அந்த நண்பன் இறைமறுப்புவாதி. அவனோடு அடிக்கடி கடவுள், சமயம் என்று முரண்படுவேன். ஆனால் இருவருமே வாசிப்பவர்கள் என்பதால், எங்கள் விவாதம் வெறும் உணர்ச்சிபூர்வமாக இராமல், வரலாறு - மனித உளவியல் - எதிர்கால விஞ்ஞானப்புரட்சி - அதில் சமயத்தின் தேவை, என்று கொஞ்சம் அறிவுபூர்வமாகத் தான் நடக்கும். ஆனால் அன்று விவாதத்தின் உச்சியில் ஒரு கேள்வி கேட்டான்.
"சமயங்களால் எப்போதுமே பிறசமயங்களுக்கு பக்கச்சார்பற்ற ஆட்சியைக் கொடுக்கமுடியாது. குறிப்பிட்ட மதச்சார்பு நாடுகளில் பிற மதத்தவர் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுவதையும், மதச்சார்பின்மை பேசுகின்ற இந்தியா முதலிய நாடுகளிலேயே சிறுபான்மைச் சமயங்கள் தாக்கப்படுவதையும் காண்கிறாய். ஏனென்றால் மதங்கள் அரசியல் வெறி கொண்டவை. பிறமதத்தை அடியோடு அழித்து உலகெல்லாம் தன் மதமொன்றை நிறுவுவதே அவற்றின் கனவு. அப்படி உலகெல்லாம் வென்றுவிட்டால் அந்த மதம் தனது உட்பிரிவுகளுக்குள் அடித்துக்கொண்டு சாகும். அதையெல்லாம் மீறி ஒரு சமயத்தால் பக்கச்சார்பற்ற அரசை உருவாக்க முடியுமென்றால், அது எதிர்காலத்தில் எப்படி அமையும் என எதிர்பார்க்கிறாய்?"
அந்தக் கேள்வி அதிலிருந்த அதிரவைக்கும் உண்மையால் என்னை தடுமாறவைத்தது. ஆனால் உடனேயே மீண்டுகொண்டு பதில் கூறினேன்.
"எனக்கு என் நெறி சைவம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஏனைய சமயங்களின் மீது படிந்துள்ள இரத்தக்கறைகளோடு ஒப்பிடும் போது அதில் கறையே இல்லை. அல்லது மிகக்குறைவு. இன்று கூட ஒப்பீட்டளவில் மிக உச்சமான மதச்சகிப்புத்தன்மை கொண்டவர்கள் சைவர்கள் தான். மற்றோரை வலிந்து வம்புக்கு இழுப்பதென்பதோ மதமாற்றுவதோ சைவத்தில் கட்டாயமானதாக இருந்ததில்லை.
இன்று காதலுக்கு - கலியாணத்துக்கு - பொருளாதாரத்துக்கு, சைவத்தை தூக்கியெறிந்து மதமாறுபவர்கள் அதிகரிக்க காரணம் சமய அறிவின்மை தான் என்பது ஒரு பார்வைக்கோணம். ஆனால் மற்ற மதங்கள் போல இல்லாமல், "நீ எளியவன் என்றால், ஒரு சமயமாக, நான் உன் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்த ஒரு கருவி மட்டுமே. அதை நான் பூர்த்தி செய்யாதபோது நான் இல்லாமலும் உன்னால் வாழமுடியும்" என்ற அடிப்படை பகுத்தறிவு நம்பிக்கையை ஒரு சைவனுக்கு பிறப்பிலிருந்தே சைவம் ஊட்டுகிறது என்பது இன்னொரு பார்வைக்கோணம்.
எனவே சைவம் பிற சமயங்களை அடியோடு அழிக்க முனையாது. அதற்கென உலகளாவிய ஒற்றை மதப்பேரரசு என்ற கனவும் இல்லை. அந்தந்த சமயத்தை அந்தந்த இடத்திலேயே வைத்துக்கொள்ள விரும்பும். பௌத்தன் பௌத்தனாயிரு, கிறிஸ்தவன் கிறிஸ்தவனாயிரு, இஸ்லாமியன் இஸ்லாமியனாயிரு. உங்கள் இடத்தில் நான் தலையிடமாட்டேன். அதேபோல் என் இடத்துக்குள் நீங்கள் தலையிடக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு தன் எல்லையில் அது நின்றுகொள்ளும். அப்படி ஆட்சிபீடமேறும் சைவத்தின் ஆட்சியில் மத வன்முறையே இருக்காது என்று என்னால் உத்தரவாதம் அளிக்கமுடியாத போதும், ஒப்பீட்டளவில் வன்முறை மிகக்குறைவான ஆட்சியை சைவத்தால் வழங்கமுடியும்" என்று சொல்லிமுடித்தேன். அவன் புன்னகைத்து அதோடு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.
ஆனால் பின்பு யோசித்தபோது வழக்கமான அறிவுபூர்வமான உரையாடலில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ என்று தோன்றியது. ஆனால் நான் சொன்ன கருத்தில் உண்மை இல்லாமலில்லை என்பதை உறுதிப்படுத்த உதவியது, முகநூல் நண்பர் விக்கி நண்பன் பதிந்த ஒரு பதிவு. அவரது கேள்வி இதுதான்.
இந்தியாவில் தோன்றிய சமயங்களான சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் போன்ற மதங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதை கல்வெட்டு, இலக்கிய, தத்துவ ரீதியில் பதிவு செய்திருக்கின்றன. ஒரு மதம் மற்ற மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு முரண்பட்டுக்கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது சாதாரண நிகழ்வு தான். ஆனால் இந்த மதங்கள் தங்கள் உட்பிரிவுகளுக்குள்ளே ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. பௌத்தத்துக்குள் மகாயான - தேரவாத முரண். சைனத்தில் சுவேதாம்பர - திகம்பர - யப்பனிய முரண், வைணவத்துக்குள் வடகலை - தென்கலை முரண். இப்படிப் பல பதிவாகியிருக்கின்றன. ஆனால் சைவத்தின் உட்பிரிவுகள், காபாலிகம் - காளாமுகம் - பாசுபதம் முதலியவை ஒன்றுக்கொன்று தங்களுக்குள்ளாகவே எதிர்த்துக்கொண்ட தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
சைவத்தின் பிரதானமான இயல்புகளில் ஒன்று . Integrity. ஒருங்கிணைப்பு என்று சொல்லலாம். சைவத்தில் கிளைகள் புதிது புதிதாக உருவான போதெல்லாம், அவை, தன் பழைய கிளைகளை ஏற்றுக்கொண்டு ஆனால் அவற்றை விட தாம் சிறந்தவை என்ற கொள்கையுடனேயே வளர முயன்றிருக்கின்றன.
உதாரணமாக காஷ்மீர சைவ அறிஞர் அபிநவகுப்தர் , ஏற்கனவே வழக்கில் இருந்த ஐந்து மந்திரமார்க்க சைவப்பிரிவுகள் (சித்தாந்தம், வாமம், தட்சிணம், பூதம், காருடம்) சதாசிவனின் ஐம்முகங்களில் தோன்றியவை என்பதை மறுக்காத அதேவேளை, தான் பரப்புகின்ற கௌல சைவம் ஈசனின் ஆறாவது ஊர்த்துவோர்த்த முகத்தில் தோன்றியதாகவும், எனவே ஏனைய ஐந்தையும் விட சிறந்தது என்றும் உரிமை கோருகிறார்.
சித்தாந்தத்தில் இருந்து பிற்காலத்தில் கிளைத்த பைரவசுரோக்த சைவப்பிரிவுகள் (வைரவனுக்கு கூடிய முன்னுரிமை கொடுத்த தட்சிண, வாம, நேத்ர, யாமள, கௌல சைவப்பிரிவுகள்) மிகக்கடுமையான தாந்திரீக வழிபாடுகளை முன்வைத்தபோதும், தம்மைப் பின்பற்றுவோர் சித்தாந்தத்தை பின்பற்றுவோரை விட விரைவில் பலன் பெறுவர் என்று அறைகூவின. தெளிவாகச் சொன்னால் சித்தாந்தத்தைக் கைவிட்டு என்னைக் கடைப்பிடியுங்கள் என்று அவை கோரவில்லை.
சமணரைத் தோற்கடித்த ஏகாந்தட ராமையா எனும் காளாமுக சைவரை பிற்கால வீரசைவர்கள் போற்றியிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்ச்சைவத்தின் அறுபத்துமூவருக்கு கன்னடத்து வீரசைவத்தில் "புராதனரு" என்ற பெயரில் மரியாதை அளிக்கப்படுகின்றது.
காளாமுகரின் முதன்மையான வழிபாட்டுத் தலங்களான கேதாரமும் ஸ்ரீசைலமும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின், வீரசைவர்கள் கையில் வருகின்றன. நாத் சைவர்களின் முக்கியமான மடமான கன்னடத்து கத்ரி மடம், அதற்கு முன் பாசுபத அல்லது காளாமுக குறுங்குழு ஒன்றுக்கு சொந்தமாக இருந்தது என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பெரிய போராட்டமேதும் இடம்பெற்று இந்த உரிமைமாற்றங்கள் நிகழ்ந்ததாக எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை.
சைவ சித்தாந்தத்துக்கும் சிவசமவாத சைவத்துக்கும் இன்றும் மெய்யியல் முரண்பாடு இருக்கிறது. அதனாலேயே சிவசமவாத நூலான அகோர சிவாச்சாரியார் பத்ததியை ஏற்பதில் சித்தாந்திகள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இது மெய்யியல் தளத்தில் மட்டும் தான். வழிபாட்டுத்தளத்தில் இன்றும் பல சிவாலயங்களில் அகோர சிவ பத்ததி பயன்பாட்டில் இருக்கிறது.
அவ்வளவு ஏன், பிற்கால சித்தாந்த நூல்களில் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்று தலைக்கு ஆறாக இருபத்து நான்கு சமயங்களை மெய்யியல் ரீதியில் மறுத்து தன்னை தாபிக்கும் சைவ சித்தாந்தம், அந்த இருபத்து நான்கு சமயங்களின் பௌதீக இருப்பை எங்குமே மறுக்கவில்லை என்பதையும் காணலாம். அந்த இருபத்து நான்கில் பன்னிரண்டு தான் சைவப்பிரிவுகள். ஏனைய பன்னிரண்டில் பௌத்தம், சுமார்த்தம், வைணவம், சமணம், ஏன் நாத்திகவாத உலோகாயதமும் அடக்கம்.
பிற மதங்கள் தனக்குச் சமனல்ல என்ற சுயபெருமிதத்தை விட்டுக்கொடுக்காத போதும், புறச்சமயங்களின் இருப்பை, அவற்றின் தொடர்ச்சியை சைவம் அங்கீகரித்திருக்கிறது என்பது மதச்சகிப்பற்ற உலகில் மானுடத்தை முன்னிறுத்தும் மிக ஆரோக்கியமான பாய்ச்சல். பௌத்தம் - வைணவத்தில் மட்டுமல்ல; மேலைத்தேய மதங்களில் கூட நாம் காணமுடியாத இந்தப் பரந்த மனப்பாங்கே சைவம் ஆசியாவெங்கும் தான் பரவிய இடங்களில் பேரரசுகளை அமைத்ததற்கான முதன்மையான காரணம் என்பதை ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதேவேளை, இயல்பிலேயே வருண - சாதிப் பிரிவினைகளை கடக்க முயன்ற சைவம், பேரரசுகளை அமைத்தபோது, தவிர்க்கமுடியாமல் வர்ணாச்சிரமக் கட்டமைப்பை ஆதரிக்க முயன்றதும், அதுவே சைவம் சுமார்த்தத்திடம் முற்றாக வீழ்ந்து இன்றைய பரிதாபகரமான நிலையை அடையக் காரணமானது என்பதையும் கூட அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
மதச்சார்பின்மையை இலட்சியமாகக் கருதி நகர்ந்துகொண்டிருக்கும் நவீன உலகில், இப்போது இந்து எனும் அடையாளத்துக்குள் சுயமிழந்து, சுமார்த்தத்துடன் இரண்டறக் கலந்து, வர்ண - சாதியப் பாகுபாடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் சைவம், எதிர்காலத்தில் எப்போதாவது தூய நிலையில் அரசியல் பலம் பெறுமா என்பதை இப்போதைக்கு எதிர்வு கூறமுடியவில்லை. ஆனால் அது நிகழ்ந்து சைவம் ஆட்சிபீடமேறினால் உலகம் இதுவரை காணாத மகத்தான மதச்சகிப்பு அரசாக அது அமையும் . அதற்காக இப்போதைக்கு அரசியல் பலம் பெறக் கனவு காண்பதெல்லாம் பேராசை தான். முதலில், சைவம், அதன் அதிகாரபீடங்கள், அதன் பின்பற்றுநர்கள், தங்கள் தவறுகளைக் களைந்து, பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ளி எதிர்காலத்துக்கான சமயிகளாக தங்களை இற்றைப்படுத்திக்கொள்ளட்டும். அதற்குப் பிறகு "விளங்குக உலகெலாம்" என்பதை மனப்பூர்வமாகச் சொல்லி வாழ்த்த முயலுவோம். 🔱
0 comments:
Post a Comment