பிறந்த மண்ணை பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆசை எப்போதிருந்தோ இருக்கிறது. ஆனால் அந்நூல் தகவல் தொகுப்பில் முழுமையானதாக, ஏனைய ஊர் வரலாற்று நூல்களுக்கு முன்மாதிரியானதாக அமைய வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை எடுப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன், நூலகம் நிறுவனத்தின் 'ஊர் ஆவணப்படுத்தல்' செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டபோது, நூலின் உள்ளடக்கத்துக்கான ஒரு வரைவை தயாரித்துக்கொள்ள முடிந்தது. எனினும் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் செயற்றிட்டத்தில் முழுப்பங்களிப்பை அளிக்க முடியவில்லை. (அந்த வரைவை ஆவணகம் வலைத்தளத்தில் இங்கு படிக்கலாம்.)
எனினும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்யலாம் என தீர்மானித்தேன். எனது தகவல் சேகரத்தின் ஒரு பகுதியை தம்பியொருவனின் பாடசாலை ஆண்டு மலருக்கு வழங்கினேன். அதைத் திருத்தி இன்னும் சில விடயங்களை சேர்த்து, மறைந்த சகோதரர் அமரர். கோவேந்தன் அண்ணாவின் நினைவு வெளியீடான 'கோவேந்த வியாசத்துக்கு' வழங்கினேன்.
எதிர்பார்த்தது போலவே அக்கட்டுரை ஊரில் சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அக்கட்டுரையில் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்த ஊரின் சமூக அடுக்கு சார்ந்த குடி முறைமை, தத்தி, கத்தறை, வறுகை, பாகை, முதலிய மறைந்து வரும் மரபுகள் அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும் எதிர்கொள்ளப்பட்டன. சிலர் நீதி கேட்டு வீட்டுப் படி கூட ஏறினார்கள்.
முற்றாக அருகிவிட்ட அந்த சமூகவியல் தரவுகளை சேகரிப்பதில் நான் விட்டிருந்த இடைவெளிகளை அந்த சர்ச்சைகள் மூலம் பெருமளவு நிரப்பிக் கொள்ள முடிந்தது.
அந்தக்கட்டுரையின் பிரசுரத்துக்கு முந்திய வடிவம்
Prasad
அங்கிளின் முயற்சியில், சில திருத்தங்களுடன் ஆரையம்பதி இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதைப் படித்த அன்பிற்குரிய ஆசான் பேராசிரியர் மௌனகுரு ஐயாவும் அழைத்து அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை சிலாகித்து பேசியது ஆன்ம திருப்தியை தந்திருக்கிறது. இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் சகல ஊர்களும் தங்கள் வரலாற்றைத் தொகுத்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமைபெறும் என்றார் அவர்.அக்கட்டுரையின் உண்மை நோக்கமும் அதுவே. புள்ளி வைத்து தான் கோலம் போட முடியும். வரலாறு என்பது பிரதேசம், குழுக்கள், பிராந்திய மரபுகள் என்றெல்லாம் சுருக்கி எழுதப்படும் நுண்வரலாறுகளின் தொகுப்பு என்பதை இங்கு ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இன்று வரை ஒழுங்கான வரலாறு இன்றி, தொன்மங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் பக்கச்சார்பின்றி தத்தம் ஊர்வரலாற்றை தொகுத்துக் கொண்டாலே போதும். அத்தனையையும் ஒட்டுமொத்தமாக்கி இலங்கைத்தமிழர் வரலாற்றை கட்டியெழுப்பி விடலாம்.
ஐயமின்றி இந்தக் கட்டுரை தகவல் பிழைகளும் குறைகளும் கொண்டதே. சில இடங்களில் நடுநிலைமை தவறி வெளிப்பட்டுள்ள ஊர்ப்பற்றும் உள்நோக்கம் கருதியது தான்.
இதையே ஒரு சவாலாக எடுத்து, இதே மாதிரியில் அல்லது இதைவிட சிறப்பான உள்ளடக்கங்களுடன் ஏனைய ஊர் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படட்டும். சில ஊர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கின்றன. என்றால் அந்நூலை அல்லது அக்கட்டுரையை தகவல் பிழைகள் திருத்தி இற்றைப்படுத்த முயலலாம். இயன்றால் பத்தாண்டுகளுக்குள் பக்கச்சார்பின்மை கொண்ட சமூகவியல் - மானுடவியல் ரீதியிலும் முழுமையான ஒரு இலங்கைத் தமிழ்ச்சமூக வரலாற்று நூல் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் நப்பாசை. ஆர் குத்தி என்ன, அவலானால் சரி.
0 comments:
Post a Comment