பெரியசாமியின் கப்பல்


பாற்சேனை பெரியசாமி கோவில்


 "பெரிய சாமி கோவில் நாளையோடு முடிகிறது. போகிறேன். வரப்போகிறீர்களா?"

போன கிழமை, அலுவலகத்தில் பணி முடிந்து கிளம்புகையில் நண்பர் ஒருவர் வந்து இப்படி சொன்னதும் நான் வியப்படைந்தேன்.

"பெரியசாமியா? அது யார்?"

"பெரியசாமி தெரியாதா? அந்தக்கோவில் பாற்சேனையில் இருக்கிறது. இப்போது திருவிழா. கொரோனாவால் இந்த முறை சிறப்பாக இருக்காது. ஆனால் சும்மா போய் வரலாம். வருவதென்றால் வாருங்கள்."

பெரியசாமி, பாற்சேனை முதலிய பெயர்கள் விந்தையாகவும் ஆர்வமூட்டுவனவாகவும் இருந்தன. கரும்பு தின்னக் கைக்கூலியா? மறுவார்த்தை பேசாமல் புறப்பட்டுவிட்டேன்.

திருக்கோணமலை மாவட்டத்தின் தெற்கே பாயும் வெருகல் கங்கையுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஆரம்பிக்கிறது. அங்குள்ள எல்லைக் கிராமம் கதிரவெளி. கதிரவெளிக்குத் தெற்கே மூன்று கிமீ பயணித்தால் பாற்சேனை கிராமம். பழைமை வாய்ந்த ஊர்களில் ஒன்று தான். அங்கு கடலோரமாக அமைந்திருக்கிறது பெரியசாமி கோவில்.

கோவில் ஆரவாரமாகத் தான் இருந்தது. சூழ்நிலை நல்லபடி இருந்திருந்தால் கூட்டம் இன்னும் அதிகம் என்பது தெரிந்தது. கோவில் அண்மையில் ஆகமவிதிப்படி புதுக்கிக் கட்டப்பட்டு குடமுழுக்கு கண்டிருக்கிறது. பிள்ளையார் சன்னதி, வைரவர் சன்னதி, வசந்த மண்டபம் என்பன அழகுற அமைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இங்கு பிரதானமான வழிபடு பொருள் கொடிமரம் தான். அங்கு நின்று பூசகர்கள் அடியவர்களுக்கு கட்டுச்சொல்வதும் ஆசீர்வதிப்பதுமாக இருந்தார்கள்

பெரியசாமியை கப்பல் தெய்வம் என்றும் சொல்கிறார்கள். கோவில் முழுவதும் கப்பல் சின்னம் பொறித்த வண்ணக் கொடிகள் அசைந்தாடுகின்றன. அவர் தமிழகத்திலிருந்து கப்பலில் வந்தவர் என்று நம்பிக்கை. ஆனால் அவர் முதலில் வந்திறங்கிய இடமாகச் சொல்லப்படுவது இலங்கைத்துறை முகத்துவாரம்.

இலங்கைத்துறை முகத்துவாரம், பாற்சேனையிலிருந்து 25 கிமீ வடக்கே உள்ளது. அது இன்று "லங்காபட்டுன" என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். சற்று ஒதுக்குப்புறமாக உள்ளதால், மட்டக்களப்பு - திருக்கோணமலை நெடுஞ்சாலையில், வெருகல் கங்கைக்கு 2 கிமீ வடக்கே உள்ள முத்துச்சேனை சந்தியில் வலப்புறமாக திரும்பி 13 கிமீ செல்லவேண்டும். கடலும் காயலும் (களப்பு) இணையும் முகத்துவாரத்தில் ஒரு சிறிய குன்றொன்று இருக்கிறது. அது தான் பெரிய சுவாமி வந்திறங்கிய முதல் இடம். உள்ளூரில் குஞ்சிமாப்பா மலை என்றும் குஞ்சிதபாத மலை என்றும் சொல்கிறார்கள்.

குஞ்சிமாப்பா மலையில் வைகாசி முழுநிலவை ஒட்டி வரும் நான்கு நாள்கள் பெரிய சுவாமிக்கு கொடிமரம் நாட்டி சடங்கு இடம்பெற்று வந்திருக்கிறது. குன்றின் உச்சியில் இருந்த அவர் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. எனினும் பொது வழிபாட்டுக்காக குன்றின் மையப்பகுதியில் இருந்த சமநிலத்தில் அவருக்கு இன்னொரு சிறுகோவில் இருந்தது. நிலவு எறிக்கும் வைகாசி முழுமதி நாளில், கடற்காற்று வீச குன்றில் மக்கள் குழுமி, கலைநிகழ்ச்சிகள்,ஆடல், பாடல் என்று பார்க்கவே இரம்மியமாக இருக்குமாம்.

2000களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் வசித்த அமெரிக்கத் துறவி தந்திரதேவா அடிகளாரால் இந்த பெரியசாமி கோவில் திருத்திக் கட்டப்பட்டு கருவறையில் ஒரு முருகன் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் யுத்த காலத்தில் இவை அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. தற்போது இது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பௌத்தத் தலம். இங்கு பெருமளவு உல்லாசப் பயணிகளைக் கவரும் சமுத்திரகிரி ரஜமகா விகாரை அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் புத்தபிரானின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டிருக்கிறது. போதிமாதவனின் புனித தந்ததாது இந்த லங்கா பட்டுனவில் தான் வந்து இறங்கியதாக தற்போது ஐதிகங்கள் தோன்றிப் பரவுகின்றன. இலங்கைக்கு கலிங்க நாட்டிலிருந்து திருப்பற்சின்னத்தைக் கொண்டுவந்த இளவரசி ஹேமமாலை, இளவரசன் தந்தகுமாரன் ஆகியோரின் சிற்பங்களும் அங்கு வடிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைத்துறை முகத்துவாரம் என்ற பெயரும் இப்போது மக்கள் வழக்கில் "லங்கா பட்டினம்" என்று மாறிவிட்டது. முரண்நகை என்னவென்றால் பிரித்தானிய, ஒல்லாந்துக் குறிப்புகளின் படி, இவ்வூரின் பெயர் இலங்கைத்துறை அல்ல; இலந்தைத் துறை. இலந்தை மரங்கள் சூழ்ந்த துறை.

குஞ்சிதபாத மலையின் அருகே, கழிமுகத்தின் அக்கரையில் இலங்கைத்துறை முகத்துவார பத்தினியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. பெரிய சுவாமி, தற்போது கொடிமரம் நாட்டப்பட்டு இங்கும் வழிபடப்பட்டு வருகிறார். இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கு அயலிலுள்ள வாழைத்தோட்டம், வெருகல் முகத்துவாரம் முதலிய ஊர்களிலும் பெரியசாமிக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலும் பெரியசாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குஞ்சிமாப்பா மலைக் கோவில் அழிக்கப்பட்ட பின்னர், இன்று பாற்சேனைக் கோவில் மட்டுமே பிரசித்தமான பெரியசாமிக் கோவிலாக இருக்கிறது.

சரி, யார் தான் இந்த பெரியசாமி? அது தெரியவில்லை. தமிழகத்தில் பிரபலமான நாட்டார் தெய்வங்களுள் ஒருவரான பெரியண்ணசாமியை பெரியசாமி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அவருக்கும் இந்த பெரிய சாமிக்கும் தெளிவான தொடர்பேதும் இல்லை. இவர் போல கப்பலும் கொடிமரமும் தமிழக பெரியண்ணசாமி வழிபாட்டில் பயன்படுவதில்லை. அவரை வழிபடும் மக்களிடம் விசாரித்தால், பெரியசாமி, கப்பல் தெய்வம், குஞ்சிமாப்பா என்ற மூன்று பெயர்களும் ஒரே தெய்வத்தைக் குறிப்பிடும் பெயர் தான் என்றும், இல்லை மூவரும் வேறுவேறு என்றும், அது தனியே ஒரு தெய்வமல்ல; நிறைய குழுத்தெய்வங்களுக்கான பொதுப்பெயர் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

பெரியசாமியின் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களில் "வண்ணான்" என்ற சொல் அடிக்கடி வருகிறது. சலவைத்தொழிலாளர்களுக்குத் தனித்துவமான தெய்வங்கள் பெரிய தம்பிரானும் நீலாசோதையனும். இங்கே குஞ்சிமாப்பா மலையில் பெரியசாமிக்கும், அருகே வெருகல் கல்லடியில் நீலி அம்மனுக்கும் கோவில்கள் அமைந்திருப்பது தற்செயலா என்பது தெரியவில்லை. வெருகல் கல்லடி மலைநீலி ஒருகாலத்தில் கொட்டியாரப்பற்றின் புகழ்பெற்ற தெய்வம். கோணேசர் கல்வெட்டின் படி கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்த நீலாசோதையன் படையினர் வழிபட்ட அம்மன் இவள் என்று மரபுரைகள் நிலவுகின்றன. இன்று கல்லடி மலைநீலி கோவிலும் ஒரு பௌத்த விகாரமாக மாறியிருக்கிறது.

பெரியசாமியை சலவைத்தொழிலாளரின் பெரியதம்பிரானோடு இணைப்பது முடியாத காரியம் என்றால், தமிழகத்திலிருந்து வந்திறங்கி இங்குள்ள மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வேறொரு இனக்குழுவின் குலதெய்வ வழிபாடு என்றே கொள்ளமுடிகிறது. அல்லது கப்பல் பயணத்தில் மரித்தோருக்கு நிகழ்ந்த ஒரு இறந்தோர் வழிபாடும் பெரிய சாமி வழிபாடாக பரிணமித்திருக்கலாம். இலங்கைத்துறை முகத்துவாரத்தில் கப்பல் வடிவில் கடலுக்குள் தெரிந்த ஒரு பாறையை பெரியசாமி வந்த கப்பல் கல்லாகி விட்டது என்று காட்டினார்கள். கடந்த உள்நாட்டு யுத்தகாலத்தில் இரவு வேளைகளில் கடல் ரோந்து போகும் இரு தரப்பினரும் எதிரிப்படையின் கப்பல் என்றெண்ணி இதை மாறிமாறிச் சுடுவதுண்டாம்.

பாற்சேனை பெரியசாமிக்கும் உருவம் இருக்கவில்லை. கொடிமரமாகவே வழிபடப்பட்டிருக்கிறார். எனினும் தற்போது ஆகமவிதிக்கு உட்பட்டு மேல்நிலையாக்கம் அடைந்தபோது, மாலொருபாகன் வடிவாக மாற்றப்பட்டிருக்கிறார். அர்த்தநாரீஸ்வரரை ஒத்த சிவன் - விஷ்ணுவின் இணைந்த வடிவம் அது. அரைவாசி சிவனாக, அரைவாசி திருமாலாக வடிக்கப்பட்ட பெரியசாமியின் திருவுருவமொன்று கோவில் நுழைவாயில் மேலே அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, வசந்த மண்டப விமான மேற்பகுதிகளில் இடபமும் கருடனுமே பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கருவறையில் திருமாலின் ஐம்பொன்னாலான திருவுருவம் நிறுவப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக பெரியசாமியை திருமாலாக அடையாளம் காணும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பாற்சேனை பெரியசாமியின் கொடிமரத்தில் சுற்றப்பட்டிருந்த கொடியில் எட்டெழுத்து மந்திரம் எழுதப்பட்டிருப்பதை அவதானித்தேன். கோவில் திரைச்சீலைகளிலும் ஆழிவண்ணனே புன்னகைக்கிறார். வாசலில் அனுமன் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நான் சென்றிருந்த அன்றிரவு அனுமான் வசந்தனாட்டம் நடக்க இருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். வசந்தனாட்டம் ஆண்களால் ஆடப்படும் கீழைக்கரையின் பாரம்பரியக் கோலாட்டக் கலை. அனுமன் வேடத்தில் சிறுவர்கள் கோலடித்து நடிப்பது தான் அனுமன் வசந்தன். அவசரமாகக் கிளம்பி வேண்டி இருந்ததால், இரவுச் சடங்கோ வசந்தனாட்டமோ பார்க்க முடியவில்லை.

அங்கு சென்று ஓரிருநாட்களிலேயே தற்செயலாக இலங்கைத்துறை முகத்துவாரம் சமுத்திரகிரி விகாரைக்கு போகக்கிடைத்தது. அங்கு பெரியசாமிக்கு முன்பு கோவில் இருந்தது என்பதற்கான தடயமெதுவும் இன்றில்லை. ஆனால் கீழே அக்கரையில் பத்தினியம்மன் கோவிலில் கொடிமரமாக நின்றுகொண்டிருந்த பெரியசாமியை குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். தொன்மங்கள், வரலாறுகள் கண் முன்னே எத்தனை மாற்றமடைகின்றன? பெரியசாமி நின்றிருந்த குன்றில் இன்று புத்தபிரான் வீற்றிருக்கிறார். பெண்கள் போகக்கூடாது என்ற மரபு நிலவிய மலையுச்சியில், புதிய தாதுகோபத்தின் அடியில், சிங்கள அன்னையரும் கன்னியரும் சூட்டுகின்ற மலர்கள் கடற்காற்றில் வாடி அசைந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே பற்சின்னமாக புத்தபிரான் வந்தடைந்ததை நினைவுகூர்ந்து தான் பெரியசாமி தொன்மம் உருவானதா? மெய்வடிவில் மீண்டும் தானே அங்கே அமர புத்தர் திருவுளம் கொண்டாரா? ஆக்கிரமிப்பு, அழிப்பு, திணிப்பு என்றெல்லாம் நாம் புலம்புகின்ற எல்லாமே, நம் கண்ணுக்குத் தெரியாத நுண்சரடுகளைக் கொண்டு நம்மைப் பிணைத்து தெய்வங்கள் கண்சிமிட்டி மகிழ்ந்தாடும் மாய விளையாட்டுக்கள் தானா?

குஞ்சிமாப்பா மலை உச்சியில் நின்று பார்க்கும் போது, பத்தினியம்மன் கோவில் சற்று தெளிவில்லாமல் தான் தெரிகின்றது. அதன் உச்சியில் சிலம்பேந்தி கைநீட்டிக் கூவி, சம்பந்தமில்லாத யாரோ ஒருவரிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறாள் பத்தினி. அருகே வானை முட்டி எழுந்து வண்ணக் கொடிக்கரங்களை அசைத்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது பெரியசாமியின் கொடிமரம். இதோ, என்னருகே, குஞ்சிமாப்பா மலையில், மறுபக்கம் கடலை நோக்கித் திரும்பி ஆசீச முத்திரை காட்டியபடி நிற்கும் ததாகதன் போதிமாதவன் யாரைத் தான் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான்? அல்லது அத்தனை பேரும் சேர்ந்து, அவர்களின் பாராமுகம் கண்டு நெஞ்சம் வெதும்புவோரைஒற்றைச் சொல்லில் சபித்துக் கொண்டிருக்கிறார்களா?

"இதோ புறப்பட்டுவிட்டேன்.", "இல்லை, புறப்படவில்லை" என்று ஒரு நேரத்தில் சொல்வது போல் கடலுக்குள் நின்றுகொண்டிருக்கிறது, கல்லாகிப் போன பெரிய சாமியின் கப்பல். எதிரிப்படையுடையது என்று தவறாகக் கருதப்பட்டு இரு தரப்பினராலும் மாறிமாறித் தாக்கப்பட்ட கப்பல். அங்கிருந்து எழுந்து வந்து ஓலமிட்டபடி என் முகத்தில் அறையும் இந்தக் கடற்காற்று அத்தனை உப்பாக இருக்கிறது. உள்ளே இனம்தெரியாத கசப்பு ஊறிப்பெருக முகம் சுழித்தபடி குஞ்சிமாப்பா மலையிலிருந்து கீழே இறங்குகிறேன்.


0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner