றைச் சுட்டிக்காட்ட முயலும் ஓர் கட்டுரையே இதுவாகும். இந்தக் கோணத்தில் இந்நிலத்தின் வரலாற்றை ஆயும் போது உருசிகரமான பல வரலாற்றுச் செய்திகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 

அடிக்குறிப்புகள்:

[1] பொது ஆண்டு – கிறிஸ்து ஆண்டு. இக்கட்டுரையில் கி.மு / கி.பி – பொ.மு / பொ.பி என்று குறிப்பிடப்படுகிறது.

[2]  மட்டக்களப்பு வட்டார வழக்கில்  களப்பு, வாவி, கரைச்சை முதலிய நீர்நிலைகளையும் ஆறு என்று அழைப்பது வழக்கமாகும். மட்டக்களப்பு வாவி, போரதீவுப்பற்றில் பழுகாமத்து ஆறு என்றே அழைக்கப்படுகிறது. எனினும் ஆறு, வாவி என்பனவற்றுக்கிடையிலான குழப்பத்தைத் தவிர்க்க, மட்டக்களப்பு வாவியானது, வாவி என்றே இங்கு குறிப்பிடப்படுகிறது. 

[3] நவகிரி ஆற்றின் கரையோரமாக வெள்ளங்கிரிய என்றோர் இடம், போரதீவுப்பற்றுக்கு மேற்கே உகணைப்பகுதியில் இன்றும் அமைந்திருக்கிறது.பார்க்க: பின்னிணைப்பு குடித்தொகை அட்டவணை.

[4] இன்று கல்முனை கிட்டங்கிக்குத் தெற்கே மட்டக்களப்பு வாவி வண்டல் படிந்து சேற்றுநிலமாக மாறிவிட்டது. அங்கு நீர்த்தொடர்பு அறுந்துவிட்டபோதும், இந்தப் பழைய தொடர்ச்சியின் எச்சமாக காரைதீவில் இன்றும் ‘கரைச்சை’ நீர்நிலையொன்றைக் காணமுடிகின்றது. காரைதீவு மாளிகைக்காட்டில் சொரொட்ஜன் கொண்டாவை  (Sorotjon Condave) என்ற பெயரில் அமைந்திருந்த இடச்சுக்கோட்டை கிழக்குக் கரையோரம் முக்கியமான துறைமுகமாகப் பயன்பட்டிருக்கிறது. 

[5] சம்மாந்துறையிலிருந்த மட்டுக்களப்பு அரசு திருக்கோவில் ஆலயத்தின் பொறுப்பாக இருந்தது என்பதற்கு பல தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் பழுகாம மக்களுக்கு அண்மைக்காலம் வரை ஆலயக்கடமைகளில் பெரும்பொறுப்பு இருந்தது. இந்த மூன்று அரசுகளின் பின்னணியில் தோன்றியவையாகவே திருப்படைக்கோவில்கள் இருக்கவேண்டும். திருப்படைக்கோவில்களின் பின்னணியிலேயே மட்டக்களப்பில் பல ஊர்களும் சமூகங்களும் இணைந்து பங்களிக்கும் இப்பகுதிக்கே சிறப்பான தேசத்துக்கோவில்கள் எனும் முறைமை தோன்றியது.

உசாத்துணைகள்:

 

-                      கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.

-                      துலாஞ்சனன், வி. “தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு”, துய்த்ததும் துறந்ததும். http://thulanch.blogspot.comஇலிருந்து மீள்விக்கப்பட்டது.

-                      பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.

-                      _________________. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.

-                      Abeyawardana, H.A.P. (1999). Boundary Divisions of Mediaeval Sri Lanka. Polgasovita: Academy of Sri Lankan Culture.

-                      Arumugam., S. (1969). Water Resources of Ceylon: Its Utilisation and Development. Colombo: Water Resources Board.

-                      Baldaeus, P. (1703). A True and Exact Descripton of the Most Celebrated East Indian Coasts of Malabar and Coromandel as also of the Isle of Ceylon.

-                      Brohier, R.L. (1961). When Sinhalese King Met Danish Admiral:  300 Year Old Travelogue Of An Expedition To The Kandyan Court. Journal of the Dtch Burgher Union, 51(1-2), pp.1-18

-                      Ceylon Almanac & Compendium of Useful Information. (1839).  Native Headmen Attached to the Government Agent For The Eastern Province, Colombo: Government Press.

-                      Ceylon Almanac & Compendium of Useful Information. (1847).  Native Headmen Attached to the Government Agent For The Eastern Province, Colombo: Government Press.

-                      Ceylon Almanac & Compendium of Useful Information. (1860).  Native Headmen Attached to the Government Agent For The Eastern Province, Colombo: Government Press.

-                      Chitty, S.C. (1834). The Ceylon Gazetteer, Cotta (Fort): Church Mission Press

-                      Codrington, H.W. (1994). The Gadaladeniya Inscription of Senasammata Vikramabahu. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 8-15.

                de Silva, C.R. (2009). Portuguese Encounters with Sri Lanka and the Maldives: Translated Texts from the Age of Discoveries. Surrey (England): Ashgate.

-                      Ferguson, D. (1998). “The Batticaloa and Panawa Territories: As Described by Rjklof Van Goens in October 1675”, The Earliest Dutch Visits to Ceylon. New Delhi – Madras: Asian Educational Services.

-                      Gunawardena, C.A. (2005). Encyclopedia of Sri Lanka (Second Ed.). India: New Dawn Press Inc.

-                      McGilvray, D.B. (2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka. Durham & London: Duke University Press.

-                      Pascoe, C.F. (1901). Two Hundred Years of the S.P.G. London: Society’s Office

            Queyroz, F.D. (1992).The Temporal and Spiritual Conquest of Ceylon (S.G.Perera Trans.), Vol II (Book 3-4), New Delhi- Madras: Asian Educational Services.

-                      Ranawella, G.S. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.

-                      - Skeen, W. (1853). A Collection of Legislative Acts of the Ceylon Government from 1796. Colobo: Government Printers.

 

 

பின்னிணைப்பு –  போரதீவுப்பற்றின் ஊர்களின் குடித்தொகை விபரம் -  1816 முதல் 1931 வரை. (இலங்கை குடித்தொகைக் கணக்கெடுப்புகளின் புள்ளிவிபரத் தரவுகளின் படி.)

 

ஊர்

1816

1871

1891

1901

1911

1921

1931

இன்றைய பெயர்

பிசெ

 

நாதனை

66

198

79

82

105

35

77

 

போரதீவுப்பற்று வெல்லாவெளி

 

வெல்லாவெளி

 

106

163

165

195

256

 

 

நாவலடி முன்மாரி

 

 

 

 

 

 

 

 

தாமரைக்கேணி

 

 

 

 

73

95

33

 

 

வாழைச்சேனை

 

 

79

76

77

50

29

 

 

பீலியாற்றுவட்டை

 

 

 

 

 

-

40

பீலியாறு

 

விரட்டுச்சேனை / வேதத்துச்சேனை / வெட்டாத்துச்சேனை

 

 

-

29

22

10

12

வேத்துச்சேனை

 

மண்டூர்

எருவிற்பற்று

1001

1272

503+
314+
457

328
+438
+293

565+
457+
388

 

 

மண்டுக்கொட்டைமுனை

 

 

 

 

129

270

203

மண்டூர் கோட்டைமுனை

 

தம்பலவத்தை

 

 

 

 

60

99

172

 

 

பாலமுனை

 

 

 

 

243

303

384

 

 

காக்காச்சிவட்டை

 

 

 

-

09

18

19

 

 

அலியார்வட்டை

 

 

 

 

 

-

16

 

 

கோவில் போரதீவு

113

 

532

672

894

961

698

908

 

 

பெரிய போரதீவு / கம்மாளப்போரதீவு

267

753

632

725

625

539

656

பெரிய போரதீவு

 

முனைக்காடு / தீவுக்காடு / முனைத்தீவு

 

 

87

205

248

318

447

முனைத் தீவு

 

பழுகாமம்

292

1438

1256

1710

713+
790

660+ 622

747

+

800

 

 

திக்கோடை மடு

 

 

 

 

29

53

12

 

 

திக்கோடை முன்மாரி / திக்கோடைமுனை

 

 

 

 

80

21

40

 

 

திக்கோடை

 

94

118

175

33

48

43

 

 

நாவற்கேணிக்குடி / நாவற்கேணி

 

09

04

 

 

 

 

 

மருங்கையடி முன்மாரி / மருங்கையடி / முருங்கையடி

 

55

34

44

56

31

 

 

தும்பங்கேணி

 

 

33

51

30

15

24

 

 

களிமடுக்கந்தை / களிமடுக்கண்டம் / களிமடு

 

86

247

10

11

40

30

களிமடு, மாலையர் கட்டு

 

இறக்கத்துவட்டை / இறக்கத்துவட்டைக்கண்டம்

 

 

-

46

09

13

இறக்கத்துவட்டை, மாலையர் கட்டு

 

கல்வத்தைக்கண்டம் / கல்வட்டைக்கண்டம்

 

 

 

 

15

11

30

கல்வட்டை, சின்னவத்தை

 

கோடாலிபோட்ட மடு

 

 

-

21

 

 

 

தெரியவில்லை.

 

கொட்டிலந்தை

 

279

131

81

56

 

 

கொட்டிலாந்த

வேகம்பற்று வடக்கு உகணை

 

வைக்கியெல்லை பக்கை எல்ல / வக்கியெல்ல

 

 

153

149

69

25

 

 

பக்கி எல்ல

 

திவிளானை/ திவுலானை

 

115

110

03

03

 

 

 

 

வெள்ளங்கிரி

 

 

-

48

05

 

 

வெள்ளங்கிரிய

 

கொணாகொல்ல

 

 

119

103

103

 

 

 

 

உணக்கல்

 

 

-

48

51

 

 

 

 

பொக்கிணியன்கல்

 

 

-

41

 

 

 

 

 

பாவூறு

 

 

121

56

79

 

 

 

 

பண்டாரத்தீவு

 

 

-

34

 

 

 

பண்டாரதூவ

 

விரித்தகொல்லை

 

 

-

61

34

 

 

விருத்தகொல

 

கொம்பானை

 

 

-

71

03

 

 

கொஹம்பான

 

சின்னக்கண்டி

 

 

-

65

 

 

 

பலம் கந்தவூர?

 

பக்கைவத்தை

 

 

77

32

27

 

 

போக்கபெட்ட

 

நில்நாயாக்கை

 

 

 

-

79

 

 

 

 

வாரான்கட்டை

 

 

 

-

08

 

 

 

 

கச்சைக்கொடிப் பூவல்

 

 

-

33

43

 

 

கச்சக்கொடி

மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை.


பி.கு:

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தால் 2022.12.27 (செவ்வாய்க்கிழமை) அன்று நடாத்தப்பட்ட "கலாசார மற்றும் இலக்கிய விழா 2022"இல் வெளியிடப்பட்ட மருதம் 15ஆவது இதழில் இடம்பெற்ற கட்டுரை. பப.11-30. இந்த வலைப்பதிப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உம்: அட்டவணை 01 தொடர்பாக நூலில் வெளியான தகவற்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. 

2 comments:

  1. வணக்கம்

    ஒரு நீண்ட கட்டுரை அறிய முடியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. நீண்ட ஆய்வு. வாழ்க வளமுடன். வெல்லாவெளி தும்பன்கேணி இடைப்பட்ட குன்றுக் குகைகள் கழுமுன்தன்வெளி படர்கல் கல்வெட்டுக்கள் பற்றியும் ஓரு தேடலை முடிந்தால் செய்யவும்.

    ReplyDelete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner