கந்தன் என்னும் காதலன்

0 comments
திரௌபதி கேட்டாள் "மாயை உண்மையைச் சொல், பெண்பித்தனை விரும்பாத பெண் உண்டா இவ்வுலகில்?" "ஆம், அத்தனை பெண்களும் அவனைப் பார்க்கிறார்கள்.எதனால் அவனுக்கு அத்தனை பெண் என்று அகம் வினவுகிறது. அதை அறியாமல் அகம் அடங்காது. ஆகவே நாம் அவனைப் பார்க்கிறோம்." மாயை மூச்சிரைக்க "அத்துடன் இன்னொன்றும் உள்ளது. அத்தனை பெண்ணைக் கண்டவனுக்கு தான் மட்டும் மிகமிகத் தனித்தவள், அவன் வேறெங்கும் அடையமுடியாதவள் என ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள்" என்றாள்.
திரைப்படங்களில் கவனித்திருக்கிறீர்களா? கதாநாயகர்களுக்கு பொதுவாக இரண்டு குணாம்சங்கள் இருக்கும். முதலாவது, நாயகன் வீரதீரனாக இருப்பான். பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடுவான். மற்றது, அவன் ஒரு பெண்பித்தனாக இருப்பான். காணும் பெண்களிடமெல்லாம் வழிந்து கொண்டிருப்பான். அப்படி இல்லாவிட்டால் பெண்களெல்லாம் அவனை சுற்றிச் சுற்றி வருவார்கள்.  

இதற்குக் காரணம் எளிமையானது. ஆதி காலத்திலிருந்தே மனிதனுக்கு இயல்பாகவே இருந்த இயல்புகள் வன்முறையும் காமமும். அவை இரண்டும் இருந்தால் தான் ஒரு தலைவன் உருவாக முடியும்.  ஒரு பழங்குடிச் சமூகத்தில் பலம் குறைந்தவர்களை அடக்கி, பலமிக்கவன் மேலேறி, அவனது பரம்பரை தொடர்வதன் மூலமே தக்கன பிழைக்கவும் தகாதன மடியவும் முடியும். இளந்தாரிக்கல் தூக்குவது, எருதை அடக்குவது, மல்யுத்தம் இதெல்லாம் பழங்காலத் திருமணம் ஒன்றிற்கான போட்டிகளாக அமைந்ததும் இதனால் தான்.  இயற்கைத் தேர்வு என்று கூர்ப்புக் கொள்கை சொல்வதும் இதையே.

ஆனால், நாகரிகம் உருவாகி விழுமியங்கள் கண்டறியப்பட்டபோது, அளவுக்கு மீறிய வன்முறையும் காமமும் சமூகமொன்றின் நிலைத்திருக்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் கண்டுகொண்டார்கள்.  அவற்றை மனிதனால் முற்றாக  வெல்லவும் முடியாது என்பது உணரப்பட்டபோது அவை வலுக்குறைக்கப்பட்டு  உருமாற்றப்பட்டன. சமூகப்பொறுப்பை உணர்ந்து வன்முறை செய்வதும் காமமாடுவதும் அனுமதிக்கப்பட்டன. இப்படி வன்முறை வீரமானது; காமம் காதலானது. வீரத்துக்காகவும் காதலுக்காகவும் உயிர் கொடுத்தவர்கள் உதாரண புருஷர்களாகவும் தெய்வங்களாகவும் மாறினார்கள். வீரனையும் காதலனையும் புகழ்ந்து இலக்கியங்கள் எழுந்தன. காவியங்கள்  பாடப்பட்டன. தொல்குடியான தமிழர்களிடம் இதற்கு ஈராயிரம் ஆண்டுகள் பழைமையான சான்று சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது. அகத்திணை புறத்திணை எனும் இரு பிரிவுகள். அகத்திணை பாடுவது காதலை; புறத்திணை பாடுவது வீரத்தை.

நம் மரபில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் தெய்வங்களான கண்ணனும் முருகனும் இணையற்ற வீரர்கள். கண்ணன் மாடுகளை அடக்கி நப்பின்னையை மணந்தான். கஞ்சன் முதலிய பலசாலிகளை வீழ்த்தினான். கோவர்த்தன மலையைப் பெயர்த்தான். இப்படி அவன் செய்த சாகசங்கள் பல. முருகனோ சூரனை வென்றவன். அவுணர் படையை அடியோடு அழித்தவன். அவனது அடங்காக் கோபத்தையே அதிக சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. 

ஆனால் தாங்கள் கொண்டிருந்த வீரத்துக்குச் சமனாக  அவர்கள் இருவருமே பெண்பித்தர்கள். ஆற்றில் குளித்த பெண்களின் ஆடையைக் களவாடிய கள்வன், கண்ணன். அவனை எண்ணி உருகாத ஆயர்குலப் பெண்டிர் இல்லை.  முருகனும் அப்படித்தான். தேவலோக மங்கையரெல்லாம் அவன் அழகில் மயங்கினார்கள். அவன் அழகான பெண்களைப் பிடித்துக்கொள்வான். இளங்கன்னியருக்கு விரகதாபத்தை உண்டாக்கிவிடுவான். அவர்கள் பசலை கொண்டு காதல் நோயால் வாடுவார்கள். வெறித்தபடி முருகனை எண்ணி ஏங்கி அமர்ந்திருப்பார்கள். இப்படி முருகனால் ஆட்கொள்ளப்பட்ட பெண்களுக்காக இரங்கிய அக்காலத்து மக்கள், முருகனை அழைத்து அவளை விட்டுப் போய்விடுமாறு மன்றாடும் "வேலன் வெறியாட்டு" சடங்கை நிகழ்த்தினார்கள். முருகனும் கண்ணனும் மட்டுமன்றி இன்னொரு பெருந்தெய்வமான சிவனும் அப்படி ஒரே நேரத்தில்  வீரனாகவும் காதலனாகவும் தான் இருந்தார் என்பதற்கும் பல புராணக்கதைகள் சான்றாக இருக்கின்றன.

இவற்றின் பின்னுள்ள மானுடவியலை அறியாமல் "போக்கிரிகளையும் பொம்பிளைப் பொறுக்கிகளையும் கடவுளராக வழிபடுகின்றார்கள் சைவ வைணவர்கள்" என்று கைகொட்டிச் சிரித்த பலர், நிஜவாழ்க்கையில் தாங்களும் போக்கிரிகளாகவும் பெண்பொறுக்கிகளாகவுமே இருந்தார்கள்; அல்லது அப்படிப்பட்டவர்களை தங்கள் தலைவர்களாகக் கொண்டாடினார்கள் என்பது தான் முரண்நகை. இதிலெல்லாம் ஈடுபடாமல் ஒழுக்கமாக வாழ கட்டாடயப்படுத்தப்பட்டிருக்கும் எளிய மனிதர்களின் மனம் கூட "அப்படி இருந்தால் தானே கெத்து" என்று எங்கோ ஓரிடத்தில் பெருமூச்சு விடுகிறது. மானுட இயல்பே அது தான். காதல், வீரம் என்பதெல்லாம் சும்மா. நூறுநூறாண்டுகள் கடந்தாலும், அப்படி வன்முறையையும் காமத்தையும்  தான் நம்மால் கொண்டாடமுடியும். ஏனென்றால் அது தான் நம் அடிப்படை இயல்பே. மனிதனும் ஒரு மிருகம் தான், இல்லையா?

தமிழ்ச் சைவர்களுக்கு சிவனே முழுமுதற்கடவுள். என்றாலும், உலகெங்கும் அதிக எண்ணிக்கையிலுள்ள சைவக்கோவில்கள் பிள்ளையாருக்காக அமைந்தவை. ஆனால் மேலோட்டமாக எண்ணிப்பாருங்கள். சைவத்தில் அதிக தனிநபர்களுக்குப் பிடித்தமான கடவுள் முருகன் தான். இலங்கை எனும் இந்த சின்னஞ்சிறு தீவே கதிர்காமக் கந்தனுக்கு அடிமை. வடக்குக் கிழக்கில் புகழ்பெற்ற தொண்ணூறு வீதம் சைவக்கோவில்கள் முருகனுடையவை. அந்தக் காலத்திலிருந்தே அவன் தான் தமிழருக்கு ஹீரோ. ஆண்களுக்கு முன்னுதாரணமான நாயகன், பெண்களுக்கு ஒப்பில்லாத காதலன். அழகன், இளைஞன், வீரனும் கூட.

ஒரு சிங்கள நண்பன் கதிர்காமக் கந்தன் பற்றி தங்களிடம் வழக்கிலுள்ள ஒரு நகைச்சுவையான நாட்டார் கதையைச் சொன்னான். பச்சையான பதினெட்டு சக கதை என்பதால் இங்கு அதைப் பகிரவில்லை.  ஆனால் அது எப்படித் தொடங்குகிறது என்றால் "கதிர்காமத் தெய்வம் வழக்கப்படி வல்லியம்மாவுக்கும் தேவானே அம்மாவுக்கும் தெரியாமல் தன் காதலியைக் காண இரவில் புறப்பட்டான்."   மூன்றாவது ஒருத்தியிடம், அதுவும் வழக்கப்படி,  திருட்டுத்தனமாகச் செல்கிறான். பாருங்கள், சிங்களவரிடமும்  முருகன் ஸ்திரீலோலன் தான். 

கர்நாடக சங்கீதத்தில் கன்னடத்திலும் தெலுங்கிலும் எழுந்த பல கீர்த்தனைகள் கண்ணனை நாயகனாகக் கொண்டு பாட, தமிழில் எழுந்த கீர்த்தனைகள் முருகனை நாயகனாகக் கொண்டு பாடுகின்றன.  திரையிசையில் கூட முருகன் காதலனாகவே எஞ்சியிருக்கிறான்.  "சிங்கார வேலனே தேவா", "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்", "முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்", "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன",  என்று நாயகி பாவத்தில் முருகனிடம் பெண்கள் உருகும் இந்தப் பட்டியல் நீள்கிறது.  "பழமுதிர்ச்சோலையிலே" பாட்டை நினைவூட்டிய நண்பர் கபிலன் கணேசுக்கு நன்றிகள். 

சிங்கார வேலனே தேவா 
கொஞ்சும் சலங்கை (1962)

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
பஞ்சவர்ணக்கிளி (1965)


முத்தமிழில் பாட வந்தேன்
மேல்நாட்டு மருமகள் (1975)

மறைந்திருந்து பார்க்கும்
தில்லானா மோகனாம்பாள் (1965)

பழமுதிர்ச் சோலையிலே
குழந்தையும் தெய்வமும் (1965)

சமகாலத் திரைப்பாடல்களில் முருகன் காதல் நாயகனாக இடம்பெற்றது குறைவு தான். ஆனால் அடியோடு இல்லாமல் இல்லை. கர்நாடக இசைச் சாயலில் அமைந்த  "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடலைச் சொல்லலாம். கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும், "சரவணபவ குக வடிவழகா"வையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். கண்ணனைப் பாடும் "உனை தினம் எதிர்பார்த்தேன்" பாட்டில் போகிற போக்கில் ஒரு வரி வருகிறது. 

கண்ட நாள் முதலாய்
கண்ட நாள் முதல் (2005)

சரவணபவ குக வடிவழகா
காதலா காதலா (1998)

உனை தினம் எதிர் பார்த்தேன்
காதலுடன் (2003)

மிக அண்மையில் இன்னும் இரு பாடல்கள் வந்தன. அதில் முதலாவது போகன் திரைப்படத்தில் "செந்தூரா". செந்தூரன் என்பது திருச்செந்தூர் முருகனின் பெயர். இந்தப் பாடலில் தமிழ் மரபுத்தொடர்ச்சி பளிச்சிடும், "செங்காந்தள் பூ உன் தேரா?", "மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய்க் காற்றில் எய்தாயா?", என்ற வரிகளும் அத்தனை அழகு. கதைப்போமா, வைவாயா என்ற வட்டார வழக்குகளுக்கு இந்தப் பாட்டின் மூலம் அமரத்துவம் கொடுத்த கவிஞர் தாமரையை, தாமரைகளால் தான் அருச்சிக்கவேண்டும்.
செந்தூரா
போகன் (2017)


வேறு யாரும் பாடலாசிரியர்களை தமிழ் இலக்கியத்தோடு இணைந்து புகழ்ந்தால் உடனே "அங்க என்னம்மா சத்தம்" என்ற குரல் கேட்டுவிடும்.  வந்துவிடுவார் நம் கவிப்பேரரசு.  என்ன? திராவிட கவிப்பேரரசு முருகனைப் பாடினாரா?  இல்லாமலா? லிங்கா படத்தின் "சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்" பாடலில் ஒரு வரி வரும். "ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல் கொள்ள வா, கொற்றவை மைந்தா". கொற்றவையின் மைந்தன். முருகன். கொற்றவை மைந்தன் என்பதை "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ"  என்று இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறது திருமுருகாற்றுப்படை.

என் மன்னவா
லிங்கா (2014)


இந்த இரு பாடல்களும் தனிப்பட்ட ரீதியில் என்னை மகிழச் செய்தவை. காதலனைக் கண்னனோடு ஒப்பிடும் பாடல்கள் தமிழிலும் வேறு இந்திய மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ்த்திரையுலகில் இத்தனை ஆண்டுகள் கழிந்தும், தமிழ்ப் பண்பாட்டின் இணையற்ற காதலனான முருகனை எங்குமே நாயகி நாயகனோடு ஒப்பிட்டுப் பாடியதில்லை. தன் சொந்தக் காதலனை காதலி "வாடா முருகனைப் போன்றவனே"  என்று வெளிப்படையாக அழைப்பது தமிழில் முதலில் நிகழ்ந்தது, இந்த "என் மன்னவா" பாட்டிலும், "செந்தூரா" பாட்டிலும் தான். 


திரையிசையில் இப்படி மரபு பாடப்பட்டிருக்கிறது என்றால் ஏன் இத்தனை குதிக்கிறாய்? ஒரு சாதாரண விஷயம் தானே இது? இல்லை. நிச்சயமாக இல்லை. கண்ணன் - இராதை, கண்ணன் - மீரா, தேவதாஸ் -  பார்வதி, ஷாஜஹான் - மும்தாஜ், சலீம் - அனார்கலி,  இதெல்லாம் வடநாட்டிலிருந்து நம்மை வந்தடைந்த காதல் கதைத் தொன்மங்கள். ஒரு சாதாரண தமிழனுக்கு இவர்களைப் பற்றி ஒரு வரியாவது தெரியும். ஆனால் கண்ணன் - நப்பின்னை, முருகன் - வள்ளி இதெல்லாம்   ஆயிரமாயிரமாண்டுகள் பழைமையான நம் மண்ணின் தொன்மங்கள். இவர்கள் பற்றி யாராவது இங்கு ஒரு வரி பாடிக் கேட்டிருக்கிறோமா? வள்ளியாக தன்னைப் பாவனை செய்து நாயகி ஏங்கும் ஒரு பாடல் தமிழில் இருக்கிறதா? தளபதியிலிருந்து 96 வரை, யமுனை ஆற்றிலே நீலக்காற்றிலே என்று அப்படி உருகினார்களே நம் தமிழ்ப்பட நாயகிகள், ராதையை இத்தனை அறிந்த நாம், நப்பின்னை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஏன் அந்தப் பெயராவது தெரியுமா? 

தமிழில் அம்பிகாபதி - அமராவதி  தொன்மம் ஓரளவு புகழ்பெற்று இருக்கின்றது. அதுவும் மேலே சொன்ன வடநாட்டுத் தொன்மங்களும் நம் மத்தியில் புகழ்பெற்றதற்கு,  அந்தக் கதைகளிலுள்ள துன்பியல் சுவை அல்லது அவலச் சுவை ஒரு காரணமாக இருக்கலாம் என்று புரிந்துகொள்கிறேன். அதற்காக முருகனையும் வள்ளியையுமோ, கண்ணனையும் நப்பின்னையையுமோ முற்றாகப் புறக்கணிப்பது எந்த விதத்தில் தான் நியாயம்?

திரைப்படங்களை ஏன் ஒரு அளவீடாக எடுத்துக்கொள்கிறேன் என்றால்,  இலக்கியங்கள் போலவே திரைப்படங்களும் காலத்தின் கண்ணாடி என்பதால் தான். குறிப்பிட்ட காலத்தின் திரைப்படங்கள் கொஞ்சத்தை எடுத்து அலசி ஆராய்ந்தால், அந்தத் திரைப்படங்களை இரசித்த மக்களின் இரசனைகளை அறிந்துகொள்ளமுடியும். "அச்சம் என்பது மடமையடா" வெளிவந்தபோது ரோயல் என்ஃபீல்ட் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.  "96" மற்றும் "கோமாளி" வெளியான போது 80, 90களில் பிறந்த தலைமுறையினர் இறந்த காலத்தை எண்ணி ஏங்கிக்கொண்டிருந்தார்கள்,. 60,70களில் பெண்கள் பொட்டை உச்சி நெற்றியில் வைப்பது தான் ஸ்டைலாக இருந்தது. 70, 80களில் பெண்களுக்கு கவலை வந்தால் வாயில் விரல்களை வைத்து விசும்பி அறைக்குள் ஓடி கட்டிலில் விழுந்து குமுறி அழுவார்கள். 80, 90களில் காதல் வந்தால் பூங்காவொன்றுக்குப் போய் ஆணும் பெண்ணும் மரத்தைச் சுற்றி ஆடிக்கொண்டிருப்பார்கள். இப்படிப் பல வரலாற்றுண்மைகளை ஊகிக்கலாம். சில மொக்கைத் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்கள் "இரசிகர்கள் இதைத்தானே இரசிக்கிறார்கள்" என்று பேட்டி கொடுப்பதைக் கண்டிருப்போம். அவ்வளவு ஏன், திரைப்படங்களைப் பார்த்தே, தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொண்ட "பாபநாசம்" சுயம்புலிங்கம் நினைவில் இருக்கிறாரா?

திரைப்படங்கள் ஒரு குறித்த மொழி பேசும் சகல மக்களாலும் இரசிக்கப்படுபவை. பொழுதுபோக்கு என்ற வகையில், அந்த வட்டம் தாண்டி வேற்றுமொழியாளராலும் அவதானிக்கப்படுபவை. எனவே ஒரு குறித்த புவியியல்/ பிரதேசம்/ சாதி/சமயம் சார்ந்த வழமைகள் காட்சிப்படுத்தப்படும் போது, ஏனைய தரப்பினரால் அவை புரிந்துகொள்ளப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. "கபாலி"யின் மலேசியப் பின்புலமும், "கடலி"ன் தென்தமிழக கத்தோலிக்கப் பின்புலமும் அவற்றை ஏனைய தமிழர் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தமிழ்ப்பண்பாடு என்ற பொதுச்சட்டகத்தின் கீழ்வரும் பெரும்பாலான விடயங்களை எந்தத் தமிழனாலும் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளவும் வேண்டும். எனவே தான் பொதுத்தமிழ் பண்பாட்டுக் கூறுகள், அல்லது அப்படி இனங்காணப்படும் விடயங்கள் தமிழ்த் திரைப்படங்களில் பதிவாவதை வரவேற்கிறேன். அவற்றை இனங்கண்டுகொண்டால் பகிர்ந்துகொள்கிறேன்.

வெளியிலிருந்து வந்த அடையாளங்களை விட,  இந்த மண்ணுக்கே உரிய கண்ணனும் கந்தனும், காதலுக்கான அடையாளமாக தமிழில் தொடர்ந்தும் முன்வைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒரு விருப்பம் தான். அதிலும்,  தமிழ்க்கடவுள் முருகன், முப்பாட்டன் முருகன் என்று வெறுமனே உணர்ச்சி வசப்படுவதை விட, அடையாளங்களுக்கு வெளியே பண்பாட்டுக் குறியீடாக முருகனை முன்வைப்பதே சமகாலத்தில் தேவையானது. 

மகத்தான காதலனாக கந்தன் எழுக -  திரையுலகிலும் அன்றாடத்திலும்! 
மேலும் வாசிக்க »

என்ன கொடுமை சந்திரமுகி இது!

0 comments
ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  


இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பேய்ப்படங்களுக்கான விதை, சந்திரமுகி போட்டது தான் என்று நினைக்கிறேன். 

சந்திரமுகியின் "ராரா"வுடன் தான் வாயில் நுழையாத வரிகள் கொண்ட திரைப்பாடல்களை பாடமாக்கும் என் விசித்திரமான பொழுதுபோக்கு ஆரம்பமானது. அப்போது குரலும் கொஞ்சம் கேட்கும்படி இருந்ததால் வகுப்புத் தோழர் - தோழிகள் உட்பட எல்லோரும் உட்கார வைத்து ராரா பாடச்சொல்லுவார்கள்.  மூச்சுவிடாமல் "ஜிகிபிகி ஜிகிபிகி சொகசுல மொரவினி" என்று கடைசி சரணத்தைப் பாடி, அவர்கள் முகத்தில் தெரியும் வியப்பைக் கண்டு பெருமிதத்தோடு புன்னகைப்பேன். (பல்கலைக்கழகம் போன பின்னர் தான்  எனக்கு மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கே ராரா தளதண்ணியாகப் பாடம் என்று அறிந்துகொண்டு வெட்கித் தலைகுனிந்தேன். 😞)

அப்போது  கல்முனைக் கல்வி மாவட்டத்தில்  சாரணர் பாசறைகள் இடம்பெறும் போதெல்லாம், பாசறைத்தீயில்,  எங்கள் பாடசாலை சார்பில் தவறாமல் இடம்பெறும் நாடகமாக "இலங்கையில் சந்திரமுகி" இருந்தது. பேய் புகுந்தவன் கட்டிலைத் தூக்கும் போது "உதறவா? பெட்சீற்ற நல்லா உதறவா?" என்று கேட்பதிலிருந்து, பேய் விரட்டும் மந்திரவாதி "ஊத்துங்கடா ஒயில" என்று சொல்வது வரை நாங்கள் அந்த நாடகத்தில் செய்த களேபரங்கள் ஏராளம். ஒருமுறை மாவட்ட சாரணர் பொறுப்பாளர் முஸ்தபா சேரே  தனியே கூப்பிட்டுத் திட்டிக் கெஞ்சிய பின்னர் தான், அந்த நாடகத்தை  நடிப்பதை நிறுத்தினோம். 😆


சந்திரமுகி வெளியான போதே, ஒளித்து வாசிக்கத் தொடங்கியிருந்த வீரகேசரி "நடுப்பூட்டு சினிமாத்துணுக்கு"களிலிருந்து அது ஒரு மொழிமாற்றப் படம் என்று தெரிந்திருந்தது. அது கன்னடத்தில் "ஆப்தமித்ரா" என்ற பெயரில் வெளிவந்திருந்தது என்பதும், ஆப்தமித்ராவுக்கு அடிப்படையே கூட "மணிச்சித்திர தாழ்" எனும் மலையாளப்படம் தான் என்பதும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தன. பெரியம்மா குடும்பத்தினர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார்கள். நான் ஆசையாகக் கேட்டவற்றில் முக்கியமாக அடங்கியிருந்தது மணிச்சித்திரதாழ் - ஆப்தமித்ரா இரண்டினதும் 'படச்சீடி'கள்.  


ஆனால் வீட்டில் 'டிஷ் அண்டனா' இணைப்புக் கிடைத்தபின்னர் 2010 முதல்  ஏசியாநெட் தொலைக்காட்சியில் அடிக்கடி  மணிச்சித்திரதாழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.   2011இல் இணையத்துக்கு அறிமுகமான போது, யூடியூப்பில் தேடி கன்னட ஆப்தமித்ரா, இந்தியில் போல் புலையா, வங்காளத்தில் ராஜ்மஹால் எல்லாவற்றின் உச்சக்கட்ட காட்சிகளையும் பார்த்துவிட்டேன். இவை எல்லாமே சந்திரமுகிக்கு முன்பின்னாக வந்த அதே கதையின் வெவ்வேறு மொழி வடிவங்கள்.  

மலையாளத்தில்  சோபனா,  தமிழ் நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?", கன்னடத்தில் சௌந்தர்யா, தெலுங்கு நாகவல்லியாக ஆடும் "ராரா சரசக்கு ராரா", இந்தியில் வித்யா பாலன் வங்கத்து மஞ்சுலிகாவாக ஆடும் "ஆமி ஜே தொமார்", வங்கத்தில் அனு சௌத்ரி ஒரிய (?) சந்திரமுகியாக ஆடும் "அமர் சோக்கே ஆகுன்" என்று, இந்தியப் பண்பாட்டுப் பல்வகைமையை திகட்ட திகட்ட பார்த்து இரசித்தேன்.

ஒரு முறை வந்து பார்த்தாயா?
(மணிச்சித்திரதாழ் 1993)


    
ராரா சரசக்கு ராரா
(ஆப்தமித்ரா 2004)


ராரா சரசக்கு ராரா
(சந்திரமுகி 2005)அமர் சோகே ஆகுன்
(ராஜ்மகால் 2005)

ஆமி ஜே துமார்
(போல் பூலையா 2007)


இந்தப் படங்கள் எந்தளவுக்கு என்னைப் பாதித்திருந்ததென்றால், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, ஒரு குறும்படம் எடுக்கத் திட்டமிட்டோம். கண்டியின் இராஜசிங்க மன்னனால் படுகொலை செய்யப்பட்ட "சதுராங்கனி" என்ற சிங்கள நாட்டியமங்கையின் சாபம் இலங்கை மக்களை இன்றுவரை பீடித்திருப்பது தான் கதைக்கரு. நல்ல காலமாக அது நிறைவேறவில்லை. பின்பு அந்தக்கருவையே தமிழ் - சிங்கள நாட்டார் வழக்கிலுள்ள குமாரிஹாமி கதையோடு இணைத்து உவங்கள் இணைய இதழில் "அறவாழி" என்ற சிறுகதையை எழுதினேன்.

ஆனால் மணிச்சித்திரதாழைப் பார்த்த பின்னர் தான் தமிழில் அதன் கதை எத்தனை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கன்னட ஆப்தமித்ராவிலும் அதேதான். இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும் விஷ்ணுவர்த்தனும் அந்தப் படங்களில் நடித்ததால் அப்படி கதையை மாற்றுவது கட்டாயமாக இருந்திருக்கிறது. ஆனால், மலையாளத்தில்  முப்பதடிப் பாம்பும் இல்லை; பேயும் இல்லை. அது அருமையான ஒரு உளவியல் படம். அந்தக் கதை முழுக்க முழுக்க இயங்குவது ஷோபனா பாத்திரத்தின் பிளவாளுமை நோயை மையமாக வைத்துத் தான். 

மணிச்சித்திரதாழின் கங்கா, தான் தங்கியிருக்கும் தறவாட்டில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட  நாகவல்லி எனும் தமிழ் நடனமங்கையோடு தன் பிளவாளுமையை இனங்கண்டு கொள்கிறாள். உளவியல் மொழியில் சொன்னால், அவளது அகம் (Ego) கங்காவாக நீடிக்க, அவளது எதிர் அகம் (Alter Ego) நாகவல்லியாகி விடுகிறது. நாகவல்லி, கங்காவின் கணவனையும் தறவாட்டைச் சூழ வசிக்கும் ஒவ்வொருவரையும், தனது காலத்தவர்களாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறாள்.  தன்னை தமிழ் நாட்டிலிருந்து கடத்தி வந்து ஆசைநாயகியாக வைத்திருந்த தறவாட்டுக் காரணவர் சங்கரன் தம்பியாக நாகவல்லி நினைப்பது, கங்காவின் கணவனை! (மணிச்சித்திரதாழில் உள்ள கதை மாறுபாடும் முக்கியமானது. அங்கு  வேட்டையன்  சரவணன் அல்ல; செந்தில். என்னக் கொடுமை சரவணன் இது!)


மணிச்சித்திரதாழில் நாகவல்லியிலிருந்து கங்காவைக் காப்பாற்றும் இறுதிக்கட்டம், சந்திரமுகியில் இடம்பெறுவது போல் ஒரு பேய் விரட்டும் சடங்கும் இல்லை; "சங்கரன் தம்பி இறந்துவிட்டால் நீ கங்காவை விட்டு போய் விட வேண்டும்" என்ற ஆணை நாகவல்லிக்கு தாந்திரீகச் சடங்கு செய்யும் நம்பூதிரியால் வழங்கப்படுகிறது. சங்கரன் தம்பியை தான் கொன்றுவிட்டதாக நம்பும் கங்காவின் எதிர் அகமான நாகவல்லி, அடியோடு ஒழிந்துபோகிறாள். கங்கா குணமடைந்து விடுகிறாள்.

இந்த உளவியல் விளையாட்டு சந்திரமுகியில் தெளிவாக புரியும்படி இல்லை. அல்லது சாதாரண பாமர மனதுக்குப் புரியாது என்று வாசு அதை முழுக்க முழுக்க பேய்க்கதையாகவே மாற்றியிருக்கிறார். விஸ்வநாதன் கங்காவை  திட்டமிட்டு வேட்டையனின் மணிமண்டபத்துக்கு அழைத்துவருவதையோ, ராமச்சந்திர ஆச்சாரியார் "நீ அவனக் கொன்ன பிறகு இந்த தேகத்த விட்டு போய்டுவியா?" என்று கேட்பதையோ, தமிழ் இரசிகனால் பேய் விரட்டுவதற்கான இயல்பான காரணங்கள் என்றே புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்தக் காட்சிகளின் உளவியல் முக்கியத்துவம் என்ன என்பது, மணிச்சித்திரதாழில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

   


ஒரு வலைத்தளத்தில் இன்னொன்று படித்தேன். மலையாளப் பெண்ணான மணிச்சித்திரதாழ் கங்காவுக்கு பிளவாளுமை நோய் ஏற்பட்டால், அவளால் தமிழ் பேச முடியும் என்பதை உளவியல்படி ஏற்கலாம். ஏனென்றால் தமிழ் மலையாளத்தின் அன்னை மொழி. மலையாளியொருவனின் நனவிலி ஆழ்மனதில் எங்கோ சேரநாட்டுத் தமிழ் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகமும் எதிர் அகமும் மோதிக் கொள்ளும் போது, எப்போதோ கேட்க நேர்ந்த தமிழைக் கண்டறிந்து வெளியே உமிழ்வதற்கு மலையாள ஆழ்மனதால் முடியும். ஆனால் தமிழச்சி தெலுங்கு பேசுவதோ, கன்னடத்தி தெலுங்கு பேசுவதோ, இந்திக்காரி வங்காளம் பேசுவதோ, நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதை அமானுஷ்யமானதாக, ஆவியின் வேலையாக மட்டுமே சித்தரிக்கமுடியும். மணிச்சித்திரதாழிடம் அதன் வேற்று மொழி வடிவங்கள் தோற்று நிற்கும் இன்னொரு இடமாக இதைச் சொல்லலாம்.


மணிச்சித்திரதாழில் நான் கண்டுகொண்டது, சோபனா என்னும் மகத்தான நடிகையையும் கூட. கங்கா நாகவல்லியாக மாறி கட்டிலைத் தூக்கும் அந்த காட்சி ஒன்று போதும், சோபனா யாரென்று சொல்ல. சின்ன வயதில் அப்போது அச்சமூட்டிய ஜோதிகா, இந்த சோபனாவுக்கு ஒருபடி கீழ் தான் என்பேன்.  இன்னொரு இடமும் இருக்கிறது. கங்கா நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?" பாடலின் இரண்டாம் சரணத்தில் ஜேசுதாசின் காந்தர்வக் குரலில் ஒரு வரி வருகின்றது. "நாகவல்லீ மனோன்மணீ" என்று அவர் பாடும்போது  மத்தளம் சிணுங்கும் ஒரு இனிய இடம். அதற்கு சோபனா கொடுக்கும் அபிநயம் இருக்கிறதே, அப்பப்பா! 

                                             

 இந்தக் காட்சிக்கு அடுத்துவரும் மலையாள வரிகளும் பூரிக்கச் செய்பவை.

"மாணிக்ய வாசகர் மொழிகள் நல்கி தேவீ, 
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி.
தமிழகமாகெயும் ஸ்ருங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி"

மாணிக்கவாசகரின் திருவாசக மொழிகள். ஆனால் தமிழன் மறந்தாலும் மலையாளிக்கு கண்ணகியை மறக்க முடிவதில்லை. இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு, நாகவல்லி எங்கோ ஒரு இடத்தில்  கண்ணகியையே நினைவூட்டுகிறாள்.  இளங்கோவை மலையாளப்பாடலொன்றில் காணும் போது ஏற்படும் நெகிழ்வு வார்த்தைகளில் விளக்கமுடியாதது. அவன் கேரளத்தவரின் முப்பாட்டன் அல்லவா?

மணிச்சித்திரதாழுக்கு தன்னை இசையமைக்க அழைக்கவில்லை என்பதற்காக இசைஞானி வருத்தப்பட்டதை இப்படத்தின் இயக்குநர் பாசில் பதிவு செய்திருக்கிறார். "இது போன்ற படங்கள், இசையமைப்பாளனுக்கு உண்மையான சவால்கள். இப்படி ஒரு படத்துக்கு நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பேன்?" என்று கேட்டாராம் அவர். முரண்நகையாக  மணிச்சித்திரதாழின் பாடல்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாக்கிருஷ்ணன் "இப்படத்தை எடுக்காதே" என்று இயக்குநரிடம் அப்போது சொல்லியிருக்கிறார். "படம் தோற்கும். இது சொல்ல வரும் செய்தியை பாமர ரசிகனால் புரிந்துகொள்ள முடியாது." என்றிருக்கிறார் அவர். இன்று மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த பத்து படங்களுள் ஒன்று மணிச்சித்திரதாழ்.

மணிச்சித்திரதாழை சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அண்மையில் பார்த்தேன்.  ஆங்கில உபதலைப்புகளுடனேயே யூடியூப்பில் கிடைக்கிறது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் ஒருமுறை பாருங்கள். சந்திரமுகி தமிழுக்குச் செய்த கொடுமை என்ன என்பதை அது சொல்லும்.


பிகு: பிளவாளுமை நோய் பற்றி ஆசான் எழுதியிருக்கும் அருமையான இரு சிறுகதைகள் இருக்கின்றன. உற்றுநோக்கும் பறவை,  தம்பி. அண்மையில்  வெளியாகியிருக்கும் ஓநாயின் மூக்கு  பிளவாளுமையை மேலோட்டமாகத் தொட்டுச்செல்லும் ஒரு மகத்தான படைப்பு. 
மேலும் வாசிக்க »

சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?

0 comments
தமிழ்ப்புத்தாண்டு விடயத்தில் எத்தனையோ சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், தனிப்பட்ட ரீதியில் நான் தயங்கி நிற்கும் ஓரிடம் உண்டு. அது அறுபது ஆண்டு வட்டம். சித்திரைப்புத்தாண்டுக்கு எதிராக வாதிடும் சகலரும் தங்கள் அனைத்து ஆயுதங்களும் தோற்றபின்னர் எடுக்கும் பிரம்மாஸ்திரம் இது தான். "சரி, தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்?"

தமிழ் நாட்காட்டியில் பிரபவ முதல் அட்சய வரை அறுபது பெயர்களைக் கொண்ட ஆண்டு வட்டம் வழக்கில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த  ஒவ்வொரு ஆண்டின் பெயராலும் அழைக்கப்படும். தற்போது 2020  ஏப்ரல் 13ஆம் திகதி பிறந்த ஆண்டுக்குப் பெயர்,  34ஆவது பெயரான சார்வரி. இந்த வட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால், அறுபதாண்டுகளுக்குப் பின் 2080உம் சார்வரியாகத் தான் அமையும். 

நன்றி:  Tamil and Vedas வலைத்தளம்

ஆண்டுவட்டப் பெயர்கள் வெறுமனே வழக்கம் சார்ந்தவை, உண்மையில் சித்திரைப்பிறப்புக்கும் அறுபது பெயர்களுக்கும் தொடர்பில்லை. ஆனால் வழக்கம் என்பதற்காக பொருந்தாத மரபுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?  எத்தனை பாரம்பரியங்களை காலத்துக்கேற்ப கைவிட்டு அல்லது சற்று மாற்றியமைத்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்?  அறுபது ஆண்டுவட்டம் காலத்துக்கேற்றது தானா? 

இந்தக் கேள்விக்கு விடை காண முதல், நாம் ஆண்டுவட்டத்தின் தோற்றத்தைப் பார்க்கவேண்டும். பொதுவாக இன்றைய இந்தியப்பழங்குடிகளின் புத்தாண்டுகள் எல்லாமே வானியலைக் கொண்டு உருவானவை தான் என்பது ஏற்கனவே பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுவட்டமும் அப்படி உருவானது தான்.

ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய குறிப்புகள் வடநாட்டில் வழக்கில் இருந்த சூரிய சித்தாந்தம், ஆரியபட்டீயம், பிருகத் சம்ஹிதை முதலிய வானியல் நூல்களில் கிடைத்திருக்கின்றன. அவற்றுக்கு அங்கு "சம்வத்சரம்" என்று பெயர். ஆனால் அவற்றின் படி, அளக்கப்பட்டது வியாழன் கோளை அடிப்படையாகக் கொண்ட காலம் தான். சூரியன், சந்திரன், விண்மீன்களால் மட்டுமல்ல, வானில் உள்ள கட்புலனாகும் பெரும்பாலான விண்பொருட்களை காலக்கணிப்புக்குப் பயன்படுத்த முடியும். அப்படி, வியாழனைக் கொண்டு கணிக்கப்பட்ட காலம் தான் சம்வத்சர ஆண்டு. வியாழ ஆண்டை "சம்வத்சரம்"  என்றும் சூரிய ஆண்டை "வர்ஷம்" என்றும் வடநாட்டு வானியலில் வேறுபடுத்தித் தான் அழைத்திருக்கிறார்கள். அவற்றின் கணிப்புப்படி, ஒரு வியாழ ஆண்டுக்குரியவை சுமார் 361 நாட்கள். அதாவது சூரிய ஆண்டை விட (அண்ணளவாக 365.25 நாள்)  4.22 நாள் குறைவு. 

ஆனால் தென்னகத்தில் சம்வத்சரங்கள் நேரடியாக வியாழனின் இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தப்படவில்லை. இங்கு ஏற்கனவே வழக்கில் இருந்த சூரிய அல்லது சந்திர ஆண்டொன்றைக் குறிப்பிடவே சம்வத்சர ஆண்டுகள் பயன்பட்டன. எனவே இங்கு வருஷம், சம்வத்சரம் இரண்டும் ஒத்தகருத்துச் சொற்கள் ஆகிவிட்டன.  இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது என்பதில் தெளிவில்லை. கர்நாடகத்தை ஆண்ட சாளுக்கிய மன்னன் மங்களேசனின் பொபி 602ஆம் ஆண்டுக் கல்வெட்டில் 53ஆவது சம்வத்சர ஆண்டான சித்தார்த்தி குறிப்பிடப்பட்டிருப்பதே தென்னகத்தின் ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய  குறிப்பு என்கிறார்கள்.

இன்றும் தமிழர், கன்னடர், தெலுங்கர் ஆகிய மூன்று இனத்தாரும் தான் சம்வத்சர ஆண்டுப்பெயர்களை தங்கள் புத்தாண்டின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். (தமிழரது சித்திரைப் புத்தாண்டு சூரியக்கணக்கு. கன்னடர்-தெலுங்கரின் யுகாதி புத்தாண்டு சந்திரக்கணக்கு. யுகாதியின் படி சார்வரி சம்வத்சரம் போன மார்ச் 25ஆம் திகதியே பிறந்துவிட்டது). 

தமிழகத்தைப் பொறுத்தவரை, பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கல்வெட்டுக்களில் தான் இந்த சம்வத்சரப் பெயர்கள் இடம்பெற ஆரம்பிக்கின்றன.  குறிப்பாக விஜயநகர அல்லது நாயக்கர் காலக் கல்வெட்டுக்களில்.  முக்கியமாக தமிழ்ச் சோதிடம் பற்றிய பல தகவல்களை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகின்ற இலங்கையின் மிகப்பழைய சோதிட நூலான சரசோதிமாலையிலே கூட (1310இல் எழுதப்பட்டது) ஆண்டுவட்டப் பெயர்கள் எங்கும் இல்லை.

பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தையதாகக் கருதப்படும்  "வருடாதி வெண்பா" என்ற நூலில் தான் நேரடியாக அறுபது ஆண்டுகளின் பெயர்ப்பட்டியல் தமிழில் முதன்முதலாகக் கிடைக்கின்றது. அதை சித்தர் இடைக்காடர் பாடியதாகச் சொல்கிறார்கள். அவர் தான் பாடினார் என்பதற்கு வேறெங்கும் சான்றுகள் இல்லை.  அது காலத்தால் பிந்திய இட்டுக்கட்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லலாம். பத்தாவது சம்வத்சரமான தாது வருடத்துக்கு 'வருடாதி வெண்பா'வின் பாடல் இதுதான். தாது வருடத்தில் வேதனையே இல்லை. விளைவு இருக்குமாம். குளிர்மழை பொழியுமாம். உலகம் உய்யுமாம். 

தாது வருடம் தராதலத்தோர் வாழ்ந்திருப்பார் 
வேதனையுமில்லை விளைவுண்டு – சீத 
மழை பெய்யும் பரிவாரம் பேருடனே 
எந்நாளும் உய்யும் படி உலகிலுண்டு

வேதனை என்னவென்றால் 1876இல் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நீடித்து தமிழகத்தையே உலுக்கிய தாது வருடப் பஞ்சம், உலக வரலாற்றில் மோசமான பேரிடர்களில் ஒன்று. அது ஆரம்பித்தது தாது வருடமான 1876இல் தான். 

அது போகட்டும். இந்தப்பட்டியலை எதிர்ப்பவர்கள் எழுப்பும் விமர்சனங்கள் மொத்தம் மூன்று இருக்கின்றன. முதலாவது, நாம் ஏற்கனவே பார்த்த 'தமிழ் ஆண்டுக்கு வடமொழிப் பெயர் ஏன்' என்பது. 

"ஆண்டுவட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால் மூடத்தனமானது, அதனால் காலம் காட்டமுடியாது" என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்வி தவறு. அப்படி அல்ல. நமது வாரங்கள், மாதங்கள் எல்லாமே மீளத்தொடரும் வட்டங்கள் தான். குறித்த ஆரம்பப் புள்ளியொன்றைத் தீர்மானித்து வட்டத்துக்கு இலக்கமிட்டு இத்தனையாம் வட்டத்தின் இந்த ஆண்டு என்று குறிப்பிட்டால், அவற்றாலும் காலம் காட்டமுடியும். என்ன, நாம் அப்படி காலம் கணிக்க அதைப் பயன்படுத்துவதில்லை.

அறுபது ஆண்டுகளை எதிர்ப்பவர்கள் கூறும் மூன்றாவது காரணம் கொஞ்சம் பதினெட்டு சக சமாச்சாரம். பெண் வடிவெடுத்த நாரதருக்கும் கண்ணனுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள் தான் இந்த சம்வத்சரங்கள் என்ற கதை அது. 

நாரதர் பெண்ணாக மாறிய கதை பல்வேறு புராணங்களில் இடம்பெற்றிருப்பது தான். தேவி பாகவதத்தில் அவர் சௌபாக்ய சுந்தரி எனும் பெண்ணாக மாறி கன்னோசி மன்னன் தாலத்துவஜனை மணந்து பன்னிரண்டு அல்லது எட்டு பிள்ளைகளைப் பெறுகிறார். அதன் சில வேற்றியங்களில்  சௌபாக்ய சுந்தரிக்கு குழந்தைகளே இல்லை. பத்ம புராணத்தின்படி கிருஷ்ணனின் ராசலீலையைக் காண்பற்கு பெண்ணாக மாறி கோலோகம் சென்று ஒருவருடம் கோபிப்பெண்ணாக மகிழ்ந்திருக்கிறார் நாரதர்.

நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த ஒவ்வொரு புராணக்கதைக்கும் பின்னே சொல்லப்படும் நீதி வெவ்வேறு. ஆனால் இவை எதிலும் கண்ணனுக்கும் நாரதப்பெண்ணுக்கும் பிறந்த அறுபது வருடங்கள் என்ற கதை இல்லை. அது உண்மையில் கடந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறுகுறிப்பு தான். வெறும் இந்துத்தொன்மம் என்பதற்கு மேல் அதற்கு எவ்வித முன்னுரிமையோ நம்பகத்தன்மையோ கொடுக்கத்தேவையில்லை.

ஒட்டுமொத்தத்தில், ஆண்டுவட்டம் இப்போதும் தமிழ் உலகுக்குத் தேவையா என்ற கேள்விக்கு அறுதியும் இறுதியுமான பதில், தேவையே இல்லை என்பது தான். ஏன்?

சூரிய - சந்திர நகர்வை காலக்கணிப்பில் பயன்படுத்தும் தமிழ் நாட்காட்டிக்கு வியாழக் கணிப்பீடு தேவையற்றது. அதிலும் சூரிய ஆண்டுகளை வியாழ ஆண்டு சம்வத்சரத்துக்குச் சமனாகக் கணிக்கும் இன்றைய பட்டியல் எவ்விதத்திலும் காலத்துக்குப் பொருத்தமானதே அல்ல. சரியாகச் சொன்னால் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே, இவை வழக்கில் வந்திருந்தபோதே, திருத்தியிருக்கவேண்டிய தவறு இது. 

இன்னொன்று, சித்திரைப்புத்தாண்டு தமிழரின் மரபான புத்தாண்டல்ல என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு ஏற்பட்டதற்கு முதன்மையான காரணமே இந்த வடமொழிப் பெயர்கள் தான். தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்? 

சம்வத்சரக் கணக்கு இன்றும் சமயம் சார்ந்ததாகவே பயன்படுகிறது - பஞ்சாங்கங்களில், கோவில் அறிவித்தல்களில், மங்கல நிகழ்வுகளின் அழைப்பிதழ்களில். அங்கெல்லாம் ஆண்டுவட்டப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை தமிழர்களே உணர்ந்துகொண்டு நிறுத்தவேண்டும். வருடப்பிறப்பு அறிவித்தல்களிலும்  விளம்பரங்களிலும் அந்தப் பெயர்களை பிரபலப்படுத்துவதை தமிழ் ஆர்வலர்கள் இனி மேற்கொள்ளவே கூடாது.

ஆண்டுப்பெயரை பயன்படுத்தாமல் அழைப்பிதழ் தயாரிப்பதென்றால், "நிகழும் மங்களகரமான.....??" அடுத்து என்ன போடுவது? நம் வருடம் வெறுமனே  மொட்டையாக இருப்பதா?

கொல்லம், ஹிஜ்ரி போல தமிழருக்கென ஆண்டுக்கணக்கொன்று இதுவரை உத்தியோகபூர்வமாக இல்லை தான். திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்று ஏற்கனவே நம் மத்தியில் வழக்கில் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்கனவே பல குழப்பங்கள் இருக்கின்றன. உலகின் எல்லா நாட்டுத் தமிழரும் திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசின் படி தை முதலாம் திகதி அது ஆரம்பிக்கின்றது. அதன் கணிப்புக்கு (பொது ஆண்டோடு 31ஐக் கூட்டுவது) எந்தவிதமான அறிவியல் காரணமும் இல்லை. வள்ளுவர் பொமு 31இல் பிறந்தார் என்பது வெறுமனே மறைமலையடிகளின் ஊகம் தான். முன் தோன்றி மூத்தகுடி என்று பெருமைபேசும் தமிழினம் ஒரு அறிவியல் ஆதாரமோ வானியல் - வரலாற்றியல் காரணங்களோ இல்லாத ஒரு ஆண்டுக்கணக்கையா தனக்கெனப் பின்பற்றுவது?

நமக்கென நாம்  ஒரு ஆண்டுக்கணக்கை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.

1. கீழடி முதலிய தமிழர் தொல்மையங்களில் கிடைக்கும் ஏதாவது மிகப்பழைமையான ஒரு பொருளை, காபன் திகதியிடலுக்கு உட்படுத்தி அதன் சரியான பயன்பாட்டு ஆண்டைக் கண்டுபிடித்து, அதில் துவங்கும் "தமிழ் ஆண்டு" ஒன்றை நிர்ணயித்தல். அதைவிடப் பழைய பொருள் ஒன்று எதிர்காலத்தில் கண்டறியப்படலாம் தான். ஆனால் நமக்கு இது பயன்படுவது ஒரு நியமக் கணக்கீட்டுக்காக. அந்தப்பெறுமானம் எதிர்காலத்தில் கூடுவதாலோ குறைவதாலோ, ஆண்டுக்கணக்கில் எவ்வித தாக்கமும்  ஏற்படத்தேவையில்லை.

2. வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழரிடம் வழக்கில் இருக்கும் கலி ஆண்டு, சக ஆண்டு, விக்கிரம ஆண்டு என்பவற்றில் ஒன்றை தற்காலிக நியமமாக எடுத்துக்கொள்ளல். இவற்றில் பெரிய பெறுமானமாக, அதேவேளை பெரும்பாலான இந்திய இனக்குழுமங்களின் உத்தியோகபூர்வமற்ற காலக்கணிப்பு ஆண்டாக இருக்கும் கலியாண்டை நான் தனிப்பட்ட ரீதியில் இப்போதைக்கு முன்மொழிவேன்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திராமல் இதில் ஒன்றை யாரேனும் செய்ய முயலலாம். அவசரமில்லை. "கொவிட்" பேரிடரிலிருந்து உலகம் மீண்ட பின்னர் கூடச் செய்யலாம் 😊.

கடைசியாக ஒன்று, தனிப்பட்ட ரீதியில் ஆண்டுவட்டம் காலத்துக்குப் பொருத்தமற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், மரபுவாதிகளுக்கு அது  சற்று கடினமாக இருக்கும் என்பது புரிகிறது. எவ்வாறேனும் அறுபது ஆண்டு வட்டத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்ன செய்வது?

அதற்காக ஏற்கனவே ஓரளவு பிரபலமாக இருக்கும்  தமிழறிஞர் சத்தியவேல் முருகனாரின் அறுபது தமிழ் வருட பெயர் பட்டியலை  பரிந்துரைக்க முடியாது. அந்தப் பெயர்கள் வடமொழிப் பெயர்களுக்குச் சமனான தமிழ் மொழிபெயர்ப்புகள் அல்ல. சில மொழிபெயர்ப்புகள் முற்றிலும் தவறானவை கூட. எனவே பொருத்தமான ஒரு அறுபது பெயர்ப்பட்டியல் ஒன்றை தமிழர்களே தாமாகத் தயாரித்துக்கொள்ள வேண்டியது தான். 

தாது வருடப் பஞ்சத்தை சுட்டிக்காட்டி, இந்த உரையாடலை தொடக்கி வைத்து, என்னோடு பேசிக்கொண்டிருந்த சைவ அறிஞர் முருகவேள் ஜயச்சந்திரன் ஐயா அவர்கள், தமிழ்ச்சைவர்கள் வேண்டுமென்றால், சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் அறுபது பேரின் பெயரைப் பயன்படுத்தலாமே என்று  கூறினார். தேவார முதலியரான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால், ஏனைய அறுபதின்மர் பெயரையும் அறுபது வருடங்களுக்குச் சூட்டலாம் என்றார் அவர். இதை சைவ உலகு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

எது எவ்வாறேனும், அறுபது ஆண்டுகள் என்ற காலத்துக்கொவ்வாத மரபிலிருந்து தமிழர்கள் முற்றிலும் வெளியேறுவதே சாலப்பொருத்தம் என்று கருதுகிறேன்.  வயதிலும் அனுபவத்திலும் சிறிய ஒருவனின் பரிந்துரை இது. நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற முடிவு தமிழ் அறிஞர்பெருமக்களின்  கையில்.

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
தம்பை மாநகர் புத்தாண்டு
மேலும் வாசிக்க »

ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்

0 comments

அம்மம்மா வீட்டில் நடுவறையிலிருந்த புழுதி பிடித்த புத்தக அலுமாரியில் மூன்று ஏட்டுச்சுவடிகளைக் கண்டபோது எனக்கு வயது பதினொன்று. அவை அலுமாரியின் அடித்தட்டில், செல்லரித்து பக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த "மகாமாரித்தேவி திவ்வியகரணி"க்கும் "மூவருலா"வுக்கும் நடுவே,  சற்று நைந்துபோன "டொப்டெக்ஸ்" வேக்கில்  சுற்றிக் கட்டி சொருகப்பட்டிருந்தது. டொப்டெக்ஸ் அப்போது கல்முனையில் பிரபலமாக இருந்த துணிக்கடை. உடுப்பு வாங்கும் கடையின் பெயர், பெஸ்ட்பொயிண்டா, றஸ்பாஸா, முபாரக்கா பெயர் பற்றியெல்லாம் கவலை இல்லை.  உடுதுணி வாங்கும் எல்லா பொலித்தீன் பைகளுமே எங்கள் வீட்டில் "டொப்டெக்ஸ் வேக்கு" தான்.

வேக்கில் இரண்டு பழுப்புநிற சிறு ஏட்டுச்சுவடிகள். சணற்கயிறால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தன. மூன்றாவது மிகப்பெரியது. கறுப்பு நிறம். கையில் தூக்கி வைத்தால்  நீளமான கருங்காலிப்பலகை போல பாரித்தது. 

நான் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தபோது அம்மப்பா வீட்டில் இல்லை. காளையடிக்கு சென்றிருந்தார். இது மாந்திரீகம் செழித்த பூமி. மந்திரம் எழுதிய வாகடங்கள் பற்றி அவர் கதை கதையாகச் சொல்லியிருந்தார். சில ஏடுகளைத் திறப்பதற்கு முதல் சொல்வதற்கென்றே மந்திரங்கள் உண்டு.  வசியம், ஏவல் போன்றவற்றுக்கான மந்திரங்களை எளியவர்கள் பார்க்கக்கூடாது என்றே அந்த ஏற்பாடு. குறித்த மந்திரம் சொல்லாமல் திறந்தால் கதை முடிந்தது. மந்திரம் படிக்கும் ஆவலில் பரிசாரியார் ஒருவரின் மந்திர ஏடுகளை இரகசியமாகப் இரவில் திருடி வந்து வாசித்த ஒருவர் மறுநாள் கையில் ஏட்டுடன் இரத்தம் கக்கி செத்துக்கிடந்த கதையை அவர் சிலநாட்களுக்கு முன் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த  ஏட்டை விரித்துப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. வீட்டில் அம்மம்மாவிடமோ ஏனையவர்களிடமோ சொன்னால் பூசை கிடைப்பது உறுதி. பேசாமல் மூன்றையும் சுற்றிக்கட்டி வைத்துவிட்டேன்.

மாலை அம்மப்பா திரும்பியதும் தயங்கித் தயங்கி ஏடுகள் பற்றிக் கேட்டேன்.  "பயந்திற்றாயெல்லோ?" சத்தமாகச் சிரித்தபடி அலுமாரிக்கு அழைத்துச் சென்று டொப்டெக்ஸ் வேக்கை திறந்தார். பேக்கைத்திறக்கும் சரசரப்பே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. இரண்டு சிறிய ஏடுகளும் ஏதோ புதையல் இரகசியம் எழுதிய புத்தகங்கள் போல் விதிர்விதிர்க்கச் செய்தன. 

"இது குளுத்தில் காவியம். அம்மங்கோயில்ல குளுத்திலண்டக்கி ராவுல படிக்கிர. மத்தது பெருங்கதை. புள்ளையார் நோம்புல படிக்கிர." 

"அப்ப அது?" பெரிய ஏட்டைச் சுட்டிக்காட்டினேன்.

"அது அம்மன்  வளக்குரை. உப்ப விரிக்கப்பொடா. சடங்கு நேரத்தில மட்டும் தான் துறக்கலாம்"

"அதெப்பிடி? குளுத்தில் காவியத்த துறந்தேலே?"

"அத என்னேரமும் விரிக்கலாம். குளுத்தில் காவியத்தில குளுத்திப்பாட்டு மட்டுமில்ல. கனமா இரிக்கி. உனக்குப்ப அதெல்லாம் தேவல்ல. "

எனக்கு ஓரளவு புரிந்தது. பெரிய ஏட்டில் கண்ணகி வழக்குரை மட்டும் இருக்கிறது. வைகாசிச் சடங்கில் ஏழு நாளும் கோவிலில் பாடப்படுவது. அதை மற்ற நேரங்களில் அவிழ்த்துப் படிக்கக்கூடாது. சடங்கின் ஏழாம் நாள் இரவில் பாடப்படும் குளிர்த்திக்காவியம் இப்போது என் கையில் இருக்கிறது. அதில் வேறு சில பாட்டுகளும் இருப்பதால் படிப்பதில் தவறேதுமில்லை. அதை விரித்துப் பார்த்தேன்.

"சிரபொருநதுமைஙகரனே. இதென்னாதி இது? ஒண்டும் விளங்கல்ல"

"அதப்பிடி இல்ல. எழுத்தில குத்து இருக்காது. இடைவெளி இருக்காது. நம்ம தான் விளங்கி வாசிக்கோணும். நீ சொன்னது சீர் பொருந்தும் ஐங்கரனே" 

எனக்கு வியப்பாக இருந்தது. குற்று இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாக்கியங்களா, அவற்றை படித்து புரிந்துகொள்ளவும் முடியுமா?

"சரி இஞ்ச கொண்டா. இதெல்லாம் தமிள் எளுத்தெண்டு உனக்கு விளங்கினதே பெரிய விசயம்." 

அம்மப்பா அப்படிச் சொன்னது என் தன்மானத்தை  சீண்டியது. ஏன், இது அத்தனை கடினமா? என்னால் வாசிக்க முடியாதா?

"அம்மப்பா இது மூண்டையும் தாங்கோ, வாசிச்சிப்போட்டு தாறன்"
"உனக்கென்னத்துக்குறா மனே?"
"தாங்கோவன். நான் எல்லாம் படிக்கப்போறன். குளுத்தில்  பாடமாக்கோணும்."

அவர் சிரித்தார்  "நீ பாடமாக்கி என்னெய்யப்போறாய், வடுவா, இது செஞ்சேரியான் படிக்கிரது."

அவர் தென்சேரி. அவர்கள் தான் குளிர்த்தி பாடமுடியும். அம்மன் கோவிலில் எனக்கு உரிமை இல்லை. நான் வடசேரி.  அம்மம்மாவின் குடி. 

"அதெல்லாம் தெரியா. உப்ப தரப்போறேலோ இல்லயோ"
"செரி. அப்ப மத்த ரெண்டயும் கொண்டோ. வளக்குரை இஞ்சே கிடக்கட்டும். கவனமா வெச்சிக்கொள்ளு"

எனக்கும் சரி போலத் தான் தோன்றியது. சும்மா பார்க்கும் போதே அச்சமூட்டிய அந்தக் கருங்காலிப் பலகை அங்கேயே இருக்கட்டும். 

நான் இரண்டு ஏட்டையும் எங்கள் வீட்டுக்குக் கொணர்ந்து சாமியறையில் வைத்தேன்.  குளிர்த்திக் காவியம்  ஏட்டைத் தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். இரண்டு நாட்கள் கஷ்டமாகத் தான் இருந்தது. மெல்ல மெல்லப் பழகி விட்டேன். 

வாழ்க்கையின் வியப்புக்குரிய விடயங்களில் ஒன்று இருக்கிறது.  இலகுவில் கிட்டாத பொருளொன்றில் ஏற்படுகின்ற ஆர்வம், அது கிடைத்த பின்னர், ஏற்பட்ட வேகத்திலேயே வடிந்து விடும்.   ஏடுகள் பல மாதங்கள் அதற்குப் பிறகு விரிக்கப்படவே இல்லை. சாமியறையில் தினமும் அம்மாவின் ஒற்றைச் செவ்வரத்தம் பூக்களைச் சூடும் புனிதப்பொருட்களாக அவை மாறி மாதங்கள் கடந்திருந்தன. அம்மப்பா இறந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் அவற்றை எடுத்துப்பார்த்தேன். 

அப்போது 2004 டிசம்பர் பாடசாலை விடுமுறை. அம்மப்பா இறந்தபின், அவரது புத்தக அலுமாரி எனது கைகளுக்கு வந்திருந்தது. ஏதோ எண்ணம் தோன்றி தேடிப்பார்த்தபோது வழக்குரை ஏடு இருந்த டொப்டெக்ஸ் வேக்கைக் காணவில்லை. அல்லது அவர் யாருக்கும் கொடுத்திருந்தாரோ! அது இல்லாமல் போய்விட்டது. அந்தக் கருங்காலிப் பலகையை அஞ்சினேன் என்பதால் அதன் இழப்பு அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. (இப்போது வேதனையாக இருக்கிறது 😔)   

பிறகு தான் நினைவு வந்து சாமியறையில் பட்டுச் சுற்றப்பட்டு இன்னுமொரு சாமியாக மாறியிருந்த ஏடுகளை அவிழ்த்து மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.  அத்தனை கடினமாக இருந்தது. பிள்ளையார் பெருங்கதை ஏற்கனவே வீட்டில் புத்தகமாக இருந்தது. ஆனால் குளிர்த்திக் காவியம்? சில சொற்களை இன்னதென இனங்காணவே முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை சர்வசாதாரணமாக வாசித்தவன் நான் எனும் எண்ணமே வெட்கத்தைத் தந்தது. மற்றவர்கள் முன் அல்ல, தனக்கு முன் தானே அவமானப்படுவது தான் உலகின் மிகப்பெரிய அவமானம். 

எனக்குள் இருந்த இன்னொருவன் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். இவன் வாயை அடைக்கவேண்டும். அடுத்த தடவை இதை விரித்து இவனிடம் சர்வசாதாரணமாக வாசித்துக் காட்டவேண்டும். கடைசியில்  அவனே ஐடியா தந்தான்.  "ஏட்டில வாசிக்கிர தானே கஸ்ரம்? இடைவெளி வுட்டு குத்து வெச்சி ஒரு  கொப்பில எழுதிவையன்?" 

2004 டிசம்பர் 21 அந்தக் காரியத்தைத் தொடங்கினேன்.  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பாட்டு என்று கண்ணகை அம்மன் காவியத்தை கைப்பிரதியாக எழுதிக்கொண்டிருக்கும் போது சுனாமி அனர்த்தம். இடம்பெயர்ந்து சின்ன மாமாவின் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களிலும் கொப்பியை எடுத்து வந்து எழுதிக்கொண்டிருந்தேன். அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் 2005 ஜனவரி நான்காம் திகதி  அதை வெற்றிகரமாக எழுதிமுடித்தேன்.  


15 வருடங்கள் தாண்டிய பொக்கிஷம்.
அம்மன் காவியம் கையெழுத்துப் பிரதி

வழக்குரை போல் இல்லாமல், இந்த ஏட்டை எந்த நேரமும் எடுத்துப் படிக்கலாம் என்று ஏன் அம்மப்பா சொன்னார் என்று அப்போது புரிந்தது. அதில் உண்மையில் ஆறு காவியங்கள் இருந்தன.  எழுதி முடித்த காவியம் தவிர, குளிர்த்திக் காவியம், கண்ணகி அம்மன் வயந்தன் பள்ளு, கண்ணகி அம்மன் கும்மி, செவ்வாட்டு வயந்தன், ஐவர் காவியம் என்று ஐந்து.   ஐவர் காவியம், மகாபாரதத்தின் சுருக்கம்.  திரௌபதி வழிபாட்டோடு தொடர்புடையது. செவ்வாட்டு வயந்தனில் கொம்புமுறி வசைப் பாடல்கள் இருந்தன. ஏனைய நான்கும் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்குரியவை.  

குளிர்த்திக் காவியம் தான் என் பிரதான இலக்கு என்பதால், அடுத்து அதை எழுதினேன். பின்பு பள்ளும் கும்மியும். அவை முடிந்ததும் மீண்டும் ஆர்வம் வடிந்துவிட, ஏடு மீண்டும் சாமியறையை தஞ்சமடைந்தது. இடையில் சம்மாந்துறையில் ஒரு கண்காட்சிக்காக ஒரு ஆசிரியர் வந்து கேட்டபோதும், என்  பாடசாலையில் கலைநிகழ்ச்சிகளுக்காக தேவைப்பட்டபோதும் அது அங்கிருந்து எழுந்தருளி ஊர்வலம் சென்று திரும்பியது. 

அதன் பின் பழைய ஆர்வம் தூண்டப்படுவதற்கு ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டன.   உயர்தரப்பரீட்சையின் பின் கிடைத்த விடுமுறையில் 2011இல் ஏட்டிலிருந்த செவ்வாட்டு வயந்தனை கைப்பிரதியாக எழுதினேன்.  எஞ்சியிருந்தது ஐவர் காவியம் மட்டும் தான். 21 ஓலைகள் கொண்ட அந்தச் சுவடியில் அது தான் நீளமானது.  ஐந்து ஓலைகளில் 26 பாடல்கள்.  ஏனோ அதை எழுத பொழுதும் கூடவில்லை.  எனக்கு கண்ணகி அளவு திரௌபதி மனதைக் கவர்ந்தவள் அல்ல என்பதும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். 

செவ்வாட்டு வயந்தன் கையெழுத்துப் பிரதி

கடைசியாக 2014இல்  கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அந்த குளித்தில் ஏட்டை எடுத்துச் சென்றேன். ஒரு குறும்படத்துக்காக.  அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். ஆனால் அது மட்டக்களப்பு மாந்திரீக ஏடு என்று பொய் சொல்லி  இளமுறை நண்பர்களை சந்தோசமாக 'பேய்க்'காட்ட முடிந்ததில் எனக்கு குதூகலமாகப் போய்விட்டது. கூட இருந்த ஒன்று இரண்டு கிழக்கிலங்கை நண்பர்கள் ஆமாம் சாமி போட, "அப்ப இதெல்லாம் உண்மைதானாடா" என்று அவர்கள் முகம் வெளிறி அமர்ந்திருக்க, சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமென்று தலையாட்டினேன்

அதற்குப் பிறகு அந்த இரண்டு ஏட்டையுமே மறந்துவிட்டேன். இரண்டாண்டுகளுக்கு முன் நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்துக்காக ஊர் முழுக்க அலைந்தபோது, அம்மப்பாவின் சொந்த வீட்டிலிருந்து உதிரி ஓலைகளாக அவரது தாய்வழி முதுசமான  "வள்ளி அம்மானை" எனும் ஏடு கிடைத்தது. அதை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்கிறேன்.   அது சிதைந்த உதிரி ஓலைகளாகக்  கிடைத்ததில் எனக்கு அத்தனை கவலை இருக்கவில்லை. ஏனென்றால், சித்தாண்டி முருகன் கோவிலில் அது பாடப்படும் தகவல் கிடைத்திருந்தது. அவசரமென்றால் எப்படியும் அங்கு தேடி எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை தான். (அந்த அம்மானை போன ஆண்டு டிசம்பரில் அச்சில் வெளிவந்து விட்டது என்பது நிறைவாக இருக்கிறது. கலாநிதி.முருகு தயாநிதி அவர்களின் பதிப்பு. 2019, வள்ளியம்மன் அம்மானை, புதுச்சேரி தமிழ்ப்புதுவை வெளியீடு.)

வள்ளி அம்மானையை கண்டெடுத்தபோது  வீட்டு ஏடுகளின் நினைவு ஏற்பட்டது உண்மை. ஆனால் தேடவில்லை. எங்கே போகப்போகிறது. இங்கு தான் எங்கோ பாதுகாப்பாக  இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எல்லாம் நேற்று மாலை வரை தான்.

அக்காவும் அத்தானும் புத்தாண்டுக்காக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். எங்காவது ஏடு கிடைத்தால் எடுத்து வை என்று அக்காவிடம் சொல்லியிருந்தேன். மாலை தான் அக்கா சொன்னாள் "உண்ட ஏடு கிடைச்சிது பாத்தயோ? அந்தப் பெட்டிக்குள்ள இரிக்கி" அவள் சொன்னதில் இருந்த இகழ்ச்சிக் குறிப்பை நான் கவனிக்கவில்லை. ஆர்வத்தோடு போய் பெட்டியைத் தூக்கினேன்.  உள்ளே செல்லரித்த புத்தகங்களும் துண்டு துணிகளும் கையோடு வந்தன. அதிர்ந்தபடி பெட்டியைக் கவிழ்த்தால், அரிக்கப்பட்டு உதிர்ந்த ஓலைத்துண்டங்கள் சிதறி விழுந்தன. எலியின் வேலை. ஒரு ஓலை கூட முழுமையாக எஞ்சவில்லை.  எல்லாம் போய்விட்டது. இனி அவை இல்லை. ஒன்று கூட இல்லை. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது.நல்ல காலமாக அவற்றில் பிள்ளையார் பெருங்கதை ஓலைகளைக் காணமுடியவில்லை. எனவே கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது. அது மட்டுமாவது எங்கோ தப்பியிருக்கிறதென்று. இந்த விடுமுறைக் காலத்துக்குள் எப்படியாவது தேடி எடுத்துவிடவேண்டும்.  "செரி. அப்ப மத்த ரெண்டையும் கொண்டோ. கவனமா வெச்சிக்கொள்ளு" என்று அம்மப்பா ஆதூரமாகத் தந்த இரண்டில் ஒன்று. அது அம்மப்பாவின் எனக்கான பரிசு. விலைமதிப்பற்ற பரிசு. அதில் ஒன்றை என்றைக்குமாக இழந்துவிட்டேன்.

ஓரளவு மனநிறைவைத் தருவது என்னவென்றால், அதன் கையெழுத்துப் பிரதி என்னிடம் இருக்கிறதென்பது தான். ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரு நினைவுமலரில்  பிரசுரிப்பதற்காக அதிலிருந்த பாடல்களை அண்ணா ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். செவ்வாட்டு வயந்தன் தவிர ஐந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நூல்களில் முழுமையாக அச்சில் வெளிவந்திருக்கின்றன. வீ சீ கந்தையா பதிப்பித்த கண்ணகி வழக்குரையில் (1968) அம்மன் காவியமும் குளிர்த்தியும் பின்னிணைப்பாக வெளிவந்திருக்கிறது. 

ஐவர் காவியம், கிழக்கிலங்கை கிராமிய இலக்கியங்களின் தொகுப்பான "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் (1971) திரௌபதையம்மன் காவியம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அம்மன் கும்மியும் அம்மன் பள்ளும் நா.நவநாயகமூர்த்தி அவர்களின் "தம்பிலுவில் கண்ணகி வழிபாடு" (1999) நூலில் வெளியாகி இருக்கிறது. அதிசயம் என்னவென்றால் அவருக்கு ஏட்டிலிருந்த இந்த கும்மியையும் பள்ளையும் கையெழுத்துப்பிரதியாக  எழுதிக்கொடுத்தது அம்மப்பா தான். அதை அவர் அங்கு அடிக்குறிப்பாக எழுதியிருக்கிறார். செவ்வாட்டு வயந்தனின் சில பாடல்கள் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அச்சில் வராத பாட்டுக்கள் அதிகம். அவற்றை எப்படியோ கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றிவிட்டேன். அதுவரைக்கும் எனக்கு திருப்தி தான். 

இந்தப் பாடல்களில் எதுவுமே அச்சில் வராமல் ஒருவேளை இழக்கப்பட்டிருந்தால் அப்படி என்ன அரிய செய்தி இல்லாமல் போயிருக்கும்? இரண்டு சிறிய உதாரணங்களைச் சொல்கிறேன். அம்மன் வயந்தன் பள்ளு இறுதியாக இப்படி முடிகிறது.

"பார்வாழி தென்திருக்கோயில் குமரன் வாழி
பார்த்திப நரேந்த்ரசிங்க மூர்த்தியும் வாழி
கார்வாழி தம்பிலுவில் ஊர்வாழி - வந்தருள்செய்
கண்ணகைத் தாய் நீடூழி காலம் வாழியே"

பார்த்திப நரேந்திரசிங்க மூர்த்தி யாரென்று தெரியுமா? 1707 - 1739 இடையே கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் வீர நரேந்திரசிங்கன். அடுத்தது அம்மன் கும்மியில் வரும் இறுதிப் பாட்டு.

"வாழி பூவாழி மறைவாழி - மன்னன்
வர ராசசிங்கன் வாழி
ஊழிகாலம்  வரை பட்டின் கண்ணுறை
கண்ணகைத் தாயாரும்  வாழியதே"

இவன் எந்த ராஜசிங்கன் என்று தெரியாது. கிழக்கிலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கண்டி மன்னர்களாக வாய்மொழியில் நினைவுகூரப்படுபவர்கள் பலர். இரண்டாம் இராஜசிங்கன் (1635–1687), விஜய ராஜசிங்கன் (1739 - 1747) மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747–1782). ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் எவரும் ஆகலாம். 

தம்பிலுவில் கண்ணகியைப் புகழும் இவை இரண்டும் என் ஊரில், ஒருவேளை என் கொள்ளுப்பாட்டனோ அவரது எள்ளுப்பாட்டனோ பாடியிருக்கக்கூடிய பாடல்கள். அவர்கள் பாடியது என்பதற்கு மேல்,  இன்றியமையாத முக்கியத்துவம் இவற்றுக்கு உண்டு. கீழைக்கரையோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த நெருக்கமான பந்தத்துக்கு சான்று இந்த இலக்கியங்கள். கண்டியின் சிங்கள மற்றும் நாயக்க மன்னருக்கும் கிழக்கிலங்கைக்குமான அரசியல் - சமய - சமூக உறவு இதுவரை ஆராயப்படாத சுவையான புலங்களில் ஒன்று. அதற்கு உதவக்கூடிய முதன்மையான சில சான்றுகளை மயிரிழையில் இழக்க இருந்தோம்.  

ஐவர் காவியத்தை கடைசிவரை படியெடுக்கவே இல்லை என்பதால், அது என்றைக்குமாக இல்லாமல் போய்விட்டது என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். சிதைந்தொழிந்து விட்ட ஏட்டில் எஞ்சிய ஓலையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் பரிசோதித்துப் பார்த்து, அங்கு அது  துரோபதையம்மன் காவியமாக அச்சில் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் நெஞ்சில் தண்ணீர் வந்தது. இப்போதும் மீளாமல், பித்துப்பிடித்தவன் போல் கையெழுத்தாக எஞ்சியிருக்கும் செவ்வாட்டு வயந்தனை தடவி மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.


ஒருவேளை என் ஏட்டை, குறிப்பாக செவ்வாட்டு வயந்தனை  கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றாமல் விட்டிருந்தாலோ, அல்லது ஐவர் காவியம் என்பது அச்சில் வராத வேறொரு நூலாக இருந்திருந்தாலோ, இந்தக் குற்றவுணர்விலிருந்து அத்தனை சீக்கிரம் வெளிவந்திருக்கமாட்டேன். இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் உங்கள் யாரோ ஒருவர் வீட்டில், சின்னச் சின்னக் கவனயீனத்தால் எத்தனை ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை இழந்துகொண்டிருக்கிறீர்கள்?

அதனால் தான் சொல்கிறேன். ஏட்டில் இருந்ததை கையெழுத்தாக எழுதி வைத்த கதையைச் சொல்லி முடித்துவிட்டேன்.   நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான். பிரமாதமாக ஒன்றுமில்லை.

ஆவணப்படுத்துங்கள், இன்றே இப்போதே.


பிகு: யாழ்ப்பாணத்தில் நூலகம் நிறுவனத்தையும், மட்டக்களப்பில் அதன் கிழக்குக் கிளையையும் ஆவணப்படுத்தலுக்கென தொடர்பு கொள்ள முடியும்.  தொட்டால் உதிரும், செல்லரித்த ஏடுகளை, அரிய ஆவணங்களைக்கூட எண்ணிமப்படுத்தி மூல ஆவணத்தை உங்களிடமே திருப்பித் தருவார்கள். அதன் மின்வடிவத்தை, எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க  ஆவணகம் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது.  
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner