என்ன கொடுமை சந்திரமுகி இது!

ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  


இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பேய்ப்படங்களுக்கான விதை, சந்திரமுகி போட்டது தான் என்று நினைக்கிறேன். 

சந்திரமுகியின் "ராரா"வுடன் தான் வாயில் நுழையாத வரிகள் கொண்ட திரைப்பாடல்களை பாடமாக்கும் என் விசித்திரமான பொழுதுபோக்கு ஆரம்பமானது. அப்போது குரலும் கொஞ்சம் கேட்கும்படி இருந்ததால் வகுப்புத் தோழர் - தோழிகள் உட்பட எல்லோரும் உட்கார வைத்து ராரா பாடச்சொல்லுவார்கள்.  மூச்சுவிடாமல் "ஜிகிபிகி ஜிகிபிகி சொகசுல மொரவினி" என்று கடைசி சரணத்தைப் பாடி, அவர்கள் முகத்தில் தெரியும் வியப்பைக் கண்டு பெருமிதத்தோடு புன்னகைப்பேன். (பல்கலைக்கழகம் போன பின்னர் தான்  எனக்கு மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கே ராரா தளதண்ணியாகப் பாடம் என்று அறிந்துகொண்டு வெட்கித் தலைகுனிந்தேன். 😞)

அப்போது  கல்முனைக் கல்வி மாவட்டத்தில்  சாரணர் பாசறைகள் இடம்பெறும் போதெல்லாம், பாசறைத்தீயில்,  எங்கள் பாடசாலை சார்பில் தவறாமல் இடம்பெறும் நாடகமாக "இலங்கையில் சந்திரமுகி" இருந்தது. பேய் புகுந்தவன் கட்டிலைத் தூக்கும் போது "உதறவா? பெட்சீற்ற நல்லா உதறவா?" என்று கேட்பதிலிருந்து, பேய் விரட்டும் மந்திரவாதி "ஊத்துங்கடா ஒயில" என்று சொல்வது வரை நாங்கள் அந்த நாடகத்தில் செய்த களேபரங்கள் ஏராளம். ஒருமுறை மாவட்ட சாரணர் பொறுப்பாளர் முஸ்தபா சேரே  தனியே கூப்பிட்டுத் திட்டிக் கெஞ்சிய பின்னர் தான், அந்த நாடகத்தை  நடிப்பதை நிறுத்தினோம். 😆


சந்திரமுகி வெளியான போதே, ஒளித்து வாசிக்கத் தொடங்கியிருந்த வீரகேசரி "நடுப்பூட்டு சினிமாத்துணுக்கு"களிலிருந்து அது ஒரு மொழிமாற்றப் படம் என்று தெரிந்திருந்தது. அது கன்னடத்தில் "ஆப்தமித்ரா" என்ற பெயரில் வெளிவந்திருந்தது என்பதும், ஆப்தமித்ராவுக்கு அடிப்படையே கூட "மணிச்சித்திர தாழ்" எனும் மலையாளப்படம் தான் என்பதும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தன. பெரியம்மா குடும்பத்தினர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார்கள். நான் ஆசையாகக் கேட்டவற்றில் முக்கியமாக அடங்கியிருந்தது மணிச்சித்திரதாழ் - ஆப்தமித்ரா இரண்டினதும் 'படச்சீடி'கள்.  


ஆனால் வீட்டில் 'டிஷ் அண்டனா' இணைப்புக் கிடைத்தபின்னர் 2010 முதல்  ஏசியாநெட் தொலைக்காட்சியில் அடிக்கடி  மணிச்சித்திரதாழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.   2011இல் இணையத்துக்கு அறிமுகமான போது, யூடியூப்பில் தேடி கன்னட ஆப்தமித்ரா, இந்தியில் போல் புலையா, வங்காளத்தில் ராஜ்மஹால் எல்லாவற்றின் உச்சக்கட்ட காட்சிகளையும் பார்த்துவிட்டேன். இவை எல்லாமே சந்திரமுகிக்கு முன்பின்னாக வந்த அதே கதையின் வெவ்வேறு மொழி வடிவங்கள்.  

மலையாளத்தில்  சோபனா,  தமிழ் நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?", கன்னடத்தில் சௌந்தர்யா, தெலுங்கு நாகவல்லியாக ஆடும் "ராரா சரசக்கு ராரா", இந்தியில் வித்யா பாலன் வங்கத்து மஞ்சுலிகாவாக ஆடும் "ஆமி ஜே தொமார்", வங்கத்தில் அனு சௌத்ரி ஒரிய (?) சந்திரமுகியாக ஆடும் "அமர் சோக்கே ஆகுன்" என்று, இந்தியப் பண்பாட்டுப் பல்வகைமையை திகட்ட திகட்ட பார்த்து இரசித்தேன்.

ஒரு முறை வந்து பார்த்தாயா?
(மணிச்சித்திரதாழ் 1993)



     


ராரா சரசக்கு ராரா
(ஆப்தமித்ரா 2004)




ராரா சரசக்கு ராரா
(சந்திரமுகி 2005)





அமர் சோகே ஆகுன்
(ராஜ்மகால் 2005)

ஆமி ஜே துமார்
(போல் பூலையா 2007)


இந்தப் படங்கள் எந்தளவுக்கு என்னைப் பாதித்திருந்ததென்றால், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, ஒரு குறும்படம் எடுக்கத் திட்டமிட்டோம். கண்டியின் இராஜசிங்க மன்னனால் படுகொலை செய்யப்பட்ட "சதுராங்கனி" என்ற சிங்கள நாட்டியமங்கையின் சாபம் இலங்கை மக்களை இன்றுவரை பீடித்திருப்பது தான் கதைக்கரு. நல்ல காலமாக அது நிறைவேறவில்லை. பின்பு அந்தக்கருவையே தமிழ் - சிங்கள நாட்டார் வழக்கிலுள்ள குமாரிஹாமி கதையோடு இணைத்து உவங்கள் இணைய இதழில் "அறவாழி" என்ற சிறுகதையை எழுதினேன்.

ஆனால் மணிச்சித்திரதாழைப் பார்த்த பின்னர் தான் தமிழில் அதன் கதை எத்தனை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கன்னட ஆப்தமித்ராவிலும் அதேதான். இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும் விஷ்ணுவர்த்தனும் அந்தப் படங்களில் நடித்ததால் அப்படி கதையை மாற்றுவது கட்டாயமாக இருந்திருக்கிறது. ஆனால், மலையாளத்தில்  முப்பதடிப் பாம்பும் இல்லை; பேயும் இல்லை. அது அருமையான ஒரு உளவியல் படம். அந்தக் கதை முழுக்க முழுக்க இயங்குவது ஷோபனா பாத்திரத்தின் பிளவாளுமை நோயை மையமாக வைத்துத் தான். 

மணிச்சித்திரதாழின் கங்கா, தான் தங்கியிருக்கும் தறவாட்டில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட  நாகவல்லி எனும் தமிழ் நடனமங்கையோடு தன் பிளவாளுமையை இனங்கண்டு கொள்கிறாள். உளவியல் மொழியில் சொன்னால், அவளது அகம் (Ego) கங்காவாக நீடிக்க, அவளது எதிர் அகம் (Alter Ego) நாகவல்லியாகி விடுகிறது. நாகவல்லி, கங்காவின் கணவனையும் தறவாட்டைச் சூழ வசிக்கும் ஒவ்வொருவரையும், தனது காலத்தவர்களாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறாள்.  தன்னை தமிழ் நாட்டிலிருந்து கடத்தி வந்து ஆசைநாயகியாக வைத்திருந்த தறவாட்டுக் காரணவர் சங்கரன் தம்பியாக நாகவல்லி நினைப்பது, கங்காவின் கணவனை! (மணிச்சித்திரதாழில் உள்ள கதை மாறுபாடும் முக்கியமானது. அங்கு  வேட்டையன்  சரவணன் அல்ல; செந்தில். என்னக் கொடுமை சரவணன் இது!)


மணிச்சித்திரதாழில் நாகவல்லியிலிருந்து கங்காவைக் காப்பாற்றும் இறுதிக்கட்டம், சந்திரமுகியில் இடம்பெறுவது போல் ஒரு பேய் விரட்டும் சடங்கும் இல்லை; "சங்கரன் தம்பி இறந்துவிட்டால் நீ கங்காவை விட்டு போய் விட வேண்டும்" என்ற ஆணை நாகவல்லிக்கு தாந்திரீகச் சடங்கு செய்யும் நம்பூதிரியால் வழங்கப்படுகிறது. சங்கரன் தம்பியை தான் கொன்றுவிட்டதாக நம்பும் கங்காவின் எதிர் அகமான நாகவல்லி, அடியோடு ஒழிந்துபோகிறாள். கங்கா குணமடைந்து விடுகிறாள்.

இந்த உளவியல் விளையாட்டு சந்திரமுகியில் தெளிவாக புரியும்படி இல்லை. அல்லது சாதாரண பாமர மனதுக்குப் புரியாது என்று வாசு அதை முழுக்க முழுக்க பேய்க்கதையாகவே மாற்றியிருக்கிறார். விஸ்வநாதன் கங்காவை  திட்டமிட்டு வேட்டையனின் மணிமண்டபத்துக்கு அழைத்துவருவதையோ, ராமச்சந்திர ஆச்சாரியார் "நீ அவனக் கொன்ன பிறகு இந்த தேகத்த விட்டு போய்டுவியா?" என்று கேட்பதையோ, தமிழ் இரசிகனால் பேய் விரட்டுவதற்கான இயல்பான காரணங்கள் என்றே புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்தக் காட்சிகளின் உளவியல் முக்கியத்துவம் என்ன என்பது, மணிச்சித்திரதாழில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

   


ஒரு வலைத்தளத்தில் இன்னொன்று படித்தேன். மலையாளப் பெண்ணான மணிச்சித்திரதாழ் கங்காவுக்கு பிளவாளுமை நோய் ஏற்பட்டால், அவளால் தமிழ் பேச முடியும் என்பதை உளவியல்படி ஏற்கலாம். ஏனென்றால் தமிழ் மலையாளத்தின் அன்னை மொழி. மலையாளியொருவனின் நனவிலி ஆழ்மனதில் எங்கோ சேரநாட்டுத் தமிழ் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகமும் எதிர் அகமும் மோதிக் கொள்ளும் போது, எப்போதோ கேட்க நேர்ந்த தமிழைக் கண்டறிந்து வெளியே உமிழ்வதற்கு மலையாள ஆழ்மனதால் முடியும். ஆனால் தமிழச்சி தெலுங்கு பேசுவதோ, கன்னடத்தி தெலுங்கு பேசுவதோ, இந்திக்காரி வங்காளம் பேசுவதோ, நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதை அமானுஷ்யமானதாக, ஆவியின் வேலையாக மட்டுமே சித்தரிக்கமுடியும். மணிச்சித்திரதாழிடம் அதன் வேற்று மொழி வடிவங்கள் தோற்று நிற்கும் இன்னொரு இடமாக இதைச் சொல்லலாம்.


மணிச்சித்திரதாழில் நான் கண்டுகொண்டது, சோபனா என்னும் மகத்தான நடிகையையும் கூட. கங்கா நாகவல்லியாக மாறி கட்டிலைத் தூக்கும் அந்த காட்சி ஒன்று போதும், சோபனா யாரென்று சொல்ல. சின்ன வயதில் அப்போது அச்சமூட்டிய ஜோதிகா, இந்த சோபனாவுக்கு ஒருபடி கீழ் தான் என்பேன்.  இன்னொரு இடமும் இருக்கிறது. கங்கா நாகவல்லியாக ஆடும் "ஒருமுறை வந்து பார்த்தாயா?" பாடலின் இரண்டாம் சரணத்தில் ஜேசுதாசின் காந்தர்வக் குரலில் ஒரு வரி வருகின்றது. "நாகவல்லீ மனோன்மணீ" என்று அவர் பாடும்போது  மத்தளம் சிணுங்கும் ஒரு இனிய இடம். அதற்கு சோபனா கொடுக்கும் அபிநயம் இருக்கிறதே, அப்பப்பா! 

                                             

 இந்தக் காட்சிக்கு அடுத்துவரும் மலையாள வரிகளும் பூரிக்கச் செய்பவை.

"மாணிக்ய வாசகர் மொழிகள் நல்கி தேவீ, 
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி.
தமிழகமாகெயும் ஸ்ருங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி"

மாணிக்கவாசகரின் திருவாசக மொழிகள். ஆனால் தமிழன் மறந்தாலும் மலையாளிக்கு கண்ணகியை மறக்க முடிவதில்லை. இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு, நாகவல்லி எங்கோ ஒரு இடத்தில்  கண்ணகியையே நினைவூட்டுகிறாள்.  இளங்கோவை மலையாளப்பாடலொன்றில் காணும் போது ஏற்படும் நெகிழ்வு வார்த்தைகளில் விளக்கமுடியாதது. அவன் கேரளத்தவரின் முப்பாட்டன் அல்லவா?

மணிச்சித்திரதாழுக்கு தன்னை இசையமைக்க அழைக்கவில்லை என்பதற்காக இசைஞானி வருத்தப்பட்டதை இப்படத்தின் இயக்குநர் பாசில் பதிவு செய்திருக்கிறார். "இது போன்ற படங்கள், இசையமைப்பாளனுக்கு உண்மையான சவால்கள். இப்படி ஒரு படத்துக்கு நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருப்பேன்?" என்று கேட்டாராம் அவர். முரண்நகையாக  மணிச்சித்திரதாழின் பாடல்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாக்கிருஷ்ணன் "இப்படத்தை எடுக்காதே" என்று இயக்குநரிடம் அப்போது சொல்லியிருக்கிறார். "படம் தோற்கும். இது சொல்ல வரும் செய்தியை பாமர ரசிகனால் புரிந்துகொள்ள முடியாது." என்றிருக்கிறார் அவர். இன்று மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த பத்து படங்களுள் ஒன்று மணிச்சித்திரதாழ்.

மணிச்சித்திரதாழை சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அண்மையில் பார்த்தேன்.  ஆங்கில உபதலைப்புகளுடனேயே யூடியூப்பில் கிடைக்கிறது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் ஒருமுறை பாருங்கள். சந்திரமுகி தமிழுக்குச் செய்த கொடுமை என்ன என்பதை அது சொல்லும்.


பிகு: பிளவாளுமை நோய் பற்றி ஆசான் எழுதியிருக்கும் அருமையான இரு சிறுகதைகள் இருக்கின்றன. உற்றுநோக்கும் பறவை,  தம்பி. அண்மையில்  வெளியாகியிருக்கும் ஓநாயின் மூக்கு  பிளவாளுமையை மேலோட்டமாகத் தொட்டுச்செல்லும் ஒரு மகத்தான படைப்பு. 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner