ஒரே ஒரு உறவு

 


தகுதி இருப்பதால் ஒரு அறிவுரை மட்டும் கூறமுடியும்.

மனம் விட்டு கதைப்பதற்கு ஒரே ஒரு உறவையாவது சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது பெற்றாரோ, உடன்பிறப்போ, நண்பரோ, வாழ்க்கைத்துணையோ, தொழின்முறைத் தோழரோ,  யாராகவும் இருக்கலாம். 

ஆனால் ஒருவர் போதும். ஏன் ஒருவர்? 

பலர் பார்க்க சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை.  பயனின்றி தன்மானம் போவது தான் மிச்சம். சிலரது உள அழுத்தத்தை புரிந்து கொண்டு, பாவம் பார்த்து ஆறுதல் சொல்லப் போய், நான் வீணாக மன அழுத்தத்தில் சிக்கி இருக்கிறேன்.  இன்னும் சிலரை தவறாகப் புரிந்துகொண்டு அவர்களிடம் மனக்குமுறல்களை கொட்டப்போய் தேவையின்றி அவமானமும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். ஒருமுறை நானே நண்பனொருவனின் வேதனையை புரிந்துகொள்ளாமல் அவன் சொன்னதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு இப்போது உண்மை உணர்ந்து குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆறுதலுக்கு சாய்ந்து அழ தோள் தருவார்கள் என்று நம்பி, இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் மாட்டினால் உங்கள் கதை முடிந்தது. உங்கள் வேதனையை பலர் அறிந்து வைத்திருப்பதும் நல்லதல்ல. அது உங்கள் மன அழுத்தத்தை இன்னும் கூட்டலாம்.

எனவே மிகக் கவனமாக அந்த ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் நம்பிக்கையை வென்ற ஒருவர். உங்கள் மன அழுத்தத்துக்கு தீர்வு சொல்லத் தெரியாவிட்டாலும், அப்போதைக்கு  ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லத் தெரிந்த ஒருவர். குறைந்த பட்சம்  விம்மி அழும் உங்களை ஒன்றுமே சொல்லாமல்  தழுவிக்கொள்ளத் தெரிந்த ஒருவர்.

அப்படி ஒருவர் கிடைத்திருந்தால் உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது. அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால், அல்லது அப்படிப்பட்ட ஒருவரே தலையிடியாக மாறினால் வேறு வழியில்லை. கடவுளைப் பிடித்துக்கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கையை. அல்லது காலத்தை. தைரியம் இருந்தால் தொழில்முறை உளவள ஆலோசகர் ஒருவரை. குறைந்தது உங்கள் நம்பிக்கையானவர்  பட்டியலில் இதற்கென்றே இரண்டாம் தெரிவாக இன்னொருவரையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.  நிஜத்திலும் மாய பேஸ்புக் உலகிலும் ஆயிரம் பேரை நண்பர்கள் என்று சம்பாதித்து வைத்திருக்கிறோம். ஒரு இரண்டு பேரை தெரிந்தெடுப்பதா அதில் கடினமான வேலை?

சொல்வதற்கு எளிது தான். எப்போதாவது ஏடாகூடமான எண்ணம் வரும்போது இதெல்லாம் எத்தனை பயனற்ற வழிகள் என்று எனக்கும் தெரியும்.  அப்போது ஒன்றை மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும். கண்ணதாசனின் பொன்னான வரிகள்.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி தேடு. "

காரணம் பல கொண்டு கலங்குவோர் யாவரும் மீண்டு துலங்கியெழ என் அன்பும் பிரார்த்தனைகளும். 

 "எனக்கு மட்டும் ஏன் அத்தனை குறைத்துத் தந்தீர்" என்று புலம்புவோரே! 

அறிக. அமைதி கொள்க. 

"என் தேவனே, எனக்கு மட்டும் ஏன் இத்தனை நிறைத்துத் தந்தீர்?" என்று மன்றாடுவோர்  இங்குண்டு.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner