தமிழர் மறந்த தலைவி - நப்பின்னை!

நப்பின்னை. இந்தப் பெயரை பெரும்பாலும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். தமிழகத்து வைணவர் மட்டும் ஓரளவு அறிந்த பெயராக, அவர்கள் பெண்குழந்தைகளுக்கு சூட்டும் பெயராக நீடித்து வருகிறது இந்தப் பெயர். ஆனால் ஒரு காலத்தில் தமிழ்ப் பக்தி இலக்கியம் திகட்டத் திகட்டப் போற்றிய ஒரு நாயகியின் பெயர் அது என்பது உங்களுக்குத் தெரியுமா?


இன்றைக்குக் கண்ணன் என்றால் உங்களுக்கு இராதை இல்லாமல் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது. "ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ", "ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா!" என்றெல்லாம் தமிழ்த் திரையுலகமும் கண்ணனையும் இராதையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணன் மீது பெருங்காதல் கொண்ட ஆண்டாளையோ, ஏனைய ஆழ்வார்களையோ கூப்பிட்டுக் கேட்டால், "ராதையா? அது யார்?" என்று கேட்பார்கள்.

என்ன ஆழ்வார்களுக்கு இராதையைத் தெரியாதா? ஆம், ஆழ்வார்களுக்கு என்ன, எந்தப் பழந்தமிழருக்கும் இராதையைத் தெரியவே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த கண்ணனின் தேவிக்குப் பெயர் நப்பின்னை!  

மரபுரைகள் சொல்வதன் படி, மிதிலையை ஆண்டு வந்த யசோதையின் அண்ணன் கும்பகனின் மகள் நப்பின்னை. தன் ஏழு காளைகளை ஏறு தழுவி வெல்வோருக்கே தன் மகள் கிடைப்பாள் என்று அறிவிக்கிறாள் கும்பகன்.  முறை மைத்துனன் என்றாலும், அப்படியே  ஏறு தழுவி வென்று நப்பின்னையைக் கரம் பற்றுகிறான் கண்ணன்.

நப்பின்னை பற்றி முதலில் குறிப்பிடும் தமிழ் இலக்கியம் சிலப்பதிகாரம்.  மதுரையில் இடைச்சேரியில் கண்ணகியைத் தங்கவைத்து கோவலன் சென்றபின் ஆயர்குலப் பெண் மாதரி தீய சகுனங்களைக் காண்கிறாள். அவற்றுக்கு பிழையீடாக கண்ணனும் பலராமனும் நப்பின்னையும் ஆடிய குரவைக்கூத்தை ஆடுவோம் என்று மகளிடம் சொல்கிறாள் மாதரி.


"கண்ணகியும் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
 தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோடாடிய குரவை ஆடுதும் யாமென்றாள்"

இந்தப்பாடலில் நப்பின்னை பிஞ்ஞை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள்.  பின்னர் கண்ணனும் அவன் அண்ணன் பலராமனும் நடுவே ஆய்மகளான பின்னையும் நிற்கும் கோலத்தில் ஆயர் குலப்பெண்கள் நடனமாடத் தயாராகிறார்கள். 
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை

நப்பின்னையாக ஆடுகின்ற ஆயர்குலப்பெண் உண்மையிலேயே நப்பின்னை போல பேரழகி தான் என்று மாதரி வியந்துகொள்ளும் இடம் அடுத்து வருகிறது. உலகை அளந்த திருமாலை, அவன் மார்பில் குடிகொண்ட திருமகளைப் பார்க்காமல் தன்னைப் பார்க்கவைத்த நப்பின்னை போல அழகி இவள் என்கிறாள் மாதாரி. தொடர்ந்து பின்னை, நம்பின்னை, பிஞ்ஞை போன்ற பெயர்களில் ஆய்ச்சியர் குரவை முழுவதும் இடம்பெறுகிறாள் நப்பின்னை. 

வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள் நம் பின்னை தானாமென்றே
ஐ என்றாள் ஆயர் மகள்


சிலப்பதிகாரத்துக்குப் பின் சைவ மற்றும் வைணவ பக்தி இலக்கியங்களில் நப்பின்னையைக் காணமுடிகின்றது. மாணிக்கவாசகர் "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்" (திருக்கோவையார் 18:8) என்றும்,சுந்தரமூர்த்தி நாயனார்  "பின்னை நம்பும் புயத்தான்"(திருமுறை 7:63:7) என்றும்  திருமாலைப் போற்றுகின்றனர். வைணவ இலக்கியங்களிலோ கணக்கிறந்த பாடல்கள் நப்பின்னையைப் போற்றுகின்றன. ஆண்டாள் திருப்பாவை பாடும் போது, "செப்பென்ன மென் முலை செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்" என்று நப்பின்னையைத் துயிலெழுப்பிய பின்பேயே கண்ணனை எழுப்புகிறாள். பன்னிரு வைணவ ஆழ்வார்களில் எல்லோரும் திருமகள், பூமகள் ஆகிய இருவரும் திருமாலின் தேவியர் என்பதைப் பாட,  தொண்டரடிப் பொடியாழ்வார், மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார் மூவர் தவிர, ஏனைய ஒன்பது பேருமே நப்பின்னையையும் பாடியிருக்கிறார்கள். 

ஆனால் தமிழ் வைணவ இலக்கியங்களுக்குப் பிறகு நப்பின்னை பற்றிய தரவுகள் தமிழ் இலக்கிய உலகில் குறைய ஆரம்பிக்கின்றன. சீவக சிந்தாமணியில் மட்டும் ஓரிடத்தில் நப்பின்னை வருகிறாள். முருகன் வள்ளியை ஏற்றுக்கொண்டது போல், கண்ணன் நப்பின்னையை ஏற்றுக்கொண்டது போல், நீ குலத்தைப் பார்க்காமல் என் மகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சீவகனிடம் தன் மகள் கோவிந்தையை மணக்கும் படி கோருகிறான் அவள் தந்தை நந்தக்கோன்.

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.

பதினோராம் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் "இன்னிலை" என்னும் நூலிலும் நப்பின்னை வருகிறாள். கணவனை எப்படி பேணுவது என்பதற்கு நப்பின்னையே அடையாளம் என்ற பொருளில் ஒரு செய்யுள் அதில் வருகிறது.  இந்தப் பாடல் சொல்லவருகின்ற கதை ஏதும் இன்று மறைந்துவிட்டதா, அல்லது நப்பின்னை என்பதற்கு இங்கு வேறு பொருள் கொள்ளவேண்டுமா என்பது தெரியவில்லை.

ஒப்புயர்வில் வேட்டோன் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்

நப்பின்னை ஞாலம் ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.




நப்பின்னை இறுதியாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறுவது,  பதினைந்தாம் நூற்றாண்டளவில் உருவான திருவள்ளுவமாலையில். அதில் அவள் "உபகேசி"என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள். உபகேசியை மணந்த கண்ணன் வடமதுரைக்கு அச்சுப் போன்றவன். வள்ளுவர் தென்மதுரைக்கு அச்சு என்பது அந்தப் பாடலின் பொருள்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்போதார் 
புனற்கூடற்கு அச்சு

 நப்பின்னை என்ற பெயரின் சரியான பொருள் தெரியவில்லை. பெரும்பாலான இலக்கியங்கள் பின்னை என்றே சொல்வதால் அதுவே அவள் இயற்பெயராகலாம்.  பின்னை என்பதற்கு பின்னல் அல்லது கூந்தல் என்றோர் பொருள் உள்ளது. சிலப்பதிகாரம் ஓரிடத்தில் அவளை "பிஞ்ஞை" என்று அழைப்பதையும் நாம் கவனிக்கவேண்டும். பிஞ்ஞகம் என்றாலும் கூந்தல் தான். அவள் "உபகேசி" என்று சொல்லப்படுவதாலும் (கேசம் - கூந்தல்). பின்னை என்ற பெயரை கூந்தல் சார்ந்து உருவான பெயராக இனங்காணலாம்.  பின்னை என்பதோடு நல் என்ற முன்னொட்டு இணைந்து நல்+பின்னை = நற்பின்னை >> நப்பின்னை என்று மாறியிருக்கவேண்டும்.

என்றால் பிற்காலத்தில் நப்பின்னைக்கு என்ன நடந்தது? ஏன் அவள் வரலாற்றிலிருந்து மறைந்தாள்? இடையே இப்போது நாம் கொண்டாடும் இராதை யார்? இந்தக் கேள்விகள் உங்களுக்கு ஏற்படுவது இயல்பே.


நப்பின்னை தமிழ் இலக்கியங்களில் மட்டுமாவது இடம்பெற்றிருக்கிறாள். ஆனால் தமிழ் இலக்கியங்களிலோ பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய பழைய வைணவ நூல்களிலோ, கண்ணனின் புகழைப் பாடும் பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற பழைய புராணங்களிலோ இராதை பற்றிய குறிப்பு இல்லை. ஆனால், கண்ணன் ஆயர்குலப்பெண் ஒருத்தியோடு ஊடி விளையாடும் சித்திரம் பாகவத புராணத்தில் வருகிறது. அதில் அப்பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 


நாயன்மார் மற்றும் ஆழ்வார்களால் தென்னகத்தில் தோன்றிய பக்தி இயக்கம்,  10 முதல் 12ஆம் நூற்றாண்டளவில் முகலாயப்படையெடுப்புகளால் சிதைந்திருந்த வட இந்தியாவுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. கன்னடத்தில் தோன்றிய வீர சைவ எழுச்சியைத் தவிர, ஏனைய பகுதிகளில் தோன்றிய பக்தி இயக்கங்கள் பெரும்பாலும் வைணவம் சார்ந்தே மக்களை ஒன்றிணைத்தன. அதிலும் திருமாலை விட, கண்ணனே பல இடங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டான். குழந்தையாக கண்ணனின்  விளையாடல்களும் இளைஞனாக அவனது லீலைகளும் வடநாட்டுப் பக்தி இயக்கக் கவிஞர்களால் பாடித் தீர்க்கப்பட்டன. இக்காலத்தில் கண்ணனின் காதலியாக எழுச்சி பெற்றவளே  இராதை. இராதை மீதான கண்ணனின் காதலை சிருங்காரம் சொட்டப் பாடுகின்ற ஜயதேவரின் "கீதகோவிந்தம்" (12ஆம் நூற்றாண்டு) அவற்றுள் புகழ்பெற்ற ஒன்று.  

எனினும் ஏழாம் நூற்றாண்டுக்கு முன் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காதா சப்தசதியில் இராதை பற்றிய விவரணங்கள் வருகின்றன. பத்தாம் நூற்றாண்டளவிலும் அதற்கு முன்பின்னாகவும் உருவான தாந்திரீக நூல்களில் ராதா அல்லது ராதிகா எனும் சக்தி  குறிப்பிடப்பட்டிருக்கிறாள். "ராதா தந்திரம்" எனும் சர்ச்சைக்குரிய தாந்திரீக நூலொன்று, கண்ணனையும் ராதையையும் தாந்திரீகப் பார்வையில் வழிபடும் முறைகளை விவரிக்கின்றது. இப்படி  கண்ணனின் காதலியான இராதை பற்றிய நாட்டார் நம்பிக்கைகள்  வடநாட்டு பக்தி இலக்கியங்களுக்கு முன்பேயே அங்கு தோன்றிவிட்டிருந்தன என்று ஊகிக்க முடிகின்றது. 

ஆயினும் இராதையின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தமிழ் நப்பின்னையின் பங்களிப்பு எந்தளவு இருக்கின்றது என்பது விரிவாக ஆராயப்படவேண்டியது. இருவருக்குமிடையிலான முதன்மையான வேறுபாடு, நப்பின்னை கண்ணனுக்கு மாலையிட்ட மனைவியாக இருக்க, இராதை களவொழுக்கத்தில் ஈடுபடும் காதலியாக இருக்கிறாள் என்பதே. நாம் முன்பு பார்த்த 'இன்னிலை'யில் தன் நாயகனை பெண்ணொருத்தி நப்பின்னை போலக் கையாளவேண்டும் என்று வருவதால்,  நப்பின்னைக்கும் கண்ணனுக்கும் கூட, தமிழ்  முறைமைத்துனர் மரபிலான களவொழுக்கம் சொல்லப்பட்டிருக்கக் கூடும். வாய்வழி மரபுகளில் நிலவிவந்த ஆயர்குலக் கண்ணன் காதலி என்ற படிமம், தென்னகத்தில் நப்பின்னையாகவும், சற்றுப் பிந்தி வடநாட்டில் இராதையாகவும் வளர்ந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 


15ஆம் நூற்றாண்டுக்குப் பின் வடநாட்டில் உருவான சுத்தாத்துவைதம், அசிந்திய பேதாபேதம் முதலிய வைணவ மெய்யியல்கள் இராதைக்கு குறிப்பிடத்தக்க இடத்தைக் கொடுத்திருக்கின்றன.  மாறாக, அவற்றுக்கு முன்பே தென்னகத்தில் உருவான வைணவ மெய்யியல்களான விசிஷ்டாத்துவைதமும் துவைதமும் முழு இந்திய அளவிலும் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட போதும்,  கண்ணனை வழிபடுகையில், அவனது  தேவியராக ருக்மிணி, சத்தியபாமை முதலியோருக்கு கொடுத்த  முன்னுரிமையை நப்பின்னைக்கோ இராதைக்கோ கொடுப்பதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. தவிர தென்னகத்தில் சைவம் வைணவத்தை முந்திக்கொண்டுவிட்டது.  இந்த இரு விதங்களாலும் முற்றாக மறக்கடிக்கப்படும் சோகத்தைச் சந்தித்தவள் திருமாலின் தமிழ் நாயகி நப்பின்னை. 


காலம் என்பது மாறிக்கொண்டிருப்பது. அதில் மாற்றங்களின் அளவுக்கு இழப்புக்கும் இடமுண்டு. சில மரபுகளையும் தொன்மங்களையும் காலவெள்ளத்தில் இழக்கத்தான் வேண்டும். அது நியதி. ஆனால், நப்பின்னை இழக்கவேண்டிய ஒருத்தியா?

கோதைத் தமிழ் இருக்கும் வரை, சிலம்பும் சிந்தாமணியும் இருக்கும் வரை, "யாரவள்?" என்ற கேள்விக்கு பதில் நம்வசம் இருந்தே ஆகவேண்டும். இலக்கியத்தில் "பின்னை", "நப்பின்னை" என்ற பெயரைக் காணும் போதெல்லாம் தமிழன் எவனும் தடுமாறக் கூடாது.  அவள் தமிழ் நிலத்தில் தோன்றியவள். கண்ணனை, மாயோனை, முல்லை நிலத்தலைவனை இந்த மண்ணுக்கு உரியவனாக நிலைநிறுத்திய ஒருத்தி. அவளை நம் மரபில் மீட்பது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.


சரி. அதற்கு என்ன தான் செய்யலாம்? குறைந்தது நப்பின்னையை இராதையின் தமிழ் வடிவமாகவாவது தக்க வைக்க முயலலாம். நவீன தமிழ் இலக்கியங்களில் இராதைக்குக் கொடுக்கும் இடத்தை நப்பின்னைக்கு கொடுக்கவேண்டும். திரையிசையில் சீதை, ராதை, கோதை என்று எதுகை மோனையாகப் பாடுவதற்குப் பதில் இனி நம்சீதை, நப்பின்னை, நறுங்கோதை என்று பாடத்தொடங்கலாம். இலக்கியங்களில், கலைகளில், சித்தரிப்புகளில் ராதா - கிருஷ்ணன் என்ற காதலர் உருவகத்துக்குப் பதில் கண்ணன் - பின்னை என்ற தொன்மத்தை மீட்டெடுக்கலாம். நப்பின்னையைப் பாடும் ஆழ்வார் பாசுரங்கள், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களைக் கொண்டு அரங்காற்றுகைகளை நிகழ்த்தலாம்.


பூமாதேவி, திருமகள், நீளாதேவி எனும் மூன்று திருமாலின் தேவியரையும், கண்ணனின் சத்தியபாமை, ருக்மணி, நப்பின்னை எனும் மூன்று தேவியராக பார்ப்பதற்கான இடம் ஆழ்வார் இலக்கியங்களிலேயே இருக்கிறது.  "பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல்"  (பாசுரம் 3387) "கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்" (பாசுரம் 3406) ஆகிய இடங்களில் திருமாலின் முத்தேவியரில் ஒருத்தியாக பின்னை சொல்லப்படுகிறாள். வழிபாட்டுத்தளத்தில், இன்றைய வைணவர்கள், நப்பின்னையை நீளாதேவியாகக் காண்கிறார்கள். இராதைக்குப் பதிலாக ஆயர் மடமகளை முன்னிலைப்படுத்தவேண்டியது தெய்வப்பாசுரங்களை ஏற்றிப்போற்றும் அவர்களுக்கே உள்ள தார்மீகப் பொறுப்பும் கூட. இராதைக்குக் கூடிய முன்னுரிமை கொடுக்கும் இஸ்கோன் போன்ற புத்திந்து அமைப்புக்களின் வருகையின் பின்னணியில் இதற்கு எந்தளவு சாத்தியம் உள்ளது என்பது கேள்விக்குறி தான். குறைந்தபட்சம் இராதையின் தமிழ்ப்பெயராகவேனும் நப்பின்னையை எஞ்சவிட்டால் மரபு நிலைக்கும். தமிழ் நீடிக்கும்.

நப்பின்னைப் பிராட்டியார் வாழ்க.

(உவங்கள் 2020 வைகாசி [சனம் 03 ஆள் 01] இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner