கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக் காண்பிக்கின்ற பிராந்தியத்தை தான் மட்டக்களப்புத் தேசம் என்கிறார்கள்.


இப்படிச் சொல்வதால், இந்த "கீழைக்கரை" என்ற வரையறை புதியது என்று அர்த்தமில்லை. அந்தப் பண்பாட்டொருமை ஏற்கனவே பல மானுடவியலாளர்களால் தெளிவாக இனங்காணப்பட்டிருக்கிறது. மட்டக்களப்புத் தேசம் என்ற வரைவிலக்கணத்தை விடப் பரந்த அர்த்தத்தில் மார்க் விட்டாகர் (Mark P Whitaker), டெனிஸ் மக்கில்வ்ரே (Dennis B. McGilvray) முதலிய மானுடவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கீழைக்கரை (East Coast) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் வியப்பு என்னவென்றால், கரையோரப்பட்டியில் நெடுக்குவாக்காக மூன்று மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 225 கிமீ தூரம் நீளும் பிராந்தியத்தில் நம்மால் அவதானிக்க முடியும் பண்பாட்டு ஒருமை, வெறும் 20 கிமீ பக்கவாட்டில் கரையோரத்திலிருந்து உள்நோக்கிச் சென்றால் அடியோடு மாறி சிங்களப் பண்பாடாகி விடுகிறது.

நிர்வாக ரீதியில் மட்டக்களப்புத் தேசம் இன்று மட்டக்களப்பு, அம்பாறை என்று இரு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள போதும், அவற்றின் கிராமங்களிடையே மணவுறவும் நட்புறவும் இன்றும் நீடிப்பதன் காரணம் அந்தப் பண்பாட்டொருமை தான். சொல்லப்போனால் இலங்கையின் வேறுபகுதி மக்களால் கூட இந்தப் பண்பாட்டுத் தனித்துவத்தை இலகுவாக வேறுபிரித்தறிய முடிகிறது என்பதை பலருடன் பழகக் கிடைத்த இப்பிராந்தியத்தவர்கள், அல்லது இப்பிராந்தியத்தவருடன் பழகக்கிடைத்த வேறுபகுதி மக்கள் இலகுவில் உணர்ந்துகொண்டிருப்பார்கள்.

இன்றைய ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் வலுவாகப் பேசப்படும், கீழைக்கரைத் தேசியம் அல்லது மட்டக்களப்பு முன்னிலைவாதம் என்பதும் இந்தப் பின்னணியிலேயே உருவாகி வளர்ந்த ஒரு கருத்தியல் தான். தமது பிரதேசம், அது சார்ந்த தனித்தேசியம் முதலிய தன்னுணர்வுகள் உருவாவது எப்போதும், அரசியல் கருதுகோள்களாலோ, திட்டமிட்ட திணித்தல்களாலோ சாத்தியமாவதில்லை. அப்படி திட்டமிட்டு உருவாக்க வேண்டுமென்றாலும், அந்தத் தன்னுணர்வுகளுக்கான வாய்ப்புகள் அல்லது நிகழ்தகவுகள் ஏற்கனவே குறித்த பகுதியில் உருவாகி நீடித்திருக்கவேண்டும்.

இந்தக் கீழைக்கரைத் தேசியத்தை உண்டாக்கி வளர்த்த முக்கிய காரணிகளில் ஒன்று கண்ணகி வழிபாடு என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆம். கிழக்கில் உருவான கண்ணகி இலக்கியங்களில் இப்படிச் சொல்வதற்கான பட்டவர்த்தமான சான்றுகள் கிடைக்கத்தான் செய்கின்றன.

கீழைக்கரையில் தோன்றிய பழைமையான கண்ணகி கோவில்கள் எவை, அவற்றைப் பின்பற்றித் தோன்றிய பிற்காலக் கோவில்கள் எவை என்பது விவாதத்துக்குரிய விடயங்களாக இருக்க, வந்தாறுமூலை முதல் தம்பிலுவில் வரையான கண்ணகி கோவில்கள் தமக்குள் நெருக்கமான பண்பாட்டுத் தொடர்பைப் பேணிவந்திருக்கின்றன. ஒருகோவிலில் உருவான இலக்கியமொன்றைப் பின்பற்றி வேறு கோவில்களில் அதே போல இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றமை, அதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

அடுத்த ஆரோக்கியமான படியாக, ஒரு கண்ணகி கோவிலைப் புகழ்ந்து ஒருவர் இலக்கியமொன்று இயற்றினால், அதன் இறுதிப்பாடல் இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் சகல தலங்களையும் புகழ்வதாக இயற்றப்பட்டிருக்கின்றன. தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவுக் காவியங்கள், இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களைப் பாடுவதைக் காணலாம்.

இப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களை ஒரே தலத்தில் நின்றபடி பாடுவது தேவாரம், திருவாசகம், சேத்திரத் திருவெண்பா என்று திருமுறைகளிலிருந்தே நீடித்து வரும் வழக்கம் தான். ஆனால் கீழைக்கரைக் கண்ணகி இலக்கியங்களைப் பொறுத்தவரை இந்தப் பாடல்கள் எப்போதும் தனது பிராந்தியத்துக்குட்பட்ட தலங்களை மாத்திரம் பாடுவதோடு நின்று கொண்டன. ஒரேயொரு புறநடை யாழ்ப்பாணத்து அங்கணாமைக்கடவை. அது ஏன் என்பதை வேறொரு இடத்தில் விரிவாக ஆராய்வோம்.

என்ன தான் வீடு, ஊர், தேசம் என்று மானுட அகம் சுருங்கியிருந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் பக்குவமடைந்து, அது முழு உலகம் நோக்கி விரிந்து விடுகிறது. தனித் தேசிய வரையறைக்குள் நின்ற கீழைக்கரை கண்ணகி இலக்கியங்கள் ஓரிடத்தில் முழு ஈழவளநாடு நோக்கி விரிந்துகொண்டன. அப்படி பரந்த பார்வை உருவான மைல்கல் தான் ஊர்சுற்றுக்காவியம்.

உடுகுச்சிந்து என்றும் அழைக்கப்படும் ஊர்சுற்றுக்காவியம், விபுலானந்தரைப் பெற்ற காரைதீவு மண்ணிலேயே தோன்றியிருக்கிறது என்பது, அகச்சான்றுகள் மூலம் தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்லிலிருந்து திருக்கோணமலை மாவட்டம் மாகாமம் வரையும், பின்பு அதைத்தாண்டி யாழ். அங்கணாமைக்கடவையையும் கண்டியையும் சேர்த்து, 25 ஊர்களில் குடிகொண்டிருக்கும் கண்ணகியைப் பாடும் ஊர்சுற்றுக் காவியம் கூடவே, கொக்கட்டிச்சோலை சிவன், பொன்னாலைத் திருமால், கதிர்காமக்கந்தன், சரஸ்வதி முதலிய கடவுளரையும் போற்றுகின்றது.

ஊர்சுற்றுக்காவியம் ஓரிடத்தில் ராசசிங்க ராசனைக் குறிப்பிடுவதால், அது கீழைக்கரை கண்டி அரசின் ஆட்சியின் கீழ் நிலவிய பிற்பாதியில் (17 - 18ஆம் நூற்றாண்டுகளிடையே) பாடப்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. அக்காலத்தில் தான் ராஜசிங்கன் என்ற பெயரைக் கொண்ட ஐந்து மன்னர்கள் கண்டியை ஆண்டிருக்கிறார்கள்.

தற்போது கிடைக்கும் ஊர்சுற்றுக்காவியத்தின் உய்வுப் பதிப்பில் (Critical Edition) 72 பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றில் பிறதெய்வங்களுக்குப் பாடப்படும் தனிப்பாடல்களைத் தவிர்த்தால் மொத்தம் 50 பாடல்கள் கண்ணகி மீது பாடப்பட்டவை.

எனினும் இதில் பல இடைச்செருகல்கள் சேர்ந்திருக்கின்றது தெரிகின்றது. ஊர்சுற்றுக்காவியத்தைப் பாடும் மெட்டும் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது. ஊருக்கு ஊர் இது வெவ்வேறு எண்ணிக்கையிலும், பாடல் ஒழுங்கு மாறுபட்ட விதத்திலும் கிடைக்கின்றது. மண்முனையையும் அங்கணாமைக்கடவையையும் பாடும் ஊர்சுற்றுக்காவியப் பாடல்கள் தனிக்காவியங்களாகவும் கிடைத்திருக்கின்றன.

எவ்வாறெனினும் ஊர்சுற்றுக்காவியம், சந்த அழகும் சொல் அழகும் நிறைந்தது. முதன்முறையாக அதைக்கேட்ட வெளியூர் நண்பரொருவர் "இதென்ன திருப்புகழா?" என்று கேட்டார். தமிழுலகு மறந்துவிட்ட காப்பிய நாயகியைப் போற்றுவதாலும், முழு இலங்கை நோக்கி விரிந்த பரந்த பார்வையைக் கொண்டது என்பதாலும், கண்டி அரசு காலத்தில் தோன்றிய பழைமையைக் கொண்டதாலும், எல்லாவற்றையும் விட அதன் சொல்லழகாலும், ஈழத்து தமிழ் இலக்கியங்களில் சிறப்பிடம் வைத்து நோக்கத்தக்கத்து உடுகுச்சிந்து.






களுவாஞ்சிக்குடியில் பாடப்படும் ஊர்சுற்றுக்காவியப் பாடல்கள், அவ்வூரின் பாரம்பரிய மெட்டுடன் இசையமைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் இறுவட்டாக வெளியிடப்பட்டன. அதை நீங்கள் இங்கு கேட்கலாம்.


களுவாஞ்சிக்குடி காவியம் 



தம்பிலுவில் காவியம்




ஊருக்கு ஊர் மெட்டு மாறுபடுவதை ஒப்பிட வசதியாக, களுவாஞ்சிக்குடி காவியத்தின் இறுதிப்பாடலையும், தம்பிலுவில் காவியத்தின் இறுதிப்பாடலையும் இங்கு விழியமாக இணைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் சந்த அழகை இரசிக்க மூன்று பாடல்களின் வரிகளையும் இணைத்திருக்கிறேன்.

ஒற்றை நவ ரெட்ணமணி ஒப்பரிய சுத்தனை
ஒப்பெழு தவப்பெரிய தொப்பைவயி றப்பனை
சித்திரமெ னத்தகுதி யப்பெரிய வெற்பனைச்
சித்தியென அத்திமுக வித்தக மருப்பனை
முத்தகு மெனத்தகு முருப்பான மூர்த்தியை
மூவருக் கருளும்வகை செய்தருளு மூர்த்தியை
மத்தமத மொத்தபனை யொப்பனைய கையனை
மகாகணப திக்கடவுள் தன்னைமற வேனே (01)

இதம்பட இரண்டருகு வேதமிசை பாட
இளங்கமுகு குங்கும குளிங்குமுக மென்ன
சதங்கையொடு தண்டைகள் அலம்பவடி மீதே
சலஞ்சல சலமென்று கோடுகள் ததும்ப
பதங்களொடு தொம்ததோம் தோமென விசைப்ப
பதஞ்சலி வியாக்கிர பதத்துமுனி காணச்
சிதம்பர சிதம்பரவெ னுங்கொடிய வன்கோடு
திரண்டடசி வந்தவினை சிந்தியோ டிடுமே (12)


மட்டுலவு பொற்பரி புரத்தைமது ரைப்பதியில்
மாறுமுயர் செட்டியை வதைத்திட அறிந்தும்
இட்டபெரு மட்டகிரி யைச்சரிசொல் வட்டமுலை
யைத்திருகி விட்டுநகர் சுட்டர சழித்தாய்
பெட்டெனைய கத்தடிமை யைப்பணி விடைக்குதவி
இடைச்சுவடு தன்கிருபை நின்கருணை புரிவாய்
கட்டுட னடக்குமுயர் காரேறு சோலைவாழ்
கண்ணகையை நெஞ்சினில் கருதவினை யறுமே.(34)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner