தூவெண்மதி சூடி

0 comments

நிலவில் இந்தியாவின் சந்திரயானம் போய் இறங்கி இருக்கிறது. நிலவு சிவனின் முடியில் இருக்க, சந்திரயானம் இறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி முனை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நிலவின் நிலைமை இப்படியிருக்க, முப்பரிமாணக் கோளப் பொருளான சந்திரனை சிவன் இருபரிமாணப் பிறையாக தலையில் சூடுவது பற்றி நண்பரொருவர் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தார்.


சிவன் தலையில் பிறை சூடியிருப்பது சங்க இலக்கியங்களிலேயே பதிவாகியிருக்கிறது. அதியமான் நெடுமானஞ்சியிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவை சிவனுக்கு "பால்புரைப் பிறைநுதல் பொலிந்த சென்னி" என்கின்றாள். சிவன் பிறையைச் சூடியது (உரு 1) பற்றி புராணக் கதைகள் உள்ளன.

.
உரு 1. தூவெண்மதி சூடி

ஒரு கதை, தக்கனின் 27 புதல்வியரை மணந்துகொண்ட சந்திரன், அவர்களுள் உரோகிணி ஒருத்தி மீது மாத்திரம் அன்பு கொண்டிருந்ததால், தக்கனால் தேய்ந்தழிந்து போகுமாறு சபிக்கப்படுகிறான். அச்சாபம் தேய்ந்து வளர்வதாக சிவனால் மாற்றப்படுகிறது. மனைவியை ஆடவன் கைவிட்டால் என்ன நிகழும் என்பதை (சில கதைகளின் படி சந்திரனின் பத்தியை ) உலகுக்கு உணர்த்த அவனை தேய்ந்துபோன பிறையாகவே சூடிக்கொள்கிறார் சிவன்.

இன்னொரு கதையில் தொந்தியைத் தூக்கி பிள்ளையார் நடனமாடியதைக் கண்டு சந்திரன் சிரித்ததால் அவன் தேயுமாறு சாபம் பெறுகிறான். அக்கதையின் நீதியில் "உருவு கண்டு எள்ளாமை" (உருவக்கேலி செய்யவேண்டாம் என்பது) சொல்லப்படுகிறது.

தக்க சாபக் கதையில் வருவது பழங்கால மனிதனின் மிக அடிப்படையான இயற்கை அறிவு தான். பன்னிரு இராசி மண்டலத் தொகுதிகளின் வழியே நிலவின் சார்பியக்கத்தை அளவிடுவது ஒரு தொன்மையான காலக்கணிப்பு முறை. இதன் வழியே கணிக்கப்படுவது விண்மீன் சார் மதிவழி மாதம் (Sidereal Lunar Month). இதற்கு 27.3 நாள் எடுக்கும். இந்த 27 நாள்களிலும் நிலவு பன்னிரு இராசி மண்டலங்களூடும் இயங்குகின்றது. அந்தப் பன்னிரு இராசி மண்டலங்களையும் ஆக்குபவை இருபத்தேழு "நட்சத்திரங்கள்".

தக்கனின் இருபத்தேழு புதல்வியருக்கும் இந்திய வானியலில் பயன்படும் இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்களே கூறப்படுகின்றன. நட்சத்திரங்கள் என்றாலும் அவை உண்மையில் உடுத்தொகுதிகள் (Constellations) தான். ஆக, ஒரு மாதச் சுற்றின் போது, சந்திரன் ஒவ்வொரு நாளும், தன் ஒவ்வொரு மனைவியோடு இருக்கிறான். சரி தான். தக்கனின் சாபத்துக்குப் பிறகு திருந்தி விட்டான்.

சரி, ஐயத்துக்கே போவோம். சந்திரனை சிவன் பிறையாகச் சூடுவதாகச் சித்தரிப்பது தவறல்லவா?

இல்லை. காரணங்கள் மூன்று.

முதலாவது, அழகியல் காரணம். பிறை என்பது வான்பிறை அல்ல; அது வான்பிறை வடிவில் அமைந்த ஒரு அணிகலன். சூரியன், சந்திரன் வடிவில் அமைந்த இரு தலையணிகளை இன்றும் பரதம் ஆடும் மகளிரும் தமிழ் மணப்பெண்டிரும் சூடுவதுண்டு (உரு 1). நிலாத்துண்ட வடிவான பிறை பெண்டிர் கூந்தலில் விரும்பிச் சூடப்பட்டது. ஆனால் பிறை அணிகலனின் தொல்வடிவமொன்றை முதலில் சூடியவன் ஒரு ஆடவன். அதனால் அவன் பிறைசூடி.

பிறை அணிகலனின் ஆரம்ப வடிவம் கூந்தலில் செருகிக்கொண்ட பன்றியின் கொம்பாக இருக்கக்கூடும். (திருமுறைகளின் படி பன்றிக்கொம்பை சிவன் மார்பிலே அணிந்துள்ளான்). ஏனென்றால் எலும்பு, புலித்தோல், யானைத்தோல், பன்றிக்கொம்பு, கொக்கு இறகு, ஆமையோடு, பாம்பு முதலிய விலங்குப் பாகங்களை அழகுணர்ச்சியோடும் அலங்கார விருப்போடும் உடலில் அணிந்து பார்த்து வியந்த தொல்மானுடன் ஒருவனின் சிந்தையில் தோன்றிய முதுமுதல்வன் சிவன்.

உரு 2. ஆடல்மகளிரும் மணப்பெண்டிரும் அணியும் தலையணி. நெற்றிச்சுட்டி, சூரியப்பிறை, சந்திரப்பிறை.

இரண்டாவது, பிறையின் குறியீட்டியல். சூரியனும் சந்திரனுமே மிகப்பழைய காலக்கணிப்புக் கருவிகள். உலக நாகரிகங்களில் இடையறாது வளர்ந்து தேயும் பிறை, இயற்கையின் இயக்கத்தையும் காலத்தையும் விளக்க முயலும் தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிவன் காலகாலன். காலம் கடந்தவன். ஓயாது தேய்ந்து வளரும் நிலவின் ஒரு கலையை முடிமீது நிறுத்துமளவு அவன் காலத்தை - இயற்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்.

இன்னொரு விதத்தில் நிலவின் தேய்வும் வளர்வும் பெண்டிரின் மாதமுறை வட்டத்தோடு தொடர்புடையது என்பதால் (இரண்டும் அண்ணளவாக 30 நாள் வட்டம்), சில இடங்களில் பிறை பெண்மையைக் குறிக்கும். மதியை சூடியவன் மங்கையோர் பாகனும் தான்.

(விந்தையாக "மாதர் பிறைக்கண்ணி" என்று தொடங்கும் அப்பரின் கயிலைப் பதிகத்தில் சிவன் பிறை சூடியதும் பாகம் பெண்ணுரு ஆனவன் என்பதும் மீண்டும் மீண்டும் இணைத்தே பாடப்படுகின்றது).

மூன்றாவது, வரலாற்றியல் ஊகம். (இந்த ஊகம் சிவனடியாருக்கு உவப்பில்லாது இருக்கலாம்). சிவன் மிகப்பழைய ஒரு மலைக்குடித்தெய்வம். சிவனை மலையாகக் காணும் வழக்கம் வடக்கே கேதாரம், கயிலையிலும் தெற்கே அண்ணாமலையிலும் இன்றும் நீடிக்கிறது. அந்த மலையின் சுருங்கிய வடிவமே சிவலிங்கம். அவன் மனைவி பார்வதியும் மலைமகள். ஆக, சிவன் மலை தான். சிவந்த செம்மலை. வெண் தூளி அல்லது வெண்பனி அந்தச் செம்மலை முழுதையும் திருநீறென மூடிவிளங்குகின்றது. ( "நீறணி பவளக்குன்றம்" - திருவிசைப்பா).

அந்த மலை உச்சியில் பரந்துள்ள அடர்ந்த காடே சடை. சிவமலையின் உச்சியில் ஊறி காட்டாறு ஒன்று பாய்கிறது. (சடா டவீகலச்சல - சடைத்திரியாகிய காட்டினூடே கங்கைநீர் பெருகி வர - சிவதாண்டவ தோத்திரம்). அம்மலை முழுதும் கொடிய பாம்புகளும் உருத்திராக்க மரங்கள் உதிர்த்த விதைகளும் கொன்றை எருக்கு இலைச் சருகுகளும் இறந்த புலியின் தோலும் யானையின் தோலும் காணப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், அந்த எரிமலையில் வெடித்துக் குழம்பைக் கொட்டும் மூன்றாம் விழி ஒன்று என்றோ குளிர்ந்து கனிந்து விளங்குகிறது. யாரும் எளிதில் நெருங்கவோ உச்சியை அடையவோ முடியாதவாறு ஓங்கியுயர்ந்தது என்பதால் அது "அடிமுடி காணமுடியா" அண்ணாமலை! (அண்ணுதல் = நெருங்குதல், அடைதல். நாவால் அண்ண எளிதானது அண்ணம். உறவில் அண்ணியவன் அண்ணன். அண்ணாதது - அடையமுடியாதது.) அம்மலையின் தயவில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அம்மலை "பசுபதி".

வானில் பிறை எழும் நாளொன்றில் நீங்கள் இந்த மலையிலிருந்து தொலைவில் நிற்கிறீர்கள். மாலை மங்கும் நேரத்தில் விண்ணில் உதிக்கின்ற பிறை அம்மலைச் சாரலில் பொருந்தும் காட்சியைக் காண்கிறீர்கள் (உரு 3). ஆகா! இதே காட்சியை அண்ணாமலையில் கண்ட சம்பந்தரும் "அந்தி பிறை அணையும் சாரல் அண்ணாமலையாரே" என்று நெக்குருகிப் பாடுகிறார். சம்பந்தருக்கும் எனக்கும் உங்களுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக்காட்சியை மனுக்குலம் நெடுநாளாய்க் கண்டு வந்திருக்கும். வானளாவ உயர்ந்து விண்ணில் செல்லும் நிலவையும் சில கணங்கள் தன் மீது தரித்துக்கொள்ளும் மலை!


உரு. 3. "அந்திப்பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே" - திருமுறை 1:69:07

ஆதிமனிதனின் கூர்ப்பில் இரசனை உணர்வு என்ற ஒன்று தோன்ற ஆரம்பித்த முதல் தருணங்களில் அந்தக் காட்சியைக் கண்டு நம் மூதாதைக் குரங்கு வியந்திருக்கக்கூடும். அதன் கண்களை நிறைத்த பிறைசூடிய பெருமலையைத் தான் புராணங்கள் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து பிறைசூடிய பெம்மானாக வளர்த்தெடுத்திருக்கின்றன என்று சொன்னால் அது தவறாகாது.

பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தின் முன்னிலையில் மிக எளியவனான மானுடன் தன்னை எப்படி முன்வைக்கிறான் என்பதில் இருக்கிறது அவனது செயலூக்கமும் தன்முனைப்பும். அழகான வான்பிறையை அணிகலனாகச் சூடலாமா என்ற வியப்பில் தோன்றிய இரசனையும் அழகுணர்ச்சியும் மானுடனின் தீராத்தேடலின் விளைவு தான். அந்தத் தேடலே தன்னை மீறிய பெருஞ்சக்தி நிலவைச் சூடுமளவு பெரியது, காலத்தை வென்றது என்று கண்டுகொண்டு அதை பிறைசூடிய பெம்மானாகச் சித்தரிக்க வழிவகுத்தது. நீல் ஆம்சுரோங்க் முதல் நேற்றைய சந்திரயானம் வரை மனிதகுலத்தை மதிக்கே கொண்டுவந்து விட்டதும், அதே தேடல் தான். அந்தத் தேடலை இறைநம்பிக்கையாளர்கள் சமயமாக எண்ணி இறும்பூதெய்தலாம். இறைமறுப்பாளர்கள், அதை மானுடப் படைப்பாற்றல் அடைந்த வளர்ச்சியாகக் கண்டு நிமிரலாம்.


தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான். மால் அயன் முதற்கொண்டு நமக்கு விதிக்கப்பட்டது அதுவே. அடிமுடி தேடல். என்றோ ஒருநாள் அந்தத் தேடல் தீரும். அன்று நாம் காலத்தைக் கடந்திருப்போம். அந்த நாள் எப்போதைக்குமென முடியில் நிலாச்சூடியவன் நம்முன் தோன்றிப் புன்னகைப்பான்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner