மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு

 படம்: ishafoundation.org

“படம்பக்கா!”

அழகன் கூப்பிட்டதற்கு அந்தப் பக்கம் பதிலே வரவில்லை.
“அடேய் படம்பக்கா… உன்னைத் தான்!”
“…………”
அழகனுக்கு ஆத்திரம் வந்தது.
“ சொந்தப் பெயரைக்கூட மறந்துவிட்டாயோ? உன்னைத் தான் அழைக்கிறேன் படம்பக்கா! பெயரைப் பார் படம்பக்கன் - குடம்பக்கன் என்று... ஒழுங்கான தாய் தகப்பன் இருந்தால் தானே ஒரு பெயர் வைப்பதற்கு” அழகன் முணுமுணுக்கும் போதே, அந்தப் பக்கம் குரலைச் செருமும் சத்தம் கேட்டது.
“உம்!”
அந்த உங்காரத்தில் தொனித்த மெல்லிய கோபம் அழகனுக்கு புரியாமல் இல்லை.
“எதற்காக இந்தக் கோபம்? ஏன் என்னோடு பேச மறுக்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. இதில் என்ன தவறு?”
அழகன் சிணுங்கினான்.
படம்பக்கனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஒரு பெண்ணை மணக்க விரும்புவதில் எந்த தவறும் இல்லையடா அழகா… ஆனால், ஏற்கனவே ஒருத்தியை மணந்து தவிக்கவிட்டு இங்கே இன்னொருத்தியை ஏமாற்றி மணக்க முயல்கிறாய் பார், அதுவும் என் வீட்டு வேலைக்காரியை ஏமாற்றப் பார்க்கிறாய் பார், அதுதான் தவறு!” படம்பக்கன் குரலில் தெரிவது பொய்க் கோபமா, என்ன?
“நீ வேறு! ஊரில் உலகத்தில் இல்லாததையா நான் செய்யப் போகிறேன்? இரண்டுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் வாழும் இந்த பூமியில் இரண்டு பெண்களை மணப்பது அப்படி என்ன குற்றம்? மனைவியை தவிக்கவிட்டு இங்கு வந்தேன் என்றெல்லாம் புருடா விடாதே. எனக்கு அவள் ஒரு கண் என்றால், இவள் இன்னொரு கண். இரண்டையும் பொத்திப் பொத்திப் பாதுகாப்பேன்!” அழகனும் விட்டுக் கொடுக்கவில்லை.
“ஓகோ! கண்! கண்! ஹாஹா!” ஏதோ பிறகு நடக்கப் போவதை உணர்ந்தவன் போல படம்பக்கன் பெரும் சத்தமிட்டு சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்.
“இந்தக் கவிதைக்கெல்லாம் குறைச்சல் இல்லை! உன் பேச்சுக்கு நான் வேண்டுமானால் மயங்கலாம். எல்லோரும் மயங்குவார்கள் என்று எண்ணிவிடாதே. குறிப்பாக உன் உள்ளங்கவர் கள்ளி ஒற்றியூர் நாச்சி. தன் துணையின் வாழ்க்கையில் மூன்றாமவர் பங்குபோட்டால் ஆண்கள் எப்படி கொதிப்பார்களோ, அதை விட மோசமாக பெண்கள் ஆவேசம் கொள்வார்கள் என்பதை மறந்துவிடாதே!” படம்பக்கன் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
“ஆமாம். இவர் மட்டும் ஏதோ ஏகபத்தினி விரதன் போல அறிவுரை கூறுகிறார்! நீ கூட ஒருத்தியை மணந்துவிட்டு, இன்னொருத்தியை தலையில் வைத்துக் கூத்தாடுகிறாயே. அது மட்டும் நியாயமாக்கும்.”
அழகன் முடிப்பதற்குள் படம்பக்கன் பேச்சை இடைவெட்டினான். “அழகா!”
“உடலிச்சையை பூர்த்தி செய்ய உன் போன்றோர்க்கு பூக்கும் காமத்துடன் என்னை ஒப்பிடாதே. காமம், காதல் இதையெல்லாம் கடந்தவன் நான்." படம்பக்கனின் மறுமொழியில் இலேசான சூடு தெரிந்ததால், அழகன் பேச்சை மாற்றமுற்பட்டான்.
“அதை விடு! இப்போது என்ன தான் சொல்லவருகிறாய்? உன் தோழனின் காதலுக்கு உதவப்போகிறாயா இல்லையா?”
படம்பக்கன் அழகனை ஒருகணம் ஏறிட்டு நோக்கினான். பின் மறுபக்கம் பார்வையைத் திருப்பிச் சொன்னான். “செய்து தொலைக்கிறேன்… என்ன மாதிரி உதவி வேண்டும் உனக்கு?”
அழகன் வெட்கத்துடன் தரையில் கால்களால் கோலம்போட்டான். “நான் அவளை நேசிப்பதை அவள் அறிவாளாம். அவளும் என்னை நேசிக்கிறாள் என்று அவளது தோழி சொன்னாள்."
“ஓஹோ… தோழியைக் கூப்பிட்டு செய்தி சேகரிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டீர்கள்… அப்புறம் என்ன?”
படம்பக்கனின் கேலியை அழகன் இரசிக்கவில்லை.
"ஆனால், ஏற்கனவே எனக்கு மணமான விடயத்தை யாரோ ஒற்றியூர் நாச்சியிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அப்படி நான் அவளை மணக்கக் கோரினால் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்று என்னிடம் அவள் சத்தியம் வாங்கப் போவதாக அவள் தோழி சொன்னாள். இப்போது நான் அவளை மணப்பது உன் கையில் தான் இருக்கிறது!”
“ம்ம்! சொல்… நான் என்ன செய்யட்டும்?”
“அது வந்து… படம்பக்கா… ஒற்றியூர் நாச்சி உன் வீட்டு வேலைக்காரி அல்லவா...? தன் எசமானான உன் வீட்டின் முற்றத்தில் தான் அவள் என்னிடம் சத்தியம் வாங்கப் போகிறாள்.. அப்போது…”
“அப்போது?”
“நீ உன் வீட்டில் இருக்கக் கூடாது!”
“இருக்காவிட்டால்?”
“கோபித்துக் கொள்ளாதே! உன் முன்னிலையில் சத்தியம் செய்தது போல் நானும் செய்வேன்! நீ அங்கு இருந்தால் தானே சத்தியம் செல்லுபடியாகும்?”
“அழகா!”
படம்பக்கனின் குரலில் உஷ்ணம் கூடியது.
“உன் சுயலாபத்திற்காக இந்தப் படம்பக்கனை பொய்மைக்குத் துணைபோகச் சொல்கிறாயா? மெய்மையே உருவெடுத்தவன் என்று உலகம் போற்றும் என்னை - இந்தப் படம்பக்கனை - வஞ்சகத்திற்கு உடன்படச் சொல்கிறாயா?”
“படம்பக்கா!”
இப்போது அழகனின் கன்னங்களில் நீர்முத்துக்கள்!
“தந்தை தாயையும் பிரிந்து வந்தேன். எனக்கு தந்தை தாய் நீயேயென்று நம்பினேன்… நட்பையும் மீறி உன் மீது எனக்குள்ள அன்பின் மீது ஆணை! என்னைக் கைவிட்டுவிடாதே!”
படம்பக்கன் ஒன்றும் சொல்லவில்லை. அழகன் தொடர்ந்தான்:
“எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பதும், உன் புகழ் பாடிக்கொண்டே இருப்பதும் தான் எனக்கு இன்பம்… நாச்சிக்கு சத்தியம் செய்து இங்கேயே தங்க நேர்ந்தால், அயலூர்களில் நீ சென்று தங்கும்போது உன்னைக் காணாது என்னால் இருக்கமுடியாது! இது வெறும் தன்னலமல்ல… உன்மீது நான் கொண்ட அன்பின் – நட்பின் காரணமாகத் தான் இந்த சூதுவேலை!”
அழகன் குரல் தழுதழுத்தது. கருணையே வடிவான படம்பக்கன் உள்ளமும் கரைந்துவிட்டது. அழகனின் திட்டத்துக்கு ஒத்துக் கொண்டான்.
“உன் வேண்டுகோளை ஏற்று என் வீட்டில் அன்று இருக்கமாட்டேன். போதுமா. ஆனால் ஒன்று. நாச்சி என்னைத் தேடிப் பிடித்து என்முன் சத்தியம் வாங்கிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது."
உண்மைதான்! அந்த நாச்சியும் அவ்வளவு இலேசுப்பட்டவள் போல் தெரியவில்லை. படம்பக்கனோடு எனக்குள்ள நெருங்கிய உறவும் அவளுக்குத் தெரியாமல் இருக்காது… என்ன செய்யலாம்? அழகன் சிந்தித்தான்.
“உன் வீட்டின் வலது புறமுள்ள மகிழமரம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. பெரிதாக அந்தப்பக்கம் யாரும் வருவதுமில்லை. கொஞ்சநேரம் அதன்பின் சென்று ஒளிந்துகொள்ளேன்!”
படம்பக்கன் புன்னகையுடன் உடன்பட்டான். அவனுக்கு நன்றி சொல்லி மிக்க மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினான் அழகன்.
படம்பக்கன் ஏதோ எண்ணியவனாக சற்று சத்தமிட்டு தான் சிரித்தான்.
"பல்லைக் காட்டும் வேலை அழகனோடு இருக்கட்டும். உங்கள் நண்பரின் திட்டத்துக்கு உடன்படுவதென்றால் இன்றைக்கு நீங்கள் வீட்டுக்கு வெளியில் தான் தூங்கவேண்டும்." படம்பக்கன் திடுக்கிட்டு திரும்பினால் அங்கு நின்று கொண்டிருந்தாள் வடிவுடையாள். "ஓகோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டாயா?"
"கேட்டேன் கேட்டேன். அநத அப்பாவிப் பெண் ஒற்றியூர் நாச்சியின் வயிற்றிலடிப்பதற்கு அழகனும் அவனது பைத்தியக்கார நண்பன் படம்பக்கனும் திட்டம் போடுவதை காது குளிர கேட்டேன்"
படம்பக்கன் தலையைச் சொறிந்தான். சரியாகப் போயிற்று. இன்றைய ஊடலுக்கு காரணத்தை பிடித்து விட்டாளா?
"அன்பே. இப்போதைய நாடகத்தில் எனக்கு நகைச்சுவை நடிகன் வேடம். கதாநாயகனின் காதலுக்கு உதவாவிட்டால் உலகம் தூற்றும். எல்லாம் சுபமாகத் தான் நடக்கப்போகிறது. எப்படியென்று கேளேன்" அன்போடு தன் நாடியைப் பிடித்த படம்பக்கனின் கைகளைத் தட்டிவிட்டாள் வடிவுடையாள் "கையை எடுங்கள்." படம்பக்கன் பெருமூச்செறிந்தான். "கணவன் - மனைவி என்று வந்துவிட்டால் எனக்கே இந்தக்கதி தான் என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா."
"அங்கே என்ன புறுபுறுப்பு? ஒரு பெண்ணின் வாழ்க்கை நாசமாக நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். அழகன் அவளை பிரியவே கூடாது. அவன் அவளிடம் செய்யும் சத்தியம் பலிக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்வதென்றால் மட்டும் என்னிடம் வாய் திறவுங்கள்." அவள் திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
"ஹஹா. காதல் என்று சொல்லி ஒரு பெண்ணின் வாழ்வை அழிப்பதற்கு நான் என்றுமே ஒத்துக்கொள்ள மாட்டேன். வடிவு. என்ன நடக்கிறதென்று உனக்கு நாளை புரியும். இதோ கிளம்பிவிட்டேன்"
வடிவுடையாள் திரும்பிப் பார்த்து எங்கே என்று புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.
"ஒற்றியூர் நாச்சி வீட்டுக்கு தான்" படம்பக்கன் இதழ்களில் குமிண்சிரிப்பு. என்ன நடக்கப் போகிறது என்பது வடிவுடையாளுக்கு புரிந்தது. அதுவரை நடித்துக் கொண்டிருந்த பொய்க்கோபம் விலக குறும்புச் சிரிப்பு சிரித்தபடி நடந்தாள் அவள்.
---------------------------------------------------------------
விடிந்தது. படம்பக்கனின் அரண்மனையை ஒத்த அந்தப் பெரும் வீடு அல்லோலகல்லோலப் பட்டது. மண்டபக் கதவு சாத்தியே இருந்தாலும், பணியாட்கள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி வேலைசெய்து கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் பாட்டு. மறுபக்கம் கூத்து. ஒரு மூலையில் அன்னதானம். இன்னொரு மூலையில் முந்திய நாளுக்கான படம்பக்கனது வீட்டு வரவு செலவை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் கருவூலக் கணக்கர்கள்.
இது எதையுமே கவனிக்காமல் முற்றத்தில் நுழைந்த அழகனின் கண்கள், நாச்சியையே துழாவித் தேடிக் கொண்டிருந்தன.
“ஆகா. அதோ வருகிறாள். பூவே பூந்தட்டை ஏந்தி வருகிறது. என்ன அழகு. எத்தனை அழகு. திலோத்தமை, ஊர்வசி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் விட அழகிகளை என்னால் படைக்கமுடியும் என்று கங்கணம் கட்டித் தான் நான்முகன் இவளைப் படைத்தானோ. ஓ. என் மனைவி ஆரூர் மடவாள். ச்சே அவளை ஏன் இப்போது நினைக்கிறேன்.. எத்தனை ஆரூர் மடவாளைச் சேர்த்தாலும் இவளது அழகுக்கு ஈடாகாது! அழகு, அழகை மீறிய நாணம், நாணத்தை மீறிய அடக்கம், பெண்மையின் இலக்கணமே வடிவெடுத்து வந்த்தோ! அட, என்னைத் தான் ஓரக்கண்களால் பார்த்தபடி செல்கிறாள்.. ம்கூம்… இனியும் தாமதிக்கக் கூடாது!” அழகன் நாச்சியை நெருங்கினான்.
“பெண்ணே! உன்னுடன் கொஞ்சம் பேசலாமா?”
“சொல்லுங்கள்!”
அவள் தாழ்த்திய விழிகளை உயர்த்தவில்லை.
அவள் குரல் அவனை என்னவோ செய்தது. நினைத்தவுடன் எதுகை மோனை என்று கவிதையாகக் கொட்டும் அவனது நாக்கு குளறி ஒட்டிக்கொண்டது. கொஞ்சநேரம் அழகனால் ஒன்றுமே பேசமுடியவில்லை. நாச்சி சில கணங்களின் பின் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு வார்த்தை வரவில்லை. சொல்லிவிடுகிறேன் கேள். நேற்று உன்னைக் கண்டதிலிருந்தே என் வசமிழந்தேன். உன்னை மனதார நேசிக்கிறேன். நாணத்தை விட்டுக் கேட்கிறேன்..என்னை மணந்துகொள்கிறாயா?”
சட்டென இப்படி அழகன் கேட்டதும், நாச்சி அப்படியே நின்றாள். அவள் இதழ்கள் பிரிந்து ஒட்டும் ஒலியும் இதயம் துடிக்கும் ஒலியும் அருகில் நிற்பவர்களுக்கும் கேட்டது. அவள் ஒன்றும் சொல்லாமல் தலைமுடியை நீவி காதின் பின் சொருகிவிட்டு மெல்ல நகர்ந்தாள்.
“எங்கே செல்கிறாய்? எனக்குப் பதில் சொல்லமாட்டாயா?”
நாச்சியின் மெல்லிய பாதங்கள், சிலம்பொலிக்க வீட்டின் வெளிப்புறமாகச் சென்றுகொண்டிருந்தன. அழகன் குறுக்கே சென்று இடைமறித்தான்.
“நில் பெண்ணே! தமிழ் பொங்கி நர்த்தனமாடும் என் சொற்கள் உன்னைக் கண்ட நொடி முதல் திக்குமுக்காடுகின்றன. என்னையே நான் மறந்தேன், உன் சம்மதம் ஒன்றையே வேண்டுகிறேன்..”
நாச்சியோ நிற்காமல் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.”மன்னிக்கவும் ஐயா. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. ஊரவர் தான் நேற்றிலிருந்து உங்களை ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஊரூராய்ச் சென்று எங்கள் தலைவர் படம்பக்கரின் புகழ்பாடுபவர் நீங்கள் என்கிறார்கள். ஆனால், நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பின்புலமென்ன, ஒன்றுமறியாமல் தங்களை எவ்விதம் அடியேன் மணப்பேன்? தங்களுடன் ஏற்படும் மண உறவு எதிர்காலத்தில் எனக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடாதல்லவா?”
அவளது யாழைப் பழிக்கும் இன்குரல், குரலிலிருந்த மென்மை, அதில் ஓடிய காதல்... எல்லாம் அழகனைத் தன்வசம் இழக்கச் செய்தது.
“இல்லை பெண்ணே! உன் தலைவன் படம்பக்கனின் நெருங்கிய தோழன் நான். நிச்சயமாக ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்கமாட்டேன். உன்னை மணந்தபின் வேறெங்கும் செல்லமாட்டேன். உன்னுடனே தங்கிவிடுகிறேன்!”
நாச்சியின் நடையின் வேகம் குறைந்தது!
“இதை நான் நம்பலாமா?”
“நிச்சயம் நம்பலாம்!”
“என்னை மணந்தால் என்னை விட்டுப் பிரியவே மாட்டீர்கள்”
“மாட்டேன்!”
“பிரியும் சூழ்நிலை வந்துவிட்டால்?”
“வராது!”
“எந்த சந்தர்ப்பத்திலும்?”
“நன்றாகக் கேள்! நீயே என்னை விரட்டினாலும், ஏன், உன் எசமானன், அந்தப் படம்பக்கனே சொன்னாலும் உன்னைப் பிரியேன்!”
ஒற்றியூர் நாச்சி அங்கேயே சடாரென நின்று திரும்பினாள்.
“அப்படியானால் இங்கேயே இப்பொழுதே எனக்கு வாக்குக் கொடுங்கள்! படம்பக்கர் மீது ஆணையாக எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் என்னைப் பிரியமாட்டேன் என்று!” நாச்சியின் அழகிய கைகளிலொன்று, அழகனை நோக்கி நீண்டது.
அழகனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “அப்பாடா, ஒத்துக் கொண்டாளே! நல்லவேளை, படம்பக்கன் வீட்டில் இல்லை” திருப்தியுடன் வாக்குக் கொடுக்க, கையைத் தூக்கிய அழகனின் கண்கள் ஒருகணம் இடப்புறம் சென்று வந்தன. அழகன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான். அவனது மகிழ்ச்சி, போன இடம் தெரியவில்லை! அவன் நாச்சியுடன் நின்றுகொண்டிருந்தது, முந்தியநாள் படம்பக்கனுடன் பேரம்பேசிய அதே மகிழமரத்தடி!
அழகனின் நாக்குழறியது. “ஏன்… எதற்கு இந்த இடத்தில்…? படம்பக்கனின் வாசலிலேயே….. வைத்துக் கொள்ளலாமே… இங்கு…. ஏன்?”
“வாக்குத் தானே தரப்போகிறீர்கள்… அதை எங்கு தந்தால் தான் என்ன?”
“இல்லை… படம்பக்கன் முன்னிலையில் வாங்கி…??!!”
“தாங்கள் தயங்குவதைப் பார்த்தால்... என்னை மன்னித்துவிடுங்கள் ஐயனே! இந்த அடியவளுக்கு தங்களை அடையும் ஊழ்வினை இல்லை! நான் போய் வருகிறேன்!” ஒருகணம் தயங்கிய அழகன் அடுத்தகணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“நில் பெண்ணே நில்! விதிப்படி நடக்கட்டும்! உனக்கு நான் உடன்படுகிறேன்.
சங்கிலி…. உன் தலைவன் - என் தலைவன் திருவொற்றியூர் படம்பக்க நாதன் மீது ஆணை! எக்காரணம் கொண்டும்,எதற்காகவும் உன்னைப் பிரியேன்..
“ஒற்றியூர் உறையும் இந்த ஆரூரனின் ஆருயிர்த் தோழன் தியாகேசன் மீது ஆணை! இந்த ஒற்றியூர் எல்லையை இனிச் சுந்தரன் தாண்டமாட்டான்!”
நாச்சியின் - சங்கிலி நாச்சியாரின் திருக்கரங்களை அழகனின் - சுந்தரனின் - சுந்தரமூர்த்தி நாயனாரின் - கைகள் பற்றிக் கொண்டன. திருவொற்றியூர் படம்பக்க நாதர் ஆலய மணி கணீர் கணீர் என ஒலித்தது. மகிழம்பூக்களை உதிரவிட்டு மெதுவாக வீசிய காற்றில் ஆடியது மகிழமரம். ஈசன் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது சுந்தரருக்கு!
“எல்லாம் உன் லீலை தானா! திட்டமிட்டே சங்கிலியை இங்கே வரவழைத்து அவள் விருப்பப்படியே உன்முன் வாக்குப் பெற வைத்துவிட்டாயே! இனி எப்படி நான் வேறு தலங்களுக்குச் சென்று உன்னை தரிசிப்பது? உன் புகழ் பாடுவது?
போகட்டும்! நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே! என்னை ஏமாற்றினாலும் நான் உனக்கே அடியவன்.. நல்லதோ தீயதோ, என் வினைகளைக் கழுவ நீயிருக்கும்போது எனக்கென்ன அச்சம்? எனக்கென்ன கவலை?” சுந்தரர் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடித்திறந்தார். தன் காலில் வீழ்ந்தெழுந்த சங்கிலி நாச்சியை அரவணைத்துக் கொண்டார். செய்தியறிந்து அவர்களிருவரையும் சூழ்ந்து கொண்ட அடியவர் கூட்டம் மகிழ்ச்சிக் குரல் எழுப்பியது. ஐந்தெழுத்தை உச்சரித்து பதிகம் பாடியவாறே, ஈசன் சன்னதியை நாடிச் சென்றுகொண்டிருந்தார் சுந்தரர்!
அன்று ஒருநாள் எங்கும் நிறைந்தவன் என்ற பெருமையைத் தள்ளி, வெறும் மகிழமரத்தில் குடிகொண்டிருந்த திருவொற்றியூர் படம்பக்க நாதர், அருகிலிருந்த வடிவுடை நாயகியைப் பார்த்தார். இதழ்களில் அதே குமிண்சிரிப்பு. தூரத்தே கேட்டுக் கொண்டிருந்த சுந்தரரின் தேவாரத் தமிழமுதத்தை மகிழமரத்தடியில் கொணர்ந்து கொட்டிக்கொண்டிருந்தான் வாயுபகவான்.
"பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே!!"
_________________________________
இது 2013ஆமாண்டு நான் எழுதிய ஒரு கதை. பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதையின் பேசுபொருள் பற்றி பிறகு விரிவாக எழுதவேண்டும். சொல்கிறேன்.
🙂

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner