சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?

தமிழ்ப்புத்தாண்டு விடயத்தில் எத்தனையோ சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், தனிப்பட்ட ரீதியில் நான் தயங்கி நிற்கும் ஓரிடம் உண்டு. அது அறுபது ஆண்டு வட்டம். சித்திரைப்புத்தாண்டுக்கு எதிராக வாதிடும் சகலரும் தங்கள் அனைத்து ஆயுதங்களும் தோற்றபின்னர் எடுக்கும் பிரம்மாஸ்திரம் இது தான். "சரி, தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்?"

தமிழ் நாட்காட்டியில் பிரபவ முதல் அட்சய வரை அறுபது பெயர்களைக் கொண்ட ஆண்டு வட்டம் வழக்கில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த  ஒவ்வொரு ஆண்டின் பெயராலும் அழைக்கப்படும். தற்போது 2020  ஏப்ரல் 13ஆம் திகதி பிறந்த ஆண்டுக்குப் பெயர்,  34ஆவது பெயரான சார்வரி. இந்த வட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால், அறுபதாண்டுகளுக்குப் பின் 2080உம் சார்வரியாகத் தான் அமையும். 

நன்றி:  Tamil and Vedas வலைத்தளம்

ஆண்டுவட்டப் பெயர்கள் வெறுமனே வழக்கம் சார்ந்தவை, உண்மையில் சித்திரைப்பிறப்புக்கும் அறுபது பெயர்களுக்கும் தொடர்பில்லை. ஆனால் வழக்கம் என்பதற்காக பொருந்தாத மரபுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?  எத்தனை பாரம்பரியங்களை காலத்துக்கேற்ப கைவிட்டு அல்லது சற்று மாற்றியமைத்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்?  அறுபது ஆண்டுவட்டம் காலத்துக்கேற்றது தானா? 

இந்தக் கேள்விக்கு விடை காண முதல், நாம் ஆண்டுவட்டத்தின் தோற்றத்தைப் பார்க்கவேண்டும். பொதுவாக இன்றைய இந்தியப்பழங்குடிகளின் புத்தாண்டுகள் எல்லாமே வானியலைக் கொண்டு உருவானவை தான் என்பது ஏற்கனவே பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுவட்டமும் அப்படி உருவானது தான்.

ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய குறிப்புகள் வடநாட்டில் வழக்கில் இருந்த சூரிய சித்தாந்தம், ஆரியபட்டீயம், பிருகத் சம்ஹிதை முதலிய வானியல் நூல்களில் கிடைத்திருக்கின்றன. அவற்றுக்கு அங்கு "சம்வத்சரம்" என்று பெயர். ஆனால் அவற்றின் படி, அளக்கப்பட்டது வியாழன் கோளை அடிப்படையாகக் கொண்ட காலம் தான். சூரியன், சந்திரன், விண்மீன்களால் மட்டுமல்ல, வானில் உள்ள கட்புலனாகும் பெரும்பாலான விண்பொருட்களை காலக்கணிப்புக்குப் பயன்படுத்த முடியும். அப்படி, வியாழனைக் கொண்டு கணிக்கப்பட்ட காலம் தான் சம்வத்சர ஆண்டு. வியாழ ஆண்டை "சம்வத்சரம்"  என்றும் சூரிய ஆண்டை "வர்ஷம்" என்றும் வடநாட்டு வானியலில் வேறுபடுத்தித் தான் அழைத்திருக்கிறார்கள். அவற்றின் கணிப்புப்படி, ஒரு வியாழ ஆண்டுக்குரியவை சுமார் 361 நாட்கள். அதாவது சூரிய ஆண்டை விட (அண்ணளவாக 365.25 நாள்)  4.22 நாள் குறைவு. 

ஆனால் தென்னகத்தில் சம்வத்சரங்கள் நேரடியாக வியாழனின் இயக்கத்தோடு சம்பந்தப்படுத்தப்படவில்லை. இங்கு ஏற்கனவே வழக்கில் இருந்த சூரிய அல்லது சந்திர ஆண்டொன்றைக் குறிப்பிடவே சம்வத்சர ஆண்டுகள் பயன்பட்டன. எனவே இங்கு வருஷம், சம்வத்சரம் இரண்டும் ஒத்தகருத்துச் சொற்கள் ஆகிவிட்டன.  இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது என்பதில் தெளிவில்லை. கர்நாடகத்தை ஆண்ட சாளுக்கிய மன்னன் மங்களேசனின் பொபி 602ஆம் ஆண்டுக் கல்வெட்டில் 53ஆவது சம்வத்சர ஆண்டான சித்தார்த்தி குறிப்பிடப்பட்டிருப்பதே தென்னகத்தின் ஆண்டுவட்டம் பற்றிய மிகப்பழைய  குறிப்பு என்கிறார்கள்.

இன்றும் தமிழர், கன்னடர், தெலுங்கர் ஆகிய மூன்று இனத்தாரும் தான் சம்வத்சர ஆண்டுப்பெயர்களை தங்கள் புத்தாண்டின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். (தமிழரது சித்திரைப் புத்தாண்டு சூரியக்கணக்கு. கன்னடர்-தெலுங்கரின் யுகாதி புத்தாண்டு சந்திரக்கணக்கு. யுகாதியின் படி சார்வரி சம்வத்சரம் போன மார்ச் 25ஆம் திகதியே பிறந்துவிட்டது). 

தமிழகத்தைப் பொறுத்தவரை, பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கல்வெட்டுக்களில் தான் இந்த சம்வத்சரப் பெயர்கள் இடம்பெற ஆரம்பிக்கின்றன.  குறிப்பாக விஜயநகர அல்லது நாயக்கர் காலக் கல்வெட்டுக்களில்.  முக்கியமாக தமிழ்ச் சோதிடம் பற்றிய பல தகவல்களை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகின்ற இலங்கையின் மிகப்பழைய சோதிட நூலான சரசோதிமாலையிலே கூட (1310இல் எழுதப்பட்டது) ஆண்டுவட்டப் பெயர்கள் எங்கும் இல்லை.

பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தையதாகக் கருதப்படும்  "வருடாதி வெண்பா" என்ற நூலில் தான் நேரடியாக அறுபது ஆண்டுகளின் பெயர்ப்பட்டியல் தமிழில் முதன்முதலாகக் கிடைக்கின்றது. அதை சித்தர் இடைக்காடர் பாடியதாகச் சொல்கிறார்கள். அவர் தான் பாடினார் என்பதற்கு வேறெங்கும் சான்றுகள் இல்லை.  அது காலத்தால் பிந்திய இட்டுக்கட்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லலாம். பத்தாவது சம்வத்சரமான தாது வருடத்துக்கு 'வருடாதி வெண்பா'வின் பாடல் இதுதான். தாது வருடத்தில் வேதனையே இல்லை. விளைவு இருக்குமாம். குளிர்மழை பொழியுமாம். உலகம் உய்யுமாம். 

தாது வருடம் தராதலத்தோர் வாழ்ந்திருப்பார் 
வேதனையுமில்லை விளைவுண்டு – சீத 
மழை பெய்யும் பரிவாரம் பேருடனே 
எந்நாளும் உய்யும் படி உலகிலுண்டு

வேதனை என்னவென்றால் 1876இல் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நீடித்து தமிழகத்தையே உலுக்கிய தாது வருடப் பஞ்சம், உலக வரலாற்றில் மோசமான பேரிடர்களில் ஒன்று. அது ஆரம்பித்தது தாது வருடமான 1876இல் தான். 

அது போகட்டும். இந்தப்பட்டியலை எதிர்ப்பவர்கள் எழுப்பும் விமர்சனங்கள் மொத்தம் மூன்று இருக்கின்றன. முதலாவது, நாம் ஏற்கனவே பார்த்த 'தமிழ் ஆண்டுக்கு வடமொழிப் பெயர் ஏன்' என்பது. 

"ஆண்டுவட்டம் மீண்டும் மீண்டும் தொடர்வதால் மூடத்தனமானது, அதனால் காலம் காட்டமுடியாது" என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்வி தவறு. அப்படி அல்ல. நமது வாரங்கள், மாதங்கள் எல்லாமே மீளத்தொடரும் வட்டங்கள் தான். குறித்த ஆரம்பப் புள்ளியொன்றைத் தீர்மானித்து வட்டத்துக்கு இலக்கமிட்டு இத்தனையாம் வட்டத்தின் இந்த ஆண்டு என்று குறிப்பிட்டால், அவற்றாலும் காலம் காட்டமுடியும். என்ன, நாம் அப்படி காலம் கணிக்க அதைப் பயன்படுத்துவதில்லை.

அறுபது ஆண்டுகளை எதிர்ப்பவர்கள் கூறும் மூன்றாவது காரணம் கொஞ்சம் பதினெட்டு சக சமாச்சாரம். பெண் வடிவெடுத்த நாரதருக்கும் கண்ணனுக்கும் பிறந்த அறுபது குழந்தைகள் தான் இந்த சம்வத்சரங்கள் என்ற கதை அது. 

நாரதர் பெண்ணாக மாறிய கதை பல்வேறு புராணங்களில் இடம்பெற்றிருப்பது தான். தேவி பாகவதத்தில் அவர் சௌபாக்ய சுந்தரி எனும் பெண்ணாக மாறி கன்னோசி மன்னன் தாலத்துவஜனை மணந்து பன்னிரண்டு அல்லது எட்டு பிள்ளைகளைப் பெறுகிறார். அதன் சில வேற்றியங்களில்  சௌபாக்ய சுந்தரிக்கு குழந்தைகளே இல்லை. பத்ம புராணத்தின்படி கிருஷ்ணனின் ராசலீலையைக் காண்பற்கு பெண்ணாக மாறி கோலோகம் சென்று ஒருவருடம் கோபிப்பெண்ணாக மகிழ்ந்திருக்கிறார் நாரதர்.

நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த ஒவ்வொரு புராணக்கதைக்கும் பின்னே சொல்லப்படும் நீதி வெவ்வேறு. ஆனால் இவை எதிலும் கண்ணனுக்கும் நாரதப்பெண்ணுக்கும் பிறந்த அறுபது வருடங்கள் என்ற கதை இல்லை. அது உண்மையில் கடந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறுகுறிப்பு தான். வெறும் இந்துத்தொன்மம் என்பதற்கு மேல் அதற்கு எவ்வித முன்னுரிமையோ நம்பகத்தன்மையோ கொடுக்கத்தேவையில்லை.

ஒட்டுமொத்தத்தில், ஆண்டுவட்டம் இப்போதும் தமிழ் உலகுக்குத் தேவையா என்ற கேள்விக்கு அறுதியும் இறுதியுமான பதில், தேவையே இல்லை என்பது தான். ஏன்?

சூரிய - சந்திர நகர்வை காலக்கணிப்பில் பயன்படுத்தும் தமிழ் நாட்காட்டிக்கு வியாழக் கணிப்பீடு தேவையற்றது. அதிலும் சூரிய ஆண்டுகளை வியாழ ஆண்டு சம்வத்சரத்துக்குச் சமனாகக் கணிக்கும் இன்றைய பட்டியல் எவ்விதத்திலும் காலத்துக்குப் பொருத்தமானதே அல்ல. சரியாகச் சொன்னால் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே, இவை வழக்கில் வந்திருந்தபோதே, திருத்தியிருக்கவேண்டிய தவறு இது. 

இன்னொன்று, சித்திரைப்புத்தாண்டு தமிழரின் மரபான புத்தாண்டல்ல என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு ஏற்பட்டதற்கு முதன்மையான காரணமே இந்த வடமொழிப் பெயர்கள் தான். தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்? 

சம்வத்சரக் கணக்கு இன்றும் சமயம் சார்ந்ததாகவே பயன்படுகிறது - பஞ்சாங்கங்களில், கோவில் அறிவித்தல்களில், மங்கல நிகழ்வுகளின் அழைப்பிதழ்களில். அங்கெல்லாம் ஆண்டுவட்டப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை தமிழர்களே உணர்ந்துகொண்டு நிறுத்தவேண்டும். வருடப்பிறப்பு அறிவித்தல்களிலும்  விளம்பரங்களிலும் அந்தப் பெயர்களை பிரபலப்படுத்துவதை தமிழ் ஆர்வலர்கள் இனி மேற்கொள்ளவே கூடாது.

ஆண்டுப்பெயரை பயன்படுத்தாமல் அழைப்பிதழ் தயாரிப்பதென்றால், "நிகழும் மங்களகரமான.....??" அடுத்து என்ன போடுவது? நம் வருடம் வெறுமனே  மொட்டையாக இருப்பதா?

கொல்லம், ஹிஜ்ரி போல தமிழருக்கென ஆண்டுக்கணக்கொன்று இதுவரை உத்தியோகபூர்வமாக இல்லை தான். திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்று ஏற்கனவே நம் மத்தியில் வழக்கில் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்கனவே பல குழப்பங்கள் இருக்கின்றன. உலகின் எல்லா நாட்டுத் தமிழரும் திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசின் படி தை முதலாம் திகதி அது ஆரம்பிக்கின்றது. அதன் கணிப்புக்கு (பொது ஆண்டோடு 31ஐக் கூட்டுவது) எந்தவிதமான அறிவியல் காரணமும் இல்லை. வள்ளுவர் பொமு 31இல் பிறந்தார் என்பது வெறுமனே மறைமலையடிகளின் ஊகம் தான். முன் தோன்றி மூத்தகுடி என்று பெருமைபேசும் தமிழினம் ஒரு அறிவியல் ஆதாரமோ வானியல் - வரலாற்றியல் காரணங்களோ இல்லாத ஒரு ஆண்டுக்கணக்கையா தனக்கெனப் பின்பற்றுவது?

நமக்கென நாம்  ஒரு ஆண்டுக்கணக்கை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.

1. கீழடி முதலிய தமிழர் தொல்மையங்களில் கிடைக்கும் ஏதாவது மிகப்பழைமையான ஒரு பொருளை, காபன் திகதியிடலுக்கு உட்படுத்தி அதன் சரியான பயன்பாட்டு ஆண்டைக் கண்டுபிடித்து, அதில் துவங்கும் "தமிழ் ஆண்டு" ஒன்றை நிர்ணயித்தல். அதைவிடப் பழைய பொருள் ஒன்று எதிர்காலத்தில் கண்டறியப்படலாம் தான். ஆனால் நமக்கு இது பயன்படுவது ஒரு நியமக் கணக்கீட்டுக்காக. அந்தப்பெறுமானம் எதிர்காலத்தில் கூடுவதாலோ குறைவதாலோ, ஆண்டுக்கணக்கில் எவ்வித தாக்கமும்  ஏற்படத்தேவையில்லை.

2. வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழரிடம் வழக்கில் இருக்கும் கலி ஆண்டு, சக ஆண்டு, விக்கிரம ஆண்டு என்பவற்றில் ஒன்றை தற்காலிக நியமமாக எடுத்துக்கொள்ளல். இவற்றில் பெரிய பெறுமானமாக, அதேவேளை பெரும்பாலான இந்திய இனக்குழுமங்களின் உத்தியோகபூர்வமற்ற காலக்கணிப்பு ஆண்டாக இருக்கும் கலியாண்டை நான் தனிப்பட்ட ரீதியில் இப்போதைக்கு முன்மொழிவேன்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திராமல் இதில் ஒன்றை யாரேனும் செய்ய முயலலாம். அவசரமில்லை. "கொவிட்" பேரிடரிலிருந்து உலகம் மீண்ட பின்னர் கூடச் செய்யலாம் 😊.

கடைசியாக ஒன்று, தனிப்பட்ட ரீதியில் ஆண்டுவட்டம் காலத்துக்குப் பொருத்தமற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், மரபுவாதிகளுக்கு அது  சற்று கடினமாக இருக்கும் என்பது புரிகிறது. எவ்வாறேனும் அறுபது ஆண்டு வட்டத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் என்ன செய்வது?

அதற்காக ஏற்கனவே ஓரளவு பிரபலமாக இருக்கும்  தமிழறிஞர் சத்தியவேல் முருகனாரின் அறுபது தமிழ் வருட பெயர் பட்டியலை  பரிந்துரைக்க முடியாது. அந்தப் பெயர்கள் வடமொழிப் பெயர்களுக்குச் சமனான தமிழ் மொழிபெயர்ப்புகள் அல்ல. சில மொழிபெயர்ப்புகள் முற்றிலும் தவறானவை கூட. எனவே பொருத்தமான ஒரு அறுபது பெயர்ப்பட்டியல் ஒன்றை தமிழர்களே தாமாகத் தயாரித்துக்கொள்ள வேண்டியது தான். 

தாது வருடப் பஞ்சத்தை சுட்டிக்காட்டி, இந்த உரையாடலை தொடக்கி வைத்து, என்னோடு பேசிக்கொண்டிருந்த சைவ அறிஞர் முருகவேள் ஜயச்சந்திரன் ஐயா அவர்கள், தமிழ்ச்சைவர்கள் வேண்டுமென்றால், சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் அறுபது பேரின் பெயரைப் பயன்படுத்தலாமே என்று  கூறினார். தேவார முதலியரான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால், ஏனைய அறுபதின்மர் பெயரையும் அறுபது வருடங்களுக்குச் சூட்டலாம் என்றார் அவர். இதை சைவ உலகு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

எது எவ்வாறேனும், அறுபது ஆண்டுகள் என்ற காலத்துக்கொவ்வாத மரபிலிருந்து தமிழர்கள் முற்றிலும் வெளியேறுவதே சாலப்பொருத்தம் என்று கருதுகிறேன்.  வயதிலும் அனுபவத்திலும் சிறிய ஒருவனின் பரிந்துரை இது. நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற முடிவு தமிழ் அறிஞர்பெருமக்களின்  கையில்.

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
தம்பை மாநகர் புத்தாண்டு
Share:
spacer

No comments:

Post a comment