நன்னலப் புள்ளினங்காள்....!

எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஏதாவது வாசித்துக்கொண்டிருப்பேன். அதில் ஏதாவது ஒற்றைச்சொல்லை கண்கள் பிடித்துக்கொள்ளும். பிறகு, அந்தச் சொல் இடம்பெறும் சினிமாப் பாடலொன்று நினைவுக்கு வந்துவிடும். பிறகு கொஞ்சநாட்கள் அந்தப் பாடல் தான். மீளவே முடியாது. இது அடிக்கடி தலைகீழாகவும் நடக்கும். பாட்டுக் கேட்டுவிட்டு அதில் ஒரு சொல்லைப் பிடித்து அதைப் பற்றித் தேடி வாசிப்பது. சிலநேரம் சலித்துப் போனாலும் சிந்தனை மீளவிடாது. என்னடா இது என்று அலுத்தாலும் அதிலேயே உழன்று கொண்டிருக்கும்.

இப்படித்தான் சில வாரங்களுக்கு முன் பகிர்ந்த ஈஷாவின் கயிலைப்பதிகத்தை காது குளிரக் கேட்டபோது மூலத்திலுள்ள அப்பரின் பத்து தேவாரங்களையும் வாசித்தேன். ஒருவரி பாய்ந்து ஒட்டிக்கொண்டது. ""வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன்" இணை பிரியாத அன்றில் பறவைகள் இரண்டு வருவதைக் கண்டேன். அதில் செல்லமாகப் பற்கள் பதிய கவ்விக் கொண்டது ஒற்றைச்சொல். பகன்றில். பிரியாத அன்றில். அன்றில் பறவை.

பிறகென்ன, மண்டைக்குள் நிரம்பியிருக்கும் பாட்டுவரிப் புத்தகங்களெல்லாம் தூசு தட்டப்பட்டு, எந்தெந்தப் பாட்டில் அன்றில் இடம்பெற்றிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று சினிமாப் பாடல்கள் வெளியே எடுத்துப் போடப்பட்டன. போன கிழமை இவை மூன்றும் தான் திகட்ட திகட்ட முணுமுணுத்த பாடல்கள்.

முதலாவது, என் ஜி கே திரைப்படத்தின் அன்பே பேரன்பே பாடல். "உறவே நம் உறவே நம் அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே."
இரண்டாவது, ஜீன்ஸில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் - "அன்றில் பறவை ரெட்டைப்பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே"
மூன்றாவது எனக்கு 20 உனக்கு 18இன் அழகின் அழகி - அற்றைத் திங்களில் அன்றில் பறவையாய் ஓடிப்போக நீயும் வஸ்தாவா?





மனிசன் என்றால் மூளையில் பிரயோசனமாக ஏதாவது இருக்கவேண்டும். இங்கே முழுக்க முழுக்க பாட்டு வரிகளே நிரம்பியிருந்தா, வேறென்ன செய்றது சென்ட்ராயன்

பிறகு தொற்றுநோயின் இரண்டாம் கட்டம் தாக்கியது. பாட்டுக் கேட்டு சலித்து அன்றில் பறவை பற்றி வாசிக்கத் தொடங்கினேன். அன்றில் என்று தேடியதும் இணையம் அரிவாள்மூக்கன் எனும் பறவையிடம் கொண்டு சேர்த்தது. அதன் ஆங்கிலப்பெயர் Glossy Ibis. அறிவியல் பெயரீடு Plegadis falcinellus. இங்கு இலங்கையில் இப்பறவைக்கு என்ன உள்ளூர்ப்பெயர் என்று எனக்குத் தெரியாது.

அரிவாள்மூக்கன்

சங்க இலக்கியங்கள் சொல்வதன் படி, அன்றில்கள் கூரிய அலகைக் கொண்டிருக்கும். கடற்கரை நிலங்களில் நீர்நிலைகளை அண்டி வாழும். மீன் முதலியவற்றையே உண்ணும். முக்கியமாக இவை இணை பிரியாது. பிரிவுத்துயரால் வருந்துகின்ற சங்க இலக்கியக் காதலர்கள், அன்றில் சத்தமிடுவதைக் கேட்டால் துடித்துப்போவார்கள். ஐயோ நீயும் இணை பிரிந்து வருந்துகிறாயா என்று.

ஆனால் இந்த அரிவாள்மூக்கன்கள் இலக்கியம் சொல்வது போல் இணைபிரியாமல் வாழ்கின்றனவா என்பதை பறவையியலாளர்கள் இன்னும் மிகத்திருத்தமாக உறுதிப்படுத்தவில்லை. தமிழில் அன்றிலைப் போலவே வடமொழி இலக்கியங்களில் இப்படி துணையைப் பிரிந்தால் வருந்தும் கிரௌஞ்சம் எனும் பறவை குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிரௌஞ்ச இணைகளில் ஒன்றை வேடனொருவன் கொன்றதைக் கண்ட வருத்தத்தில் தான் வான்மீகி உலகின் முதல் கவிதையை இயற்றினார். அந்தக் கவிதையே வான்மீகி இராமாயணம் பிறக்கக் காரணமானது என்பது வடமொழித் தொன்மம். கிரௌஞ்சத்தை வட இந்தியாவில் வாழும் சரசக்கொக்கு அல்லது Sarus Crane எனும் ஒரு கொக்கு இனமாக இனங்காண்கிறார்கள். துணையைக் கவர்வதற்காக இது அழகாக நடனமாடுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

சரசக்கொக்கு துணையாடல்


இலக்கியங்களின் இன்னும் பல வினோதமான பறவைகள் சொல்லப்படுகின்றன. இசையால் மயக்கி வேட்டையாடப்படும் அசுணங்கள், எட்டுக்கால் கொண்ட சிம்புள்கள், இருதலை கொண்ட பேருண்டப் பறவைகள். சந்திரன் ஒளியைக் குடித்து வாழும் சகோரப்பட்சிகள். மழைநீரை மட்டுமே அருந்தி வாழும் சாதகப் பறவைகள் அல்லது சக்கரவாகப் பறவைகள். "சக்கரவாகமோ மழையை அருந்துமாம்" பாட்டு நினைவுக்கு வருகிறதா? (ஐயோ, இங்கும் சினிமாப்பாட்டா 🤦‍♂️)

கந்தபுராணத்தில் முருகனின் படையை அழிப்பதற்காக சூரபதுமன் ஏற்கும் மாய வடிவங்களில் ஒன்று சக்கரவாகப் பறவை. விஷ்ணுவின் நரசிங்க வடிவை அழிக்க சிவன் எடுத்த வடிவம் சிம்புள் அல்லது சரபம். அதை வெல்ல நரசிங்கர் மீண்டும் எடுத்த வடிவம் இருதலைப்புள் எனும் "கண்டபேருண்டப் பட்சி" வடிவம். இந்தப் பேருண்டப்பறவை சிங்களப்பண்பாட்டிலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. கேகாலை மாவட்டத்தின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம் கண்டபேருண்டப் பறவை தான்.

செங்கிளுவை

சகோரம்?
சக்கரவாகம், சகோரம், சாதகம் எல்லாம் இணை பிரியாதவை என்ற குறிப்பு சில இடங்களில் கிடைக்கின்ற போதும், வடமொழி இலக்கியங்களில் இடம்பெற்ற அளவு இவை தமிழில் விரிவாகப் பதிவாகவில்லை. உண்மையில் சந்திரன் ஒளியைக் குடித்தோ, மழைநீரை மட்டுமோ அருந்தி வாழும் பறவைகள் எதுவும் உலகில் இல்லை. இன்று சக்கரவாகம் என்றால் செங்கிளுவை (Brahminy duck) என்றும், சகோரம் என்றால் Chukar Partridge என்றும் இனங்காண்கிறார்கள். அதிலும் செங்கிளுவை வலசை வரும் பறவை. இன்னும் சிலர் வலசை வரும் சுடலைக்குயில் (Jacobin Cuckoo) எனும் பறவையையே சாதகப்பறவை என்கிறார்கள். இதையெல்லாம் எதை வைத்து உறுதி செய்தார்கள் என்று தெரியவில்லை.
சுடலைக்குயில்

இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற குருகு என்னும் பறவை உரையாசிரியர்கள் தவறாக இனங்கண்டது போல, நாரை அல்ல; அது Cinnamon bittern எனும் பறவை என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அதே போல், திருக்குறளில் வரும் மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் என்பது மான்வகை அல்ல; அது கவரிமா - மலையெருது Yak தான் என்பதும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், இப்போது அன்றில் பற்றி இணையத்தில் தேடியபோது அதையும், சக்கரவாகம், சகோரம் முதலியவற்றையும் ஒன்றோடொன்று குழப்பித் தான் பலர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

பண்பாடு என்பது பன்முகத் தன்மை வாய்ந்தது. பண்பாட்டு அடையாளங்களான இலக்கியங்களில் இடம்பெறும் வரலாறு என்ன என்பதைச் சொல்லவேண்டியவர்கள், வரலாற்றறிஞர்கள். அதில் குறிப்பிடப்படும் பறவைகள் மிருகங்களை ஆராயவேண்டியவர்கள், விலங்கியலாளர்கள். தாவரங்களை விவரிக்கவேண்டியவர்கள் தாவரவியலாளர்கள். ஆனால் தமிழ் உலகைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றையுமே தமிழறிஞர்கள் மட்டுமே செய்கிறார்கள். நம் பிரச்சினை இது தான். இலக்கியத்தை மொழி அறிஞர்கள் மட்டுமே ஆராய்வது. தங்களுக்குத் தெரிந்ததை மட்டுமே அவர்கள் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அது பரிசீலனை செய்யப்படாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது. துறைசார் அறிஞர்களும் இதுவரை தங்கள் கோணத்தில் இலக்கியங்களை விரிவாக ஆராய்ந்து பொதுவெளிக்குக் கொண்டுவந்ததில்லை. இதனால் நாம் இழந்ததும் பல.

என் சூழலில் வளர்கின்ற பல மரங்களின் பெயர் எனக்குத் தெரியாது. வேடிக்கை பார்க்கும் போது ஊடே பறந்துபோகும் பறவையின் பெயர் என்னவென்றும் தெரியாது. காட்டில் மேய்ந்த மரையைப் பார்த்து "ஏன் அந்த மான் அப்படி பெரிதாக இருக்கிறது" என்று கேட்ட என் சம வயது நண்பனைக் கண்டிருக்கிறேன். நமக்கு சூழல் பற்றிய அறிவு எந்த மட்டத்தில் தான் இருக்கிறது?

இப்போதெல்லாம் உலக அழிவு பற்றி அடிக்கடி அஞ்சிக் கதைக்கிறோமே, அப்படி ஒன்று இடம்பெற்று, நம்மை மட்டும் இயற்கை மனுக்குலத்தின் ஒற்றைப் பிரதிநிதியாக தப்பிக்க வைத்தால், பசியில் என்னவென்று தெரியாமல் காஞ்சிரம்விதையை உண்டு செத்துத் தொலையும் நிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்? உங்களை நம்பிக் காப்பாற்றிய இயற்கை "என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா" என்று தலையில் அடித்துக் கொள்ளாது?

பாடசாலையின் பாடநூல் கல்வியை விட நாம் படிப்பதற்கு நிறைய இருக்கின்றது. நம் இளந்தலைமுறைக்கும் படிப்பிப்பதற்கு நிறைய இருக்கிறது. இன உணர்வு, மொழி உணர்வு என்பதெல்லாம் நமக்கு அரசியலோடு நின்று விடுகிறது. அப்படி அல்ல. இனத்தில் - மொழியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த அனுபவ அறிவையும் தலைமுறைக்குத் தலைமுறை கடத்துவது தான் உண்மையான இனவுணர்வு. மெய்யான மொழியுணர்வு. அதை எப்போது செய்யப்போகிறோம்? 😏

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner