காலம் மறைத்த ஒரு காப்பியக்கோவில்

யாழ்ப்பாணத்தின்  வலிகாமம் மேற்கு பகுதியில் சண்டிலிப்பாய்க்கு  அருகே அமைந்துள்ள ஒரு ஊருக்கு மாசியப்பிட்டி என்று பெயர். அதை மாகியப்பிட்டி என்றும்  சொல்வார்கள்.அந்தப்பெயர் என் கருத்தைக் கவர்ந்த  ஊர்ப்பெயர்களில் ஒன்று. ஏனென்றால் சிங்களத்தில்  தமிழ்த் திசைச்சொற்கள் வந்து சேரும் போது சகரம் ஹகரம் ஆவது வழமை. சந்தி - ஹந்தி. சொதி - ஹொதி, இப்படிப் பல உண்டு. ஆனால் சகரம் ககரமாகத் திரியும் இலக்கண விதி ஈழத்தமிழுக்கும் பொருந்துமா என்று சிந்திக்கவைத்த பெயர்களில் ஒன்று இது. மாசியப்பிட்டி - மாகியப்பிட்டி.  

மாகியப்பிட்டிக்கு மிக அருகே தான் பிரசித்தமான பௌத்தத் தொல்லியல் மையமான கந்தரோடை அமைந்திருக்கிறது.  யாழ் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரம். 

இந்தக் கட்டுரையாசிரியன் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்துக்கு  அடுத்தமுறை போகக் கிடைக்கும்  போது,  மாகியப்பிட்டிக்குப் போகவேண்டும் என்பது அவன் திட்டம். மாகியப்பிட்டிக்கா? காரணம் இருக்கிறது. அதற்கு முதல் ஒரு விடயம் சொல்லவேண்டும்.

ஒரு  தெய்வத்தை புகழ்ந்து பாடும் போது அத்தெய்வம் கோவில் கொண்ட எல்லாத் தலங்களையும் பாடுவது தமிழ் மரபில் வழக்கமான ஒன்று. அந்த மரபை கிழக்கிலங்கையில் கடந்த முந்நூறாண்டுகளில் எழுதப்பட்ட பல கண்ணகி இலக்கியங்களிலும் காணலாம்.   கீழைக்கரையின் கண்ணகி இலக்கியங்களெல்லாம், ஒரு தலம் மீது பாடப்பட்டவை எனினும், தங்கள் இறுதிப்பாடல்களில் தங்களுக்கு அருகே அமைந்துள்ள ஏனைய கண்ணகியின் தலங்களையும் புகழ்ந்தபடி நிறைவுறுகின்றன. தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், செட்டிபாளையம் அம்மன் காவியம், பட்டிமேட்டு ஊர்சுற்று காவியம், உடுகுச்சிந்து,  முதலிய  இலக்கியங்களை இதற்கு  உதாரணமாகச் சொல்லலாம்.

இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பல தலங்களை இந்த ஒன்றுக்கு மேற்பட்ட கோவில்களின் பட்டியலில் மீண்டும் மீண்டும் காணமுடிகின்றது. உடுகுச்சிந்தில் மட்டும் திருக்கோணமலையின்  நீலாப்பளை, மாகாமம் மற்றும் கண்டி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் பத்தினியர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.  ஆனால் அந்த மண்ணில் தோன்றிய கண்ணகி இலக்கியங்களில், கிழக்கிலங்கைக்கு வெளியே அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள ஆலயம் ஒன்றே ஒன்று தான். அங்கணாமைக்கடவை.

அங்கணாமைக்கடவை பற்றி தம்பிலுவில் அம்மன் காவியம், பட்டிமேட்டு அம்மன் காவியம், மண்முனை அம்மன் காவியம், குயில் வசந்தன், ஊர்சுற்றுக்காவியம் ஆகிய ஐந்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  25 தலங்களில் வீற்றிருக்கும் கண்ணகியைப் பாடும் எழுபத்திரண்டு பாடல்கள் கொண்ட ஊர்சுற்றுக் காவியத்தின் நான்கு பாடல்கள் அங்கணாமைக்கடவையைப் புகழ்கின்றன.

 மாகியப்பிட்டிக்கு போகும் ஆசை இருந்தது என்று சொன்னேனே, அதற்குக் காரணம் ஒன்று தான்.  கீழைக்கரை கண்ணகி இலக்கியங்கள் பாடும்  அங்கணாமைக்கடவைக் கோவில் அங்கு தான் அமைந்திருக்கிறது. இன்று அதன் பெயர் சண்டிலிப்பாய் மாகியம்பதி கந்தரோடை அங்கணாக்கடவை ஸ்ரீ மீனாட்சி கண்ணகை அம்பாள் ஆலயம்.  மீனாட்சிக்கே இன்று கூடிய முன்னுரிமை இருக்கும் போதிலும், மக்கள் வழக்கில் கண்ணகையம்மன் கோவிலாகவே அறியப்படுகிறது.


அங்கணாக்கடவை மீனாட்சி கண்ணகி அம்மன் ஆலயம்

நாவலர் காலத்து சைவ எழுச்சியின் பின்னரான மேனிலையாக்கத்துடனேயே  அங்கணாக்கடவையில் மீனாட்சி வழிபாடு, ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் அங்கு மீனாட்சியையும் கண்ணகியையும் இணைத்து ஒரு மரபுரை, இவ்வூருக்கு அருகே அமைந்துள்ள அளவெட்டி வெளிவயல் முத்துமாரியம்மன் கோவிலில் வழங்குகிறது. 

முன்பொருமுறை கடும் வரட்சி நிலவிய காலத்தில் முக்காடு போட்டு வெள்ளைச்சீலை உடுத்த மூன்று பெண்கள் தாகத்துக்குப் பசும்பால் கேட்க, அங்கு வயல் உழுதுகொண்டிருந்த ஒரு உழவனின் பால்வற்றிய மாட்டில் பால் சுரந்ததாகவும், அவர்களின் ஆணைப்படி அவன் எறிந்த மூன்று எலுமிச்சைக்கனிகள் விழுந்த இடங்களில் மூன்று கோவில்கள் எழுந்ததாகவும் கதை செல்கின்றது. இரண்டு எலுமிச்சைகள் விழுந்த மாகியப்பிட்டியில் கண்ணகியும் மீனாட்சியும் கோவில் கொண்டனராம்.  வெளிவயலில் மூன்றாமவள் முத்துமாரி.

இன்னொரு கதையின் படி, சேரநாட்டில் கண்ணகி அருள்பெற்று யாழ்ப்பாணத்தின் மாதகல்லில் இறங்கிய கயவாகு மகாராசன் அனுராதபுரம் சென்றபோது, கண்ணகிக்கென அமைத்த முதற்கோவில் அங்கணாக்கடவை. மதுரையை எரித்த பின் மனம் வெதும்பி இலங்கை வந்த கண்ணகி ஐந்துதலை நாகவடிவில் நயினாதீவு வந்ததாகவும், அங்கிருந்து களையோடை, சீரணி, கந்தரோடை வழியாக நாகர்கோவில் வரை சென்றதாகவும் இன்னொரு தொன்மம் செல்கிறது.  
 
யாழ் குடாநாட்டின் ஒரேயொரு ஆறான  வழுக்கையாறு,   அங்கணாக்கடவையை அடுத்து ஓடி அராலியில் கடலில் கலக்கிறது. அதற்கு கண்ணகி வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புண்டு.  கண்ணகி ஐந்துதலைப் பாம்பாக மாறி வழுக்கிச் சென்ற பாதை அது தான்  என்பது தொன்மம். அதன் இருகரையிலும் பல நாகதம்பிரான் கோவில்கள் அமைந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். கிழக்கிலும் கண்ணகி நாகத்தோடு இணைத்து தான் சொல்லப்படுகிறாள். கீழைக்கரையில் கண்ணகியின் ஆதித்தலங்களாகச் சொல்லப்படும் தம்பிலுவில்லிலும் பட்டிமேட்டிலும் அவளுக்குப் பெயரே "நாகமங்கலை" என்பது தான்.

கடந்த பெப்ரவரி மாதம் வேறொரு தேவைக்காக யாழ் சென்றிருந்த போது, அக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கோவிலின் முன்புறம் வழுக்கையாறும், சுற்றிவர மரங்களும் என்று கோவில் அழகாகத் தான் அமைந்திருக்கிறது. வெயிலேறத் தொடங்கிய பொழுது. நாங்களும் கோவிலுக்குள் நுழைய அர்ச்சகரும் கோவிலைப் பூட்ட நேரம் சரியாக இருந்தது.   நிலைமையை விளக்க அர்ச்சகர் பின்கதவை பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். நாங்கள் விட்ட தவறு, அவர் தொடர்பிலக்கத்தையோ, நிர்வாகத்தார் யாருடைய தொடர்பிலக்கத்தையுமோ பெற்றுக்கொள்ளவில்லை. இல்லாவிட்டால் இக்கட்டுரைக்குத் தேவையான மேலதிக தகவல்கள் பல கிடைத்திருக்கக்கூடும். 

ஒரே வளாகத்தில் கண்ணகிக்கும் மீனாட்சிக்கும் அருகருகே கோவில்கள். மீனாட்சியின் கோவிலை நோக்கித் தான் பிரதான வாசல். கண்ணகிக்கும் ஒரு சிறிய நுழைவாயில் இருந்தது. கோவிலில் இப்போதும் திருப்பணி வேலைகள் இடம்பெறுகின்றன. மீனாட்சி அம்மன் சன்னதி ஓரளவு வலம் வந்து வணங்கும் அளவு இருக்கிறது. ஆனால் கண்ணகி கோவில் பற்றை மண்டிக்கிடந்தது. அறிவித்தல் பலகையில் இருந்த அறிவித்தலொன்றில் குளிர்த்தி என்ற சொல்லைக் காணமுடிந்தது. அது கிழக்கில் இன்றும் கண்ணகி வழிபாட்டில் முக்கியமான சொல். 



சரி. வடக்கில் பல கண்ணகி கோவில்கள் இருக்க, அங்கணாமைக்கடவை மட்டும் ஏன் கிழக்கில் போற்றப்பட வேண்டும்? அதற்கு இரண்டு ஊகங்களை முன்வைக்கலாம். 

முதலாவது ஊகம், கிழக்கில் நிலவும் ஒத்துக்குடா கந்தன் பற்றிய தொன்மத்துடன் தொடர்புடையது. போர்த்துக்கேயர் காலத்தில் இடம்பெற்ற சமய ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி, ஏழு அம்மன் விக்கிரகங்களை எடுத்துக்கொண்டு நாடார் குலத்தவரையும் தன் குடும்பத்தவரையும் அழைத்துக்கொண்டு ஒத்துக்குடா கந்தன் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வந்ததாகவும், தகவல் பரிமாறலில் ஏற்பட்ட தவறால், அவரை போர்த்துக்கேய உளவாளி என்று அஞ்சி கண்டியரசனின் ஆளுகையின் கீழிருந்த மண்முனை அரசன் கொன்றதையும் அத்தொன்மம் விவரிக்கின்றது. 

பின்பு அவர் கொணர்ந்த ஏழு விக்கிரகங்களும் வட மட்டக்களப்பில் ஏழு இடங்களில் கோவில் கொள்கின்றன. அந்த ஏழு தலங்களும் எவை எவை என்பதற்கு இன்று சரியான தரவு இல்லை. பிற்காலத்தில்  இந்த கோவில்களிலிருந்து இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் பிரிந்த தரப்பினர் தங்கள் புதிய அல்லது பூர்வீக இடங்களில் தனிக்கோவில்கள் அமைத்திருக்கிறார்கள்.  இன்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆரையம்பதிக்கும்  மகிழூருக்கும் இடைப்பட்ட, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் எழுவான்கரையிலும் படுவான்கரையிலும் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்த ஏழு தலங்களின் பின்னணியில் எழுந்தவை ஆகலாம். 

ஏழுகோவில் தொன்மத்தில் சொல்லப்படும் கந்தனின் சொந்த ஊரான ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் எங்கிருந்தது என்பது இன்று தெரியவில்லை . ஆனால் அங்கணாக்கடவைக்கு கிழக்கில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை சிந்தித்து, ஒத்துக்குடாவானது அங்கணாமைக்கடவைக்கு அருகாக  வழுக்கையாற்றின் கரையில் அல்லது அராலிப்பகுதியில் அமைந்திருந்த ஏதேனும் பழைய ஊர்  என சந்தேகிக்கலாம்.

எனினும் இதை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அங்கணாமைக்கடவையை முன்னிலைப்படுத்தும் தம்பிலுவில் மற்றும் பட்டிமேடு கோவில்களுக்கு ஒத்துக்குடா கந்தன் தொன்மத்துடன் நேரடித் தொடர்பேதும் இல்லை.

எனவே அடுத்த இரண்டாவது ஊகத்தைப் பார்த்தோமானால், கயவாகு தொன்மம் சொல்வது போல, இலங்கையில் எழுந்த முதல் கண்ணகி கோவில் அது ஆகலாம். இலங்கை முழுவதும், வற்றாப்பளைக்குச் சமனான, அல்லது வற்றாப்பளையை விட அதிகமான முக்கியத்துவம் ஒருகாலத்தில் குடாநாட்டு அங்கணாமைக்கடவைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே  மட்டக்களப்பில் உருவான கண்ணகி கோவில்களெல்லாம், அதை ஆதி கண்ணகி தலமாக போற்றி தங்கள் தங்கள் இலக்கியங்களில்  பதிவு செய்து வைத்திருக்கின்றன.


இந்த இரண்டாவது ஊகம் தான் சரி என்றால், இன்று அங்கணாமைக்கடவை கோவிலின் இன்றைய நிலையைப் பார்த்து நாம் பரிதாபம் மட்டுமே படமுடிகின்றது. 

வரலாற்றின் செல்திசை புரிந்துகொள்ளமுடியாதது. தெய்வங்களே அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைவதுண்டு. ஒரு காலத்தில்  கண்ணகியின் மண்ணாக விளங்கிய யாழ்குடாநாடு, இன்று அவளை பெருமளவு மறந்து நிற்பது காலத்தின் விபரீதச் சிரிப்பு என்றால், கிழக்கிலங்கை வரை புகழ்பெற்று பாடல் பெற்ற  பழம்பெரும் கண்ணகி கோவிலொன்று, இன்று அடையாளமிழந்து கேட்பாரற்று  உருத்திரிந்து நிற்பது தான் இன்னொரு சோகம். எளிய மானுடர்கள் நாம். ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடியும். 


கோவிலை விட்டு வெளியேறும் போது ஆற்றாமையுடன் அவள் கோவிலை திரும்பிப் பார்த்தேன். அங்கணாமைக்கடவையாள் ஓவியமாக அப்போதும் புன்னகைத்துக்கொண்டு தான் இருந்தாள். இந்தக் கணக்கெல்லாம் உன்னைப் போன்ற சிறியவர்களுக்குப் புரியப்போவதில்லை என்று சொல்லியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டேன்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner