அம்மம்மா வீட்டில் நடுவறையிலிருந்த புழுதி பிடித்த புத்தக அலுமாரியில் மூன்று ஏட்டுச்சுவடிகளைக் கண்டபோது எனக்கு வயது பதினொன்று. அவை அலுமாரியின் அடித்தட்டில், செல்லரித்து பக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த "மகாமாரித்தேவி திவ்வியகரணி"க்கும் "மூவருலா"வுக்கும் நடுவே, சற்று நைந்துபோன "டொப்டெக்ஸ்" வேக்கில் சுற்றிக் கட்டி சொருகப்பட்டிருந்தது. டொப்டெக்ஸ் அப்போது கல்முனையில் பிரபலமாக இருந்த துணிக்கடை. உடுப்பு வாங்கும் கடையின் பெயர், பெஸ்ட்பொயிண்டா, றஸ்பாஸா, முபாரக்கா பெயர் பற்றியெல்லாம் கவலை இல்லை. உடுதுணி வாங்கும் எல்லா பொலித்தீன் பைகளுமே எங்கள் வீட்டில் "டொப்டெக்ஸ் வேக்கு" தான்.
வேக்கில் இரண்டு பழுப்புநிற சிறு ஏட்டுச்சுவடிகள். சணற்கயிறால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தன. மூன்றாவது மிகப்பெரியது. கறுப்பு நிறம். கையில் தூக்கி வைத்தால் நீளமான கருங்காலிப்பலகை போல பாரித்தது.
நான் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தபோது அம்மப்பா வீட்டில் இல்லை. காளையடிக்கு சென்றிருந்தார். இது மாந்திரீகம் செழித்த பூமி. மந்திரம் எழுதிய வாகடங்கள் பற்றி அவர் கதை கதையாகச் சொல்லியிருந்தார். சில ஏடுகளைத் திறப்பதற்கு முதல் சொல்வதற்கென்றே மந்திரங்கள் உண்டு. வசியம், ஏவல் போன்றவற்றுக்கான மந்திரங்களை எளியவர்கள் பார்க்கக்கூடாது என்றே அந்த ஏற்பாடு. குறித்த மந்திரம் சொல்லாமல் திறந்தால் கதை முடிந்தது. மந்திரம் படிக்கும் ஆவலில் பரிசாரியார் ஒருவரின் மந்திர ஏடுகளை இரகசியமாகப் இரவில் திருடி வந்து வாசித்த ஒருவர் மறுநாள் கையில் ஏட்டுடன் இரத்தம் கக்கி செத்துக்கிடந்த கதையை அவர் சிலநாட்களுக்கு முன் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த ஏட்டை விரித்துப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. வீட்டில் அம்மம்மாவிடமோ ஏனையவர்களிடமோ சொன்னால் பூசை கிடைப்பது உறுதி. பேசாமல் மூன்றையும் சுற்றிக்கட்டி வைத்துவிட்டேன்.
மாலை அம்மப்பா திரும்பியதும் தயங்கித் தயங்கி ஏடுகள் பற்றிக் கேட்டேன். "பயந்திற்றாயெல்லோ?" சத்தமாகச் சிரித்தபடி அலுமாரிக்கு அழைத்துச் சென்று டொப்டெக்ஸ் வேக்கை திறந்தார். பேக்கைத்திறக்கும் சரசரப்பே அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. இரண்டு சிறிய ஏடுகளும் ஏதோ புதையல் இரகசியம் எழுதிய புத்தகங்கள் போல் விதிர்விதிர்க்கச் செய்தன.
"இது குளுத்தில் காவியம். அம்மங்கோயில்ல குளுத்திலண்டக்கி ராவுல படிக்கிர. மத்தது பெருங்கதை. புள்ளையார் நோம்புல படிக்கிர."
"அப்ப அது?" பெரிய ஏட்டைச் சுட்டிக்காட்டினேன்.
"அது அம்மன் வளக்குரை. உப்ப விரிக்கப்பொடா. சடங்கு நேரத்தில மட்டும் தான் துறக்கலாம்"
"அதெப்பிடி? குளுத்தில் காவியத்த துறந்தேலே?"
"அத என்னேரமும் விரிக்கலாம். குளுத்தில் காவியத்தில குளுத்திப்பாட்டு மட்டுமில்ல. கனமா இரிக்கி. உனக்குப்ப அதெல்லாம் தேவல்ல. "
எனக்கு ஓரளவு புரிந்தது. பெரிய ஏட்டில் கண்ணகி வழக்குரை மட்டும் இருக்கிறது. வைகாசிச் சடங்கில் ஏழு நாளும் கோவிலில் பாடப்படுவது. அதை மற்ற நேரங்களில் அவிழ்த்துப் படிக்கக்கூடாது. சடங்கின் ஏழாம் நாள் இரவில் பாடப்படும் குளிர்த்திக்காவியம் இப்போது என் கையில் இருக்கிறது. அதில் வேறு சில பாட்டுகளும் இருப்பதால் படிப்பதில் தவறேதுமில்லை. அதை விரித்துப் பார்த்தேன்.
"சிரபொருநதுமைஙகரனே. இதென்னாதி இது? ஒண்டும் விளங்கல்ல"
"அதப்பிடி இல்ல. எழுத்தில குத்து இருக்காது. இடைவெளி இருக்காது. நம்ம தான் விளங்கி வாசிக்கோணும். நீ சொன்னது சீர் பொருந்தும் ஐங்கரனே"
எனக்கு வியப்பாக இருந்தது. குற்று இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாக்கியங்களா, அவற்றை படித்து புரிந்துகொள்ளவும் முடியுமா?
"சரி இஞ்ச கொண்டா. இதெல்லாம் தமிள் எளுத்தெண்டு உனக்கு விளங்கினதே பெரிய விசயம்."
அம்மப்பா அப்படிச் சொன்னது என் தன்மானத்தை சீண்டியது. ஏன், இது அத்தனை கடினமா? என்னால் வாசிக்க முடியாதா?
"அம்மப்பா இது மூண்டையும் தாங்கோ, வாசிச்சிப்போட்டு தாறன்"
"உனக்கென்னத்துக்குறா மனே?"
"தாங்கோவன். நான் எல்லாம் படிக்கப்போறன். குளுத்தில் பாடமாக்கோணும்."
அவர் சிரித்தார் "நீ பாடமாக்கி என்னெய்யப்போறாய், வடுவா, இது செஞ்சேரியான் படிக்கிரது."
அவர் தென்சேரி. அவர்கள் தான் குளிர்த்தி பாடமுடியும். அம்மன் கோவிலில் எனக்கு உரிமை இல்லை. நான் வடசேரி. அம்மம்மாவின் குடி.
"அதெல்லாம் தெரியா. உப்ப தரப்போறேலோ இல்லயோ"
"செரி. அப்ப மத்த ரெண்டயும் கொண்டோ. வளக்குரை இஞ்சே கிடக்கட்டும். கவனமா வெச்சிக்கொள்ளு"
எனக்கும் சரி போலத் தான் தோன்றியது. சும்மா பார்க்கும் போதே அச்சமூட்டிய அந்தக் கருங்காலிப் பலகை அங்கேயே இருக்கட்டும்.
நான் இரண்டு ஏட்டையும் எங்கள் வீட்டுக்குக் கொணர்ந்து சாமியறையில் வைத்தேன். குளிர்த்திக் காவியம் ஏட்டைத் தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். இரண்டு நாட்கள் கஷ்டமாகத் தான் இருந்தது. மெல்ல மெல்லப் பழகி விட்டேன்.
வாழ்க்கையின் வியப்புக்குரிய விடயங்களில் ஒன்று இருக்கிறது. இலகுவில் கிட்டாத பொருளொன்றில் ஏற்படுகின்ற ஆர்வம், அது கிடைத்த பின்னர், ஏற்பட்ட வேகத்திலேயே வடிந்து விடும். ஏடுகள் பல மாதங்கள் அதற்குப் பிறகு விரிக்கப்படவே இல்லை. சாமியறையில் தினமும் அம்மாவின் ஒற்றைச் செவ்வரத்தம் பூக்களைச் சூடும் புனிதப்பொருட்களாக அவை மாறி மாதங்கள் கடந்திருந்தன. அம்மப்பா இறந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் அவற்றை எடுத்துப்பார்த்தேன்.
அப்போது 2004 டிசம்பர் பாடசாலை விடுமுறை. அம்மப்பா இறந்தபின், அவரது புத்தக அலுமாரி எனது கைகளுக்கு வந்திருந்தது. ஏதோ எண்ணம் தோன்றி தேடிப்பார்த்தபோது வழக்குரை ஏடு இருந்த டொப்டெக்ஸ் வேக்கைக் காணவில்லை. அல்லது அவர் யாருக்கும் கொடுத்திருந்தாரோ! அது இல்லாமல் போய்விட்டது. அந்தக் கருங்காலிப் பலகையை அஞ்சினேன் என்பதால் அதன் இழப்பு அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. (இப்போது வேதனையாக இருக்கிறது 😔)
பிறகு தான் நினைவு வந்து சாமியறையில் பட்டுச் சுற்றப்பட்டு இன்னுமொரு சாமியாக மாறியிருந்த ஏடுகளை அவிழ்த்து மீண்டும் படிக்கத் தொடங்கினேன். அத்தனை கடினமாக இருந்தது. பிள்ளையார் பெருங்கதை ஏற்கனவே வீட்டில் புத்தகமாக இருந்தது. ஆனால் குளிர்த்திக் காவியம்? சில சொற்களை இன்னதென இனங்காணவே முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை சர்வசாதாரணமாக வாசித்தவன் நான் எனும் எண்ணமே வெட்கத்தைத் தந்தது. மற்றவர்கள் முன் அல்ல, தனக்கு முன் தானே அவமானப்படுவது தான் உலகின் மிகப்பெரிய அவமானம்.
எனக்குள் இருந்த இன்னொருவன் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். இவன் வாயை அடைக்கவேண்டும். அடுத்த தடவை இதை விரித்து இவனிடம் சர்வசாதாரணமாக வாசித்துக் காட்டவேண்டும். கடைசியில் அவனே ஐடியா தந்தான். "ஏட்டில வாசிக்கிர தானே கஸ்ரம்? இடைவெளி வுட்டு குத்து வெச்சி ஒரு கொப்பில எழுதிவையன்?"
2004 டிசம்பர் 21 அந்தக் காரியத்தைத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பாட்டு என்று கண்ணகை அம்மன் காவியத்தை கைப்பிரதியாக எழுதிக்கொண்டிருக்கும் போது சுனாமி அனர்த்தம். இடம்பெயர்ந்து சின்ன மாமாவின் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களிலும் கொப்பியை எடுத்து வந்து எழுதிக்கொண்டிருந்தேன். அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் 2005 ஜனவரி நான்காம் திகதி அதை வெற்றிகரமாக எழுதிமுடித்தேன்.
15 வருடங்கள் தாண்டிய பொக்கிஷம். அம்மன் காவியம் கையெழுத்துப் பிரதி |
வழக்குரை போல் இல்லாமல், இந்த ஏட்டை எந்த நேரமும் எடுத்துப் படிக்கலாம் என்று ஏன் அம்மப்பா சொன்னார் என்று அப்போது புரிந்தது. அதில் உண்மையில் ஆறு காவியங்கள் இருந்தன. எழுதி முடித்த காவியம் தவிர, குளிர்த்திக் காவியம், கண்ணகி அம்மன் வயந்தன் பள்ளு, கண்ணகி அம்மன் கும்மி, செவ்வாட்டு வயந்தன், ஐவர் காவியம் என்று ஐந்து. ஐவர் காவியம், மகாபாரதத்தின் சுருக்கம். திரௌபதி வழிபாட்டோடு தொடர்புடையது. செவ்வாட்டு வயந்தனில் கொம்புமுறி வசைப் பாடல்கள் இருந்தன. ஏனைய நான்கும் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்குரியவை.
குளிர்த்திக் காவியம் தான் என் பிரதான இலக்கு என்பதால், அடுத்து அதை எழுதினேன். பின்பு பள்ளும் கும்மியும். அவை முடிந்ததும் மீண்டும் ஆர்வம் வடிந்துவிட, ஏடு மீண்டும் சாமியறையை தஞ்சமடைந்தது. இடையில் சம்மாந்துறையில் ஒரு கண்காட்சிக்காக ஒரு ஆசிரியர் வந்து கேட்டபோதும், என் பாடசாலையில் கலைநிகழ்ச்சிகளுக்காக தேவைப்பட்டபோதும் அது அங்கிருந்து எழுந்தருளி ஊர்வலம் சென்று திரும்பியது.
அதன் பின் பழைய ஆர்வம் தூண்டப்படுவதற்கு ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. உயர்தரப்பரீட்சையின் பின் கிடைத்த விடுமுறையில் 2011இல் ஏட்டிலிருந்த செவ்வாட்டு வயந்தனை கைப்பிரதியாக எழுதினேன். எஞ்சியிருந்தது ஐவர் காவியம் மட்டும் தான். 21 ஓலைகள் கொண்ட அந்தச் சுவடியில் அது தான் நீளமானது. ஐந்து ஓலைகளில் 26 பாடல்கள். ஏனோ அதை எழுத பொழுதும் கூடவில்லை. எனக்கு கண்ணகி அளவு திரௌபதி மனதைக் கவர்ந்தவள் அல்ல என்பதும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.
செவ்வாட்டு வயந்தன் கையெழுத்துப் பிரதி |
கடைசியாக 2014இல் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அந்த குளித்தில் ஏட்டை எடுத்துச் சென்றேன். ஒரு குறும்படத்துக்காக. அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். ஆனால் அது மட்டக்களப்பு மாந்திரீக ஏடு என்று பொய் சொல்லி இளமுறை நண்பர்களை சந்தோசமாக 'பேய்க்'காட்ட முடிந்ததில் எனக்கு குதூகலமாகப் போய்விட்டது. கூட இருந்த ஒன்று இரண்டு கிழக்கிலங்கை நண்பர்கள் ஆமாம் சாமி போட, "அப்ப இதெல்லாம் உண்மைதானாடா" என்று அவர்கள் முகம் வெளிறி அமர்ந்திருக்க, சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமென்று தலையாட்டினேன்
அதற்குப் பிறகு அந்த இரண்டு ஏட்டையுமே மறந்துவிட்டேன். இரண்டாண்டுகளுக்கு முன் நூலகம் நிறுவனத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டத்துக்காக ஊர் முழுக்க அலைந்தபோது, அம்மப்பாவின் சொந்த வீட்டிலிருந்து உதிரி ஓலைகளாக அவரது தாய்வழி முதுசமான "வள்ளி அம்மானை" எனும் ஏடு கிடைத்தது. அதை பேஸ்புக்கிலும் பகிர்ந்திருக்கிறேன். அது சிதைந்த உதிரி ஓலைகளாகக் கிடைத்ததில் எனக்கு அத்தனை கவலை இருக்கவில்லை. ஏனென்றால், சித்தாண்டி முருகன் கோவிலில் அது பாடப்படும் தகவல் கிடைத்திருந்தது. அவசரமென்றால் எப்படியும் அங்கு தேடி எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை தான். (அந்த அம்மானை போன ஆண்டு டிசம்பரில் அச்சில் வெளிவந்து விட்டது என்பது நிறைவாக இருக்கிறது. கலாநிதி.முருகு தயாநிதி அவர்களின் பதிப்பு. 2019, வள்ளியம்மன் அம்மானை, புதுச்சேரி தமிழ்ப்புதுவை வெளியீடு.)
வள்ளி அம்மானையை கண்டெடுத்தபோது வீட்டு ஏடுகளின் நினைவு ஏற்பட்டது உண்மை. ஆனால் தேடவில்லை. எங்கே போகப்போகிறது. இங்கு தான் எங்கோ பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எல்லாம் நேற்று மாலை வரை தான்.
அக்காவும் அத்தானும் புத்தாண்டுக்காக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். எங்காவது ஏடு கிடைத்தால் எடுத்து வை என்று அக்காவிடம் சொல்லியிருந்தேன். மாலை தான் அக்கா சொன்னாள் "உண்ட ஏடு கிடைச்சிது பாத்தயோ? அந்தப் பெட்டிக்குள்ள இரிக்கி" அவள் சொன்னதில் இருந்த இகழ்ச்சிக் குறிப்பை நான் கவனிக்கவில்லை. ஆர்வத்தோடு போய் பெட்டியைத் தூக்கினேன். உள்ளே செல்லரித்த புத்தகங்களும் துண்டு துணிகளும் கையோடு வந்தன. அதிர்ந்தபடி பெட்டியைக் கவிழ்த்தால், அரிக்கப்பட்டு உதிர்ந்த ஓலைத்துண்டங்கள் சிதறி விழுந்தன. எலியின் வேலை. ஒரு ஓலை கூட முழுமையாக எஞ்சவில்லை. எல்லாம் போய்விட்டது. இனி அவை இல்லை. ஒன்று கூட இல்லை. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது.
நல்ல காலமாக அவற்றில் பிள்ளையார் பெருங்கதை ஓலைகளைக் காணமுடியவில்லை. எனவே கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது. அது மட்டுமாவது எங்கோ தப்பியிருக்கிறதென்று. இந்த விடுமுறைக் காலத்துக்குள் எப்படியாவது தேடி எடுத்துவிடவேண்டும். "செரி. அப்ப மத்த ரெண்டையும் கொண்டோ. கவனமா வெச்சிக்கொள்ளு" என்று அம்மப்பா ஆதூரமாகத் தந்த இரண்டில் ஒன்று. அது அம்மப்பாவின் எனக்கான பரிசு. விலைமதிப்பற்ற பரிசு. அதில் ஒன்றை என்றைக்குமாக இழந்துவிட்டேன்.
ஓரளவு மனநிறைவைத் தருவது என்னவென்றால், அதன் கையெழுத்துப் பிரதி என்னிடம் இருக்கிறதென்பது தான். ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரு நினைவுமலரில் பிரசுரிப்பதற்காக அதிலிருந்த பாடல்களை அண்ணா ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். செவ்வாட்டு வயந்தன் தவிர ஐந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நூல்களில் முழுமையாக அச்சில் வெளிவந்திருக்கின்றன. வீ சீ கந்தையா பதிப்பித்த கண்ணகி வழக்குரையில் (1968) அம்மன் காவியமும் குளிர்த்தியும் பின்னிணைப்பாக வெளிவந்திருக்கிறது.
ஐவர் காவியம், கிழக்கிலங்கை கிராமிய இலக்கியங்களின் தொகுப்பான "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் (1971) திரௌபதையம்மன் காவியம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அம்மன் கும்மியும் அம்மன் பள்ளும் நா.நவநாயகமூர்த்தி அவர்களின் "தம்பிலுவில் கண்ணகி வழிபாடு" (1999) நூலில் வெளியாகி இருக்கிறது. அதிசயம் என்னவென்றால் அவருக்கு ஏட்டிலிருந்த இந்த கும்மியையும் பள்ளையும் கையெழுத்துப்பிரதியாக எழுதிக்கொடுத்தது அம்மப்பா தான். அதை அவர் அங்கு அடிக்குறிப்பாக எழுதியிருக்கிறார். செவ்வாட்டு வயந்தனின் சில பாடல்கள் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அச்சில் வராத பாட்டுக்கள் அதிகம். அவற்றை எப்படியோ கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றிவிட்டேன். அதுவரைக்கும் எனக்கு திருப்தி தான்.
இந்தப் பாடல்களில் எதுவுமே அச்சில் வராமல் ஒருவேளை இழக்கப்பட்டிருந்தால் அப்படி என்ன அரிய செய்தி இல்லாமல் போயிருக்கும்? இரண்டு சிறிய உதாரணங்களைச் சொல்கிறேன். அம்மன் வயந்தன் பள்ளு இறுதியாக இப்படி முடிகிறது.
"பார்வாழி தென்திருக்கோயில் குமரன் வாழி
பார்த்திப நரேந்த்ரசிங்க மூர்த்தியும் வாழி
கார்வாழி தம்பிலுவில் ஊர்வாழி - வந்தருள்செய்
கண்ணகைத் தாய் நீடூழி காலம் வாழியே"
பார்த்திப நரேந்திரசிங்க மூர்த்தி யாரென்று தெரியுமா? 1707 - 1739 இடையே கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் வீர நரேந்திரசிங்கன். அடுத்தது அம்மன் கும்மியில் வரும் இறுதிப் பாட்டு.
"வாழி பூவாழி மறைவாழி - மன்னன்
வர ராசசிங்கன் வாழி
ஊழிகாலம் வரை பட்டின் கண்ணுறை
கண்ணகைத் தாயாரும் வாழியதே"
இவன் எந்த ராஜசிங்கன் என்று தெரியாது. கிழக்கிலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கண்டி மன்னர்களாக வாய்மொழியில் நினைவுகூரப்படுபவர்கள் பலர். இரண்டாம் இராஜசிங்கன் (1635–1687), விஜய ராஜசிங்கன் (1739 - 1747) மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747–1782). ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் எவரும் ஆகலாம்.
தம்பிலுவில் கண்ணகியைப் புகழும் இவை இரண்டும் என் ஊரில், ஒருவேளை என் கொள்ளுப்பாட்டனோ அவரது எள்ளுப்பாட்டனோ பாடியிருக்கக்கூடிய பாடல்கள். அவர்கள் பாடியது என்பதற்கு மேல், இன்றியமையாத முக்கியத்துவம் இவற்றுக்கு உண்டு. கீழைக்கரையோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த நெருக்கமான பந்தத்துக்கு சான்று இந்த இலக்கியங்கள். கண்டியின் சிங்கள மற்றும் நாயக்க மன்னருக்கும் கிழக்கிலங்கைக்குமான அரசியல் - சமய - சமூக உறவு இதுவரை ஆராயப்படாத சுவையான புலங்களில் ஒன்று. அதற்கு உதவக்கூடிய முதன்மையான சில சான்றுகளை மயிரிழையில் இழக்க இருந்தோம்.
ஐவர் காவியத்தை கடைசிவரை படியெடுக்கவே இல்லை என்பதால், அது என்றைக்குமாக இல்லாமல் போய்விட்டது என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். சிதைந்தொழிந்து விட்ட ஏட்டில் எஞ்சிய ஓலையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து "மகாமாரித்தேவி திவ்வியகரணி"யில் பரிசோதித்துப் பார்த்து, அங்கு அது துரோபதையம்மன் காவியமாக அச்சில் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் நெஞ்சில் தண்ணீர் வந்தது. இப்போதும் மீளாமல், பித்துப்பிடித்தவன் போல் கையெழுத்தாக எஞ்சியிருக்கும் செவ்வாட்டு வயந்தனை தடவி மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஒருவேளை என் ஏட்டை, குறிப்பாக செவ்வாட்டு வயந்தனை கையெழுத்துப்பிரதியாக காப்பாற்றாமல் விட்டிருந்தாலோ, அல்லது ஐவர் காவியம் என்பது அச்சில் வராத வேறொரு நூலாக இருந்திருந்தாலோ, இந்தக் குற்றவுணர்விலிருந்து அத்தனை சீக்கிரம் வெளிவந்திருக்கமாட்டேன். இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் உங்கள் யாரோ ஒருவர் வீட்டில், சின்னச் சின்னக் கவனயீனத்தால் எத்தனை ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை இழந்துகொண்டிருக்கிறீர்கள்?
அதனால் தான் சொல்கிறேன். ஏட்டில் இருந்ததை கையெழுத்தாக எழுதி வைத்த கதையைச் சொல்லி முடித்துவிட்டேன். நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான். பிரமாதமாக ஒன்றுமில்லை.
ஆவணப்படுத்துங்கள், இன்றே இப்போதே.
பிகு: யாழ்ப்பாணத்தில் நூலகம் நிறுவனத்தையும், மட்டக்களப்பில் அதன் கிழக்குக் கிளையையும் ஆவணப்படுத்தலுக்கென தொடர்பு கொள்ள முடியும். தொட்டால் உதிரும், செல்லரித்த ஏடுகளை, அரிய ஆவணங்களைக்கூட எண்ணிமப்படுத்தி மூல ஆவணத்தை உங்களிடமே திருப்பித் தருவார்கள். அதன் மின்வடிவத்தை, எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க ஆவணகம் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
பிகு: யாழ்ப்பாணத்தில் நூலகம் நிறுவனத்தையும், மட்டக்களப்பில் அதன் கிழக்குக் கிளையையும் ஆவணப்படுத்தலுக்கென தொடர்பு கொள்ள முடியும். தொட்டால் உதிரும், செல்லரித்த ஏடுகளை, அரிய ஆவணங்களைக்கூட எண்ணிமப்படுத்தி மூல ஆவணத்தை உங்களிடமே திருப்பித் தருவார்கள். அதன் மின்வடிவத்தை, எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க ஆவணகம் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment