மேதியவுணன் கொல்பாவை

"அயிகிரி நந்தினி" என்று துவங்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். பொருள்புரியாது கேட்டாலே சந்த அழகாலும் இனிமையாலும் மயக்கும் வடமொழித் துதி அது. ஆதிசங்கரர் இயற்றியது என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கிடைக்கின்ற மரபுரைகளின் படி அதை இயற்றியவர், இராமகிருஷ்ணகவி. அந்தப்பெயரில் ஒரு வடமொழி அறிஞர் கடந்த நூற்றாண்டில் (1866 - 1957) தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார். பரதரின் நாட்டிய சாத்திரத்துக்கு காஷ்மீர சைவ அறிஞர் அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி எனும் உரையை நூலாகப் பதிப்பித்தவர். நாட்டிய - இசை வடமொழிக் கலைச்சொல் அகராதியான பரதகோசமும் இவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.


மேதிகொல்மாது சிற்பம், மாமல்லபுரம்

உண்மையில் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்பது, பகவதி பத்ய புஷ்பாஞ்சலி ஸ்தோத்ரம் எனும் துதியின் ஒரு பாகம் தான். மொத்தம் 30 சுலோகம் கொண்ட புஷ்பாஞ்சலி தோத்திரத்தில் 7 - 27 ஆவது வரையான 21 சுலோகங்களே இன்று மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்று அறியப்படுகின்றன. 29ஆம் சுலோகத்தில் தான் இதைப்பாடியது "ராமகிருஷ்ணகவி"யாகிய நான் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

சிறுவயதிலிருந்தே இத்தோத்திரம் மீது நல்ல ஈர்ப்பு எனக்கு. உமா மோகன், சைந்தவி குழுவினரால் பாடப்பட்டு, ஸ்டீபன் தேவஸ்ஸியால் இசையமைக்கப்பட்ட சேக்ரெட் சாண்ட்ஸ் (Sacred Chants) எனும் இசைத்தொகுப்பின் மூன்றாம் தொகுதியில் இப்பாடல் வெளியாகியிருந்தது. 2008இல் இப்பாடலை நவீன மெட்டுக் கலப்பிசையில் கேட்டபோது மீண்டும் இதற்கு அடிமையானேன். எந்த அளவுக்கு என்றால், ஒருகட்டத்தில் இணையத்தில் தேடி பொருள்புரிந்து படிக்கவேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு.

பம்பாய் சகோதரிகள் பாடிய இதன் தமிழ் மொழிபெயர்ப்பு எங்கள் வீட்டில் அடிக்கடி இறுவட்டில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த மொழிபெயர்ப்பில் எனக்கு அத்தனை திருப்தி இருக்கவில்லை. 2011ஆம் ஆண்டு, உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னரான இடைவேளையில் இதை தமிழில் மொழிபெயர்த்தாலென்ன எனும் யோசனை எழுந்தது. குறைந்தபட்ச சந்த அழகாவது அதில் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஆங்கில மொழிபெயர்ப்புகளை பல வலைத்தளங்களில் சேகரித்து, கொஞ்சநஞ்ச வடமொழி அறிவையும் பயன்படுத்தி இதை தமிழில் மொழியாக்கினேன்.

ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் எனக்கு ஏற்பட்ட ஐயம், மகிடாசுரமர்த்தினியை தமிழில் எப்படி அழைப்பது என்று தான். அது தூய வடமொழிப்பெயர். மஹிஷாஸுரமர்த்தினி என்றால் எருமைத்தலை அசுரனைக் கொன்றவள் என்று பொருள். மகிடம், அசுரன், மர்த்தனம் இந்த மூன்று சொற்களுக்கும் இணையான மேதி+அவுணன்+கொல்லுதல் என்ற தமிழ்ச்சொற்களை இணைத்து, அப்போது சூட்டப்பட்ட பெயர், “மேதியவுணன்கொல்பாவை”.

"ஜய" என்பதை மணிவாசகர் "வெல்க" என்று எடுத்தாண்டிருக்கிறார் என்பது அப்போது தெரியாததால், அச்சொல்லை வாழி என்று மாற்றினேன். “ஓம் கபர்தினே நம:” என்பது சிவனாரின் நூற்றியெட்டு போற்றிகளில் ஒன்று. அவனது நாயகி என்பதால் அன்னைக்கு “கபர்த்தினி” என்றும் பெயர். சுருண்ட அல்லது பின்னப்பட்ட தலைமுடியைக் கொண்டவள் என்று பொருள். எனவே “ரம்யகபர்த்தினி” இங்கே, “புரிகுழல் எழில் உமை” ஆகியிருக்கிறாள். (குழல்=கூந்தல்) எனவே அதன் சுலோகங்கள் முடிவுறும் "ஜயஜயஹே மகிஷாசுரமர்த்தினி ரம்யகபர்த்தினி சைலசுதே" என்பது தமிழில் "வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் புரிகுழல் எழிலுமை மலைமகளே" என்று ஆனது.

மேதி என்றால் எருமை. நேரடியாக மகிடாசுரன் என்ற பொருளும் உண்டு. அவுணன் = அசுரன். தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மேதியைத் தமிழ் வேர்ச்சொல் என்று குறிப்பிட்டபோதும், அது அவுணன் என்ற சொல்லையே குறிப்பிடவில்லை. அவுணன் திசைச்சொல்லா என்பது எனக்குத் தெரியாது. இத்தனைக்கும் அவுணன் என்பது, அசுரரைக் குறிக்க முருகாற்றுப்படையிலும் சிலம்பிலும் இடம்பெற்ற சொல்.

அண்மையில் சொல்லாய்வு குழுமத்தில் "மகிடாசுரமர்த்தினி" என்ற சொல்லை எப்படித் தமிழில் அழைப்பது என்ற உரையாடல் எழுந்தபோது, அகராதிகளில் "மகிடற்செற்றாள்" என்ற பெயர் இருப்பதையும், தேவாரத்தில் "மகிடற் செற்றுநிகழ்நீலி" (திருமுறை 2:74:7) என்ற பெயர் பதியப்பட்டிருப்பதையும் மணி மணிவண்ணன் ஐயா குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். சிலப்பதிகாரத்தில், "பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி" எனும் பெயர் பயில்வதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிலம்பில் மயிடற்செற்றாள் என்ற அதே பெயர் நேரடியாக இன்னோரிடத்தில் வருகிறது. அழற்படுகாதையில் மதுரையை எரிக்கும் கண்ணகியை அமைதிப்படுத்த மதுராபதித் தெய்வம் தயங்கியபடி வந்தபோது, அவள் முன்னே முத்தேவியரின் மொத்த வடிவாக கனன்றுகொண்டிருக்கும் கண்ணகியை "மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றிகந்த கோமகளும் தான் படைத்த கொற்றத்தாள்" என்று வருணிக்கிறார் சேர இளவல். மாமயிடன் செற்றிகந்த கோமகள். மகிடாசுரமர்த்தினி.

வைகாசி இங்கு கண்ணகியின் மாதம். அடுத்த வாரம் எங்களூரிலும் அவள் எழுகிறாள். இளங்கோத் தமிழில் மயிடற்செற்றாளாய் நின்ற அவளை வரவேற்க, தமிழாக்கிய மேதியவுணன்கொல்பாவை வாழ்த்தை இங்கு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். அந்தப் பெயர் மயிடற்செற்றாளுக்கு எத்தனை பொருந்தும் என்று எனக்குத் தெரியாது. வடமொழி அறிவு சிறிதுமின்றி அகராதிகளின் - ஆங்கில மொழிபெயர்ப்புகளின் உதவியோடு செய்த இந்த மொழியாக்கம் எத்தனை திருத்தமானது என்பதும் தெரியாது. வெறும் இருபது வயதில் ஒரு வேகத்தில் செய்த அந்தக் காரியத்தில் அந்த வயதுக்குரிய அறியாமையும் சேர்ந்திருக்கலாம். அதனால் பாதகமில்லை. அடியவர் - அறிஞரை எண்ணி தயக்கம் இருந்தாலும், அவள் மீது அச்சமின்றிப் பகிர்கிறேன். குழந்தையின் மழலையில் மகிழாத அன்னை உண்டா, என்ன?



முழுமையான மொழிபெயர்ப்பு வரிகள் இங்கு:

வையம் வியந்திட வரைதனில் வந்தனை
வந்திப்ப நந்தியும் வரமருள்வாய்
பைய மிளிர்நடை பழகுவை மாலுடன்
பலர்புகழ் விந்தியம் வாழ்பவளே!
கையது தொழுதிட ககனர்கோன் பணிந்திடும்
கறைக்கண்டன் காதலி யாதும்நீயே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 1

(ககனர்கோன் – இந்திரன், வரை - மலை)

அளிக்கும் அந்தரர்க்கு அழிக்கும் துர்தரற்கு
அறந்தவிர் துன்முகன் தடிந்தவளே
முழுவதும் ஆள்வாய் முக்கணன் தோழீ
மறைந்ததெம்மாயை, உன் சமரொலியில்
இழிந்திட தனுகுலம், திதிமக நடுங்கிட
ஈனரை இழித்தனை ஆழிபெண்ணே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 2

(அந்தரர் – தேவர்; தடிதல் – அழித்தல்: துர்தரன்,துன்முகன் – அன்னை அழித்த அசுரர்கள், சமர்ஒலி – யுத்தகோசம், தனுகுலம், திதிமக – தனுவின் குலமான தானவர், திதியின் மக்களான தைத்தியர்; ஆழிபெண் – கடல்மகள்,இலக்குமி.)


கடம்ப வனந்தனில் கனிந்து நகைத்தமர்
காரணி உலகுதன் நாயகியே!
கொடுமுடி இமயம் குன்றங்கள் மலர்வாய்
குவிமலர்த் தேறலின் இனியவளே
கைடபன் மதுவின் கூற்றமும் ஆனாய்
களங்களில் கூச்சலில் களிப்பவளே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 3

(தேறல் – தேன்; களம் - போர்க்களம்)


தீயவர் சிரங்கள் சிதைந்தன நூறாய்
தும்பியர் துதிக்கைகள் வீழ்ந்தனவே!
கயத்தலை கிழிந்திட சமர்க்களம் நுழைந்திடும்
கடிதரிமா தனில் இவர்பவளே!
கயவர்கள் தளபதி கரங்கொண்டு தலைபறி
கவறிட ஏதிலர் கனன்றுநின்றாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 4

(தும்பி,கயம் – யானை; அரிமா – சிங்கம்; கவறுதல்- வருந்துதல்; ஏதிலர் – பகைவர்.)


அமர்க்களம் புகுந்து அரக்கரை அழிக்கும்
அம்மையே, குறையா வீறுடையாய்!
அமலனை அறிவனை பூதங்கள் அடிபணி
அம்மைநின் தூதனாய் அமர்த்தியன்று
இமக்குலக்கொடியே கொடுமதியாளரின்
இழுக்கன்று ஒழிந்திட வழிவகுத்தாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 5

(அமர்க்களம் – போர்க்களம், அமலன், அறிவன் – சிவன்; இழுக்கு – குற்றம்.)


பகைவர்தம் தேவியர் அபயமும் வேண்டிட
பகைவர்க்கும் அருளும் கனிமனத்தாய்!
புகையென சூழ்ந்து மூவுலகாட்டிடும்
புல்லியர் சிரந்துணி சூலங்கொண்டாய்!
தகையென திகையெங்கும் இரலைகள் இமிர்ந்திட
திமிதிமி இமிழென திறல்களும்காண்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 6

(புல்லியர் – தீயவர்; தகை – பெருமை; திகை – திசை; இரலை – ஊதுகொம்பு, துந்துபி; இமிர், இமிழ் – ஒலியெழுப்புதல், ஒலி; திறல் – வெற்றி.)


புகைக்கணான் கயவன் நுக்குநூறாகிட
பிணித்தனை உம் எனும் உரப்பினிலே
கூகைசேர் களத்தில் குருதியில் துளிர்க்கும்
கூடலன் கொடியோன் உயிர்குடித்தாய்
நகைசிவன்நாயகி நனைசெருக்களத்தில்
நிசும்பனை சும்பனை நறுக்கினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 7

(புகைக்கணான் – தூம்ரலோசனன் எனும் அசுரன்; நுக்குநூறு – சுக்குநூறு; உரப்பு – ஒலி; கூகைசேர்களம் – ஆந்தைகள் சேரும் போர்க்களம்; குருதியில் துளிர்க்கும் கூடலன் – இரத்தத்துளிகளில் மீண்டெழும் இரத்தபீசன் எனும் அரக்கன்; செருக்களம் – போர்க்களம்.)

எடுத்தனை சிலையை எதிரிகள் சரிய
எழிலுடல் கைவளை குலுங்கிடவே
தடுத்தனை தமனியச் சரம் சிவந்தழிக்க
தரியலர் தபுகுரல் தாவியெழ
அடுத்தனை நிருதர் நாற்படை நசிய
அமர்க்கள மேடையில் ஆடினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 8


(சிலை – வில்; தமனியச்சரம் – பொன்அம்புகள்; தரியலர் – பகைவர்; தபுகுரல் – மரணஓலம்; நிருதர் – அசுரர், நாற்படை- தேர், யானை, குதிரை, காலாள் எனும் சதுரங்கப்படை.)


அரம்பையர் திதிதெய் திதிதெய் தகதிமி
அவிநய நடமிட அகமகிழ்வாய்
தரங்கமெனத் துகுடத்துகுடத் கடதாகட
தாளம் குதூகலிப்பாய்
மருங்கினில் தக்கிட தகிகிடதிம்திமி
மத்தளம் தொட்டிசை கொட்டிடுதே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 9
(தரங்கம் - இசையசைவு)

சயசய போற்றிகள் சகமெங்கும் ஒலித்திடும்
சகலம் உன் வெற்றியைப் புகழ்ந்திடுமே
சலசல சிலம்புகள் சதிர்நடம் பயின்றிடும்
சங்கரன் சிந்தை கவர்ந்திடுமே
சடசட ஒலியெழ திறன்மிகு பயில்வர்கள்
சதுரிட மகிழிறை பாதிநடீ!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 10

(சதுர் – நடனம்; இறைபாதி – இறைவனில் பாதியான அம்மை; நடி – நடனமாடும் பெண், அம்மை.)

அருள் ஒழுகும் கருணை பொழியும்
இளகும் எளியார்நல் லுளம் கவரும்
மருள் அழியும் ஒளிசேர் குளிரும்
மதிபோல் முகமும் மிளிர் மாயவளே!
விழிமலர்கண்டு வண்டார்த்திடவும் - விஞ்சை
வாழ்நரும் விமலனும் வியந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 11

(விஞ்சைவாழ்நர் – தேவர், விமலன் – சிவன்.)

மல்லிகை போல்வர் மல்லரைச் சமரில்
மாய்த்திடும் களங்கண்டு மகிழ்ந்திடுவாய்!
மல்லிகைக் கொடியென மருள்வண்டு இசையன்ன
படர்ந்திடும் சேனையுன் மருங்கினிலே!
அல்லிமென் அலர்மலர் முறுவலுன் இதழ்களில்
அடியவர் போற்றும்எம் கொற்றவையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 12

மதம்பொழி வாரணம் அயர்ந்து கலங்கிட
மதநடை பயின்றிடும் பேரரசி!
நிதம்கலை எழில்வளம் மூவுலகணிந்திட
நிதம்பணி இமவான் திருமகளே!
பதம்பணி அடியவர் தாபமும் மோகமும்
பலித்திட நகைபுரி மன்மதையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 13

(வாரணம் – யானை)

தாமரையிதழென மாசறு நுதலுடன்
தாயவள் தூயநல் திருவதனம்
மாமலர்நாடும் அன்னங்கள் நாணும்
மாதுநின் ஒயில்பயில் நடையழகும்
தாமம்பூ வகுளம் தூயநல் நீலம்
தேன்நிறை குலவு வண்டார் குழலும்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 14

(வகுளம் – வகுளம்பூ; தாமம் – மலர்; நீலம் – நீர்நீலஅல்லி; குழல் - கூந்தல்)


குயில்பழி கரமமர்குழல் பழிகுரலில்
குவலயம் குளிர்ந்திட குழைபவளே
உயிர் உருக்கிடும் மொழி, மலைமலரடவியில்
உலவுவை புளிஞர்தம் மகளிருடன்
பயில்விளையாடலும் பாடலும் ஆடலும்
பாவையர் நல்லுளம் மகிழ்ந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 15
(கரம் அமர் குழல் - கையிலேந்திய புல்லாங்குழல்; மலைமலரடவி – மலையிலுள்ள பூங்கா, புளிஞர் – புலிந்தர், வேடர்)

மதியொளி மறைத்திடும் துவண்டிடும் இடையில்
மிகுபல நிறத்துகில் மிளிர்ந்திடவும்
மதியென ஒளிர்ந்திடும் பதம்விழும் சுரசுரர்
மகுடத்து மணி விம்ப விரலுகிரும்
பதிவிக்க நாணத்தின் மத்தகம் மலைபொன்
பெருமையின் நிமிர்ந்திட்ட கும்பதனம்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 16

(துகில் – ஆடை; உகிர் – நகம்; மத்தகம் – யானைமத்தகம்.)
அஞ்சலர் ஆயிரம் கரங்கொண்டுன் ஆயிரம்
அழித்திட ஆயிரம் வணங்கினவே
தீஞ்சொலன் தீயோன் சூர்தடி சேயோன்
தேவர்தம் சேயோன் தாயவளே
மஞ்சனோர் சேந்தன் சுரதன்நல் வேந்தன்
மாந்தன் சமாதிக்கும் ஈந்தனையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 17

(அஞ்சலர் – பகைவர்; தீயோன் சூர் – தீய சூரபதுமன்,; சேயோன் –முருகன்; மஞ்சன் – மகன்; சுரதன், சமாதி – அம்பிகை அருள்பெற்ற ஒரு மன்னனும் வணிகனும்,)

கருணையின் உருவென கனிந்திடும் உனகழல்
கமலபதம்நிதம் கைதொழுதார்
திருமகள் பணிந்திட திரண்டிடும் செல்வமும்
கமலையின் உறைவிடம் ஆவரன்றே!
அருள்வடிவாயின அம்மையுன்பாதங்கள்
அடியவன் அறியேன் பரவுமாறே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 18

மெல்லென நகரும் பொன்னனை நதிநீர்
மொண்டுநின் சன்னதி தொழுதெழுவார்
அல்லன அகற்றிடும் அருள்பொருள் போகங்கள்
அடைந்தனர் போல்வரே அன்னைநகில்
நல்லவர்நாடிடும் நாயகி வாணிநீ
நாமகளுந்தன் கழல் சரணம்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 19

(நகில் – மார்பு, கழல் - பாதங்கள்)

நிலவுமுகம் நிறைதூயவகம் நினைவோடுதினம்
நனவாய் நினையும்
நிலவுசுகம் அரர்கோனுலகம் நயவாது
நல்தோகையர் நாடும்சுகம்
மலருமுளம் மடமாதுன்னகம் மகிழாதென்னை
சீவனில் காண்பன் சிவம்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 20

(அரர்கோனுலகம் – இந்திரலோகம், தோகையர் – அரம்பையர்,)

இழிந்தவர்க்கிரங்கிடும் இளகிய உமையே
இவனு(ளு)க்கும் தயைபுரிந்தருள் தருவாய்.
குழைபவர்க்களிக்கும் மறவரை அழிக்கும்
திறமிது என்னை, எம் உலகம்மே!
சூழ்துயர் துன்பங்கள் சுமந்திடும் சிறியேன்
சுவறிடும் தருணமிது அருள்புரியாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 21

(மடுப்பாய் – அழிப்பாய், சுவறுதல் – வற்றுதல் - மறைதல்)

1 comments:

  1. மிகவும் ஆச்சரியமாக ஆனால் வருத்தமாக இருந்தது. உங்கள் தேடல் பல உண்மைகளையும் அழகான மேதியவுணன்கொல்பாவாய் என்ற அழகு தமிழ் பாடல் வரிகளை உருவாக்கவும் காரணமாக இருந்தது. புத்தகமாக வெளியிடுங்கள். 💐💐💐💐🙏🙏🙏🙏

    ReplyDelete

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner