சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்




கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .


அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா?
உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க.

தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம் என்று தமிழ் சின்னத்திரைகளே இதிகாசங்களுக்காக விழுந்தடித்து ஓடும் இந்தக்காலத்தில், நம் மண்ணின் காப்பியமான சிலம்பை பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும் என்று, திரைத்துறையினர் யாருக்கும் தோன்றவே இல்லை என்பது வியப்பளிக்கிறது. இன்றுள்ள VFX - வரைகலை தொழிநுட்ப முன்னேற்றத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க யவன வீரர் நடைபயின்ற புகார்ப்பட்டினத் துறைமுகத்தை, மதுரைக் கூலவாணிகர் வீதியை, ஆரியக் கனகவிசயர் தலையேறி இமயக்கல்லாக அம்மை வந்த சேரநாட்டு வஞ்சியை, காண்பதற்கு, திரைத்துறையில் இருக்கும் ஒரு தமிழனுக்கு கூடவா ஆசை பிறக்கவில்லை?

ஆனால் கேரளப் பண்பாட்டிலும் சிங்களப் பண்பாட்டிலும் இன்றும் கண்ணகி கொண்டாடப்படுகிறாள். வெறும் நான்காண்டுகளுக்கு முன் சிங்களத்தில் கண்ணகி கதை "பத்தினி" என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியிருந்தது. பூஜா உமாசங்கர் தான் கண்ணகி
                                             


பத்தினி திரைப்படத்துக் கண்ணகி, தமிழ் மணிமேகலையும் சிங்கள நம்பிக்கையும் இணைந்த புள்ளியில் இறுதியில் பௌத்தத்தை தழுவுகிறாள் . இப்படி நம் பண்பாட்டு அம்சங்களை சிங்களவர்கள் கொண்டாடினால் நமக்கு எரியத் தொடங்கிவிடும். கதிர்காமம், இராவணன், கண்ணகி என்று பட்டியல் வாசிக்கத் தொடங்கிவிடுவோம்.

கேரளத்திலும் அதே நிலைமை தான். அங்கு கண்ணகி இன்று பகவதி. எனவே தெய்வமாகவும் அகத்துறை நாயகியாகவும் கேரளத் திரையிலும் நாட்டார் மரபிலும் அவள் மீண்டும் மீண்டும் பாடப்படுகிறாள். நந்திதாதாஸ் நடித்த ஒரு மலையாள அவலச்சுவை திரைப்படத்துக்கு பெயர் கண்ணகி. அதில் இடம்பெற்ற "கரிநீலக் கண்ணழகி கண்ணகி" எனும் பாடல் கேட்கும் போதே மனதை உருக்கும்.

                                            





ஆகாசகங்கா எனும் இன்னொரு மலையாள பேய்ப்படத்தில் திருவாதிரக்களி ஆடும் மகளிர் "கோவலனும் கண்ணகியும் ப்ரேமமோடே தம்மில்" என்று சிலம்புக்கதையைத் தான் பாடி ஆடுவார்கள். கேரள திருவாதிரைக்களி நடனம் பற்றி வேறு இடத்தில் விரிவாகப் பேசவேண்டும். அதற்கும் நம் திருவெம்பாவைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

 

இப்படி நம் இரு நெருங்கிய பண்பாட்டுப் பஙகாளிகளுமே ஒரு தமிழச்சியை தலையில் வைத்து ஆடுகிறார்கள். இப்போது தேமே என்று புதினம் பார்த்து அமர்ந்திருந்து விட்டு, நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து ஐயோ பறிபோய் விட்டதே பறிகொடுத்து விட்டோமே என்று குய்யோ முறையோ என்று குமுறத் தான் நாம் லாயக்கு. மரபின் மீது அத்தனை பற்று கொண்டவர்கள் நாம், இல்லையா. 😔

ஆற்றுக்கால் கண்ணகி கோவில் கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. பெண்கள் மட்டும் பொங்கல் வைக்க அனுமதியுள்ள "ஆற்றுக்கால் கும்ப மாச பொங்காலா" உலகிலேயே அதிகளவு பெண்கள் ஒன்றுதிரண்டதாக கின்னஸ் சாதனை படைத்த பெருவிழா. அக்கோவில் மீது நான்காண்டுகளுக்கு முன் பாடப்பட்ட மலையாளப்பாடல் இது. கண்ணகிப் பொன்கனியே. கேட்டுக்கொண்டே இருக்கத்தூண்டும் இனிய குரல். கேரளம் கண்ணகியை இன்றும் எப்படிக் கொண்டாடுகிறது என்பதற்கு சிறிய சான்று இந்தப்பாடல். ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

                                 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner