கந்தன் என்னும் காதலன்

திரௌபதி கேட்டாள் "மாயை உண்மையைச் சொல், பெண்பித்தனை விரும்பாத பெண் உண்டா இவ்வுலகில்?" "ஆம், அத்தனை பெண்களும் அவனைப் பார்க்கிறார்கள்.எதனால் அவனுக்கு அத்தனை பெண் என்று அகம் வினவுகிறது. அதை அறியாமல் அகம் அடங்காது. ஆகவே நாம் அவனைப் பார்க்கிறோம்." மாயை மூச்சிரைக்க "அத்துடன் இன்னொன்றும் உள்ளது. அத்தனை பெண்ணைக் கண்டவனுக்கு தான் மட்டும் மிகமிகத் தனித்தவள், அவன் வேறெங்கும் அடையமுடியாதவள் என ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள்" என்றாள்.




திரைப்படங்களில் கவனித்திருக்கிறீர்களா? கதாநாயகர்களுக்கு பொதுவாக இரண்டு குணாம்சங்கள் இருக்கும். முதலாவது, நாயகன் வீரதீரனாக இருப்பான். பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடுவான். மற்றது, அவன் ஒரு பெண்பித்தனாக இருப்பான். காணும் பெண்களிடமெல்லாம் வழிந்து கொண்டிருப்பான். அப்படி இல்லாவிட்டால் பெண்களெல்லாம் அவனை சுற்றிச் சுற்றி வருவார்கள்.  

இதற்குக் காரணம் எளிமையானது. ஆதி காலத்திலிருந்தே மனிதனுக்கு இயல்பாகவே இருந்த இயல்புகள் வன்முறையும் காமமும். அவை இரண்டும் இருந்தால் தான் ஒரு தலைவன் உருவாக முடியும்.  ஒரு பழங்குடிச் சமூகத்தில் பலம் குறைந்தவர்களை அடக்கி, பலமிக்கவன் மேலேறி, அவனது பரம்பரை தொடர்வதன் மூலமே தக்கன பிழைக்கவும் தகாதன மடியவும் முடியும். இளந்தாரிக்கல் தூக்குவது, எருதை அடக்குவது, மல்யுத்தம் இதெல்லாம் பழங்காலத் திருமணம் ஒன்றிற்கான போட்டிகளாக அமைந்ததும் இதனால் தான்.  இயற்கைத் தேர்வு என்று கூர்ப்புக் கொள்கை சொல்வதும் இதையே.

ஆனால், நாகரிகம் உருவாகி விழுமியங்கள் கண்டறியப்பட்டபோது, அளவுக்கு மீறிய வன்முறையும் காமமும் சமூகமொன்றின் நிலைத்திருக்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் கண்டுகொண்டார்கள்.  அவற்றை மனிதனால் முற்றாக  வெல்லவும் முடியாது என்பது உணரப்பட்டபோது அவை வலுக்குறைக்கப்பட்டு  உருமாற்றப்பட்டன. சமூகப்பொறுப்பை உணர்ந்து வன்முறை செய்வதும் காமமாடுவதும் அனுமதிக்கப்பட்டன. இப்படி வன்முறை வீரமானது; காமம் காதலானது. வீரத்துக்காகவும் காதலுக்காகவும் உயிர் கொடுத்தவர்கள் உதாரண புருஷர்களாகவும் தெய்வங்களாகவும் மாறினார்கள். வீரனையும் காதலனையும் புகழ்ந்து இலக்கியங்கள் எழுந்தன. காவியங்கள்  பாடப்பட்டன. தொல்குடியான தமிழர்களிடம் இதற்கு ஈராயிரம் ஆண்டுகள் பழைமையான சான்று சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது. அகத்திணை புறத்திணை எனும் இரு பிரிவுகள். அகத்திணை பாடுவது காதலை; புறத்திணை பாடுவது வீரத்தை.

நம் மரபில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் தெய்வங்களான கண்ணனும் முருகனும் இணையற்ற வீரர்கள். கண்ணன் மாடுகளை அடக்கி நப்பின்னையை மணந்தான். கஞ்சன் முதலிய பலசாலிகளை வீழ்த்தினான். கோவர்த்தன மலையைப் பெயர்த்தான். இப்படி அவன் செய்த சாகசங்கள் பல. முருகனோ சூரனை வென்றவன். அவுணர் படையை அடியோடு அழித்தவன். அவனது அடங்காக் கோபத்தையே அதிக சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. 

ஆனால் தாங்கள் கொண்டிருந்த வீரத்துக்குச் சமனாக  அவர்கள் இருவருமே பெண்பித்தர்கள். ஆற்றில் குளித்த பெண்களின் ஆடையைக் களவாடிய கள்வன், கண்ணன். அவனை எண்ணி உருகாத ஆயர்குலப் பெண்டிர் இல்லை.  முருகனும் அப்படித்தான். தேவலோக மங்கையரெல்லாம் அவன் அழகில் மயங்கினார்கள். அவன் அழகான பெண்களைப் பிடித்துக்கொள்வான். இளங்கன்னியருக்கு விரகதாபத்தை உண்டாக்கிவிடுவான். அவர்கள் பசலை கொண்டு காதல் நோயால் வாடுவார்கள். வெறித்தபடி முருகனை எண்ணி ஏங்கி அமர்ந்திருப்பார்கள். இப்படி முருகனால் ஆட்கொள்ளப்பட்ட பெண்களுக்காக இரங்கிய அக்காலத்து மக்கள், முருகனை அழைத்து அவளை விட்டுப் போய்விடுமாறு மன்றாடும் "வேலன் வெறியாட்டு" சடங்கை நிகழ்த்தினார்கள். முருகனும் கண்ணனும் மட்டுமன்றி இன்னொரு பெருந்தெய்வமான சிவனும் அப்படி ஒரே நேரத்தில்  வீரனாகவும் காதலனாகவும் தான் இருந்தார் என்பதற்கும் பல புராணக்கதைகள் சான்றாக இருக்கின்றன.

இவற்றின் பின்னுள்ள மானுடவியலை அறியாமல் "போக்கிரிகளையும் பொம்பிளைப் பொறுக்கிகளையும் கடவுளராக வழிபடுகின்றார்கள் சைவ வைணவர்கள்" என்று கைகொட்டிச் சிரித்த பலர், நிஜவாழ்க்கையில் தாங்களும் போக்கிரிகளாகவும் பெண்பொறுக்கிகளாகவுமே இருந்தார்கள்; அல்லது அப்படிப்பட்டவர்களை தங்கள் தலைவர்களாகக் கொண்டாடினார்கள் என்பது தான் முரண்நகை. இதிலெல்லாம் ஈடுபடாமல் ஒழுக்கமாக வாழ கட்டாடயப்படுத்தப்பட்டிருக்கும் எளிய மனிதர்களின் மனம் கூட "அப்படி இருந்தால் தானே கெத்து" என்று எங்கோ ஓரிடத்தில் பெருமூச்சு விடுகிறது. மானுட இயல்பே அது தான். காதல், வீரம் என்பதெல்லாம் சும்மா. நூறுநூறாண்டுகள் கடந்தாலும், அப்படி வன்முறையையும் காமத்தையும்  தான் நம்மால் கொண்டாடமுடியும். ஏனென்றால் அது தான் நம் அடிப்படை இயல்பே. மனிதனும் ஒரு மிருகம் தான், இல்லையா?

தமிழ்ச் சைவர்களுக்கு சிவனே முழுமுதற்கடவுள். என்றாலும், உலகெங்கும் அதிக எண்ணிக்கையிலுள்ள சைவக்கோவில்கள் பிள்ளையாருக்காக அமைந்தவை. ஆனால் மேலோட்டமாக எண்ணிப்பாருங்கள். சைவத்தில் அதிக தனிநபர்களுக்குப் பிடித்தமான கடவுள் முருகன் தான். இலங்கை எனும் இந்த சின்னஞ்சிறு தீவே கதிர்காமக் கந்தனுக்கு அடிமை. வடக்குக் கிழக்கில் புகழ்பெற்ற தொண்ணூறு வீதம் சைவக்கோவில்கள் முருகனுடையவை. அந்தக் காலத்திலிருந்தே அவன் தான் தமிழருக்கு ஹீரோ. ஆண்களுக்கு முன்னுதாரணமான நாயகன், பெண்களுக்கு ஒப்பில்லாத காதலன். அழகன், இளைஞன், வீரனும் கூட.

ஒரு சிங்கள நண்பன் கதிர்காமக் கந்தன் பற்றி தங்களிடம் வழக்கிலுள்ள ஒரு நகைச்சுவையான நாட்டார் கதையைச் சொன்னான். பச்சையான பதினெட்டு சக கதை என்பதால் இங்கு அதைப் பகிரவில்லை.  ஆனால் அது எப்படித் தொடங்குகிறது என்றால் "கதிர்காமத் தெய்வம் வழக்கப்படி வல்லியம்மாவுக்கும் தேவானே அம்மாவுக்கும் தெரியாமல் தன் காதலியைக் காண இரவில் புறப்பட்டான்."   மூன்றாவது ஒருத்தியிடம், அதுவும் வழக்கப்படி,  திருட்டுத்தனமாகச் செல்கிறான். பாருங்கள், சிங்களவரிடமும்  முருகன் ஸ்திரீலோலன் தான். 

கர்நாடக சங்கீதத்தில் கன்னடத்திலும் தெலுங்கிலும் எழுந்த பல கீர்த்தனைகள் கண்ணனை நாயகனாகக் கொண்டு பாட, தமிழில் எழுந்த கீர்த்தனைகள் முருகனை நாயகனாகக் கொண்டு பாடுகின்றன.  திரையிசையில் கூட முருகன் காதலனாகவே எஞ்சியிருக்கிறான்.  "சிங்கார வேலனே தேவா", "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்", "முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்", "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன",  என்று நாயகி பாவத்தில் முருகனிடம் பெண்கள் உருகும் இந்தப் பட்டியல் நீள்கிறது.  "பழமுதிர்ச்சோலையிலே" பாட்டை நினைவூட்டிய நண்பர் கபிலன் கணேசுக்கு நன்றிகள். 

சிங்கார வேலனே தேவா 
கொஞ்சும் சலங்கை (1962)

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
பஞ்சவர்ணக்கிளி (1965)


முத்தமிழில் பாட வந்தேன்
மேல்நாட்டு மருமகள் (1975)

மறைந்திருந்து பார்க்கும்
தில்லானா மோகனாம்பாள் (1965)

சமகாலத் திரைப்பாடல்களில் முருகன் காதல் நாயகனாக இடம்பெற்றது குறைவு தான். ஆனால் அடியோடு இல்லாமல் இல்லை. கர்நாடக இசைச் சாயலில் அமைந்த  "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடலைச் சொல்லலாம். கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும், "சரவணபவ குக வடிவழகா"வையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். கண்ணனைப் பாடும் "உனை தினம் எதிர்பார்த்தேன்" பாட்டில் போகிற போக்கில் ஒரு வரி வருகிறது. 

கண்ட நாள் முதலாய்
கண்ட நாள் முதல் (2005)

சரவணபவ குக வடிவழகா
காதலா காதலா (1998)

உனை தினம் எதிர் பார்த்தேன்
காதலுடன் (2003)

மிக அண்மையில் இன்னும் இரு பாடல்கள் வந்தன. அதில் முதலாவது போகன் திரைப்படத்தில் "செந்தூரா". செந்தூரன் என்பது திருச்செந்தூர் முருகனின் பெயர். இந்தப் பாடலில் தமிழ் மரபுத்தொடர்ச்சி பளிச்சிடும், "செங்காந்தள் பூ உன் தேரா?", "மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய்க் காற்றில் எய்தாயா?", என்ற வரிகளும் அத்தனை அழகு. கதைப்போமா, வைவாயா என்ற வட்டார வழக்குகளுக்கு இந்தப் பாட்டின் மூலம் அமரத்துவம் கொடுத்த கவிஞர் தாமரையை, தாமரைகளால் தான் அருச்சிக்கவேண்டும்.
செந்தூரா
போகன் (2017)


வேறு யாரும் பாடலாசிரியர்களை தமிழ் இலக்கியத்தோடு இணைந்து புகழ்ந்தால் உடனே "அங்க என்னம்மா சத்தம்" என்ற குரல் கேட்டுவிடும்.  வந்துவிடுவார் நம் கவிப்பேரரசு.  என்ன? திராவிட கவிப்பேரரசு முருகனைப் பாடினாரா?  இல்லாமலா? லிங்கா படத்தின் "சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்" பாடலில் ஒரு வரி வரும். "ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல் கொள்ள வா, கொற்றவை மைந்தா". கொற்றவையின் மைந்தன். முருகன். கொற்றவை மைந்தன் என்பதை "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ"  என்று இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறது திருமுருகாற்றுப்படை.

என் மன்னவா
லிங்கா (2014)


இந்த இரு பாடல்களும் தனிப்பட்ட ரீதியில் என்னை மகிழச் செய்தவை. காதலனைக் கண்னனோடு ஒப்பிடும் பாடல்கள் தமிழிலும் வேறு இந்திய மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ்த்திரையுலகில் இத்தனை ஆண்டுகள் கழிந்தும், தமிழ்ப் பண்பாட்டின் இணையற்ற காதலனான முருகனை எங்குமே நாயகி நாயகனோடு ஒப்பிட்டுப் பாடியதில்லை. தன் சொந்தக் காதலனை காதலி "வாடா முருகனைப் போன்றவனே"  என்று வெளிப்படையாக அழைப்பது தமிழில் முதலில் நிகழ்ந்தது, இந்த "என் மன்னவா" பாட்டிலும், "செந்தூரா" பாட்டிலும் தான். 


திரையிசையில் இப்படி மரபு பாடப்பட்டிருக்கிறது என்றால் ஏன் இத்தனை குதிக்கிறாய்? ஒரு சாதாரண விஷயம் தானே இது? இல்லை. நிச்சயமாக இல்லை. கண்ணன் - இராதை, கண்ணன் - மீரா, தேவதாஸ் -  பார்வதி, ஷாஜஹான் - மும்தாஜ், சலீம் - அனார்கலி,  இதெல்லாம் வடநாட்டிலிருந்து நம்மை வந்தடைந்த காதல் கதைத் தொன்மங்கள். ஒரு சாதாரண தமிழனுக்கு இவர்களைப் பற்றி ஒரு வரியாவது தெரியும். ஆனால் கண்ணன் - நப்பின்னை, முருகன் - வள்ளி இதெல்லாம்   ஆயிரமாயிரமாண்டுகள் பழைமையான நம் மண்ணின் தொன்மங்கள். இவர்கள் பற்றி யாராவது இங்கு ஒரு வரி பாடிக் கேட்டிருக்கிறோமா? வள்ளியாக தன்னைப் பாவனை செய்து நாயகி ஏங்கும் ஒரு பாடல் தமிழில் இருக்கிறதா? தளபதியிலிருந்து 96 வரை, யமுனை ஆற்றிலே நீலக்காற்றிலே என்று அப்படி உருகினார்களே நம் தமிழ்ப்பட நாயகிகள், ராதையை இத்தனை அறிந்த நாம், நப்பின்னை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஏன் அந்தப் பெயராவது தெரியுமா? 

தமிழில் அம்பிகாபதி - அமராவதி  தொன்மம் ஓரளவு புகழ்பெற்று இருக்கின்றது. அதுவும் மேலே சொன்ன வடநாட்டுத் தொன்மங்களும் நம் மத்தியில் புகழ்பெற்றதற்கு,  அந்தக் கதைகளிலுள்ள துன்பியல் சுவை அல்லது அவலச் சுவை ஒரு காரணமாக இருக்கலாம் என்று புரிந்துகொள்கிறேன். அதற்காக முருகனையும் வள்ளியையுமோ, கண்ணனையும் நப்பின்னையையுமோ முற்றாகப் புறக்கணிப்பது எந்த விதத்தில் தான் நியாயம்?

திரைப்படங்களை ஏன் ஒரு அளவீடாக எடுத்துக்கொள்கிறேன் என்றால்,  இலக்கியங்கள் போலவே திரைப்படங்களும் காலத்தின் கண்ணாடி என்பதால் தான். குறிப்பிட்ட காலத்தின் திரைப்படங்கள் கொஞ்சத்தை எடுத்து அலசி ஆராய்ந்தால், அந்தத் திரைப்படங்களை இரசித்த மக்களின் இரசனைகளை அறிந்துகொள்ளமுடியும். "அச்சம் என்பது மடமையடா" வெளிவந்தபோது ரோயல் என்ஃபீல்ட் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.  "96" மற்றும் "கோமாளி" வெளியான போது 80, 90களில் பிறந்த தலைமுறையினர் இறந்த காலத்தை எண்ணி ஏங்கிக்கொண்டிருந்தார்கள்,. 60,70களில் பெண்கள் பொட்டை உச்சி நெற்றியில் வைப்பது தான் ஸ்டைலாக இருந்தது. 70, 80களில் பெண்களுக்கு கவலை வந்தால் வாயில் விரல்களை வைத்து விசும்பி அறைக்குள் ஓடி கட்டிலில் விழுந்து குமுறி அழுவார்கள். 80, 90களில் காதல் வந்தால் பூங்காவொன்றுக்குப் போய் ஆணும் பெண்ணும் மரத்தைச் சுற்றி ஆடிக்கொண்டிருப்பார்கள். இப்படிப் பல வரலாற்றுண்மைகளை ஊகிக்கலாம். சில மொக்கைத் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்கள் "இரசிகர்கள் இதைத்தானே இரசிக்கிறார்கள்" என்று பேட்டி கொடுப்பதைக் கண்டிருப்போம். அவ்வளவு ஏன், திரைப்படங்களைப் பார்த்தே, தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொண்ட "பாபநாசம்" சுயம்புலிங்கம் நினைவில் இருக்கிறாரா?

திரைப்படங்கள் ஒரு குறித்த மொழி பேசும் சகல மக்களாலும் இரசிக்கப்படுபவை. பொழுதுபோக்கு என்ற வகையில், அந்த வட்டம் தாண்டி வேற்றுமொழியாளராலும் அவதானிக்கப்படுபவை. எனவே ஒரு குறித்த புவியியல்/ பிரதேசம்/ சாதி/சமயம் சார்ந்த வழமைகள் காட்சிப்படுத்தப்படும் போது, ஏனைய தரப்பினரால் அவை புரிந்துகொள்ளப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. "கபாலி"யின் மலேசியப் பின்புலமும், "கடலி"ன் தென்தமிழக கத்தோலிக்கப் பின்புலமும் அவற்றை ஏனைய தமிழர் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் தமிழ்ப்பண்பாடு என்ற பொதுச்சட்டகத்தின் கீழ்வரும் பெரும்பாலான விடயங்களை எந்தத் தமிழனாலும் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளவும் வேண்டும். எனவே தான் பொதுத்தமிழ் பண்பாட்டுக் கூறுகள், அல்லது அப்படி இனங்காணப்படும் விடயங்கள் தமிழ்த் திரைப்படங்களில் பதிவாவதை வரவேற்கிறேன். அவற்றை இனங்கண்டுகொண்டால் பகிர்ந்துகொள்கிறேன்.


வெளியிலிருந்து வந்த அடையாளங்களை விட,  இந்த மண்ணுக்கே உரிய கண்ணனும் கந்தனும், காதலுக்கான அடையாளமாக தமிழில் தொடர்ந்தும் முன்வைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒரு விருப்பம் தான். அதிலும்,  தமிழ்க்கடவுள் முருகன், முப்பாட்டன் முருகன் என்று வெறுமனே உணர்ச்சி வசப்படுவதை விட, அடையாளங்களுக்கு வெளியே பண்பாட்டுக் குறியீடாக முருகனை முன்வைப்பதே சமகாலத்தில் தேவையானது. 

மகத்தான காதலனாக கந்தன் எழுக -  திரையுலகிலும் அன்றாடத்திலும்! 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner