சித்திரை வருடப்பிறப்பு பிறந்தால் கிழக்கிலங்கை ஊர்களில் ஒருவரை ஒருவர் காணும் போது சுகவிசாரிப்புகளுக்குப் பின்னர் பொதுவாக இரு கேள்விகள் வழக்கமானவை. "எப்பயாம் கதிர்காமக் கொடியேத்தம்?" என்பது ஒன்று. "எப்பயாம் கதவு திறக்குது?" என்பது அடுத்தது. கதவு திறப்பது என்பது, தன் ஊரில் அல்லது அடுத்துள்ள ஊரில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சடங்கு ஆரம்பமாவதைக் குறிக்கும். மற்றைய நாள்களிலெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் கண்ணகி கோவில்கள் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தான், குளிர்த்திச் சடங்கு ஆரம்பமாவதை "கதவு திறத்தல்" என்று சொல்கிறார்கள்.
ஆலய கிழக்கு நுழைவாயில்
ஏனென்றால் கிழக்கிலங்கையில் வைகாசி மாதம் என்பது கண்ணகிக்குரியது. அங்கு அமைந்துள்ள பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் எல்லாம் இப்படி "திருக்குளிர்த்திச் சடங்கு" என்று ஆதுரமாக அழைக்கப்படும் கண்ணகி விழா ஆரம்பமாகும். அங்குள்ள கண்ணகி கோவில்களில் பழமை வாய்ந்ததும் புகழ்மிக்கதுமான கோவில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிழக்கில் கண்ணகிக்காக அமைந்த முதற்கோவில் இது என்பது பொதுவான ஐதிகம். அதற்கும் பல தொன்மங்களைச் சொல்கிறார்கள்.
கண்டிமகாராசன் தன் தலைநகரில் கண்ணகிக்கு கோவில் அமைத்தபோது, அவன் கனவில் தோன்றிய தேவி, "உன் நாட்டில் பக்தி நிறைந்த ஊரிலேயே நான் குடியிருப்பேன்" என்று ஆணையிடுகிறாள். அரசன் அவள் விருப்பத்துக்கேற்ப அம்மனுக்கு ஒரு ஏடகம் (தேர்) செய்து ஊர்வலம் அனுப்புகிறான். அந்த ஏடகம் அம்மன் சொன்னபடி தானாகத் தரித்து நின்ற முதல் ஊர் தம்பிலுவில் என்பது அவற்றுள் முதன்மையான தொன்மம். கீழைக்கரையின் ஏனைய ஊர்களில் அதன்பிறகே கண்ணகி கோவில் கொள்கிறாள். தம்பிலுவில் அம்மன் வழக்குரை காவியம் எனும் நாட்டார் இலக்கியத்தில் வரும் "பக்திசெறி தம்பிலுவில் ஊர்தனிலிருந்து" எனும் வரிகளை இந்த தொன்மக்கதைக்கு ஆதாரமாகச் சொல்வார்கள்.
நேரிழை தன்னொரு கலை நான்கு கலையாகி
நிலவு போலேயுலகில் நிறைபூசை கொண்டு
பாரிலுள்ளோர்களின் நோய்பிணி தவிர்த்து
பக்திசெறி தம்பிலுவில் ஊர் தனிலிருந்து
அரசறியும் அங்கணாமைக் கடவை காரைநகர்
வீரமுனை பட்டிநகர் களுவாஞ்சி மகிழூர்
பேரான கல்முனை கல்லாறெழுந்தருளி
பெருமையுடன் வரமளித்து இனிது காத்தவளே
- அம்மன் வழக்குரை காவியம் 20
இன்னொரு கதையின் படி, தமிழகத்திலிருந்து கொணரப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் கொட்டியாறுத் துறை, இலந்தைத்துறை, கண்டபாணத்துறை எனும் மூன்று துறைமுகங்கள் வழியே கொண்டுவந்து கோவில் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டதாகவும், அவையே இன்றைய சம்பூர் காளி, ஈச்சிலம்பற்று செண்பகநாச்சி, தம்பிலுவில் கண்ணகி என்றும் சொல்கிறார்கள்.
கண்டபாணத்துறை (திருக்கோவில்) வழியே வந்த கண்ணகிக்கு தம்பிலுவிலுக்கு மேற்கே "ஊரக்கைக் கண்டம்" எனும் வயல்வெளியில், வீரைச்சோலை எனும் இடத்தில் அமைக்கப்பட்ட பத்தினி கோவில், பிற்காலத்தில் கைவிடப்பட்டு பாழடைந்துபோனது. சிலகாலத்தின் பின், இன்று ஆலயம் அமைந்துள்ள காரைத்திடல் எனும் இடத்தில் பெண்கள் விறகு பொறுக்கும் போது, பொற்புறாவொன்றைக் கண்டிருக்கிறார்கள். அங்கு கிடைத்த தெய்வக்குறிப்பின்படி, ஊரக்கையிலிருந்த அம்மன் சின்னங்கள் எடுத்துவரப்பட்டு இங்கு புதிய ஆலயம் அமைக்கப்படுகிறது. அக்கோவிலுடன் கண்டியின் நரேந்திரசிங்கன், இராஜசிங்கன் முதற்கொண்டு பல மன்னர்களும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். "தம்பிலுவில் மழைக்காவியம்" எனும் இலக்கியத்தில் இராஜசிங்க மன்னனும் (1629 - 1687) "தம்பிலுவில் அம்மன் பள்ளு" எனும் இலக்கியத்தில் நரேந்திரசிங்க மன்னனும் (1707 - 1739) புகழப்படுவதைக் கொண்டு இந்தக்கூற்றை உறுதி செய்யலாம்.
உண்மையில் கீழைக்கரைக்கு கண்ணகி வழிபாடு வந்தமைக்கு இரு நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று சீதாவாக்கை சிங்களத் தொடர்பு. இதைச் சொல்வது, நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டு எனும் நூல். மதுரைக்குப் போய் கண்ணகியை வழிபட்டு வந்த சின்னத்தம்பிப் போடியார், அம்மன் ஆணைப்படி வோறாகோடைக் கல்லிலிருந்து சிங்களக் கட்டாடியாரைக் கொண்டுவந்து இறக்காமம் கோவில்மேட்டில் கண்ணகி வழிபாட்டை ஆரம்பிக்கிறார். அது அக்கரைப்பற்று பட்டிமேட்டுக்கு இடம் மாறியதையும், அதற்கு பகரமாக காரைதீவில் இன்னொரு கண்ணகி கோவில் தோன்றியதையும் அந்த நூல் சொல்கின்றது.
இரண்டாவது ஆதாரம், யாழ்ப்பாணத்தொடர்பு. போர்த்துக்கேயர் காலத்தில் யாழிலிருந்து இடம்பெயர்ந்த ஒத்துக்குடா கந்தன் என்பவரால் கொணரப்பட்ட ஏழு கண்ணகி விக்கிரகங்கள் வட மட்டக்களப்பில் ஏழு ஆலயங்கள் அமைத்து நிறுவப்பட்டதைச் சொல்லிச் செல்லும் தொன்மம் இது. கீழைக்கரையை கண்ணகியின் மண்ணாக வளர்த்தெடுத்தது இந்த இரண்டாவது அலை தான் எனும் போதும், காலவரிசைப்படி பார்த்தால், இக்கோவில்கள் மேலே சிங்களத்தொடர்பு மூலம் உருவான கோவில்களுக்கு சற்று பிற்பட்டவை. இந்த இரு அறுதியான சான்றுகளுக்கு முன்பும் கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு நிலவியிருக்கிறது என்பதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, கடல் வழியே கண்டபாணத்துறை வந்த தம்பிலுவில் கண்ணகி பற்றிய தொன்மம்.
கோவில்மேடு என்ற இடமே இனங்காணமுடியாதபடி இப்போது முற்றாக மறைந்துவிட்டது. எனினும் பட்டிமேடு, காரைதீவு என்பவற்றோடு ஒப்பிட்டால், தம்பிலுவில் ஆலயம் அல்லது அதற்கு முன்னோடியான ஊரக்கை பத்தினி கோவில், காலத்தால் முந்தியது என்பதற்கும் இரு மறைமுக சான்றுகள் கிடைக்கின்றன.
முதலாவது பட்டிமேடு மீது பாடப்பட்ட பொற்புறா வந்த காவியம். அந்த இலக்கியம், பொற்புறா வடிவில் வந்த நாகமங்கலை அம்மன் (கண்ணகி) குடியேறிய ஊர்களை தம்பிலுவில், இறக்காம நகர், காரைதீவு, பட்டிமேடு என்று தான் வரிசைப்படுத்திப் பாடுகிறது.
அடுத்தது, காரைதீவுக் கோவில் உருவான தொன்மத்தில் சொல்லப்படும் தேவந்தியம்மையார், ஊரவர்களுடன் முரண்பட்டு அம்மன் சிலையுடன் புறப்பட்டு தற்காலிகமாகத் தங்கிய இடமாக தம்பிலுவில் அம்மன் கோவில் சொல்லப்படுகிறது. இந்த இரு கதைகளும் பட்டிமேட்டுக்கும் காரைதீவுக்கும் முன்பு தம்பிலுவில்லில் அம்மன் கோவில் இருந்ததை வாய்மொழிச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் போதுமானவை.
கோட்டை அரசன் ஆறாம் விஜயபாகுவால் 1520ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இலங்கையின் முக்கியமான தமிழ்க்கல்வெட்டுகளுள் ஒன்றான "தம்பிலுவில் கல்வெட்டு" இந்தக் கோவிலில் தான் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு திருடுபோன தங்க மாங்கனி, விசயபாகு மகாராசா கொடுத்தது என்பதும் இங்குள்ள ஐதிகம். (இலங்கைத் தமிழ் - சிங்கள மரபுரைகளின் படி, கண்ணகி பாண்டியன் மாளிகையில் மாங்கனியாகத் தோன்றியவள்.)
எனவே தம்பிலுவில் கண்ணகி ஆலயத்தின் காலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது சரியாகக் கூடும். எது எவ்வாறெனினும், இக்கோவில் கீழைக்கரையில் எழுந்த தொன்மையான கண்ணகி ஆலயங்களுள் ஒன்று என்பதையேனும் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.
தம்பிலுவில் அம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ள மடாலயம் ஆகும். கேரளப்பாணியில் ஓடு வேய்ந்து கலசம் பொருத்திய கருவறைக் கூரை, இக்கோவிலின் தனித்துவம். அதன் அழகை முழுமையாகக் கண்டு இரசிக்க முடியாதபடி அண்மையில் கொங்கிரீட்டில் படாடோபமாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுமண்டபம் நம் பொறுமையைச் சோதிக்கின்றது.
கேரளப்பாணி ஓட்டு மடாலயமும் பழைய நாகதம்பிரான் பரிவார சன்னதியும்
2007 - 08களில்.
(படம்: கணேசமூர்த்தி பவணன்)
கருவறையில் உள்ள மூலவர் சிலை ஒன்றரையடி உயரமானது. ஐம்பொன்னாலானது. அள்ளிமுடிந்த கொண்டையும் ஒரு கையில் பத்திரக்கொத்தும் அரைவிழி மூடிய திருமுகமுமாக எழிற்காட்சி தருவது. (பத்திரக்கொத்து என்றால் வேப்பங்குழை. பத்திரக்கொத்துக்கு இங்கு அம்மன் வழிபாட்டில் முக்கிய இடம் உள்ளது). அதன் அருகே அஞ்சல், அருளல், பத்திரக்கொத்து, சிலம்பு என்பன தாங்கிய நான்கு திருக்கரங்களுடன் அம்மனின் சிறிய எழுந்தருளி மூர்த்தம் வீற்றிருக்கிறது. ஆனால் சடங்கு காலத்தில் மூன்றாவதாக, பத்திரக்கொத்தும் கமுகம்பாளையும் வைத்து அலங்கரிக்கப்படும் அம்மன் முகக்களையிலேயே அவள் எழுந்தருள்வதாக நம்புகிறார்கள். வீதியுலா, ஊர்வலம் எல்லாவற்றிலும் எழுந்தருளிக்கு முன்புறமாக அம்மன் முகக்களை உலாப்போவது வழமை.
வாய்கட்டி சடங்குப்பூசை செய்யும் கப்புகனார்.
முகக்களை, மூலவர், எழுந்தருளியின் அருட்காட்சி. 2012
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)
இந்தக் கருவறையும் நடுமண்டபமும் விழாக்காலங்கள் தவிர்ந்த நாள்களில் பூட்டப்பட்டே இருக்கும். நடுமண்டபக் கதவுக்கு முன்னே அம்மனின் ஓவியம் எழுதிய திரைச்சீலை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தற்போது செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இடம்பெறும் வாராந்தப் பூசைகள் இந்த அம்மனின் திரைக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் - வெள்ளிப் பூசைகள் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வழக்கங்கள் தான். அதற்கு முன், கோவிலுக்குள் என்ன; கோவில் வளாகத்துக்குள்ளேயே யாரும் நுழையமாட்டார்கள். "வருசத்துக்கொருகால் பூசை வௌவால் உறையும் கோவில்" என்பது கீழைக்கரையின் கண்ணகி வழிபாடு தொடர்பாக பிரசித்தமான பழமொழி. தம்பிலுவில் கோவிலுக்கு முன்புறமாக அமைந்துள்ள ஆலமரங்களில் இன்றும் பெருந்தொகையான வௌவால்களைக் காணலாம்.
அம்மன் கோவிலைச் சூழவர பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் ஆகிய மூன்று "பரிகலத்" தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலின் இரண்டாம் வீதியில் எட்டுத் திசைத்தேவர்களுக்கான பலிபீடங்களும் காணப்படுகின்றன. கோவிலுக்கு கிழக்கே பழைய கிணறு அமைந்திருக்கிறது. பீடைநாசினிகள் கண்டறிய முன்னர், வயல்களில் களைகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த உள்ளூர் விவசாயிகளால் பயன்பட்ட மருந்து இந்தக் கிணற்றின் நீர் தான். இன்றும் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக நம்பப்பட்டு இக்கிணற்று நீரில் நீராடி அடியவர்கள் அம்மையை வணங்கி வழிபடுவதுண்டு.
தம்பிலுவில் ஊர் மக்கள் அவர்களது குல அடையாளங்களின் வழியே வடசேரி, தென்சேரி என்று இரு சேரிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். கண்ணகி அம்மன் கோவில் இதில் தென்சேரிக்கு பாத்தியதைப்பட்டதாகும். வடசேரியின் குறித்த பிரிவு மக்களுக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் நிருவாக உரித்து இருந்தது. அதற்கு மேலதிகமாக கீழைக்கரையின் பாரம்பரிய விளையாட்டான கொம்புமுறியை நிகழ்த்துவதற்காக, "சாமி கோவில்" சகல வடசேரியாருக்கும் உரித்துடையதாக இருந்தது. கண்ணகி அம்மன் கோவிலுக்கு வடக்கே 100 மீ தொலைவில் அமைந்திருந்த வடசேரிக் கோவில், கொம்புமுறி அருகிப்போன கடந்த நூற்றாண்டின் இறுதியில் சித்திவிநாயகர் கோவிலாக மாற்றம் கண்டுவிட்டது. தற்போது இன்னொரு சிறிய வடசேரிக்கோவில், சித்திவிநாயகர் கோவிலின் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கொம்புமுறி விளையாட்டுக்காக அமைந்த புதிய வடசேரிக் கோவில்
புதிய வடசேரிக் கோவில் மூலவர்
சாமி அல்லது கோவலன்
தென்சேரியை சேர்ந்த ஏழு குடிகள், பதினொரு பாகைகளாகப் பிரிக்கப்பட்டு இக்கோவில் நிர்வாகத்தில் பங்குவகிக்கின்றன. கோவிலை நிர்வகிக்கும் மற்றும் சடங்கை மேற்பார்வை செய்யும் மட்டக்களப்பின் பழம்பெரும் பதவியான "வண்ணக்கர்" பதவி, கட்டப்பத்தன் குடிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கோவிலின் பூசகர் "கப்புகனார்" என்று அழைக்கப்படுவதுடன், அவர் மழுவரசன் குடியிலிருந்தே தேர்வு செய்யப்படுவார். இவர் முன்பு மட்டக்களப்பின் ஏனைய கண்ணகி கோவில்கள் போல "கட்டாடியார்" என்று தான் அழைக்கப்பட்டிருக்கிறார். 17ஆம் நூற்றாண்டில் இந்த அம்மன் மீது மழைக்காவியம் பாடிய பூசகர் தன்னை "கட்டாடி கண்ணப்பன்" என்றே குறிப்பிடுவதைக் கொண்டு இதை உய்த்துணரலாம்.
கட்டப்பத்தன் குடியுடன் மேலும் கோரைக்களப்புக் குடி, சிங்களக்குடி, வேடக்குடி, அறுபதுமுன்னங்கைச் சவடி குடி, குருக்கள் குடி, ஆகிய ஐந்தும் விஸ்வப்பிரம குலத்தினரும் இணைந்து நிர்வாகத்தில் ஏழு குடிகளை அமைக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பு இப்படி தென்சேரிக்கு வரையறுக்கப்பட்டிருந்தாலும், இன்று வடசேரியில் அடங்கும் ஏனைய குடியினரும், நேர்த்தி வைக்கும் பல ஊர் மக்களும், ஏன் மாற்று மதத்தவர்களும் கூட இக்கோவில் வழிபாட்டில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
கண்ணகிக்கென நிகழும் குளிர்த்திச் சடங்கு, அவள் மதுரையை எரித்த பின்னர் அடியவர்களால் குளிர்விக்கப்பட்டு சீற்றம் தணிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐதிகத்துடன் தொடர்புடையது. பேச்சுவழக்கில் "குளுத்தில்" என்பார்கள். கோடை மிகுகின்ற காலமான வைகாசியில், இயற்கையை தாய்த்தெய்வமாக உருவகித்த ஆதிமனிதனின் மனது, அந்தத் தாய்த்தெய்வத்தை இரந்து வேண்டி குளிரக் கோரிய பழங்குடிச் சடங்கின் தொடர்ச்சியாக குளுத்திலைக் காணலாம்.
கீழைக்கரையின் கண்ணகி கோவில்களில் குளுத்திலானது, அவற்றின் மரபைப் பொறுத்து இரு நாள்களில் இடம்பெறுகிறது. ஒன்று, வைகாசி மாத முழுநிலவு நாள். இரண்டாவது, வற்றாப்பளை கோவிலோடு ஒத்துப்போகும் வண்ணம், வைகாசி முழுநிலவை நெருங்கி வரும் ஒரு திங்கட்கிழமை. தம்பிலுவில்லின் குளித்தில் இதில் இரண்டாவது வகைக்குரியது. "வைகாசித் திங்கள் வருவோமென்று மாதுமையாளும் வரங்கொடுத்தாள்" எனும் பழம்பாடல் வரியொன்றை இதற்கு ஆதாரம் காட்டுகிறார்கள்.
குரவையும் தண்ணுமையும் ஒலிக்க திறக்கிறது திருக்கதவு, 2017
(விழியம்: இராஜரெட்ணம் நர்த்தனன்)
குறித்த திங்கட்கிழமைக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவிலில் கதவு திறக்கப்படும். இதில் கப்புகனார் அம்மனைக் குற்றம் குறை வாராமல் வேண்டி பழிகிடத்தல், வண்ணக்கரை திறப்புக்கொத்துடன் வீட்டிலிருந்து அழைத்துவரல் உள்ளிட்ட பல மரபுகள் உண்டு. கதவு திறந்து ஏழு நாளும், கோவில் பெண்களின் குரவையால் நிரம்பியிருப்பது இக்கோவிலின் அழகு. இந்நாட்களில் கோவிலுக்கு வரமுடியாதவர்களுக்காக அம்மன் தெண்டலுக்கு போதல் என்றோர் வழக்கமுண்டு. இளஞ்சிறுவன் ஒருவனை அம்மன் போல் அலங்கரித்து வீடுவீடாகப் போய் காணிக்கை சேகரித்து வீட்டாருக்கு திருநீறு கொடுத்து ஆசீர்வதித்து திரும்புவார்கள்.
அம்மன் தெண்டல்
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)
கதவு திறந்ததிலிருந்து குளித்தில் வரை அம்மனுக்கு "மடைப்பெட்டி கொடுப்பது" வழக்கம். நெல், கமுகம்பாளை, வெற்றிலை, பாக்கு வைத்து, ஊருக்கு வந்திருக்கும் அம்மாளுக்கு உபசாரமாகக் கொடுக்கப்படும் பெட்டி தான் மடைப்பெட்டி. நேர்த்தி வைத்தவர்கள் மடைப்பெட்டியுடன் சேர்த்து தென்னம்பிள்ளை, சேலை, நகை, கற்பூரச்சட்டி, அடையாளங்கள், முதலியவற்றையும் கொடுப்பதுண்டு. இந்த எல்லா நாட்களும் மடிப்பிச்சை, அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி, காவடி நேர்த்திகள் என்று கோவில் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும்.
மடைப்பெட்டி கொடுத்தல்
கண்ணகி வழக்குரை பாடுதல்
(விழியம்: இராஜதுரை கீதன்)
இரண்டாம் நாளிலிருந்து தினமும் மதியச்சடங்கு பூசையும், இரவுச்சடங்கு பூசையும் என இருவேளை பூசை நிகழும். இரவுச்சடங்குக்குப் பின் அம்மன் திருவீதியுலாவும் இடம்பெறும். தினமும் கண்ணகியின் வரலாற்றைப் பாடும் "கண்ணகி வழக்குரை" எனும் நாட்டார் இலக்கியம் பாடப்படுவது வழமை. சடங்குப்பூசை முடிந்ததும் வழங்கப்படும் பாணக்கம் தான் இக்கோவிலின் முக்கியமான பிரசாதம். பாணக்கம் வாங்குவதற்கு அடியவர்கள் விளையாட்டாக முண்டியடிப்பார்கள். பாணக்கம் என்று இங்கு சொல்லப்படுவது மா,பலா, வாழை, பேரீச்சை, சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் தான்.
இரவுச்சடங்கில் திருவுலாச் செல்லும் அம்மன் முகக்களையும் எழுந்தருளியும்.
(விழியம்: இராஜதுரை கோகுலகீதன்)
குளுத்தில் சடங்கில் முக்கியமான நாட்கள் இறுதி இரு தினங்களான ஞாயிறும் திங்களுமே. ஞாயிறு மதியச்சடங்கு கலியாணக்கால் நாட்டும் சடங்காகும். கண்ணகி வழக்குரையில் அன்றைக்குப் பாடவேண்டிய பாடல்கள் நிறுத்தப்பட்டு, கோவலன் - கண்ணகி திருமணப்பாடல்களே பாடப்படும். இளநீர்க் குரும்பைகள், பட்டுச்சேலைகள், முத்துமாலைகள் கொண்டு இளங்கன்னியும் அவளது நான்கு தோழியரும் போல கல்யாணக்கால்களை அலங்கரிப்பது மரபு.
கல்யாணக்கால் அலங்காரம்
அன்று அம்மன் ஊர்வலம் வரும் நாள். அன்றிரவு ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏடகத்தில் வரும் அன்னையை சந்திக்கு சந்தி அலங்காரப் பந்தல்கள் கட்டி வீட்டுவாசல்களில் நிறைகுடம் வைத்து வரவேற்பார்கள். ஊரின் முக்கியச் சந்திகளில் "பள்ளுக்கு வளைதல்" எனும் கலையாடல் நிகழ்வதுண்டு. தென்னோலையை எரித்து அதைச்சுற்றி அம்மன் பள்ளு எனும் இலக்கியத்தைப் பாடி ஆண்கள் கைகொட்டி ஆடுவது தான் பள்ளுக்கு வளைதல். இது அம்மனுக்கு கண்ணூறு கழிப்பதற்காகச் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
அம்மன் ஊர்வலம்
(விழியம்: ஜனகன் சுந்தரமூர்த்தி)
பள்ளுக்கு வளைவது இப்படித்தான்.
இது கொம்புமுறியில் எடுக்கப்பட்ட விழியம்
திங்கள் இரவு வைகாசிப்பொங்கல். நேர்த்தி வைத்தவர்கள், கோவில் வளாகம் முழுதும் பானை வைத்துப் பொங்குவார்கள். அன்றிரவு நள்ளிரவு கடந்தபின்னர் குளுத்தில் ஆரம்பமாகும். கப்புகனார் சேலையில் மறைத்தபடி அம்மனைக் கொணர்ந்து "குளுத்தில் சட்டி"யில் வைக்க, நியமிக்கப்பட்ட அடியவர்கள் இருவர், "குளிர்த்திக்காவியம்" பாடுவார்கள். அதிகாலை வேளைக்குரிய நிசப்தமும், அரிவையரின் குரவையூடே அம்மானைக்காய்கள் சிணுங்குவதும், சிலம்பு கிலுக்குவதும், அசாதாரணமான உளநிலைக்கு நம்மை இட்டுச்செல்லும்.
குளுத்தில் - பணிமாறல் - தீர்த்தம் தெளித்தல்
விழியம்: Battinews.com
குளுத்திலாடி முடிந்ததும் "பணிமாறல்" எனும் சடங்கு இடம்பெறுவதுண்டு. அம்மனுக்கு நேர்த்தியாக வந்த மூன்று சேலைகளை அடுத்தடுத்து உடுத்து, கப்புகனார், சிலம்பு கிலுக்கியபடி வலம்வருவார். குற்றம் குறை ஏதுமின்றி அவ்வாண்டுச் சடங்கை தான் ஏற்றுக்கொண்டேன் என்று அம்மன் சொல்வதன் அடையாளமாக பணிமாறலை அடியவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
இறுதியாக அம்மன் குளுத்திலாடிய மஞ்சள் நீர் அடியவர்கள் மீது தெளிக்கப்பட்டு பொங்கல் பிரசாதம் வழங்கப்படுவதுடன் அவ்வாண்டுச் சடங்கு இனிதே நிறைவுறும். இறுதியாக கதவு அடைத்தல் எனும் மரபுடன், வண்ணக்கரை ஊர்வலமாக அவர் வீட்டுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், அன்றைய மரபுகள் முடிவடைந்து விடுகின்றன. பின்னர் மூன்று நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமையன்று நிகழும் "வைரவர் மடை" எனும் சடங்குடன் கோவில் மீண்டும் உறங்குநிலைக்குச் செல்கிறது.
குளுத்தில் என்பது ஒரு கொண்டாட்டம். ஒரு பண்டிகை. பொங்கல், சித்திரைக்குக் கூட புத்தாடை தரிக்காதவர்கள், இதற்கென குடும்பமாக புத்தாடை வாங்கித் தரித்துக்கொள்வதைக் காணலாம். ஊரில் மங்கல நிகழ்வுகளோ அமங்கல நிகழ்வுகளோ இந்நாள்களில் நிகழ்த்தப்படாமல் தள்ளிப்போடப்படுகின்றன. குறித்த காலவேளையில் யாரும் மரித்தால், அவருக்குரிய ஈமக்கிரியைகள் கூட முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. அந்த மரணத்தில் அம்மனே கலந்துகொண்டு அவர் ஆன்மாவைச் சிவலோகம் சேர்ப்பதாக நம்பிக்கை என்பதால், பூதவுடலை அகற்றும் வரை, கோவிலில் சடங்குகளும் நிகழ்த்தாமல் ஒத்திவைப்பார்கள். வைகாசி பொதுவாக திருமணத்துக்கான மாதம் என்பதால், குளுத்தில், தம் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் - பெண் பார்க்கும் மையமாகவும் விளங்கியது. சுயதொழில், சிறுதொழில் முனையும் உள்ளூரார் தம் உற்பத்திகளை காட்சிப்படுத்தவும், அதன்மூலம் குறைந்தபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவிய குளுத்தில், சமூகத்தின் பொருளாதார ஊக்குவிப்பு அலகாகவும் விளங்கியது என்பதைக் காணலாம்.
இப்படி சமூக ஒருங்கிணைப்பு மையமாக ஊருக்கு ஊர் தொழிற்பட்ட குளுத்தில், தம்பிலுவில்லில் மாத்திரமல்ல; இவ்வாண்டு கிழக்கிலங்கையின் சகல கண்ணகி கோவில்களிலும் சோபையிழந்தபடியே இடம்பெறுகிறது. வேறொன்றுமில்லை. கொரோனா அச்சுறுத்தல் தான். அடியவர்கள் கூடுவதில், திருவுலா நிகழ்த்துவதில், ஊர்வலம் செல்லுவதில், அனைத்திலும் கட்டுப்பாடுகள், வரையறுத்தல்கள். கோவிலுக்குள் நிர்வாகத்தினர் தவிர பொதுமக்களும் அடியவரும் நுழைவதில் இறுக்கமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்படி நுழைபவர்களும் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தூண்டப்படுவதுடன், சமூக இடைவெளியைப் பேணவும், இயன்ற விரைவில் கோவிலை விட்டு நீங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையில் கண்ணகி கோவில்கள் பல இப்போது பலத்த மரபு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. பல கோவில்களின் பூர்வீகமான மடாலய அமைப்பு, தற்போது மாற்றமுற்று ஆகமவிதிப்படி கோபுரமும் விமானமும் எழுந்து பூசனை முறைகளில் மாற்றம் கண்டுவிட்டன. கதவு திறத்தல் என்பதே இல்லாமலாகி, இப்போது நித்திய நைமித்திய பூசைகள் இடம்பெறும் ஆலயங்களும் ஏராளம். கும்பாபிஷேகம், சங்காபிஷேகம் என்பன சில கோவில்களில் இப்போது வழக்கமாகி இருக்கின்றது. எஞ்சிய காணிக்கைகளை என்ன செய்வதென்று தெரியாமல், பழமைவாய்ந்த அரிய கட்டிடங்களை இடித்தும் திருத்தியும் புதுக்கியும் மடங்களைக் கட்டியும் பணத்தை வீணே செலவழித்து வருகிறார்கள். காலத்துக்கேற்ப மாறவேண்டும் என்று சொல்லி மாற்றப்படுகின்ற எல்லாமே தேவையான - மாற்றக்கூடாத மரபுகளாக இருக்க; பேணப்படவேண்டும் என்று வரையறுக்கப்படுகின்ற மரபுகளெல்லாமே காலத்துக்கொவ்வாத - தூக்கியெறியப்பட வேண்டிய மரபுகளாக இருக்கின்றன.
உதாரணத்துக்குச் சொல்லப்போனால், கண்ணகி கோவில்களில் இடம்பெறும் அதிகாரப் போட்டிகளும் சமூக உட்பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் ஊன்றி நோக்கத்தக்கவை. இந்த ஜனநாயக யுகத்தில், கோவில் உறுப்பினர்கள், வேறு யாருக்கும் இடம் தராமல், தங்கள் ஆயுட்காலம் முழுவதும், நிரந்தரமாக நிர்வாகப் பதவிகளை வகிக்கலாம் என்பது போன்ற மரபுகள் இன்றைய இளந்தலைமுறையினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
தமிழ்ப்பண்பாட்டில் அம்மன் கோவில்களுக்கும் இயற்கை - செயற்கைப் பேரிடர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அம்மன்கள் சீற்றம் மிகுந்தவர்கள் என்பதாலேயே, நித்திய வழிபாடுகளின்றி அவர்களை ஆண்டுக்கொருமுறை மட்டும் அழைத்து வழிபட்டு, பின் வழியனுப்பி வைப்பதாக ஐதிகங்கள் சொல்கின்றன. பல நாட்டார் தெய்வங்கள் கொள்ளைநோய்களை உருவாக்கியவை. பின் பக்தியால் இரங்கி கொள்ளைநோய்களிலிருந்து அடியவர்களைக் காத்ததாகவும் நாட்டார் தொன்மங்கள் நிலவுகின்றன. கண்ணகி கூட மதுரையை அழித்தவள் தான். அப்படி இருக்க, ஒரு ஊர் என்றன்றி, ஒரு பெரும்பிரதேசத்தில் நவீனக் கொள்ளைநோயால் அம்மனுக்கு வருடத்துக்கொருமுறை இடம்பெறும் பூசை கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருப்பதை பாமர மனது எவ்வாறு எடுத்துக்கொள்கிறது?
ஒருபுறம் இதை வழிபாட்டுரிமை மீதான மறுப்பாகக் காண்பவர்களும் இல்லாமலில்லை. அம்மன் வழிபாடே நோய்களிலிருந்தான பாதுகாப்புக்கானது எனும் போது, ஒரு கொள்ளைநோய்க்கு அஞ்சி பொதுமக்களுக்கு வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுப்பது அநீதி என்கிறார்கள் அவர்கள். "நோயிலிருந்து தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், இவர்களது இறைபக்தி என்பது வெறும் வெளிவேஷம் தானா?" என்பது இத்தரப்பினர் ஆவேசமாக முன்வைக்கும் கேள்வி.
இப்படி ஒரு தரப்பினர் கொதிக்க, இன்னொரு தரப்பினர் இந்தக் கொள்ளைநோயையும் அம்மனின் கோபமாகவே காண்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. சில கோவில்களில் நாகம் யாரையும் உள்ளே விட மறுத்து வாசலில் பழிபடுப்பதாக சொன்னார்கள், இன்னும் சில கோவில்களில் கருவறைக்குள் பிள்ளை அழும் சத்தம் கேட்பதாகக் கதை பரவியது. மரபுரைகளின் படி, பிள்ளை அழும் சத்தம் அம்மனுக்குப் பிடிக்காத ஒன்று. ஆக. இந்தத் தரப்பினர் சொல்வதன்படி, இவ்வாண்டு சடங்கில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அம்மனே விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளாள். அல்லது இவ்வாண்டுச் சடங்கை வழமை போல் சீரும் சிறப்புமாகக் கொண்டாட விரும்பாத அளவுக்கு அவள் கோபமாக இருக்கிறாள்.
நாட்டார் வழிபாட்டின் இயக்க சக்தியே தெய்வத்தை தங்களைப் போல் ஆசாபாசங்கள் நிறைந்த ஒன்றாகக் கருதிக்கொள்வது தான். கொரோனா போன்ற வெளி அச்சுறுத்தல்களை விட மோசமாக அதிகாரப்போட்டி, கௌரவ முரண்கள், சமஸ்கிருத மேல்நிலையாக்கம் முதலிய அக அழுத்தங்கள், தமிழ் மரபு மாறாத பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. சீற்றம் கொள்ளாமல் அவள் என்ன தான் செய்வாள்? இயற்கைச் சீற்றங்கள் மூலம் அவள் சொல்லும் செய்தி ஒன்றே. அவளாக முற்றழிக்கமுன் நாமாகத் திருந்திக்கொள்வது நல்லது.
(தினகரன் பத்திரிகையின் 2020.06.03 இதழில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். பத்திரிகைக் கட்டுரையைப் படிக்க இங்கு அழுத்துங்கள்.)
0 comments:
Post a Comment